நாதம் 18
 
            அவன் முடிவை அவள் கையில் விட்டு விட்டு அமைதியாக இருந்ததே அவனுக்கு சாதகமாக அஞ்சலையை முடிவெடுக்க வைத்தது.
      அஞ்சலைக்கு பெரிய பெண்ணான பிறகு இந்த ஐந்து ஆறு வருடங்கள் அத்தனை எளிதாக இல்லை.
      அதைக் கடக்க அவளுக்கு சரியான வழி காட்டுதலோ அரவணைப்போ இல்லாத நிலையில் எல்லாமே அவளே சுயமாக யோசித்து முடிவெடுக்க வேண்டிய சூழலில் தான் இருந்தாள்.
      அஞ்சலைக்கு பதினாறு வயது இருக்கும் போது ஆயா இறந்து விட ஒரே நாளில் அவள் குழந்தைப் பருவத்தில் இருந்து பொறுப்பான இளம்பெண்ணாக வேண்டிய கட்டாயம்.
      அதுவரை அவளை குழந்தையாக பார்த்தவர்களின் பார்வையில் இப்போது இருந்த விகற்பம் ஆரம்பத்தில் ரொம்பவே அவளை பயமுறுத்தியது.
      அவளுக்கு என்ன ஆனாலும் கேட்க ஆளில்லை என்பது தெரிந்து சில சபலம் கொண்ட கயவர்கள் நடந்து கொண்ட விதமே கேவலமாக இருந்தது.
      சொந்த சகோதரியாகவோ மகளாகவோ பார்க்க வேண்டாம். குறைந்தபட்சம் உயிரும் உணர்வும் உள்ள ஜீவனாகவாவது பார்க்கலாம் அல்லவா?
      அவள் சில சமயங்களில் கிழிந்த உடையோடு போகையில் விரசமான பாடல்களை பாடி அவளை கூனிக்குறுக வைத்த ஜென்மங்கள் உண்டு.
      அதில் இருந்து கிழிந்த ஆடைகள் இருந்தாலும் தனக்கு தெரிந்த வரையில் தைத்துப் போட ஆரம்பித்தாள் அஞ்சலை.
      அப்போதெல்லாம் கடும் மன உளைச்சலில் சில சமயங்களில் இந்த உலக சிந்தனையே இல்லாமல் இருக்கும் தன் அம்மாவையும் பெற்றதோடு மறைந்து போன தந்தையையும் நினைத்து எத்தனையோ இரவுகள் தூங்காமல் அழுதிருக்கிறாள்.
      வெளியில் மட்டும் தொல்லை தருவதோடு போகாமல் ஒரு சிலர் வீடு வரை வந்தும் வேவு பார்த்து விட்டு போக இரவில் தூங்கக்கூட பயமாக இருக்கும்.
      அதனால் முடிந்த வரை தனித்து இருப்பதை தவிர்ப்பாள். செல்வி கூடவே இருந்து அவளின் துணிச்சலை கற்றுக் கொண்டாள்.
      அதே நேரம் அசட்டு துணிச்சல் தேவையில்லாத தொல்லை என்பதும் அனுபவம் சொல்ல பிரச்சனை இருக்கும் சூழல்களையோ கயவர்களையோ விட்டு ஒதுங்கிப் போக கற்றாள். 
      ஒரு பார்வையிலேயே ஆள் எப்படி என்று எடை போடும் அளவுக்கு அஞ்சலைக்கு அனுபவம் தந்திருந்தனர் அந்த புண்ணியவான்கள்.
      இப்போதும் அஞ்சலை கௌசிக் சொன்னதற்கு உடனே பதில் எதுவும் சொல்லாமல் அவன் முகத்தில் இருந்தே அவன் மனதைப் படிக்க முயன்றாள்.
      அவன் அவளிடம் என்ன எதிர்பார்த்து இதெல்லாம் செய்கிறான் என்று அதே கேள்வி இப்போதும் அவளுள் தோன்றியது.
      இவன் சபலம் மாதிரியும் தெரியல. ஒரு வேளை காதல் அது இது என்று உளறி விடுவானோ?
      அஞ்சலைக்கு அந்த அனுபவமும் கிடைத்தது. கடலில் மீன் பிடித்து வரும் போதெல்லாம் கடையில் போட வரும் அவன் அங்கே சுறுசுறுப்பாக வேலை செய்யும் அஞ்சலையை கவனிக்க ஆரம்பித்தான்.
