நேச சிறகுகள் 11

“வாணி….!” என்று கணவன் ஹாலில் இருந்து அழைப்பதை கேட்டு பவானிக்கு குளிர் ஜுரமே வந்தது.

நேற்று இரவு நடந்த சம்பவத்தால் இருவருமே ஓடி ஒளிந்து கொண்டிருக்க, தற்பொழுது என்ன ஆனதோ அவனே அழைக்கிறான்.

“வாணி…!” என்றவன் மறுபடியும் குரல் கொடுக்க, வாணி சுடிதார் ஷாலை கையில் இறுக்கி பிடித்து கொண்டு,

“கடிச்சா திங்க போறார்… முத்தம் தான கொடுத்தார்?” என்று தைரியத்தை வர வைக்க, ‘அவர் மட்டுமா கொடுத்தார்?’ என மனம் சீண்டி பார்த்தது. அதில் பயந்த பவானி,

“ஐயோ அதை பத்தி யோசிக்காத யோசிக்காத!” என்று நெற்றில் தட்டி கொண்டு, வெளியே வந்து வம்சியை பார்க்க அவனோ இவளை துளியும் பார்க்காமல்,

“ரிப்பேர் கொடுத்த போன் ரிசீப்ட்ட எடுத்துட்டு வாம்மா… ஈவினிங் வரும் போது வாங்கிட்டு வந்துடுறேன்!” என்று கேட்க, ‘அட இதுக்கு தான் கூப்பிட்டாரா?’ என்று நிம்மதி ஆனவள், தன் ஹேன்ட் பேக்கில் இருந்த ரிசீப்ட்டை கொண்டு வந்து நீட்ட, அவன் கருமமே கண்ணாக அதை வாங்கி கொண்டு, “வரேன்ம்மா!” என்று கிளம்பி விட, பவானிக்கு ‘அப்பாடா கிளம்பிட்டாரு!’ என்று இருந்தது.

சரியாக அவள் ரூமுக்கு நடக்க இருந்த நேரம் மறுபடியும் கதவு தட்டும் சத்தம் கேட்க, ‘என்ன இப்ப தான போனாரு?’ என்று தடுமாறியவள், “எதையாவது மறந்துட்டாரா?” என்று கதவை திறக்க, அவன் இவள் கண்ணை நேருக்கு நேராய் பார்த்து சடனாக,

“சாரி…!” என சொல்லி இருக்க, பவானி விழி விரித்து, முத்தத்திற்கு சாரியா என்று யோசிக்க ஏனோ அவள் மனம் சுருங்கி போனது. காதலிப்பதாய் சொல்லி விட்டு முத்தத்திற்கு மன்னிப்பு ஏன் கேட்க வேண்டும் என கேள்வியும் எழ, அவனை உணர்ச்சியின்றி பார்த்தாள். ஆனால் அவனோ,

“இந்த சாரி… ஹார்சா பர்ஸ்ட் கிஸ் பண்ணதுக்கு!” என்று சொல்லி விட்டு திரும்பி நடக்க, பவானி டோட்டல் ப்ளாட். ‘ஐயோ இவரு இருக்காரே!’ என்று வெட்கி போனவள், நேற்றைய முத்த சம்பவத்தை யோசித்து மேலும் சிவந்தாள்.

கணவன் திடீரென முத்தமிடுவான் என்றவள் கனவில் வரும் கனவில் கூட நினைக்கவில்லை. முரட்டு உதட்டால் தன் இதழை கொய்தவனை என்ன செய்வது என்று புரியாமல் கண்கள் விரித்து முழு அதிர்ச்சில் நின்றாலும், திடீர் ஹார்மோன் மாற்றத்தால் கைகள் தானாக கொண்டவன் கழுத்தை சுற்றி மாலையாக மாற, தடுமாற்றத்தோடு அவனுக்கு ஈடுகொடுக்க ஆரம்பித்து விட்டாள்.

