Advertisement

அத்தியாயம் நான்கு :
மூன்று நாட்களாகவே ஷர்மிளா சற்று சரியில்லை, என்னவோ பிரச்சனை என்று பார்த்தாலே தெரிந்தது. பார்க்கும் எல்லோரிடமும் எரிந்து விழுந்தால், ரவி இதனை உணர்ந்தாலும் கண்டு கொள்ளவில்லை.
சந்தோஷிற்கு என்னவென்று புரியவில்லை, என்ன ஏதும் பிரச்சனையா என்று கேட்டே விட்டான்.
ஒண்ணுமில்லை போ என்று அதற்கும் எரிந்து விழுந்தாள். இன்று என்ன என்று தெரிந்து கொள்ளாமல் விடுவது இல்லை என்று சந்தோஷ் முடிவெடுத்த நேரம், மிக நீண்ட விடுமுறை பதினைந்து நாட்களுக்கு பிறகு கேசவன் வீடு திரும்பினார்.
அவரை பார்த்ததுமே ஷர்மி அவரை பிடித்துக் கொண்டாள், இந்த முறை எப்போதும் இல்லாத அளவில்..
அவரின் ரூம் சென்றவள், “எங்க போயிருந்தீங்கப்பா, போயிட்டு ஒரு மூணு நாள் பேசுனீங்க, திரும்ப ஒரு வாரம் பேசவேயில்லை.. இப்போ மூணு நாள் முன்ன தான் பேசுனீங்க, சந்தோஷ் பர்த்டேக்கு விஷ் பண்ணலை என்ன நடக்குது” என்று கோபமாய் கேட்டாள்.
அதற்குள் அங்கே வந்த சந்தோஷ் “அப்பா ரெஸ்ட் எடுக்கட்டும் வா அப்புறம் பேசுவியாம்” என்று பேச,
“நீ கொஞ்சம் நேரம் வாயை மூடு” என்று அண்ணனை கடிந்தவள், “அவர் ரெஸ்ட் எடுக்க தான் ஊர் சுத்திட்டு வந்திருக்கார். அப்புறம் என்ன ரெஸ்ட் எடுக்க”
“எங்க போனீங்க? இவ்வளவு நாள் தனியா வா இருந்தீங்க? திஸ் இஸ் நாட் குட், பசங்க எங்களை நீங்க பார்க்கறதை விட்டு, நாங்க உங்களை பார்க்கிறோம்” என்றாள் தீவிரமான குரலில்.
“அது கொஞ்சம் முதுகு வலி ஃபீல் பண்ணினேன், அதான் கேரளா ஆயுர்வேதா ட்ரீட்மென்ட் போனேன்” என்றார். அது உண்மையும் கூட ஆனால் யாருடன் போனார் என்பது தானே கேள்வி.  
“அதுல என்ன ரகசியம்? என்னையோ சந்தோஷையோ கூட கூட்டிட்டு போயிருக்க வேண்டியது தானே. நீங்க எங்க போனீங்கன்னு எங்களுக்கு தெரியவேயில்லை. இந்த ரவியை கேட்டா சொல்ல மாட்டேங்கறான். உங்கப்பா கிட்ட கேட்டுக்கோ சொல்றான்”   
“ப்ச், எனக்கு தனியா போகணும்னு இருந்துச்சு, போனேன், என்ன இப்போ?” என்று அவர் சற்று சத்தமாய் பேச,
“நீங்க தனியா போகலை, எனக்கு தெரியும்” என்று ஷர்மி அதையும் விட சத்தமாய் பேசினார்.
சந்தோஷ் தான் பதறினான் “பேபி என்ன இது?” என்று.
“அண்ணா டேய், நீ சும்மா இரு. எனக்கு அசிங்கமா இருக்கு.. முந்தா நேத்து என்ன சேனல்ன்னு எனக்கு தெரியலை, லைவ் டாகுமெண்டரி, ஆலபி போட் ஹவுஸ் பத்தி அங்க காண்பிச்சாங்க” என்று அவள் நிறுத்த..
கேசவனின் முகம் ஒரு நிமிடம் சஞ்சலத்தை காண்பித்து மறுநிமிடம் ஒரு தெளிவை தத்தெடுத்தது..
