Advertisement

“சிஸ், நீங்க ஹாஸ்பிடலுக்கு வழி சொல்லுங்க, சாரை கார்ல கூட்டிட்டு போயிடலாம்.”, என்று ஒருவன் கூற,
“உங்க வண்டி சாவி குடுங்க, நான் எடுத்திட்டு வந்துடறேன்”, இன்னொருவன் கைநீட்ட..
கடவுள் எல்லா நேரத்திலும், அனைத்து வடிவத்திலும் கூடவே இருந்து தன்னை வழிநடத்துகிறார், என்பதை தேஜு உளமாற நம்பிய தருணம் அது. சாவியைக் குடுத்துவிட்டு, தனாவை ஏற்றிய காரின் மறுபக்கம் தானும் ஏறி அவனை மடி தாங்கினாள். அவனது இடப்பக்க மார்பில் கைவைத்து இதயத் துடிப்பு இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொண்டே இருந்தாள். அதன் ரிதம் ஒரு மில்லி வினாடி தப்பினாலும், இவளது இதயம் நான்கு மடங்கு துடித்தது.
அடுத்த ஐந்து நிமிடத்தில் மருத்துவமனை வந்துவிட, தனஞ்செயனை உடனடியாக பரிசோத்தித்த டாக்டர், “ஒன்னும் பயப்படறதுக்கு இல்ல, நார்மலா மூச்சு விடறார். வலி இல்லன்னா அதிர்ச்சில மயங்கியிருக்கலாம். அட்மிட் பண்ணிடுங்க, ஸூச்சர் போடவேண்டி இருக்கும். க்ளீன் பண்ண நர்ஸ் வருவாங்க”, என்றவர், “ஹேர்-லைன் ஃபிராக்சர் இருக்கலாம். எதுக்கும் நாளைக்கு ஒரு எக்ஸ்-ரே எடுத்து கன்பார்ம் பண்ணிடறேன்”, என்று விட்டு மருத்துவர் நகர..
“சிஸ், உங்க வண்டி சாவி, சாரோட பர்ஸ், செல்.. கீழே கிடந்தது. விழுந்திடுச்சு போல.”, என்று பொருள்களைக் கொடுத்து, “யாருக்காவது தகவல் சொல்லனுமா? இல்ல நாங்க கிளம்பலாமா?”, என்று தயங்கி நின்ற அந்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்து அனுப்பி வைத்தாள்.
அதற்குள் தனாவை அறைக்கு அழைத்துச் சென்றிருந்தனர். குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருந்த அந்த அறையின் உள்ளே தனாவைத் தவிர வேறு யாரும் இல்லை. சில நொடிகளில் ஒரு நர்ஸ் வந்து, “ட்ரிப்ஸ் போட சொன்னார் டாக்டர்”, என்று விட்டு நன்றாக இருந்த வலது கையில் நரம்பு தேடி, venflon போட்டு ட்ரிப்ஸ்ஸோடு கனெக்ஷன் செய்து மருந்தை சீராக உட்புகுத்தினாள்.
“முடிஞ்சா இந்த துணிய எடுத்திடுங்க, இப்ப வந்து கிளீன் பண்ணுவேன். நீங்க பாத்ரூம் போய் ஃபிரஷ் ஆகிடுங்க, ட்ரெஸ்லாம் ரத்தமா இருக்கு. கதவு பூட்டிக்கோங்க. டாக்டர் ஒரு டெலிவரி அட்டென்ட் பண்ணிட்டு பத்து நிமிஷத்துல வருவாரு”, என்று சொல்லி செவிலி சென்றுவிட, தேஜு கதவினைப் பூட்டி தன்னை சுத்தம் செய்து வந்தாள்.
பின் தனாவின் அருகே வந்து அவனது நெற்றியில் கட்டி இருந்த தனது ஸ்டோலை விடுவிப்பதற்காக, மெல்ல பின்புறம் கட்டியிருந்த முடிச்சினை அவிழ்க்க குனிந்து அவனது தலைக்கடியில் இரு கைகளையும் விட, அதுவரை நினைவில்லாத தனஞ்செயன், ‘தேஜு’ என்று முனகி, ட்ரிப்ஸ்-காக ஊசி குத்தியிருந்த கையால் அவளை அணைத்தான்.
