நேச சிறகுகள் 10

வம்சியும் பவானியும் திருப்புவனம் வந்து செட்டில் ஆகி இரண்டு மாதம் கடந்து இருந்தது. வீட்டை செட் பண்ணி கொடுத்து விட்டு பெற்றவர்கள் சென்று இருக்க, பவானிக்கு என்ன செய்தாலும் வம்சியின் கோபமான முகம் மட்டும் மனதை விட்டு செல்லாமல் அடம் பிடித்தது. என்ன ஆச்சு என்று பின்பாவது கேட்டு இருக்கலாம்.

எனினும் அவன் பிடி கொடுக்காமல், அப்படி ஒரு சம்பவம் நடந்த மாதிரியே காட்டி கொள்ளாமல் போனதால், பவானியும் கேட்டு சங்கடபடுத்த விரும்பவில்லை. அவன்  நார்மலாக மாறி விட்டான். எனவே அவளும் அந்த சம்பவத்தை முயன்று மறந்து இருந்தாள்.

அன்று காலைஅவசரமாக வேலைக்கு கிளம்பியவன் நேற்றே, “தாசில்தார் ஆபிஸ் போகணும்!” என்று சொல்லி இருந்தான். அவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து தாசில்தார் ஆபிஸ் பதினைந்து கிலோமீட்டர் தள்ளி இருந்தது. எனவே, சற்று விரைவாகவே கிளம்பி விட்டவன் செல்லும் முன்பு,

“வர லேட்டாகும் வாணி… என்னை எதிர்பார்த்துட்டு சாப்பிடாம இருக்காத. சாப்ட்டு தூங்கு!” என்று அழுத்தி சொன்னான். அவள் வீட்டில் கவியரசு வேலைக்கு கிளம்பும் வரை இவளால் சாப்பிடுவது பற்றி யோசிக்க கூட முடியாது. அதையும் மீறி பசியில் சாப்பிட ஆரம்பித்தாலும், சரியாக அதை காணோம் இதை காணோம் என்று வந்து நிற்பான் கவி.

பவானி அந்த நினைவில் இங்கும் வம்சி கிளம்பும் வரை சாப்பிட்டாமல் இருக்க, அவனும் அதை முதலில் கவனிக்கவில்லை. எதேர்ச்சையாக ஒருநாள், தான் கிளம்பும் வரை அவள் துறுதுறுவென எதையாவது செய்தவதை கவனித்தவன், “நீ குக் பண்ணி கொடுக்குறதே பெரிய வேலை… இதுல எதுக்கு ஸ்கூல் குழந்தை மாதிரி லஞ்ச் பாக்ஸ் வரைக்கும் கட்டி தர… இதெல்லாம் என் வேலை. நீ போய் சாப்பிடு!” என்று சொல்ல, பவானி சஹஜமாய் மறுத்தாள்.

“இதுல என்னங்க இருக்கு… நீங்க போனதும் சாப்பிட்டுகிறேன்!”

“எப்போ ஒன்பதரை மணிக்கா…?” என்றான் கண்டன பார்வையோடு.

“அட நான் எங்க வீட்ல எல்லாம் பத்து மணிக்கு தான் சாப்பிடுவேன்!” என்றவள் கூலாக சொல்ல, வம்சி நம்பாமல், “பத்து மணிக்கு காலை சாப்பாடா?” என்றான்.

“ம்ம்… அண்ணா கிளம்ப லேட் ஆகும். அவனுக்கு எல்லாம் அரேஞ் பண்ணிட்டு, வீட்டு வேலைய முடிச்சிட்டு… ஆகிடும்!” என்று பவானி கதை சொல்ல, “அப்போ இங்கயும் பத்து மணிக்கு தான் சாப்டுட்டு இருக்கியா?” என்றான் சிறிது கடுப்பாக.

அவன் குரல் மாறுவதை கவனித்தவளும், “எனக்கு பழகிடுச்சு…!” என்று சமாளிக்க, முடிவாக சொல்லி விட்டான்.

“குக் பண்ணி முடிச்ச உடனே, நீ என்னைய மறந்திடலாம். நான் என் வேலைய பார்த்துட்டு கிளம்புவேன். நீ சாப்டு போய் உன் வேலைய பார்க்குற வாணி… !”

“ஐயோ எனக்கு சீக்கிரம் சாப்பிட்டு பழக்கம் இல்லைங்க…!” என்றவள் இழுக்க, “இனி பழகிக்கோ!” என்று பேச்சை முடித்து விட்டான்.

