Advertisement

அத்தியாயம் ஏழு :
திருமணம் முடிந்து மாப்பிள்ளை பெண் வீடு போக வேண்டும் என்று சொல்லி விட.. ஒற்றையாய் சந்தோஷ் அல்லாடிக் கொண்டிருந்தான்.
அவர்களின் சொந்தங்கள் இருந்தாலும் அவனுக்கு எதை யாரிடம் சொல்ல வேண்டும் என்று கூட தெரியவில்லை, கும்பகோணம் பக்கம் இருந்து வந்த அவர்களின் சொந்தங்களுடன் சீதா இயல்பாய் பொருந்தி போனார், அக்கா என்றோ அண்ணி என்றோ சொல்லிக் கொண்டு..
ரவிக்கு நன்றாய் தெரியும் அவனின் அம்மாவை… அவரிருக்கும் இடத்தில் பேச்சிற்கு பஞ்சமே இருக்காது, செயலும் அப்படியே.. அவனின் புத்திசாலித்தனம், அவனின் அம்மாவிடம் இருந்து கூட வந்திருக்கலாம். என்ன உயர்வதற்கு அவனுக்கு வாய்ப்பு கிடைத்தது, ஒரு சாதாரண குடும்ப பாரங்களை சுமக்கும் கூட்டு குடும்பத்தில் வசிக்கும் அவனின் அம்மாவிற்கு எந்த வாய்ப்பும் கிட்டாமல் போயிருக்கும் அவ்வளவே! அவரும் வாய்ப்பை உருவாக்க நினைத்தே இருந்திருக்க மாட்டார்!  
சந்தோஷ் தடுமாறுவதை ரவி கவனித்தவன் “என்ன எதாவது உதவி வேணுமா?” என்று சென்று அவனாய் கேட்க,
“நான் என்ன செய்யணும்னு தெரியலை” என்றான்.
“எப்பவும் நம்ம முடிவுகளை நாம தான் எடுக்கணும், அப்பா சொல்றதையே கேட்டுட்டு இருந்தா இப்படி தான் சுயமா எல்லாம் செய் முடியாது” என்று சொன்னவன்,
“மா” என்று அம்மாவை அருகில் அழைத்து, “என்ன செய்யணும் சந்தோஷ்க்கு தெரியலை” என்றான்.
“என்ன சொன்னாங்க சந்தோஷ்?” என்று அவர் கேட்க,
“மாப்பிள்ளை பொண்ணு வீட்டுக்கு போகணுமாம்” என்று சொல்ல..
“நான் என்ன செய்யணும்” என்றார் அவனிடம்.
“மா, என்ன பண்ணணும்னு தெரியாம தானே உன்கிட்ட கேட்கறோம். அப்புறம் என்ன பண்ணனும்னு அவனையே கேட்டா” என்று ரவி கடிய,
“அப்படி கிடையாதுடா நான் போய் பொண்ணு வீட்டுக்காரங்க கிட்ட பேச முடியுமா? லக்ஷ்மி வீட்டுக்காரருக்கு பிடிக்குமோ பிடிக்காதோ?” என்று பேசினார்.
“மா, உங்களை போய் சொன்னேன் பாருங்க” என்று அவரிடம் நிஜமாய் வள்ளென்று விழுந்தான்.
“எதுக்குடா இவ்வளவு கோபம்?”
“பின்ன இப்போ தான் அவர் ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டுறார். நீங்க அவரை லக்ஷ்மி வீட்டுக்காரர்னு சொல்வீங்களா? சந்தோஷோட அப்பான்னாவது சொல்லுங்க” என்று பேச,
“ம்ம், இது சரி, நான் பேசட்டுமா”  
“பேசுங்க” என்று சந்தோஷ் பேச,
“ம்ம் சரி” என்று அவர் பெண்ணின் அம்மாவிடம் செல்ல,
ரவி சந்தோஷிடம் “நான் மட்டும் தான் உங்க வீட்ல வேலை செஞ்சேன், அதுவும் இப்போ கிடையாது. அதனால் எங்கம்மாவை இப்படி எல்லாம் பேசக் கூடாது. அத்தைன்னு மரியாதையா பேசினா பேசு, இல்லை அவங்களை கிளம்ப சொல்றேன்” என்றான் கடுமையான குரலில்.
“சாரி, சாரி” என்றவன், “சொல்லக் கூடாதுன்னு இல்லை, பழகலை பழக்கிக்கறேன்” என்று சொல்லி அதை செயலிலும் காட்ட, பின்பு எல்லாவற்றையும் சீதா பார்த்துக் கொண்டார். முக்கியமாய் ஒதுங்கி நிற்கும் ஷர்மிளாவை யாரும் தொந்தரவு செய்யாமல். இதற்கு ரவீந்திரன் எதுவும் சொல்லவில்லை தானாய் செய்தார்.