அவன் அழைப்பில் திகைத்த தேஜு எழ முடியாமல் அவன் மீதே கிடக்க, தலையை மட்டும் உயர்த்தி தனஞ்செயனுக்கு நினைவு திரும்பி விட்டதா? என்று பார்த்தாள். ம்ஹூம். அவன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.
தன்னை அறியாத மயங்கிய நிலையில் கூட என் அருகாமை இவனுக்கு தெரிகிறதா? என்று நெகிழ்ந்தவள், ‘தகுதியில்லாததுக்கு ஆசைப்படறீங்களே ஜெயன்?’, என்று விரக்தியாக கூறி, மெதுவாக முதிகிலிருந்த அவனது கையை சரி செய்து நேராக வைத்தாள். இவளது அசைவில் அவன் “ம்ம்”.. “ம்”, என்று முனக, இனி தாமதிக்காமல் கிளம்பிவிட வேண்டியதுதான் என்று மனம் கட்டளையிட, கதவருகே ஒரு நொடி நின்றவள், திரும்பி தனஞ்செயனின் அருகே வந்து சட்டென இதழ் பதித்து, “ஐ லவ் யூ, ஆனா நாம சேர முடியாது”, என்று கிசுகிசுப்பாக சொல்லி நிமிர, அதுவரை கரையைக் கடக்காமல்; இருந்த அவளது கண்ணீர்.. தனாவின் இதழில் விழுந்தது.
கண்களில் நீர் திரையிட ஏதும் கவனிக்காமல் விறுவிறுவென வெளியே சென்றவள், நினைவு வந்தவளாக ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் தனஞ்செயனின் வீட்டுக்கு தகவல் அளிக்குமாறு கூறி சென்று விட்டாள். அவ்வாறே ரிசப்ஷனில் செய்ய, தேவராஜனும், லீலாவதியும் உடனே வந்து விட்டனர். யாருக்கும் தேஜுவைப் பற்றி தெரிய வரவில்லை. ஆனால், தனஞ்செயனுக்கு அவள் வந்தாளோ? என்று கனவு போல ஒரு ஞாபகம். அவனுக்கு நினைவு திரும்பும்போது உப்புக்கரித்த உதடு சொன்ன உண்மை. ஆனால், மறைக்கப்பட்ட உண்மை. மருத்துவமனையில் ஸ்டோலை தந்தபோது, தனா சாலையில் அடிபட்டுக் கிடக்க மனிதாபிமானமுள்ள யாரோ தலையில் கட்டுப் போட்டு விட்டதாக அனைவரும் எண்ணினர். தனஞ்செயனைத் தவிர.. அவனுக்கு மட்டும் ஒரு உள்ளுணர்வு உறுத்தியது. அது தேஜுவை நினைவுறுத்தியது. ஸ்டோலை அவனது அறைக்கு கடத்தி விட்டான்.
டாக்டர் கூறியதுபோல, ஹேர்-லைன் கிராக் இருக்க, கையில் கட்டோடு, இரு வாரங்கள் இருந்தான். பின் மீண்டும் வீட்டில் இருவாரங்கள் முழு ஒய்வு. பின் வேலைக்கு செல்ல ஆரம்பிக்க, அவனது அன்றாட வழமை துவங்கியது. தேஜுவிடம் நேரடியாக கேட்டு விடலாமா என்ற எண்ணம் அவ்வப்போது வரும், ஆனால், திமிர் பிடித்தவள், செய்திருந்தாலுமே நிச்சயமாக ஒத்துக் கொள்ள மாட்டாள் என்பதால், தனஞ்செயன் கேட்கவில்லை.
தனஞ்செயனின் விடுமுறையால், வேலைப் பளு கூடியிருக்க.. தேஜுவின் நினைவுகள் அவ்வளவாக இல்லை. அவ்வளவாகத்தான் இல்லை. இரவின் தனிமையில் தேஜுவை நினைக்கக் கூடாது என்பதற்காகவே உடலுழைப்பை அதிகப் படுத்தினான், அசதியில் சீக்கிரம் உறங்கலாமே?  எப்போதாவது..  அவள் பாடிய ஏதாவது ஒரு யூ ட்யூப் பதிவினை போட்டுவிட்டு,  ஹெட்போனில் அவளது மதுரமான குரலில் லயித்து.. தேஜஸ்வினியின் நளினத்தை ரசித்திருப்பான்.