      பார்க்க கருப்பாக இருந்தாலும் களையாக இருந்த அஞ்சலையைப் பிடித்துப் போனது அவனுக்கு.
      சில மாதங்கள் பார்வையால் தொடர்ந்தவன் ஒரு நாள் கேட்டே விட்டான்.
      ஏம்புள்ள! நாம ரெண்டு பேரும் கண்ணாலம் செஞ்சிக்கலாமா?
      அஞ்சலைக்கும் அவன் பார்வை புரிந்து தான் இருந்தது. அது பிடிக்காவிட்டாலும் அவன் தொந்தரவு எதுவும் செய்யாமல் இருக்க பார்வை தானே கழுத பார்த்துட்டு போ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு அஞ்சலை அவள் பிழைப்பை பார்த்தாள்.
      அவன் நேராக கல்யாணத்தைப் பற்றி பேசவும் அவளுக்கே ஆச்சரியம் தான்.
      இதுவரை அவள் பார்த்த சபல ஜென்மங்கள் எல்லாம் ஒரு முறை பழக மட்டுமே என்று முயல இவன் மேல் லேசாக ஒரு மதிப்பு வந்தது.
      ஆனாலும் அவன் கேட்டதும் உடனே சம்மதம் சொல்லவில்லை. 
      என்னை கல்யாணம் செஞ்சிக்கறேன்னு சொல்றியே? என்ன தெரியும் உனக்கு என்னிய பத்தி? உங்க ஊட்டுல என்ன ஒத்துக்குவாங்களா?
உங்க ஆத்தா பத்து பவுன் நகையும் ஒரு லட்ச்சமும் கொண்டாரவ தான் எனக்கு மருமவனு அங்க சொல்லினு கீது.
      என்று நேராகவே கேட்டு விட்டாள்.
      அட அது கெடக்குது புள்ள. மொத ஒத்துக்காது தான். பொறவு நாம கண்ணாலம் கட்டிக்கிணு போய் நின்னா வேற வழி இல்லாம வூட்டுல சேர்த்துக்கும்.
      அவன் அலட்சியமாக பதில் சொல்ல அஞ்சலை ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள் கேட்டாள்.
      ஒன்னியும் என்னயும் சேத்துக்கும். கூட எங்க ஆத்தாவும் வருமே? அத்த சேத்துக்குமா?
      அவள் கேள்வியில் அதிர்ந்தவன் சாயம் வெளுத்தது.
      ஹான்! அந்த பயித்தியத்த என்னாத்துக்கு கூட்டினு வரே? அத்த அப்படியே விட்டு புட்டு நீ மட்டும் தான் வரணும். அது பாக்க யாரும் இல்லினா தானே புட்டுக்கப் போவுது…
      அலட்சியமாக பேசியவனை கன்னம் கன்னமாக அறைய விரும்பினாலும் அந்த வீரம் வேலைக்காகாது என்று அஞ்சலைக்கு அனுபவம் கற்றுக்கொடுத்த பாடம் ஆயிற்றே.
      அந்த பைத்தியம் பெத்த பொண்ணு தானே நானு? நானும் உனக்கு வேணாம் போ. நீ வேற நல்ல பொண்ணா துட்டு இருக்கிற பொண்ணா கட்டிக்க. அதான் செட் ஆவும். நா இப்படியே இருந்துக்கறேன்.
      என்றதோடு அவன் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் நடந்து விட்டாள்.
      அவள் நிராகரித்ததில் கொஞ்ச நாள் அவளை எங்கே பார்த்தாலும் அவன் பேசிய பேச்சும் நக்கலும் காது கொடுத்து கேட்க முடியவில்லை தான்.
      ஆனால் இப்போது அவளுக்கு எல்லாம் மரத்து விட்டது.
      அதெல்லாம் இப்போது நினைவுக்கு வர கௌசிக்கும் அது போல ஏதும் எண்ணம் வைத்திருக்கிறானோ என்று அஞ்சலை அவனை கூர்ந்து பார்த்தாள்.
கௌசிக் பார்வையை நகர்த்தாமல் அவளையே பார்க்க அஞ்சலை எதுவா இருந்தாலும் ஒரு நாள் வெளிய வந்து தானே ஆகணும். அப்ப பார்த்துக்கலாம் என்று அமைதியாக அவன் எதிரே போய் அமர்ந்தாள்.
கௌசிக் அவள் பார்வையும் யோசனையும் பார்த்து தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டான்.
