Advertisement

அப்போதும் லக்ஷ்மி வார்த்தைகளால் கேசவனை வதைத்து கொண்டு தான் இருப்பார். அவரை மட்டுமல்ல மகனை மகளை எல்லோரையும். ஒரு வகையான மனநோயாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அது முற்றும் முன்பே ஆஸ்த்துமா அவரை கொண்டு போய் விட்டது, மூன்று வருடங்களுக்கு முன்!
சாகும் வயதல்ல அவருக்கு, உணவு வாழ்க்கை முறை உடற்பயிற்சி மருந்துகள் என்று இருந்திருந்தால் லக்ஷ்மிக்கு நோய் தீவிரமாகி இருக்காது.
ஆனால் உண்பது உறங்குவது இது மட்டுமே வாழ்க்கை முறையாய் இருக்க, ஒரே நாளில் ஸ்டேடஸ் ஆஸ்த்மாடிகஸ் என்னும் அதி தீவிரமான அட்டாக் எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் அவரை கொண்டு சென்று விட்டது.     
இதோ இப்போது வீட்டினில் சந்தோஷும் கேசவனும் ஆளுக்கொரு மூளையில் இருப்பர். இழுத்து பிடிக்கும் ஒரே ஜீவன் ஷர்மிளா மட்டுமே!
கேசவன் சமீபமாய் நிறைய வெளியில் சுற்றுகிறார், அதுவும் பார்ட்டிகளுக்கு கூட ஒரு பெண்ணை அழைத்து போகிறார் என்பது அவன் காதுகளுக்கு வந்திருந்தது.
அவர் சுற்றுவதில் அவனுக்கு என்ன? அவனுக்கொன்றுமில்லை. ஆனால் ஒரே பெண்ணுடன் சுற்றுவது அவனுக்கு என்னவோ சரியாய் படவில்லை.
வரும் போது பார்த்துக் கொள்ளலாம், நமக்கென்ன என்று இருந்த போதும், ஏதும் பிரச்சனை என்றால் எப்படி விலகுவது, இவனுக்கு என்ன எடுத்துக் கொள்வது என்ற கணக்கை போட ஆரம்பித்து விட்டான்.
முறுக்கு கம்பிகள் பாக்டரி முடித்து, பின்பு பேப்பர் கம்பனி சென்று, பின்பு திரும்ப இங்கு வந்து என்று சுழன்று அடித்தான்.
மாலை எட்டு மணிக்கு பங்களா வந்தவன் பக்கவாட்டில் இருந்த அவனின் சிறு வீட்டிற்கு சென்று முகம் கழுவி, இலகுவான உடைக்கு மாறி,  பிரிட்ஜ் திறந்து பால் காய்ச்சி காஃபி வைத்து குடித்தவன், இரவு உணவிற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையோடு, பங்களாவின் உள் வந்தான்.
பொதுவாக கேசவன் ஊரில் இருந்தாலும் இல்லையென்றாலும் காலை மாலை பங்களாவினுள் அவனின் விசிட் இருக்கும். கேசவன் இருக்கும் போது மிக குறைந்த நேரமும் இல்லாத போது அதிக நேரமும் இருப்பான். காலையில் அண்ணன் தங்கை இருவரும் கல்லூரி கிளம்பும் வரை மாலை அவர்கள் உறங்க செல்லும் வரை.
ரவீந்திரன் அங்கே வேலைக்கு கும்பகோணத்தில் இருந்து தான் ஒரு பிள்ளைகள் இல்லாத கணவன் மனைவியை வேலைக்கு வைத்திருந்தான். அவன் அங்கே வந்து ஒரு வருடத்திற்கு லக்ஷ்மி வேலைக்கு ஆள் தேட அப்போது அவன் தான் சொல்லி அங்கே வந்தனர்.
