Advertisement

அத்தியாயம் இரண்டு :
ஷர்மிளா கல்லூரி கிளம்பி சென்ற பிறகு ரவீந்திரன் அவனின் அலுவலை பார்க்க ஆரம்பித்தான்.. அதுவரை சற்று நடிப்பே. ஷர்மிளாவை காக்க வைக்க. முதல் நாள் அவனை பார்த்த பார்வை என்றும் மறக்காது. அதன் பின்னும் அலட்சிய பார்வைகள் தான் நீ வேலைக்காரன் என்பது போல.  அதனைக் கொண்டே அவளை கண்டு கொள்ளவே மாட்டான். இன்னும் அவளிடம் அலட்சியமாய் நடப்பான் அவளை காக்க வைப்பதில் அலாதி இன்பம்.
ஒன்பது மணி ஆனதும்.. அந்த பங்களாவின் பக்கவாட்டில் இருந்த அவனின் சிறு வீட்டிற்கு சென்றான். ஒரு ஹால், ஒரு சமையலறை, குளியலறை, அவ்வளவே! ஆனால் அத்தனை வசதிகளும் இருக்கும். எல்லாம் ஃஹை ஃபை!
முன்பு பங்களாவின் பக்கவாட்டில் ஒரு ரூம் போல இருந்தது இவன் அங்கே வேலைக்கு வந்த புதிதில், அங்கே லக்ஷ்மி தங்கி கொள்ளச் சொல்ல.. பின்பு அங்கே அவன் ஸ்திரமாகியதும் சமையலைறை, கூடம், அதனோடே இணைந்த குளியலறை வசதிகள் என்று எளிமையாக அவன் ஒருவனுக்கு ஏற்ப விஸ்தரித்து கொண்டான்.     
வீட்டிற்கு வந்தவன் அவன் சமைத்து வைத்திருந்த சாதம், காய், பருப்பை உண்டு, மீதம் இருந்ததை மதியத்திற்கு எடுத்துக் கொண்டு, அவனுடைய பைக்கை எடுத்துக் கொண்டு தொழிற்சாலைக்கு  கிளம்பினான். கேசவனின் இரண்டு கார்கள் வீட்டில் தான் நிற்கிறது, இவன் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவனுக்கு பைக் தான் வசதி என்பதால் அதிக நேரம் அதையே உபயோகிப்பான்.    
அந்த பில்டிங் கட்டுவதற்கு தேவையான முறுக்கு கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலை. அதன் முதன்மை செயலன் இவன்.
ஆம்! இது சமீபமாய் மூன்று வருடங்களுக்கு முன் வாங்கப் பட்டது. அதில் அவன் சம பங்குதாரன். இது கேசவனுக்கு தெரிந்து நடந்த விஷயம், ஆனால் அவரின் மக்களான ஷர்மிளாவிற்கும் சந்தோஷிற்கும் தெரியாது.
ரவீந்திரன் அங்கே வந்த போது, “நம்ம கிட்ட வேலை இருக்கா தெரியலை, அவர் கிட்ட கேட்டு சொல்றேன். உனக்கு டிரைவிங் தெரியுமா? அவர் ரெண்டு மூணு தடவை காரை இடிச்சிட்டார், சோ இப்போதைக்கு டிரைவர் தான் தேவை. சம்மதம்னா இங்க சைட்ல ஒரு ரூம் இருக்கு தங்கிக்கோ. ரெண்டாயிரம் முன் பணம் வாங்கிக்கோ, சம்பளம் வாங்கற வரை உனக்கு சாப்பிட பிடிக்க, வெளில தான் சாப்பிட்டுக்கணும்” என்று வேகமாய் லக்ஷ்மி அடுக்க.. 
“என்னது டிரைவரா?” என்று மனது அரற்றிய போதும் நமக்கு சென்னை பழக வேண்டும் பின் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன், லக்ஷ்மி அவனிடம் அத்தை என்ற பாவனையை காண்பிக்காத போது, அவனும் அதனை காண்பிக்கவில்லை.
“எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?” என்றான் எடுத்தவுடனே.
