Advertisement

“இதென்னடா இப்படி இரு கேள்வி கேட்கறார் இந்த மனுஷன், என் வீட்ல யார் யார் இருக்கான்னு கூட இவருக்கு ஞாபகம் இருக்குமா?” என்ற யோசனை தான் ரவிக்கு.
மூன்று தங்கைகளின் திருமணதிற்கும் அழைத்திருந்தான், ஆனால் கடைசி தங்கை திருமணதிற்கு மட்டும் கேசவன் வந்திருந்தார். அவரும் ஷர்மியையோ சந்தோஷ்சையோ அழைத்து வரவில்லை..    
முதல் தங்கைக்கு திருமணம் செய்த போது லக்ஷ்மி இருந்தார், அவர் மட்டும் வந்திருந்தார், கணவனை பிள்ளைகளை அழைத்து வரவில்லை.. இரண்டாம் தங்கை திருமணதிற்கு சில வாரங்களுக்கு முன் தான் அவர் இறந்திருந்தார்.. மூன்றாம் தங்கை திருமணம் இரண்டு வருடம் முன்பு நடந்த போது தான் வந்திருந்தார், மூகூர்தத்திற்கு மட்டும்!
அதனால் இவனின் அம்மா அப்பா குடும்பம் என்று எதுவும் சந்தோஷிற்கோ ஷர்மிக்கோ தெரியவே தெரியாது!
தெரிந்திருந்தால் உறவினர்களாய் ஒரு நாள் ஒரு பொழுதாவது மனதில் பதிந்திருக்கும், அதுதான் இல்லவே இல்லையே!
“நல்லா இருக்காங்க” என்றான். கூடவே “ஷர்மி இன்னும் படிப்பே முடிக்கலை, கடைசி வருஷத்துல தான் இருக்கா, அதுக்குள்ள என்ன அவசரம் கல்யாணத்துக்கு?”  
“கங்கன பொருத்தம் வந்துடுச்சுன்னு ஜோசியர் சொன்னார்” என்று சந்தோஷ் சொல்ல..
“யாருக்கு அப்பாக்கா பொண்ணுக்கா” என்று தான் கேட்க மனது துடித்தது. கூடவே “இவன் பண்ணினதுக்கு இவன் பொண்ணு என்னை அசிங்கமா பேசிட்டா” என்ற கோபமும் மனதில் நின்றது.  
ஷர்மி அபோது அவளின் அறையில் இருந்து வெளியே வந்தாள்.. நைட்டியில் தான் இருந்தாள். உறங்கி எழுந்திருப்பாள் போல.. முகத்தில் தூக்கத்தின் சாயல் இருக்க, இவனை கவனிக்கவில்லை. ஒரு மாதிரி வெளுத்து இருந்தாள். புஷ்டியாய் இருப்பவள் எடை குறைந்து கன்னம் எல்லாம் ஒட்டி ஏதோ காய்ச்சலில் படுத்து எழுந்த தோற்றத்தோடு இருந்தாள்.
தூக்கதோடே சென்று டைனிங் ஹால் அமர்ந்து, “காஃபி குடுங்க சசிம்மா” என்று சொல்லி அந்த டைனிங் டேபிளில் தலை சாய்த்துக் கொண்டாள்.. 
எப்போதும் அண்ணன் அப்பா என்று யார் இருந்தாலும் அவர்களின் அருகில் தான் அமருவாள். இன்று தனியாய் சென்று அமர்ந்ததே வித்தியாசமாய் பட்டது.
“பையன் வீடு என்ன பண்றாங்க?” என்றான்.
“கும்பகோணம் தான், பெரியப்பா ஜாதகம் கொண்டு வந்தார்” என்று சந்தோஷ் சொன்னான்.
“பெரியப்பா” என்பது கேசவனின் ஒன்று விட்ட அண்ணன்.
“ஓஹ், அதுதான் நமக்கு தெரியவில்லை போல” என்று ரவி நினைத்துக் கொண்டான்.
“கும்பகோணத்தில் யார் வீடு?” என்று கேட்க, அவர்கள் சொல்ல,
“அப்படி ஒன்னும் வசதி இல்லையே, பையனும் சுமார் தான், என்ன வெளிநாட்டுல வேலைல இருக்கான், அது மட்டும் தான். ஷர்மி அப்ராட் போக ஓகே சொல்லிட்டாளா?” என்றான்.
