நேச சிறகுகள் 12

அரை மணி நேரத்தில் மொத்த கலவரமும் முடிவுக்கு வந்திருக்க  சம்பந்தப்பட்ட ஆட்களை  கைது செய்து தூக்கி விட்டான் சத்யஜீவன்.

“நான் யாருன்னு தெரியுமா?” என்று சிலர் கூவினாலும்,

“தெரியாதுங்க சார். ஸ்டேஷன்ல போய் நீங்க யாருன்னு சொல்லுங்க… நான் கேட்டு தெரிஞ்சுக்குறேன்!” என நக்கலாக சொல்ல, அனைத்தையும் வாயை பிளந்து பார்த்த தினேஷ்,

“எப்படி சார்… எல்லாத்துலையும் அஞ்சு ஸ்டெப் முன்னாடி இருக்கீங்க?” என வினவினான்.

அதற்கு சத்யன் தன் பேட்ஜை காட்டி, “யோவ்… நான் ஐ.பி.எஸ்ய்யா… கவர்மென்ட் சும்மாவா போஸ்டிங் கொடுத்து உட்கார வச்சிருப்பான்?” என்று கேட்க, ‘பாய்ண்டா தான் பேசுறாரு!’ என்று தினேஷ் நினைத்து கொண்டான்.

“அப்பறம் மீடியா நண்பர்களே… லா அன்ட் ஆர்டர ரீஸ்டோர் பண்ணியாச்சு!” என்று சத்யன் மீடியா ஆட்களை பார்க்க, அவர்களோ அவன் கொடுக்க போகும் ஸ்டேட்மென்ட்டுக்காக ரெடியாக இருந்தார்கள்.

“எனக்கு உங்ககிட்ட ஒரே ஒரு ரெக்வஸ்ட் இருக்கு!” என்றவன் சொல்ல, பத்திரிகை காரர்கள் கண்ணில் ஆர்வம் அதிகரித்தது.

“என்னோட போட்டோஸ்ல லெப்ட் ஆங்கில விட ரைட் ஆங்கில் தான் நல்லா இருக்கும். சோ, அதையே நாளைக்கு கவர் பிக்சருக்கு போட்டுடுங்க!” என்றவன் சீரியஸாக சொல்ல, அனைவரும் சிரித்து விட்டார்கள்.

சத்யன் மேலும் சீரியஸான டோனில், “அப்பியரன்ஸ் ரொம்ப முக்கியம்!” என்று கூலிங் க்ளாசை மாட்டி கொண்டு, ஜீப்பில் ஏறி விட தினேசும் அவனோடு தோற்றி கொண்டான். அவர்கள் போவதை பார்த்த ஒரு புதிய ரிப்போர்ட்டர்,

“எஸ்பி ஒரு மார்கமா இருக்காரே….?” என்று கேலியாக சொல்ல, க்ரிஸ்டி அவனிடம், “என்ன வேலைக்கு புதுசா?” என்க அவனும் வேகமாய் தலை ஆட்டினான்.

“வாய குறைச்சுக்கோ… இல்லேன்னா உன்னையும் மெண்டல் ஆக்கி விட்டுருவான்!” என்று சத்யனை மரியாதை இல்லாமல் பேச அவனோ,

“என்ன மேடம், எஸ்பிய போய் அவன் இவன்னு பேசுறீங்க?” என்று கேட்க, க்ரிஸ்டி கண்ணை உருட்டி,

“அட போயா… அவன பத்தி விசாரிச்சு பாரு புரியும். என் பேரு என்னன்னு நல்லா தெரிஞ்சும் புதுசா பார்க்குற மாதிரியே எப்படி கேட்டான் பார்த்தியா… அவன் ஒருமாதிரி சைகோ ரகம்!” என்று திட்ட, புது ரிபோர்ட்டர் கப்சிப் ஆகி விட்டான்.

