அத்தியாயம் 16

சென்னைக்கு ரெயில் ஏறிய பொழுதே வம்சிக்கு மனம் ஒருமாதிரி இருந்தது. தேவையில்லாமல் மனைவியை அழைத்து செல்கிறோமோ என்றவன் நூறாவது முறையாக யோசித்து இருப்பான்.

ஆனால் அவளோ அவன் அல்லாட்டம் தெரியாமல், “அத்த நம்ம வரோம்ன்னு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க!” என்று சிறு குழந்தை போல பேசி கொண்டிருந்தாள். அடிக்கடி அவள் முகம் பார்ப்பதும், கையை பிசைவதுமாக இருந்தவன்,

“ரஞ்சிதம் வீட்ல இருக்காலாம்.. அவ கூட எதுவும் பேச்சு வச்சுக்காத!” என்று எப்படியோ நாசுக்காக சொல்லி விட்டான். நாத்தனாரின் பெயரை கேட்டதும் பவானிக்கு முகம் சுணங்கி போனாலும், “சரிங்க…!” என்று தலை ஆட்டி வைத்தாள்.

“குழந்தை அது இதுன்னு பேச்சை எடுத்தா…!” என்றவன் ஏதோ சொல்ல வர பவானி அவன் கையோடு கை கோர்த்து கொண்டு, “நீங்க தான் சொல்லி கொடுத்து இருக்கீங்களே… நான் பார்த்துக்குறேன்!” என்று புன்னகிக்க, வம்சிக்கு பெருமூச்சு தான் வந்தது.

மனைவியை தன் வீட்டில் யாரும் எதுவும் சொல்லிட கூடாது என்பதில் அத்தனை உறுதி அவனுக்கு. வாழ்வு தொடங்கிய இடமாய்  அவன் குடும்பம் இருக்கலாம்… ஆனால் அவன் வாழ்வு முடியும் இடம் அவள் தானே?

எல்லாம் விட்டு போய் இதுவும் ஒரு வாழ்க்கை என்று மிசினாய் வாழ்ந்து கொண்டிருந்தான். பின்பு அவள் வந்தால்…. அனைத்தையும் அழகாக்கி தந்து விட்டாள். இப்பொழுது அவனுக்கு மறுபடியும் மகிழ்ச்சியாக வாழ ஆசை வந்து விட்டது.

அதில் யார் குறிக்கிட்டாலும் அவன் நிச்சயம் வேடிக்கை பார்க்க போவது கிடையாது.

பாதி வழியிலே பவானி தூங்கி விட, வம்சி தன்னவளை தோளில் சாய்த்து கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்தபடி வர, அவன் கல்லூரி நண்பன் கிஷோர் கால் பண்ணினான்.

“இவனுக்கு இப்பவும் நான் வரேன்னு நம்பிக்கை வரல போல!” என்று இதழ் வளைத்த வம்சி,

“ட்ரைன் ஏறிட்டேன்டா சாமி… போதுமா.. இனிமேலாவது நிம்மதியா தூங்கு!” என்று காலாயித்து விட, கிஷேர் இவனை சீண்டினான்.

“டேய்! டேய்! முன்னெல்லாம் போன் பண்ணா எடுக்கவே மாட்ட… இப்போ பிடிச்ச காத்து கருப்பு எல்லாம் சிஸ்டர் தயவால போய், பேருக்கு போனை அட்டன்ட் பண்ணி பேசுற… நீ என்னைய நக்கல் பண்ணுறியா…?” என்றான் கிஷோரும் விடாமல்.

அதற்கு சிரித்த வம்சி, “அதான் வரேன்னு வாக்கு கொடுத்துடேனே… இனி தப்பிக்க முடியுமா?” என்றான்

“முடியாது சார். நீங்க வரலைன்னாலும் நாங்க சிவகங்க வந்து ஆளை தூக்கிடுவோம்…!”

