“பெண்டாட்டி அமையுறது எல்லாம் மேல இருக்கவன் தர்ற வரம்…. உனக்கு கண்ணு போல நல்ல பொண்ணா அமைச்சு கொடுத்துட்டான். நல்லா பார்த்துக்கணும் அவள… பவானி… இங்க பாரும்மா! இவன் வீட்லயும் ஊமை சாமியாரா இருந்தா தயங்கமாக எனக்கு கால் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணு. நான் பார்த்துக்குறேன்!” என்று தாசில்தார் வீர பத்திரன் கண்ணை உருட்ட, பவானிக்கு சிரிப்பு தான் வந்தது.
சண்டே அவளும் வம்சியும் விருந்துக்காக அவர் வீட்டுக்கு சென்று இருந்தார்கள். அவரும் அவர் மனைவியும் அன்பாக நன்றாக வரவேற்று உபசரித்தார்கள். வீர பத்திரன் மனைவி வசந்தலா மகேப்பேறு மருத்துவர்.
அவர்களது இரண்டு பெண்களும் கூட டாக்டர் தானாம். சென்னையில் திருமணம் முடிந்து செட்டில் ஆகி விட்டார்களாம்.
“அதெல்லாம் என் வாணி எங்கையும் விட்டு கொடுக்க மாட்டா!” என்று வம்சி பெருமை பீற்ற, “பாருடா அவ்ளோ நம்பிக்கையா?” என வசந்தலா கிண்டல் பண்ணினார்.
“அதெல்லாம் அவரு நல்லா பேசுவாரு மேடம்!” என்று வாணியும் கணவனுக்கு கொடி பிடிக்க,
“இவன் மிரட்டி கூட்டி வந்திருக்கான் போல!” என்று வீர பத்திரன் மனைவியிடம் சொல்லி சிரித்தார். அவர்கள் இருவரையும் வாணிக்கு ரொம்ப பிடித்து இருந்தது. பெரிய பொசிசனில் இருந்தாலும் வீட்டில் அதையெல்லாம் கலட்டி வைத்து விட்டு சாதாரண மனிதர்களாகவே நடத்து கொண்டார்கள்.
“பவானி… வம்சி கல்யாணம் பண்ண போறேன்னு வந்து சொன்னப்போ லீவ் போட பொய் சொல்றான்னு நினைச்சிட்டேன்ம்மா. என்னால சுத்தமா நம்ப முடியல. கல்யாண பத்திரிகைய கூட டபுள் செக் பண்ணேன் தெரியுமா?” என வீர பத்திரன் நக்கல் பண்ணினார்.
“அந்த அளவுக்கு என் மேல அவநம்பிக்கை வாணி…!” என்று வம்சியும் சிரிக்க, “பின்ன? நாங்க கல்யாணம் பத்தி கேட்டா சுத்தமா பிடியே கொடுக்க மாட்டான்ம்மா… நாமளே எத்தனை தடவை கேட்டு இருப்போம்?” என்றார் வசுந்தலாவும் வேகமாக.
அதற்கு வம்சியோ, “செட்டில் ஆகிட்டு தான கமிட்மென்ட்ஸ் வச்சுக்க முடியும்…. என்ன வாணி?” என்று மனைவியை துணைக்கு இழுக்க, அவளும் சரி என்றே தலை அசைத்தாள்.
“இப்படி காரணம் சொல்லி தான் தப்பிச்சான்ம்மா… எப்படியோ உன்னை பார்த்ததும் மனசு மாறிடுச்சு போல!” என்று வீர பத்திரன் மேலும் ஓட்ட, ‘ஐயோ மானத்தை வாங்குறாரே!’ என்று வம்சி மனைவியை பார்க்க, அவளுமே குறும்பாக இவனை பார்த்தாள்.
“சரி சரி… மனசுல இருந்த வன்மத்தை எல்லாம் தீர்த்துட்டீங்கன்னு நினைக்கிறேன். இனி விட்டுடுங்க… இருக்க மரியாதையவாது காப்பாத்திக்கிறேன்!” என்று வம்சி சரணடைய மீண்டும் சிரிப்பலை பரவியது.
“பொழைச்சு போ…!” என்று பாவப்பட்டு விட்ட வீர பத்திரன் பவானியிடம், “நீ வொர்க் போக விரும்புறேன்னு வம்சி சொன்னான் பவானி…. இங்க பாரு! உன் அப்பா ஸ்தானத்துல இருந்து நான் ஒரு நல்லா ஐடியா சொல்லட்டுமா?” என்று கேட்க பவானியும், “சொல்லுங்க சார்!” என்றாள் பணிவாக.
