Advertisement

ரவி கீழே சென்று உணவு எடுத்து வந்து, ஷர்மி உண்ட பின் அவளுக்கு தலைக்கு ஐஸ் வைத்து, பால் அருந்தக் கொடுத்தான். அத்தனை முறை மேலேயும் கீழேயும் நடந்தான். வீடே வேடிக்கை பார்த்தது.
“எதுவும் ஹெல்ப் வேணுமான்னா?” என்று தங்கைகள் கேட்க,
“இல்லை, நான் பார்த்துக்கறேன்!” என்று விட்டான். 
ரவி கோபம் போல எல்லாம் சொல்லவில்லை, ஒரு உற்சாகத்தோடே “நான் பார்த்துக்கறேன்” என்றான். அதற்கு மேல் என்ன செய்ய என்று வீட்டினருக்கும் தெரியவில்லை.
“ஊர்ல இல்லாத பொண்டாட்டியை கட்டின மாதிரி ஓவரா தான் பண்றான். இவன் பொண்டாட்டியை இப்படி பார்த்துக்கறான், இவங்கனால என் வீட்டுக்காரர் என்கிட்டே பேசறதில்லை, பாருடா காலக் கொடுமையை. போறாங்க கல்யாணம் கட்டினா கால்ல விழுகணுமா என்ன” என்று மகனுக்கும் தனக்குமாய் முணுமுணுத்துக்கொண்டே திரிந்தார்.
ரவியின் காதில் விழவேண்டும் என்று தான் பேசினார். அவனுக்கு சிலது கேட்டது சிலது கேட்கவில்லை. ஆனால் அவன் சற்றும் கண்டு கொள்ளவில்லை. “நான் இப்படித் தான்” என்ற முடிவை தான் அவன் எடுத்திருந்தானே.
ரவி எடுத்திருந்தான், சீதா எடுக்கவில்லை, அவ்வளவே வித்தியாசம்! அவரும் நான் இப்படித் தான் என்று தான் அவரினது நடத்தை இருக்கும். வாசன் பேசவில்லையா, நானும் பேசவில்லை என்று அவரும் கணவனுடன் பேசுவதில்லை. ரவி பேசவில்லையா, போடா என்று அவரும் பேசவில்லை. அம்மாவும் மகனும் சரிக்கு சரிக்கு இருந்தனர்.               
ரவி இந்த வேலைகள் எல்லாவற்றையும் ஷர்மிக்கு ஒரு முக மலர்ச்சியோடு செய்தான். எப்போதும் அவன் செய்வது தான். என்னவோ இன்று இன்னும் அதில் ஒரு கூடுதல் சுவை!
ஆம்! மனைவி தன்னை யார் முன்னமும் விட்டுக் கொடுக்கவில்லை என்பது பெரும் உவகையை கொடுத்திருந்தது. அது அகத்தில் மட்டுமல்ல முகத்திலும் தெரிந்தது.      
பின் அவன் உணவுண்ண கீழே வந்தவன் அம்மாவின் புறம் திரும்ப கூட இல்லை, யாரும் பரிமாற விடவில்லை, தங்கைகள், சித்தி வர, “நான் போட்டுக்கறேன்” என்று உண்டு விட்டவன்,
உறங்க சென்ற தாத்தா பாட்டியிடம் “நாளைக்கு விடியற் காலையில கிளம்பறோம் தாத்தா” என்று விட்டான்.
“ஷர்மியை ஏன் ரவி அலைய விடற? இன்னும் இருபது நாள் தானே இருக்கு கல்யாணத்துக்கு. இங்கேயே இருக்கட்டுமே. நீ வேணா போயிட்டு சீக்கிரமே வந்துடு” என்றார்.
“எனக்கு அவளை விட்டுட்டு இருக்க முடியாது தாத்தா, பத்திரமா கூட்டிட்டு போயிட்டு, கூட்டிட்டு வர்றேன்!” என்று முடித்து விட்டான்.