“பண்ணாலும் பண்ணுவீங்கடா.. சரி நான் சென்னை ரீச் ஆகிட்டு கால் பண்ணுறேன். சேர்த்தே போகலாம் சரியா?”

“எனக்கு பிரச்சனை இல்ல. ஆனா என்கூட வர்ற ஆளை பார்த்தா நீ வர மாட்டியே…!” என்றான் கிஷோர் இக் வைத்து.

“அப்படி யாரு வரா…?” என்று தொடங்கிய வம்சி, சட்டென புரிந்து கொண்டு, “ஜீவனா…?” என்று சாதாரணமாக கேட்க,

“பாருடா… பெரிய மனுசனா ஆகிட்டீங்க போல. அவன் பேச்சை எடுத்தாலே வேற ஏதாவது பேசுன்னு சொல்லுவ…?”

“ம்ம்.. எவ்ளோ நாள் அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்க முடியும். ஒரு கட்டத்துக்கு மேல முதுகுல இருக்க பாரத்தை இறக்கி வச்சு தான ஆகணும்?” என்றான் வம்சி சுமூகமாய்

“ஓ சாருக்கு பழைய நியாபகங்கள் எல்லாம் சுமையா?” என்று கிஷோர் இழுக்க, வம்சி மறுத்தான்.

“சுமையா இருந்துச்சு… இப்போ இறக்கி வச்சு ரொம்ப நாள் ஆச்சு!” என்று மனைவியின் முகம் பார்த்தவன்,

“சரி… அவன் வந்தாலும் பிரச்சனை இல்ல. நானும் சேர்ந்தே வரேன்!” என்று சொல்ல,

“ஆனா அதுல ஒரு பிரச்சனை இருக்கே. அவன், நீ வந்தா வரலைன்னு சொல்லிட்டு இருந்தானாம். க்ரிஸ்டி சொன்னா…!”

இதை கேட்டு புருவம் சுருக்கிய வம்சி, “நீ இதை தான் முதல்ல சொல்லி இருக்கணும். அப்போ… நான் வரலைன்னு சொல்லி தான் அவனை வர வைக்க பிளான் பண்ணி இருக்கீங்க…. ஏண்டா இந்த மானம் கெட்ட பொழப்பு வாயில நல்லா வருது!” என்று திட்டி விட,

“பின்ன என்னடா… ஏதோ வயசுல போட்ட சண்டைய போய் ஜென்ம பகையா நினைச்சு சீன் போட்டுட்டு இருக்கான். அவனுக்கு இப்படி ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தா தான் சரி வரும். நீ வா… வந்து பேசு… அவனும் நார்மலா மாறிடுவான்!” என்று சொல்ல, வம்சி தயக்கமாய்,

“நானும் கொஞ்சம் ஓவரா தான் பண்ணிட்டேன். என்ன இருந்தாலும் என்னோட பெஸ்ட் பிரண்டா இருந்தவனை சந்தேகப்பட்டு இருக்க கூடாது!” என்று சொல்ல,

“கரெக்ட் சோ… ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரீங்க!” என்று சொன்ன கிஷோர், “அப்பறம் சிஸ்டரையும் கூட்டிட்டு வா. கல்யாணத்துக்கு தான் எங்க எல்லாரையும் கலட்டி விட்டுட்ட…!” என்று முறைத்து கொள்ள, வம்சி புன்னகையோடு,

“மேடம் வர்ற மூணு நாள்ல ஏகப்பட்ட பிளான் போட்டு வச்சு இருக்காங்க… அதை டிஸ்டர்ப் பண்ணா என்கிட்ட கோச்சுப்பாங்க…!” என்று  சொல்ல, கிஷோர் திகைத்தான்.

“உன்னை கல்யாணம் பண்ண போற பொண்ணு தான் புருஷன் தாசனா இருக்கும்ன்னு நினைச்சோம்… ஆனா நீ பெண்டாட்டி தாசனா இருக்கியேடா…?”