அதனால் வீட்டை பத்தின கவலை யாருக்கும் இல்லை. அவர்கள் எல்லாம் பார்த்துக் கொள்வர். சூது வாது கள்ளம் கபடம் எதுவும் இல்லாத நல்ல மக்கள்.    
ரவி எவ்வளவு நேரம் இருந்தாலும் அங்கே தண்ணீரை தவிர எதுவும் அவனுக்கு எதுவும் இறங்காது. எதுவும் உண்ண மாட்டான். இங்கே வந்து அவசரமாய் சமைத்து உண்டு பின் அங்கே சென்று விடுவான் அலுவலக அறைக்கு.
அது கண்ணாடியால் ஆன அறை. அதனால் வீட்டின் உள் யார் என்ன செய்கிறார்கள் என்று தெரியும். சந்தோஷும் ஷர்மிளாவும் உண்டு உறங்கும் வரை அங்கே தான் இருப்பான்..   
அவர்களின் அப்பா எப்படி போனாலும் எனக்கென்ன என்று இருப்பவன் அவர்களை மட்டும் கண்காணிப்பில் வைத்திருப்பான். அவனுக்கு பயந்தே சந்தோஷ் ஒன்பதரை மணிக்கு மேல் வெளியில் இல்லாத மாதிரி பார்த்துக் கொள்வான்.
என்ன இருந்தாலும் அத்தை என்று அவனுக்கு பெரிதாக பாசம் இல்லாவிட்டாலும், அத்தையின் கணவனை கண்டு கொள்ளாத போதும், அவர்களால் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நன்றி இருந்தது. அவன் இங்கே வந்த போது ஷர்மிக்கு பதினைத்து வயது சந்தோஷிற்கு பதினேழு.
அதனால் கண் முன் வளர்ந்தவர்கள் அந்த அக்கறை இருக்கும், கூடவே அவர்கள் வீட்டினரால் தானே அவனின் வளர்ச்சி, அதனால் அந்த ஒரு எண்ணத்தில் அவர்களை எப்போதும் கண்காணிப்பான் அவர்களின் பாதுகாப்பிற்காய். 
அவன் வீட்டின் உள் நுழைந்ததுமே வீட்டை பார்க்கும் ரமேஷ் “தம்பி இன்னும் பொண்ணு வீட்டுக்கு வரலை” என்று சொல்ல, அவரின் மனைவி சசிகலாவை பார்த்தான்.
“ஃபோன் பண்ணி சொல்லுவா, ஒன்னும் சொல்லலை, இங்க வந்து தான் ரெடி ஆகிட்டு போனா, ஆனா எப்போ வருவான்னு சொல்லலை” என்று அவரும் சொல்ல,
எப்போதும் சொல்லிவிட்டு செல்பவள் அன்று கைபேசியில் பேசிக் கொண்டே செல்ல, சொல்ல மறந்திருந்தாள்.  
எட்டு மணிக்கு மேல் ஆகியும் ஷர்மிளா வீடு வராததை பார்த்து அவளுக்கு அழைத்தான்.
வெகு நேரம் கழித்து எடுக்க பட.. ஒரே சத்தம் அந்த பக்கம், “எங்க இருக்க?”  
“பர்த்டே பார்ட்டி சந்தோஷ்து” என அவள் கத்தி பதில் சொல்ல..
அந்த சத்தமே ஏதோ பப் போல, டிஸ்கோ ஹால் போல சத்தம் வர.. “எங்க இருக்க?” என்று கேட்டு  உடனே கிளம்பி விட்டான்.
“இன்னும் ஒரு வருஷம், இவ படிப்பை முடிச்சதும் முதல்ல இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். இவ எங்க போறா, எங்க வர்றா, பத்திரமா இருக்காளான்னு பார்க்கறதே என் வேலையா போச்சு”    