இன்னும் சொல்லப்போனால் ஒரு பக்கம் பொறுமை இல்லாமல் எரிச்சலாக இருந்தாலும் அவளின் முன்ஜாக்கிரதை உணர்வை பாராட்டவே தோன்றியது அவனுக்கு.
 அதனால் மேலே கிளறாமல் பேச்சை மாற்றினான்.
இந்த பாட்ட வகுளாபரணம் ராகத்துல ராஜா சார் கம்போஸ் பண்ணி இருக்கார். மேளகர்த்தா ராகங்களில் இது பதினாலாவது ராகம். இதுக்கு ஆரோஹணம் அவரோஹணம் இப்படி வரும்… என்று பாடிக் காட்ட அஞ்சலை பே என்று அவனைப் பார்த்தாள்.
இந்த குத்துப்பாட்டுக்கு பின்னால இவ்வளவு விஷயம் இருக்கா என்று பிரமிப்பாக பார்த்தவள் அதன் பிறகு அவன் மேல் அவள் கொண்ட சந்தேகத்தையே மறந்து போனாள்.
குத்துபாட்டை எல்லாம் கருநாடக பாட்டா பாக்குற நீ எல்லாம் தனி பீசு தான்யா..
அஞ்சலை பிரமித்துப் போனாள்.
இந்த பாட்டுல கமல் சார் சிலுக்கு மேம் அரேபிய டிரஸ் போட்டு வருவாங்க இல்ல? இந்த ராகத்திலே கூட அரேபிய சாயல் இருக்கு என்று சொல்றாங்க….
அவன் அந்த ராகத்தைப் பற்றி மேலே பேசப்பேச அஞ்சலைக்கு பிரமிப்பு குறைந்து பின்னால் யாரோ மரம் அறுக்கும் சத்தம் கேட்டது.
கொட்டாவி வேறு வருவது போல இருக்க முயன்று  சமாளித்துக்கொண்டாள்.
கௌசிக்கிற்கு அவன் பேசப்பேச அவள் முகம் போன போக்கைப் பார்க்க சிரிப்பு தாங்கவில்லை.
அவள் எதிரே சிரித்து விடக்கூடாது என்று கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான்.
ஒரு வழியாக வகுளாபரணம் ராகம் பற்றி பாடம் எடுத்து முடித்து .சரி! இனி பாடலாமா? என்று அஞ்சலையை கேட்க அவள் தலை அவசரமாக ஆடியது.
இனி நீ என்ன பாட சொன்னாலும் எதுத்து கேக்கவே மாட்டேன் சாமி! என்று மனதுக்குள் அஞ்சலை சபதமே செய்து கொண்டாள்.
கௌசிக் அவள் மைன்ட் வாய்ஸ் தெளிவாகவே அவள் முகம் போன போக்கிலேயே புரிய அப்படி வா வழிக்கி! யாரு கிட்ட?
என்று நினைத்தவன் பாடலை முதலில் ஒலிக்க விட்டான்.
இப்போது அஞ்சலைக்கே அது ஐட்டம் சாங்காக இல்லாமல் பக்திப்பாடலாக தெரிந்தது.
ஜானகியம்மாவின் முக்கல் கூட ஆலாபனையாகத் தெரிய கவனமாக கேட்டாள்.
பயபக்தியாக அந்த பாடலை அஞ்சலை கேட்க கௌசிக்கால் புன்னகையை மறைக்க முடியவில்லை.
கௌசிக் அதன் பிறகு அவளைப் பாட விட்டு சில சிறு திருத்தங்களை செய்தான்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அவளை டரில் வாங்கியவன் அவள் களைத்து போவதைப் பார்த்தே நிறுத்தினான்.
சரி! இப்போதைக்கு இது போதும். நாளைக்கும் இதே போல வந்திடு. என்ன?
 இப்போ உனக்கே நீ எங்க பாட்டை பாட முடியாம விடறேன்னு புரிஞ்சுகிட்டு இருப்பே! உன்னால இன்னும் மூச்சை இழுத்து பிடிக்க முடியல. அதுக்கு முதல்ல காலைல எழுந்ததும் மூச்சு பயிற்சி செய்யணும். தெரியுதா? இப்ப நிமிந்து உக்காரு.
அஞ்சலை நிமிர்ந்து அமர கௌசிக் எழுந்து அப்போதும் வளைத்திருந்த அவள் முதுகை தட்டி நிமிர செய்ய அஞ்சலை சங்கடமாக நெளிந்தாலும் அவனைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை.