Advertisement

அதை ஓரம் தள்ளிய ஷர்மி, “என்ன விஷயம்? ஏன் இவ்வளவு காலையில் வந்திருக்க? நைட் தூங்கின மாதிரியும் தெரியலை?” என்று கேள்விகளால் துளைக்க…  
“ஒன்னுமில்லை” என்றவன், “எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” என்றான் பளிச்சென்று.
“என்னடா இப்படி கேட்கிறான்?” என்று ரவி யோசனையாய் பார்க்க,
“பண்ணலாம், பண்ணலாம், ஆனா ஏன் திடீர்ன்னு அவசரமா இது பேசற?”  என்று ஷர்மி கேட்க, அவள் கேட்கும் விதத்திலேயே என்ன பிரச்சனை என்று கண்டு கொண்டாள் என்று ரவிக்கு புரிந்தது.
ரவி எதுவும் பேசாமல் தான் இருந்தான்.
“ஏன் கல்யாணம் பண்ற வயசாகிடுச்சு அது தான் கேட்கறேன்” என்றான்.
“அண்ணா டேய் என்ன ப்ராப்ளம் சொல்லு, சும்மா அவசரமா பண்ண முடியாது. நல்ல பொண்ணா நாள் நட்சத்திரம் பார்க்கணும். இன்னும் ரெண்டு மாசத்துல என் டெலிவரி இருக்கு. நான் எதுக்கும் அலைய முடியாது” என்று பேசினாள்.
“எதுக்கு அவ்வளவு நாள் பண்ணனும், ஒரு மாசத்துல பண்ணிடலாம்” என்று சந்தோஷ் ஐடியா கொடுக்க,
“உன் மூஞ்சி, பொண்ணு கிடைக்க வேண்டாமா?” என்றாள் ஷர்மி.
“அதென்ன உன் மூஞ்சி, என்ன ஸ்லேங் இது, என்ன மாமா பழக்கி வெச்சிருக்கீங்க?” என்று சந்தோஷ் பரிதாபமாய் ரவியை பார்த்து கேட்க,
“கொஞ்சம் நாளா சொல்லாம தான் இருந்தா, இப்போ திரும்பவும் சொல்றா?”  என்று ரவி சொல்ல
“அண்ணா டேய் இப்போ அதுவா முக்கியம், பொண்ணு எங்கே கிடைக்கும்?”    
“நேத்து கூட விசாலிம்மா வீட்ல ஏதோ பொண்ணு சொன்னாங்களே, இல்லை ஊர்ல ரவி மாமா வீட்ல சொல்லலாம், இல்லை மேட்ரிமோனி பார்க்கலாம்” என்று ஐடியாவாய் அடுக்கினான்.
“சந்தோஷ், கால் வலிச்சாலும் பரவாயில்லைன்னு உதைக்க தான் போறேன் உன்னை, என்ன விஷயம் சொல்லுடா?” என்றாள்.
“ஒன்னுமில்லைன்னு சொல்றேன் தானே. எனக்கு கல்யாணம் பண்ணனும்?” என்றான் ஷர்மியை பார்த்து அதட்டலாக.
ஒரு பெருமூச்சை வெளியிட்ட ஷர்மி, “அண்ணா டேய், நான் உன் மொபைல் பார்த்துட்டேன்” என்றாள் பளிச்சென்று.
அவளை பார்த்து முறைத்தான்!
“சும்மா முறைக்காத என்னனு சொல்லு, அவ தான் கல்யாணம் ஆகி போயிட்டாளே. இப்போ என்ன மிஸ் யு கிஸ் யு ன்னு மெசேஜ் போடறா! அவ கண்ணை நொண்டி காக்கைக்கு போட்டுடுவேன் பார்த்துக்கோ? என்ன சந்தோஷ் தனி ஆள்ன்னு நினைச்சிட்டு இருக்காளா? கூட ஷர்மிளா இருக்குறதை மறந்துட்டாளா அவ, பிச்சிடுவேன் பிச்சு அவளை!” என்று ஷர்மி ஆவேசமாய் பேச,
“ஷ், என்ன இது அமைதியாய் பேசு!” என்றான் ரவி.
பின் சந்தோஷை பார்த்து, “என்ன விஷயம் சந்தோஷ், எதுவும் ப்ராப்லம்ல மாட்டிக்காதே” என்றான் ரவி.
“அதெல்லாம் ஏற்கனவே மாட்டிகிட்டேன். இப்போ அதுல இருந்து வெளில வரணும். அதுக்கு நான் கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கு தான் கேட்கறேன்” என்றான்.
“ப்ச், முதல்ல விஷயத்தை சொல்லு” என்று ரவி அதட்ட அது வேலை செய்தது.
“நானும் நிஷாவும் ஒன்ஸ் அபான் எ டைம் லவ் பண்ணினோம், கல்யாணம் பண்ண சொன்னா, நான் ஷர்மி கல்யாணம் முடிச்சு தான் பண்ண முடியும் சொல்லிட்டேன். அப்போ விசாலிம்மா பிரச்சனை ஓடினது, கூட ஷர்மிக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருந்தோம்”
“உனக்கு என்னை விட உன் குடும்பம் தான் முக்கியமா கேட்டா?”
“ஆமாம்! ஆனா அதுக்காக நீ முக்கியமில்லைன்னு கிடையாது. வேணும்னா பேரன்ட்ஸ் கிட்ட சொல்லி எங்கேஜ் பண்ணிக்கலாம் சொன்னேன்”
“அவங்கப்பாவை பார்த்து பேசினேன். அவருக்கு அவர் பொண்ணு வெயிட் பண்றது இஷ்டமில்லை. கூட அப்பா செகண்ட் மேரேஜ் பண்ண போறார்ன்னு சொல்லிட்டேன்”
“அப்போ ப்ராபர்டி எல்லாம் என் பேர்ல மாத்தினா வேணா அவர் பொண்ணை வெயிட் பண்ண வைக்கறேன்னு சொன்னார்”
“அவர் பேசின டோன் எனக்கு பிடிக்கலை, அதெல்லாம் என்னால முடியாது, இது தான் சினாரியோ, இஷ்டமிருந்தா பாருங்க இல்லை வேற மாப்பிள்ளை பாருங்கன்னு சொல்லிட்டேன்” என்றான்.
சந்தோஷ் இவ்வளவு பேசுவானா என்று ரவிக்கும் ஷர்மிக்கும் வியப்பாய் இருந்தது. அவர்களை பொறுத்தவரை சந்தோஷ் ஒரு ஜாலி ஃபெல்லோ.   
“அவருக்கு என் பேச்சு பிடிக்கலை, வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிட்டார்”
“நானும் சர்தான் போடி ன்னு, டாட்டா பை பை சொல்லிட்டேன்”
“நீ நிஷாவை ரொம்ப மிஸ் பண்ணுனியா?” என்று ஷர்மி கவலையாய் கேட்டாள்.
“தெரியலை, அப்போ கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அதுக்கு அப்புறம் அவ ஞாபகம் கூட வந்ததில்லை”
“இப்போ ஒரு பத்து நாளா என் கூட நிஷா பேசறா? நானும் ஷர்மி கோவப்பட்டு வீட்டுக்கு வந்தது அப்புறம் ஹாஸ்பிடல்ல இருந்த டைம் அவளை சுத்தமா அவாய்ட் பண்ணிட்டேன்”
“ஆனாலும் விடாம மெசேஜ், அந்த மாப்பிள்ளை அவளுக்கு பிடிக்கலையாம். அவ அவனை டைவர்ஸ் பண்ணிடறாலாம். நாம கல்யாணம் பண்ணிகலாம் சொல்றா?”
“என்னால அதெல்லாம் முடியாது சொல்லிட்டேன். உனக்கு டைவர்ஸ் பண்ணனுமா பண்ணிக்கோ. திரும்ப கல்யாணம் பண்ணனுமா பண்ணிக்கோ. ஆனா அதுக்கு நான் ஆள் கிடையாது போடின்னு சொல்லிட்டேன்”    
“நேத்து இங்க இருந்து போன பிறகு மீட் பண்ணனும் ஒரே பிடிவாதம். சரி போய் முடியவே முடியாது சொல்லிடலாம்ன்னு போனா, நான் இல்லைன்னா செத்துப் போவாளாம். ஒரே டிராமா டைலாக்கா பேசறா”  
“அவளால அவ புருஷனோட வாழ முடியலையாம். பட்டுன்னு என்னை ஹக் பண்ணி கிஸ் பண்ணிட்டா. என்ன நான்சென்ஸ் இதுன்னு எனக்கு ரொம்ப ஷேம்மா போச்சு, போடின்னு வந்துட்டேன்”
“நைட் ஃபுல்லா மெசேஜ், எரிச்சல் ஆகிடுச்சு. அது தான் எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க. அவ டார்ச்சர்ல இருந்து நான் தப்பிக்கணும்”  
“அவளை என்கிட்டே விடு, அவளை என்ன பண்றேன் பாரு” என்று ஷர்மி கிளம்ப,
“ஏய், வாயை மூடு” என்று அதட்டிய ரவி, “இன்னும் அந்த பொண்ணுக்கு டைவர்ஸ் எதுவும் ஆகலை. அடுத்தவன் மனைவி, கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும், இல்லைன்னா எல்லோருக்கும் அசிங்கம். அது ஏதோ அரைவேக்காடு போல, உனக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்று அவளிடம் ஸ்திரமாய் சொன்னான்.
