அத்தியாயம் 17
கண்ணாடியை பார்த்து தலை வாரி கொண்டிருந்த கணவனை பொறுப்பாக சைட் அடித்து கொண்டிருந்தாள் பவானி. அவள் செய்யும் வேலையை கண்டு கமுக்கமாக சிரித்த வம்சி,
“நான் வேணா முன்னாடி வந்து உட்காரவா வாணி…?” என்று கேட்க, ஏன் என்றாள் புரியாமல்.
“எட்டி எட்டி பார்த்து கழுத்து வலிச்சிடும்ல?” என்றவன் நகைக்க பவானியோ, “இப்படி அழகா இருந்தா எப்படி பார்க்காம இருக்க முடியும்? இன்னிக்கு எல்லார் கண்ணும் உங்க மேல தான் இருக்க போது… இங்க பாருங்க… எவ்ளோ லேட்டா வீட்டுக்கு வந்தாலும் என்னை உசுப்புங்க… நான் வந்து சுத்தி போட்டுடுறேன்!” என்று சீரியசாக சொல்ல, அந்த பக்கமாய் வந்த விஜயா மருமகள் சொல்லியதை கேட்டு சிரித்தபடி நகன்றார்.
வம்சி மனைவியின் கூற்றில் பின்னந்தலையை கோதியபடி, “லவ் யூ ஸோ மச் வாணி!” என்று பறக்கும் முத்தத்தை கொடுக்க, பவானி அதை கேட்ச் பிடித்து நெஞ்சில் ஒட்ட வைத்த நேரம், அதற்குள் பொறுக்காமல் வந்து விட்டால் ரஞ்சிதம்.
“பவானி… என்கூட வரேன்னு சொன்னேல…. வர தானே… இல்ல எப்படி?” என்று புருவம் உயர்த்த அவள் பேச்சே மிரட்டி கூட்டி போவது போல் இருந்தது.
ரூல் வாசலில் நின்ற அக்காவை கவனிக்காத வம்சியோ, ‘இவ கூட எங்க போறே?’ என்று மனைவியிடம் கண்டன பார்வை செலுத்த அவள் இருந்த இயல்பு நிலை போய்,
“இல்ல நான் தான் அண்ணிய கூப்டேன். எனக்கு கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டியது இருக்கு. நாளைக்கு அம்மா வீட்டுக்கு போறேன்ல… அதான். வரேன் அண்ணி…. பார்த்து போயிட்டு வாங்க!” என்று அவசரமாய் சென்றவளை வம்சி சந்தேகமாய் பார்க்க அதற்குள் அவளும் ரஞ்சிதமும் வெளியேறி இருந்தார்கள்.
ஏதோ சரி இல்ல… என்று வம்சிக்கு உள்ளே உறுத்த தன் அம்மாவிடம் சென்று எதற்காக ரஞ்சிதம் பவானியோடு இழைகிறாள் என்று கேட்டே விட்டான். தேவை இல்லாமல் இழைவது அவள் குணம் அல்ல…
“வம்சி…. பொண்ணுங்க சமாசாரமா போறாங்கடா…!” என்று விஜயா இழுக்க, “ஏன் நீங்க கூட போக வேண்டியது தான…. ரஞ்சிதம் வாணி மனசு சங்கடபடுற மாதிரி ஏதாச்சும் சொல்லிடுவாம்மா. வாணியும் பிரச்சனை வேணாம்ன்னு என்கிட்ட சொல்ல மாட்டா!” என்று எரிச்சலாக சொல்ல, விஜயா வேறுவழி இல்லாமல் உண்மையை சொன்னார்.
“அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது வம்சி. உன் அக்காக்கு நாள் தள்ளி போய் இருக்காம்…. அதுக்கு தான் செக் பண்ண உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போயிருக்கா!”
இதை கேட்டதும் வம்சியின் முகத்தில் அவனையும் அறியாமல் சின்ன மகிழ்ச்சி எட்டி பார்க்க, “நீங்களும் போய் இருக்கலாம்ல… பவானிக்கு என்ன தெரியும். சின்னவ?” என்று கேட்க, விஜயா ஒரு பெருமூச்சோடு,
“நல்லா கேட்ட போ… அவ கூட நான் போய் ஒரு தடவை கூட நல்லதா எதுவும் செய்தி வரலையாம். அதுனால தான் நீ வராத… நான் பவானிய கூட்டிட்டு போய்கிறேன்னு சொல்லிட்டா. என்னவோப்பா அவளுக்கு நம்ம யாரும் ஆகலைன்னாலும் பவானி கூட செட் ஆகிடுச்சு!” என்று கேலியாக சொல்ல இப்பொழுது வம்சிக்கு யோசனையானது.