“இனி பார்த்து இருக்கேன் மேடம்…!” என்றவன் சொல்ல,

“அது… அவன் ரேடார்ல மாட்டிக்காத. அப்பறம் எங்க பார்த்தாலும் வச்சு செய்வான்!” என்ற எச்சரிகையோடு க்ரிஸ்டி விலகி நடக்க அவள் கேமரா மேன் கிண்டலாக கேட்டான்.

“அவரு உன் ப்ரெண்டு தான… எதுக்கு நீயே அவர டேமேஜ் பண்ணி விடுற?”

அதை கேட்டு முறைத்த க்ரிஸ்டி, “அவன் என் ப்ரென்ட் மாதிரியா நடந்துக்கிட்டான்.  சரியான க்ராக்குடா!” என்று தலையில் தட்டி கொண்டு தங்கள் பத்திரகை ஆபிசுக்கு கிளம்ப, அவள் போனுக்கு சத்யன்,

“குட் பெர்பாமென்ஸ் பல்லி!” என்று மெசேஜ் அனுப்பி விட க்ரிஸ்டி பல்லை கடித்து கொண்டாள். சத்யன் தோழியிடம் வம்பிழுத்து விட்டு, போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்தவன்,

“தினேஷ்… நான் ஈவினிங் சீக்கிரமா டியூட்டில இருந்து கிளம்பிடுவேன். ஏதாவது எமர்ஜென்சின்னா மெசேஜ் மட்டும் பண்ணு!” என்று தெரிவிக்க, அவனோ வாயை வைத்து கொண்டு அமைதியாக இல்லாமல்,

“என்ன சார்… வீட்ல ஏதாவது விசேசமா? அடை மழை பெஞ்சாலும் கடமை தவறாம ஆபிஸ் வருவீங்களே?”  என்று நக்கல் பண்ண, சத்யனோ சோம்பல் முறித்தபடி,

“என்னைய்யா பண்ண சொல்ற…. வேலைய விட வீட்ல தான் அதிக டார்ச்சல். இன்னிக்கு எங்கையோ பொண்ணு பார்க்க போகணுமாம். எங்கம்மா வரலேன்னா முதியோர் இல்லத்துல போய் சேர்ந்துப்பேன்னு மிரட்டுறாங்க!” என்று சீரியசான விஷயத்தை சப்பையாக சொல்ல தினேஷ் கருத்தாக,

“சார் உங்க அம்மாவுக்காகவாது ஒரு கல்யாணம் பண்ணிக்கலாமே?” என்று சொல்லி பார்க்க, சத்யன் எரிச்சலாக சொன்னான்.

“எங்கம்மா முதியோர் இல்லம் போறது எனக்கு பிரச்சனை இல்லைய்யா. ஆனா, அங்க அவங்களால என்ன பிரச்சனை வருமோன்னு தான் எனக்கு கவலையா இருக்கு. அவங்க பாட்டுக்கு வச்சுக்க முடியாது. திரும்பி வந்து கூட்டிட்டு போங்கன்னு கம்ப்ளைன்ட் பண்ணா எனக்கு தான் டைம் வேஸ்ட்!” என்று கேசுவலாக சொல்ல, தினேஷ் கேட்டது தன் தப்பு தான் என்று புரிந்து கொண்டு,

“ரொம்ப நல்ல மனசு சார் உங்களுக்கு!” என்று அலுக்க, “அது தான் எனக்கே தெரியுமே!” என்று மேலும் வம்பு செய்தான் சத்யஜீவன். ஆனால் தினேசுக்கு ஒரு பெரிய சந்தேகம் இருந்தது.

நல்ல வேலை, ரெபிட்டேசன், அழகு, பேர், புகழ் எல்லாம் இருந்தும் எதற்காக திருமணத்தை மட்டும் தள்ளி போட வேண்டும் என்று யோசித்தவன், “உங்களுக்கு ஏன் சார் கல்யாணம்ன்னு பேச்சை எடுத்தாலே காண்டாகுது?” என வினவ, சத்யன் தோள் குலுக்கினான்.

