Advertisement

கௌசிக்கு அந்த கல்யாணமே வேண்டாம் சிங்களாவே இருந்துடுவேன் என்ற வார்த்தைகளில் ஒரு ஆசுவாசம், ஆனாலும் அம்மாவை குறை கூறுகிறான் என்பது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. என்னை தானே திருமணம் செய்ய போகிறான் அம்மாவை ஏன் இழுக்க வேண்டும் என்று மனது முரண்டியது.
ஒரு வகையில் சந்தோஷ் உணர்ந்ததும் இது தானே! திருமணம் செய்த பிறகு அவளின் அம்மாவை குறை கூறினால் அது அவளின் மனதிற்கு கஷ்டம் என்று.
வாசனுக்கு சந்தோஷின் வார்த்தைகளில் அவ்வளவு தலையிறக்கமாய் போனது. “என்ன சொன்னாலும் இவள் திருந்துவது இல்லையே” என்று.  
ஷர்மி தலையை திருப்பி ரவியின் முகத்தை தான் பார்த்தாள், ரவியின் முகத்தில் எதுவும் தெரியவில்லை. நிச்சயம் அவன் மனது வேதனைப் படும் என்று தெரியும்.
உண்மையில் அவன் மனது கொதித்து கொண்டிருந்தது. சீதா இப்படி பேசினார் என்பது வருத்தத்தை, இயலாமையை, ஆற்றாமையை, சினத்தை கொடுத்தது.
அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை தான் உதவிக்கு வந்தான்.  
“சந்தோஷ், நீங்க பயப்படற மாதிரி ஒன்னுமில்லை. அத்தை அப்படி எல்லாம் நடந்துக்கவே மாட்டாங்க, இந்த வீட்ல மரியாதை குறைவா எதுவும் நடக்காது. எல்லோரையும் மரியாதையா தான் நடத்துவாங்க.
அவங்க பையன்னு ஏதாவது ரெண்டொரு வார்த்தை பேசியிருக்கலாம். அது அவங்களுக்குள்ள, அதுக்காக நிச்சயம் முடிஞ்ச பிறகு நீங்க பேசறது நல்லா இருக்கா?” என்றான்.
ரவி சந்தோஷிடம் நேரடியாய் “உனக்கு கௌசி மேல ஏதுவும் குறையிருக்கா? பிடிக்கலையா?” என்றான்.
“சே, சே, அப்படி எல்லாம் எதுவும் கிடையாது” என்றான் அடுத்த நொடியே.
“இது பதில் கிடையாது. நான் கேட்டதுக்கு கேட்ட மாதிரி பதில் சொல்லு” என்றான் கடினமாய்.
சந்தோஷ் தயங்கி என்றாலும் பேசினான் “எனக்கு கௌசல்யா மேல எந்த குறையும் கிடையாது, எனக்கு அவங்களை பிடிச்சிருக்கு” என்று.
“அப்போ இதுக்கு மேல உனக்கு வேற எந்த ஆப்ஷனும் கிடையாது. இந்த கல்யாணம் நடக்கும் அவ்வளவு தான். உனக்கு வரப் போற மாமியார்ன்ற உரிமைல நீ பேசலாம். ஆனா என்னோட அம்மாவை பத்தி யாரும் பேசறது நான் விரும்பலை”
“இனி கல்யாணம் வேண்டாம்னு எல்லாம் உளற கூடாது” என்று முடித்து விட்டான்.
எல்லோர் மனதிலும் ஒரு ஆசுவாசம்!
அப்போதும் சீதா முறைத்து தான் நின்றார்!
கேசவன் “நாங்க ஊருக்கு கிளம்பறோம்” என்று உடனே எழுந்து விட, விசாலி அங்கே வெறும் காட்சி பொருளே!
“இருந்து நைட் டிஃபன் சாப்பிட்டு தான் போகணும்” என்று ரவியின் தாத்தா சொல்ல,  
“இல்லைங்க மாமா கிளம்பணும்” என்று மறுத்தவர், மகளிடம் வந்து “நீயும் எங்களோட வா ஷர்மி” என்றார். “வருகிறாயா” என்று கேட்கவில்லை, “வா” என்று சொன்னார்.