இருவருக்கும் தடுமாற்றம் தான். ஆனால் அவளுக்கு மிகவும் அதிகமாக இருக்க, அதையும் மீறி முதல் முத்தத்தில் உருக தொடங்கினாள். மனைவியின் கைகள் தன் கழுத்தை தீண்டியதில் வம்சி மேலும் சுயம் இழந்தான்.

இதுவரை காணாத ஒரு உணர்வு. காதலா இல்லை காமமா என பிரித்து அரிய முடியாத ஆழ்ந்த உணர்வு… அவன் கைகள் பவானியின் இடையை பற்ற, இருளில் முத்த சத்தம் மட்டுமே இசையாக மாறி நிலவு வெளிச்சத்தோடு நர்த்தனமாடியது. நேரங்கள் உறைந்து போயிருக்க, சரியாக மின்சார வெளிச்சம் வந்து இவர்கள் ரகசியத்தை பார்த்து விட்டது.

மூச்சு விட வேண்டி இருவரும் மெதுவாய் பிரிய, அருகருகே மனங்கள் இரண்டும் தயங்கி நின்றன. இதழ்களோ மேலும் இணை சேர துடிக்க இதில் முதலில் சுதாரித்தது பவானி தான்.

‘என்ன பண்ணி வச்சிருக்க?’ என்றவள் மூளை மிக தாமதமாக ரெட் அலார்ட் கொடுக்க அவசரமாய் அவனிடமிருந்து பிரிந்தவள், அவன் முகம் காண முடியாமல் ஓடியே போய் விட்டாள். அவள் போனதை பார்த்து தான் தலைவனுக்கும் செய்து வைத்திருக்கும் வேலை புரிய, அப்படியே நெற்றில் தட்டி கொண்டான்.

‘கிறுக்கா…!’ என்று தன்னை தானே திட்டி கொண்டவனால் என்ன முயன்றும் முத்தத்தின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை. தன்னவளின் மெல்லிய இதழை மீண்டும் மீண்டும் கொய்ய சொல்லி அடம் பிடித்த மனதை தட்டி வைத்தவன்,

“உனக்கு இன்னிக்கு தான் இப்படி எல்லாம் பண்ண தோணனுமா… வாணி என்ன நினைச்சிருக்க மாட்டா…? அலையுறேன்னு நினைச்சு இருப்பா. பர்ஸ்ட் நைட் அப்போ பெரிய இவன் மாதிரி பேசிட்டு இப்போ கெடுத்துட்டியேடா…!” என்று செம்மையாக டிஸ்டர்ப் ஆகி போனான்.

அதன் பின்பு அவனும் மௌன சாமியாராக மாறி போக, இரவு நீடித்து விட்டது போல் இருந்தது.

யாராவது பேசி இருக்கலாம். பட், பேசினால் தீரும் விஷயமாய் தோன்றவில்லை போலும்…

தனியாக தூக்கம் இழந்து தவித்தன இரு காதல் பறவைகள். காலை விடியலும் தாறுமாறாக மாறி இருக்க, வம்சி அன்று அவனாகவே இல்லை. “உன்ன யாரு லவ்வர் பாய் ரோல ப்ளே பண்ண சொன்னா?” என்று வேலையில் அவனவள் நினைவாகவே இருந்தவன், போனை எடுத்து பவானிக்கு மெசேஜ் பண்ணினான்.

இதுவரை சாதாரண தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்பட்டு கொண்டிருந்த சாட் முதல் முறையாக காதல் புலம்பல்களை தாங்கும் இடமாக மாறியது.

“வாணி…!” என்றவன் மொட்டையாக மெசேஜ் அனுப்ப, அந்த பக்கம் உடடியாக ரிப்ளே வரவில்லை. எப்படி வரும்? அவள் தான் இவன் சொல்லி போன வார்த்தைகளை கேட்டு கனவில் மிதக்கிறாளே.

அவன் மறுபடியும், “வாணி… என்ன பண்ணுற?” என்று பல முறை கதறிய பின்பே அவள் சாட்டுக்கு வந்தாள்.