“கல்யாணம் பிரச்சனை இல்ல தினேஷ். பொண்ணு தான் பிரச்சனை!”

“பொண்ணு பிரச்சனையா… புரியலையே சார்?”

“அதை எப்படி சொல்லுறது… தினேஷு காலேஜ் படிக்கும் போது, நான் ஒரு பொண்ணை ரொம்ப சீரியஸா லவ் பண்ணிட்டு இருந்தேன்!” என சத்யன் ஆரம்பிக்க, தினேஷ் திகைத்தான்.

“சார் உங்களுக்கு ஒரு லவ் ஸ்டோரியா… சூப்பர் சார், உங்கள நான் என்னவோன்னு நினைச்சேன்…!”

“என்னன்னு நினைச்ச?” என்று சத்யன் புருவம் உயர்த்த தினேஷ் சமாளித்தான்.

“இல்ல.. உங்களுக்கு லவ் பிடிக்காதுன்னு நினைச்சுட்டேன்!”

“நான் எப்போய்யா உன்கிட்ட அப்படி சொன்னேன்?”

“சார் தப்பு தான்… உங்களுள்ள ஒரு ரெமோ இருக்கது தெரியாம போச்சு… நீங்க மேல சொல்லுங்க!” என்றான் தினேஷ் ஆர்வமாக.

“மேல என்னத்த சொல்ல… நான் அவளை சீரியஸா லவ் பண்ணேன். அவளும் என்னைய லவ் பண்றான்னு சொல்லி சொல்லியே என் பிரண்ட்ஸ் எல்லாம் ஏத்தி விட்டு, என் லவ் ரொம்ப ஸ்ட்ராங்கா மாறி தொலைச்சிடுச்சு. நானும் அவகிட்ட ப்ரபோஸ் பண்ணலாம்ன்னு போனா…!” என்று இடைவெளி விட,

“சொல்லுங்க சார்… சொல்லுங்க… அடுத்து என்ன ஆச்சு?” என்று தினேஷ் அலைந்தான். சத்யனோ தலை முடியை சரி செய்தபடி,

“ப்ரொபோஸ் பண்ணலாம்ன்னு போனேன். ஆனா அன்னிக்கு என் லவ்வ சொல்ல முடியாத அளவுக்கு ஒரு பிரச்சனை வந்து தொலைச்சிருச்சு…. காலேஜ்ல வேற என்னைய ஆறுமாசம் சஸ்பென்ட் பண்ணிட்டாங்க. தென், நான் திரும்பி போய் பார்த்தா அவ படிப்ப முடிச்சுட்டே போயிட்டா!” என்றவன் டிவிஸ்ட் கொடுக்க தினேசுக்கு இதை ஏண்டா கேட்டோம் என்று ஆகி விட்டது.

“ஏன் சார்… எல்லாத்தையும் கடைசியா தான் பண்ணுவீங்களா…. முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல…?” என்றான் கூடுதல் டென்சனாக.

“சொல்லி இருக்கலாம்ய்யா… ஆனா அவள பார்த்தாலே…. ஹார்ட் படபடன்னு துடிச்சு செம்ம நர்வசா ஆகிடுவேன்.  ரொம்ப நல்ல கேரக்டர். தேவதை மாதிரி இருப்பா…!” என்று பழைய நினைவில் சத்யன் சொல்ல, அவன் முகத்தில் இருந்த ரியாக்சனை பார்த்த தினேஷ்,

‘ஓவரா லவ் பண்ணி இருப்பாரு போல… டயலாக்கா அடிக்கிறாரே?’ என்று நினைக்க, சத்யன் புன்னகையோடு சொன்னான்.

“காலேஜ் வாழ்க்கைல அவ்ளோ பிரச்சனை இருந்தாலும், அவள பார்க்கவே தினம் தினம் காலேஜ் போக தோணும். என்னோட டாலி அவ!” என்றவன் சிலாகித்து சொல்ல,

“ஓ… செல்ல பேரு வேறயா?” என தினேஷ் சிரித்து கொண்டான்.

