Advertisement

அத்தியாயம்…19
எதிர் கட்சி வக்கீல் திக்கி திக்கி சொன்ன வார்த்தைகளை  கோர்த்து அதை முழுவடிவமாக வடிவமைத்த குருமூர்த்தி ஜெய்யிடம்…
“அப்படியா உங்க அம்மா வயதாகியாதால் தான் இறந்தாங்களா…?” என்று கேட்ட குருமூர்த்தியின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது தலைகுனிந்து விட்டான் ஜெய்..
இது வரை அம்மா ஸ்தானத்தில் இருக்கும் அண்ணியோடு தகாத உறவை வைத்திருந்தேன் என்று எந்த வித கூச்சமும் இல்லாது சொன்ன அந்த வாய்…
மனைவியை என் சொத்துக்கும்,  என் அழகுக்கும்  ஆசைப்பட்டு,  திருமணம் தள்ளி போய் கொண்டு இருந்ததால், நான் உண்மை சொன்ன பின் அவள் சம்மதத்தோடு தான் என்னை மணந்தாள் என்று கொஞ்சமும் யோசிக்காத சொன்ன அந்த வாய்..
குருமூர்த்தி கேட்ட அவன் அன்னையின் இறப்பை மட்டும் சொல்ல வாய் வரவில்லை.. அண்ணியும் அடுத்த வீட்டு பெண் தான்..அவளின் அழகோ.. இல்லை அவளே தானே வந்தா என்ற அந்த  எகத்தாளமோ… 
 தவறான உறவை வைத்து கொண்டவன் நினைத்து இருந்தால், சட்டப்படி அவன் அண்ணாவை விவாகரத்து செய்து பத்ம ப்ரியாவுக்கே அவன் ஒரு நல்ல வாழ்கை கொடுத்து இருக்க முடியும்..
ஆனால் அவன் செய்த அந்த இழிசெயலுக்கு காரணம்…  என்ன என்று அவன் உள்மனம் தான் அறியும்..இதோ இப்போது கட்டிய மனைவிக்கு  துரோகம் செய்யும் போது வராத அந்த குற்றவுணர்ச்சி..
இதோ அனைவரின் முன்னும் அவளை தாழ்த்தி பேசும் போது வராத அந்த  குற்ற உணர்ச்சி.. ஏன் இன்னும் கேட்டால், தன் மனைவி தன்னிடம் தாம்பத்தியம் என்ற அந்த உன்னதமான உறவுக்கு தன்னையே கொடுத்த்தையே வீடியோ எடுக்கும் போது வராத அந்த குற்றவுணர்வு..
தன் அன்னை இறப்பை நினைத்தால்… அதை நினைக்கும் போது அந்த  கூண்டின் பிடியை இறுக்கு பிடித்தவனாய்…
இந்த நீதிமன்றத்தில் வந்ததில் இருந்து நீ என்னை என்ன செய்து விட முடியும் என்பது போல் ஒரு துச்சமான பார்வையை மட்டும் குருமூர்த்தியை பார்த்து வீசிக் கொண்டு இருந்த ஜெய்யின் கண்கள் இப்போது திறந்து குருமூர்த்தியை  பார்த்த அந்த ஜெய்யின் பார்வை..
“போதும்.. இதை பற்றி பேசாதே…” என்று சொன்னதை குருமூர்த்தி அறிந்து இருந்தாலும், அவன் அதையே தான் ஜெய்யிடம் மீண்டும் மீண்டும் கேட்டான்.
“உங்க அம்மா எப்படி இறந்தாங்க…?” என்று..
ஜெய் ஒரு பெரும் மூச்சு விட்ட வாறு குருமூர்த்தியை பார்த்து … “சூசைட் செய்துக்கிட்டாங்க…” என்று சொன்னவனின் தலை  மீண்டும் குனிந்துக் கொண்டது.
“எதற்க்கு…?” என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை அவனால்..
