Advertisement

அத்தியாயம் பத்து :
இதோ கும்பகோணத்தின் ஒரு பிரசித்தி பெற்ற சிவன் கோவில் மண்டபத்தில், உறவுகள் சூழ ரவீந்திரன் ஷர்மிளாவின் திருமணம் நடந்து கொண்டிருந்தது.
கேசவனும் விசாலியுமே தாரை வார்த்துக் கொடுத்தனர். சந்தோஷ் தெளிவாய் சொல்லியிருந்தான், “அவங்க தான் நிற்பாங்க, நீ எந்த கலாட்டாவும் பண்ணக் கூடாது”. இதோ விசாலியின் குடும்பம் மொத்தமும் அங்கிருக்க கேசவனின் பக்கமும் இப்போது சற்று ஆட்கள் இருந்தனர்.
ஷர்மிளாவிற்கு மாப்பிள்ளை கொண்டு வந்த பெரியப்பா தான் “இப்படி பக்கத்துல மாப்பிள்ளையை வெச்சிகிட்டு, நான் எங்க எங்கயோ பார்த்திருக்கேன்” என்று பேசிக் கொண்டிருந்தார்.
ரவீந்திரன் முகத்தினில் ஒரு புன்னகை ஒட்டியிருக்க, அது மனதின் புன்னகை தான். நினைத்ததை நடத்தி விட்டானே. ஷர்மிளாவின் முகத்தில் ஒரு மென்னகை. ஆனால் அது உள்ளத்தில் இருந்து இல்லவே இல்லை.
அவளே தான் ரவீந்திரன் “வீட்டிற்கு வந்து சுத்தம் செய்” என்று மிரட்டிய தினம் பேசினாள். “பா, ரொம்ப என்னை லைக் பண்றான் போல. என்கிட்டே ப்ரப்போஸ் பண்ணினான். எனக்கு இதுவரை அவனை கல்யாணம் பண்ற ஐடியா இல்லை. பட் ஹி லவ்ஸ் மீ லாட் போல, என்னை கல்யாணம் பண்ண தான் இவ்வளவு ட்ரபிள் பண்றான். அவனை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க” என்று பேசி,
“உனக்கு பிடிக்காதுன்னு தான் பேசலை, இல்லைன்னா அவன் ஓகே தான். ரொம்ப திறமைசாலி, நல்லாவும் இருக்கான். குடும்பமும் வசதி கிடையாது தான். ஆனா பாரம்பர்யமான ஆளுங்க. நம்ம கிட்ட இப்ப நிறைய பிரச்சனை பண்றான். பட் கெட்டவன் கிடையாது, கெட்ட பழக்கமும் கிடையாது” என்று அவர் சொல்ல,
“நான் ஓகே சொல்லலாம் ஃபீல் பண்றேன் பா” என்றாள். ஆம்! முடித்துவிட முடிவெடுத்து விட்டாள். அவன் விடுவான் போல தோன்றவில்லை. என்ன வேலை செய்தவன் அது மட்டும் தானே குறை, அதை மறந்து விடு மனமே! தன்னை தானே அந்த நிமிடம் இருந்து தயார் செய்ய ஆரம்பித்தாள்.   
“நமக்கு நடக்கற பிரச்சனைகள்னாள இந்த முடிவா”
“இல்லைப்பா, உங்ககிட்ட தான் பிரச்சனை பண்றான். என்னை ப்ரப்போஸ் பண்ணி என் பின்னாடி சுத்தறான், தோணுது பண்ணிக்கலாம்னு, பொண்ணு கேட்டு வரட்டுமா கேட்கறான், ஓகே சொல்லட்டுமா?” என்று அப்பாவிடம் பேசி,
அவரை “ஓகே” என்று சொல்ல வைத்து.. சந்தோஷை ரவியிடமும் அவனின் அப்பா அம்மாவிடம் “பொண்ணு கேட்டு வாங்க” என்று சொல்ல வைத்து, இதோ திருமணம் நடந்து கொண்டிருந்தது.     
சீதாவும் அவரின் ஓரக்கத்தியும் அவர்களின் பெண்கள் நால்வரும் ஓடியாடி வேலை செய்ய, திருமணமான மூவருக்குமே குழைந்தைகள் இருக்க, ஆறு, நான்கு, இரண்டு, ஒன்று என்று வயதிலும் வரிசையாய் இருக்க, அவர்களும் பெண்களாய் இருக்க.. இடமே அவ்வளவு அழகாய் உயிர்ப்போடு இருந்தது இந்த பெண்களின் குழுமத்தில்.
