நேச சிறகுகள்

2

“அக்கா இந்த சம்மை திரும்பி சொல்லி தரீங்களா….?” என மார்னிங் டியூசன் முடியும் நேரத்தில் வந்து நின்றான் தினேஷ்.

பவானி பழக்கமாய் மணியை பார்த்து, “உனக்கு எட்டு மணிக்கு ஸ்கூல் வேன் வந்துரும்ல… மணிய இப்போவே ஏழரை ஆச்சு. நான் ஈவினிங் சொல்லி தரட்டுமா?” என கேட்டாள்.

“அக்கா ஸ்கூல்ல ரிவிசன் டெஸ்ட் இருக்கு… அதுக்கு இந்த சம் வரும்ன்னு எங்க மிஸ் சொன்னாங்க!”

“சரிடா… ஆனா உனக்கு தான லேட் ஆகுது…?”

“பரவாயில்ல நான் அப்பாவை இன்னிக்கு ட்ராப் பண்ண சொல்லுறேன்!” என்றவன் பிடிவாதமாக இருக்க, பவானியும் இன்னொரு முறை சலிக்காமல் சொல்லி கொடுத்தாள்.

அதில் ஒரு சில இடங்களில் சந்தேகம் கேட்டு தெளிவு பெற்றவன், முகம் கொள்ளா புன்னகையோடு, “இந்த தடவையும் சென்ட்டம் தான்… பவானி அக்கா இருக்க பயமேன்!” என்று வீர முழக்கம் செய்து விட்டு கிளம்ப பவானி கேலியாக சொன்னாள்.

“நான் நடத்துறப்போ ஒழுங்கா கவனி தினேஷ். அதை விட்டுட்டு ஸ்ரேயாவ பார்த்துட்டு இருக்காத!” தன் குட்டு தெரிந்து போனதில் ஜெர்க் ஆன தினேஷ்,

“அக்கா… நான் சும்மா பார்த்தேன்… நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல…!”

“நான் எதுவும் நினைக்கலடா… நீயா தான் ஓவர் ரியாக்சன் கொடுத்துட்டு இருக்க!” என பவானி முறைக்க, தினேஷ் முகத்தில் கலவரம். அவன் திணறுவதை கவனித்த பவானி சட்டென முக பாவனையை மாற்றி,

“நல்லா படிக்கிற பையன் நீ. இந்த வயசுல இப்படி ஜாலியா இருக்க தான் தோணும். அதுக்காக எது முக்கியமோ அதை மறந்துற கூடாதுல. இப்போ பாரு… நீ கேர்லெஸ்ஸா இருந்துட்டு ஸ்கூல் பஸ்ஸை விட்டுட்ட… உன் அப்பாவுக்கும் ஒர்க் போற நேரத்துல இது டென்சன்!” என சொல்ல தினேஷ் சிறிது குற்ற உணர்ச்சியாக,
“சாரிக்கா…!” என்றான்.

“எனக்கு எதுக்கு சாரி… நீ நூறுமுறை கேட்டாலும் நான் சொல்லி தருவேன். ஆனா அதே நேரம் எல்லாருக்கும் இருக்குமா… அதுக்கு தான் சொன்னேன். டெஸ்ட்ல நல்லா பண்ணு. சாயங்கலாம் வரும் போது குவஸ்டின் பேப்பர் கொண்டு வா!” என்று சமரசமாக கூற, தினேசும் “டன்க்கா… ஈவினிங் பாப்போம். பாய்!” என கிளம்பினான்.

பத்தாவது படிக்கும் பதினைந்து வயது மாணவன். ஆனால் வயசு கோளாறில் படிப்பில் கோட்டை விட்டுவிட கூடாது என பவானி இயல்பை மீறி அட்வைஸ் பண்ணி விட, அவன் போன பின்பு அவளுக்கே சங்கடமாக இருந்தது.

‘இன்னும் பொலைட்டா சொல்லி இருக்கலாமோ?’ என நினைத்தவள், பக்கத்தில் இருந்த சிறிய ஆபிசுக்கு செல்ல, அங்கே அருள் அமர்ந்து பேப்பர் திருத்தி கொண்டு இருந்தான்.