“எவ்வளவு எதிர்பார்க்கற” என்றார் அவரும்.
“இங்க டிரைவர்ஸ் எவ்வளவு சம்பளம் வாங்குவாங்க எனக்கு தெரியாது. நான் ஒரு ரெண்டு மூணு நாள்ல சொல்றேன்” என்றான்.
லக்ஷ்மியின் கண்கள் விரிந்தது. இவ்வளவு தெளிவான பேச்சை ரவியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவளின் அண்ணன்கள் இப்படி கிடையாது.
“சரி” என்று தலையாட்டி ரூமை காண்பித்து விட்டு சென்றார்.
உண்மையில் கேசவன் காரை இடிக்கவெல்லாம் இல்லை. லக்ஷ்மிக்கு கேசவன் என்ன செய்கிறார், எங்கு செல்கிறார், வருகிறார், என்று தெரிய வேண்டும். லக்ஷ்மி சந்தேகப் பேர்வழியா இல்லை கேசவன் சற்று பெண்களிடம் சறுக்குபவரா, இது ஒரு மில்லியன் டாலர் கேள்வியே. அந்த கேள்விக்கு பதிலை தேடுவதற்காக ரவீந்திரனை பணிக்கு அமர்த்தினார் லக்ஷ்மி.
இப்படியும் சொல்லலாம், இல்லை, தான் சற்றும் தோற்றத்திலும், வசதியிலும், படிப்பிலும், பொருத்தமில்லாத போதும், ஏன் தன்னை திருமணம் செய்தார்? ஏதேனும் குறை இருக்குமோ, இல்லை வேறு யாரையாவது விரும்பி வீட்டில் கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டனரோ, இல்லை கெட்ட பழக்கங்கள் இருக்குமோ, பெண்களின் சகவாசமோ, இப்படி லக்ஷ்மி அதீத சந்தேகப் பேர்வழியாக இருந்து இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும் கேசவனின் நிம்மதி பறிக்க, வேறு இடத்தில் சுகத்தில் கேசவன் நிம்மதி தேட ஆரம்பித்தாரோ? 
“எனக்கு டிரைவர் வேண்டாம்” என்று கேசவன் சொன்னதற்கு முதன்மை காரணம், அது லக்ஷ்மியின் அண்ணன் மகன் என்ற காரணத்தால் மட்டுமே! பின்னே அவரின் செயல்கள் எல்லாம் வீட்டிற்கு தெரிந்து விடுமே!
ஆனாலும் லக்ஷ்மி பிடிவாதமாய் ரவியை பணிக்கு அமர்த்தி விட, இரண்டே நாட்களில் கேசவன், எங்கே போறார், கிளம்பிட்டாரா, என்ன பார்ட்டியா, உன்னால உள்ள பார்க்க முடியுமா? பொண்ணுங்கலோடவா பேசிட்டு இருக்கார், இப்படி கேள்விகளால் துளைக்க.. ஏனோ அது ரவிந்திரனிற்கு பிடிக்கவில்லை.
அவனை பொறுத்தவரை கணவன் மனைவி உறவை இப்படி தக்க வைக்க முடியாது. இருபத்தி ஒன்று வயது தான் அப்போது அவனிற்கு, ஆனால் அதீத புத்திசாலி. அவனின் முன்னேற்றம் லக்ஷ்மியோடு நின்றால் கொஞ்சமும் ஆகாது என்று புரிந்தவன், கேசவனுடன் நிற்பது என்று முடிவெடுத்து விட்டான்.  
கேசவனிடம், “இப்போ நான் போனா அத்தை நீங்க எங்க போனீங்க, யாரோட இருந்தீங்க, எல்லாம் கேட்பாங்க, என்ன சொல்லட்டும்?” என்று கேட்க, கேசவனுக்கு அந்த நொடி ரவீந்திரனை பிடித்து விட்டது.
அவன் என்ன உளவு பார்க்கவா அங்கே சேர்ந்தான்! அவனுக்கு தேவை, வேலை, பணம் அவ்வளவே!