விசாலி வீட்டினரும் ஆர்வத்தோடு தான் பங்கெடுத்தனர். சந்தோஷ் சொல்லி விட்டான் “உன் திருமணதிற்கு வந்திருக்கிறார்கள், எல்லோரையும் “வாங்க” என்று சொல்ல வேண்டும் சிறு முக சுழிப்பும் இருக்க கூடாது என்பதாக.
எப்போதடா இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் முடியும் என்பதாய் தான் ஷர்மியின் மனம் இருக்க, திருமணம் முடியும் வரை அவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசியிறாதவன் முடிந்ததும், “கல்யாணம் என் வாழ்க்கை முழுசுக்கும் ஒரு தடவை தான், கொஞ்சம் சிரிச்ச முகமா தான் இரேன்” என்றான் அவளுக்கு மட்டும் கேட்குமாறு.
பதில் எதுவும் பேசவில்லை, இன்னும் விரிவான புன்னகையை முகத்தினில் கொண்டு வந்தாள், ஆனால் அது கண்களை எட்டவில்லை. அதுவும் அந்த பொடுசுகள் எல்லாம் “அத்தை, அத்தை” என்று அவளை சுற்றி வரும் போது மனதிற்கு இதமாய் இருந்தது.
மறந்தும் “மாமா” என்று ரவியின் பக்கம் எந்த வாண்டும் செல்லவில்லை..
“மாமா கிட்ட போ, பக்கத்துல நில்லு” என்று பெரிய குட்டி இரண்டிடமும் சொன்ன போதும், “மாமாவா நாங்க மாட்டோம்” என்றுவிட்டு, முன் பின் பார்த்திராத நேற்று முதலே பார்த்திருந்த அத்தையின் பக்கம் வந்து நின்று கொண்டார்கள்.
இருபத்தி ஒரு வயதில் வீட்டை விட்டு வந்து விட்டான், அதன் பின் சென்றாலும் அதிக பட்சம் மூன்று நாட்கள் இருந்திருக்கிறான், தங்கையின் கணவர்களிடம் மரியாதையாய் பேசினான், நன்கு கவனித்தான், ஆனால் நெருக்கம் இல்லை. வீட்டினர் அத்தனை பேரும் ஒரு பயத்தோடு சற்று தள்ளியே நின்றனர். அவனின் அப்பா உட்பட. சீதாவோடு மட்டுமே நெருக்கம், அதுவும் இப்போது முட்டிக் கொண்டான், தங்கைகள் அவனோடு சற்று உரிமையாய் பேசினார்கள்.  
எல்லா வேலையும் தாத்தாவையும் பாட்டியையும் கேட்டே செய்தனர் அவர்களின் வீட்டில். இந்த திருமணம் பேசியதில் இருந்து இங்கே கும்பகோணம் வரும் வரை கேசவனிற்கு மனதில்லை. இந்த திருமணம் நடக்கும் விதத்தில், எல்லோர் முகத்திலும் இருக்கும் சந்தோஷத்தில், ஷர்மிளாவின் தெளிவான முகத்தில் தான் அவர் சற்று தெளிந்தார்.
ஆம்! திருமணதிற்கு சம்மதம் சொன்ன போதே வருவதை எதிர்கொள்ள தயாராகிவிட்டாள் ஷர்மிளா.
ஆனால் ரவீந்திரன் ஷர்மிளாவின் மீது அதீத கோபத்தில் இருந்தான், இந்த சம்மதத்தை முன்பே சொல்லியிருந்தால், தான் கீழிறங்கி இவ்வளவு வேலைகள் செய்திருக்க வேண்டாம் என்று நினைத்து.
அம்மா மீதும் கோபத்தில் இருந்தான், அவர்களாய் பெண் கேட்டு வாருங்கள் என்று சொல்லும்வரை கேட்க செல்லவில்லையே என்று.
