Advertisement

அத்தியாயம் ஒன்பது :
இந்த ஸ்தம்பிப்பும் அதிர்ச்சியும் ஆறு மாதமாய் தொடர்ந்தன. என்ன செய்வார்கள், அவனின் தொடர் தொல்லைகளில் இருந்து மீள முடியவில்லை.  
தீ விபத்து மாதிரி பின் எதுவும் செய்யவில்லை, வேறொன்றுமில்லை, மிரட்ட என்றாலும் உழைப்புகள் வீணாவதில் அவனுக்கு விருப்பமில்லை
ஆனால் சரக்கு கொடுத்த இடத்தில் வசூலாகவில்லை, இதை என்னவென்று சொல்ல முடியும். உதவிக்கு அவனிடம் தான் சென்று நிற்க வேண்டும்.
கேசவனுக்கு அதில் துளியும் விருப்பமில்லை தொழிலே முடங்கி போனாலும் அவருக்கு அவனிடம் சென்று நிற்க விருப்பமில்லை.
சந்தோஷ் “அப்பா நான் போய் பேசறேன்” என்று சொன்னதற்கும் மறுத்து விட்டார்.
தொழிலில் சிக்கல் கொடுக்கிறான் என்று ஷர்மிக்கும் தெரியும். அவளின் நோக்கு என்னவாய் இருந்தது என்றால் தொழிலில் சிக்கல் வருவது சகஜம் தானே, நம் தொழில் நம் கையில் தானே இருக்க வேண்டும், விட்டது யார் தவறு, இது அவர்களின் தவறு. இனியாவது கற்று கொள்ளட்டும் என்று.
ஆனால் ரவீந்திரன் என்னும் ராட்சஷனை மீறி கற்றுக் கொள்வது சற்று சிரமம். அது அவளுக்கு புரியவில்லை.
அவனுடைய தொழில் திறமை இயல்பாகவே அவனிடம் இருந்தது. அது மிகவும் அபாரமானது. எல்லோருக்கும் அது அமையாது. தொழில்களில் நிச்சயம் அவன் ஆளப் பிறந்தவன். அபாரமானதை, அபாயகரமாக அவர்கள் மீது செலுத்திக் கொண்டிருந்தான்.       
அன்று மாலை ஷர்மி அவளின் ரூமில் இருந்த போது, கேசவன் உள்ளே வந்தார். அவரின் முகம் அவ்வளவு சஞ்சலத்தில் இருக்க..
“என்ன?” என்பதாய் பார்த்து இருந்தாள்.. “ஒரு ப்ராபர்ட்டி ஒன்னு விக்கணும், அதுக்கு உன் கையெழுத்து வேணும்” என்றார்.
“என்ன சொத்து? ஏன் விக்கறோம்?”  
“இந்த மாசம் வொர்க்கர்ஸ்க்கு சம்பளம் குடுக்க கூட நம்ம கிட்ட பணமில்லை”
“நகை வெச்சு சமாளிக்கலாமே”  
“போன மாசம் அதையும் பண்ணிட்டோம்”
“என் நகையெல்லாம் என்கிட்டே தானே இருக்கு”
“நான் வெச்சது லக்ஷ்மி நகையையும், விசாலிதையும், உன் நகை உனக்கு கல்யாணம் கூடி வந்தா தேவையாயிருக்கும்”
“அதை அப்போ பார்த்துக்கலாம், இப்போ என்னதை வெச்சிக்கலாம், நாளைக்கு பேங்க் போய் எடுத்துட்டு வர்றேன்” என்று முடித்து விட்டாள். அவளுக்கு லாக்கர் தனியாய் இருந்தது.  
“அப்போவும் அடுத்த மாசம் கஷ்டம்” என்றார். மிகவும் தொய்ந்து. “இந்த சொத்தை வித்தா கொஞ்சம் மாசம் சமாளிக்கலாம். அதுவுமில்லாம விசாலியோட சேவிங்க்ஸ் அண்ட் நகையும் எடுத்துட்டேன், அதை திருப்பி குடுத்துட்டா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும். இத்தனை வயசு வரை செலவு செஞ்சு பழக்கப் பட்டுட்டேன், யார் கிட்டயும் வாங்கறது மனசுக்கு கஷ்டமா இருக்கு” என்றார்.
இதெல்லாம் அவளுக்கு தெரியாது.. “சோ, வீட்ல நடக்கறது எதுவும் தெரியாம என்னை ஒதுக்கி வெச்சிருகீங்க”  
“நான் ஒதுக்கலை நீ தான் ஒதுங்கிட்ட, அதனால உன்கிட்ட எனக்கு பேச முடியலை, சொல்ல முடியலை, எல்லாம் சந்தோஷ்க்கு தெரியும்” என்றார்.
