பவானி தெருவுக்குள் நுழையும் பொழுதே பழகிய முகங்கள் அக்கறை என்ற போர்வையில் வாயை கிளற ஆரம்பித்தார்கள்.
“என்ன பவானி.. இப்போ தான் வேலை முடிச்சு வரியா? காலம் கெட்டு கிடக்குடியம்மா! சீக்கிரமா வந்து பழகிக்கோ. சும்மாவே அம்மாவுக்கு உன்னை எப்படி கரை சேர்க்க போறோம்ன்ற கவலை. இதுல நீயும் அஜாக்கிரதையா இருந்து அவங்க மனசை சங்கடப்படுத்தாத!” என்று ரேணுகா ஆண்ட்டி குத்தலாக சொல்ல, பவானிக்கு பற்றி கொண்டு வந்தது.
‘முதல்ல காலேஜ் போறேன்னு பாய் பிரன்ட் கூட ஊர் சுத்திட்டு இருக்க உங்க பொண்ணை பாருங்க ஆண்ட்டி!’ என வாயை வரை வந்த பதிலை மாற்றி,
“நீங்க எல்லாம் என்மேல இவ்ளோ அக்கறையா இருக்கும் போது எனக்கென்ன ஆண்ட்டி பிரச்சனை வரபோகுது?” என வலுக்கட்டாயமாக சிரித்து வைத்தவள்,
“வரேன் ஆண்ட்டி… நைட் டின்னர் பண்ணனும்!.என்று தப்பித்து கொள்ள, ரேணுகா உதட்டை சுளித்து கொண்டார்.
‘நல்லதுக்கு சொன்னா இந்த காலத்து பொண்ணுங்க கேக்குதுகளா… என்னவோ போ…?’ என உள்ளே சென்று விட, சற்று தூரம் சென்றிருந்த பவானி திரும்பி பார்த்தாள்.
‘இதோ இருக்கு பக்கத்து தெரு… அங்க போய் டியூசன் எடுத்துட்டு வர்றதுக்குள்ள எவ்ளோ அக்கபோறா இருக்கு. முதல் கட்ட சிசிடிவிய தாண்டியாச்சு. இன்னும் ரெண்டை சமாளிக்கணுமே!’ என்று மனதில் புலம்பலோடு நடக்க, அடுத்து வாசுகி ஆண்ட்டி பிடித்து கொண்டார்.
மறுநாள் சமையலுக்கு முருங்கை கீரை அரிந்து கொண்டு இருந்தவர், “ஏய் பவானி எதுக்கு இவ்ளோ லேட்டு… மணி ஒன்பதரை ஆக போகுதே?” என விசாரிக்க, முகத்தில் சிபிஐ அளவுக்கு தீவிரம் தெரிந்தது.
“நெக்ஸ்ட் வீக் பசங்களுக்கு பரிச்சை வருதுல ஆண்ட்டி… அதான் எக்ஸ்ட்ரா ஸ்பெசல் க்ளாஸ் போச்சு…!” என பவானி விளக்கம் தர அவள் கால்கள் மட்டும் முன்னேறி கொண்டே இருந்தது.
“அப்படியா… சரி சரி… பார்த்து போ!” என வாசுகியின் வாய் சொன்னாலும், கண்கள் மட்டும் சந்தேகத்தை காட்ட தவறவில்லை.
இரண்டாம் கட்டத்தை தாண்டும் முன்பே பவானிக்கு மூச்சு முட்ட, நல்ல வேளையாக மூன்றாவது கட்டத்தில் ஆளை காணவில்லை.
“கமலா அக்கா வேலையா இருப்பாங்க போல… தப்பிச்சோம்!” என பெருமூச்சு விட்டவள், அந்த தெருவில் இருக்கும் கடைசி வீட்டுக்கு வந்து சேர, மனம் பொருமியது.
“ஊர்ல வீடுகட்ட இடமே இல்லாதது போல, எங்க வந்து தாத்தா கட்டி வச்சிருக்காரு பாரு. இந்த தெருவை முழுசா தாண்டி வர்றதே தினம் தினம் ஒரு அக்கபோரா இருக்கு!” என்ற புலம்பலோடு உள்ளே செல்ல, ஹாலில் அவள் அண்ணன் கவியரசு மும்முரமாக மேட்ச் பார்த்து கொண்டிருந்தான்.