விடிந்து எழுந்ததும் அவன் இறுக்கமான முகத்தை முகமூடியாக அணிந்து கொள்வான். காரணம்,அவனது அம்மா லீலாவதி. தனஞ்செயனுக்கு கை சரியில்லாதபோது அவரால் எல்லா உதவிகளையும் செய்ய முடிந்தாலும், சிற்சில விஷயங்கள் கஷ்டப்பட்டு அவனே செய்ய வேண்டி இருந்தது. திருமணம் முடித்திருந்தால், மருமகள் பார்த்துக் கொண்டிருப்பாள் அல்லவா? என்ற எண்ணம் மேலோங்க.. திருமணம் பேச ஆரம்பித்தார்.
அவரின் அண்ணன் மகள் முதுகலை படித்து முடித்து திருமணத்திற்கு தயாராக இருப்பவள், ராதிகா என்று பெயர்.. தனாவிற்கே கொடுத்துவிட பெரியவர்கள் எண்ணம் கொள்ள…, விஷயம் தனஞ்செயனின் காதுக்கு வந்ததும்.. நிச்சயமாக சொந்தத்தில் திருமணம் முடிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டான். அப்பா தேவராஜன் இதில் தலையிடவில்லை, ‘புள்ளைக்கு பிடிச்சா மேலே பேசுவோம்’ என்று விட்டிருந்தார். இவன் தீர்மானமாக இருந்ததால், அவர் ஏதும் கூறவில்லை.
ஏனென்று கேட்ட மாமாவிடம், “சொந்தத்துல கல்யாணம்ங்கிறது தெரிஞ்சே பிரச்சனைய விலை கொடுத்து வாங்கறா மாதிரி மாமா, பொறக்கற புள்ளைங்க ஆரோக்கியமா இருக்காது-ன்னு டாக்டர்ல்லாம் சொல்றாங்க. அதுவுமில்லாம, ராதிகா எனக்கு தங்கச்சி-ன்னு மனசில பதிஞ்சிடுச்சு, அப்படித்தான் சின்னப்போலேர்ந்து நினைச்சிட்டு இருக்கேன். அதுக்கு நானே நல்ல பையனா பாக்கறேன் மாமா.”, என்று முடித்துவிட்டான்.
லீலாவதிக்கு இதில் நிரம்ப வருத்தம். ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு “சரி, வேறு வரன் கொண்டு வருகிறேன், வயதாகிறது,  திருமணம் முடித்துக் கொள்”, என்று தினம் ஒரு பெண்ணின் புகைப்படம் காண்பித்தார்.  அவனுக்கோ எந்த பெண்ணின் படம் பார்த்தாலும், தேஜுவின் முகமே நிழலாடியது. அதிலிருந்து, திருமணம் இப்போதைக்கு வேண்டாம், யார் புகைப்படமும் கொண்டு வராதீர்கள், பார்க்க மாட்டேன் என்றுவிட்டான்.
மனம், காலப் போக்கில் தேஜஸ்வினியை மறந்து விடும் என்று நினைத்தவனுக்கு.. தனக்கானவள் அவள்தான் என்ற விதை ஏற்கனவே விழுந்து விட்டதென்பது மிகத் தாமதமாகப் புரிந்தது. தகுதிக்கு மீறி ஆசைப்படாதே என்று ஒரு மனம் வாதிக்க… ‘அத்தனைக்கும் ஆசைப்படு ‘ என்ற ஓஷோவின் கருத்தை மறு மனம் தர்கிக்க… அப்படி ஒரு மன ஊசலாட்டம். அவளை அணுகலாமா வேண்டாமா என்பதில்தான் குழப்பமே தவிர பிடித்தம் குறித்த சஞ்சலங்கள் இல்லை. அது தான் உள்ளங்கை நெல்லிக்கனியாயிற்றே. ஆனால் அப்படி அணுகினால்.. அவளுக்கு தன்னை நினைவிருக்குமா? இது அவனது மில்லியன் டாலர் கேள்வி…
இந்த எண்ணங்களை மறக்க அவனுக்கு கிடைத்த ஒரே வழி.. மனதை ஒருமுகமாக வேலையில் செலுத்துவதே. அது இடியாப்ப சிக்கலாக இருந்தது. எங்காவது ஒரு நூல் நுனி கிடைக்கும் என தீவிர தேடலில் இருந்தான்.
