Advertisement

அத்தியாயம் இருபத்தி மூன்று :
ஐந்து இரவுகள் அவனில்லாத உறக்கம், என்னவோ மாதம் போல வருடம் போல் எண்ணம் ஷர்மிளாவிற்கு. இதற்கு நேற்று ஹாஸ்பிடலில் ஒரே ரூமில் தான் படுத்திருந்தான் ஆனால் பக்கம் இல்லையே. அப்படி அவனின் அருகாமைக்கு பழகி இருந்தாள்.  
இப்போது ரவியின் அணைப்பில் இருந்தாலும் அப்படி ஆழ்ந்த உறக்கம் இல்லை. மீண்டும் சண்டை வருமோ, போ என்று சொல்வானோ, இல்லை எனக்காய் ரோஷம் வந்து போடா என்று நான் சொல்லி செல்வேனோ, இப்படி பல அலைகழிப்பு!
அதனால் சில மணி நேரத்தில் விழித்துக் கொண்டாள். அவள் விழித்த போது ரவி விலகி நேராய் படுத்திருந்தான்.
ரவியை இப்போது தானாய் அணைக்கவா வேண்டாமா என்று ஒரு பெரிய விஷயம் மனதிற்குள் ஓட, அவன் தான் உறங்குகிறானே தானாய் அணைத்தால் தெரியவா போகிறது என்று தோன்ற, அவனின் அருகில் சென்று அவளின் ஏழு மாத வயிற்றை வாகாய் ஒருக்களித்து படுத்து அவனின் மீது பொருத்தி, ஒரு கையையும் காலையும் அவன் மீது வசதியாய் போட்டு ஒருவாறு சிரமம் இல்லாமல் சௌகர்யமாய் படுத்தாள்.
மனம் வெட்கம் கெட்டுப் போய் அவனை தேட, முன்பு போல எல்லாம் ஒதுக்கி “ஐ டோன்ட் வான்ட் டு பீ எ லூசர் இன் லைஃப்” என்று முடிவு செய்து அவனின் ரவியின் ஷர்மி க்கான அத்தனை விரும்பத் தகாத செய்கைகளையும் ஒதுக்கி வைத்தாள். வாழ்க்கை சந்தோஷமாய் செல்லாவிட்டாலும் பரவாயில்லை நிம்மதியாய் செல்லட்டும். இந்த மன உலப்பங்கள் குழப்பங்கள் என்று ஒன்றும் வேண்டாம் யோசனைகள் இப்படி ஓட, அமைதியாய் கண்மூடினாள்.      
அய்யகோ ஷர்மி எழுப்பாவிட்டாள் என்ன அவளின் பேபி அப்பாவின் மேல் பட்ட உற்சாகம் போல வயிற்றில் உருள, கையையும் காலையும் போட்ட போதே பாதி விழிப்பு வந்திருக்க, இப்போது பேபி அவனின் உடலில் பட அது லேசாய் என்றாலும் நன்றாய் விழிப்பு வந்து விட்ட போதும் அசையாமல் படுத்திருந்தான்.
ஆனால் கண் திறந்து கொண்டான், மனைவியை பார்க்க அவளோ வாகாய் படுத்தவள் கண்மூடி இருந்தாள்.
“இவளை என்ன தான் பண்றது, இப்படி படுத்திருக்கா? எங்கேயாவது பிடிச்சிக்குமோ தெரியலையே?” என்று அவனுக்கு தான் கவலையாகிப் போனது.
மெல்லிய குரலில் “ஷர்மி, வசதியா இருக்கா? இல்லைன்னா மாறி படு” என்றவனின் கை தானாய் குழந்தையின் அசைவை உணர முற்பட்டது.
“எனக்கு இது தான் வசதி? உங்களுக்கு இல்லையா?” என்று விலக முற்பட,
“ஏய் படுடி, உன்னை சொன்னா நீ என்னை சொல்வியா?” என்று அதட்டலிட்டான்.