பெண் வீட்டில் விசாலியின் அம்மா ஷர்மியிடம் பேச போய் நிற்க, அவளின் முகம் விருப்பமின்மையை காட்ட.. அவளின் அருகில் சென்று நின்றவர், “சொல்லுங்க” என,
“என்ன” என்பதாய் விசாலியின் அம்மா பார்க்க,
“இல்லை, பொண்ணு கிட்ட ஏதோ பேசவந்தீங்களே என்ன? நான் அவளோட அத்தை என்கிட்டே பேசுங்க” என்றார் தன்மையாகவே.
“இல்லை, அவ கல்யாணம்” என்று அவர் ஆரம்பிக்க,
“இப்ப உங்க பொண்ணு கல்யாணம் முடிஞ்சது, அதை போய் பாருங்க” என்று அவரை தன்மையாகவே பேசி அனுப்ப..  
“தன்னுடைய நிலை இப்படியா ஆகவேண்டும்” என்று ஷர்மிக்கு கண்ணை கரித்தது.
இமை தட்டி அதனை கட்டுக்குள் கொண்டு வர, ரவி தூரத்தில் இருந்து கவனித்தவன் “அம்மா தான் எதுவும் சொல்லிவிட்டாரோ, அதனால் அழுகிறாளோ?” என்று நினைத்து அருகில் வந்தான். சீதாவிற்கு வாய் சற்று அதிகமே. உள்ளதை உள்ளபடி அப்படியே பேசுவார்.    
“என்னம்மா சொன்னீங்க ஷர்மியை, அழறா?” என்று கடுமையாய் பேச,
“டேய், நான் என்ன சொன்னேன்? நீ பார்த்தியா, பெருசா வந்துட்டான். உன் வேலையை பார்த்துட்டு போடா” என்று சீதா யாருக்கும் தெரியாமல் ரவியை அதட்ட,
ஷர்மியின் முகத்தில் சட்டென்று புன்னகை.. இவனை திட்டவும் ஆளா என்பது போல, ரவியை திட்டும் அவனின் அம்மாவை ஷர்மிக்கு அந்த நொடி மிகவும் பிடித்து விட்டது.
அதற்குள் சந்தோஷ் வந்தான்.. “இப்போ அப்பா அங்க போறார்” என,
“விருந்து எங்கே?” என்றவரிடம் பக்கம் இருந்த ஹோட்டலை சொல்ல,
“பொண்ணு வீட்டுக்காரங்க எல்லார் கிட்டயும் விருந்து சாப்பிட்டிட்டு போக சொல்லணும், அப்புறம் நம்ம சொந்தம் கூட்டிட்டு வீட்டுக்கு போகலாம்” என்றவர் சந்தோஷுடன் அவரும் சென்று சொல்ல,
ஷர்மிளா எல்லாவற்றையும் மௌனமாய் பார்த்து நின்றாள்.
ரவி அவளை மட்டுமே பார்த்து நிற்க, எல்லோர் கவனத்திலும் அது பதிந்தது. சீதா கவனிக்கவில்லை, ஆனால் ரவியின் அப்பா கூட கவனித்தார், “இவன் ஏன் இப்படி பார்க்கிறான் அந்த பொண்ணை” என்பது போல.
லேசு பாசாய் ரவிக்கும் ஷர்மிக்கும் ஏதோ ஒரு பேச்சு தொக்கி நிற்க, அந்த பேச்சு இன்னும் வலுப்பட்டது..  
கேசவன் பெண் வீட்டிற்கு சென்று விட, உறவுகள் வந்தவர்களை வீட்டிற்கு அழைத்து, மதிய உணவும் ஏற்பாடு செய்து, மாலை அவர்களை காஃபி பலகாரம் கொடுத்து, பின் அவர்களை வழியனுப்பி” என்று வீட்டு ஆளாய் சீதா எல்லாம் பார்த்துக் கொண்டார்.
சொந்தங்கள் யாருடனும் அதிகம் பழகியிராத சந்தோஷும் ஷர்மியும் சட்டென்று அவருடன் ஒட்டிக் கொண்டனர்.  
“அத்தை” என்று ஷர்மியும், சந்தோஷும் கூப்பிடுவதே அவ்வளவு அழகாய் தான் இருந்தது.