உடை கூட மாற்றவில்லை, த்ரீபோர்த்ஸ், ஒரு டி ஷர்ட், பைக்கை எடுத்து விரைந்தான். அவன் செல்ல நாற்பத்தி ஐந்து நிமிடம் ஆகியிருந்தது.
அது ஐந்து நட்சத்திர விடுதியின் ஹால் அங்கே பார்ட்டி அரேஞ் செய்யப் பட்டிருக்க, ஏறக்குறைய நாற்பது, ஐம்பது பேர் இருந்தனர்.
பைக்கை பார்க் செய்து விட்டு அவன் உள்ளே செல்ல, பார்ட்டி ஹால் எங்கே என்றே தெரியவில்லை.
சந்தோஷ் பர்த்டே பார்ட்டி என்று சொல்லி, இடம் கண்டு அவன் போய் கதவை திறந்த போது “ஹோ” என்ற கூச்சல் உள்ளே.
அப்போது தான் சந்தோஷ் கேக்கை வெட்டிக் கொண்டிருந்தான் போல.
அந்த ஹாலை அதன் உணவு ஏற்பாடுகள், அடுக்கி வைக்க பட்டிருந்த பாட்டில்கள் எல்லாம் பார்த்ததும் முதலில் தோன்றியது..
“ரெண்டு லட்சம் இதுக்கு பத்தாதே” என்பது தான்.
பின்பு தான் அவன் கண்கள் ஷர்மிளாவை தேடின.. கேக் வெட்டி முடித்ததும்.. ஒரு யுவதிக்கு சந்தோஷ் கேக்கை ஊட்டிவிட, “ஹோ” வென்ற சத்தம் மீண்டும்.
பின் சந்தோஷ் ஷர்மிளாவை தேட, அவளும் அங்கே தான் இருந்தால் சற்று தள்ளி.. “ஷர்மி கம்” என்று சந்தோஷ் அழைக்க.. முதுகு வரை விரிந்த கூந்தல், அவளின் வளைவுகளை கச்சிதமாய் எடுத்துக் காட்டும் ஒரு சாட்டின் உடை.. ஆனால் நீளமாய் உடல் எங்கும் வெளியே தெரியாமல் இருந்தது.
அவனின் அருகில் சென்றதும் சந்தோஷ் கேக்கை ஷர்மிளாவிற்கு ஊட்டிவிட எடுக்கும் முன்னே அதை எடுத்து அவனுக்கு ஊட்டினாள் தங்கை.
“ஆனாலும் இவ ரொம்ப ஓவரா தான் அவளோட அண்ணனை கவனிக்கறா” என்று நினைத்தவன்,
“என்ன தான் செய்கிறார்கள் பார்ப்போம், பார்ட்டி எப்படி போகிறது என்று பார்ப்போம்” என்று நினைத்தவனாக அங்கேயே ஒரு ஓரமாக இருந்த ஒரு சேரில் அமர்ந்து கொண்டான்.
அவனின் உடை சற்றும் பொருத்தமில்லாத போதும், அவனின் தோற்றம் ஏதோ அந்த உடையிலேயே அவன் பார்ட்டிக்கு வந்திருப்பது போன்ற ஒரு அமைப்பை கொடுத்தது.
அங்கே செர்வ் செய்ய காத்திருந்த பேரர்கள் கூட ஒன்றும் சொல்லவில்லை.
ஆம்! கும்பகோணத்தில் இருந்து அப்பா கடன் வாங்கி கொடுத்த ஆயிரம் ரூபாயோடும் பழைய உடைகளோடும் ஒல்லியாய் உயரமாய் முகத்தில் ஒன்றிரண்டு பரு எட்டி பார்க்க .. தலை நிறைய முடியோடு, அம்மாஞ்சி லுக்கில் வந்தவன் இல்லை இவன்.
இன்றோ வீட்டில் அணியும் இலகுவான உடையோடு வந்திருந்தாலும் மேல் தட்டு மனிதனாய் யாரும் கேள்வி கேட்க விரும்பாத தோற்றத்தில் இருந்தான். ஆறடியில், அதற்குரிய ஆகிருதியான உடல் வாகு, அதனையும் விட அவனின் சிவந்த நிறம், இரண்டு நாட்களான தாடி, எல்லாம் என்னவோ ஒரு அழகையும் கம்பீரத்தையும் கொடுத்திருந்தன.