அவன் பிசிக்ஸ் பாடம் எடுப்பதால், காலை மாலை என ஏதாவது ஒரு நேரத்தில் டெஸ்ட் வைத்து விடுவான். “சார்… பிஸியா?” என பவானி உள்ளே வர, அருள் புன்னகையோடு நிமிர்ந்து பார்த்தான்.

முப்பது வயது கடின உழைப்பாளி அருள். தனியார் பள்ளியில் பார்த்த வேலை பிடிக்காமல் அந்த டியூசன் சென்டரை தொடங்கினான். ஆரம்பத்தில் அதில் வாங்காத அடி கிடையாது.

“மாச சம்பளத்தை விட்டுட்டு இப்படி நாய்பாடு படுறியே?” என வீட்டில் இருப்பவர்கள் திட்டினாலும், நின்று போராடி நிமிர்ந்து காட்டி விட்டான்.

தற்பொழுது அவன் சென்ட்டரில், அவனுக்கு கீழே ஆறு பேர் வேலை பார்க்கிறார்கள். பழக இனிமையானவன்… ஆனால் படிப்பு விஷயத்தில் மிக மிக கண்டிப்பானவன்.

“ஆமா பவானி. மார்னிங் டுவல்த் பசங்களுக்கு டெஸ்ட் வச்சேன். அதை தான் கரெக்ட் பண்ணிட்டு இருக்கேன். நீ கிளம்பிட்டியா…?” என்றான் அக்கறையாக.

“ஆமா சார்… ஈவினிங் பாப்போம்!”

“ஸ்யூர்! அன்ட் பவானி… நேத்து நீ கிளம்ப லேட் ஆகிடுச்சாமே… எனக்கு ஒரு கால் பண்ணி இருக்கலாம்ல… நான் வந்து விட்டுட்டு வந்துருப்பேன்ல. ஸ்ட்ரீட் லைட் வேற இந்த ஏரியாவுல இல்ல…?” என்றவன் கேட்க, பவானி மனம் தன் போக்கில் நினைத்து கொண்டது.

‘அதுல எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல… ஆனா எங்க தெருல மூணு சிசிடிவி இருக்கே சார்… அவங்க பார்த்து இருந்தா ஐயோ… ஒரே நாள்ல தெருவோட டாப் டாப்பிக் நானா தான் இருப்பேன்!’

பவானி பதில் மொழியாததை கவனித்த அருள், “பவானி….?” என அழைக்க, “இல்ல சார்… பக்கத்துல தான… நான் பார்த்து போயிட்டேன். உங்களுக்கு எதுக்கு சிரமம் கொடுத்துட்டுன்னு தான் சொல்லல……!” என சமாளித்தாள்.

“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல பவானி… உன் சேப்டி ரொம்ப முக்கியம். சரியா நேத்துன்னு பார்த்து நான் இல்லாம போயிட்டேன்!”

அவன் முகத்தில் தெரிந்த அதிக அலைப்புறுதல் எதற்கானது என பவானிக்கு புரியவில்லை. ‘ஒரு ஸ்டாப் மேல இவ்ளோ அக்கறை நார்மல் தானா…?’ என மூளை யோசிக்க, மனசு திட்டியது.

“எல்லாத்தையும் தப்பாவே பார்க்காத. அவர் இயல்பா தான் கேட்டாரு…!” அதுவும் சரி என்றே தோன்ற, “நான் இனி அண்ணாவ வர சொல்லிடுறேன் சார். எப்படியும் பசங்களுக்கு எக்ஸாம் முடியிற வரைக்கும் லேட்டா தானே போற மாதிரி இருக்கும்… ஐ வில் ஹேண்டில்!” என்று சின்ன ஸ்மைலோடு விடை பெற்று கிளம்ப, அருள் அவளையே பார்த்தபடி இருந்தான்.

அவன் நெஞ்சில் பவானியை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் உருவாகும் கவன சிதறலை அவனாலே அனுமதிக்க முடியவில்லை. பவானியை பிடித்து இருந்தது. அதற்காக காதலா என்றால், அத்தனை சுலபமாய் வகை படுத்திடவும் முடியாது.