“இதை சொல்லிடு” என்று அவர் காரணம் சொல்ல,
“நான் உங்களுக்கு டிரைவ் பண்றேன், கூடவே எனக்கு உங்க ஆஃபிஸ்ல வேலை வேணும்” என்றான் பளிச்சென்று.
கேசவனுக்கு உடனே யோசனையாகிப் போனது!
“என் விருப்பத்தை சொல்லிட்டேன், நான் இங்க வேலைக்கு தான் வந்தேன், அத்தை தான் என்னை டிரைவர் ஆக்கிட்டாங்க. நீங்க என்னை எடுக்கலைன்னா கூட, நேத்து உங்க செக்ரட்டரி கூட உங்க ஆஃபிஸ் பெர்சனல் ரூம்ல ரெண்டு மணி நேரம் சாயந்தரம் இருந்தீங்க. அதை சொல்ல மாட்டேன்” என்றான் இன்னும் பளிச்சென்று.
அன்று மாட்டியவர் தான் ரவீந்திரனிடம். இதுவரை எழவில்லை..
அவரை எந்த வகையிலும் அவன் மிரட்டவோ, தொந்தரவு செய்யவோ இல்லை. அவரின் உடன் இருந்தான். எப்படி என்று தொழிலை கற்றுக் கொண்டான் கிட்ட தட்ட ஒரு வருடம்.  
அவரினது பேப்பர் ஃபாக்டரி. பரம்பரை தொழில். அது பெரிய லாபமும் அல்லாமல் நஷ்டமும் அல்லாமல் சீராய் சென்று கொண்டிருக்க. இவன் வந்த ஒரு வருடத்திற்கு பிறகு வேலை கற்றுக் கொண்ட பிறகு, லாபத்தை அதிக மாக்க ஆரம்பித்தான். சரியாக அதன் ஒரு வருடத்திற்கு பிறகு அதுவரை அவருடன் டிரைவரை பயணித்த வேலையை விட்டு பாக்டரி வேலையை மட்டும் எடுத்து கொண்டான்.
ரவீந்திரனுடைய உழைப்பு, அசாத்திய திறமை, உடனுக்குடன் எல்லாம் செய்யும் பாங்கு பாக்டரிய முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதை கேசவனும் உணர்ந்தே இருந்தார்.
ஆனால் இதை அவன் செய்வதில் கேசவனுடைய பங்கும் அதிகம். அவனுக்கு முடிவெடுக்கும் உரிமையை அதிகாரத்தை கொடுத்தார். அது எந்த முதலாளியும் கொடுத்து விடுவது இல்லையே, பணத்தை மட்டுமே கொடுத்து கூட ரவியின் வாயை அவரால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.
அவனிடம் தெரியும் ஒரு ஜ்வாலையை கண்டு கொண்டார் என்றே சொல்ல வேண்டும். மற்றபடி முதல் நாள் பேசியதை தவிர கேசவனின் பெர்சனல் பற்றி ஒரு நாள் கூட ரவி பேசியது கிடையாது. அவனின் முதலாளி என்ற அதீத மரியாதையை கேசவனுக்கு கொடுப்பான்.    
கேசவன் புத்திசாலியாய் இருக்க போய் தான் ரவீந்திரனை இனம் கண்டு கொள்ள முடிந்தது.      
இன்னும் ஒரு வருடம் சென்ற பிறகு சத்தமில்லாமல் கேசவனுடன் அக்ரிமென்ட் போட ஆரம்பித்தான்.
“இதுவரை உங்க லாபம் இவ்வளவு. இப்போ நான் இவ்வளவு கொண்டு வந்திருக்கேன். இந்த வருஷ கடைசியில இவ்வளவு கொண்டு வர்றேன். எனக்கு எவ்வளவு பெர்சென்டேஜ் கொடுப்பீங்க” என்று கேட்டு அவன் கார்பரேட் வேலைக்காரன் என்று காண்பிக்க ஆரம்பித்தான்.
