Advertisement

அத்தியாயம்…23 
ஆறு மாதம் கடந்த நிலையில் கீதாவின் மனதின் ரணம் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிக் கொண்டு வந்தாலும், அந்த வடு அவளின் மனதில் ஒரு சுவடாய் இருந்தது என்னவோ நிஜம் தான்..
ஆனாலும் இப்போது எல்லாம் கீதா அனைவரிடமும் சாதாரணமாக பேசுகிறாள்.. முன்னும் கீதா பேச்சு என்பது அவ்வளவு கிடையாது.. இப்போதும் அதே தான் பேச்சுக்கள். கேட்டதற்க்கு பதில் கொடுத்து விடுவாள்.
ஆம் அவளிடம் கேட்ட கேள்விக்கு பதில் எப்போதும் போல்   வந்தாலும், சும்மா நச்சுன்னு இருக்கும். இப்போது முன் போல் துர்க்கைக்கு விளக்கு ஏற்ற போகிறார்கள்.
ஆம் போகிறார்கள் தான். முன் எல்லாம் அவள் தனியாக போக இப்போது துணைக்கு  பத்துவும் அவளுடன் செல்கிறாள்.. அவள் இல்லாத போது கடையை பார்த்துக் கொள்ள என்று தன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் கல்லூரிக்கு செல்லும் ஒரு பெண்ணை அமர்த்தி இருக்கிறாள்.
தந்தை இல்லாத பெண்ணுக்கு ஒரு உதவியும் ஆச்சி… தன் காதலுக்கு உறுதியும் ஆச்சி என்று அந்த பெண் கடையை பார்த்துக் கொள்ள இவள் தன் அக்காவோடு துர்க்கைக்கு விளக்கு ஏற்றி..
“தாயே என் அக்காவுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகனும்…” என்று எப்போதும் அவள் மனதில் நினைப்பதை  வெளிப்படையாக சொல்வது போல் இதையும் வெளிப்படையாக தன் கோரிக்கையை துர்கைக்கு வைத்தாள்.
அப்போது பக்கத்தில் இருக்கும் பெண்கள்///
“  பரவாயில்ல..அக்காவுக்காக வேண்டிக்கிறியே உனக்கும் கூட சேர்த்து வேண்டிக்கோம்மா.. உனக்கும் கல்யாணம் வயது தானே…?” என்ற கேள்விக்கு….
“ஆ அது கடந்து நான்கு வருடமும் முடிந்து விட்டது…”  என்ற  பத்மினியின் பதிலில் ஒரு சில பெண்கள் சிரித்து விட்டனர்..
ஆனால் ஊரில் இருக்கும் வம்புக்கு என்று அலையும் ஒரு சில கூட்டம் இருக்கும் தானே.. தன் வீட்டில்  இருக்கும் தன் பிள்ளைகள்   என்ன செய்கிறார்கள்…? தன் கணவன் எங்கு போகிறான்…? எங்கு இருந்து வருகிறான்…? என்று பாராது…
 “அது என்னவோடி என் வீட்டு பக்கத்தில் இருக்கும் பெண்ணோட புருஷன் வீட்டுக்கு வந்துட்டா போதும்..  ஒரே சத்தம் தான்.. எப்போ பார் சண்டை சண்டை தான்.” என்று ஒரு வம்பு பேசும் பெண் சொன்னால் என்றால்..
“நீ வேற அந்த பெண் ரொம்ப சின்ன பெண்.. கணவனுக்கு கொஞ்சம் என்ன நிறையவே வயசு கூட.. இந்த பெண் பணத்துக்கு ஆசைப்பட்டு அரை கிழவனை கல்யாணம் செய்துக்கிட்டா… அப்போ பட வேண்டியது தானே…?” என்ற இரண்டாம் வம்பு பேசும் பெண் இப்படி பேசினாள்.
முதலாம் வம்பு பேசிய பெண்ணோ…
“ஓ அப்படியா சமாச்சாரம்.. அப்போ அந்த பெண்ணுக்கு வேண்டியது தான்.” என்று பேசும் இரு பெண்களும் வம்பு பேசும் நேரம் மணி இரவு பத்து..