அவளோடு வாழ்க்கை முழுக்க பயணித்தால் நன்றாக இருக்கும் என்று கொள்ளை ஆசை இருக்க, அது நிறைவேறாது என்று நிதர்சனமும் புரிந்தது. அருளின் குடும்பம் கன்சர்வேடிவானது. உலகம் அழிந்தாலும் வேறு இனத்தில் இருந்து பெண் எடுக்க அவன் பெற்றோர்கள் ஒப்புகொள்ள மாட்டார்கள்.

அது தெரிந்த பின்னாலும், டைம் பாஸுக்கு பவானியிடம் பழக அருள் விரும்பவில்லை. சில சமயம், ஒத்து வராததை பிடித்து இழுத்து கொள்ளாமல் இருப்பதே மன நிம்மதியை பாதுக்காக்கும். அதை யோசித்தபடி இருந்தவன், நேரமாவதை உணர்ந்து செய்த வேலையை கண்டினியூ பண்ண தொடங்கினான்.

பவானி வீட்டில் நுழைந்த நேரம் கவியரசு அரக்க பறக்க கிளம்பி கொண்டிருந்தான். “பவானி… என் சாக்ஸ காணோம். எடுத்து கொடேன்! அம்மா லஞ்ச் பேக் பண்ணிட்டியா…? பவானி…. வாட்டர் பாட்டிலை பில் பண்ணு!” என்றவன் முதல் நாள் ஸ்கூலுக்கு போகும்  எல்கேஜி குழந்தையை விட மோசமாக ரெடியாக, பவானிக்கு எரிச்சல் ஆனது.

“விட்டா குளிக்க வச்சு ட்ரெஸ் போட்டுவிட சொல்லுவான்!” என புலம்பி கொண்டே அவன் கொடுத்த வேலைகளை செய்து முடிக்க, “பவானி… டீ கொண்டு வாம்மா!” என கனகசபை குரல் கொடுத்தார்.

“தோ வரேன்ப்பா…!” என வாக்கிங் முடிந்து வந்த தந்தைக்கு டீயை கொடுத்தவள், காலை உணவு உண்ண கூட நேரம் இல்லாமல், பத்து மணி வரைக்கும் பிசியாக இருந்தாள். அனைத்தையும் ஒதுக்கி, ஒரு விள்ளல் தோசையை வாயின் அருகே கொண்டு சென்ற நேரம் வாசலில் கார் சத்தம் கேட்க, “அடுத்து இவளா?” என பவானிக்கு அலுத்தது.

“அம்மா…!” என சத்தமாக அழைத்தபடி வந்தாள் காயத்ரி. சென்னையில் தான் அவள் ஜாகையும்.

“இப்போ தான் சாப்டுறியாடி… நேர நேரத்து சாப்டா தான வெயிட் கரெக்ட்டா மெயிண்டையின் ஆகும்…?” வந்ததும் அட்வைசை தொடங்கி விட்டாள். அதை கண்டு கொள்ளாத பவானியோ,

“எங்க உன் தம்பிய பேக் பண்ணி அனுப்பவே நேரம் சரியா இருக்கே. ஆனா கட்டிக்க போறவ ரொம்ப பாவம்!” என நக்கல் அடிக்க, காயத்ரியும் சேர்ந்து சிரித்தாள். “நீ சாப்டு… நான் இதோ வரேன்!” என எதற்காக வந்தாள் என்றே காரணம் சொல்லாமல் உள்ளே சென்று விட, பவானியும் டிவியை ஆன் பண்ணி சாப்பிட தொடங்கினாள்.