திரும்ப சந்தோஷை பார்த்து “எங்க கிஸ் பண்ணினா?” என,
“ஆங்! இது என்ன கேள்வி” என்பது போல அண்ணனும் தங்கையும் பார்த்தார்கள்.
“ஓய் சொல்றா” என்று ரவி அதட்டினான்.
“கன்னத்துல”  
“கன்னத்துல தானே அதொண்ணும் இல்லை விடு” என்று ரவி சொல்ல,
“ம்ம், அதெல்லாம் நான் நேத்தே நாலு தடவை முகத்தை சோப் போட்டு கழுவிட்டேன்” என்று சந்தோஷ் சொன்ன விதத்தில் ரவிக்கும் ஷர்மிக்கும் சிரிப்பு பொங்கியது.
“அண்ணா டிஃபன் ரெடி, அண்ணிக்கு பசிக்கும் சாப்பிட வாங்க” என்ற கௌசியின் குரல் வெளியில் இருந்து கேட்டது. உள்ளே எல்லாம் வரவில்லை.
அந்த க்ஷணம் அவனுள் அசரீரி போல தோன்ற சந்தோஷ் யோசிக்காது கேட்டான். “உங்க தங்கைக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்கறீங்களா?” என்று.
“எனக்கு உங்கள் தங்கையை திருமணம் செய்து கொடுங்கள்” என்று கூட கேட்கவில்லை.  
அப்படியே ரவியின் சிரிப்பு நிற்க, சந்தோஷ் கேட்ட விதத்தில் வார்த்தைகளில் ஷர்மிக்கு மனது என்னவோ செய்தது.
அவன் நிஷாவின் செய்கைகளில் எவ்வளவு பயந்து இருக்கிறான் என்று புரிந்தது.  
ரவியின் சிரிப்பு மறைந்து விட்டதை உணர்ந்து, “நல்ல பொண்ணா இருக்காங்க, குடும்பத்துல அனுசரிச்சு போறாங்க, பொறுப்பா இருக்காங்க” என்றான்.
ரவி ஏதோ பேச வர, “இருங்க, இருங்க, நான் பேசிடறேன். நீங்க சரின்னு சொன்னாலும் வேண்டாம்னு சொன்னாலும் என்னை வீட்டுக்கு வரக் கூடாது எல்லாம் சொல்லக் கூடாது”
“எனக்கு உங்க தங்கையை பிடிச்சிருக்குன்னு எல்லாம் கேட்கலை. அந்த மாதிரி எல்லாம் யோசிக்கலை. என்னவோ இந்த நிமிஷம் தான் தோணினது”
“அம்மா இருந்த வரை அம்மா பார்த்தாங்க. அம்மா இருக்கும் போதே எங்க விஷயம் பாதி நீங்க தான் பார்த்தீங்க. அம்மா போன பிறகு முழுசா நீங்க தான் பார்த்தீங்க. பின்ன நீங்க வீட்டை விட்டு போனீங்க, எனக்கு ரொம்ப தடுமாற்றம் தான். பின்ன விசாலிம்மா வந்தாங்க. அவங்க எல்லாம் பார்த்தாங்க. அப்புறம் ஷர்மி கல்யாணம் பண்ணி போயிட்டா”
“எல்லாம் வாழ்க்கையில நல்லா நடந்தாலும் என்னவோ தனியா இருக்குற பீல் தான். இப்போ இந்த நிமிஷம் தான் தோணினது உங்க தங்கை மாதிரி ஒரு பொண்ணு வாழ்க்கையில வந்தா நல்லா இருக்கும்னு. வாழ்க்கை அமையறது தானே. யாரும் புதுசா தெரியாதவங்க வந்து எனக்கு பிடிக்காம போயிட்டான்னு பயமா இருக்கு. அதையும் விட எங்கப்பா வாழ்க்கையை விமர்சிச்சா. இல்லை விசாலிம்மாவை பேசினா எனக்கு ஆகாது. என்ன செஞ்சிருந்தாலும் அவர் என் அப்பா அவரை என்னால விட்டுக் குடுக்க முடியாது” என்றான் தெளிவாய்.   