“சொல்லுங்க…!”

அவளிடமும் அதிகமான தயக்கம். “என்ன பண்ணுற…?”இது அவன்.

‘உங்கள தான் நினைச்சிட்டு இருக்கேன்!’ இது அவள் மனசாட்சி. எனினும் அதை அப்படியே அனுப்ப முடியாதே! அதனால்,

“துணி காய போட போறேன்!” என்றிருந்தாள்.

பச்சை பொய் தான். ஆனாலும் தவறில்லை.

“ஓ…. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா….?”

“இல்ல.. சொல்லுங்க!”

“வந்து, நேத்து நான் சொன்னதுக்கு நீ பதிலே சொல்லல…?”

அவன் கேள்வி நேராக இருக்க, இங்கே இவள் நகம் கடித்தாள். “என்ன இப்படி கேக்குறாரு… என்னையும் ஐ லவ் யூ சொல்ல சொல்றாரோ?” என்று தடுமாறியவள்,

“அதான் சொன்னேனே… உங்கள எனக்கும் ரொம்ப பிடிக்கும்ன்னு?” என்று மட்டும் பதில் அனுப்பினாள். அதை கண்டு அவன் முகம் சுருங்கியது.

“பிடிக்கும்ன்னு மட்டும் சொன்னா எப்படி வாணி?”

“எப்படின்னா புரியலையே…?” என அவளும் ஈடு கொடுத்தாள்.

“நமக்கு நிறைய பேரை பிடிக்கும். அதுக்காக எல்லாரையும் காதலிக்கிறேன்னு சொல்லிட முடியுமா…?” மிக நியாயமாக இருந்தது அவன் கேள்வி.

“கல்யாணமே பண்ணிட்டோம். இனிமேல் என்ன சொல்ல சொல்றீங்க…?” பவானியும் அவன் கேட்பதை தருவதாக தெரியவில்லை.

“ஆமா…. கல்யாணம் பண்ணிட்டோம். ஆனா காதல்?”

சரி தான் அனைத்து திருமணமும் காதலில் தொடங்குவது இல்லை. வம்சியின் கேள்வியில் சிறிது யோசித்த பவானி, ‘ஒரே ஒரு நொடிக்கு, பேசாம உண்மைய சொல்லிடுவோமா?’ என்று யோசிக்க மனமும் ஒத்து ஊதியது.

“ஆமா… சொல்லிடு. இதை விட்டா சரியான சான்ஸ் கிடைக்காது!” ஆனால் மூளை விட்டாள் தானே? ‘வேணாம்… இப்போ தான் அவரே உன்னை விரும்புறேன்னு சொல்லி இருக்காரு. இது அவருக்கு வந்த முதல் உணர்வாவே இருக்கட்டும். நாம பழசு அதையும் காட்டிக்க வேண்டாம்!’ என்று மிக தப்பாக முடிவு செய்தவள்,

“கல்யாணத்தோட ஒரு பகுதி தான் காதல்ன்றது என்னோட எண்ணம். உங்க கைய பிடிச்சப்போவே இனி நீங்க தான் என் லைப்ல எல்லாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். அது மட்டும் இல்லாம உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல!” என பவானி பதில் அனுப்ப, வம்சியின் முகத்தில் புன்னகை அரும்பியது.

‘நீ தான் என் சஹலமும்!’ என்று சொல்லாமல் சொல்லி விட்டாள். இதன்பின்பு என்ன கேட்பது என்று நிதானித்தவன், “ஈவினிங் பார்க்கலாம்!” என்று மட்டும் பதில் அனுப்ப, அவளுக்கு புஸ் என்று ஆனது.

“எவ்ளோ எமோசனலா மெசேஜ் அனுப்புனா டக்குன்னு முடிச்சு விட்டுட்டாரே?” என போனை முறைத்தவள், “உங்கள புரிஞ்சுக்கவே முடியல பீம்!” என்று புலம்பியபடி அவன் நினைவில் தொலைந்து விட, அங்கு அவனோ,

“நீ சொன்ன பதில் சரி தான் வாணி. ஆனா, எனக்கு உன் வாயிலயிருந்து ஐ லவ்யூன்ற வார்த்தை கண்டிப்பா வேணும்… நான் சொல்ல வைப்பேன்!” என்று கங்கணம் கட்டிக்கொண்டான்.