ரஞ்சிதம் நினைப்பது போல் எதுவும் இல்லையென்றால் அவள் பவானியை தானே ஏதாவது சொல்லுவாள். அம்மாவுக்கு ஏன் இது புரியவில்லை என்று நெற்றியை தேய்த்தவன், மனைவியை அழைத்தே வந்திருக்க கூடாது என்று மானசீகமாய் நொந்து கொண்டாலும் அக்காவுக்கு இப்படியாவது ஒரு நல்லது நடந்து விடாதா என்றவன் மனம் நினைக்காமல் இல்லை.
“சரி அவங்க வந்ததும் கால் பண்ணுங்கம்மா… நான் வர தாமதம் ஆகலாம்!” என்று கிளம்பியவன், என்பீல்டை உயிர்பித்து ஹோட்டல் மயூரிக்கு சென்றான். மற்ற நண்பர்கள் எல்லாம் வந்து நீண்ட நேரமாகியும் வம்சி வராமல் இருக்க, க்றிஸ்டி கிஷோரின் காதை கடித்தாள். “என்னடா வம்சி வரான்னு சொன்ன… ஆளை காணோம். வரான் தான…?”
“நிச்சியம் வரான் க்ரிஸ்டி…. அன்ட் நம்ம ஜீவன் வர்றதையும் சொல்லிட்டேன். பெருசா டென்சன் ஆகல…. எவ்ளோ நாள் தான் பழசையே பார்த்துட்டு இருக்க முடியும்ன்னு பாசிட்டிவா தான் பேசுனான். மேரேஜ்க்கு அப்பரம் நல்ல சேஞ் ஆகிட்டான் போல…!” என்று கிஷோர் சொல்ல, க்றிஸ்டி ஆச்சிர்யமாய்,
“சூப்பர்டா…. நான் கூட வம்சி இன்னும் மாறாம அப்படியே இருப்பான்னு வருத்தப்பட்டுட்டு இருந்தேன். பேசாம அந்த தெரு பொறுக்கிக்கும் ஒரு கல்யாணம் பண்ணி வச்சா தேவலாம்…. ஆனா சிக்க மாட்டுறானே….?” என்றாள்.
“என்ன அவனுக்கு நீயே பொண்ணு பார்த்து வச்சிருக்க மாதிரி இவ்ளோ தீவிரமா பேசுற…?”
“ஆமா நான் பார்த்து கல்யாணம் பண்ணிட்டாலும். அவன் தான் காலேஜ்ல டாலி டாலின்னு ஒரு ஜூனியர் பின்னாடி அலைஞ்சிட்டு இருந்தானே… அவளை தான் இன்னும் நினைச்சிட்டு இருப்பான் போல…!”
க்ரிஸ்டி சொன்னதை கேட்டு வியப்படைந்த கிஷோர், “என்ன இப்ப வரையா… அதெல்லாம் ஒன் சைட் லவ் தான?” என்று இழுத்தான்.
“ஒன் சைட் தான்… ஆனா டீப் லவ் போல… இந்த ப்ளே பாய்குள்ளேயும் ஒரு லவ்வர் பாய் இருந்திருக்கான்…. அன்னிக்கு அவன் கூட சுத்துற தினேஷ் இதை பத்தி சொல்லி கேட்டப்போ எனக்கே சரியான ஷாக் தான். ஆனா!” என்று அடுத்து பேச போனவள்,
“போச்சு போச்சு வரான். டாப்பிக்க மாத்துவோம்!” என்று பேச்சை மாற்ற அவர்கள் இருவரின் அருகே வந்து அமர்ந்த சத்ய ஜீவன், “என்ன என்னை பத்தி தான் பேசிட்டு இருந்திருப்பீங்க போல… பல்லி நான் வந்ததும் சைலன்ட் ஆகுறியே…?” என்று புருவம் உயர்த்த,
“சரியா கணிச்சிடுச்சு பாரு பயபுள்ள… இது நிஜமாவே போலீஸ் தான் போல!” என்று வாயுக்குள் க்ரிஸ்டி முனங்க, “கேட்டுட்டேன்…!” என்றவள் கழுத்தை பிடித்த சத்ய ஜீவன் யாரை கலாய்க்கிற என்று தலையில் கொட்டி கொண்டிருக்க,
“ஹே வம்சி… வாடா… வாடா!” என்று பின்னால் இருந்த மற்ற நண்பர்கள் உற்சாகமாய் வரவேற்பதை கேட்டு சத்யஜீவன் க்ரிஸ்டி மற்றும் கிஷோரை முறைத்து தள்ளினான்.