அந்த அவனின் பதில் ரவியை வெகுவாய் ஆகர்ஷித்தது.  
“உங்க ரெண்டு பேருக்கும் உங்களை நல்லா தெரியும். ஆனாலும் உங்களுக்குள்ள இவ்வளவு பிரச்சனை. எனக்கு இந்த மாதிரி எல்லாம் ஹேண்டில் பண்ண முடியுமா தெரியலை? என்னோட கல்யாணம் எனக்கு பயமாயிருக்கு!” என்று சந்தோஷ் கவலையாய் பேசினான்.
“அண்ணா டேய், என்னடா இது?” என்று ஷர்மி சென்று சற்று சிரமமாயிருந்த போதும் அவனின் அருகில் கீழே அமர்ந்து கொண்டாள்.
ரவீந்திரனின் முகம் தீவிர யோசனையில் இருக்க,
“சாரி, நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிக்கங்க” என்றான் சந்தோஷ்.
“தப்புன்னு சொல்ல மாட்டேன்! ஆனா இது நடக்கும்னு என்னால சொல்ல முடியாது. இதுல நிறைய விஷயம் இருக்கு. எனக்கு நீ எப்படி முக்கியமோ அது மாதிரி தான் கௌசியும். ஏற்கனவே லவ் பண்ணின பையனை அவ ஒத்துக்குவாளா தெரியணும்”
“இன்னொன்னு என் அம்மா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. மத்த மூணு பொண்ணுங்களும் வசதியான இடத்துல தான் கல்யாணம் பண்ணி குடுத்து இருந்தாலும் உங்க அளவுக்கு வசதி கிடையாது. அதனால பிரச்சனை பண்ணுவாங்க”  
“நான் வேணா எங்கப்பா சொத்து வேண்டாம்னு சொல்லிட்டு வேலைக்கு போகட்டுமா?” என்று அவசர அவசரமாய் ஒரு முடிவு சொல்ல…
ரவிக்கு கவலையாகிப் போனது, நடந்து விட்டால் பிரச்சனையில்லை. நடக்காவிட்டால் இவனை சமாளிப்பது சிரமம் போலவே என்று.
ஷர்மி ரவியின் முகத்தையே பார்த்திருந்தாள். “நீ நினைத்தால் முடியாதா?” என்ற ஒரு முறைப்புடன்.
அவளின் பார்வையை உணர்ந்தவன் “ஒருவேளை கௌசிக்கு பிடிச்சு, ஜாதகமும் சரி வந்தா வேற எந்த ப்ரச்சனை வந்தாலும் உங்க கல்யாணம் நான் நடத்திக் குடுக்கறேன்” என்று ரவி அவனையும் மீறி வாக்கு குடுத்து விட்டான்.
சந்தோஷின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
அதனை பார்த்த நொடி ரவி சொன்னது இது தான் “அவளுக்கு பிடிக்கலை நீ அவளை எந்த வகையிலும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது”
ஒரு பெருமூச்சோடு தோளை குலுக்கிய சந்தோஷ் “ஓகே, ஆனா ரொம்ப நாள் தள்ளி போடாதீங்க, அவங்க ஒத்துக்கலைன்னா வேற பொண்ணை பார்த்து உடனே எனக்கு கல்யாணம் பண்ணிடுங்க. இந்த நிஷா இல்லன்னா அடங்கமாட்டா” என்று சொல்லிக் கொண்டே எழுந்து ஃப்ரெஷ் ஆவதற்காக பாத்ரூம் சென்றான்.
ஷர்மிக்கு அப்படி ஒரு கோபம் கேட்காவிட்டால் அவளுள் எழுந்த ஆத்திரம் அடங்காது என்றுணர்ந்து, “அதென்ன ரவியோட தங்கச்சி அவ்வளவு பத்திரம். ஆனால் சந்தோஷ் தங்கச்சி மட்டும் இளிச்சவாய். அதுவும் அவளுக்கு பிடிக்கலைன்னா கூட அவளே ஓகே சொல்ற மாதிரி செஞ்சீங்க” என்று கேட்டாள்.