இங்கு இரண்டு காதல் புறாக்கள் மெல்ல மெல்ல மண வாழ்வில் ஒன்று சேர தொடங்கி இருந்த அதே நேரம், அதை ஆட்டம் காண வைக்க போகும் ஜீவன் ஒன்று சென்னையில் காக்கி சட்டையோடு ஒரு லேடீஸ் காலேஜுக்கு முன்பு ஜீப்பில் அமர்ந்து இருந்தது.

அந்த காலேஜுக்கு வெளியே பெரிய போராட்டம் நடந்து கொண்டு இருக்க, நிறைய பெண் மாணவிகள் கண்டன முகத்தோடும், குரல்களோடும் ஒன்று திரண்டு இருந்தார்கள்.

“என்னைய்யா… எவளாவது முன்ன வந்து நானும் பதிக்கப்பட்டுருக்கேன்னு சொல்லுவான்னு பார்த்தா, ஒருத்தியும் வர மாட்றா?” என எஸ்.பி சத்யஜீவன் தன் அசிஸ்டன்ட்டான தினேசிடம் வினவ, அவனே காலையில் இருந்து வெயிலில் நிற்கும் கடுப்பில்,

“ஆமா சார்… சும்மா எஸ்பி ஆபிஸ்க்கு மொட்டை கடிதாசி போட்டுட்டு பஞ்சாயத்து பண்றதே இந்த காலேஜ் பொண்ணுங்களுக்கு வேலையா போச்சு!” என்றான்.

மேட்டர் என்னவென்றால், அந்த காலேஜில் உள்ள சில ஆண் விரிவுரையாளர்கள் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், ஹராஸ் பண்ணுவதாகவும் ஆதாரம் இன்றி இந்த காலத்தில் போய் லெட்டர் மட்டும் அனுப்பி வைத்து இருந்தார்கள்.

ஆதாரம் இல்லாத விஷயத்தில் மூக்கை நுழைப்பதோ சத்ய ஜீவனுக்கு பிடிக்கவே பிடிக்காத விஷயம். அதை பெரிதாக எடுத்து கொள்ளவும் மாட்டான்.

எனினும் இது பெண் பிள்ளைகள் விஷயம் என்பதால், அவனே ஒருமுறை காலேஜ் மேனேஜ்மென்ட்டில் வந்து விசாரித்து விட்டான். சில மாணவிகளிடமும் மறைமுகமாக கேட்டு பார்க்க, அவர்களோ அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

ஆதாரம் இல்லாமல் இது டெட் எண்டான விஷயம் என்றவன் அதை கைவிட நினைத்த நேரம், இதோ பெரிய தர்ணா பண்ணி வெட்டி வேலையை இழுத்து விட்டார்கள்.

“நேரா சொல்ல வேணாம். அட்லீஸ்ட் தனியா வந்தாச்சும் மீட் பண்ணலாம்ல?” என்று எரிச்சல் ஆனவன், அந்த கூட்டத்தையும் கையில் இருந்த வாட்சையும் பார்த்த மாதிரியே இருக்க, தினேஷ் டென்சனாக சொன்னான்.

“சார்… இதுகெல்லாம் காரணம் எந்த நாய்ன்னு தெரிஞ்சதுன்னு வைங்க… நானே அவனை லாடம் கட்டிடுவேன்!”