அவர்கள் கூட்டில்லாமல் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை. தன்னை சரியாக ஏமாற்றி விட்டார்கள் என்று உள்ளே கடுங்கோபம் எழுந்தாலும், இப்படி நடக்க வேண்டும் என்றவன் இன்னொரு மனம் எதிர்பார்த்து தான் இருந்தது. அது பழைய நட்போ இல்லை வெறுப்புடன் மாறிய பகையோ….
“துரோகிங்களா…?” என்றவன் கடித்து துப்ப, கிஷோர் வேகமாய், “டேய்… விட்டுருடா… இதுக்கு மேல அதையே நினைச்சுட்டு இருந்து என்ன பண்ண போற….. அவன் தான் தெரியாம பண்ணிட்டான்னு அன்னிக்கே மன்னிப்பு கேட்டான்ல…?” என்று எடுத்து சொல்ல சத்யன் அவனையும் முறைத்தான்.
“ஆமா ஜீவா… பாஸ்ட் இஸ் பாஸ்ட்… விட்டுடு… நம்ம எல்லாம் பழையபடி ஒன்னா!”என்று க்ரிஸ்டி சொல்லி கொண்டிருக்கும் பொழுதே, சத்யஜீவன் பின்னால் நிழல் ஆட அவன் வேகமாய் அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றான்.
ஆனால் க்ரிஸ்டி வேகமாய் அவன் கையை பிடித்து கொண்டு, “சின்ன பையனாடா நீ… சொன்னா புரிஞ்சிக்கவே மாட்டியா?” என்று மிரட்ட, “விடுடி…!” என்று கடுப்பாக ஆரம்பித்தான்.
“முடியாது… இன்னிக்கு ரெண்டு பேரும் மீண்டும் ப்ரெண்ட்ஸ் ஆகுறீங்க!” என்றவள் பிடிவாதம் பிடிக்க அதற்குள் வம்சி அவர்கள் இருந்த டேபிளில் வந்து அமர்ந்து விட்டான். “ஹாய்டா மச்சான்…. என்று கிஷோர் தோளில் தட்டியவன், எப்படி இருக்க க்ரிஸ்டி?” என்று தோழியிடம் புன்னகிக்க, அவளோ சத்யன் தப்பித்து ஓடாமல் இருக்க பிடித்தபடி,
“இதோ பார்த்தேல இப்படி தான் என் பொழைப்பு ஓடுது… இவன மாசத்துல பத்து தடவை பேட்டி எடுத்தே நான் பாட்டி ஆகிடுவேன் போல!” என்று அலுக்க, சத்யஜீவன் அவளை மேலும் முறைத்தான்.
“கோபம் மட்டும் மூக்குக்கு மேல வந்துடும். வம்சி… ரெண்டு பேரும் பேசி இன்னிக்கே சண்டைய எல்லாம் தூக்கி போட்டுட்டு, ஒரு முடிவுக்கு வாங்க… உங்கள சேர்த்து வைக்கிறதுக்குள்ள இந்தியா பாகிஸ்தானை சேர்த்துடலாம் போல…!” என்று கிஷோரை இழுத்து கொண்டு அவள் நகர ஜீவனும் வேகமாய் எழுந்தான்.
ஆனால் அவள் தோளில் அழுத்தி அமர வைத்த வம்சி, “டேய் மச்சான்….!” என்று பல வருடங்களுக்கு பின்பு கல்லூரி காலத்தில் அழைத்தது போல் அழைக்க, ஜீவனின் கைகள் இறுகியது.