ரவி திருமணம் முடிந்ததும் அப்படியே சென்றிருந்தான். இவர்கள் வீட்டிற்கு எல்லாம் வரவில்லை. இரவு அம்மாவிற்கு அழைத்தவன் “என்ன வீட்டுக்கு வரலையா?” என்று கேட்க,
“இன்னும் ஒன்னு ரெண்டு பேர் இருக்காங்கடா, அவங்க போனதும் வர்றேன், இங்க இருந்து நாலு எட்டு தானே” என்று ரவியிடம் பேசினார்.
ஆம்! அப்படி பேச காரணம் ஷர்மியே தான், மாலை இவர்கள் கிளம்ப, இன்னும் அந்த வரன் கொண்டு வந்த பெரியப்பா எல்லாம் இருக்க இவர்கள் சென்று விட்டால் அவர் எதுவும் தன்னிடம் பேசுவாரோ என்று பயந்தே “நீங்க இருங்க அத்தை” என்று சொன்னவள்,
அவர்கள் இரவு உணவு உண்டு ரயிலுக்கு கிளம்பிய பிறகே சீதாவை விட்டாள். கேசவன் நாளை தான் வீடு வருவதாக இருந்தது.
சீதாவும் வாசனும் ரோடில் நடக்க, “சீதா நம்ம ரவி அந்த பொண்ணை பார்க்கிறாண்டி”
“சும்மா ஏதாவது உளறாதீங்க, என் பையன் அப்படி பொண்ணுங்களை தப்பா பார்க்க மாட்டான்” என்று சண்டைக்கு கிளம்ப..
“யாருடி இவ? நான் தப்பா பார்த்தான்னா சொன்னேன், ஆர்வமா பார்க்கறான்”  
சீதாவின் முகம் யோசனைக்கு போனது, “அந்த பொண்ணும் இஷ்டப் படுதோ, உன்கிட்ட ஒட்டிக்கிச்சே” என்று வாசன் கேட்க,
“சே, சே, இல்லை, எனக்கு நல்லா தெரியும். நான் காலையில போய் அவ கைப்பிடிச்சப்போ தானா தள்ளி தான் நின்னா. நம்ம பையனை இல்லை யாரையும் அவ பார்ப்பாளா தெரியலை, எனக்கு தோணுது!”
“ஆனா இவன் பார்க்கக் கூடாது இல்லையா? வேலை செய்ய வந்துட்டு வீட்டு பொண்ணை பார்க்கறது தப்பு” என்றார்.
அதற்குள் வீடு வந்திருக்க, என்னவோ அடுப்படியில் ரவி செய்து கொண்டிருக்க, “நாங்க சாப்பிட்டோம்டா” என்று சீதா சொல்ல,
“நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரி ஆகிடுமா?” என்று ரவி பேச,
அப்போது தான் பார்த்தார் வெங்காயம் அரிந்து கொண்டிருந்தான், பக்கத்தில் ரவையும் இருக்க, உப்புமா செய்ய போகிறான் என்று புரிந்து,
“தள்ளுடா” என்று சொல்லி அவர் செய்ய,
சமையல் மேடையில் ஏறி அமர்ந்தவன், “நீதான் இங்க வரமாட்ட, பையன் சாப்பாட்டுக்கு கஷ்டப்படறானே வயசும் ஆகுதே, எத்தனை நாள் அவனை தனியா விடறது, சீக்கிரம் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி வைப்போம்னு தோணுதா உனக்கு” என்றான்.
இவன் என்ன இப்படி பேசுகிறான் இவனின் அப்பா சொன்னது உண்மையோ என்று மனதில் தோன்றிய போதும்..
“உன் தங்கைக்கு முடிச்சுட்டு தாண்டா உனக்கு” என்று சொன்னவர் கூடவே “கல்யாணமானா பொண்ணு சமைச்சு போடும்னு உனக்கு எண்ணம் வேற இருக்கா” என்றார் கிண்டலாக.
“சரி, விடு, சமைக்க வேண்டாம் ஒரு பேச்சு துணைக்காவது ஆள் வேணும் தானே”  
“பேச்சு துணைக்கு கல்யாணம் பண்ணனுமா என்ன? டெய்லி என்கிட்டே போன்ல பேசு”
“அம்மா” என்று கத்த,
“உனக்கு என்னதாண்டா வேணும்?” என்றார் நேரடியாக.
“ஷர்மிளாவை பொண்ணு கேளுங்க” என்றான் அவனுமே நேரடியாக.
“என்னது?” என்று அதிர்ச்சியாகி விட்டார் சீதா.