“ம்கும், இவன் பொண்டாட்டிக்கு வசதி பத்தாதுன்னு விட மாட்டான், ஏன் நாம பார்த்துக்க மாட்டோமா என்ன? யாரையும் நம்பறது கிடையாது. இப்படி தான், வளைக்காப்பு முடிஞ்சு அம்மா வீட்டுக்கு போகணும். விசாலி நல்லா பார்த்துக்குவான்னு சொன்னேன். அதுக்கு கோச்சிட்டு ஷர்மி அப்பா வீட்டுக்கு போயிட்டா. இவன் அந்த குதி குதி குதிக்கறான். வளைக்காப்பு முடிஞ்சு போகமாட்டாலாம். ஆனா கோச்சிக்கிட்டு போவாளாம். எந்த ஊர் நியாயம்டி இது” என்று சீதா அப்போதும் அருகில் இருந்த அவரின் ஓரகத்தியிடம் பேச,
“என்ன அக்கா நீங்க? இருக்குற பிரச்சனை பத்தாதா, ஏன் இப்படி பேசறீங்க?” என்று விட்டார்.
“நீங்க வேணா அவனை தலையில தூக்கி வைங்க நான் மாட்டேன்!” என்று விடாது வீம்பாய் பேசினார்.
அருகில் கேட்ட கௌசிக்கு மனதுக்கு கஷ்டமாகி போனது. விட்டேனா என்று அவளும் அம்மாவிடம் கேட்டே விட்டாள், “என் கல்யாணம் நடக்குமாம்மா?” என்று நக்கலாய்.
சீதா முறைத்து பார்க்க “எனக்கு நீ நடக்க விடுவேன்னு நம்பிக்கையில்லை” என்று பேச, அவளை முறைத்து பார்த்து கொண்டே இடத்தை விட்டு அகன்றார்.
ஆம்! சீதாவினுள் ஒரு ஆவேசம், ஒரு ஆக்ரோஷம்! “என்ன நான் செய்த தவறு. இவன் செய்த செயலை, இவன் இருந்த இருப்பை சுட்டிக் காட்டினால் நான் தவறா? என்ன நான் தவறு செய்தேன்? எந்த இடத்திலும் நான் தவறு செய்யவில்லை, நான் சரி!”
“வேலை செய்த வீட்டில் பெண் கேளு என்றான், நீ அந்த வீட்டில் வேலை செய்தவன் கொடுக்க மாட்டார்கள் என்று சொன்னால் தவறா? அதற்காக அதையும் இதையும் என்று எதையோ செய்து அந்த பெண்ணை கல்யாணம் செய்துக் கொண்டு நல்லவன் போல பேசினால் நான் நம்பி விடுவேனா. எப்படி வந்தது இந்த சொத்தெல்லாம்? அவர்கள் வீட்டில் வேலை செய்ததனால் தானே?” என்று தான் அவரின் எண்ணம்.
உண்மையில் கேசவன் கூட ஒருக்ஷணமும் அப்படி நினைத்தது இல்லை!  
எந்த இடத்திலும் ரவியின் உழைப்பால் வந்த முன்னேற்றம் என்று சீதா ஒத்துக் கொள்ள தயாரில்லை. அவருக்கு ரவியின் புத்திசாலித்தனம், கடுமையான உழைப்பு, அதில் வந்த முன்னேற்றம் எல்லாம் அனுமானிக்க முடியவில்லை. 
என்ன தான் ரவி ஷர்மிளாவின் திருமணதிற்கு தடைகள் பல கொடுத்திருந்தாலும், அவனை விட எந்த வகையிலும் சிறந்த மாப்பிள்ளைகளை அவனின் அப்பா அவளுக்கு ஒன்றும் கொண்டு வந்து விடவில்லை, அப்படி தானாயும் ஷர்மிக்கு வரவேயில்லை.
அதனால் ரவி சொன்ன “நான் எந்த வகையிலும் குறைவில்லை. நான் அங்கே வேலை செய்ததை கொண்டு பார்க்காதே அம்மா” என்ற ரவியின் பேச்சை சீதா ஒத்துக் கொள்ள மாட்டார்.
இதுவே அவரிடம் இருந்த குறை, ரவி குறையாக நினைப்பதும் அதனை தான்! என் அம்மா என்னை நம்பவில்லையே என்று!          
ரவி மேலே உறங்க வர, ஷர்மி பாதி உறங்கியும் உறங்காத நிலை, உடை மாற்றி அருகில் வந்து ரவி படுத்தவன் அவளை அணைத்துக் கொள்ள, வெகு சில நாட்களுக்கு பிறகான அணைப்பு!