வெளியில் அவன் முகம் கடுகடுவென இருந்தாலும் உள்ளே புதைக்கபட்ட தோழமை சீறி கொண்டு மேலே வர, அதை வெளியில் காட்டி விட கூடாது என்பதற்காக, “நண்பன் மேல நம்பிக்கை இல்லாதவன் எல்லாம் அப்படி கூப்பிட தகுதியே இல்லாதவன்…. இனி ஒரு தடவை அப்படி சொன்ன…?” என்று ஆத்திரமாய் எகிற, வம்சி பின்வாங்கவில்லை.
இதெல்லாம் என்ன… இதை விட அவன் மோசமாக கோபப்பட்டு அவன் பார்த்திருக்கிறான். எனவே, “நான் பண்ணது தப்பு தான். ஆனா என்னோட நிலைமைல நீ இருந்திருந்தா…!”என்று தொடங்க, சத்யஜீவன் இடைவெட்டினான்.
“உன்னோட நிலைமைல நான் இருந்திருந்தா, நீ கொலையே பண்ணிட்டேன்னு சொன்னாலும், உனக்கு தான் நான் சப்போர்ட் பண்ணி இருப்பேன். ஏன்னா என்னோட நட்பு சுத்தம்… அது எந்த காலத்துலயும் உயிர் நண்பனை சந்தேகபட்டாது!” என்று சொல்ல, அவன் பேச்சில் கோபம் இருந்தாலும் வார்த்தைகளில் வலி தெரிந்தது.
வம்சி மூச்சை இழுத்து விட்டு, “சரிடா தப்பு தான். அன்னிக்கு நான் உனக்கு தான் சப்போர்ட் பண்ணி இருக்கணும்… ஆனா….!” என்று ஆரம்பித்தவன்,
“அதான் உண்மை என்னன்னு தெரிஞ்சதும் நானே போய் உண்மைய சொல்லிட்டேன்லடா… அவங்க உன் சஸ்பென்சன கேன்சல் பண்ணாம போனதுக்கு நான் என்ன பண்ண முடியும்… அந்த நேரத்துல என் அக்கா வீட்ல வேற பிரச்சனை. நான் அந்த யோசனைல…?” என்றவன் முடிக்கும் முன்பே,
“என்னை மறந்துட்ட அதான….?” என்று நக்கலாக சிரித்த ஜீவன், “சில சமயம் உன் மூஞ்சிய பார்த்து கோபபட கூட தோண மாட்டேங்குதுடா…. ஒரு லூசர்கிட்ட என்ன பேச….?” என்றவன் வார்த்தையை முடிக்கும் முன்பே வம்சி அவன் முகத்தில் ஓங்கி குத்தி இருக்க, சத்ய ஜீவன் நிலை தடுமாறி போனான்.
“சை! நீ என்ன மென்ட்டலாடா…. உன்னால அடுத்தவங்க நிலைமைய புரிஞ்சிக்கவே முடியாதா….?” என்று வம்சி கோபமாய் கத்த, சத்ய ஜீவன் திரும்பி எழுந்து அவன் மூஞ்சில் குத்தி இருந்தான்.
ரெண்டே நிமிடத்தில் இருவரும் கட்டி உருள ஆரம்பித்து விட, சத்தம் கேட்டு அனைவர் பார்வையும் இவர்கள் பக்கம் திரும்பி விட்டது. க்ரிஸ்டி அவ்ளோ தான் முடிஞ்சது என்று தலையில் கை வைக்க, கிஷோரும் மற்றவர்களும் அவசரமாக தடுக்க போனார்கள்.
அவர்களை தடுத்த க்ரிஸ்டி, “எங்க போறீங்க… நடுவுல போய் அடிவாங்கவா… அமைதியா வேடிக்கை பாருங்க. அவனுகளே ஒரு முடிவுக்கு வருவாங்க… அட்லீஸ்ட் இன்னையோட இது முடிஞ்சு தொலையட்டும்!” என்று கூலாக சொல்ல, “எப்படி க்ரிஸ்டி?” என்றான் கிஷோர் ஆச்சிர்யமாக.
“அவ்ளோ தாண்ட அவனுக நட்பு. இதை அன்னிக்கே பண்ணி இருந்தா ரெண்டு பேரும் நார்மல் ஆகி இருப்பானுக… சும்மா வெட்டி கெளரவம் பார்த்துட்டு இத்தனை வருசத்தை வேஸ்ட் ஆக்கிட்டாணுக!” என்று சிரிக்க, கிஷோருக்கும் சிரிப்பு வந்து விட்டது.
