Advertisement

ஷர்மிளாவை எதிர்பார்க்கவில்லை, எப்போது அவள் வருவாள், பேசுவாள் என்று தான் அத்தனை தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டிருந்தான். அவளாய் தேடி வராமல் எதையும் நிறுத்துவதாய் இல்லை அவன். ஆனால் அந்த நிமிடம் எதிர்பார்க்கவில்லை.
இவனை இப்படி ஒரு உடையில் பார்த்ததும் முகத்தை திருப்ப..
முதலில் அதிர்ந்தவன், பின் சுவாதீனமாய் “உள்ளே வா” என்று சொல்லி அவனின் ரூமின் உள் சென்று விட்டான்..
பின் பல் துலக்கி முகம் கழுவி ஒரு டி ஷர்ட் அணிந்து வெளியே வந்தவன் “என்ன சாப்பிடற காஃபி போடட்டுமா?” என்றான்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என்றாள் முறுக்கியவளாக.
“பரவாயில்லை, முதல் தடவை நான் இருக்கிற இடத்துக்கு என்னை தேடி வந்திருக்க, லெட்ஸ் செலப்ரேட் வித் அ காஃபி” என்று இலகுவாய் ஒரு சிறு புன்னகையோடு சொல்லி சென்றான்.
“இந்த வில்லன் கிட்ட நான் சண்டை போட வந்தா, இவன் என்ன ஹீரோ எக்ஸ்ப்ரஷன் கொடுக்கிறான்” என்று நினைத்தபடி வீட்டை பார்வையால் அளக்க வீடு சுத்தமாய் இருந்தது.
கீழே இவன் படுத்திருந்த தலையணை மட்டும் அனாதையாய் கிடக்க, எட்டி அதை ஒரு உதை விட்டாள். என்னவோ அவனையே உதைத்து விட்ட திருப்தி.
பத்து நிமிடம் கழித்து காஃபியுடன் மெதுவாய் ஆடி அசைந்து வந்தான்.
“ஒரு காஃபி போட இவ்வளவு நேரமா?” என சிடுசிடுத்தவளிடம், 
“ஹ, ஹ, நானாவது லேட் பண்றேன். உனக்கு போடவாவது தெரியுமா, முதல்ல பாலை காய்ச்சணும், அதுக்கே டைம் ஆகும்.. பின்ன அதை டம்ளர்ல ஊத்தணும்” என்று பாடம் எடுக்க ஆரம்பிக்க,
“எனக்கு உன்கிட்ட பேசணும்” என்றாள்.
“பேசு, பேசு, நீ என்ன பேசினாலும், எவ்வளவு பேசினாலும் கேட்பேன், இன்ஃபாக்ட் நீ பேசறதுக்காக தானே இத்தனையும் செய்யறேன், நீ எப்போ வருவேன்னு காத்துக்கிட்டே இருந்தேன். யு மேட் மை டே” என்று அவளிடம் ஒரு காஃபி கப்பை நீட்டிக் கொண்டே சொல்ல,
இவனின் இந்த பேச்சு, இந்த பரிமாணம் எல்லாம் புதிது.
அவளுக்கு கொடுத்து விட்டு அவன் நன்றாய் சாய்த்து அமர்ந்து கால் மேல் கால் போட்டு தோரணையாய் அமர்ந்து காஃபி குடிக்க ஆரம்பிக்க,
அதன் பாவனையில் அவனை சுவாரசியமாய் தான் பார்த்தாள். கூடவே எப்போதும் நினைக்கும் அவனின் மஞ்சபையோடு வந்த தோற்றமும் இப்போதையை தோற்றமும் ஒரு ஒப்பீடு.