பவானி அவனை ஆற்றாமையாக பார்க்க, அவனோ அவளை மருந்துக்கும் கண்டு கொள்ளவில்லை. சிறிது நேரத்திற்கு முன்பு தான் அவனுக்கு போன் பண்ணி,
“இன்னிக்கு லேட் ஆகும் கவி… வந்து பிக்கப் பண்ணிக்கிறியா?” என்று கேட்டிருக்க, அவன் அலட்சியமாக பதில் கொடுத்தான்.
“ஏன் இங்கிருக்க பக்கத்து தெருல இருந்து மேடம் தனியா வர மாட்டீங்களோ.? உங்கள பிக்கப் ட்ராப் பண்ணுறதுக்கு தான் நான் வண்டி வாங்கி வச்சிருக்கேனா?”
அவன் சொற்கள் நெஞ்சை சுட்டாலும், “தினமுமா கவி கேக்குறேன்… இன்னிக்கு ஒரு நாள் தான… இங்க ஸ்ட்ரீட் லைட் எதுவும் எரியலடா… ரொம்ப இருட்டா இருக்கு!” என்றாள் பவானி டென்சனாக.
“லைட் எரியாட்டி நான் என்ன பண்ண முடியும்? அதான் போன் கைல இருக்குல… அதுல டார்ச ஆன் பண்ணிட்டு வா!” என பொரிந்தவன், தன் போக்கில் சொல்வது போல்,
“மனசுல பெரிய ரதின்னு நினைப்பு! இவ தனியா வர்றத பார்த்து எவனாவது தூக்கிட்டு போயிடுவான் பாரு!” என போனை கட் பண்ணி விட, பவானிக்கு அவனை நேராக பார்த்ததும் ஏதாவது சுள்ளென்று சொல்ல தோன்றியது.
சொன்னால் மட்டும் அவன் மாறி விடுவானா? என மூளை கேள்வி கேட்க, இன்னொரு பெருமூச்சு வெளி வந்தது.
‘கடவுளே வாழ்க்கை இப்படியே போயிடுமா… ஒரு விடிவு காலமே இருக்காதா?’ என இதயம் கசங்கி, முதுகில் இருந்த தோள் பையை ஹாலில் போட, சத்தம் கேட்ட பின்பே கவியரசு இவளை கவனித்தான்.
“வந்துட்டியா… குடிக்க தண்ணி கொண்டு வாயேன். அப்படியே ஸ்நாக்ஸ் ஏதாவது!” என வேலை ஏவி விட்டு மீண்டும் மேட்சில் மூழ்கி போக, பவானி துப்பட்டாவை பின்னால் கட்டி கொண்டு கிட்சனில் நுழைந்தாள்.
ப்ரிட்ஜில் இருந்த மாவை வெளியே எடுத்து வைத்தவள் கவியரசுக்கு தண்ணீர் எடுத்து சொல்ல, அவனோ ‘ஸ்நாக்ஸ் எங்க?’ என்று கடிந்தான்.
“சாப்பிடுற நேரத்துல எதுக்கு ஸ்நாக்ஸ் பத்து நிமிஷம் இரு… தோசை போட்டு தரேன்!” என பவானி திரும்பி செல்ல, கவியரசு கோபமடைந்தான்.
“என்னால தோசை சாப்பிட முடியாது. சப்பாத்தி பண்ணு!”
“சப்பாத்தி பண்ண லேட் ஆகும் கவி… எனக்கும் டயர்டா இருக்கு!”
“உனக்கு டயர்டா இருந்தா நான் என்ன பண்ண முடியும்? காலையில இருந்து ஓடா உழைச்சு தேய்ஞ்சு போய் வரேன். வீட்ல நல்ல சோறு கூட போட மாட்டீங்களா…?” என்றவன் கத்த, பவானிக்கும் பொறுமை பறந்தது.
“எது காலைல சாயங்காலம்ன்னு, ஒரு ஆறு மணி நேரம் போய் டைம் பாஸ் பண்ணிட்டு வரியே… அதெல்லாம் ஒரு வேலையா… உன்னை நாங்களா டியூசன் எடுக்க சொன்னோம். நீ தான திமிரெடுத்து போற?” என்றவன் கேட்டு கொண்டிருக்க, சரியாக மைசூர் பட்டு சரசரக்க உள்ளே நுழைந்தார் சுந்தரி.
அவர்களை பெற்றெடுத்த தெய்வம்!