அமைதியாக கைகளை கட்டிக் கொண்டு மகளை பார்த்தார்.. “ஐ நெவெர் எக்ஸ்பெக்டெட் திஸ் ஃப்ரம் யு பா” என
“என்ன? என்ன விஷயம்?” என்று சந்தோஷ் கலவரமாய் கேட்டான்.
பிள்ளைகளிடம் என்ன பேசுவார் அமைதியாய் தான் இருந்தார்.
ஒற்றை பிள்ளை கேசவன், அவரின் அப்பா அம்மாவும் ஒற்றை பிள்ளைகள், இங்கே நிறைய சொந்த பந்தத்தோடு தான் லக்ஷ்மியை கட்டினார். ஆனால் இங்கே இருந்த வசதி வாய்ப்புகள் திருமணதிற்கு பிறகு லக்ஷ்மியை அவரின் பெற்றோரிடம் இருந்து தள்ளி நிறுத்தி விட்டது. ரவியின் அப்பா லக்ஷ்மியின் பெரியப்பா மகன்.. லக்ஷ்மிக்கு கூட பிறந்தவர்கள் கிடையாது. அம்மாவும் அப்பாவும் கூட லக்ஷ்மி இருக்கும் போதே இறந்து விட்டிருந்தார். அதனால் கும்பகோணம் என்ற ஒன்றை கேசவன் மறந்து விட்டிருந்தார்.     
அதனால் சொந்த பந்தம் எல்லாம் தூரம் தான். நெருங்கிய உறவுகள் யாரும் கிடையாது. அப்படி பார்த்தால் சற்று நெருங்கிய சொந்தம் ரவியின் வீட்டினரே.
ஆனால் எங்கே அவனை சொந்தமாய் தான் யாரும் இந்த வீட்டினில் பார்ப்பது இல்லையே.
“பா, ஐ அம் ஆஸ்கிங் யு ரிப்ளை மீ” என்றாள் காட்டமாக.
இது ஒரு மிகவும் உணர்ச்சியமயமான பேச்சு, ஆனால் ஷர்மி சற்றும் யோசிக்காமல் அவரை கேள்வி கேட்டு நிறுத்தினாள்.
“பா, சொல்லுங்கன்னு சொன்னேன்” என்று அவள் கத்திய கத்தலில் என்னவோ ஏதோவென்று சசிகலாவும் ரமேஷும் வர கூடவே ரவீந்திரனும் வந்தான்.
எல்லோரையும் பார்த்து “கெட் அவுட் ஆஃப் திஸ் ப்ளேஸ்” என்று கத்தினாள்.
கேசவனின் முகம் சிறுத்து விட, சந்தோஷ் “ஏன் இப்படி கத்துற, கத்தாத பேபி” என்று தங்கைக்கு சொல்லி கொண்டிருந்தான்.
ரவீந்திரனை பார்த்ததும் இன்னும் அவளின் ஆத்திரம் கிளறப் பட..
“எல்லாம் உன்னால தான், நீதான் ஏதோ பண்ற? எங்கப்பா எங்க போறார், எங்க வர்றார், எதுவும் எங்களுக்கு தெரியறது இல்லை. இப்போ போட் ஹவுஸ்ல யாரோ ஒரு லேடி யோட சுத்திட்டு இருக்கார்” என்று விஷயத்தை அப்பட்டமாய் பேசினாள்.
நல்ல வேலை ரமேஷும் சசிகலாவும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து இருந்தனர்..
“அச்சோ” என்று ரவியின் முகம் கேசவனை பரிதாபமாய் பார்க்க,
சந்தோஷிற்கு மிகவும் சங்கடமாய் போயிற்று அப்பா செய்தது தப்பு தான், ஆனால் இப்படி எல்லோர் முன்னும் இந்த விஷயத்தை பேசி அவரை கீழிறக்கி இவள் என்ன செய்கிறாள் என்று ஷர்மியின் மீது கோபம் தோன்ற, முதல் முறை அவளுக்கு பெரியவனாய் ஒரு செய்கை செய்தான்.
“வில் யு ப்ளீஸ் ஷட் அப், முதல்ல நீ வா” என்று அவளின் கையை பிடித்து இழுத்தான்.