“டேய், என்ன பேசற நீ”  
“என்ன பேசறேன்? பொண்ணு கேளுங்கம்மா”  
“அதெல்லாம் முடியாது, அவங்க எங்க? நாம எங்க? வேலைக்கு இருந்துட்டு பொண்ணு கேட்கறது எல்லாம் தப்பு , நம்ம கௌசியை நம்ம கிட்ட வேலை பார்க்க வந்தவன் பொண்ணு கேட்டா எப்படி நினைப்போம்”
“மா, இப்போ அங்க நான் வேலையில் இல்லை, தனியா ஒரு கம்பனி வெச்சிருக்கேன் அவங்களோட சேர்ந்து” என்றான்.
“இது எப்போ? ஏன் எங்க கிட்ட சொல்லலை?”
“எல்லாம் சரி வரட்டும் அப்புறம் சொல்லிக்கலாம் இருந்தேன்”
“எதுவா இருந்தாலும், பொண்ணு கேட்கறது சரி வராது” என்று சீதா சொல்ல,
“ஏன்? ஏன்?” என்றான்.  
“அவங்க குடுப்பாங்கன்னு தோணலை, அதையும் விட ஷர்மிளாக்கு பிடிக்கும்னு தோணலை.. அவ தள்ளி தான் நிக்கறா.. நேத்து நான் கையை பிடிச்சேன் உருவிக்கிட்டா.. ஏதோ கல்யாண வேலை செய்ய ஆளில்லைன்னு நம்ம கிட்ட நல்லா பேசறாங்க.. கேட்டு குடுக்க மாட்டாங்கன்றப்போ கேட்க முடியாது”
“அதுவுமில்லாம வேலை செய்ய வந்துட்டு பொண்ணு கேட்கறது தப்புடா, இத்தனை நாளா உன்னை வேலைக்காரனா பார்த்தவங்க, எப்படி மாப்பிள்ளையா பார்ப்பாங்க” என்று நிதர்சனத்தை பேச..
“சும்மா சொல்லாதீங்க, அவங்க கொண்டு வர்ற மாப்பிள்ளை எல்லாம் என்னை விட கீழ தான் இருக்காங்க”
அப்போ கூட உன்னை சொல்லலை தானே, இதுலயே தெரியலையா?” என்று உண்மையை பிட்டு பிட்டு வைக்க,
செய்த உப்புமாவை கையில் கூட தொடாமல் சென்று படுத்துக் கொண்டான்.
“ரவி” என்று சீதா எவ்வளவு அழைத்த போதும் கதவு திறக்கவில்லை.
“டேய், இப்போ நீ கதவு திறக்கலை, நீ சாப்பிடலை, நான் ஊருக்கு கிளம்பிடுவேன்”
“இத்தனை நாளா நான் தினமும் சாப்பிடறதை நீ பார்த்துட்டு இருந்தியா என்ன? சும்மா என்னை இப்படி எமோஷனல் ப்ளாக் மெயில் எல்லாம் பண்ணக் கூடாது. கிளம்பறதுன்னா கிளம்பிட்டே இரு, அதுவும் இந்த நேரம் பஸ் ஸ்டாண்ட் இல்லை ரெயில்வே ஸ்டேஷன் போய் உட்கார்ந்து என் மானத்தை வாங்காதீங்க, காலையில கிளம்புங்க” என்று கத்தினான்.
அவனின் அம்மாவும் அப்பாவும் செய்வதறியாது திகைத்தனர்.        
மிகுந்த மனவுளைச்சலில் இருந்தான். “என்னுடைய அம்மாவிற்கே நான் தகுதியானவன் என்று தோன்றவில்லையா” என்ற கோபம் வந்து விட்டது. “எந்த வகையில் நான் குறைந்து விட்டேன்” என்று ஆத்திரம் கிளம்ப, “என் திருமணம் அவளோடு மட்டும் தான்” என்று மீண்டும் மீண்டும் எண்ணத்தை ஸ்திரப் படுத்தினான்.
இதுவரை ஷர்மிளாவை பிடித்திருக்கிறதா இல்லையா என்று தெரியாது. அவளின் பேச்சுக்கள் கொடுத்த வைராக்கியம், பின் அவளுக்கு கொண்டு வரப்படும் மாபிள்ளைகள், தான் கேட்டும் கேசவனும் சந்தோஷும் அதை பற்றி பேசாதது.. என்ன என்னிடம் குறை.. ஏன் இவர்கள் எனக்கு பெண் கொடுக்க மாட்டார்கள், கொடுத்தே ஆகவேண்டும், நடத்தியே ஆகவேண்டும் என்ற ஒரு மன அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்தது.   

Advertisement