ஷர்மிளாவின் கண்களில் அப்படி ஒரு கோபம் ஆற்றாமை இயலாமை எல்லாம் சேர்த்து அவனை விழித்து பார்த்தாள். அந்த பார்வை ரவியை பாதித்தது. “இவள் என்னை எப்போதும் நம்பவும் போவதில்லை, நல்ல விதமாய் நினைக்கவும் போவதில்லை” என்பது அதீத கோபம் கொள்ள செய்தது.      
“இதுக்கு எனக்கு பதில் சொல்ல முடியாதுன்னு கிடையாது, ஆனா சொன்னா உன் மனசு தான் கஷ்டப் படும் பரவாயில்லையா?”
“பரவாயில்லை சொல்லுங்க” என்று பிடிவாதமாய் நின்றாள்.      
சில நொடிகள் நிதானித்து அவளை பார்த்தவன் “ஏன்னா கௌசி ஷர்மி கிடையாது. சந்தோஷ் யாராவது பொண்ணுங்க கிட்ட பேசினா, இவனா இவன் எங்க வீட்ல வேலை செய்யறவன். இவனையெல்லாம் கல்யாணம் பண்றதுக்கு வாழ்க்கை முழுசும் கல்யாணம் பண்ணாம இருந்துடலாம்ன்னு சொல்ல மாட்டா. மனுஷங்களை மதிக்க தெரிஞ்சவ. உன்னை மாதிரி கிடையாது!”
“உங்கப்பாக்கு உங்கம்மா இருந்த போதே பொண்ணுங்களோட பழக்கம், இன்னும் இல்லாதப்போ கேட்கவா வேணும்? ஆனா அவர் போறதுக்கு நான் என்னவோ அவரை அனுப்பின மாதிரி பேசின, உங்க சொத்தை நான் என்னவோ ஆட்டைய போடற மாதிரி பேசின, நான் வந்ததுக்கு அப்புறம் உங்க சொத்து எவ்வளவு அதிகமாயிருக்குன்னு உனக்கு தெரியுமா? அதுல என் உழைப்பு என்னன்னு தெரியுமா. அஃப்கோர்ஸ் எனக்கு அதுல லாபம் தான். லாபமில்லாத வேலையை நான் செய்யறதில்லை. ஆனா என்னால உங்களுக்கு பல பல மடங்கு லாபம்”
“என்னை அவாய்ட் செஞ்சு உனக்கு நல்ல மாப்பிள்ளை உங்கப்பாவும் உன் அண்ணனும் கொண்டு வந்திருக்கலாம். ஆனா வரலை. அது அவங்களோட திறமையின்மையை காட்டுது. பிசினெஸ்சும் அப்படி தான். அப்படியும் சொல்லலாம், இல்லை நான் அவங்களை விட பலமடங்கு திறமைசாளின்னும் சொல்லலாம்”
“உன் வீட்ல உன்னோட ஏழு வருஷம் இருந்திருக்கேன். என்னை நீ தினமும் பார்த்திருக்க. நான் தப்பானவன் இல்லைன்னு உனக்கு தெரியும். ஆனாலும் வேலைக்கு வந்தவன்னு அலட்சியம். ஏதாவது நடந்தா சும்மா என் மேல பழி போடறது. உங்கம்மா இறந்த பிறகு நானும் விட்டு வந்திருந்தா தெரியும், உங்க குடும்பமே சின்னா பின்னமாயிருக்கும், உங்கப்பாவையும் சேர்த்து தான் சொல்றேன்”
“ப்ச், இந்த விளக்கம் எல்லாம் தேவையில்லை விடு, நான் சொல்றது இது தான்”              
“நான் நேர்மையானவன்! ஒழுக்கமானவன்! இது ரெண்டையுமே நீ என்கிட்டே தப்பு சொன்ன! அதனால அதை உன்கிட்ட கடை பிடிக்க வேண்டாம்னு நான் முடிவு பண்ணிட்டேன்! சோ சிம்பிள், திஸ் இஸ் மை ரூல்” என்று சொல்லி நிற்காமல் சென்று விட்டான்.
ஷர்மிளா விக்கித்து நின்று விட்டாள். 
                  
  
        
        
      
        
     

Advertisement