“மச்சான்…. செலக்ட் ஆனதும் என்னால நம்பவே முடியல. என் அப்பாகிட்ட கூப்ட்டு சொன்னா, அவரு அப்படியாப்பா… நம்மளால வேலை வேணாம்ன்னு சொல்ல முடியாதான்னு கேட்டாரு பாரு… சத்தியமாடா… என்னால முடியல…!” என்று இடமே அதிர்வது போல் முகம் வீங்கி இருந்த சத்ய ஜீவன் சிரிக்க அவன் அருகே சண்டை கிழிந்து இருந்த வம்சியும் கண்ணீர் வர சிரித்து கொண்டிருந்தான்.
பவானி அவனுக்காக ஆசை ஆசையாக பார்த்து எடுத்து வைத்த ஆலிவ் நிற சட்டை நாஸ்தியாகி இருந்தது.
இருவரும் தரையில் அலங்கோலமாக அமர்ந்து பேசி கொண்டிருக்க, க்ரிஸ்டி சொன்னது போலவே அத்தனை வருட பகை எல்லாம் புகையாகி மறைந்து இருந்தது. அந்த நண்பர்களோ இடம் பொருள் ஏவல் மறந்து இத்தனை தான் சொல்ல சேமித்து வைத்திருந்த கதையை எல்லாம் பகிர்ந்தபடி இருந்தார்கள்.
“என்ன க்ரிஸ்டி இவ்ளோ சப்பையா சமாதானம் ஆகிட்டாணுக?” என்று மற்ற நண்பர்கள் எல்லாம் வியப்பாக கேட்க, “இதென்ன புதுசா… எப்படியோ இனிமேலாவது நம்ம தூது புறா வேலைக்கு ஒரு விடிவு காலம் வந்துடுச்சு!” என்று நிம்மதிப்பட்டு கொண்டாள்.
“சரி சரி நீ சொல்லு…. கல்யாணம் ஆகிடுச்சுன்னு கேள்வி பட்டேன்… லவ்வா இல்ல அரேஞ்சா… வெயிட் வெயிட் கண்டிப்பா அரேஞ்டா தான் இருக்கனும்… உனக்கு தான் லவ்ன்னாலே அலர்ஜி ஆச்சே… காலேஜ்ல எந்த பொண்ணாச்சும் பிடிச்சு இருக்குன்னு வந்து சொன்னா, இதெல்லாம் தப்பும்மா… நீ என் தங்கச்சி மாதிரின்னு சொல்லி விரட்டி விடுவேல…?” என்று சத்யன் இன்னும் சிரிக்க வம்சியோ,
“யப்பா… முடியல மச்சான்…. விட்டுரு… இதுக்கு மேல சிரிக்க வைக்காத!” என்று சொல்லி கொண்டிருக்க, க்ரிஸ்டி கிஷோர் இருவரும் சேரை இழுத்து அவர்களுக்கு அருகே போட்டு அமர்ந்தார்கள். இன்னும் சில நண்பர்களும் அவர்களோடு ஜாயின் பண்ணி கொள்ள, வம்சி தன் கல்யாண கதையை சொல்ல ஆரம்பித்தான்.
“என் பெண்டாட்டி வாணி இருக்காளே…. அவ ஒரு தேவதைடா…!” என்று லேசான வெட்கத்தோடு ஆரம்பிக்க சட்டென ஓ போட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
“பொறுங்க பொறுங்க… நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல… இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணான்னு… நான் தான் அவகிட்ட பர்ஸ்ட் விழுந்தேன்….!” என்க மறுபடியும் ஒரே கூச்சல் ஆனது.
“அப்போ லவ் மேரேஜா?” என்று க்ரிஸ்டி அவசரபடுத்த, வம்சி மறுத்தான். “அதெல்லாம் வீட்ல பார்த்து பண்ணது தான். ஆனா அவள முன்னாடியே நான் பார்த்து இருக்கேன். ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல…. அவ அக்கா கூட வந்திருந்தா…. பர்ஸ்ட் நார்மலா கடந்து போயிருப்பேன். ஆனா திரும்பி பார்க்குற மாதிரி ஒரு விஷயம் பண்ணா….!” என்று சொல்ல, “வேகமா சொல்லுடா… சஸ்பென்ஸ் வைக்காத!” என்று க்ரிஸ்டி கதை கேட்பதில் அத்தனை ஆர்வமாக இருந்தாள்.
