Advertisement

ஒரு முறை வா போ என்று பேசினாள், மறுமுறை வாங்க போங்க என்று பேசினாள். எதையுமே ரவி மனதில் கொள்ளவே இல்லை. ஷர்மி எப்படியோ அப்படியே தான் இருந்தாள். அதனை உணர்ந்தவனாக “சரி, டீல்” என்றவன் மெதுவாக அவளின் கன்னம் தட்டி “கிளம்பலாமா?” என்று கேட்டான்.
நேற்று அவன் “ஐ அம் நாட் ஓகே” என்றதனை கொண்டு “ஆர் யு ஓகே நவ்” என்றாள் மென்மையான குரலில் ரவியின் கண்களை நேருக்கு நேர் பார்த்து.  
“எஸ் ஐ அம் ஓகே” என்றான் அவளை போலவே மெல்லிய குரலில்.
அவனை மென்மையாய் அணைத்து விடுவித்தவள், “சாமி சொன்னது இருக்கட்டும் நான் சொல்றேன், நீ எங்க வீட்ல இருந்த போது பல முறை பல மாதிரி இன்சல்ட் பண்ணுவேன். உன்னோட ஆட்டிடுயுட் என்னவா இருக்கும் தெரியுமா? போடி, நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளான்ற மாதிரி தான்”
“ஒரு வேளை சின்னதா நீ ஹர்ட் ஆகியிருந்தா கூட திரும்ப நான் செஞ்சிருக்க மாட்டேனோ என்னவோ. உன்னோட அலட்சியம் தான் என்னை நிறைய செய்ய வைக்கும். அது மாதிரி உங்க அம்மாவையும் நீ எந்த இடத்திலையோ டிஸ்டர்ப் பண்ணியிருக்க, திரும்ப திரும்ப எல்லோர் முன்னமும் க்ரிடிசைஸ் பண்றாங்க. அவங்களோட ஃபிரண்ட் ஆகிடு. எனக்கு தெரியும் நீ நினைச்சா இது உனக்கு ஒரு விஷயமே இல்லை அவங்களை சரி பண்றது” என்றாள் நயமாய் அவன் செய்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு.  
“மாட்டேன்” என்றான் உடனே.
“ஏன்?” என்று அதிர்ந்து கேட்டவளிடம்,
“உனக்கு என்னை தெரியாது, நீ செஞ்சிருக்கலாம்! ஆனா அவங்களுக்கு என்னை தெரியும் இல்லையா? உன்னை பொண்ணு கேட்க சொன்ன இடத்துல தான் எங்களுக்குள்ள் பிரச்சனையே ஸ்டார்ட் ஆச்சு. அவங்க எனக்கு அந்த தகுதியில்லைன்னு நினைச்சாங்க. அது என்னை ரொம்ப ரொம்ப ஹர்ட் பண்ணுச்சு, பண்ணுது, இப்போவரை! அவங்க தனக்கு சரின்னு படறதை பேசறாங்க, அப்படி பேசறது தான் சரின்னும் நினைக்கறாங்க”
“அவங்க தப்புன்னு நான் சொல்லலை. ஆனா அதை சொல்ற விதம் எப்பவும் என்னை எல்லோர் முன்னமும் இன்சல்ட் பண்ணுது. அவங்க மாறுவாங்கன்னு எனக்கு தோணலை. இப்போதைக்கு டென்ஷன் ஆகக் கூடாது கண்டுக்கக்கூடாதுன்னு முடிவெடுத்து இருக்கேன். எதிர்காலத்துல இதையும் கடந்து அவங்களோட என்னால சகஜமா பேச முடியும்னா பார்க்கலாம்?” என்று முடித்தான்.
“நான் கூட தான் உங்களை நிறைய டைம் இன்சல்ட் பண்ணியிருக்கேன்” என்று தயங்கி தயங்கி சொல்ல,
“சோ வாட், என் கூட கல்யாணம் முடிஞ்ச பிறகு எங்கேயும் நீ பண்ணலை. ஒரு முறை அம்மா முன்னே பேசினே. அதுக்கே என்ன என்னவோ ஆகிடுச்சு. ஆனா அது கூட நீ வேணும்னு பண்ணலை. ஆனா அம்மா அவங்க சரின்னு காமிக்க நினைச்சு, என்னை வம்பிழுக்கறதை விட மாட்டாங்க எனக்கு தெரியும்?” என்றான்.