“இருந்தா என்ன தப்பு?” என்று சமாளித்த வம்சி, அவள் எக்ஸாமுக்கு படிப்பதால் அது முடித்த பின்னால் அனைவரும் பேமிலியாக ஒருமுறை பார்க்கலாம் என்று சொல்லி சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைக்க அவன் மனகண்ணில் கல்லூரி கால நினைவுகள் படம் போல வந்து போனது…

அதில் அவனும் சத்யஜீவனும் அடித்த லூட்டி, ஊர் சுற்றிய தருணங்கள், அழகிய நினைவுகள் என்று அனைத்தையும் நினைத்து பார்த்தவன், அவனோடு பிரச்சனை ஆன சம்பவத்தையும் நினைத்து பார்த்து,

“தப்பு பண்ணது நான் தான்… ஆனா தண்டனைய அவன் அனுபவிச்சிட்டான்…!” என்று கவலையாக நினைத்து கொள்ள, சென்னையை நோக்கிய அவன் பயணம் நினைவுகளால் விரைவு பட்டு இருந்தது.

*****

“டேய் வம்சி வாடா… வாம்மா பவானி… ட்ரைன் கொஞ்சம் லேட்டோ?” என்று விஜயா வீட்டுக்கு சென்றதும் இன்முகத்தோடு வரவேற்றார்.

“இல்லத்த வர்ற வழில ட்ராபிக். அதான்… எப்படி இருக்கீங்க… மாமாவ காணோம்?” என்று பவானி வந்ததும் அவரோடு ஐக்கியம் ஆகி விட்டாள். வம்சி தங்கள் லக்கேஜை ரூமில் வைக்க செல்ல, அங்கே சட்டமாக ரஞ்சிதம் மெத்தையில் அமர்ந்து போன் யூஸ் பண்ணி கொண்டிருந்தாள்.

ஏற்கனவே ரெண்டு பேருக்கும் வாய் தகராறு ஆகி விட்டதால் வம்சி பேசி கொள்ளவில்லை. அவளும் கண்டு கொள்ளாமல் இருக்க, விஜயா பவானியோடு உள்ளே வந்தார்.

“அண்ணி எப்படி இருக்கீங்க…?” என்று பவானி நல்லவிதமாகவே பேச, ரஞ்சிதம் அலட்டி கொள்ளாமல், “ம்ம்… நீ எப்படி இருக்க… ட்ராவல் எல்லாம் ஸ்மூத்தா இருந்துச்சா?” என்றாள் பேருக்கு.

“அதெல்லாம் பிரச்சனை இல்ல அண்ணி…!” என்று பவானி சொல்ல விஜயா மகளிடம், “ரஞ்சிதம் வெளிய வா… அவங்க ப்ரஸ்அப் ஆகட்டும்!” என்றார் சூசகமாக.

அவள் அது புரிந்தும், “ஏன் உங்க ரூம்ல தங்க வைக்க வேண்டியது தான…?” என்று கேட்டு வைக்க, வம்சி திரும்பி விஜயாவை ஒரு முறை முறைத்தான்.

“ரஞ்சிதம்… எழுந்து வா…!” என்று விஜயா கண்ணால் எச்சரித்து விட, ரஞ்சிதம் சலித்தாள்.

“ஒரு மனுசிய நிம்மதியா இருக்க விடுறீங்களா… என்னால வர முடியாது!”

பவானிக்கோ திக் திக் என்று ஆகி போனது. அவள் வம்பு இழுப்பாள் என்று நினைத்தாள். ஆனால் அது இத்தனை சீக்கிரம் வரும் என நினைக்கவில்லை.

“அம்மா… ரொம்ப டயர்டா வந்து இருக்கோம்… பிரச்சனை பண்ணாம எழுந்து போக சொல்லுங்க…!” என்று வம்சி கோபத்தை அடக்கி கொண்டு பேச, ரஞ்சிதம் சட்டமாய், முடியாது என்றே பாட்டு பாட, வம்சி கொதித்து விட்டான்.