அவளுக்கு வெளிநாடு இஷ்டம் கிடையாது என்பது தெரிந்த விஷயம் .. எப்போதும் சொல்வாள் “நான் இந்தியாவுல தான் இருப்பேன், வேணும்னா டூர் போவேன், ஆனா செட்டில் எல்லாம் ஆகமாட்டேன்” என்று.
“அவ்வளவு நாட்டு பற்றா” என்று சந்தோஷ் கிண்டல் செய்பவனிடம்,
“அங்க வேலை செய்ய ஆள் கிடையாதாமே. எல்லாம் நாம தான் செய்யணுமாமே, எனக்கு வளையாதே, அதுமில்லாம யார் முகத்தையும் பார்க்காம புருஷன் எப்போ வருவான்னு பார்த்து கதவை திறந்து விடறதை மட்டும் வேலையா செய்ய முடியாது” என்று காரணம் அடுக்குவாள்.
“இந்தியாவில் என்ன செய்யறாங்க” என்று சந்தோஷ் கேட்க..
“போடா அண்ணா நீ, என்னை ஃபாரின் அனுப்பிட்டு மொத்த சொத்தும் ஆட்டைய போடுவியா” என்பவளிடம்,
“மொத்த சொத்தும் இப்போவே கூட எடுத்துக்கோ, ஆனா நான் கேட்கிற பணத்தை குடுத்துடு” என்று சந்தோஷ் பேச..
இப்படியாக தான் அவர்களின் பேச்சுக்கள் இருக்கும்.   
அவளிற்கு மெதுவாய் பேசும் பழக்கமே இல்லை. அதனால் அண்ணனும் தங்கையும் என்றோ பேசியது அவனுக்கு நன்கு ஞாபகம் இருந்தது..
“இல்லை இன்னும் அவ கிட்ட பேசலை, அதுதான் வெளிநாடுல இருந்து இங்க வந்தா பிசினெஸ் கொடுத்துடலாம்னு பார்க்கறோம்”  
எல்லாம் சந்தோஷ் மட்டுமே பேசிக் கொண்டு இருந்தான்.. கேசவன் பேசவேயில்லை.
ரவீந்திரன் பேச முடிவெடுத்து பேச ஆரம்பித்தான்.
“அவனுக்கு பிசினெஸ் கொடுக்க ப்ளான் பண்றீங்க சரி, ஆனா அதை அவனுக்கு நடத்தி கொண்டு போகற திறமை இருக்கான்னு தெரிய வேண்டாமா, இன்னொன்னு உங்களுக்கு நான் செய்வேன், எவனுக்காகவாவது நான் ஏன் செய்வேன், எவனோடவாவது சேர்ந்து என்னால வேலை பார்க்க முடியாது, முதல்ல என்னோட வேலைல தலையிட்டாவே எனக்கு பிடிக்காது”
“மாமா” என்ற வார்த்தையை தவிர்த்து “உங்க அப்பாவோட இத்தனை வருஷம் இருந்திருக்கேன், அவர் ஒரு கேள்வி கூட என்னை கேட்டது இல்லை. என்னை சுதந்திரமா வேலை செய்ய விட்டிருக்கார். அவர் கேள்வி கேட்டிருந்தா சொல்லியிருப்பேன், அவர் என்னோட முதலாளின்னு என் மைன்ட்ல ஃபிக்ஸ் ஆகியிருக்கு அண்ட் என்னோட வளர்ச்சி அவரால மட்டும் தான்”
“ஆனா நாளைக்கு நீயோ ஷர்மியோ வந்து கேள்வி கேட்டா கூட நான் பதில் சொல்வேனா தெரியாது. இதுக்கு நீங்க அவர் பசங்க. இதுல மூணாவது மனுஷனோட எல்லாம் என்னால சேர்ந்து வொர்க் பண்ண முடியாது அண்ட் நீங்க சொல்ற பையனோட எல்லாம் என்னால வொர்க் பண்ணவே முடியாது.. இப்போ அவன் எப்படின்னு தெரியாது ஆனா நான் முன்ன பார்த்த அவன் ஷர்மிக்கு பொருத்தமா இருக்க மாட்டான்”
“என்னவோ பொண்ணை குடுக்கிறது உங்க பிரியம். அவனை நீங்க ஏன் பேப்பர் கம்பனில வைக்க கூடாது”
“அது பரம்பரை தொழில், பொண்ணுங்களுக்கு குடுக்க முடியாது” என்றார் முதல் முறை வாயை திறந்து கேசவன்.