ரவி அடித்தது அவருக்கு அப்படி ஒரு கோபம், அவரின் மக்கள் மேல் அவன் கை ஓங்குவது இது இரண்டாவது முறை. யார் என்ன பேசிக்கொண்டாலும் அவரின் மனதில் அது தான் பிரதானமாய் இருந்தது.
அவர் கேட்ட விதத்தில் ஷர்மிக்கு மறுக்க முடியும் என்றே தோன்றவில்லை. அவள் “சரி” என்று சொல்லும்முன்னே “அவ எங்கேயும் வர மாட்டா. எனக்கு புரியுது அவளை நான் அடிச்சது உங்களுக்கு கோபம்னு. ஆனா அது வேணும்னு இல்லை, தெரியாம பட்டுடுச்சு” என்று விளக்கம் கொடுத்தான்.
“அதெப்படி தெரியாம…. அவ வரலைன்னா சந்தோஷ் மேல தான் உங்க அடி விழுந்திருக்கும், அவன் என்கிட்டே முதல்ல சொல்லாம உங்க கிட்ட வந்து சொல்றான் அவனோட முடிவைன்னா, அது உங்க மேல வெச்சிருக்குற மரியாதை. அதனால அவனை அடிப்பீங்களா?”
“என்னன்னு கேட்கணும்? இல்லை என்கிட்டே சொல்லணும்! என்கிட்டே சில குறைகள் இருக்குறதனால நான் பல சமயம் அமைதியா போறேன். அதை குறைன்னு சொல்ல முடியாது. என்னோட வாழ்க்கை, அதை வாழ எனக்கு உரிமை இருக்கு”
“ஆனா அதுக்காக என் பசங்களை என்ன பண்ணினாலும் நான் பொருத்துக்குவேன்னு கிடையாது, நீங்க அவங்களை ட்ரீட் பண்ற விதம் சரியில்லை. என் பொண்ணு சந்தோஷமா இல்லை, அப்படி தான் எனக்கு ஃபீல் ஆகுது” என்று ரவியிடம் பேசியவர்,
“நீ நம்ம வீட்டுக்கு வா பிரசவம் முடிச்சு வருவியாம்” என்று பிடிவாதமான குரலில் சொன்னார்.
ரவிக்கு என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை..
“பா” என்று சந்தோஷ் பேச,
“நீ வாயை மூடு வாயை திறக்காதே” என்று கேசவன் சத்தமிட்டார். அவர் இப்படி பேசி கத்தி எல்லாம் அவரின் மக்களே பார்த்ததில்லை. இதில் மற்றவர் எங்கே பார்த்திருப்பர்.   
“இவ்வளவு கோபம் வேண்டாம் மாப்பிள்ளை” என்று கேசவனிடம் ரவியின் தாத்தா பேச..
“பெரியவங்க நீங்க தானே பார்க்கணும். இந்த மாதிரி சூழ்நிலை எல்லாம் ஏன் வர விடறீங்க?” என்று அவரிடமும் கேசவன் குரலுயர்த்தி பேசினார்.
“மாமா” என்று ரவி பேச வர, அவனின் பாட்டி அவனை அடக்கினார்.
“ரவி அவர் உன்னோட மாமானார் மட்டுமில்லை, இந்த வீட்டு மாப்பிள்ளை முதல்ல. அவர் அவர் மாமனார் கிட்ட பேசறார். நீ இதுல பேச ஒன்னுமில்லை” என்று சொல்லிவிட்டார்.
அதிலேயே “நீ வாயை மூட வேண்டும்” என்ற கட்டளை தான்.
ரவியை அடக்கலாம் ஷர்மியை யார் அடக்குவார்.. “பா, நீங்க இவ்வளவு எமோஷனல் ஆகவேண்டாம்”  
“அன்னைக்கு நீ என்கிட்டே தனியா வீடு கேட்டப்போ கூட இன்னும் நம்ம பொண்ணுக்கு பக்குவம் வரலையோன்னு நினைச்சேன். ஆனா நான் தான் தப்பா நினைச்சிட்டேன் போல” என்று கேசவன் சொல்ல,
“ஐயோ” என்று ஷர்மி பயந்தே விட்டாள்.