“இனி வர போற காலத்துல பிரவைட் வேலைய நம்பி எதுலையும் இறங்க முடியாது பவானி. ஒன்னு சுய தொழில்… இல்ல கவர்மென்ட் வேலை! ரெண்டு தான் ஜாப் செக்யூரிட்டி கொடுக்கும். நீ இப்போ எடுத்ததும் வேலைக்கு போகணும்ன்னு யோசிக்காம ஒரு, ஒரு வருஷம் முழு மூச்சா உட்கார்ந்து டெட் எக்ஸாம்க்கு படி. அதை க்ளியர் பண்ணா, ஜாம் ஜாம்ன்னு கவர்மென்ட் வேலைக்கு போகலாம். என்னடா ரெண்டு பேரும் கவர்மென்ட் வேலைல இருந்தா எப்படி ஓன்னா இருக்க ஒத்து வரும்ன்னு எல்லாம் கவலைப்பட வேண்டாம். உழைக்கிற காலத்துல சில அட்ஜஸ்ட்மென்ட்ஸ் பண்ணிகிட்டா தான் எதிர்காலம் ஸ்மூத்தா இருக்கும். ஒரு ஆளுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணா, இன்னொரு ஆளும் டிபார்ட்மென்ட்குள்ள பேசி சேர்ந்து மூவ் ஆகிக்கோங்க. இது உங்களோட எதிர்காலத்துக்கு மட்டும் இல்ல… உங்க குழந்தைங்க எதிர்காலத்துக்கும் பெட்டரா இருக்கும்!” என்று கூற பவானிக்கும் இந்த யோசனை பிடித்து இருந்தது.
எனவே அவள் வம்சியை பார்க்க, அவனுமே சிறிது யோசனையோடு மனைவியை திரும்பி பார்க்க அவன் பார்வை, ‘உனக்கு இந்த ஐடியா பிடிச்சு இருக்கா?’ என்று கேட்டது. பவானியும் ஆம் தலை அசைக்க,
“நான் கோச்சிங் க்ளாஸ்ல கூட சேர்த்து விடுறேன் சார். டூ இயர் கூட படிக்கட்டும்!” என்று கூற அதற்கு வசந்தலா,
“அங்க போய் படிச்சாலும் நீயும் வீட்டு வேலைல ஒரு கை கொடுத்து உதவனும் வம்சி… அப்போ தான் ப்ரசர் இல்லாம படிக்க முடியும்!” என்று கூற, “அதெல்லாம் இப்போவே ஹெல்ப் பண்ணுவாரு!” என்று பவானி வேகமாய் சொன்னாள்.
“அப்பறம் என்ன… நல்லா படிச்சு கவர்மென்ட் வேலைக்குள்ள ஓடிடு பவானி!” என்று வீர பத்திரன் சொல்ல, இருவருக்கும் அது எதிர்காலத்தின் மீதிருந்த நம்பிக்கையை வெகுவாக மாற்றி இருந்தது. மதியம் அவர்களிடம் விடை பெற்று வீட்டுக்கு வந்தாலும், வம்சி தெளிவாக பவானியிடம் கேட்டு விட்டான்.
“உன்னை போர்ஸ் பண்ணுற மாதிரி இருந்தா சொல்லிடு வாணி… இது ப்யூர்லி உன்னோட முடிவு தான். என்னால தனி ஆளா குடும்பத்தை நடத்த முடியும். பட் அதுக்காக உன்னோட சுதந்திரத்தையும் நான் பறிக்க நினைக்கல. நீ என்ன முடிவெடுத்தாலும் நான் உனக்கு சப்போர்ட் பண்ணுவேன். நீ எதை நினைச்சும் யோசிக்க வேண்டியதில்ல!” என்க பவானியும் தன் எண்ணத்தை பகிர்ந்தாள்.
“நான் காலேஜ் முடிச்சதும், கல்யாணம் பண்ணனும்ன்னு சொல்லி தான் வீட்ல வொர்க் பத்தி யோசிக்க விடலங்க…பட் ஒன்ஸ் ஜாப் மார்கெட்ல இருந்து வெளிய வந்துட்டு லேட்டா திரும்பி போறப்போ தான், எவ்ளோ பெரிய தப்பு பண்ணேன்னு புரிஞ்சது. நான் அடுத்தும் அதே தப்ப பண்ண நினைக்கல… சோ, ட்ரை பண்ணுறேங்க. படிச்சா நான் நிச்சியமா க்ளியர் பண்ணிடுவேன்னு நம்பிக்கை இருக்கு. ஆனா இந்த கோச்சிங் செண்டர் எல்லாம் வேணாம். என்னோட ஸ்டடியிங் மெத்தட் லிபரலா இருக்கும். அங்கையோ ரேஸ் மாதிரி ஓட சொல்லுவாங்க!” என்று இழுக்க வம்சியும் புரிந்து கொண்டான்.