ஆனால் குருமூர்த்தி… “அவங்க தற்கொலைக்கு காரணம் உங்க தகாத உறவு..பாவம் இளம் வயதில் கணவனை இறந்து..அவர் வைத்த சொத்தை தன்ன தனியாக கட்டி காப்பாற்றி… தன் இளமையை குழந்தைக்காகவே மட்டும் வாழ்ந்த அவங்க கண் முன்..
தன் பெரிய மருமகள் சின்ன மகனிடன். எந்த தாயும் பார்க்க  கூடாத அந்த காட்சி அவங்க பார்த்தாங்க..அந்த காட்சி அவங்க பார்த்தாங்க என்றதற்க்கு சாட்சி அவங்க கூட அந்த காட்சியை பார்த்த அப்போது உங்க வீட்டில் வேலை செய்த பெண்… என்று சொன்னவன்…
நீதிபதையை பார்த்து..
 “ அவங்கள  கூப்பிட அனுமதி தேவை…” என்று சொல்ல நீதிபதி அனுமதி கிடைத்த பின் அந்த பெண் சாந்தி வந்து நின்றாள்..
குருமூர்த்தி சுத்தி வளைக்காது நேரிடையாகவே  ஜெய்யை காட்டி… “இவரை உங்களுக்கு தெரியுமா..?” என்று கேட்ட கேள்விக்கு தலை நிமிர்ந்து அவனை பாராது…
“தெரியும் இரண்டு வருடம் முன் அவங்க வீட்டில் தான் வேலை செய்தேன்.” என்று குருமூர்த்தி கேட்காத கேள்வியான எப்படி தெரியும்…? என்பதற்க்கு சேர்த்தே அந்த பெண் சாந்தி பதில் அளித்தாள்.
“எதுக்கு அந்த வீட்டில் வேலை செய்வதை நிறுத்தினிங்க.. எப்போ இருந்து…?” என்ற  குருமூர்த்தியின் கேள்விக்கு…
“அந்த வீட்டு பெரியம்மா இறந்த அன்று தான் நான் கடைசியா அவங்க வீட்டுக்கு போனது.. நான் பாதி நாள் வேலை செய்த பணத்தை வாங்க கூட அடுத்து அந்த வீட்டில் நான் கால் அடி எடுத்து வைக்கல…” என்று சாந்தி சொன்னதற்க்கு…
“ அந்த வீட்டில் ஒரு இறப்பு..அப்போ தான் அங்கு நிறைய வேலை இருக்கும்.  அந்த சமயத்தில் ஏன் நின்னிங்க…அதுவும் வேலை செய்த பணம் கூட வாங்க கூட  அந்த வீட்டுக்கு போகலே…” என்று குருமூர்த்தி கேட்டதற்க்கு..
ஜெய்யையும், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பத்ம ப்ரியாவையும் புழுவை விட கேவலமான ஒரு பார்வை பார்த்துக் கொண்டே…
“ எனக்கு நாகரிகமா பேச தெரியாது சார்.. நான் பார்க்கவும் நாகரிகமா இருக்க மாட்டேன்.. அது என்னை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். ஆனா மனசு சார். மனசு சுத்தமா இருக்கும் சார்.
நான் இருக்க இடம் குப்பம் தான் சார். ஆனா என் மனசு சுத்தமா இருக்கு சார்..அதான்  என் புருஷன் செத்ததும் நான் உன்னை வசதியா வெச்சிக்கிறேன் என்று கூப்பிட்டவனை செருப்பால அடிச்சி துறத்திட்டு அம்மா வீட்டுக்கு போனா அங்கு அக்கா புருஷன் என்ற பெயரில் இருக்கும் ஒரு காமுகனையும்  அடிச்சி மூஞ்சு மொகரை எல்லாம் பேர்த்துட்டு…
தன் மானத்தோட  நான் எச்சில் ஆகாம நாளு வீட்டில் எச்சில்  பாத்திரம் கழுவி என் இரண்டு பொம்பளை பிள்ளைங்களை வளர்க்கிறேன் சார்..
அந்த வீட்டில் இருந்த அந்த பெரியம்மா தெய்வம் சார்…தெய்வம்… நானும் உன்ன போல் தான் கணவன் இல்லாம என் பிள்ளைகளை வளர்த்தேன். அந்த கஷ்டம் எனக்கு தெரியும். என்று நான் கேக்காமலேயே  கொடுப்பாங்க சார் அந்த உத்தமி..