“இவ்ளோ லவ் பண்ணி இருக்கீங்க… காலேஜ் முடிச்சாலும் எங்க இருக்காங்கன்னு தேடி போய் ப்ரொபோஸ் பண்ணி இருக்கலாம்ல சார்?” என்றான் இப்பொழுது நிஜமான அக்கறையில்.

“எங்க… என் பரம எதிரி ஒருத்தனை ஓவர் டாக் பண்ண போட்டி போட்டதுல என் டாலிய கோட்டை விட்டுட்டேன்!” என்று சத்யன் பெருமூச்சு விட, தினேஷ் ஆர்வமாக சொன்னான்.

“எதிரி, காதலி… உங்க பாஸ்ட் ரொம்ப சுவாரசியமா இருக்கே சார்?”

“ஆமா… ரொம்ப சுவாரசியமா தான் இருந்துச்சு. எப்படியோ அப்போ என் பரம எதிரிய தோற்க்கடிச்சும் என்னால சந்தோஷபட முடியல. பின்ன அப்படியே, ஒரு வருசம் ட்ரைனிங் போஸ்டிங்ன்னு நிறைய போச்சு… தொடர்ந்து ட்ரான்ஸ்பர் அது இதுன்னு இத்தனை வருஷமும் ஓடி போச்சு!” என்று முடிக்க, தினேஷ் சட்டென கேட்டான்.

“அப்போ நீங்க உங்க டாலிய நினைச்சு தான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்களா…?”

அவன் கேள்வி சத்யனின் மனதை எங்கோ வலிக்க வைக்க, முயன்று சிரித்தான். “என் டாலிக்கு இப்போ கல்யாணம் ஆகி பிள்ளையே இருக்கும்ய்யா…!”

வாய் நிதர்சனத்தை சொன்னாலும், ஒருவேளை அப்படி இல்லாமல் இருந்தால் என மனம் பேராசை பட, சட்டென எண்ண போக்கை மாற்றி கொண்டான். வேண்டாத எண்ணம் என்று மூளை வார்ன் பண்ணி விட்டது போல.

ஆனால் தினேஷ் அமைதியாக இருக்காமல், “ஒருவேள அவங்களுக்கு கல்யாணம் ஆகாம இருந்தா நீங்க இப்போ ப்ரொபோஸ் பண்ணுவீங்களா சார்?” என்று கேட்டு தொலைக்க, சத்யன் தலையை சிலுப்பி கொண்டு,

“யோவ் சும்மா இருய்யா… நீ வேற எதையாவது சொல்லி மனசை கலைச்சு விடாத. இன்னிக்கு நான் வேற பொண்ணை பார்க்க போறேன் தெரிஞ்சுக்கோ!” என்று மிரட்டும் தோணியில் சொல்ல, “என்ன திடீர்ன்னு டென்சன் ஆகிட்டாரு!” என்று சுதாரித்தவன்,

“சும்மா கேட்டேன் சார். ஆமா பரம எதிரின்னு யாரையோ சொல்லிட்டு இருந்தீங்களே…. அது யாரு?” என்று ஆரம்பிக்க, சத்யன் வெளியில் பார்வையை திருப்பியபடி,

“அவன்….!” என்று இழுத்தவன், “பீம்!” என அழுத்தமாய் சொல்ல, தினேஷ் குழப்பமாய், “பீமா… பேரே வித்தியாசமா இருக்கே. வடக்கனோ?” என்று இழுக்க, சத்யன் மடார் என்று அவன் முதுகில் அடித்திருந்தான்.

“அம்மா…!” என்று அலறிய தினேஷ் “சார்…. என்ன சார்?” என்று பயமாக கத்த,

“என் எதிரிய நான் மட்டும் தான் கலாய்க்கணும்!” என்றான் சத்யன் வேகமாக.