அப்பாவின் குரலை கேட்டதும் பேபி இன்னும் அசைய, “என் பேபி கூட என் பேச்சை கேட்கறான். ஆனா உன் அண்ணனோட பேபி என் பேச்சை கேட்கறதும் இல்லை என்னை நம்பறதும் இல்லை. அவளை என்ன செய்யன்னு தெரியலை” என்று சலிப்பாய் ரவி சொல்ல,
முதலில் யாரை சொல்லுகிறான் என்றே புரியவில்லை, பின்னர் மெதுவாய் அவளின் முகம் புன்னகையில் விரிந்தது.
“என் அண்ணனோட பேபியை தான் நீங்க போடி சொல்லிட்டீங்களே” என்று குறைபட்டாள்.
“சொன்னா? நீயாருடா என்னை போடி சொல்ல, போக முடியாது போடா சொல்லணும். அதை விட்டுட்டு ஏங்கி ஏங்கி அழுவியா?”
“போடி கூட பரவாயில்லை. உனக்கு கியூல நிப்பாங்க அவங்களோட போன்னு சொன்னா” என்று சொல்லும் போதே குரல் அழுகைக்கு தயாராக…
“தப்பு தான் சொல்லியிருக்க கூடாது. ஆனா நீ என்னை எல்லோர் முன்னமும் ஐ ஹேட் யு சொல்லலாமா, அதையும் விட வேற எங்கேயாவது கல்யாணம் பண்ணியிருந்தா நிம்மதியா இருந்திருப்பேன் சொல்லலாமா சொல்லு” என்று அவன் கேட்க,
ஷர்மி பதில் சொல்லவில்லை, அந்த நிமிடத்தில் அந்த பேச்சு பிடிக்கவில்லை ரசிக்கவில்லை… ரவியின் இடத்தில் வேறு யாரையும் கற்பனையாய் கூட வைத்து பார்க்க முடியவில்லை.
ரவி கேள்வி கேட்டாலும் பதிலை எதிர்பார்க்கவில்லை. “அதுவும் எங்கம்மா அம்மா முன்னாடி சொல்ற, ஏதோ நான் கெட்டவன் மாதிரி, வில்லன் மாதிரி, இல்லை இன்னும் உங்க வீட்டு வேலைக்காரன் மாதிரி தான் பேசறாங்க”
“அவங்க முன்ன நீ சொல்ற? அதுவும் சந்தோஷ் இருக்கான், கௌசி இருக்கா”
“உனக்கு வாய் அதிகம்ன்னு எனக்கு தெரியும். ஆனா அவங்களுக்கு தெரியாது இல்லையா? உன்னோட வாய் மட்டும் தான் இப்போ நம்மோட இந்த நிலைக்கு காரணம்!” என்றான் பொதுவாய். 
ரவி திருமணத்தை சொன்னானா இல்லை அவர்களுக்குள் வரும் சண்டையை சொன்னானா பிரித்து அறிய முடியவில்லை. அந்த நேரம் அவனுடம் மீண்டும் ஒரு சண்டையை விரும்பாதவள் “எனக்கு தூக்கம் வருது!” என்றாள் சலுகையாய்.
அவளை அணைவாய் பிடித்தவன் “தூங்கு” என்று தட்டி கொடுத்தவன் மெதுவாய் அவளின் முகத்தினை வாசம் பிடித்தான்.
“பிரஷ் பண்ணிட்டேன், வாமிட் ஸ்மெல் வராது!” என்று மெல்லிய குரலில் முனக,
“முத்தம் வேணும்னா கேளுடி. அதுக்கு எதுக்கு முனகற” என்று விரிந்த சிரிப்பாய் ரவி சொல்ல,
“முத்தம் வேணும்னா நான் எடுத்துக்குவேன் இல்லை குடுத்துக்குவேன் அதுக்கு எதுக்கு கேட்கணும்?” என்று ஷர்மி வீம்பு பேசினாள்.
“குடுக்கறது ஓகே, அது என்ன எடுக்கறது?”