ஆனால் அனைத்து மனக் கசப்புகளையும் மீறி திருமணம் நன்கு நடந்தது.. திருமணம் முடிந்து வீடு வந்த பிறகும் ஒரே ஆரவாரம் தான், சப்தம், கலககலப்பு என்று அவர்களின் வீடு ஜே ஜே என்று இருக்க, விசாலி வீட்டினரும் பொருந்தி போயினர்.
பொருந்தாதவர்கள் கேசவனும் சந்தோஷும் ஷர்மிளாவுமே அவர்களுக்கு எல்லாம் புதிது.. கேசவன் அங்கே அமர்ந்திருந்தவர்.. “நாம் ஹோட்டலுக்கு போகலாமா? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து வரலாம்” என்று சந்தோஷின் காதை கடிக்க,
“பா, வேண்டாம்பா, எல்லாம் பார்த்து பார்த்து கவனிக்கறாங்க, தப்பா நினைப்பாங்க” என்று அவனும் காதை கடிக்க,
ரவி அங்கே அமர்ந்திருந்தவன் அருகில் வந்து “எதுவும் வேணுமா மாமா?” என்றான்.
இந்த சகஜமான பேச்சு அன்று தான் வந்ததே. “அப்பாக்கு ரெஸ்ட் எடுக்கணுமாம்” என்று சந்தோஷ் அவசரமாய் சொல்ல,
“மேல ரூம் இருக்கு வாங்க” என்று அழைத்து போனான். அது அவனின் ரூம்.. “நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் கீழ சொல்லிக்கறேன்” என்று வாயில் வரை வந்தவன் திரும்ப என்ன நினைத்தானோ?
கேசவனின் அருகில் வந்தவன் “நாம நடந்தது எல்லாம் மறந்துடுவோம், எனக்கு ரொம்ப கோபம் நான் எந்த வகையில் குறைஞ்சிட்டேன், என்னை விட எல்லா விதத்திலையும் குறைஞ்ச மாப்பிள்ளைங்களை கொண்டு வர்றீங்க, ஆனா என்னை நான் கேட்டும் ஏன் கன்சிடர் பண்ணலைன்ற மாதிரி. மத்தவங்களுக்கு என்னை தெரியாம இருக்கலாம் ஆனா உங்களுக்கு கூடவா என்னை தெரியாது” என்று கேசவனை பார்த்து கேட்ட போது அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
நிச்சயம் அவர் கொண்டு வந்த மாப்பிள்ளைகள், அவர்களை ரவீந்திரன் தகைய விடாமல் செய்திருந்தாலும் ரவீந்திரனிற்கு நிச்சயம் சமம் கிடையாது.    
“அந்த கோபத்தில் தான் ரொம்ப தொந்தரவு குடுத்துட்டேன். எல்லாம் ஒரே மாசத்துல சரி செஞ்சிடறேன். இப்போவும் நான் குடுத்த தொந்தரவுக்குக்காக இந்த கல்யாணம் நடந்திருக்காது, அதுக்காக நீங்க பொண்ணை குடுத்திருக்க மாட்டீங்க, எனக்கு தெரியும். இது ஷர்மிளாவோட முடிவா தான் இருக்கும்”  
“எனக்கு அவளை பிடிச்சிருக்கு நம்புங்க. உங்க பொண்ணை நல்லா வெச்சிருப்பேன்றதை விட சந்தோஷமா வெச்சிருப்பேன்.. பேர் சொல்ற மாதிரி தான் இந்த சொசைட்டில இருப்பா , கண்டிப்பா நாங்க வாழப் போற வாழ்க்கைல புரியும்”
“அதனால எதுவும் தப்பா நடந்துடுச்சோன்னு நீங்க நினைக்க வேண்டாம், நடந்ததை மறந்துடுவோம்” என்று அவரிடம் கையெடுத்து கும்பிட்டவன், அவர் பதில் பேசுமுன்னே வேகமாய் திரும்பி நடந்து கீழிறங்கி விட்டான்.
என்னவோ அந்த வார்த்தைகளை கேட்ட பிறகு கேசவனின் மனதில் அப்படி ஒரு நிம்மதி சிறிது மலர்ச்சியும் கூட, சந்தோஷிற்கு “இவர் என்ன பண்ணினார், மன்னிப்பு கேட்டாரா இல்லை என்ன பண்ணினார்” என்ற சந்தேகம். ஏதோ ஒன்று ரவியின் இந்த பேச்சில் இருவரும் நிம்மதியுற்றவர்களாக உண்மையிலே படுத்து தூங்கி விட்டனர்.