“எதுக்கு தினேஷ் நாய கேவலபடுத்துற… அது பாவம்!” என சத்யன் சிரிக்காமல் நக்கல் குரலில் சொல்ல,

“ஐயோ சார் எனக்கு ஆபிஸ்ல நிறைய வேலை இருக்கு!” என்று தன் பிரச்சனையையும் சொல்லி தினேஷ் புலம்பினான். முன்பு இன்ஸ்பெக்டராக இருந்தவன், எஸ்.பிக்கு பி.ஏ ஆனா வேலை குறையும் சம்பளமும் கூடும் என்ற ஆசையில் வந்து திமிங்கல வலையில் சிக்கி விட்டான்.

அந்த வேலை அவனை வைத்து செய்தது… கூடவே சத்யனோடு சேர்ந்து குப்பை கொட்ட எக்ஸ்ட்ரா ஸ்டாமினா தேவை பட்டது. ப்ரஸ் வேறு ஒருப்பக்கம்,

“என்ன ஆக்சன் எடுக்க போறீங்க சார்?” என்று கேமாரவை தூக்கி கொண்டு வர, சத்யஜீவன் சிறிதும் தயக்கம் இல்லாமல்,

“வேற என்ன…. அவங்களா போராட்டத்தை முடிச்சிட்டு வீட்டுக்கு போற வரைக்கும் வேடிக்கை பார்க்க போறேன்!” என்று சாதாரணமாக சொல்ல, தினேஷ் மனதில் சங்கு சத்தம் கேட்டது.

“போச்சு… பில்டர் இல்லாம பேச ஆரம்பிக்கிறாரு. இனி அவரு கூட சேர்த்து என்னையும் மீமா போட்டு அசிங்க படுத்துவாங்களே?” என்றவன் நேக்காக முகத்தை வேறு பக்கம் திருப்பி விட, ஒரு பெண் ரிப்போர்டர் வேகமாய் கேட்டாள்.

“சார்… சிட்டில லா அன்ட் ஆர்டர மெயின்டைன் பண்ண வேண்டிய நீங்களே இப்படி பேசலாமா?”

“வேற எப்படி பேச சொல்றீங்க?” என்றான் சத்யன் சிறிதும் அலட்டி கொள்ளாமல்.

“இந்த பொண்ணுங்க பேஸ் பண்ற பிரச்சனைய தீர்த்து வைக்கிறது உங்களோட கடமை இல்லையா… இப்படி பொறுப்பில்லாம பேசுறீங்க?” என்றந்த பெண் ரிப்போர்ட் கொதிப்பாய் கேட்க, சத்யன் ஹேர் ஸ்டைலை சரி செய்தபடி,

“உங்க பேர் என்ன மிஸ்…?” என்று வினவ, அவள் க்ரிஸ்டி என்றாள் வேகமாய்.

“மிஸ். க்ரிஸ்டி, ஒரு பேச்சுக்கு கேக்குறேன். உங்க வொர்க் பிளேஸ்ல யாராவது உங்கள ஹராஸ் பண்ணுறாங்கன்னு வச்சுப்போம். அடுத்து நீங்க என்ன பண்ணுவீங்க…?”

“ரிப்போர்ட் பண்ணுவேன்!” என்றாள் அவள் வேகமாய்.

“குட். எப்படி ரிப்போர்ட் பண்ணுவீங்க…?”

“யார் என்னை ஹராஸ் பண்ணுறாங்களோ அவங்கள பின்ப்பாயன்ட் பண்ணி கம்ப்ளைன்ட் கொடுப்பேன்!”

“வெரி குட்… உங்களுக்காச்சும் மொட்டை கடிதாசி போட கூடாதுன்னு தெரிஞ்சு இருக்கே. அதை அப்படியே போய் அந்த பொண்ணுங்ககிட்டயும் சொல்லி புரிய வைங்க பார்க்கலாம்!” என்று திருப்பி விட, இதை அந்த பெண் எதிர்பார்க்கவில்லை. எனினும் விட்டு கொடுக்க மனம் வராமல்,

“சார்… விக்டிம் நேம் ஸ்பாயில் ஆகிட கூடாதுன்னு கூட இப்படி பண்ணலாம் இல்லையா….?”