‘இது என்ன அன்பு தொல்லையா இருக்கு?’ என்று பவானி உள்ளே சிணுங்கினாலும், இந்த தொல்லை கூட இனிமையாகவே இருந்தது. இருப்பினும் அவனுக்கு எல்லா வேலையும் செய்ய வேண்டும் என்று நினைத்த எண்ணத்தில் துண்டு விழுந்து விடவே, சோகமாக மனதை மாற்றி கொண்டாள்.

சைட் கேப்பில் கணவனை நினைத்து ஆச்சிர்யம் கொள்ளாமலும் இருக்க முடிவதில்லை. திருமணத்திற்கு முன்பு, ‘நமக்காக சமைக்க கத்துக்குறேன்!’ என்றவன் சொன்ன பொழுது அந்த வார்த்தைகளே தித்திக்க வைத்தது. இருப்பினும், அதை செயல்முறை படுத்துவது போல் இரவு நேரமும், லீவ் நாட்களிலும் பவானிக்கு அசிஸ்ட்டன்ட் போல் இருந்து காய் நறுக்குவது முதல் குழம்பு வைப்பது, மாவு அரைப்பது, சட்னி செய்வது, தோசை ஊத்துவது என அனைத்தையும் பழக, பவானிக்கு அவன் மீது இருந்த பித்து கூடி கொண்டே போனது.

‘நான் ஆம்பள… நான் எதுக்கு இதை செய்யணும்?’ என்ற ஈகோ இல்லாமல் மிக மிக பொறுப்பாக நடந்து கொண்டான். என்னோட புருஷன் என்ற கர்வத்தையும் பவானிக்கு கொடுத்து விட்டான். அன்றும் தன் வேலைகளை பார்த்து விட்டு, “வாணி… வரேன்ம்மா….!” என்று கிளம்பியவனை கண்களில் நிறைத்து கொண்டவள், அவன் போன பின்பு எல்லாம் வெறுமையாக மாறியதை உணர்ந்தாள்.

மனமோ, “அதுக்குன்னு எப்போமே உன் கூட இருக்க முடியுமா?” என்று கேலி செய்ய, “அதுவும் சரி தான். முதல்ல நான் பகல்ல பிசியா இருக்க ஏதாவது பண்ணனும்!” என்று யோசித்தவள், பாத்திரத்தை கழுவி வைத்து விட்டு, சுந்தரிக்கு போன் போட்டு சிறிது நேரம் பேசி கொண்டிருக்க,

“அம்மாடி பவானி…!” என பழகிய குரல் ஒன்று வாசலில் கேட்டது.

“அம்மா… மல்லி மாமி வந்திருக்காங்க… நான் அப்பறம் பேசுறேன்!” என்று போனை வைத்த பவானி வேகமாய் சென்று கதவை திறக்க, பவளமல்லி மாமி கையில் கூடையோடு நின்று இருந்தார்.

“வாங்க மாமி… மாமா ஆபிஸ் போயாச்சா?” என்று பவானி அவரை புன்னகை முகமாய் உள்ளே அழைக்க, “ஆமாடி குழந்த. உன் ஆத்துகாரனோட தான் இன்னிக்கு போயிருக்கார். அப்பறம் இதை புடி… காத்தால சாமிக்கு நெய்வேத்தியம் படைக்க அக்கார வடிசல் பண்ணேன்!” என்று கூடையை தர, பவானி மறுக்காமல் வாங்கி கொண்டாள்.

பவளமல்லி மாமியின் கணவர்  கோபால சாஸ்திரி. இவர்கள் தங்கி இருக்கும் வீடு கோபால் மாமா பார்த்து கொடுத்தது தான். அருகே இருந்த அக்ரகாரத்தில் அவர்கள் வீடு இருந்தது.

கோபால் மாமா தாசில்தாருக்கு பி.ஏ. அந்த முறையில் வம்சிக்கும் அவருக்கும் நல்ல பழக்கம். வம்சி அப்பா என்று உரிமையாக அழைக்கும் அளவுக்கு பழக்கம். கோபால் மாமாவுக்கு ஒரே பையன் தான். அவனும் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டான். நீங்களும் என்கூட வந்துடுங்கங்களேன் என்று அழைத்தாலும், மாமா மாமி வாழ்ந்த ஊரை விட்டு செல்ல மனம் வராமல் இங்கேயே இருந்து விட்டார்கள்.

“உழைக்க முடிஞ்ச அளவுக்கு உழைக்கிறேன். அப்பறம் முடியாம போறச்ச புள்ளையாண்டான் கூட போய் இருந்திட வேண்டியது தான்!” என்று கோபால் மாமா அடிக்கடி வம்சியிடம் சொல்லுவார். “இன்னிக்கு தாசில்தார் ஆபிஸ்ல மீட்டிங்கா மாமி?” என்று பவானி விசாரித்தாள்.