“குடுக்கும் போது உன்னோட முத்தத்தை எடுத்துக்குவேன் தானே” என்று புதிய தியரி பேசினாள்.
“அம்மாடி, செமடி நீ, எப்படி இப்படி?” என்று ரவி நக்கல் பேச, நொடியில் முகம் மாறியவள் அமைதியாய் விலக எத்தனித்தாள்.  
“இப்போ என்ன?” என்று ரவிக்கு கோபம் வந்து விட, அவள் விலக முடியாமல் இறுக்கிக் கொண்டான்,
“என்ன ஷர்மி?” என்று மீண்டும் கேட்க, அவள் பதிலே சொல்லவில்லை.
“ஆம்! எல்லாம் எனக்கு தானே தேவை. இவன் என்னை தேடுவதில்லை என்னை போல” என்ற எண்ணம் தான் வலுத்தது.
“சரி விடு, நானே குடுக்கறேன். அதுல எடுத்துக்கிட்டேன்னா நீ சொல்லு!” என்றபடி அவளை முத்தமிட, அவன் தலையை நிறைய குனிய வேண்டியிருந்தது. 
அது வசதியாகவே இல்லை அவனுக்கு சிரமாமயிருக்க, “ஒய் பெண்டாட்டி இன்னும் என் பக்கம் வா” என்றான்.
“மேல ஏறி படுத்திருக்கேன், ஒரு முத்தம் குடுக்கத் தெரியலை, இதுல இன்னும் பக்கம் வர்றதாம்” என்று நக்கல் செய்தவள், அவன் விட்ட வேலையை இவள் தொடர்ந்தாள். சற்று எம்பினாள் அதுவே அவளுக்கு வசதியாக இருந்தது. 
இந்த சண்டை சச்சரவு வார்த்தை பிரயோகங்கள் எல்லாவற்றையும் தூர வைத்து மனதை அமைதிபடுத்த ஒரு முத்தம். ஷர்மியின் மனதின் அலைபுருதல்கள் எல்லாம் வெகுவாய் மட்டுப்பட்டது.
முத்தம் கொடுத்தே ஓய்ந்து போனவள் அமைதியாய் கண்களை மூடிக் கொண்டாள் களைப்பில்.  
“இப்போ நீ குடுத்தியா எடுத்தியா?” என்றான் நிறைவாய்.
அதற்கு பதிலில்லை!
“ஒரு முத்தம்! அது குடுத்ததுக்கே ஒன்னும் முடியலை. இதுல என்னை நக்கல் வேற…” என்று வம்பிழுத்தான்.
அதற்கும் பதிலில்லை!
“நீ என்னவோ பேசிக் கொள், நான் எதற்கும் பதில் சொல்லப் போவதில்லை” என்பது போல இருந்து கொண்டாள். சில நிமிடங்களில் உறக்கம் தழுவ கண்கள் நித்திரைக்கு போக,
திடுக்கென்று விழித்தவள் “இன்னைக்கு நான் ஒன்னு பண்ணுனேன்” என்றாள், வீட்டை கேட்டதை சொல்லிவிடும் நோக்கத்துடன்.
“என்ன பண்ணினாலும் பிரச்சனையில்லை? நீ முதல்ல தூங்கு! மனசை அமைதியா வெச்சுக்கோ, உடம்பை நல்ல வெச்சிக்கோ, கோபமா வருதா என்னை டார்ச்சர் பண்ணு. எவ்ளோனாலும் தாங்குவேன், இப்போ தூங்கு!” என்று வெகுவாய் பேசிப் பேசி அவளை தூங்க வைத்தான்.
ரவியை மெத்தையாய் நினைத்து இரவு முழுவதும் அவன் மீது தான் உறக்கம்.
அதனால் ரவிக்கு சரியான உறக்கமில்லை. அவனுக்கு பயம் உறக்கத்தில் ஏடாகூடமாய் திரும்பி அவளை உதைத்து விட்டாள். காலையில் சற்று ஷர்மி தள்ளி படுத்தும் தான் “ஷப்பா” என்று சொல்லி உறங்க ஆரம்பித்தான்.  