வாசிங் மெசினில் போட துணியை ஒதுக்கி கொண்டிருந்த சுந்தரி, மூத்த மகளின் திடீர் வரவால், “என்னடி… சொல்லாம கொள்ளாம வந்திருக்க. ஒன்னும் பிரச்சனை இல்லையே…?” என படபடக்க,

“ஏன் நான் வந்தாலே பிரச்சனையா தான் இருக்குமா… எல்லாம் நல்ல விஷயமா தான் வந்திருக்கேன். நம்ம பவானிக்கு உன் மாப்பிள்ளை ஒரு வரன் சொன்னாரு… பெரிய இடமாம். எங்கள விட வசதியாம்!” என அடுக்க,

“அட கொஞ்சம் பொறுமையா சொல்லுடி.. ஏன் கொட்டுற… இப்படி வந்து உட்காரு!” என மகளை அமர வைத்தவர், ஆர்வமாய் மூத்த மாப்பிள்ளை சொன்ன வரன் பற்றி கேட்க, காயத்ரியும் டாம்பீகமாய் சொன்னாள்.

ஆனால் அவள் மேற்கொண்டு தகவல் தர தர சுந்தரி முகம் மாறி போனது. “அப்போ பையனுக்கு இது ரெண்டாவது கல்யாணம்…?” என்றவர் ஒருமாதிரி கேட்க, காயத்ரி மறுத்தாள்.

“ரெண்டாவது கல்யாணம் இல்ல… முதல்ல அவருக்கு நடந்தது கல்யாணமே இல்ல. அவசரப்பட்டு லப் பண்ணி கோவில்ல வச்சு தாலி கட்டி இருக்காங்க… ஆனா!” என்று மேலும் தொடர, சுந்தரி கடுப்பாகி போனார்.

“போதும் போடி… எங்க வச்சு தாலி கட்டுனாலும் கல்யாணம் கல்யாணம் தான…?”

“ஐயோ அம்மா! லீகலா எதுவும் ரிஜிஸ்ட்டர் பண்ணல… சும்மா ஒரு பொம்மை கல்யாணம் அது…!”

காயத்ரி அதை சரி என்று பேச பேச சுந்தரிக்கு கோபம் தான் வந்தது.

“ஏன் காயத்ரி… உன்னை இப்படி யாருக்காவது கல்யாணம் பண்ணி கொடுக்க போனா நீ சும்மா இருப்பியா…?” என்றார் கடுப்பாக.

“அம்மா… என் நிலைமையும் பவானி நிலைமையும் ஒன்னா… அவ இருக்க வெயிட்டுக்கு மாப்ள கிடைக்குறதே ரேர். இதுல நீங்க வேற அதிகமா எதிர்பார்த்து எதிர்பார்த்து எத்தனை வருஷம் தான் அவள வீட்லயே வச்சிருக்க போறீங்க… அவளும் குடும்பம் குட்டின்னு செட்டில் ஆக வேணாமா…?” என்று கேட்க, சுந்தரி ஆற்றாமையாக சொன்னார்.

“பவானிக்கு என்னடி குறைச்சல்… நீங்க தான் அவள குண்டு குண்டுன்னு ஊசியா குத்துறீங்க… அவ நிறத்துக்கும், குணத்துக்கும், படிப்புக்கும் ஒரு நல்லவன் கையில தான் பிடிச்சு கொடுக்கணும்.  இப்போ லேட் ஆனா என்னடி? போது! நான் பார்த்து அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுக்குறேன். நீ ஒன்னும் கவலைப்படாத…!” என்று எடுத்தெறிந்து சொல்லி விட காயத்ரியும் கோபமாகி விட்டாள்.

“ஏதோ நம்ம குடும்பத்துல மேல இருக்குற அக்கறைல என் புருஷன் நல்ல வரனா பார்த்து சொன்னா, உங்களுக்கு அது குத்தமா தெரியுது. சரி போங்க… நீங்களே ஒரு உத்தமனா பார்த்து என் தங்கச்சிய கரை சேருங்க… ஆனா நான் பார்க்க தான போறேன்!” என்று சடைத்து கொண்டவள், வெளியே வந்து பவானி முன்பு நிற்க, பவானி டிவியில் இருந்த கவனம் கலைந்து, என்னவென பார்த்தாள்.

“இங்க பாருடி… எனக்கென்னவோ இந்த வீட்ல இருக்க யாருக்கும் உன்னைய செட்டில் பண்ணுற பிளான் இல்லைன்னு தோணுது… ஒழுங்கா பிழைச்சுக்குற வழியை பாரு!” என மிரட்டலாக சொல்லி விட்டு செல்ல, என்ன நடக்குது என்ற ரீதியில் பவானி பார்த்தாள்.