“ஆமா குழந்த முக்கியமான மீட்டிங்ன்னு மாமா சொல்லிட்டு இருந்தாரு… மீட்டிங்ன்னாலே முடிய ஏழு மணிகிட்ட ஆகிடும். உன் அகமுடையானும் ஒன்பது மணிக்கு மேல தான் வருவான். நீ வேணா என்கூட வந்து இருக்கியா?” என்று கேட்க, பவானி மறுத்தாள்.

“இல்ல மாமி… நான் இருந்துக்குறேன்!”

“ஏன் வந்து இரேன் குழந்த… வம்சிய வந்து பிக்கப் பண்ணிக்க சொல்லிக்கலாம்!” என்று பவானியிடம் சொல்லி மாமி அவளை அழைத்து சென்று விட, பவானியும் சாயங்காலம் சொல்லி கொள்ளாலம் என்று விஷயத்தை அவனிடம் தெரிவிக்க மறந்து போனாள்.

வம்சி ஏழரை மணிக்கு மீட்டிங் முடிந்து கிளம்ப, தாசில்தார் அவனிடம், “அடுத்த வாரம், வீட்டுக்காரம்மாவ அழைச்சுட்டு வீட்டுக்கு வா வம்சி. பிசியா இருந்ததால உனக்கு விருந்து கொடுக்க முடியாம போச்சு!” என்று வருத்தமாய் சொல்ல, வம்சி கேலியாக கேட்டான்.

“நீங்க விருந்தெல்லாம் கொடுக்க வேணாம். ஒரு வாரம் லீவ் வேணா கொடுங்க…!”

“உனக்கு கல்யாணம் பண்ண லீவ் கொடுத்ததே பெருசுடா…!”என்று கிண்டலாய் அவன் முதுகில் தட்டிய தாசில்தார் வீரபத்திரன், “அடுத்த வாரம் சண்டே… மறக்காம வந்துடு!” என்று சொல்லி செல்ல வம்சியும் வருவதாக ஒப்பு கொண்டான்.

வம்சி தன் வாழ்வில் பார்த்த அனைத்து கஷ்டங்களும் வீர பத்திரனுக்கு தெரியும். “எங்கயோ இருக்க வேண்டிய பையன்… இப்படி மாறி போய்ட்டானே?” என்று அவனை நினைத்து நிறைய முறை வருந்தி இருக்கிறார்.

வம்சி கிளம்பிய நேரம் அவனும் கோபாலும் ஒன்றாக வே வந்தார்கள். இருவரும் ஏதேதோ பேசியபடி வர, வம்சிக்கு அப்பொழுது வரை மனைவி அவர் வீட்டில் இருப்பது தெரியாமல் போய் விட்டது.

இவன் தன் தெரு வந்ததும், “பார்க்கலாம்ப்பா!” என்று பிரிந்து வந்து விட, வீட்டுக்கு வந்ததும் முதலில் லைட் போடாமல் இருப்பதை தான் பார்த்தான்.

“என்ன… வெளி லைட் போடாம இருக்கு?” என்று யோசித்தவன், தன்னிடம் இருந்த  சாவியை வைத்து உள்ளே வர ஹாலில் மட்டும் பவானி மார்னிங் போட்டு சென்ற லைட் எரிந்து கொண்டு இருந்தது.

“அதுக்குள்ள தூங்கிட்டாளா?” என்று ஹாலில் பேக்கை போட்டவன், ரூமில் சென்று பார்த்தால் பவானியை காணவில்லை. அதில் லேசாக திக்கென்று இருந்தாலும், கிச்சன் பின் வாசல், மாடி என்று அனைத்தையும் பார்த்தவன், சற்று படபடப்பாகவே மாறி போனான்.

இரவு நேரம் எங்கு போனாள் என்று புரியாமல் அவசரமாக அவளுக்கு கால் பண்ணினால் அதுவோ நாட் ரீச்சபல் என்று சோதித்தது. பவானி சொல்லாமல் எங்கும் போனதில்லை. மார்கெட், கோவில் என்று மதியம் சென்றால் கூட  ஒரு மெசேஜ் அனுப்பி விடுவாள். அவசரமாக மெசேஜையும் செக் பண்ணி பார்த்தவன், இதயம் தடக் தடக் என்று துடிப்பதை உணர்ந்து, நெற்றி வேர்வையை துடைத்தவன்,

“எங்க வாணி போன?” என்று தொண்டையில் ஈரம் வற்றி ஒருமாதிரி ஆகி விட, கோபால் இவனுக்கு கால் பண்ணினார். பதட்டத்தில் சட்டென அவன் போனை எடுத்து விட,

“வம்சி…. பவானி இங்கதான் இருக்காப்பா. நீ வர லேட்டாகும்ன்னு மல்லி அழைச்சிட்டு வந்தாளாம். இரு குழந்தைட்ட போனை தரேன்!” என்றவர் பவானியிடம் கொடுக்க, அவள் வாங்கி பேசிய பின்னால் தான் இவனுக்கு உயிரே வந்தது.