மாலை தான் சந்தோஷ் எழுந்து அப்பாவையும் எழுப்பினான். விசாலி கணவனின் அருகில் கூட வரவில்லை. அங்கே ரவியின் வீட்டினரோடு பொருந்தி போனாள்.
இப்படியாக அவர்களின் திருமணம் முடிந்து சீர்வரிசை எல்லாம் சென்னையில் கொடுங்கள் என்று சொல்லி இருந்த போதும், நகையை மட்டும் இங்கே வைத்தனர். கும்பகோணமே அசந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
திருமணம் ரவியின் வீட்டினர் செய்ததால் அவர்கள் சிறப்பாய் செய்த போதும், அவர்களின் கவனம் சடங்குகளில், சம்ப்ரதாயங்களில், உபசரிப்பில் இப்படித்தான். ரவியும் பெரிதாய் ஆடம்பரம் விரும்பவில்லை. சொந்தங்கள் தானே, தொழில் முறை கிடையாதே.  
இந்த நகைகளை வைக்கவே அவர்களின் கூடம் சரியாய் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.. லக்ஷ்மி மகளுக்கு அவ்வளவு வாங்கி வைத்திருக்க… இன்னும் எதுவும் சூழல் சரியாகாத போதும், வாழ்க்கையில் முதல் முறை இடத்தை வைத்து கடனை வாங்கி, மகளுக்கு நகைகளை குவித்திருந்தார் கேசவன்.
ஒரு நகைக் கடை தான்!
விசாலியின் அம்மா விசாலியிடம் முணுமுணுக்கவே செய்தார், “அப்பா, உன் வீட்டுக்காரர் பொண்ணுக்கு என்னமா செஞ்சிருக்கார். அதுதான் அந்த பொண்ணுக்கு அவ்வளவு திமிர்” என்று.
தினம் ஒன்றாய் போட்டால் கூட வருடம் முழுவதும் வரும். ஷர்மிளாவிற்கு அதையெல்லாம் ஒன்றாய் பார்த்த போது தான் அவளிடம் இத்தனை இருப்பது அவளுக்கே தெரிந்தது.
“இதுக்காக தான் என்னை கல்யாணம் பண்ண நினைச்சானோ?” என்று மனதில் தோன்ற, அவளுக்காவது மனதில் தோன்றியது. மனதில் தோன்றியதை கண்களில் பிரதிபலிக்க அவனை பார்த்தாள். அவளின் பார்வையை சரியாய் படித்தானோ?
சீதா மகனிடம் வாய் விட்டே தனிமையில் கேட்டார். “இப்படி சொத்துக்கு ஆசைப்பட்டு தான் இவ்வளவு பிரச்சனை பண்ணி அவங்களை பொண்ணு குடுக்கற மாதிரி செஞ்சியா” என்று.
அவனின் மனதிற்குள் பிரளயம் ஒன்று வெடிக்க, அம்மாவிடம் பதிலே சொல்லவில்லை! கேசவன் வீட்டினர் சொல்லிக் கொண்டு புறப்படும் வரை அமைதி காத்தவன். அவர்கள் கிளம்பி மற்றவர்கள் எல்லாம் உணவு உண்ணும் வரை பொறுமை காத்தான்,
“மணமகளும், மாப்பிள்ளையும், சேர்ந்து தான் உன்ன வேண்டும்” என்று சொல்ல,
ஷர்மிளாவிற்காக உணவில் கை வைத்தவனால் உண்ணவே முடியவில்லை! இரண்டு இட்லிகளோடு நிறுத்திக் கொண்டவன், சீதா வைக்க வந்த போதும் “மா, நீ போய் மத்தவங்களை கவனி” என்று அடிக் குரலில் சீறினான்.
“எதற்கு இவ்வளவு கோபம் சீற்றம்” என்று ஷர்மிளாவிற்கு புரியவில்லை. இவனின் கோபம் என்னை என்ன செய்யும் என்று அசராமல் இருந்தார் சீதா.