“நீ எப்படி இப்படி ஒரு ஸ்லேங் பேச ஆரம்பிச்ச, இங்க்லீஷ் எல்லாம் சரளமா வருது”
“உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணின உடனேயே, நீ என்கிட்டே எதை எதை குறைவா நினைப்பியோ அதை வளர்த்துக்கணும்னு நினைச்சேன். எனக்கு இங்கிலீஷ் அவ்வளவா பேச வராதுன்னு நீ நினைச்சது எனக்கு தெரியும்” 
அதை சொன்னதில்லை என்றாலும் அவள் நினைத்திருக்கிறாள், ஆச்சரியமாய் அவனை பார்க்க, அதை புரிந்தவன்,
“சில சமயம் நீ நினைக்கிறதை என்னால உணர முடியும். ட்ரஸ்ட் மீ, நாம ரெண்டு பேரும் ரொம்ப நல்லா மேட்ச் ஆவோம்”  
எப்படி இப்படி பேசக் கற்றுக் கொண்டான் என்று சுவாரசியமாய் அவனை பார்க்க, “என்ன என்னை சைட் அடிக்கிறியா?”  
“சைட்டா, அதுவும் உன்னையா?” என்று ஷர்மி நக்கலாய் சொல்ல,
“இந்த உன்னோட பேச்சு தான் உன்னை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. உன்னையாவது இங்க நிறுத்தியிருக்கு, உங்கப்பாவை எங்க நிறுத்துமோ தெரியாது” என்றவனின் முகம் லகுதன்மையை தொலைத்திருந்தது.
“இப்போ என்ன பண்ணனும்? நான் சாரி கேட்டு இனி இப்படி பேசலைன்னா எல்லாம் சரி பண்ணிடுவியா” என்றாள் உடனே.
“உன்னோட சாரி எல்லாம் வேண்டாம், என்னை கல்யாணம் பண்ணிக்கோ, எல்லாம் எல்லாம் நிமிஷத்துல சரி பண்ணிடறேன்” என்றான் நேரடியாக.
“நீ ஏன் இப்படி எப்பவும் பேசிட்டே இருக்க, நமக்குள்ள சரி வராது, நீ என்னை அட்ராக்ட் பண்ணலை, அண்ட் நீ எங்க வீட்டுக்கு வேலைக்கு வந்தது தான் என் மனசுல நிக்குது, வேலைக்காரன்னு பதிஞ்சு போயிட்ட.  கல்யாணம் வேற இல்லையா. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஹஸ்பன்ட் தான் வேணும். மீறி நீ என் வாழ்க்கைல வந்தாலும், நான் ஏதாவது பேசலாம். வாழ்க்கை முறை வித்தியாசங்கள் வரும்”  
“ஒன்னு சொல்லட்டுமா?” என்றான்.
“என்ன?” என்றவளிடம்.
“உனக்கெல்லாம் சத்தியமா யாரையும் பிடிக்காது. ரொம்ப கர்வமாவே சொல்றேன். உனக்கு என்னையே பிடிக்கலை, அப்புறம் யாரை பிடிக்கும். சும்மா பிடிச்சவன் வரணும்னு காத்திருந்தா நீ கிழவி தான் ஆவ. உனக்கு எப்படியோ எனக்கு முப்பது வயசாகப் போகுது. சீக்கிரம் லைஃப்ல செட்டில் ஆகணும்”
“உன்னை கல்யாணம் பண்ணனும்னு மனசுல ஓடிட்டே இருக்கு, அப்போ என்னால இன்னும் சிறப்பா எதுவும் செய்ய முடியலை”
“ஆனா எனக்கு உன்னை பிடிக்கலை, எங்கப்பா என்னவோ உன்னால தான் கெட்டுப் போயிட்ட ஃபீல், எல்லாம் எல்லாம் கூட தள்ளி வெச்சிடுவேன் ஆனா இதை என்னால தள்ள முடியலை” என்றாள் அவளுமே நேரடியாக.
“உங்கப்பா என்ன பொண்ணா நான் அவரை கெடுக்க” என்றான் சுள்ளென்று.
“என்ன பேச்சு இது?” என்று ஷர்மி முகம் சுளிக்க..
“நான் உன்கிட்ட பொறுமையா தான் பேச நினைக்கிறேன், நீ ரொம்ப அபாண்டமா என் மேல பழி போடற” என்று முகத்தை திருப்பி கொண்டவன்,
“இப்போ எனக்கு பேசற மூட் இல்லை, நாளைக்கு பேசலாம், கிளம்பிடு” என்றவன், இவளின் பதிலை கூட எதிர்பார்க்காமல் உள்ளே சென்று குளிக்க கதவடைத்துக் கொண்டான்.