“என்னங்க…. சாரி. மதியமே மெசேஜ் போடணும்ன்னு நினைச்சேன் மறந்துட்டேன்!” அவள் சொன்ன பதிலில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனாலும்,

“ஒரு போன் பண்ணி இருக்கலாம்ல….?” என்றான் உள்ளே போன குரலில். “ஐயோ அதை ஏன் கேக்குறீங்க… நான் இன்னிக்கு கோவில் போற நேரத்துல போனை கீழ போட்டு உடைச்சிட்டேன். மாமி போன்ல வேற சுத்தமா டவர் இல்ல…!” என்று ரீசன் சொல்ல,

“சரி இரு நான் வரேன்!” என்று போனை வைத்து விட்டான். “என்ன சொல்றான் வம்சி?” என மல்லி மாமி வினவ, “வராராம் மாமி!” என்ற பவானி கணவன் குரலில் இருந்த மாற்றத்தை கவனிக்க தவறி இருந்தாள்.

சரியாக ஆறு நிமிடத்தில் வந்து விட்ட வம்சி பவானி முகம் பார்த்த பின்பே சொல்லன்னா நிம்மதி அடைந்தான். கோபால், “சாப்பிட்டு போப்பா!” என்று சொன்னாலும் அவன் கேட்கவில்லை. “இல்லப்பா… இன்னொரு நாள் வரேன்!” என்றவன் மல்லி மாமியிடம் விடை பெற்று பவானியோடு கிளம்பி இருக்க, வீடு வரும்வரை அவன் பேசவே இல்லை.

அவள் தான் போனை ரிப்பேருக்கு கொடுத்து இருப்பதை பற்றி சொல்லி கொண்டிருக்க, சரியாக வீட்டிற்குள் வந்து கதவை அடைத்ததும், “வாணி…!” என்றவன் அவள் பேசுவதை நிறுத்துவது போல் இடைவெட்டி இருக்க, பவானி அப்படியே பேச்சை குறைத்தாள்.

கணவனின் முகத்தில் இருந்த டென்சன் அப்பொழுதே கருத்தில் பதிய, “என்னங்க ஆச்சு?” என்றாள் ஒன்றும் புரியாமல். அதற்கு அவளை நிமிர்ந்து பார்த்தவன்,

“இங்க வா…!” என்று அருகே அழைக்க, அவளும் சென்றாள். “சொல்லுங்க…!” என கேட்பதற்கு முன்பே இன்னும் அருகே இழுத்தவன், பவானி என்னவென யூகிப்பதற்கு முன்பே, இறுக்கமாய் கட்டி அணைத்து கொண்டு விட, அவள் மனம் படபடவென துடிக்க ஆரம்பித்தது.

கொஞ்சமும் இடைவெளி இல்லாத முதல் அணைப்பு!

பவானிக்கு ஒருநிமிஷம் எதுவும் புரியவில்லை. நடப்பது கருத்தில் பதிந்தாலும் அது மூளையில் பதியாதது போல் இருக்க, முகம் சிவந்து போனாள்.

“சத்தியமா ரொம்ப பயமுறுத்திட்ட வாணி…!”என்றவன் பெண்ணவள் தோளில் முகம் புதைக்க, பவானியின் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தது. திரும்பி அவனை அணைக்க கூட கைகள் ஒத்துழைக்கவில்லை. அந்த அளவுக்கு மதிகள் மயங்கி போய்விட, அவன் மெதுவாய் அவளை விடுவித்தான்.

சிவந்து போயிருந்த அவன் கண்கள் ஏதோ புரிய வைப்பதாய் இருக்க, அவசரமாக தன்னை நிலைநிறுத்தி கொண்டாள்.

“நான் இல்லாம பயந்துட்டீங்களா?” என்றாள் தனக்கே கேட்காத குரலில். அவனோ, “செத்துட்டேன்… ப்ளீஸ் இனி சொல்லாம எங்கயும் போகாத!” என்று சோர்வாக சொல்ல, பவானிக்கு உடல் புல்லரித்து விட்டது.