“இது என்ன சார் அநியாயமா இருக்கு!” என முதுகை தேய்த்து கொண்ட தினேஷ் மனதில், ‘இவரு லவ்வர விட எதிரிய தான் அதிகமா லவ் பண்ணி இருப்பாரு போல…!’ என்று எரிச்சலாக நினைத்தான். இருந்தும் ஏனோ லவ்வர் கதையை விட எதிரியின் கதையை தெரிந்து கொள்ள ஆர்வமாக,

“சார்… உங்களோட மிஸ்டர். எதிரி என்ன ஆனார்… அவர் கதை தான் என்ன?” என்று கேட்க, சத்யஜீவன் இகழ்ச்சியாக இதழ் வளைத்து,

“அவன் ஒரு லூசர்… லூசர பத்தி நான் பேச விரும்ப மாட்டேன்!” என்று பேச்சை அப்படியே கட் பண்ணி விட்டான். “இவர்கிட்ட வாய கொடுத்தேன் பாரு… என்னைய சொல்லணும்!” என்று தினேஷ் வழக்கம் போல் புலம்பி கொள்ள, சத்யனோ மனதில்,

“நீ ஒரு லூசர் தான் பீம்… பெரிய லூசர் தான்!” என்று நினைக்க, அவனிடம் லூசர் பட்டதை பெற்ற அதே எதிரி தான், அவனது ஒன் ஒன்ட் டாலியை திருமணம் செய்திருப்பது என்று தெரிந்தால் என்ன செய்வானோ….

******

வம்சி வீட்டுக்குள் நுழைந்த பொழுதே பூஜை அறையில் பெல் சத்தம் கேட்க, வீடே சாம்ராணி நறுமணத்தில் மூழ்கி இருந்தது. செவ்வாய், வெள்ளி ஆனால் இப்படி தான். பவானி பஜனை செய்து சாமி கும்பிடுவாள். வம்சி அவளுக்கு சாமி நம்பிக்கை அதிகம் போல என்று நினைத்தால், அவளோ வேறு விளக்கம் கொடுத்தாள்.

“சாமின்றது மனச நிம்மதியா வச்சுக்க தாங்க… வீட்டை சுத்தமா வச்சுக்கிட்டு விளக்கு பொருத்தி பூஜை பண்ணி பாருங்க. ஒரு நல்ல பாசிட்டிவிட்டி இருக்கும்.!”

அவள் கொடுத்த விளக்கம் வித்தியாசமாக இருந்தாலும், வம்சிக்கு இறை நம்பிக்கை துளி கூட கிடையாது. அவன் வாழ்வில் பல கஷ்டங்களை பார்த்து விட்டதால், இந்த மாதிரி விஷயத்தில் மனம் விட்டு போனது.

அதற்காக பவானியை இவ்வாறு செய்யாதே என தடுத்தது கிடையாது. சொல்ல போனால் அவனுக்குமே இந்த மங்களகரமான வெள்ளி செவ்வாய் கிழமைகள் பிடித்து இருந்தது. அவன் பூஜை அறைக்கு சென்று கவனிக்க, பவானி கண் மூடி விளக்கின் முன்பு அமர்ந்து இருக்க, அந்த வெளிச்சத்தில் அவள் முகம் பிரகாசமாய் இருந்தது.

ஏனோ அவன் வாழ்க்கைக்கே வெளிச்சம் தர வந்தவள் போல் தெரிந்தாள். இதனால் மென்மையாக புன்னகித்தவன் அவளை மெய் மறந்து பார்க்க தொடங்க, அவளோ கண் விழித்து இவனை பார்த்து விட்டாள். சட்டென ஒரு திகைப்பு ஏற்ப்பட்டாலும்,

“எப்போ வந்தீங்க…?” என்று கேட்டபடி எழுந்து ஆராதனையை காட்ட அவனோ வச்சு விடு என்று நெற்றியை காட்டினான். அதில் புன்னகித்தவள், அழகாய் ஒரு திருநீர் கீற்றை வைத்து விட, இருவர் விழிகளும் சிரித்து கொண்டன.