ஆனா அந்த உத்தமிக்கு பிறந்தது எப்படி இப்படி சாக்கடையா இருக்கு..? அன்னைக்கு அந்த பெரியம்மாவோடு நான் பார்த்த அந்த காட்சியை பார்த்து எனக்கே குடல்ல பிரட்டி வாந்தி வந்தது என்றால், அந்த அம்மா… மானஸ்த்தி சார் தொங்கிட்டாங்க… தொங்கிட்டாங்க…
நிஜமா இப்படி அவங்க செய்வாங்கன்னு நினச்சி இருந்தா நான் அவங்களை  அங்கே விட்டு வந்து இருக்க மாட்டேன் சார்.. தன் பெரிய மருமகளையும் சின்ன மகனையும் அப்படி ஒரு காட்சி பார்த்த பின் அவங்க என்னை பார்த்த அந்த பார்வை.. கூசி போயிட்டாங்க  சார்…
சரி நாம இருந்தா  அவங்களுக்கு இன்னும் சங்கடமா தான் ஆகும் என்று நினச்சி தான் சார் நான் வந்தேன்.. ஆனா ஒரு மணி நேரத்துக்குள்ள இப்படி ஒரு செய்தி… நிஜமா இப்படி ஆகும் என்று தெரிஞ்சி இருந்தா நான் அங்கேயே இருந்து இருப்பேன் சார்…” என்று சாந்தி கதறி அழுது விட்டாள்.
ஒரு ஏழை பெண்.. தன் மானத்தோடு வாழும் அந்த பெண்ணுக்கு, இப்போது அந்த பெரியம்மாவின் இறப்பை சொல்லும் போது அழுகை வந்து  விட்டது…
என்ன தான் வக்கீலாய் இருந்தாலும், தன் கேசுக்காக பழையதை கிளறி உண்மை வெளி கொண்டு வர நினைத்தாலும், ஒரு தாயின் அந்த இறப்பை கேட்க குருமூர்த்திக்கும் கஷ்டமாக தான் இருந்தது..
அதுவும் அவர்கள் இறக்கும் போது என்ன மனநலத்தோடு இறந்து இருப்பார்கள்… அவனால் நன்கு உணர முடிந்தது..தாய் தாய் தானே..தன் தாயையே அவன் என்ன சூழ்நிலையில் அப்படி ஒரு வாழ்க்கை வாழ நேரிட்டதோ என்று நினைக்கும் அவனுக்கு..இந்த தாயின் இறப்பு மன வருத்ததை கொடுத்தது தான்..
ஆனாலும் நடை முறை ஒன்று இருக்கிறதே.. அதனால் அடுத்து தன் கேள்வியான..
“அப்போ அதுக்கு பின் அந்த வீட்டில் இருக்கிற யாரையும் பார்க்கலயா…?” என்ற கேள்விக்கு…
“பார்க்காம இருந்து இருந்தா நல்லா  இருந்து இருக்கும் சார்.. நல்லா இருந்து இருக்கும்.. ஆனா அந்த அம்மா எரிச்ச நெருப்பின் தணல் கூட  குளிர்ந்து இருந்து இருக்காது சார்..
அதுக்குள்ள அந்த இரண்டு கேடு கெட்டவன்களும் என் வீட்டுக்கு வந்து சீ…
நான் கூட அந்த பெரிய கமுனாட்டிக்கு…” என்று கெட்ட வார்த்தையை உபயோகித்த சாந்தி பின் தான் இருக்கும் இடம் கருதி..
“மன்னிச்சிக்குங்க சார்… எனக்கு இவனுங்கள நினச்சாளே கெட்ட வார்த்தை சொல்லி சொல்லி தான் நினச்சிப்பேன் சார்..அது தான்  இப்போவும் வந்துடுச்சி..” என்று படிக்காத அந்த ஏழை பெண்.. தப்பான பேசிய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்டாள்.