“காயத்ரி… ஏய் நில்லு…!” என தட்டை வைத்து விட்டு எழுந்தவள், “என்னம்மா ஆச்சு?” என சுந்தரியிடம் கேட்க, அவரோ சாதாரணமாக சொன்னார்.

“அவ கிடக்குறா… ஆகாததா எதையாது சொல்லிட்டு இருப்பா. உனக்கு பார்வதி சொன்ன இடத்தையே முடிப்போம். அவ இன்னிக்கு மதியத்துக்குள்ள ஜாதகம் வாங்கி அனுபறேன்னு சொல்லி இருக்கா… அப்பறம் பையன் பேரு கேட்டேல…?” என்று சொல்லி கொண்டே போக,

“ஒருநிமிசம் இரும்மா…!” என பவானி அக்காவை தொடர்ந்து வெளியே சென்றாள். ‘ரெண்டுமே நான் சொல்றதை கேக்குதுகளா பாரு?’ என நொந்து கொண்ட சுந்தரி விட்ட வேலையை கண்டினியூ பண்ண, வெளியே காயத்ரியை நிறுத்தி இருந்தாள் பவானி.

“வெயிட் பண்ணு… எதுக்கு அம்மா கூட சண்டை போட்டுட்டு போற…?” என விசாரிக்க, காயத்ரி திறந்து வைத்திருந்த கார் கதவை மூடி விட்டு, “மாமா உனக்கு ஒரு வரன் சொன்னாரு… அதை சொல்றதுக்காக என் பொண்ணை கூட வேக வேகமா ஸ்கூலுக்கு கிளப்பி விட்டுட்டு வந்தேன். ஆனா அம்மா, நான் உன் வாழ்க்கைய கெடுக்க போற ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்குறாங்க. நம்ம குடும்பம், நம்ம தங்கச்சின்னு ஓடி வந்தேன்ல… என்னைய சொல்லணும்!” என்று தலையில் தட்டி கொள்ள, காயத்ரி தனக்காக இவ்வளவு மெனகெடுவது எங்கோ இடித்தது.

காயத்ரி நல்லவள் தான். ஆனால் புகுந்த வீட்டுக்கு போன பின்பு நல்லவள் தானா என சந்தேகம் வரும்படி அவள் நடவடிக்கைகள் இருந்தது. பிறந்தகத்தை விட புகுந்த இடத்தில் வசதி அதிகம். அந்த தலைகனம் உச்சாணி கொம்பில் ஏறி காயத்ரியை ஆட்டி படைத்தது.

இருப்பினும், அவள் சண்டை போட்டு சென்றால் தான் தானே தூது புறாவாக மாற வேண்டும் என்ற கவலையில் பவானி வந்து விசாரித்து இருக்க, வந்ததுக்கு வசமாக பிடித்து கொண்டாள் காயத்ரி.

“சரி போகுது… நீ ப்ரீ தான? வாயேன்… எனக்கு க்ரோசரி ஷாப்பிங் இருக்கு!” என வலுகட்டாயமாக தங்கையை கடத்தி சென்றாள். ரெண்டு மணி வரைக்கும் கடை கடையாக ஏறி இறங்க விட்டவள் போனா போகுது என்று மனம் இறங்கி லஞ்ச் சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு அழைத்து செல்ல, அங்கும் சுந்தரி போன் பண்ணி விட்டார்.

“எதுக்கு அவ கூட போன… அவளுக்கு நீ வேலைகாரியா?” என ஏக வசனத்தில் திட்டு கிடைக்க, காயத்ரி இவளையே பார்த்து கொண்டிருந்தாள். யாரை சமாளிப்பது என்று புரியாமல், “ஒருநிமிஷம்…!” என்று வெளியே வந்தவள்,

“அம்மா… காயத்ரி பக்கத்துல தான் இருக்கா… எதுக்கு இப்படி கத்துறீங்க?” என்று சடைத்து கொண்டிருக்க, அதே நேரம் அவளுக்கு பின்னாலோ ஒரு நெடிய உருவம் அணைவாக வந்து நின்றது.