இப்போது அவரை பார்த்தவன் “எனக்கு யாரோடையும் சேர்ந்து வேலை பார்க்க முடியாது, இப்போதைக்கு என்கிட்டே அதை முழுசா எடுத்துக்கற அளவு பணம் கிடையாது” என்றான்.
பேச்சு காரசாரமாய் திரும்பியது சத்தமும் அதிகமாய் வந்தது, ஷர்மி டைனிங் ஹாலில் இருந்தவள் வெளியே ஹாலில் வந்து நின்றாள்.
சந்தோஷ் ஏதோ பேச வர.. அவனை “நீ இனி பேசாதே” என்று அடக்கிய கேசவன்.. 
“அப்போ நாங்க பணம் குடுத்துடவா, நீ விலகிக்கிறியா” என்றார். 
ரவிக்கு சட்டென்று கோபம் வந்து விட்டது.. “அது முழுக்க முழுக்க நஷ்டத்துல ஓடிட்டு இருந்த ஒன்னு. அது ஏலத்துக்கு வந்தப்போ நான் எடுத்து நடத்த இஷ்டப்பட்டேன். என்கிட்டே இருந்த பணம் பேங்க லோன் போதலை, பேங்க் லோன்க்கு நீங்க தான் ஷ்யுரிட்டி போட்டீங்க, அப்போவும் பணம் பத்தலை, அதனால தான் பத்தாத பணம் போட்டு நீங்க பார்டனரா இருந்துக்கறீங்களா கேட்டேன். அப்படி தான் அதுல நீங்க பார்ட்னர் ஆனீங்க”
இதெல்லாம் சந்தோஷிற்கும் ஷர்மிளாவிற்கும் முற்றிலும் புதிய செய்தி.
“அது என்னோடது அதை குடுக்க முடியாது, வேற யாரோடவும் என்னால வேலை பார்க்க முடியாது. ஒரு ஐஞ்சு வருஷம் டைம் குடுங்க, நான் கேட்கறது அதிக பட்ச வருஷம், உங்க பணத்தை வட்டியோட குடுத்துடறேன். நீங்க பார்ட்னர்ஷிப்ல இருந்து விலகிக்கலாம். அதுவரைக்கு என்ன லாபமோ அதையும் குடுத்துடறேன். அதை சொல்ல தான் வந்தேன்” என்றான் தெளிவாக.
“என்னவோ என் பணம் சொல்ற, அது எப்படி வந்தது?” என்று கேசவன் இடக்காக கேட்டார்.
“ம்ம், என் உழைப்புல வந்தது, நீங்க எனக்கு லாபம் குடுக்கலை. நான் உங்களுக்கு குடுத்திருக்கேன். என்னோட முப்பதை பார்க்காதீங்க, உங்களுக்கு வந்த எழுபதை பாருங்க, நீங்க குடுக்கலை நான் குடுத்தேன்” என்றான் காட்டமாக.
“ரெண்டு பேரும் ஆரம்பிச்ச ஒன்னை நீ மட்டும் எப்படி எடுத்துக்க நினைப்ப”
“நீங்க ஆரம்பிக்கலை, நான் கேட்டு பணம் போட்டீங்க. இன்னைக்கு அதை வெச்சு உங்க பொண்ணை யார் எவன்னு கூட தெரியாம தள்ளி விட நினைக்கறீங்க. எதுக்கு அப்படி நினைக்கறீங்க? இதை வெச்சு காமிச்சு பொண்ணை குடுக்க வேண்டிய அவசியமென்ன?”
கேசவனை இது சரியாய் தாக்க அவர் பதில் பேச முடியாதவராகினார்.