“ஒரு சின்ன பையன், சின்ன சின்ன சாக்லேட்ஸ எடுத்து அவன் பேன்ட் பாக்கெட்ல போட்டுட்டு இருந்தான். அவனோட அம்மா வேற செக்சன்ல இருந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். அவனுக்கு பண்றது தப்புன்னு தெரியல…. நானும் அதை பார்த்துட்டு தப்புன்னு புரிய வைக்க பக்கத்துல போக இருந்தேன்… அதுக்குள்ள என் வாணி…!” என்றவன் சிலாகிக்க,
“எப்பா வாணி வாணின்னு உருகுறானே?” என்று சத்யஜீவன் அவன் முதுகில் படபடவென அடிக்க வம்சி சிரித்தபடி,
“சொல்றத கேளுங்க… வாணி அதுக்கு முன்னாடி அவன் பக்கத்துல போய், அம்மா எங்கடா குட்டின்னு விசாரிச்சிட்டு இருந்தா… அவனுக்கு அம்மா எங்க போனாங்கன்னு தெரியல… சரி இங்க தான் இருப்பாங்க… நான் கூட்டி போறேன்னு சொன்னவ, முதல் வேலையா அவன் எடுத்து வச்ச சாக்லேட்க்கு எல்லாம் பே பண்ணி அவன்கிட்டயே அதை கொடுத்தா. அப்பறம் பதமா புரிஞ்சிக்குற மாதிரி, குட்டி…. இதெல்லாம் இன்னொருத்தவங்க பொருள்டா. அவங்ககிட்ட பணம் கொடுக்காம எடுத்தா அப்பறம் அவங்க வீட்ல உங்கள மாதிரி இருக்க குட்டிக்கு சாக்லேட்ஸ் கிடைக்காம போயிடும். அப்பறம் அந்த பாப்பா பாவம் தான? இனி ஏதாவது வேணும்ன்னா மம்மிகிட்ட கேட்டு வாங்கி கொடுக்க சொல்லணும் ஒகேன்னு? அழகா புரிய வச்சு அந்த பையன அவன் அம்மாகிட்ட விட்டுட்டு வந்தா…!” என்று அன்று நடந்ததை அச்சு பிசகாமல் சொல்ல,
“அடபாவி இவ்ளோ சீனையும் வெக்கமே இல்லாம வேடிக்கை பார்த்துட்டு இருந்தியடா? உன்னை அவங்க பார்க்கவே இல்லையா?” என்று க்ரிஸ்டி கேட்க, வம்சி வேகமாய்,
“நான் தான் மறைஞ்சு இருந்துல பார்த்தேன்?” என்று சொல்ல, “தூ!” என்று க்றிஸ்டி துப்பினாள்.
“லவ்வுன்னு வந்துட்டா, மானமாவது அவமானமாவது நீ பண்ணது சரி தான் மச்சான்!” என்று சத்யன் சொல்ல, மீண்டும் சிரிப்பலை பரவியது.
“ஆனா நம்மள தான் கல்யாணத்துக்கு கூப்பிடாம ஏமாத்திட்டான்!” என்று க்ரிஸ்டி குறைபட்டுக்கொள்ள வம்சிக்குமே இப்பொழுது சங்கடமாக இருந்தது. கூப்பிட கூடாது என்று இல்லை. ஆனால் அவனே இப்பொழுது தான் தான் உருவாக்கிய நத்தை கூட்டை விட்டு வெளியே வருகிறான்.
அதனால், “சரி இப்போ என்ன உங்க எல்லாருக்கும் ஒரு ட்ரீட் கொடுத்துட்டா போச்சு… நாளைக்கு ஈவினிங் என்னோட வீட்டுக்கு வரீங்களா… வாணியும் வந்திருக்கா. உங்களுக்கும் சண்டை லீவ் தான?” என்று ஐடியா தர,
“டேய் இவன் நாம வர மாட்டோம்ன்னு நினைச்சு சொல்லிட்டு இருக்கான் போல… கொய்யால… கண்டிப்பா வந்தே தீருவோம்!” என்று கிஷோர் கத்த, “தென் இட்ஸ் டன்!” என்று சிரித்த வம்சி நாளை என்ற நாளே வந்திருக்க கூடாதோ என்று வருந்த நீண்ட நேரம் இருக்கவில்லை.