“வீட்டுக்கு வாடகை கொடுக்குறது நான். நானும் என் பொண்டாட்டியும் எங்க இருக்கனும்ன்னு, இங்க நான் தான் முடிவு பண்ணுவேன். விருப்பம் இருந்தா இரு… இல்லையா… கிளம்பி உன் புருஷன் வீட்டுக்கு போயிடு… சும்மா வருஷம் முழுக்க இங்கயே உட்கார்ந்து என் சம்பாதியத்த வீண் பண்ணாத!” என்று சொல்லி விட அவ்வளவு தான் வெடித்தது சண்டை.

பவானிக்கோ யார் பக்கம் பேசுவது யாரை விடுவது என தெரியவில்லை… முட்ட முட்ட முழித்து கொண்டு நின்றவள், வம்சி கையை பிடித்து “என்னங்க…!” என்று சமாதானம் செய்து கொண்டு இருக்க, ரஞ்சிதம் அழுக ஆரம்பித்து விட்டாள்.

“புகுந்த வீட்ல தான் நிம்மதி இல்லைன்னா… பிறந்த வீட்லயும் இப்படி பண்ணுறாங்களே… எங்கையாவது இந்த கொடுமை நடக்குமா… வீட்டுக்கு வந்த அக்காவ வெளிய போடின்னு சொல்றான் உங்க பையன். நீங்க பார்த்துட்டு சும்மா நிக்கிறீங்களேம்மா…? இங்க பாரு வம்சி… கூட பிறந்தவள அழுக வச்சு பார்க்காத… என் பாவம் உன்னைய சும்மா விடாது. நான் அழுது நீ நல்லா வாழ்ந்துடுவியா?” என்றாள் மிரட்டலாய்.

“நீ என்ன ஆனாலும் நான் நல்லா வாழுவேன். வெட்டியா பேசாம இடத்தை காலி பண்ணு… இல்ல அம்மா அப்பா கூட தான் இருப்பேன்னா, நான் உன்னை தடுக்கவே இல்ல! இப்போவே அவங்கள கூட்டிட்டு வேற வீட்டுக்கு போயிடு… சம்பாதிச்சு அவங்கள காலம் முழுக்க நல்லா வச்சு பார்த்துக்க. எப்படி இருந்தாலும் உன் வசதி தான்!” என்று சொல்லி விட, ரஞ்சிதம் மேலும் அழுதபடி,

“எப்படி எல்லாம் பேசுறான் பாருங்க உங்க பையன்… கடவுள் பார்த்துட்டு தான் இருப்பார். எல்லாத்துக்கும் கணக்கு வச்சு அவர் பார்த்துப்பாரு!” என்று விட்டு கோபமாக கிளம்ப, பவானி பீதியாகி விட்டாள்.

“என்ன இப்படி சாபம் கொடுக்குறாங்க?” என்று பார்க்க, விஜயாவுக்கு நெஞ்சு வலி மட்டும் தான் வரவில்லை. “இதுக்கு முன்னாடியே எழுந்து போயிருக்கலாம்ல?” என்று வம்சி முனங்கி விட்டு எதுவும் நடக்காதது போல்,

“பவானி ஹீட்டர் போட்டு விடுறேன்… நீ போய் பிரஸ்அப் ஆகிக்கோ!” என்று பாத் ரூமுக்கு விலகி கொள்ள, பவானி திகைத்து பார்த்தாள்.

புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது. “பவானி… எதையும் மனசுல வச்சுக்காத… அவங்க எப்பவும் அப்படி தான்!” என்று விஜயா வேறு எந்த விளக்கமும் தராமல் சென்று விட, பவானி நெஞ்சில் கை வைத்தாள்.