“நீங்க பார்த்திருக்குற மாப்பிள்ளை, ஒரு தனி மனுஷனா பார்த்தா என் பக்கத்துல கூட நிக்க மாட்டான். அந்த மாதிரி ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்க நினைக்கறீங்க, ஆனா சொந்தமா கல்யாணம் பண்ணிக்கிற முறையில நான் இருந்தாலும் எனக்கு கல்யாணம் பண்ணி குடுக்கலாம்னு தோணலை”
“என்கிட்டே இருக்குறதை பிடுங்கி, அடுத்தவனுக்கு குடுத்து, உங்க பொண்ணை கட்டி குடுப்பீங்களா?” என்று நின்று நிதானமாய் நேர் பார்வை பார்த்து கேட்டான்.
கேசவனும் சந்தோஷும் அவனின் பேச்சில் அசந்து அதிர்சியாகிவிட..
ஷர்மி “என்ன இவன் என்னை கல்யாணம் பண்ண கேட்கிறானா? அவ்வளவா நான் குறைந்து விட்டேன்?” என்று தான் தோன்றியது. அவளை பொறுத்தவரை அவளின் வீட்டில் வேலை செய்த வேலைக்காரன்.
இன்னும் கூட அவனின் தோற்றம், அவனின் புத்திசாலித்தனம், அவனின் உழைப்பு, அதனால் வந்த அவனின் உயரம், எதுவும் அவளின் கவனத்தில் வரவேயில்லை.. இவன் எங்கள் வீட்டில் வேலை செய்தவன்.. அது மட்டுமே அவளின் நினைப்பு.
இன்னும் கூட இந்த லாப விவகாரங்கள், முறுக்கு கம்பி ஃபாக்டரியில் அவனின் பங்கு எல்லாம் சரி வர தெரியாது, இப்போது பேசும் போது தான் அவனால் எதோ லாபம் அவனும் பங்குதாரன் என்று புரிந்தது.
அப்போதும் எப்போதும் அவளின் மனதில் அவன் வேலைக்காரன் தான்.   
மனிதர்களை மதிக்க மாட்டாள் என்று கிடையாது, ஆனால் செல்வ செழிப்பில் வளர்ந்தவளுக்கு வேலைகாரர்கள், அவர்களை தள்ளி நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் தான்.
“இப்போது அவனுடன் திருமணமா? எவ்வளவு தைரியமாய் கேட்கிறான். இந்த அப்பாவும் அண்ணனும் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். வாயை மூடிட்டு வெளியே போடா” என்று ஏன் சொல்ல முடியவில்லை மனது கசந்தது..       
“உங்க பொண்ணுக்கு நீங்க யாரோட வேணா கல்யாணம் பண்ணுங்க, அது உங்க விருப்பம். ஆனா என்கிட்டே இருக்குற இந்த ஃபாக்டரி அதுல வரக் கூடாது, நான் ஒத்துக்க மாட்டேன்” என்று சொல்லி நிற்காமல் விடு விடு வென்று சென்று விட்டான்..
எப்போதும் போல மனதில் நினைத்ததை அப்படியே பேசுபவளாக, “ஒரு வேலைக்காரன் என்னை கல்யாணம் பண்ண கேட்கற மாதிரி என்னை கொண்டு வந்து நிறுத்திடீங்க” என்று சந்தோஷை பார்த்து கேள்வி கேட்டாலும், பார்வை அப்பாவை அப்பட்டமாய் குற்றம் சுமத்த, கண்களில் நீரோடு சென்று விட்டாள்.
கேசவன் தலையை பிடித்து அமர்ந்து விட, சந்தோஷ் சோர்ந்து அமர்ந்து விட்டான்.
“கல்யாணமா? உங்க பொண்ணுக்கா? என்னை விட்டு ஒருத்தனையா? எப்படி பண்றீங்கன்னு நானும் பார்க்கிறேண்டா?”
“வர்ற வரனையெல்லாம் நான் தட்டி விட்டா, நீங்க என் ஊர்ல இருந்து ஒருத்தனை, அதுவும் பெரிய தத்தி அவன், அவனை எனக்கு போட்டியா கொண்டு வருவீங்களோ? நீங்களே தத்தி. அப்போ நீங்க அப்படி தானே பிடிப்பீங்க. பின்ன நான் உங்க கண்ணுக்கு தெரியவேயில்லை தானே” என்று சந்தோஷையும் கேசவனையும் தாளித்து கொண்டே நடந்தான் அவனின் வீட்டை நோக்கி.

Advertisement