“நீ பேசாத சந்தோஷ், எனக்கு எவ்வளவு அசிங்கமா போச்சு தெரியுமா?” என்று பேச,
“என்ன அசிங்கம் இதுல உனக்கு, நீ வா, அது அவரோட பெர்சனல், கேட்கற முறைன்னு ஒன்னு இருக்கு” என்று அவளை இழுக்க..
கேசவன் அமைதியாய் தான் பார்த்திருந்தார்.
“அப்போ நான் இப்படி எவனோடவாவது போட் ஹவுஸ் போயி சுத்திட்டு வந்தா அது என்னோட பெர்சனல்ன்னு நீங்க கேட்க மாட்டீங்களா?” என்று கத்தினாள்.
சபாஷ் சரியான கேள்வி என்று ரவி மனதிற்குள் பேசிக் கொண்டான்.
கேசவனின் முகம் மாற, சந்தோஷ் ஷர்மியை முறைத்து நின்றான். 
ரவி போயிருந்தாலாவது பரவாயில்லை அவனும் அங்கேயே இருக்க.. அவனிடம் பார்வையை திருப்பியவள்,  
“நீ, நீ உன்னால தான் எல்லாம், நீ, நீ தான் எங்கப்பாவை கூட்டி கொடுக்கிறியா” என்று சொல்ல…
ரவீந்திரன் இதனை எதிர்பார்க்கவேயில்லை, அப்படியே சமைந்து என்ன குற்றச்சாட்டு இது என்பது போல நின்று விட்டான்.
“என்ன பேசற நீ ஷர்மி?” என்று கேசவன் அதற்கு அதட்டி பேச,
“நான் அப்படி தான் பேசுவேன்” என்று ஷர்மி அப்போதும் அடங்காமல் பேசினாள்.
அவ்வளவு தான் ரவிக்கு வந்ததே கோபம், பெண்ணவள் அவளை அடிக்க முடியாமல் சந்தோஷை ஓங்கி ஒரு அறை விட்டான்.
அங்கிருந்த யாருமே இதை எதிர்பார்க்கவில்லை ஷர்மி அப்படியே நின்று விட, அவளை சற்றும் திரும்பி பார்க்காமல், சந்தோஷை பார்த்தவன், “சொல்லி வைடா உன் தங்கை கிட்ட, பொண்ணா போயிட்டா, அதனால இந்த அடி உனக்கு விழுது, இன்னும் இந்த மாதிரி பேசினா, தொலைச்சிடுவேன்” என்று சொல்ல..
“என்னடா பண்ற என் பையனை?” என்று ரவியின் சட்டையை பிடித்திருந்தார் கேசவன்.
“நீங்க என் முதலாளி, அதையும் விட நான் உருவாக காரணமா இருந்தவர். அந்த மரியாதை நன்றி எல்லாம் எனக்கு எப்போவும் உண்டு.. நான் எடுத்து விடறதுக்கு முன்னாடி கையை எடுங்க” என்று அவரையும் பார்த்து வார்த்தையை கடித்து துப்பினான் கோபத்தில்.
அவர் ஸ்தம்பித்து எடுத்தார், இப்படி ஒரு ரவியை அவர் பார்த்ததே கிடையாதே!
சந்தோஷிற்கு அந்த அடி மிக அவமானமாய் போய்விட, ஆனாலும் என்ன செய்வான், அடித்து பிரண்டு உருளவா முடியும். அதுவரை ஆசுவாசப் பட்டது ஷர்மியை அடிக்காமல் விட்டானே என்பதாக.
அடியை பார்த்த பிறகு ஷர்மி அதிர்ந்து நின்று விட்டாள்.  
“நானும் ரொம்ப ரொம்ப என்னை கட்டுப்படுத்தி தான் இருக்கேன். உங்க பொண்ணு பேசறது சரியே கிடையாது.. பல முறை அலட்சியம், அவமானம், இப்படி போச்சு. ஆனா இன்னைக்கு பேசினது எல்லாம் என்னால பொறுத்துக்கவே முடியாது. பேசறதுக்கும் ஒரு அளவிருக்கு. உங்களோட தனிப்பட்ட வாழ்க்கை, அதை பத்தி கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் என்னை சொல்ல உங்க பொண்ணுக்கு என்ன இருக்கு?” 