முகத்தில் அறைந்தது போல உணர்ந்தவள், வந்த கோபத்தில் அவன் உறங்கிய தலையணையை இரண்டு மிதி மிதித்தாள். அப்போதும் கோபம் அடங்காமல் சமையலறை சென்று கத்தியை எடுத்து வந்து அதனை கிழித்து உள்ளிருந்த பஞ்சை பறக்க விட்டாள்.
அதன் பிறகே சற்று நிம்மதியாக கீழே இறங்கி சென்று விட்டாள்.
அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கே அவளின் மொபைல் ஒலித்தது தூக்க கலக்கத்தில் எடுத்து காதில் வைக்க…          
“நேத்து எனக்கு வேலையிருந்தது, வீட்டுக்கு வரவும் லேட் ஆகிடுச்சு, அதுதான் உன்னை அப்படியே விட்டுடேன். இப்போ நீ என்ன பண்ற? சீக்கிரமா வந்து, நேத்து நீ பறக்க விட்டியே பஞ்சு, அதையெல்லாம் சுத்தம் செய்யற. இல்லை இதுவரைக்கும் உங்கப்பா ஃபாக்டரி பேமென்ட்ல மட்டும் தான் கை வெச்சேன். ப்ராடக்ட் க்வாலிட்டில கை வெச்சேன், சர்வ நாசம் தான். திரும்ப நானே நினைச்சா கூட சரி பண்ண முடியாது”
“உங்கப்பா எப்போவும் எழவே முடியாது, பாவம் இப்போ தான் இளமையா ஒரு பொண்ணை வேற கல்யாணம் பண்ணி இருக்கார்.. நொடிஞ்சதுல உடம்பு கெட்டு அதோட வாழ்க்கையை பாழாக்கிடப் போகுது. அப்புறம் அதோட முழு கிரெடிட்டும் உனக்கு தான் சேரணும்” என்றான் அசராமல்.
“வந்து சுத்தம் பண்ற, நீதான் வரணும்” என்றான் அதிகாரமாக. கூடவே அந்த குரலில் ஒலித்த கடுமை, இத்தனை நாள் ஷர்மிக்கு இருந்த அலட்சியத்தை எல்லாம் போக்கி ஒரு பயத்தை கொடுத்தது.
“என்ன வருவியா? மாட்டியா? இல்லை உங்கப்பா எப்போவும் சொல்ற உங்க பரம்பரை தொழில், அதை நீ பறக்க விட்ட பஞ்சு மாதிரி பஞ்சு பஞ்சா பறக்க விடட்டுமா” என்றான்.
அவள் அழும் நேரங்கள் மிக மிக சொற்பம்.. அழுகை தொண்டையை அடைக்க ஒரு பதட்டத்தை உணர்ந்தாள்.
“எனக்கு இருந்து கோபத்துக்கு நைட்டே உன்னை டிஸ்டர்ப் பண்ணியிருப்பேன், என்ன பண்றது நாலு பொண்ணுங்களோட பொறந்து தொலைச்சிட்டேன். நாளைக்கு நமக்கே ஒரு பொண்ணு பொறக்கலாம். நான் தெரியாம செய்யற ஒரு செய்கை பிற்காலத்துல கூட யாரையும் பாதிக்கறதை நான் விரும்பலை.. ஏற்கனவே கொஞ்சம் அந்த மாதிரி செஞ்சுட்டேன். அதையே எங்க எப்போ தொலைப்பேன் தெரியலை” என்றான் உணர்ந்து.
என்னவோ அந்த குரல் ஒரு பயத்தை கொடுத்தது..
“வந்து சுத்தம் பண்ணு” என்று கைபேசியை அப்படியே வைத்து விட்டான்.
ஆனால் ஷர்மிளா போகவேயில்லை!          
             
        
                                           
  

Advertisement