ஷர்மி கவலையாய் பார்க்க,
“அம்மா அப்படி தான்! அவங்க எப்பவும் வாழ்க்கையில நேர்மையா இருக்கணும் நினைப்பாங்க. அதுக்காக அவங்க நினைக்கறது செய்யறது மட்டும் தான் நேர்மைன்னு கிடையாது! எனக்கு அதை அவங்களுக்கு எடுத்து சொல்றதுல இஷ்டமில்லை!”    
“எங்க வீட்ல எப்பவுமே கஷ்டம் அப்படின்னு கூட சொல்ல முடியாதபடி ஒரு வறுமை இருக்கும். எங்க அப்பாவும் சித்தப்பாவும் மட்டும் தான் சம்பாதிக்கறவங்க. ஜவுளிக்கடைக்கு வேலைக்கு போறவங்களுக்கு என்ன வரும். அதுல சிக்கனாமா இருக்கணும், அதுக்குள்ள குடும்பம் கொண்டு போகணும். இப்படி தான் அம்மா எண்ணமா இருக்கும். வருமானத்தை அதிகம் பண்ணனும்னு நினைக்க மாட்டாங்க”     
“எனக்கு முன்னுக்கு வரணும். பணத்துக்கு கஷ்டப்படக் கூடாதுன்னு எண்ணம். எங்கம்மாவும் நானும் ரொம்ப க்ளோஸ் யாரையும் விட, அப்போ சின்ன வயசுல இருந்தே பணம்ன்னு வரும் போது நான் பெரியவனாகி நிறைய சம்பாதிப்பேன், வீட்ல எல்லோரையும் நல்லா வெச்சிக்குவேன்னு பணத்துக்கு முக்கியத்துவம் குடுத்து பேசுவேன்!”
“நான் அந்த மாதிரி ஆகவும் செஞ்சிட்டேன்!”
“ஆனா நான் என்ன பண்ணினேன்? எப்படி முன்னேறினேன்? எனக்கு இன்னொரு கம்பனி பார்ட்னர்ஷிப்ல சொந்தமா இருக்கு, எதுவும் வீட்டுக்கு சொன்னதில்லை, அம்மாக்கிட்டயும் சொன்னதில்லை. சொல்லக் கூடாதுன்னு இல்லை, ஆனா சொல்லலை. என்னோட முன்னேற்றம் யாருக்கும் தெரியறதுல எனக்கு விருப்பமில்லை. ஏன்னா என்னோட சிந்தனைகளை ஒட்டி பேச மாட்டாங்க. அப்போ நான் செய்யற செயல்களுக்கு ஒரு விளக்கம் கொடுக்கணும், அதை ஜஸ்டிபை பண்ணனும். அதுல எனக்கு விருப்பமில்லை”
“வேலை பார்க்கறேன், கூட ஒரு பிஸ்னெஸ் செய்யறேன்னு தெரியும். எங்க வறுமை போச்சு, தங்கைங்க மூணு பேருக்கும் நிறைய நகை போட்டு வசதியான இடத்துல கல்யாணம் பண்ணினேன். ஒரு பத்து பைசா கூட வீட்டுல யார் காசும் கிடையாது. வீடு கட்டினேன், அதுவும் என் பணம் தான். நான் கணக்கெல்லாம் பார்க்கலை. இப்போவும் பார்க்க மாட்டேன் எப்போவும் பார்க்க மாட்டேன்”
“ஆனா உன்னை பொண்ணு கேட்க சொன்னப்போ, வேலை செய்யறவன் எப்படி பொண்ணு கேட்ப சொல்லிட்டாங்க! அதையும் விட உன்னோட வசதி பார்த்து தான் கல்யாணம் பண்ண நினைக்கிறேன்னு நினைச்சிட்டாங்க! கேட்கவே மாட்டேன்னுட்டாங்க! இப்போ நினைச்சாலும் எனக்கு அது ரொம்ப மனவருத்தத்தை கொடுக்கும்”
“அப்புறம் உங்கப்பா வேற நான் தொழில்ல குடுத்த தொந்தரவை வேற ஊர்ல சொல்லிட்டாரா? என்கிட்டே இருந்து வீட்டு செலவுக்கு கூட பணம் வாங்கலை?”  