“இனி இங்க வேலை செய்யறது என்னால முடியாது. என்னவோ சொல்லுங்க பண்ணிக்கலாம்” என்றவன்,
ஷர்மிளாவின் அருகில் வந்தான். சந்தோஷ் வேகமாய் அருகில் வந்து நின்று கொண்டான்
“இத்தனை நாள் எத்தனையோ விதத்துல நீ என்னை கிண்டல் செஞ்சிருக்க, மரியாதையில்லாம பேசியிருக்க, அதெல்லாம் நீங்க பணக்காரங்க முதலாளி வர்க்கம் அந்த திமிர்ன்னு நினைச்சிருக்கேன்”
“ஆனா நீ என்னை இவ்வளவு நாள் கேவலமா நினைச்சிருக்க போல”
“என்னை பார்த்தா மாமா வேலை பார்க்கிறவன் மாதிரியா தெரியுது” என்று அவளின் கண்களை நேருக்கு நேர் பார்க்க, அதன் தீட்சண்யத்தில் ஷர்மியின் கண்கள் பயத்தை காண்பித்தது.  
“இத்தனை வருஷம் என்னை பார்த்திருக்க, இப்படிப்பட்ட நினைப்பையா மனசுல வெச்சிருந்த, ஒரே இடத்துல இருந்திருக்கோம். சே, எனக்கு நினைச்சாலே என்ன சொல்றதுன்னு கூட தெரியலை”
“மாமா வேலை பார்க்கிறவணுங்க பொண்ணுங்களை எப்படி பார்ப்பாங்கன்னு தெரியுமா, ஒரு நொடி உன்னை தப்பா பார்த்திருப்பனா இல்லை ஆர்வமா தான் பார்த்திருப்பனா, நாலு பொண்ணுங்களோட அண்ணன் நானு, இப்படியா என்னை நினைச்சிருந்த” என்று கேட்டவன், ஒரு வேளை நான் அப்படி தான் இருந்திருக்கணுமோ, அப்படி எல்லாம் இல்லாததால தான் நீ என் முன்ன நின்னு கண்டபடி பேசறியோ”  நிற்காமல் சென்று விட்டான்.
அப்படி பேசியும் அப்போதும் ரவீந்திரன் முக்கியமாய் படவில்லை, அவனின் பேச்சு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தப்பாய் பேசிவிட்டேனா என்ற நினைப்பையும் கொடுக்கவில்லை.
“எப்படி அவன் சந்தோஷை அடிக்கலாம்” என்ற நினைப்பு மட்டுமே,  
கேசவன் தொப்பென்று அமர்ந்து விட, “அவன் உன்னை அடிச்சிட்டு போறான் சந்தோஷ், அவனை சும்மா விடக் கூடாது” என்று ஷர்மி ஆரம்பிக்க…
“நீ வாயை மூடு” என்று கர்ஜித்தான் சந்தோஷ்.
அவனின் இந்த குரலில் ஷர்மியின் வாய் கப்பென்று மூட, “உன்னை அடிக்காம விட்டானேன்னு சந்தோஷப் படு, முதல்ல நீ இங்க இருந்து போ, அவர் உன்னோட அப்பா தான். யாரும் இல்லைன்னு சொல்ல மாட்டாங்க. ஆனா உனக்கு உன்னோட எல்லைகள் தெரியணும். நீ அவரை கேள்வி கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. முதல்ல உன் ரூமுக்கு போ” என்று சந்தோஷ் கத்தினான்.
அவனை முறைத்த வாறே சென்றாள்,
உடனே அப்பாவை பார்த்தவன் “சாரிப்பா, சின்ன பொண்ணு தெரியாம பிஹேவ் பண்றா, நீங்க ரெஸ்ட் எடுங்க நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வர்றேன்” என்று சந்தோஷ் வெளியேற போக கேசவன் அப்படியே முகத்தை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டார்.