“டேய்.. ஏண்டா இந்த கத்து கத்திட்டு இருக்க… தெரு முனை வரைக்கும் உன் சத்தம் கேக்குதுடா!” என்றவள் அலுக்க, கவியரசு தங்கையை முறைத்தான்.
“எல்லாம் உங்க பொண்ணால தான். இஷ்டத்துக்கு லேட்டா வந்து என் உயிரை எடுக்குறா… தினம் தினம் தோசைன்னா மனுஷன் சாப்புடுவானா….?”
மகனின் குற்றசாட்டை கேட்ட சுந்தரி, “அவன் கேக்குறதை தான் பண்ணி கொடேன்டி!” என்றார் வழக்கம் போல்.
“அம்மா… நீயுமா… மணிய பாரேன் !”என பவானி கெஞ்ச, சுந்தரிக்கும் மகளை பார்க்க பாவமாக இருந்தது.
“அரசு… இன்னிக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா… இந்தா பார்வதி ஸ்வீட்ஸ் கொடுத்து விட்டா இதை சாப்பிடு!” என ஹேன்ட் பேக்கில் இருந்த பெங்காலி ஸ்வீட்ஸ் பாக்சை அவன் கையில் கொடுக்க, அதை பார்த்ததும் பவானிக்கு எச்சில் ஊறியது.
“கவி எனக்கு ஒன்னு!” என்றவள் பாக்சை தொட போன சமயம், விசுக்கென்று பின்னால் இழுத்தவன்,
“இப்படி வாய கட்டாம தின்னு தின்னு தான், எழுபத்தி அஞ்சு கிலோல வந்து நிக்கிற! இனி நீ இன்னும் குண்டானா, வீட்டு நிலை கதவை இடிச்சிட்டு தான் புதுசா வைக்கணும். போடி!” என்று அலட்சியமாக சொன்னவன், கால் மேல் கால் போட்டு அமர்ந்து,
“இன்னிக்கு போனா போதுன்னு விடுறேன். ஆனா நாளைக்கு சப்பாத்தி தான் வேணும்!” என்று தன் தேவையில் குறியாக இருக்க, அவன் முதலில் அடித்த கமென்ட்டில் பவானி நத்தையாய் தன் கூட்டுக்குள் சுருங்கி போனாள்.
சில வருடங்காக கேட்கும் இந்த ஏக வசனங்கள் பழகி போய்விடும் என்று பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் புதுசாய் கேட்பது போல் குறுக வைத்தது. அத்தனை குண்டெல்லாம் இல்லை. சற்று குட்டையாக இருந்ததால், பூசிய தோற்றத்தில் தெரிந்தாள்.
ஆனால் கவியரசு அதையே குத்தி குத்தி காட்டி, சங்கடமாக உணர வைக்க அமைதியாக கிச்சனுக்கு சென்று விட்டாள்.
சென்னையில் வாழும் ஒரு நடுத்தர குடும்பம் பவானியுடையது. அவள் அப்பா கனகசபை போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்பொழுது கிடைக்கும் பென்சனிலும், மகன் கொடுக்கும் பேட்டாவிலும் ரிட்டையர்மென்ட்டை சுகமாக அனுபவித்து கொண்டிருக்கிறார்.
அவர் தர்ம பத்தினி சுந்தரி. காயத்ரி, கவியரசு, பவானி என்று மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்த மகராசி. மூத்தவள் காயத்ரியை எம்.ஏ வரை படிக்க வைத்து ஆறு வருடத்திற்கு முன்பு சாப்டுவேர் இஞ்சினியராக இருக்கும் ராகவனுக்கு விமர்சையாக திருமணம் செய்து கொடுத்தார்கள்.
தற்பொழுது பேத்தியும் எடுத்து அவள் வாழ்கையை செட்டில் பண்ணி விட, இரண்டாமானவன் கவியரசை சிவில் இஞ்சினியராக உருவாக்கி விட்டார்கள். ஆரம்பத்தில் வேலை கிடைக்காமல் தள்ளாடி கொண்டிருந்தாலும், தற்பொழுது ஒரு நல்ல கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் வேலை கிடைத்து கை நிறைய சம்பாதித்தான் கவியரசு.