ஷர்மியின் உறக்கம் பறந்தோட, அதையும் விட அவனின் அணைப்பு, ஒரு கோபம் கொடுத்தது. “இவ்வளவு நாள் பக்கம் வரலை. இப்போ எதுக்கு வந்தான்” என்ற எண்ணம் தான்.
“கையை எடு, எதுக்கு என்னை பிடிக்கிற? இவ்வளவு நாளா பிடிச்சியா என்ன? நீ என்னை கட்டி பிடிக்கணும்னு எல்லாம் நான் உன்னை விட்டு போகாம இருக்கலை. நான் உன்னை விட்டு போகலைன்னு எல்லாம் நீ கட்டிப் பிடிக்க கூடாது” என்று பொறிந்தாள்.
மனைவியின் கத்தலில் ஒரு புன்னகை பிறக்க “கட்டி பிடிச்சதுக்கு திட்டுறியா இல்லை இவ்வளவு நாளா கட்டி பிடிக்காம இருந்ததுக்கு திட்டுறியா?” என்றான் அதி முக்கியமான கேள்வியாக…
“உனக்கு எப்படி தோணுது?” என்றாள் சற்றும் அசராத குரலில்.
“இவ்வளவு நாளா கட்டி பிடிக்காம இருந்ததுக்கு திட்டுற மாதிரி தோணுது” என்றவன் அவளின் உறக்கம் களையக் கூடாது என்று மென்மையாய் அணைத்து இருந்தவன், அவள் விழித்தது தெரிந்ததும் இன்னும் வாகாய் வசதியாய் சற்று இறுக்கமாய் அவளை அணைத்தான்.
“தெரியுதுல்ல, தள்ளி போடா” என்றவளிடம்,
“அதெல்லாம் போக முடியாது போடி. பேசாம படு, நாளைக்கு காலையில நாம கிளம்பணும். அப்புறம் உன்னை எழுப்பறதுக்குள்ள நான் ஒரு வழி ஆகிடுவேன்” என்றவன் அவளின் கூந்தலில் முகம் புதைக்க, மனதினில் அப்படி ஒரு ஆசுவாசம்.  
“ஆளையும் அவனையும் பாருடா, ஏதோ கோவிலுக்கு போனதால உங்கப்பா சிவன் சாமி உனக்கு புத்தி குடுத்து அனுப்பியிருக்கார். அதுதான் உன்னோட ஈகோ எல்லாம் விட்டு என்னை வந்து கட்டி பிடிச்சிட்ட இல்லை நீயாவது என் பக்கம் வர்றதாவது” என்று அவள் கொட்டு வைக்க,
“தூங்கு, தூங்கு, சும்மா பேசிக்கிட்டு” என்றவன் மேலே பேசவில்லை. ஆனாலும் ஷர்மி விடாது பேசினாள்.
எதுவும் அவனையும் அவனின் மனநிம்மதியையும் அசைக்கவில்லை, நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான். 
“அட தூங்கிட்டான் போலயே” என்று நினைத்தவள், பின்பு பேச்சை நிறுத்திவிட்டாலும் உறக்கம் அணுகவில்லை. இதோ சில நாட்களுக்கு முன் இந்த அணைப்பு கிட்டுமோ கிட்டாதோ என்று அவள் பயந்தது அவளுக்கு தானே தெரியும். அவனை பிடிக்குமோ பிடிக்காதோ, நிச்சயம் அவனை விட்டு இருக்க முடியாது இந்த ஜென்மத்தில் என்பது திண்ணம்.
அந்த அணைப்பின் கதகதப்பை அனுபவித்தவள், மெதுவாக அவனின் கையை நகர்த்தி, குழந்தையின் சிறு அசைவு தெரிய அதன் மேல் வைத்து, “பேபி, நீ அப்பாவை மிஸ் பண்ணுனியா, இதோ அவங்க கை, இது மேலயே ஒரு உதை விடு” என்று மனதோடு பேசிக் கொண்டிருக்க, ரவிக்கு எதுவும் தெரியவில்லை ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான். 
காலையில் நான்கு மணிக்கு அவன் எழுந்து குளித்து தயாராகி, பின் ஷர்மிளாவை எழுப்ப, பத்து நிமிடத்திற்கு பிறகு ஒருவாறு எழுந்தவள், “ஏண்டா அறிவில்லை? ஒன்னு என்கூட சண்டை போட்டு என்னை தூங்க விட மாட்டேங்கற, இல்லை திடீர்ன்னு என்கூட ராசியாகி தூங்க விட மாட்டேங்கற? அப்போ நான் எப்போ தான் தூங்க?” என்றாள் கடுப்பாக.