தன்னை அத்தனை பிடிக்குமா என்று முதுகெலும்பு சிலிர்க்க அவன் முன்னால் தொடர்ந்து நிற்பதும் ஒருமாதிரி இருந்தது. எனவே,

“சாரிங்க… இனி… இனி சொல்லிட்டே போறேன்!” என்றவள், “நான் போய்…உங்களுக்கு டின்னர் பண்ணுறேன்!” என இடத்தை காலி பண்ணி விட, இதயம் மேலும் துடித்து காட்டி கொடுக்க முயன்றது. கிச்சன் வந்தும் நிதானமாக முடியாமல் செம்பில் தண்ணீர் அள்ளி பருகியவள், தன்னை தொடர்ந்து அவனும் உள்ளே வந்ததை பார்த்து திடுக்கிட்டு புரையேற வைத்து விட்டாள்.

அவள் இருமுவதை கண்டவனோ, ” வாணிம்மா பார்த்து….!” என்று தலையை தட்ட, பவானிக்கு மயக்கமே வந்து விடும் போல ஆனது.

“நான் ஒகே தான்…!” என்று சமாளித்தவள், “நீங்க ட்ரெஸ் மாத்திட்டு வாங்க…!” என்றவனை இடத்தை காலி பண்ண வைக்க முயல, அவன் சிறிதும் நகரவில்லை. அவனிடம் தென்பட்ட இந்த மாற்றம், பவானியை தடுமாற வைக்க,

“என்னங்க….?” என்றாள் மேலும் உள்ளே போன குரலில். அவளை மேலும் சோதிப்பது போல் கரண்டும் கட் ஆக, இருந்தும் நகரவில்லை இருவரும். ஒருவித ஈர்ப்பு சக்தி இரண்டு பேரையும் கட்டி போட்டது போல் இருக்க, ஜன்னல் வழியாக வந்த நிலா வெளிச்சத்தில் இருவர் அமைதியும் மௌனமாக இழைந்தோடியது.

அவன் என்னவோ சொல்ல போகிறான் என்று ஆழ்மனம் அடித்து சொல்ல, பவானி பதட்டத்தில் அருகே இருந்த கிச்சன் மேடையை பற்றி கொண்டாள். “வாணி…!” என்றவன் ஆரம்பிக்க, “ம்ம்…!” என்றாள் தனக்கே கேட்காதது போல்.

“நான்… நான் உன்ன விரும்புறேன்னு நினைக்கிறேன்!” என்றவன் மனதில் உருவாகி இருந்த கள்ளத்தனத்தை ஒப்பு கொள்ள, பவானிக்கு  சரியாக தான் கேட்டோமா என்று தலை சுற்றி போனது.

“என்ன…. சொன்னீங்க…?” என்றவள் எச்சில் விழுங்க, அவன் நேரடியாகவே சொல்லி விட்டான். “ஐ லவ் யூ வாணி…!”

அவன் வார்த்தைகளை கேட்டவளுக்கு கண்கள் கலங்க, வந்த அழுகையை அடக்க பெரும்பாடு பட்டு போனாள். சத்தியமாக அவனிடம் இருந்து இந்த வார்த்தைகளை, இவ்வளவு குறுகிய காலத்தில் எதிர்பார்க்கவில்லை. கால்கள் தரையில் நிற்க முடியாமல் நழுவுவது போல் இருக்க, அவனை இமைக்காமல் பார்த்தாள்.

அவனோ மேலும் சோதிப்பது போல், “எனக்கு பதில் வேணும் வாணி!” என்று கேட்க, என்ன பதில் சொல்லுவாள்?

‘ஐ லவ் யூ!’ என்று அவனை போல அத்தனை எளிமையாக அவள் நேசத்தை சொல்லிட முடியாது. அது ஒரு எதிர்பார்ப்பில்லாத தவம். கிடைக்காது என்று தெரிந்தும் செய்த தவம்…

தற்பொழுது எல்லாம் பொய்த்து போனது போல இருக்க, தன்னையும் மீறி, “இதை சொல்ல உங்களுக்கு இவ்ளோ நாள் தேவை பட்டுச்சா?” என்று மனதில் நினைப்பதாய் வெளியே சொல்லி விட, வம்சியின் புருவம் சுருங்கியது.

“உங்கள… உங்கள எனக்கு எவ்ளோ புடிக்கும்ன்னு சொல்ல வார்த்தை இருக்கான்னு தெரியல… வம்சி!” என முதல்முறையாக அவன் பெயரை சொல்லி முடிக்கும் முன்பே, அவள் அருகே குனிந்திருந்தவன் அழுத்தமாய் முதல் அச்சாரத்தை இதழில் பதித்து இருந்தான்.