ஆனாலும் காலையில் ரவி விழித்து விட்டான் ஷர்மிளா விழிக்க வில்லை.
எழுந்து இவன் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, ஏழு மணிக்கு எல்லாம் அழைப்பு மணி வாயிலில்.
இந்த நேரத்துக்கு யாருடா என்று நினைத்து கதவை திறக்க, வாயிலில் சந்தோஷ், தூங்காத விழிகளுடன்.
“என்னடா இந்த நேரத்துல?” என்று கேட்க நினைத்தாலும், அவன் தப்பாய் எடுக்க மாட்டான் என்று தெரிந்தாலும், ஒருவேளை தப்பாய் நினைத்து விட்டால் என்ன செய்வது என்று தோன்ற, எதுவும் கேட்காமல் “வா சந்தோஷ்” என்றான்.
“காலையில வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றான் அவனாகவே.
“டேய், என்னை திட்ட வைக்காதே!” என்று கடிந்தவன், “காஃபி சாப்பிட்டியா” என்றான்.
“இல்லை எழுந்ததும் வந்துட்டேன்”  
“தூங்கின மாதிரியே தெரியலை” என்று ரவி பேசிக் கொண்டே நடக்க, ஹாலில் சோஃபாவில் எல்லாம் உட்காரவில்லை, “ஷர்மி எங்கே?” என்றான்.
“ரூம்ல தூங்கறா!”  
“நான் அங்க போகட்டுமா”
“போயேன்”  
சென்றவன் ஷர்மி உறங்குவதை பார்த்து அங்கே இருந்த ஒரு தலையணையை எடுத்து கீழே தரையில் போட்டவன் படுத்து உறங்க ஆரம்பித்தான்.
சிறிது நேரம் கழித்து அவனுக்கு காஃபியுடன் வந்த ரவி அவன் உறங்கிவதை பார்த்து வெளியே சென்று விட்டான். மனம் முழுவதும் யோசனை மட்டுமே “என்ன, ஏன் இப்படி?” என்று.
“என்ன அண்ணா காபி கேட்ட திருப்பி எடுத்துட்டு வந்துட்ட?” என்று கௌசி கேட்க,
“சந்தோஷ் வந்தான் எடுத்துட்டு போனேன், தூங்கறான்”  
காலையில் எட்டு மணி போல தான் ஷர்மிளா விழித்தாள். விழித்தவள் பார்த்தது கீழே உறங்கும் சந்தோஷை தான்.
“இவன் என்ன இங்கே உறங்குகிறான், ஏன்?” என்ற கேள்வி மண்டையை குடைய, “ஒருவேளை நான் நேற்று நிறைய புலம்பியதால் பயந்து விட்டானோ?” என்று தோன்றியது.
வெளியே வந்தவள் “ஏன் சந்தோஷ் இங்க படுத்திருக்கான்?” என்றாள் ரவியுடன்.
“தெரியலை, வந்தான், உன்னை கேட்டான், தூங்கற சொன்னேன். உள்ள போய் பார்க்கட்டுமா கேட்டான், போ சொன்னேன், நான் காஃபியோட வந்து பார்த்தா தூங்கறான்”  
தன்னுடைய நேற்றைய பேச்சு மட்டுமல்ல, வேறு என்னவோ இருக்கிறது என்று உள்மனது சொல்ல, வேகமாய் திரும்ப உள்ளே சென்றாள்.
இவள் நடக்கும் வேகத்தை பார்த்து “மெதுவா போ ஷர்மி” என்று அவன் குரல் அவளுக்கு கேட்டிருக்குமா என்று கூட தெரியவில்லை.  
ரூமின் உள் சென்று விட்டாள்.
ரவி தான் அவளுக்கு பால் காய்ச்சி எடுத்துக் கொண்டு போனான். கௌசி “நான் செய்யறேன் அண்ணா” என்றதற்கு விடவில்லை.