அந்த நிமிடம் அவளுக்கு தோன்றியது “பிடிச்சது கல்யாணம் பண்ணிக்கிட்டார், விட்டு தள்ளு, இப்போ என்ன அங்க இங்க சுத்தாம வீட்ல தானே தங்கறார்” என்று தோன்ற,
“இப்போதைக்கு நகையை ப்ளெட்ஜ் பண்ணலாம், பின்ன பார்த்துக்கலாம். அவங்களுக்கு பணமா நகை கொடுத்துக்கலாம், இல்லை அந்த இடத்தை விக்கறதுக்கு பதிலா அதை அவங்க பேர்ல மாத்திடலாம்” என விசாலிக்கு கொடுக்க வேண்டியதை சொல்ல,  
“ம்கூம், அது முடியாது, அது உங்க ரெண்டு பேருக்கும்ன்னு நான் ரொம்ப முன்ன வாங்கினது. அதோட மதிப்பு நான் விசாலிகிட்ட இருந்து வாங்கின நகை தொகையை விட பல மடங்கு அதிகம்” என்றார்.
“உங்களையே கொடுத்துட்டீங்க அப்புறம் இடம் என்ன?” என்று ஷர்மிளா பேச,  
“என்னை தான் கொடுத்திருக்கேன், சந்தோஷ் ஷர்மிளாவோட அப்பாவை இல்லை” என்று உணர்ந்து சொல்ல..
“அச்சச்சோ, இவரோட ஃபீலிங்க்ஸ்க்கு அளவில்லை போல” என்று நினைத்தவள் ஒன்றும் பேசிக் கொள்ளவில்ல்லை.
“பார்த்துக்கலாம் பா” என்று மட்டும் சொல்லி அவரை அனுப்பிவிட்டவள்,
இரவு சந்தோஷை பிடித்து கொண்டாள். “அண்ணா டேய், என்னடா நடக்குது?”
“தெரியலை, ரவி ரொம்ப தொந்தரவு கொடுக்கிறான். ஒத்தை பைசா வசூல் கிடையாது. சரக்கு அனுப்பறதை நிறுத்தினா மார்கெட் போய்டும், என்ன பண்ணண்ணு தெரியலை, அப்பா ரொம்ப மனசு விடறார். அவன் கிட்ட பேசறேன்னு சொன்னா, அப்பா ஒத்துக்கவே மாட்டேங்கறாங்க”
“அவன் நாம பேசறவரை நிறுத்த மாட்டான் சந்தோஷ், அப்பா கிட்ட சொல்லிக்க வேண்டாம் நாம் பேசலாம்”
“இல்லை, அப்பாவை அது ரொம்ப ஹர்ட் பண்ணும், நான் பண்ண மாட்டேன்”  
“தோடா, என்னடா அண்ணா நீ இவ்வளவு நல்லவனா மாறிட்ட”
“என்ன பண்ண? மொத்தமும் நீ பண்ற, இதுல நான் வேற எதுக்கு? போடி” என்றான்.
அவனின் மனநிலையும் சரியில்லை என்று உணர்ந்தாள். சில நாட்களாகவே கவனித்து தான் இருந்தாள். வீட்டினர் அத்தனை பேரின் முகமுமே ஒரு கவலையை காண்பித்து கொண்டிருந்தது. சந்தோஷ் இன்னுமே பொலிவிழந்து காணப் பட்டான். 
“நிஜமாவே நானும் அப்பாவும் என்னென்னவோ பண்றோம், அவனை மீறி எதுவும் பண்ண முடியலை. ஹி இஸ் லைக் அ மான்ஸ்டர்”
“நான் அப்போவே சொன்னேன், அவன் மொத்தமா நம்மை சுருட்டிடுவான்னு, நீங்க கேட்கலை”
“ப்ச், இப்போ அதை பத்தி பேசி என்னாகப் போகுது. இதுல இருந்து வெளில வருவோமா இல்லை நம்மை மொத்தமா முடிக்க போறானா, தெரியலை” என்ற சந்தோஷின் குரலில் அப்படி ஒரு வருத்தமும் வாழ்க்கையை பற்றிய பயமும் இருந்தது.
“விடு சந்தோஷ், அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது , ஏதோ கொஞ்சம் நாள் கோபம், அப்படி பண்ணுவான், பின்ன விட்டுடுவான்” என்றாள்.