மூன்றாவது தான் பவானி. எம்.எஸ்.சி மேக்ஸ் முடித்து விட்டு பிஎட்டும் முடித்து இருந்தாள். பிஎட் முடித்ததும், அவளை கல்யாணம் செய்து கொடுக்கும் ஐடியாவில் இருந்ததால் வேலைக்கு போக வேண்டாம் என வீட்டிலே அமர வைத்து விட, பவானிக்கும் வீட்டில் சொன்னதை தட்டி பழக்கம் கிடையாது.
தாய் தந்தை சொல் கேட்டு வளர்ந்து விட்டதால், அவர்கள் என்ன செய்தாலும் தனக்கு சரியாக இருக்கும் என தப்பு கணக்கு போட்டு விட்டாள். காலமோ அவளுக்கு வேறு கணக்கு வைத்திருக்க, சரியாக இருபத்தி இரண்டு வயதில் ஆரம்பித்த வரன் தேடும் படலம் நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஜாதகத்தில் தோஷம், பரிகாரம் என கோவில் கோவிலாக சுற்றினாலும், மேட்ரிமோனி தளங்களில் ஆயிரம் ஆயிரமாய் செலவழித்தாலும் அவளுக்கென்று பிறந்தவன் கண்ணில் அகப்படாமல் ஆட்டம் காட்டினான்.
சில சமயம் எல்லாம் ஒத்து வந்து பெண் பார்ப்பது வரை வந்து விட்டாலும், “பொண்ணு கொஞ்சம் குண்டா இருக்கோ?” என்ற பார்வைகளோடு அனைத்தும் நின்று போகும்.
காலேஜ் படிக்கும் வரை சிக்கென்று தான் இருந்தாள். எப்பொழுது வீட்டில் இருக்க ஆரம்பித்தாளோ அன்று தொடங்கியது வினை. ரெண்டு கிலோ, நாலு கிலோவாகி, அது ஆறு, எட்டாகி நீ பவானி தானா? என கேட்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது.
வெயிட்டை குறைக்க நினைத்தாலும், அந்த சூத்திரம் மட்டும் பெரிய மர்மமாகவே இருக்க, “வேலைக்கு போனா அலைச்சல்ல இடை குறையும்!” என காயத்ரி தான் தங்கைக்கு வழி கொடுத்தாள்.
ஆனால் நான்கு வருட கேப் ஆகி போனதால், “எக்ஸ்பீரியன்ஸ் இல்ல!” என்ற பதிலோடு கிடைத்த ஒன்று இரண்டு வாய்ப்புகளும் கை விட்டு போனது. அரிதாக சிலது கிடைத்தாலும், ஸ்டார்டிங் சேலரி எட்டாயிரம் ரூபாயாக இருந்தது.
“இதுக்கு துணி கடையில சேல்ஸ் கேர்ளா போனாலும் சம்பளம் அதிகமா தருவான்!” என கவியரசு நக்கலடித்தான். பவானிக்கோ அவன் கூற்றில் கோபம் வந்தாலும் உண்மை சுட தான் செய்தது.
இருந்தும் படித்த படிப்புக்கு தகுந்த வேலைக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்ற உறுதியில் இருக்க, அப்பொழுது தான் பக்கத்து தெருவில் இருக்கும் டியூசன் சென்ட்டர் பற்றி அறிந்து கொண்டாள். அதை நடத்தி கொண்டிருந்த அருளுக்கு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி மேக்ஸ் எடுக்க ஒரு ஆசிரியை தேவைப்பட, பவானி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டாள்.
“ஸ்கூல்லயே எட்டை தாண்டலயாம்… டியூசன்ல எவ்ளோ தருவாங்க?” என்று கவியரசு மறுபடியும் நக்கல் அடிக்க அவன் மூக்கை உடைப்பது போல் இருபதாயிரம் சம்பளம் வாங்கினாள் பவானி.
மேக்ஸ் பாடம் எடுக்க நிறைய டிமான்ட் இருந்ததால் அந்த அளவுக்கு அருள் பேமெண்ட் கொடுத்தான். அதிலும் பவானி ஈசியாக மேக்ஸ் சொல்லி தருவதில் கில்லாடி. அவள் சொல்லி கொடுக்கும் விதம் பிடித்து இன்னும் நிறைய மாணவர்களும் வந்து சேர, ஒருவருடம் கழித்து இருபத்தி ஐந்தாயிரம் ஏற்றி கொடுத்தான் அருள்.