கதவை திறந்தவன் அப்பாவை பார்க்க அவரின் அந்த தோற்றம் என்னவோ செய்ய, அப்பாவின் அருகில் வந்தவன் “அப்பா அவ ஒரு அரைவேக்காடு, நீங்க இவ்வளவு ஃபீல் பண்ணாதீங்க, எதுன்னாலும் பார்த்துக்கலாம். அவளுக்கு எப்பவும் பெரியவன்னு காண்பிச்சு அதுவே பழக்கமாயிடுச்சு, நானும் சின்ன பொண்ணு அம்மா இல்லாம இருக்கான்னு அவ என்ன சொன்னாலும் தலையாட்டி பழகின உடனே, அவ செய்யறது எல்லாம் சரின்னு அவளுக்கு நினைப்பு” என்று சொல்ல,
“அது நான் போட் ஹவுஸ்..” என்று மனதின் கணம் தாளாமல் ஆரம்பித்தார்.
“பா, நீங்க அதை பத்தி ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது. என்கிட்டே மட்டுமில்ல யார் கிட்டயும்”  
கேசவன் புன்னகைத்தாலும் அவரின் கண்களில் நீர் துளிர்க்க “பா, நான் உங்களோட இருக்கேன் எதை பத்தியும் கவலை படாதீங்க” என
“அவன் உன்னை அடிச்சிட்டான்” என்றார்.
“பின்ன மான ரோஷமுள்ள யாரும் அப்படி தான் செய்வாங்க. பரவாயில்லை என்ன அடிச்சார். அவ மேல கை வெச்சிருந்தா நமக்கு எவ்வளவு அசிங்கம்” என்றான் உணர்ந்து..
“எனக்கென்னவோ ரொம்ப அசிங்கமா இருக்குடா, ஒரு வார்த்தை கூட என் முன்ன அவன் பேச மாட்டான். இன்னைக்கு உன்னை அடிச்சிட்டான். நான் அவன் சட்டையை பிடிச்சிட்டேன்” என்றார் மகளை பற்றி பேசுவதை தவிர்த்து.    
“பா லீவ் இட், இட் ஹேப்பென்ஸ் சம்டைம்ஸ்” என்று சொன்னவன், “இப்போ அவர் போனா நமக்கு வேற ஆள் தேட வேண்டி வருமோ?” என்று சொல்ல…
“அதுல நிறைய விஷயம் இருக்கு நம்ம பிறகு பேசலாம். ஆனா போறவனை இழுத்து பிடிக்க வேண்டாம், போனா போகட்டும்” என்றார் கேசவன்.
நேற்றைய கோபம் கொஞ்சமும் இல்லை ரவீந்திரனிடம்.. அப்படி ஒரு வருத்தம், கூடவே வெறுப்பு, “சே, சே, என்ன நினைத்து விட்டாள் என்னை”
“ஒரு நொடி ஒரு பொழுதாவது அவள் பேசியதற்கு வருந்த வேண்டும் வருத்தப் பட வைக்க வேண்டும்”
முடிவெடுத்து விட்டான்!
நேற்று ஒரு முடிவு! இன்று ஒரு முடிவு!
நாளை என்னவோ?
கூடவே மனதில் ஒரு பக்கம், அவளை வருத்தப் பட வைத்து விட்டால் மட்டும் பேசியது இல்லை என்றாகிவிடுமா? அப்படியா நான் இருக்கிறேன்! என்னில் ஏதாவது தவறா? இப்படியும் ஒரு புறம் யோசிக்க ஆரம்பித்தான்.
பணம் சம்பாதிப்பது மட்டுமே அவனின் குறிக்கோள்.
மற்றபடி பெண்களின் விஷயத்தில் எல்லாம் ரவீந்திரன் மிகவும் சுத்தம், அலைபாயாத மனது, ரசித்து கூட யாரையும் பார்ப்பது அரிது. யாரையும் தவறாய் நினைக்க மாட்டான், தவறாய் பார்க்கவே மாட்டான். ஏன் என்னை தான் நீ திருமணம் செய்ய வேண்டும் இல்லை வாழ்க்கை முழுவதும் திருமணமாகாமல் தான் இருக்க வேண்டும் என்று நினைத்த ஷர்மிளாவை கூட தவறாய் பார்த்ததில்லை..
அவளின் கூட்டி கொடுக்கிறாயா என்ற வார்த்தை மிகவும் காயப் படுத்தியது.
அந்த காயம் ஒரு வன்மத்தையும் கொடுத்தது!  
கூட்டி கொடுக்கிறேன்!
உன்னையும்!
என்னையும்!
என்னிடம்!     
   
  
  
  
          

Advertisement