“ஆமா வாய்ப்பு இருக்கு தான். ஆனா நான் ஒன்னும் கடவுள் இல்ல பாருங்க. எனக்கும் மனுசங்களுக்கு இருக்க அதே எபிலிட்டீஸ் தான் இருக்கு. எந்த சூப்பர் பாரும் இல்ல!” என்றவன் இடக்காக கூற, நாளைக்கு மீம் கன்பார்ம் என்று தினேஷ் முடிவே பண்ணி விட்டான்.

“அப்போ நீங்க வேடிக்கை பார்க்குறத தவிர்த்து எந்த ஆக்சனும் எடுக்க போறது இல்லையா…?” என்றாள் க்ரிஸ்டி எரிச்சலாக.

“இல்ல… இந்த போராட்டத்தை பத்தி என்னோட டிவிட்டர் ப்ரொபைல்ல ஒரு போஸ்ட் போடலாம்ன்னு இருக்கேன். நல்ல தலைப்பா நீங்களே சொல்லுங்களேன். இல்ல இல்ல நான் சொல்றேன். நீங்க நல்லா இருக்கான்னு பாருங்க. ‘தைரியம் இல்லாமல் கூட்டத்தில் மறைந்து கொண்டு எஸ்பி ஆபிசுக்கு மொட்டை கடிதாசி போடும் கல்லூரி மாணவிகள்!’ எப்படி?” என்று சிரித்தபடி கேட்க, அவர்கள் உரையாடலை கேட்டு கொண்டிருந்த சில மாணவிகள் பொங்கி கொண்டு வந்தார்கள்.

“சார் எங்க ப்ராப்ளம் உங்களுக்கு சிரிப்பா தெரியுதா… இங்க எத்தனை பேர் படிக்க வந்த இடத்துல நிம்மதி இல்லாம இருக்கான்னு தெரியுமா…?” அந்த மாணவி கோபமாய் கேட்க, சட்டென சத்யன் ரியாக்சன் மாறியது.

“நீ நிம்மதி இல்லாம இருக்கியாம்மா…. அப்போ அதுக்கு யார் காரணம்ன்னு சொல்லு நான் ஆக்சன் எடுக்குறேன்!” அவன் அப்படி கேட்டதும் தடுமாறிய மாணவியை நேராய் பார்த்து,

“நான் ஒரு விக்டிம்ன்னு சொல்லிக்க கூட தைரியம் வேணும். அது கூட  இல்லாம உங்களால இங்க ஒன்னுமே பண்ண முடியாது. நீங்க ஆள் யாருன்னு முன்ன வந்து சொல்லாத பண்ணாத வரைக்கும், உங்க தைரியத்தை புதைச்சுட்டு, கூட்டத்தோட நடுரோட்டுல நின்னு ஆர்பாட்டம் பண்ணாலும் எதுவும் மாறாது. இன்னிக்கு காலேஜ விட்டு வெளிய நிக்கிறதால பாதுகாப்பா இருப்பீங்க… ஆனா நாளைக்கு உள்ள போய் தான ஆகணும்?” என்று புருவம் உயர்த்த, திடீரென ஒரு மாணவி முன்னால் வந்தாள்.

“நான் சொல்றேன் சார் யாருன்னு….!” அவளை திரும்பி பார்த்த சத்யன், “அவ்ளோ தான் ரொம்ப சிம்பள்!” என்று விட்டு, “அந்த எச்சைங்க யாரும்மா?” என்று கேட்க, கேமரா முன்னால் அந்த மாணவி சில விரிவுரையாளர்கள் பெயர்களை தைரியமாக சொல்ல,

“அந்த எச்சைங்களே தான்!” என்று பின்னந்தலையில் தட்டி கொண்ட சத்யன், “அதுல இன்னிக்கு ரெண்டு ஜென்மம் லீவு வேற!” என்று சொல்ல, அவன் ரியாக்சனை பார்த்தால் ஆல்ரெடி அவர்கள் பெயரை தெரிந்து வைத்திருப்பது புரிய, தினேஷே ஷாக் ஆகி போனான்.