“அப்போ நீ வீட்ல இருந்தே படி… நான் உனக்கு முழு சப்போர்ட் பண்ணுறேன். இனி உன்னோட டார்கெட் எக்ஸாம் க்ளியர் பண்றதா மட்டும் தான் இருக்கணும்…!” என்றவன் சீரியஸாக சொல்ல, பவானி ஒருநிமிடம்,
“என்ன ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா பேசுறாரு?” என்று பீதியாக பார்க்க அவனுக்கும் அந்த பார்வை புரிந்தது போல…. எனவே கேலியான குரலில், “படிப்பு விஷயத்துல நான் ரொம்ப கண்டிப்பா இருப்பேன்!” என்று கண்ணை உருட்ட பவானி நிஜமாகவே பயந்து போனாள்.
அவள் ஒன்றும் வம்சி போல டாப் ஸ்டூடன்ட் கூட கிடையாது. “என்ன இவரு அவர் ரேஞ்சுக்கு என்னையும் எதிர்பார்ப்பாரு போல?” என யோசிக்க அவனோ இன்னும் சீரியசாக,
“ஆனா படிக்கிறேன் படிக்கிறேன்னு சொல்லி என்னைய லவ் பண்ண மறந்துடாத!” என்று செக் வைக்க, “அதெல்லாம் நான் மறக்க மாட்டேன்!” என்ற பவானி பின்பே அவன் சொன்னதின் பொருள் உணர்ந்து,
“ஐயோ போங்க உங்களுக்கு நக்கல் பண்ணுறதே வேலையா போச்சு!” என்று எஸ்கேப் ஆக, “ஏய் உண்மைய சொன்னேன் வாணி… என்னைய மறந்துறாத!” என்றவன் ஒட்டி தள்ள, பெண்ணவள் முகம் அந்திவானமாய் சிவந்து போனது.
********
“உனக்கு என்ன தாண்டா பிரச்சன?” என்று அலுப்பாக கேட்டார் மைதிலி. சத்யஜீவனை பெற்றெடுத்த வம்பு தாய். “எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல… நீங்க தான் கல்யாணம் கல்யாணம்ன்னு சொல்லி மனுசன டென்சன் ஆக்குறீங்க!” என்று சத்யன் காக்கி சட்டையை போட்டபடி கூற, மைதிலி கோபமாக அவன் முன்னால் வந்து நின்றார்.
“கொலையா பண்ண சொன்னேன். கல்யாணம் தான?”
“நீங்க கொலை பண்ண கூட சொல்லுங்க. பண்ணிட்டு வரேன்!” என்று சத்யன் ஏட்டிக்கு போட்டியாக பேச, மைதிலிக்கு பிபி கூடியது.
“உன் வயசுல இருக்க எல்லாருக்கும் பிள்ளையே இருக்குடா… நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்க? ஏற்கனவே போலீஸ்ன்னு சொல்லி பொண்ணு தர மாட்றாங்க. இதுல நீ வர்ற பொண்ணுங்கள எல்லாம் வேணாம் வேணாம்ன்னு ஒதுக்கி தள்ளுற. போன வாரம் பார்த்துட்டு வந்த பொண்ணுக்கு என்னடா குறைச்சல்? எதுக்கு இப்போ அவள வேணாம்ன்னு சொல்ற? பொண்ணு கண்ணுக்கு லட்சணமா மட்டும் இல்லாம எவ்ளோ படிச்சு இருக்கா… எவ்ளோ சொத்து இருக்கு… இந்த காலத்துல பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம்டா. அதுலயும் அவ்ளோ அம்சமான சம்பந்தம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்!” என்று புலம்ப, சத்யஜீவன் எரிச்சலாக சொன்னான்.
“அப்போ எதுவும் இல்லாத ஏழை விட்டு பொண்ணா பாருங்க. தாலி கட்டுறேன்!”
“எதே… ஒன்னும் இல்லாதவள கல்யாணம் பண்ணுவியா?” என கேட்கும் பொழுதே மைதிலி முகத்தில் அனல் பரந்தது.
“ஏன் ஏழையா இருந்தா பொண்ணு இல்லைன்னு ஆகிடுமா… அடிமட்டத்துல இருந்து வந்த பொண்ணுங்க தான் குடும்பத்து மேல ரொம்ப பாசமா இருப்பாங்க…!” என்றவன் தன் போக்கில் சொல்ல, மைதிலி வேகமாய்,
“பாசமா இருந்து என்னடா கிடைக்க போகுது? இல்லாத வீட்ல பொண்ண எடுத்து எந்த மூஞ்சிய வச்சுட்டு நம்ம சொந்தகாரங்கள பார்க்க முடியும்?”