குருமூர்த்தி சிரித்துக் கொண்டே… 
“சாக்கடையை சாக்கடை  என்று தான் சொல்ல முடியும்.  அதை சந்தனம் என்று  சொல்ல முடியாது பாருங்க…” என்று சொல்லி, மேல பேசு என்பது போல்  சாந்தியிடம் குருமூர்த்தி சைகை காட்டினான்.
“நான் கூட அந்த அநியாயம் பெரியவனுக்கு தெரியாது தான் நடக்குதுன்னு  நினச்சிட்டு இருந்தேன் சார்.. அந்த அம்மா இறந்த்தால வீட்டுல் நிறைய பேர் இருப்பாங்க..
அதனால கொஞ்ச நாள் கழிச்சி நாம பெரிய மகனை பார்த்து உண்மை சொல்லி பெரியம்மா இதுக்கு தான் இறந்தாங்கன்னு சொல்லி  கொஞ்சம் பார்த்து இருப்பா..
இல்லேன்னா அதுங்க இரண்டும் உன் தலையில் கல்லை போட்டு கொன்னாலும் கொன்று போடுங்க என்று சொல்லலாம் என்று நான் நினச்சி இருந்தா..
இதுங்க இரண்டும் என் வீட்டுக்கு வந்து  என்னை மிரட்டிட்டு போகுதுங்க.. நான் வாய் திறந்தா என் இரண்டு பெண் குழந்தைங்க நல்ல படியா இருக்காதுன்னு.. வேறு ஏதாவது சொல்லி இருந்து இருந்தா  கூட பரவாயில்ல சார்..
அவனுங்க என் குழந்தையை காட்டி மிரட்டுனதுல  நான் ரொம்பவும் பயந்து போய்யிட்டேன் சார்… பெத்த அம்மா நம்ம செஞ்ச  கேவலமான செயலால் இறந்துட்டாங்க..
அந்த குற்றவுணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம இந்த இரண்டு கம்முனாட்டிகலும், அந்த உறவு தொடர அவங்க மாட்டாம இருக்க வந்து மிரட்டிறாங்கன்னா… இவனுங்க எதுவும் செய்ய துணிவாங்க சார்..
நான் வாழறதே என் இரண்டு பெண்களுக்காக தான்.. இவனுங்க பத்தி தான் தெரியுமே.. என் பெண்களை ஏதாவது செய்துட்டா…?  அந்த பயத்துல தான் சார் நான் கம்முன்னு இருந்துட்டேன்.
ஆனா நான்  எனக்கு தெரிஞ்ச உண்மைய சொல்லாம இருந்ததாலே ஒரு பெண்ணோட வாழ்க்கை பாழ போனதை நினச்சா.. இரண்டு பெண் குழந்தையின் தாயா இந்த பாவத்தை எங்கு போய் கழுவுறது என்று என் நெஞ்சம் பதறுது சார்..
அதுவும் இப்போ அந்த கம்முனாட்டி அந்த பொண்ணை பார்த்து பேசுவது கேட்க கேட்க.. நான் அப்போவே இவனுங்க தலையில் அம்மி கல்லை போடாம போயிட்டோமேன்னு வருத்தமா இருக்கு சார்..
அதுவும் இப்போ தான் சார் அங்கு உட்கார்துட்டு இருக்கும் போது உங்கள பத்தி சொன்னாங்க.. சும்மாவே பொண்ணுங்க என்றால்  அப்படி பேசுவார்..அப்போ இவன் செய்ததுக்கும், இப்போ இவன்  பேசுனதுக்கும் அவ்வளவு தான் என்று சொல்லும் போது..
அய்யோ எனக்கு  உங்களை பத்தி அப்போவே தெரியாம போச்சேன்னு இருக்கு சார்… தெரிஞ்சி  இருந்தா கண்டிப்பா உங்க கிட்ட வந்து இருப்பேன் சார்..
அப்படி வந்து இருந்தா..அந்த பெரியம்மா செத்ததுக்கு நியாயம் கிடச்சி இருக்கும். இதோ இந்த பெண் வாழ்க்கையும் தப்பி இருக்கும்..”

Advertisement