“உன் போன் வாங்கிட்டு வந்துட்டேன்!” என்றவன் எடுத்து தர, பவானி அதை வாங்கி கொண்டாலும், “நீங்க கொடுத்த போனே எனக்கு பிடிச்சு இருக்கு… அதையே இனி யூஸ் பண்ணவா?” என்று கேட்க, வம்சி தாராளமா என்றான்.

நேற்று பல கலவரங்கள் நடந்தாலும், தன்னுடைய ஸ்பேர் போன் ஒன்றை மனைவிக்கு மறக்காமல் கொடுத்து விட்டிருந்தான். ஒருவேளை ரிப்பேர் பண்ண சில நாட்கள் எடுத்தால், சரி வராது என்று அவ்வாறு செய்து இருக்க, அதுவோ வேறு மாதிரி மாறி போனது.

மதியம் அவனிடம் சாட் பண்ணி முடித்து விட்டு பொழுது போகாமல் கேலரி பக்கம் பவானி எட்டி பார்த்திருக்க, அதில் எல்லாம் வம்சியின் படங்களை விட ஸ்க்ரீன் ஷார்ட்ஸ் தான் அதிகமாக இருந்தது. அவை அனைத்தும் எக்கனாமிக்ஸ் பாடம் சம்பந்தபட்ட மைன்ட் மேப் போல இருக்க,

“பீம் சரியான படிப்பாளியா இருந்திருக்காரு… ஆனா இதுல யூபிஎஸ்சி ஷார்ட் கட் ஸ்டடி மெத்தட்ஸ் நிறைய இருக்கே?” என்று யோசனையாக பார்த்தவள்,

“அவரு சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதி இருப்பாரு போல!” என்று முடிவு செய்தாள். இதுவரை வம்சியுமே தன் கெரியரை பற்றி பெரிதாக எதுவும் பேசியது கிடையாது. அந்த நினைவில்,

“நீங்க நிறைய காம்படீட்டிவ் எக்ஸாம்ஸ் ட்ரை பண்ணி இருக்கீங்களோ?” என்று கேட்க, வம்சி உடனே, “இல்லையே ஏன் வாணி?” என்றான் சாதாரணாமாக.

“இல்ல உங்க போன்ல சிவில் சர்வீஸ் சிலபஸ் பார்த்தேன்… அதான். இப்போ நீங்க இருக்க போஸ்டிங்க்கு க்ரூப் டூ தானே எழுதி இருப்பீங்க?” என்று சாதாரணமாக கேட்க, ஏனோ முதல் கேள்விக்கு பின்பு அவன் முகம் மொத்தமாக மாறி போனது.

தனக்கு ப்ரோமோசன் கிடைக்க போகிறது என்று சிறிது மகிழ்ச்சியோடு வந்தவன், அவள் ஆரம்பித்த பேச்சில் அதை மொத்தமாக மறந்து, “ம்ம்… ஆமா!” என்று தலை ஆட்டி விட்டு, அவள் அடுத்து பேச போவதை தடுப்பது போல்,

“தலை வலிக்கிற மாதிரி இருக்கு… ஒரு காபி கிடைக்குமாம்மா?” என்று கேட்க, பவானி அந்த பேச்சையே ஒழித்து, “அச்சசோ வந்ததும் சொல்ல வேண்டியது தானே. ரொம்ப தலை வலிக்குதா… நான் வேணா பிடிச்சு விட்டா?” என  கேட்க, வம்சி மறுத்தான்.

“இல்லம்மா… காபி மட்டும் கொடு போதும். நான் ரூம்ல இருக்கேன்!” என்றவன் விலகி செல்ல, மனமோ கடந்த கால காயத்தை திரும்பி பார்த்து விட்டது.