தன்னால் ஒரு அரை மணி நேரம் கூட இங்கு தாக்கு பிடிக்க முடியவில்லையே… தான் தொடர்ந்து இங்கே இருந்தால் என்ன ஆகும் என்று யோசித்தவள், வம்சி திரும்பி வந்து கதவை அடைப்பதை கண்டு அவன் ஏதாவது சொல்லுவான்… விளக்கம் கொடுப்பான் என்று எதிர்பார்த்தால் அவனோ,

“ஹேய்… என்னடி உட்கார்ந்துட்ட… ட்ரெஸ் சேஞ் பண்ணு!” என்று நார்மலாக சொல்ல, பவானி தயக்கமாய்,

“உங்க அக்கா…?” என்று கேட்க,

“அவள கண்டுக்காத. ஜஸ்ட் அ யூஸ்லெஸ் க்ரியேச்சர்!” என ஏக வசனத்தில் சொன்னவன், மனைவி தன்னை இமைக்காமல் பார்ப்பதை கண்டு,

“உன்கிட்ட பொண்ணு பார்க்க வர்றப்போ சில விஷயங்கள் சொன்னேன் நியாபகம் இருக்கா…?” என்று கேட்க, பவானி மெதுவாய் தலை ஆட்டினாள்.

“இங்க நீ இருக்கணும்ன்னா… அதை ஒரு நிமிசத்துக்கு கூட மறந்துடாத. அதை கத்துக்க எனக்கு பல வருஷம் ஆகிடுச்சு… சோ, இட்ஸ் எ வேர்ட்ஸ் ஆப் வைஸ் மேன்!” என்று சீரியஸாக சொன்னவன்,

“இனி… ட்ரெஸ் ரிமூவ் பண்ண நான் ஹெல்ப் பண்ணட்டா…. இல்ல சேர்ந்து குளிப்போமா?” என்று மனைவியின் கன்னத்தை நிமிண்ட, “யாருப்பா நீ?” என்று பவானி அசந்து போனாள். பெரிய போரையே உருவாக்கி விட்டு தன்னிடம் ரொமான்ஸ் பண்ணுகிறாரே என்று ஒருமாதிரி ஆகி விட,

“என்னங்க… இட்ஸ் ரியலி கன்சர்னிங். இந்த மாதிரி சண்டை போட்டுக்குறது சரி இல்ல!” என்று மெதுவாய் எடுத்து சொல்ல, வம்சி உப் என்று மூச்சு விட்டு பவானி பக்கத்தில் அமர்ந்தான்.

“அவங்க பேசுன விதமும் தப்பு தான் நான் இல்லைன்னு சொல்லல… ஆனா அவங்கள மேலும் மேலும் ட்ரிகர் பண்ணி விட்டு அவங்க எந்த மாதிரி எல்லாம் சொல்லிட்டு போறாங்க பாருங்க. என்ன இருந்தாலும் நம்மள விட வயசுல மூத்தவங்க…!” என்று பவானி சொல்ல, வம்சிக்கு தன் அப்பாவி மனைவியை பார்த்து பாவமாக தான் இருந்தது.

‘நம்ம மட்டும் இங்க இல்ல… இவள ரஞ்சிதம் பிச்சு தின்னுடுவா!’ என்று மனதில் நினைத்தவன்,

“சரிங்க பெண்டாட்டி… இனி டென்சன் ஆகாம மெதுவா திட்டுறேன் போதுமா…?” என்றவள் மூக்கை பிடித்து ஆட்ட, அவன் புரிந்து கொண்டான் என்பதே அவளுக்கு அப்பாடா என இருந்தது.

“குட்…!” என்றவன் கன்னத்தில் தட்டியவள், “நான் போறேன்!” என்று எழுந்து கொள்ள,

“ஹேய் என்னடி… கலட்டி விட்டுட்டு போற?” என்றான் வம்சி ஏக்கமாய். இப்பொழுது சிரித்து விட்ட பவானியும், “கேட்டுட்டே இருந்தா வெயிட் பண்ண மாட்டேன்… சீக்கிரம் வாங்க…!” என்று க்ரீன் சிக்னல் கொடுத்து போக, வம்சி ரொமான்ஸ் மோடுக்கு சென்று, “தங்கள் உத்தரவு மகாராணி!” என்று மனைவியை சிவக்க வைத்தான்.