அப்போது அவர்களின் பிள்ளைகள் அவர்கள் அறையில்  சேர கூடாதவர்களோடு சேட்டிங்கில் இருக்க… கணவன்மார்கள் அப்போது வரை வீடு வராது.. ஒரு தகவலும் சொல்லாது இருக்க…இவர்கள் இருவரும் அடுத்த வீட்டை பத்தி புரளி பேச…  அந்த புரளியில் வரும் அழுக்கு நாளை அவர்கள் வீட்டுக்கு தான் சேரும் என்று கூட தெரியாத கூட்டம்  அனைத்து ஊரிலும் இருக்கும் போது..
பத்மினி இருக்கும் ஊரில் இருக்க மாட்டார்களா என்ன…? இருப்பார்கள். இருக்கிறார்கள்… அடுத்த வீட்டு கதை பேச   கோயிலுக்கு வருகிரார்களா..? இல்லை தான் செய்யும் இந்த பாவம் எங்கள் குடும்பத்தை தாக்க கூடாது என்று வேண்டுதலுக்கு கடவுளை வேண்ட வருகிறார்களா…? தெரியவில்லை..
ஆனால் அப்படி பட்டவர்களும் கோயிலுக்கு வருகிறார்கள் என்பது தான் நிஜம்.. அப்படி வந்தவர்களில் இருவர் பத்மினியின் பேச்சை கேட்டு…
“ ஏன்டி யம்மா நீங்க எதுக்கு  விளக்கு எல்லாம் ஏத்திட்டு… போன வருஷம் ஒருத்தன் புருஷன் இந்த வருஷம் இன்னொருத்தன் புருஷனா வரப்போறவன் என்று வீட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருக்கான்….
 வருடம் ஒருவன் என்றால், பாவம் அந்த அம்பாள் என்ன தான் சக்தி வாய்ந்தவள் என்றாலும், என்ன செய்வா…? மூன்று முடிச்சி தான் அந்த அம்பாள் வெகுமானமா தருவா.. நீங்க ஆறு ஒன்பது பன்னிரெண்டு என்று அடுக்கிட்டு போயிட்டே இருந்தா.. அந்த அம்பாளுக்கே குழம்பி போயிடும் போலவே…” என்று ஒரு பெண் பேச..
அதற்க்கு அடுத்த பெண்..
“ இன்னொருதனும் வர்றானே.. அவனை நீ பார்க்கலையா…?” என்று கேட்டதற்க்கு..
மற்றொருத்தி.. “ ஓ அவனா பார்க்க ரவுடி மாதிரி.. அவன் இரண்டா குட்டிக்காக வருபவன்…” என்று சொல்ல.
பின் பேச்சு..
“ரவுடியா அவன்…?” என்ற இந்த கேள்விக்கு பதில் கீதாவிடம் இருந்து வந்தது…
“ ஒரு வகையில் ரவுடி தான். நான் போலீஸ் இல்ல பொறுக்கின்னு சொல்வது போல இவரு நான் வக்கீல் இல்ல ரவுடின்னு சொல்லிக்கலாம்..ஏன்னா அப்போ அப்போ ரவுடியா கூட அவதாரம் எடுப்பார்..” என்று சொன்ன கீதா..
தொடர்ந்து .வம்பு பேசிய இருபெண்களில் ஒருத்தியிடம்..
“  வக்கீலை இந்த அம்மாவுக்கு   தெரியாம போனாலும், உங்களுக்கு  எப்படி மாமி அவரை மறந்திங்க…?” என்று கீதா கேட்க..
இப்போது பத்மினி அவர்களை போல் வம்பு பேசும் பாவனையில்..
“என்ன அக்கா  வயசு ஆயுடுச்சோ அதான் மறதி வந்துடுச்சின்னு நினைக்கிறேன்.. அவங்க மறந்தா என்ன நாம் நியாபகம் படுத்தலாம்.. நான்கு மாதம் முன் உம்ம புருஷன் இந்த வயசுலேயும் அவர் கூட வேலை பார்த்த பெண் வீட்டில் விழுந்து கிடந்தாரே..அது நியாபகம் இருக்கா மாமி…?
அது நியாபகத்துக்கு வந்துட்டுத்துன்னா என் குரு மாமாவும் உங்க நியாபகத்துக்கு வந்துடுவார்.. ஏன்னா அந்த பெண்ணு நான்கு லட்சம் செட்டில் மென்ட் பண்ணி உங்க புருஷனை உங்க கிட்ட சேர்த்து வைத்தாரே…” என்ற பத்மினியின் பேச்சில் அந்த மாமியின் முகம்  பேய் அரைந்தது போய் ஆகி விட…
அதை பார்த்த கீதா…
“ ஆ இப்போ நியாபகம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன்.” என்று சொன்னவள் தொடர்ந்து..