அவளை முறைத்து பார்த்தவன் “கார்ல தூங்குவியாம், எழுந்துரு” என்று மிரட்டினான்.
“என்னை குளிக்க சொல்ல மாட்டியே?” என்று கேட்க,
“சரி குளிக்காதே, ஆனா சுடு தண்ணி வெச்சிருக்கேன், அதுல முகம் கழுவிட்டு ட்ரெஸ் சேஞ் பண்ணிக்கோ” என்று சொல்லி அவளை உடை மாற்ற செல்ல சொல்ல,
“ஏன்? எதுக்கு? நான் நல்லா தான் இருக்கேன், இதெல்லாம் பண்ண முடியாது!”  
“நீ பத்து நாள் குளிக்கலைன்னா கூட என் கண்ணுக்கு நல்லா தான் இருப்ப, ஆனா நாம இப்போ கிளம்பும்போது பாட்டி சாமி கும்பிட சொல்வாங்க. விபூதி வெச்சு விடுவாங்க. அதனால முகம் கழுவு, அடம் பிடிக்காத” என்றான் முறைப்பாய்.
படுக்கையில் இருந்து எழுந்து நின்றவள், “முதல்ல என பக்கம் வா நீ” என்றாள் அதிகாரமாய்.    
“எதுக்கு?” என்று அவன் அருகில் போக,
“குளிச்சு வாசனையா இருக்க, உன்னை வாசம் பிடிச்சு எத்தனை நாள் ஆச்சு?” என்று அவனை அணைத்து அவனின் கழுத்து வளைவில் வாசம் பிடித்தாள்.
“ஷர்மி என்ன பண்ற?” என்று தடுமாறி கேட்டான்.
“என்ன பண்றேன்னு நீ தான் சொல்லணும்” என்று அவன் கழுத்தின் ஓரத்தில் இதழ் பதித்து பேச, அந்த உதடுகளின் அசைவு அவனை இன்னுமே தடுமாற வைத்தது.
“ஷர்மி நாம ஊருக்கு கிளம்பணும் ப்ளீஸ் டெம்ப்ட் பண்ணாத என்னை” என்றவனிடம்,
“நீயெல்லாம் ஸ்ட்ராங் பெர்சனாலிட்டி, அப்படி எல்லாம் டெம்ப்ட் ஆக மாட்ட, ஒரு வாரம் பக்கம் படுத்தும் கை கூட மேல படலை” என்று அவனை வாரியவள், “ஊருக்கு போலாம் போலாம், ஒன்னும் அவசரமில்லை” என்று சொல்லி அவனின் கழுத்தில் இதழ் புதைத்து அவனுள் தன்னை புதைத்து கட்டிக் கொண்டு நின்றாள்.
“ஷர்மி காலையில இப்படி என்னை நீ பண்ணக் கூடாது, என்னை டிஸ்டர்ப் பண்ற” என்றான் சலுகையாய்.
“நான் அப்படி தான் பண்ணுவேன், ஆனா நீ டிஸ்டர்ப் ஆகாதே” என்று அவள் சொல்ல,
இவளிடம் பேசுவது வீண் என்று விட்டவன் அப்படியே நிற்க, ஆசை தீர சில நொடிகள் அவனை வாசம் பிடித்தவள், “ம்ம் இப்போ போ” என்று விலக,
“அநியாயம் பண்றடி” என்றான்.
“என்ன அநியாயம் பண்றேன் நான், வெக்கமேயில்லாம நீ பேசினது, பண்ணினது எல்லாம் மறந்து உன்னை கட்டிக்கிட்டு தான் நிக்கறேன். ஆனா நீ தான் அநியாயம் பண்ற, இவ்வளவு நேரம் கட்டிக்கிட்டு நின்னாலும் ஒரு கிஸ் பண்றியா நீ என்னை” என்றாள். ஆதங்கமா, கிண்டலா, கோபமா, என்ன குரல், என்ன பாவனை என்று அவனுக்கு புரியவில்லை. ஆனாலும் அவளின் சொற்களுக்கு கோபம் வரவில்லை, அதனை ஏற்றுக் கொண்டான்.   