பவானிக்கு இந்த வேலை மிகவும் பிடித்து போனது. ஆனால் அவள் எண்ணியது போல் உடலில் தான் மாற்றமே இருக்கவில்லை. அது இப்பொழுதெல்லாம் பெரிய விஷயமாக தெரியாவிட்டாலும், கவியரசு வாய் முகுர்த்தத்தால் அடிக்கடி டல் ஆகி போவாள்.
அன்றும் அப்படி தான் நடந்திருக்க, முகத்தை தூக்கி வைத்து கொண்டு சட்னி அரைத்து கொண்டிருந்தாள். அவளுக்கு பின்னால் வந்த சுந்தரி நைட்டிக்கு மாறி இருக்க, மகள் கையில் பெங்காலி ஸ்வீட்டை திணித்தார்.
“எனக்கு வேணாம்மா….!” என பவானி முகத்தை இன்னும் தூக்க,
“அட அரசு விளையாட்டுக்கு சொன்னான்டி. உடனே கோவிச்சிட்டு வந்துடுவியா… பார்வதி உனக்காக தான் கொடுத்தே விட்டா!” என்று சொல்ல, பவானிக்கு அதை சாப்பிட துளி விருப்பம் கூட இல்லை.
“அப்பறம் சாப்டுறேன்!” என ஒரு கிண்ணத்தில் வைத்தவள்,
“பெர்த்டே பங்சன் எப்படி இருந்துச்சு? என்று கேட்க, சுந்தரி அவளுக்கு உதவியபடி,
“ம்ம்… நல்லா தான் இருந்துச்சு. பார்வதி பேரன் துறுதுறுன்னு அழகா இருந்தான். ஆனா அவ மருமக தான் யார் கையிலயும் பையன கொடுக்காம ரொம்ப பிகு பண்ணிக்கிட்டா…!” என்று சொல்ல, அவர் ரியாக்சனை பார்த்து பவானிக்கு சிரிப்பு வந்தது.
“விடும்மா…. அவங்க ரிசர்வ்டு டைப்ன்னு அத்தையே சொல்லி இருக்காங்கள?”
“அவ மத்தவங்க கூட ஓட்ட மாட்டான்னா மத்தவங்களும் அப்படியே இருக்கணுமா…?” என்ன சுந்தரி சொல்ல,
“இந்நேரம் ஜாதகம் பொருந்தி வந்திருந்தா நீ தான் பார்வதிக்கு மருமகளா ஆகி இருப்ப.. பார்வதி பையனும் உன் குணத்துக்கு தங்கமா தாங்கி இருப்பான்!” என்று ஏமாற்றமாக இழுக்க, பவானி முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து போனது.
இப்படி தான் அங்கு சுத்தி இங்கு சுத்தி எப்பொழுதுமே கல்யாண பேச்சில் வந்து தான் அனைவரின் பேச்சும் முடியும். அதனால் யோசனையாக அவள் தோசையை ஊற்ற ஆரம்பிக்க, சுந்தரி சட்னியை தாளித்தபடி,
“பார்வதி இன்னிக்கு ஒரு வரன் சொன்னா பவானி… பையன் ரெவன்யூ இன்ஸ்பெக்டரா இருக்கானாம். நல்ல குடும்பமாம். பையனுக்கு ஒரு அக்கா இருக்கும் போல. அவளையும் சிறப்பா கட்டி கொடுத்துட்டாங்களாம். உனக்கு ஓகேன்னா சொல்லு பேசுவோம்ன்னு சொன்னா… நீ என்ன சொல்ற…?” என்று கேட்க, இப்படி பல சம்பந்தத்தை கேட்டு சலித்து போய் விட்டதால்,
“உங்க விருப்பம்!” என்று முடித்து விட, “அப்போ நாளைக்கு ஜாதகம் அனுப்ப சொல்றேன். பையன் கொஞ்சம் நிறம் கம்மியா இருப்பான் போல… ஆனா நல்ல உயரம்ன்னு பார்வதி சொன்னா…. கண்ணுல ஓடிக்கிற மாதிரி லட்சணமா இருப்பானாம்!” என்று சுந்தரி மேலும் பீடிகை போட,
“ம்ம்… ம்ம்…!” என்று இழுத்த பவானி என்ன நினைத்தாளோ, “பேர் என்ன?” என்று கேட்டு இருக்க, அவள் மனதிற்குள் சுந்தரி கூறிய அதே அங்க அடையாளங்களோடு ஒருவன் கள்ளத்தனமாக வந்து சென்றான்.