“நான் இல்லாதப்போ நீ செய், நான் இருக்கும் போது நான் செய்யறேன்” என்று விட்டான். அவனுடைய மனைவிக்கு தங்கை என்றாலும் கௌசி செய்யும் அவசியமில்லையே, அதனால் அவனே பாலை காய்ச்சி எடுத்துக் கொண்டான்.
வேலை செய்பவர்களையும் அன்று வர சொல்லி விட்டான். கௌசிக்கு சமையலில் இருந்து விடுதலை கொடுக்க. இது அவன் வீடு அங்கே ஷர்மியும் சேர்ந்து வேலை செய்தாலாவது பரவாயில்லை, அவளுக்கு எந்த வேலையும் தெரியாது. அதையும் விட கவனித்தும் செய்ய மாட்டாள். எல்லாம் வேலையாட்கள் செய்து, செய்து வளர்ந்த பழக்கம்.
கௌசி நல்ல பெண் தான், இதை கருத்தில் கொள்ள மாட்டாள். ஆனால் நாளை இவன் அம்மாவே “பாரு பொண்டாட்டியை உட்கார வெச்சிகிட்டு தங்கையை வேலை வாங்கறான்” என்று சொல்வார்கள் என்று புரிந்தவனாய் சுதாரித்தான்.
“ஏன் அண்ணா நான் அண்ணிக்கு பால் காய்ச்சினா என்ன?” என்றாள் கௌசி முகத்தை சுருக்கி.
“எவ்வளவு வேலை செய்வ நீ, பாரு இப்போ டிஃபன் வேற செய்யணும், மதியம் சசிம்மாவும் ரமேஷும் வந்துடுவாங்க. அப்புறம் அவங்க பார்த்துக்குவாங்க. என்ன செய்யணும்னு நீ சொன்னா மட்டும் போதும்!” என்று சொல்லிவிட்டான்.
பாலோடு உள்ளே போக, இன்னும் சந்தோஷ் உறக்கத்தில் தான். ஆனால் அவனின் மொபைல் ஷர்மியின் கையில், அதை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன பண்ற அவன் மொபைல்ல?” என்று ரவி அதட்டும் போதே “ஷ்” என்று அவனை பதிலுக்கு அதட்டியவள், எடுத்த இடத்தில் அதனை வைத்து விட்டாள்.     
“அவன் பெர்மிஷன் இல்லாம எதுக்கு எடுத்த?” என்று ரவி பேச,
“ஐ நோ” என்று பதில் சொல்லிய ஷர்மி, நிச்சயம் நேற்று இருந்தவள் அல்ல. ஆம்! அவளின் பலவீனம் தடுமாற்றம் எல்லாம் ரவியிடம் மட்டுமே. வேறு எந்த விஷயத்திலும் யாரிடத்திலும் கிடையாது
“என்ன விஷயம்?”
“அவனே சொல்லுவான், அவன் சொல்லலைன்னா நான் சொல்றேன்!” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சந்தோஷ் விழிக்க, நேராய் படுத்தவன், இருவரையும் பார்த்து, “உங்களை டிஸ்டர்ப் பண்றேனா?” என்றான் சங்கடமாக.
“அப்படியே எட்டி உதைச்சேன்னு வெச்சிக்கோ, என் கால் வலிக்குமேன்னு பார்க்கறேன்” என்று ஷர்மி சொல்லிய விதத்தில் மற்ற இருவருக்கும் சிரிப்பு வந்தது. ஆனாலும் “என்ன பேச்சு இது ஷர்மி?” என்று ரவி அதட்ட,
“ம்ம், இது தான் என் பேச்சு!” என்றாள் தைரியமாக.
“மாமா, நேத்து யாரோ அழுதிட்டே இருந்தாங்களாம். ஹாஸ்பிடல் எல்லாம் போய் படுத்து எழுந்து வந்தாங்கலாம், அவங்களை பார்த்தீங்களா?” என்று சொல்லிக் கொண்டே சந்தோஷ் எழுந்தவன் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

Advertisement