“ஒரு கிஸ்ல எல்லாம் என்னால நிறுத்த முடியாது, போடி” என்று அவளை குளியலரை வரை தள்ளி வந்து நிறுத்த, அவன் தோளில் வலிக்குமாறு ஒரு அடி அடித்து, அவன் “ராட்சசி” என்ற சொல் உதிர்த்த பிறகே சென்றாள்.              
ஒருவாறு அவளை கிளப்பி கீழே வந்தால், வீட்டில் குழந்தைகள், மாப்பிள்ளைகள் தவிர அனைவரும் விழித்து இருந்தனர்.
இவர்களை பார்த்தும் பெரியவள் சென்று அண்ணனுக்கு காஃபி விட, சின்னவள் அண்ணிக்கு பால் எடுத்து வர சென்றாள்.
“எதுக்கு எல்லோரும் தூக்கம் முழிச்சிட்டீங்க இப்போவே?” என்றான். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா என்று எல்லோரும்.              
கௌசி ஒரு பையோடு வந்தவள், “இதுல பிளாஸ்க்ல பால் இருக்கு, அப்புறம் காலையில சாப்பிட இட்லி, சப்பாத்தி, தக்காளி தொக்கு இருக்கு அண்ணி” என்று ஷர்மிளாவிடம் கொடுத்தாள்.
“எதுக்கு கௌசி இவ்வளவு காலையில எழுந்து செஞ்சீங்க?”  
“அதனால என்ன அண்ணி, வெளில எதுவும் சாப்பிட்டு உங்களுக்கு ஒத்துக்கலைன்னா, இப்போ நாம் ஜாக்கிரதையா இருக்கணும்ல” என்றாள் பெரிய மனுஷியாய்.
“சரி” என்று அந்த பையை கையில் வாங்கி அதை ரவியிடம் கொடுக்க, அவன் உடமைகள் எல்லாம் காரில் வைத்து வந்தவன் காஃபி குடிக்க, ஷர்மி பால் குடித்து கிளம்பியவள்..
ரவி பொதுவாய் “வர்றேன்” என்று சொல்லி கிளம்ப,
ஷர்மி பாட்டி தாத்தாவிடம் “கல்யாண பர்ச்சேஸ் எப்படின்னு தெரியலை தாத்தா. ஒரு ரெண்டு நாள் பொண்ணுங்க நாலு பேரையும் அனுப்பி வைங்க, அழைப்பு இல்லைன்னா அத்தைங்களை கூட அனுப்பி வைங்க, ரிசப்ஷன்க்கு எல்லோரும் அங்க கல்யாணம் முடிஞ்ச கையோட வந்துடணும்” என்று சொல்ல.
“பர்ச்சேஸ்சா? என்ன பர்சேஸ்? எல்லாம் அவளுக்கு இருக்கே, முன்ன இருந்தே சிறுக சிறுக வாங்கி வெச்சிருக்கோம்” என்றார்.
“இருந்தா என்ன தாத்தா புதுசா கொஞ்சம் வாங்குவோம், இங்க வீட்லயும் இப்போதைக்கு கடைசி கல்யாணம். எங்க அப்பா வீட்லயும் கடைசி கல்யாணம். அனுப்பி வைங்க” என்று சொல்லி ரவி போல பொதுவாய் சொல்லாமல், எல்லோரிடமும் ஏன் சீதாவிடம் கூட தனி தனியாய் சொல்லி காரில் ஏறினாள்.
பின்பு அவர்கள் கிளம்பி சற்று தூரம் வர, ஓரமாய் நிறுத்தியவன், இறங்கி அவளின் புறம் வந்து அவளின் சீட்டை படுப்பதற்கு ஏதுவாய் நன்றாக சாய்த்து, அவளின் தலைக்கு ஒரு சின்ன தலையணை கையில் பிடிக்க கொடுத்து, “இப்போ தூங்கு” என்று சொல்லி மறுபுறம் அமர்ந்து வண்டியை கிளப்பினான்.
பல சமயம் ஷர்மிக்குள் தோன்றும், “இவன் என்னை நன்றாய் பார்த்துக் கொள்கிறான், அது மனைவி என்பதாலா இல்லை பல வருஷமாய் என்னையும் சந்தோஷையும் பார்த்துக் கொண்ட பழக்கமா?” என்று.  

Advertisement