“ஆறு மாசம் விடாதவன், இனிமேயா விடுவான். அதுவும் ஏற்கனவே அந்த முறுக்கு கம்பி பாக்டரி மொத்தமா போச்சு, இப்போ இதுவும் போகப் போகுது”
“எதுவும் போகாது சரியாகிடும்” என்றவள், அவனின் மனநிலையை மாற்ற வேண்டி.. “என்ன பண்றா உன் நிஷா” என,
“நிஷாவா அதெல்லாம் எப்போவே பிரேக் அப் ஆகிடுச்சு, இப்போ கேட்கற நீ” என்றான் கடுப்பாக.
“நீ என்கிட்டே சொல்லவேயில்லை”  
“நீ என்கிட்டே பேசவேயில்லை” என்றான் அவளை போல.
“சரி விடு, எனக்கு வீட்ல ரொம்ப போர் அடிக்குது, வேலைக்கு போறேன்னு சொன்னேன் அப்பா வேண்டாம் சொல்லிட்டார், நம்ம ஆபிஸ் வர சொன்னார், எனக்கு பிடிக்கலை, படிப்பை முடிச்சு ஆறு மாசம் ஆகிடுச்சு. வீட்ல சாப்பிட்டு, தூங்கி, சாப்பிட்டு, தூங்கி, குண்டாகிட்டேன்” என்று கவலை பட்டாள்.
குண்டெல்லாம் ஆகவில்லை, ஆனால் உடல் உழைப்பின்றி உடம்பு சற்று பூசி விட்டது, அதுதான் அவளுக்கு அழகாக இருந்தது.
“வாக்கிங் போ” என்று சந்தோஷ் சொல்ல,
“ம்ம், சரி” என்பதாய் தலையசைத்தவள், அடுத்த நாள் காலையில் வாக்கிங் கிளம்பிவிட்டாள் ரவியின் வீட்டை நோக்கி..
ஆம்! வாக்கிங் போகிறேன் பேர்வழி என்று சத்தமில்லாமல் அவனுடன் பேச்சு வார்த்தை நடத்த கிளம்பி விட்டாள்.
ஒரு ட்ராக் பேன்ட் டீ ஷர்ட் என்று போய் அவனின் வீட்டு முன் பெல் அழுத்த…
அவனின் வீட்டிற்கு யார் வருவர் அவனே தனியன், ஊருக்கும் அவனாய் சென்று வருவது தான். ஆம்! அவன் தொழிலில் கொடுக்கும் தொல்லைகள் சொல்லி, பின்பு முறுக்கு கம்பி பாக்டரியில் தங்களின் பங்கை ஏமாற்றி விட்டதை சொல்லி, அவனின் பெற்றோரிடம் கேசவன் நியாயம் கேட்க,
அவர்களும் “என்ன வேலை இது?” என்று கேட்க.. சீதா ஒரு படி மேலே சென்று அவனை கண்டபடி திட்ட வேறு செய்ய,
“நான் அப்படித்தான்! பெண் கேளுங்கள் என்று சொன்னேன் கேட்கவில்லை. இதை மட்டும் எதற்கு என்னிடம் வந்து சொல்கிறீர்கள். நீங்கள் தானே அவர்கள் உயரத்தில் இருக்கிறார்கள், நமக்கு சமமில்லை என்று சொன்னீர்கள். இதோ அவர்களை கீழிறக்கி விடுகிறேன். உங்களுக்கு சமமாக்குகிறேன்” என்று சொல்பவனிடம் என்ன சொல்ல முடியும்.
போராடிப் பார்த்து பின் மகனோடு பேச்சு வார்த்தையை நிறுத்த, அவன் அதற்கெல்லாம் கவலை படவேயில்லை.
“உன்னிடம் பணம் வாங்க மாட்டோம்” என்று மிரட்ட, “சரி, வாங்காதீர்கள்” என்று விட்டான்.
இதோ மகன் சொகுசாய் இருக்க, அவர்களுக்கு கஷ்ட ஜீவனம் தான்.  
ரவியின் வீட்டு வேலைக்கு ஆள் எல்லாம் இல்லை, தனியாய் இருப்பதால் ஆள் வைத்துக் கொள்ளவில்லை.. அவன் இன்னும் எழவே இல்லை.. இவள் பெல் அடித்துக் கொண்டே நிற்க,
கட்டிலில் படுக்காமல் டீவீ பார்த்துக் கொண்டே வெறும் தரையில் உருண்டிருந்தான். அப்படியே உறங்கியும் இருந்தான். ஒரு முட்டி தொடும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வெற்றுடம்பில்..
பெல் விடாமல் அடிக்கவும், அப்படியே வந்து கதவை திறந்தான்..

Advertisement