+++++++++++++++++++
அந்த உருவம் ஒரு மனிதனை சற்றேறக்குறைய நாற்பது நாட்களாக பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை அது எதிர்பார்த்திருந்த தருணம் வரக்காணோம். ஆனால்.. மனதுக்குள் சொல்லிக்கொண்டது, “எத்தனை நாளானாலும் வெயிட் பண்ணுவேண்டா. உனக்கு கட்டம் கட்டியாச்சு. நீ.. இறந்த காலம் ஆகறத்துக்கு அதிக நாள் ஆகாது.
அது ஒரு தேக்கு மாற அறைகலன்கள் மட்டும் விற்பனை செய்யும் அங்காடி. மிக பணக்காரர்கள் மட்டுமே வாங்கும் விலையில் பொருட்கள் இருக்கும், அத்தனை வேலைப்பாடு மிகுந்தவை.  அங்கே ஒரு ஊஞ்சலை அந்த மனிதனும், அவனது மனைவியும் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தனர். இரு பக்கமும் ஸ்டாண்ட் வைத்து உருளையான மரத்தில் இணைத்திருந்தார். இணைக்கும் அந்த சட்டத்தில் இருந்து சங்கிலிகள் தொங்கின. அவை தெரியா வண்ணம் வித விதமான மணிகள் அலங்கரித்தன.  சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த ஊஞ்சலின்  இருக்கை மஹாராஜாக்களின் அரியசானத்தை ஒத்திருந்தது. இருக்கையின் இருபுறமும் வெல்வெட்டால் செய்யப்பட்ட திண்டுகள், பார்க்கவே அழகு அள்ளியது. விலை லகரங்களில் இருக்க… அதைபாராமலே “இதை நம்ம வீட்டுக்கு அனுப்பிடுங்க.அப்படியே எங்க ரூம்ல பிக்ஸ் பண்ணிட சொல்லுங்க “, என்றான் அம் மனிதன்.
பணம் செலுத்த அவனது அட்டையை விற்பனைப் பிரதிநிதியிடன் நீட்டினான். அதற்கு அவர்.. “எஸ் சார்”என்று விட்டு… “சார், அம்பதாயிரத்துக்கு மேல போனா, பான் நம்பர் வேணும்னு கேட்பாங்க. கொஞ்சம் கவுண்டருக்கு போயிடுங்க சார்.” பணிவாக கூற… இவன் நகர்ந்தான், கூடவே மனைவியையும் கூட்டிக்கொண்டு. .
அவன் நகர்ந்ததும்.. மெதுவாக அந்த ஊஞ்சலின்  அருகில் வந்த அந்த உருவம்,  அதைப் பார்வையிடுவதுபோல பாவனை செய்தது. யாரும் கவனிக்காத நேரத்தில், கையில் இருந்த பொத்தானை இருக்கையின் கீழ் பொருத்தியது. மற்றுமொரு சிறிய கருவியை சங்கிலியில் ஒட்ட வைத்தது. இரண்டுமே ஒட்டுக் கேட்கும் கருவிகள். அதற்கான சிறிய மாத்திரை அளவிலான பாட்டரி அவற்றை குறைந்தது ஒரு வருடம் இயக்கும்.
இவ்வுருவம் ஊஞ்சலில் அருகே நிற்பதை பார்த்த விற்பனை பிரதிநிதி… “இத அவங்க வாங்கிட்டாங்க, உங்களுக்கு வேற மாடல் காமிக்கவா?” என்றார்.
சின்ன கையசைவுடன் வேண்டாம் என்று விட்டு தேக்கு மரத்தினாலான சிறிய பரிச பொருளை வாங்கியது. கவுண்ட்டரில் பணமாகவே கட்டி சென்றது.
பின் மனதுக்குள் சொல்லிக் கொண்டது “நாளைலேர்ந்து ரொம்ப பிஸி.”..

Advertisement