“போங்கன்னு ஒரு ஸ்டேஜ்ல விட்டுட்டேன்”
“மொத்ததுல எங்கம்மா மனசுல இந்த கல்யாணம் பணத்துக்காகன்னு பதிஞ்சிடுச்சு, அதுதான் அதையும் இதையும் பேசறாங்க!”
“அம்மாகிட்ட எனக்கு விளக்கம் குடுக்கணும் எல்லாம் தோணலை, விடு” என்றான் அவனின் மனதின் எண்ணங்களை எல்லாம் கொட்டி.  
“நம்ம கல்யாணம் எதுக்காக வேணா நடந்திருக்கட்டும்? அது நமக்குள்ள! ஆனா அத்தைக்கு ஏன் உனக்கு என்னை பிடிச்சிருக்கும்னு தோணலை!” என்றாள் முக்கியமான கேள்வியாக.
“வெல் திஸ் இஸ் அ மில்லியன் டாலர் குவஷன்” என்றவன்,
“நான் பணம் பின்னாடி போவேன், ஆனா பொண்ணுங்க பின்னாடி போக மாட்டேன்னு ஒரு எண்ணம். அதுக்கு தகுந்த மாதிரி சீர்ன்னு வந்துட்டா உங்கப்பா தூள் கிளப்பிடறார். நான் என்ன பண்ணட்டும்?” என்றான் என்றான் ஒரு வாடா புன்னகையுடன்.
“அப்போ என்ன பண்ணுவாங்க? இப்படி சண்டை போட்டுட்டே இருப்போமா?” என்றாள் கவலையாக.           
“ஓய், எல்லாம் நான் பார்த்துக்குவேன். எதையும் போட்டு குழப்பக் கூடாது. எங்கம்மாக்கு நான் எப்படியோ ஆனா எனக்கு அவங்க முக்கியம் தான். நான் தப்புன்னா உன்கிட்டயும், உங்க வீட்லயும் தான். வேற யார் கிட்டயும் கிடையாது, எப்போவும் கிடையாது! என்னை புரிஞ்சிக்கிட்டா ஓகே, புரியலைன்னாலும் ஓகே. கோவப்படக்கூடாது மனசுல ஏத்தக்கூடாதுன்னு தான் இருக்கேன். பார்ப்போம்..”
“அப்பா கூட அம்மா கிட்ட பேசறதில்லை, அப்போ இன்னும் ஏறுக்கு மாறா பண்ணுவாங்க, அவங்க பிடிவாதம் அதிகமாகும். அப்பாக்கிட்ட ஊருக்கு போய் பேசணும், அவங்கக்கிட்ட பேசச் சொல்லி, இல்லை கல்யாணத்துல தொட்டதுக்கு எல்லாம் கலாட்டா பண்ண வாய்ப்பிருக்கு” என்றான். 
“ஆனா எதுன்னாலும் நான் பார்த்துக்குவேன். நீ மனசை நல்லா வெச்சிக்கணும், சந்தோஷமா, அப்போ தான் பேபி நல்லா இருக்கும். கோபம் வந்தா திட்ட தான் செய்வேன், நீ திரும்ப போடான்னு சொல்லு கெட்ட வார்த்தைல கூட திட்டு ஆனா தனியா இருக்கும் போது திட்டு” என்றான்.
“பார்க்கலாம் என் மூட் பொறுத்து” என்று ஷர்மி சொல்ல கெத்தாய் சொல்ல,
அதன் பிறகே காரை கிளப்பினான்… அதன் பிறகு இருவரிடமும் ஒரு வார்த்தை கூட இல்லை. பேச்சுக்களற்ற மௌனம். அவனின் கை பிடித்து தோள் சாய்ந்தவள் விலகவே இல்லை. அவனுக்கு கார் ஓட்ட சிரமாயிருக்கும் என்ற போதும் விலகவே இல்லை.     
ஷர்மியுடன் இவ்வளவு பேசியது ரவியை இலகுவாக்கி இருந்தது. ரவியுடனான பேச்சுக்கள் ஷர்மிக்கும் மனதிற்கு ஒரு இதத்தை கொடுத்திருக்க, அவளின் மனமும் ஒரு அமைதியை உணர்ந்தது. எல்லாம் விட அவனின் ஓகே இப்போது அவளையும் ஓகே ஆக்கியது.   
        
      
                 
       

Advertisement