வம்பு பேசிய மற்ற பெண்ணிடம்..
“இப்போ நீங்க ஒரு புது வீடு கட்டின்னு  இருக்கிங்களே…அதை கட்டி கொடுப்பது இப்போ சொன்னிங்களே என்னோட அடுத்த புருஷனா வரப்போறவருன்னு அவரு தான்” என்று  சொன்ன கீதா..
“போதுமா எங்க வீட்டில் வந்து போறவங்க விவரம்…” என்று சொன்னவள் பத்மினியிடம்.
“ என்ன பத்திக்கிச்சா…” 
பேச்சில் இடையே விளக்கை ஏற்றிக் கொண்டு இருந்த பத்மினியிடம் கீதா கேட்க..
“ஆ ரொம்ப நல்லாவே பத்திக்கிச்சிக்கா…” என்று சொல்லி  இருவரும் சென்றனர்..
கீதா முன் போல் இல்லை… முன்பு இருந்த கீதா  ஒரு பெண்  தன்னை ஏளனமாக பேசினாள் என்று கோயிலுக்கு விளக்கு  போடுவதை நிறுத்தியவள்.
இப்போது இருக்கும் கீதா… கோயிலுக்கு அவங்களே வரும் போது நான் போக என்ன…?  என்று நினைத்தவளாய்.. இதோ தொடர்ந்து விளக்கு போட்டுக் கொண்டு இருக்கிறாள்..
இந்த தைரியம் அவளுக்கு எங்கு இருந்து வந்தது என்றால், குருவிடம் இருந்தும் கிரிதரனிடம் இருந்துமே…
குருமூர்த்தி சொன்னது போல் கீதா பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்று ஒரு காப்பகம் அமைத்திடும் வேலையில் தன் கவலைகளை மறக்க…
புது கவலைகள் கொடுக்க என்று ஒரு சிலர்… அவளை பற்றி தவறாய் திரித்து இதோ இப்போது கோயிலில் பேசினார்களே அது போல் அவள் காது படவே பேசினார்கள்..
கிரிதரன் ஒரு பில்டர்..ஜெய்யிடம் இருந்து வந்த வீட்டில் அதை காப்பகமாய் மாற்ற… ஒரு சில மாற்றங்கள் அந்த வீட்டில் செய்ய வேண்டியது இருந்தது..
அதனால் அதன் வேலையை அவன் கவனிக்க… அங்கு தினம் வர…(மற்றவர்களுக்கு எப்படியோ கீதா என்பதால் அந்த சின்ன வேலைக்கு அவன் தினம் வந்தான்.) அது மற்றவர்களின் பார்வைக்கு என்னவாக தெரிந்ததோ…
திருமணம் ஆகாது பெண்ணாக இருந்தால் அது காதல் என்று கணக்கிட்டு அதை ஒருவகையில் சேர்த்து விடுவர்.. அதே திருமணம் முடிந்து விவாகரத்தான பெண் என்றால், அதுவும் அந்த விவாகர்த்துக்கு காரணம் அந்த ஆணே என்று தெரிந்து இருந்தாலும்,  கூட.. பெண்கள் அதற்க்கு பின் எங்கும் செல்லாது தனக்கு என்று ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்ளாது இருந்து விட வேண்டும்..
அந்த வகையில் சேர்ந்த சிலர்..
“ விவாகரத்து ஆன கைய்யோடு சூட்டோடு சூட்டாக இன்னொருவனை பிடிச்சிட்டா பார்த்தியா…?” என்பது போல் பேச்சுகள் காதில் வந்து விழும் போது கீதாவும் முதலில் அதிர்ந்து தான் போனாள்..
குருமூர்த்தியிடம்..
“ இதுக்கு தான் நான் அந்த சொத்தை எல்லாம் ஏற்கனவே இருக்கும் காப்பகத்துக்கு கொடுத்திட சொன்னேன்,..” என்ற பேச்சில்..
குருமூர்த்தி சொன்னது இது தான்..