உண்மையில் அவன் காட்டிய லாபம் அப்படி தான். அதையும் விட அவன் சொல்லும் லாபமும் அப்படித்தான். அதையும் விட இதுவரை ஏனோ தானோ என்று இருந்த கேசவனிடம், பார்ப்பவர்கள் அவர்களாய் வந்து பேச ஆரம்பித்தனர். காரணம் எஸ் எஸ் பேப்பர் கம்பனியின் விளம்பரங்கள் அவரை பெரிய ஆளாய் காண்பித்தது.
என்ன தான் பரம்பரை பணக்காரர்கள் என்றாலும் புதிதாய் கிடைத்த இந்த மரியாதை அவரை யோசிக்க வைத்தது. கடைசியில் “நீ லாபம் காட்டினா எவ்வளவு எதிர்பார்ப்ப” என்று பேரத்தில் இறங்கினார்.
“முப்பது பெர்சென்ட்”  
“என்ன அவ்வளவா? எத்தனை லட்சம் தெரியுமா அது? முடியாது!” என்றவரிடம்..  
“யோசிங்க, என்னோட முப்பதை இல்லை, உங்களோட எழுபதை! எனக்கில்லைன்னா உங்களுக்கும இல்லை!” என்று. அது பேசும் போதே அவனுக்கு இருபத்தி நான்கே வயது!
“சரி, நீ லாபம் காட்டினா பார்க்கலாம்” என்றார். அது அசாத்தியமான விஷயம் என்று அவருக்கு தெரியும். அதை அவன் செய்யும் போது தானும் இதை செய்யலாம் என்று ஒரு தேர்ந்த வியாபாரியாய் யோசித்தார்.   
“பேச்சு மாறமாட்டீங்களே” என பேசி முடித்து அன்று ஆரம்பித்தது தான், பேப்பர் கம்பனி, நோட் புக்ஸ், பென், பென்சில், ரப்பர் ஷார்ப்னர் என்று வேறு தயாரிப்பில் இறங்கியது
கேசவன் அவன் சொன்னது போல எழுபதை நினைக்க ஆரம்பித்தார். அவனின் முப்பதை கண்டு கொள்ளவில்லை.
ஆனால் இது எல்லாம் அவர்களின் இருவருக்குள்ளும். லக்ஷ்மிக்கு எதுவும் தெரியாது. பொதுவாய் வியாபாரங்கள் லக்ஷ்மியின் காதிற்கு வராது, வந்தாலும் புரியாது. அதனால் இதனை மட்டுமாய் அண்ணன் மகன் என்பதால் கேசவனுக்கு லக்ஷ்மியிடம் சொல்ல விருப்பமில்லை.
இதில் கேசவனின் பெண்களினோடான சகவாசம் லக்ஷ்மிக்கு தெரிய வராமல் போனது. அண்ணன் மகன் அவருக்கு அப்படி இருந்திருந்தால் தன்னிடம் நிச்சயம் சொல்லியிருப்பான் என்று அவர் நினைத்திருந்தார்.
அண்ணனாவது.. மகனாவது.. பணம் மட்டுமே!  
நான்… எனது…
என்று மாறிப் போனான் ரவீந்திரன்!
உழைப்பு, பணம், முன்னேற்றம், அது கொடுக்கும் போதை, இதற்க்கு முற்றிலும் அடிமையாகியிருந்தான். ஒரே நேர் பாதை வேறு சிந்தனைகள் எதிலும் இல்லை.
ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு மிக நிச்சயம். கேசவன் இல்லாவிட்டால் இது சாத்தியமல்ல. எதோ ஒரு வகையில் அவனை நம்பி எல்லாம் விட்டார், இவன் நேரமும் காலமும் நன்றாய் இருக்க அவன் செய்து காட்டினான்.
அந்த நன்றி அவனுக்கு கேசவனிடம் எப்போதும் உண்டு. அதனால் அவர் என்ன செய்தாலும் லக்ஷ்மியின் காதுகளுக்கு வராமல் இவனும் பார்த்துக் கொண்டான். கேசவனுக்கும் வேறு எந்த வகையிலும் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொண்டான்.        

Advertisement