உணவு உண்டு முடித்ததுமே பாட்டி தாத்தாவிடம் சென்றவன் “பாட்டி ஃபாக்டரில ஒரு பிரச்சனை, நான் உடனே போகணும், ஷர்மிளாவை அனுப்பறீங்களா இல்லை நீங்க அப்புறமா கொண்டு வந்து விடறீங்களா?” என
“டேய், என்னடா இப்படி சொல்ற? சடங்குக்கெலாம் ஏற்பாடு பண்ணியிருக்கோம் இப்படி சொல்ற?” என்று பதறினார்.
“இப்போ தான் செய்தி வந்துச்சு, அவசரமா போயே ஆகணும்” என்றான் பிடிவாதமான குரலில்.
செய்தி கேட்டு சீதா அரக்க பறக்க வந்து, “என்னடா” என,
“நகையையும் நீயே வெச்சிக்கோ, அவளையும் நீயே வெச்சிக்கோ, நான் இனி இந்த வீட்டுக்கு வர மாட்டேன். எவ்வளவு என்னை பத்தி உயர்வான எண்ணம் வெச்சிருக்க நீ” என்று அவன் சொன்ன போது அவனையும் மீறி குரல் கரகரக்க கண்களும் சிறிது கலங்கியதோ..
“எப்போ அவளை கொண்டு வந்து விடணும்னு தோணுதோ கொண்டு வந்து விடுங்க” என்று சொன்னவன் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை ஷர்மியிடமும் சொல்லவில்லை, வாயிலிற்கு வந்தவன்,
இதோ புதிதாய் திருமணத்திற்காய் அவன் வாங்கியிருந்த வோல்வோ எடுத்துக் கொண்டு சீறி பாய்ந்து விட்டான். அவன் ஊருக்கு சென்றதே ஷர்மிளாவிற்கு தெரியவில்லை.
“என்ன சொன்ன நீ அவன் கிட்ட. நீதான் ஏதோ சொல்லியிருக்க” என்று மொத்த வீடும் சீதாவை திட்ட,
என்னவோ பிரச்சனை என்று அந்த இடத்திற்கு ஷர்மிளா வந்தாள். வெண்பட்டில் மிதமான அலங்காரத்தோடு வந்து நின்ற அவளிடம் என்ன சொல்வது என்று எல்லோரும் விழிக்க, “என்ன அச்சு?” என்றாள் அவர்களின் கலவரமான முகம் பார்த்து.
“ஃபாக்டரில ஏதோ பிரச்சனையாம், அவசர வேலையாம், அவன் கிளம்பிட்டான்” என்றனர்.
“எவன்?” என்றாள் புரிந்தும் புரியாமல்,
“ரவி” என்று சொல்ல,
“ஓஹ்” என்றவளுக்கு வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை.
அவளுக்கு போனது ஒன்றும் பெரிய விஷயமாய் தோன்றவில்லை, ஆனால் சொல்லாமல் போனது மனதை ஏதோ செய்தது.
என்னென்னவோ தோன்றியது, “அப்போ என்னை இங்கயே விட்டுடுவானோ? ஒரு வேளை என்னை பழி வாங்க தான் திருமணம் செய்து கொண்டானோ? அப்போவோட பிசினெஸ் எதுவும் சரி செய்ய மாட்டானோ? நான் ஏமாந்து போய்விட்டேனோ?” என்று தோன்ற வந்து விடுமோ என்று தோன்றிய அழுகையை சிரமப் பட்டு அடக்கினாள்..
அவளை பற்றி சிறிதும் கவலைப் படமால்,
நான்.. எனது.. மனது..
என்று ஒருவன் கிளம்பிவிட்டான்.
இருட்டை கிழித்து பறந்து கொண்டிருந்த காரில் கண்களை ஓரிரு முறை துடைத்துக் கொண்டானோ?
“இப்படி ஒரு திருமணம் எனக்கு தேவையா? தேவையில்லாத பிடிவாதம் பிடித்து விட்டேனா?” என்றவனின் மனது “என் மேல் சற்றும் என் அம்மா நம்பிக்கை வைக்கவில்லையா?” என்றது.
“பெற்று வளர்த்த அவருக்கே இல்லாத போது பார்த்து வளர்ந்த அவளுக்கு எப்படி இருக்கும், அவளுடைய பேச்சிற்கு கோபப்பட்டு பார் நீ என்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இத்தனை வேலைகளையும் செய்திருக்க வேண்டாமோ?” என்று தான் தோன்றியது. 
         
             
    
      
  

Advertisement