“ இது போல் பேசுறவங்க..நாளைக்கு ஆம்பிள்ளை என்றால் அப்படி இப்படி தான் இருப்பான். இவள் தான் பொறுத்து அவனை தன் வழிக்கு கொண்டு வந்து இருக்கனும்.. என் கணவர் கூட தான் வயசுல கொஞ்சம் சபல புத்தியில் அலஞ்சார்… நான் இழுத்து பிடிக்கல…” என்று சொன்னா நீ என்ன நினைப்ப..சொன்னது போல..
என்று குருமூர்த்தி அவன் பேச்சை முடிக்கவில்லை…
“போதும் போதும்.. அது போல் பேச்சுக்கு கூட சொல்லாதிங்க குரு சார்…” என்று அருவெருத்து கூறினாள்..
அதற்க்கு குருமூர்த்தி..
“ ஊருல ஆயிரம் பேர் ஆராயிரம் சொல்வாங்க.. அது படி எல்லாம் நம்மால் நடக்க முடியாது கீதா.. நாம நம் மனசுக்கு உண்மையா இருக்கோமா…? அது போதும்.” என்று சொன்னவன்..
“ நீ சொன்னது போல் ஏற்கனவே நடக்கும் காப்பகத்துக்கு கொடுத்து இருக்கலாம்.. ஆனால் அது முழுமையா பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போய் சேருமா என்று தெரியாது கீதா..
தேன் எடுக்குறவன் நக்குவது போல இது போல் வரும் பணம்  பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் மீதி அங்கு இருப்பவர்களுக்கும் போய் சேர்ந்துடும்..
நானும் இதுக்கு என்ன வழி என்று யோசிச்சிட்டு இருந்தேன்.  பூஜா அக்கா கிட்ட கூட கேட்டேன் அதுக்கு அக்கா இதை எல்லாம் நான் தனியா  செய்ய முடியாது… கூட யாராவது துணை இருந்தா செய்யலாம் என்று சொன்னா..
இதோ இப்போ அந்த துணையா நீங்க கிடச்சிட்டிங்க..அதுவும் இல்லாம நீங்க எல்லாத்திலேயும் இருந்து வெளியில் வரனும் என்று நினச்சேன் கீதா… உனக்கு புரியுதா…/? 
இப்போவும் உனக்கு இது வேண்டாம் என்று நினச்சா… சொல்லிடு கீதா.. யாரையும் நான் எதிலேயும் கம்பெல் பண்ண மாட்டேன்.. இது வழி என்று தான் சொல்ல முடியும். அது ஏத்துக்குறதும் ஏத்துக்காததும்  அவங்க அவங்க இஷ்டம்…” என்று கீதாவிடம் குருமூர்த்தி கொஞ்சம் கடுமையாக தான் பேசினான்..
ஒரு சில விசயத்துக்கு மென்மையை விட இது போல் கடுமை தான் கை கொடுக்கும்.. அவன் நினைத்தது போல்..
“நானே பார்த்துக்குறேன் குரு சார்…” என்று சொன்னவள் கொஞ்சம் தயங்கிய வாறு..
“பூஜா அக்காவும்  வருவாங்க தானே…?” என்று தன் சந்தேகத்தை கேட்டாள்..
சிரித்துக் கொண்டே..
“கண்டிப்பா.. ஆனா இப்போ அக்கா கொஞ்சம் பர்சனல் வேலையில் கொஞ்சம் பிஸியா இருக்கா… அது  முடிந்த உடன் முழுவதும் உனக்கு துணையா உன் கூட தான் இருப்பாள்..” என்று  குருமூர்த்தி சொன்னான்..
கீதா சிரித்துக் கொண்டே..
“அப்போ சரி தான்.” என்று சொல்லி விட்டு செல்பவளையே குருமூர்த்தி ஒரு நமுட்டு சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவனின் சிரிப்பை கவனித்துக் கொண்டே அங்கு வந்த பத்மினி..
“ என்ன என் அக்காவை பார்த்து நமுட்டா சிரிக்கிறிங்க…” என்று சண்டைக்கு வருவது போல் பேசிவளின் தோளை பற்றி தன்னிடம் இழுத்துக் கொண்டவன்..
அவளின் கூந்தலில் வாசம் பிடித்துக் கொண்டே..
“இல்ல உங்க அக்கா என்னை ரொம்ப பொய் சொல்ல வைக்கிற…” என்று என்ன ஏது என்று விவரம் சொல்லாது மொட்டையாக பேசியவனின் பேச்சு புரியாது அவனை நிமிர்த்து பார்த்தாள்…

Advertisement