இவன் அமர்ந்ததும் “சர், ஹாட் ஆர் கோல்ட், எதுவும் சாப்பிடறீங்களா” என்று அங்கே செர்வ் செய்யும் ஆள் ஒருவன் கேட்க,
“வேண்டாம்” என்று தலையசைத்தவன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
இவனை சந்தோஷோ ஷர்மிளாவோ கவனிக்கவில்லை. அங்கே பாட்டு இன்னும் காதை கிழிக்க டான்ஸ் ஆரம்பமாகியது..
“யப்பா என்னமா ஆடுறாங்கடா” என்று தோன்றியது ஒரு ஜோடியின் ஆட்டத்தை பார்த்து. ரவீந்திரனுமே ரசித்து பார்த்திருந்தான்.
வந்தவுடனே ஷர்மிளாவை அழைத்து சென்று விடலாம் என்று தான் நினைத்தான்.
“இவ்வவளவு பணம் செலவு பண்ணி அப்படி என்னதான் பார்ட்டி பண்றாங்க பார்ப்போம்” என்று நினைத்தவனாக வேடிக்கை பார்த்திருந்தான்.
பின்பு வேறு ஒரு மியூசிக் ஓட, ஆளுக்கொரு புறம் ஒருவரை ஒருவர் பார்த்து ஒரே மாதிரி குதிக்க ஆரம்பிக்க அது ஒரு வகை நடனமாய் மாற.. அங்கே மகிழ்ச்சி உற்சாகம் இளமை எல்லாம் களைகட்டியது.
பார்த்திருந்த ரவிக்கு மனதில் ஒரு உற்சாகம்!
அவன் பார்த்திருந்த கல்லூரி வாழ்க்கையே வேறல்லவா, அப்போது பார்த்து ஒரு இளம் பெண் வந்து வந்து “டான்ஸ் பண்ணுங்க” என்று அவனை அழைத்தால் சிநேகமாய்.
“இல்லை வேண்டாம்”  
“உங்க பேர் என்ன?”  
அவனின் மனதும் இலகுவாய் இருக்க, அவன் சின்ன வயதில் எப்போதும் சொல்வது போல,  இந்தர், இந்திரன், ரவீந்திரன் என்றான் சற்று பலமாய்.
அப்போது பார்த்து பாட்டை மாற்ற, அந்த இடைவெளியில் சற்று தள்ளியிருந்த ஷர்மிளாவின் காதில் ரவீந்திரன் என்ற வார்த்தை மட்டும் விழ,
“யார்?” என்று திரும்பி பார்த்தாள்.
அவனை எதிர்பார்க்கவில்லை..
அவனை விழித்து பார்க்க..
“வாங்க டான்ஸ் பண்ணலாம்” என்று அந்த பெண் கூப்பிட.. 
அவன் மறுத்துக் கொண்டிருப்பதை பார்த்தவள். “இவன் எப்போ வந்தான் தெரியலையே, அச்சோ பில் எகிறும் போல இருக்கே. இவனை யாரு இங்க வர சொன்னா, காது தீயற அளவுக்கு பேசுவானே” என்று பார்த்திருந்தாள்.
கூடவே பார்வையில் பட்டது “என்னடா இவ யார் கிட்டயும் பேசக் கூட மாட்டா, இவன் கிட்ட போய் வழிஞ்சிகிட்டு டான்ஸ் பண்ண கூப்பிடறா, அவ்வளோ ஹேண்டசமா இவன், பார்டா வேலைக்காரனுக்கு வந்த வாழ்வை” என்று தோன்ற அவனை அலட்சியமாய் பார்த்திருந்தாள்.
இந்த பார்வைகள் தான் எப்போதும் ரவீந்திரனை சீண்டும்!
    
  
    
         
                        
  
     
                       
               
             

Advertisement