கேட்ட ரவிக்கு எல்லாம் உதறி எங்கேயாவது போகும் மனநிலை தான்.  ரவியின் மனநிலையை ஷர்மி உணர்ந்தாலோ என்னவோ, மெதுவாய் எழுந்தவள் ரவியின் பக்கம் சென்று நின்று “பா! இது தெரியாம நடந்தது, விட்டுடுங்க, வேற நாம பேச வேண்டாம்” என்று விட்டாள்.
கேசவன் ரவியிடம் வந்தவர் மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்குமாறு, “நான் ஒரு கையாலாகாத அப்பான்னு பலமுறை எனக்கு ஒரு உணர்வை குடுத்துட்ட ரவி” என்றவர் வேறு பேசவில்லை. அருகில் நின்ற ஷர்மிக்கு அது நன்கு கேட்டது. அந்த பேச்சினில் ஷர்மிக்கு மனதை பிசைந்தது. உடலும் மனமும் தளர, திடமாய் காலூன்றி நிற்க முற்பட்டாள்.   
மகள் ரவியுடன் சென்று நின்ற போதே வர விருப்பமில்லை என்று புரிந்தவர் திரும்பவும் அவளை “வா” என்று அழைக்கவில்லை.
அவரின் பேச்சில் ரவி தாடைகள் இறுக, கைகள் இறுக, உண்மையில் அவன் தான் என்ன செய்வது என்று கையாலாகாத தனத்துடன் இருந்தான்.
மகளிடம் வருகிறேன் என்று தலையசைத்தவர் வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை, அவர் கிளம்பிவிட விசாலியும் அவர் பின்னே சென்றார்.
சந்தோஷும் ஷர்மியிடம் வந்தவன் கண்களில் நீரோடு நிற்பவளை “பார்த்துக்கோ பேபி, லூசு மாதிரி பண்ணிட்டேன் போல, டென்ஷன் ஏத்திக்காதே” என்றவன் கிளம்ப,
அப்போதும் “டேய் லூசு அண்ணா, கௌசி கிட்ட சாரி கேட்டு போடா” என்று ஷர்மி சொன்னாள்.
அங்கிருந்தே கௌசியை நோக்கி திரும்பியவன் “சாரிங்க” என்று சொல்லி, “மாமா வர்றேன்” என்று ரவியிடம் சொல்லி கிளம்பிவிட்டான். வேறு யாரிடமும் அவனும் சொல்லிக் கொள்ளவில்லை.  
கேசவன் சொல்லிக் கொள்ளாமல் போனாலும் பாட்டியும் தாத்தாவும் வெளியில் வந்து, அவர்கள் கார் கிளம்பும் வரை இருந்து தான் உள்ளே வந்தனர்.
கேசவன் அழைத்த போது ஷர்மிளா மட்டும் அவருடன் சென்றிருந்தால், அவ்வளவு தான் ரவி நிச்சயம் உடைந்தே போயிருப்பான். இன்னும் கேசவன் “நான் ஒரு கையாலாகாத அப்பான்ற உணர்வை பல முறை எனக்கு குடுத்துட்ட” என்று அவர் சொன்ன வார்த்தைகள் அவனின் காதினுள் ரீங்காரமிட்டு கொண்டிருந்தன.
அப்படியே அசையாமல் நின்றிருந்தான்.
எல்லோரும் அவனையே பார்க்க, “எனக்கு தலை சுத்தற மாதிரி இருக்கு, நான் கொஞ்சம் நேரம் படுக்கறேன். மேல போகணும், படியேறணும், கூட வாங்க” என்று ரவியை அசைக்க, மறு பேச்சு பேசாமல் அவளுடன் நடந்தான்.
மனது வெகுவாக ரணப்பட்டது. எல்லோர் முன்னமும் ஏதோ குற்றவாளியாய் நிற்பது போன்ற உணர்வு…
நடந்த களேபரங்களில் ஷர்மி அவனை எங்கேயும் எந்த இடத்திலும் யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் தாங்கிக் கொண்டாள்.  

Advertisement