“இதே மூஞ்சி வச்சுட்டு தான் பார்க்கணும். இல்லைன்னா பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கோங்க!” என்றவன் நக்கலாக சொல்ல, மைதிலிக்கு எரிச்சல் கூடியது.
சத்யஜீவனின் குடும்பம் மிகவும் பெருமைவாய்ந்த வசதியான குடும்பம். தமிழகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஆர்.ஆர்.எஸ் எஜிகேசனல் இன்ஸ்டிடியூசனை நிறுவியர் சத்யஜீவனின் தந்தையான ரகுராஜ செந்தில்.
பல பள்ளிகள், கல்லூரிகள், கோச்சிங் சென்டர்ஸ் என கோடியில் புரளும் குடும்பம். எனவே கொஞ்சம் திமிர்பிடித்த குடும்பமும் கூட… சத்யஜீவன் பல கோடி சொத்துக்கு அதிபதியாக இருந்தாலும், தந்தை செய்யும் தொழிலில் நாட்டம் இல்லாமல் தனக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து கொண்டான்.
வீட்டுக்கு ஒரே வாரிசு வேறு! மகன் தான் ஒத்துவரவில்லை. அவனுக்கு திருமணம் செய்து வைத்து மருமகளையாவது தொழிலை பார்த்துகொள்ள வைக்கலாம் என்று ப்ளான் பண்ணினால் அவன் அதற்கும் ஒத்துவரவில்லை.
மகன் வளைந்து கொடுக்காமல் முரண்டு பிடிப்பதை கண்ட மைதிலி,
“நீ இப்படியே பண்ணிட்டு இரு… ஒருநாள் இல்ல ஒருநாள்… நான் உன்னையும் உன் அப்பாவையும் விட்டுட்டு முதியோர் இல்லத்துல போய் தான் சேர்ந்துக்க போறேன்!” என மிரட்டினார்.
“அம்மா… போதும். இதுக்கு மேல இப்படி சொல்லி சொல்லியே டென்சன் ஆக்காதீங்க. போறதுன்னா போங்க. ஆனா திரும்பி எக்காரணத்தை கொண்டும் இங்க வர மாட்டேன்னு எழுதி கொடுத்துட்டு போங்க… அப்பறம் அங்க வசதி சரி இல்ல, சாப்பாட்டு சரி இல்லைன்னு எல்லாம் குறை சொல்லிட்டும் திரும்பி வர கூடாது!” என்று எச்சரிக்க, மைதிலி அழவே ஆரம்பித்து விட்டார்.
“அப்போ நான் எக்கேடு கேட்டாலும் உனக்கு கவலை இல்லதான? இதுக்காகவா பத்து மாசம் உன்னைய கஷ்டப்பட்டு சுமந்து பெத்தேன்?”
“நானா உங்களை பெக்க சொன்னேன்?” என்றவன் கமுக்கமாக சிரிக்க, மைதிலி கோபத்தில் அவன் கையில் அடித்தார்.
“என் கவலை கண்ணீர் எல்லாம் இப்போ உனக்கு புரியாதுடா… கடைசில யாரும் இல்லாம ஒன்டிகட்டையா நிப்ப பாரு. அப்போ அம்மா சொல்றத கேட்டு இருக்கலாம்ன்னு தோணும்!”
“சரிம்மா.. நான் அப்போவே பீல் பண்ணிக்கிறேன். நீங்க கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்களா… நான் கிளம்பனும்!” என்றவன் நடையை கட்ட, மைதிலி தன் ஆர்ப்பார்ட்டம் பொய்த்து போன கவலையில்,
“நீ என்கிட்ட மாட்டுவடா… அப்போ வச்சுக்குறேன். இல்ல எனக்கு தெரியாம ஏதாவது ஏழை பொண்ண லவ் பண்ணுறானோ…. எதுக்கு அப்படி ஒரு வார்த்தைய சொன்னான்? ஒருவேள இருக்குமோ?” என்று சந்தேகம் அடைய, சத்யன் விசில் அடித்தபடி நடந்து கொண்டே,
“எப்படியோ குழப்பி விட்டாச்சு. இனி அதை பத்தி யோசிச்சு ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ள சில மாசம் போயிடும்!” என சிரித்து கொண்டான். ஆனால், அவனை குழப்பவே ஒருத்தி வேகமாக எஸ்பி ஆபிசுக்கு கிளம்பி இருந்தாள்.