Advertisement

அத்தியாயம் – 6
இந்த தகவலை அம்சுமான், தாத்தா சகர ராஜாவுக்கு சொல்ல.. சரி நாம ஆரம்பிச்ச யாகத்தையாவது  முடிச்சுவைப்போம்னு, சகர சக்ரவர்த்தி அஸ்வமேத யாகத்தை முடிச்சார். அந்த அறுபதாயிரம் பேருக்கு எப்படி திவச காரியம் செய்யறது? அவா அஸ்தி கபிலாஸ்ரமத்துலேயே கிடக்கே? அவா மனசு சாந்தியாரத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியாம… ரொம்ப நாள் கழிச்சு சகரர் இறந்து போய்ட்டார். இப்போ நாட்டை ஆள்றது யாரு? அவரோட பேரன் அம்சுமான், அம்சுமானோட காலம் முடிஞ்சதுகப்பறம் அவன் பிள்ளை திலீபன்-ன்னு அப்படியே காலம் போச்சு.  இவங்களுக்கெல்லாம் இருந்த ஒரே குறை.. முன்னோர்களான அந்த அறுபதினாயிரம் பேருக்கு திதி கொடுக்க முடிலயேன்னு. ஆகாச கங்கையை எப்படி பூமிக்கு கொண்டு வர்றதுன்னு ஆலோசனை பண்ணியே அவா காலம் போச்சு.. 
இப்போ வர்றான் நம்ம பகீரதன், தீலீபனோட பையன். இவன் என்ன பண்றான் தெரியுமோ? நம்ம அப்பா தாத்தா-லாம் எத்தனை முயற்சி செஞ்சும் ஆகாச கங்கை பூமிக்கு வரல, அப்போ இது மனித சக்திக்கு மேற்பட்ட விஷயம், நாம கடவுளை நினைச்சு தவம் பண்ணுவோம்-னு முடிவெடுத்தான்.  பகீரதனுக்கு குழந்தேள் இல்ல, மந்திரிகளை கூப்பிட்டு நீங்க ராஜ்ஜியத்த பாருங்கோ. நான் பிரம்மாவை நோக்கி தபஸ் பண்ணப் போறேன், அவர் வர்ற வரைக்கும், கங்கைத்தண்ணீய கொண்டு வர்றேன்னு சொல்ற வரைக்கும் அவரை விடறதா இல்லைன்னு தீர்மானம் பண்ணிண்டு, ரொம்ப கடுமையா அன்ன ஆகாரமில்லாம  தவம் பண்ண ஆரம்பிச்சான்.
*************************
ஆயிற்று.. அந்தக் கொலை நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் கொலை செய்தவன் யார் என்ற ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை. தடயவியலாளர்கள் கருத்துப்படி, மகேஷின் முகத்தில் முதலில் பெட்ரோலியம் வீசப்பட்டுள்ளது,  உடனே தீப்பற்றியிருக்க வேண்டும் அல்லது கொலைகாரன் தீ வைத்து இருக்கவேண்டும். அதன் பின் திராவகம். ஏற்கனவே தீயினால் சிதைந்த முகம்… அதில் திராவக வீச்சு என்றால்… நிச்சயம் மூன்றாம் நிலைத் தீக்காயம் ஆகும். அதாவது தோலின் மேல்பகுதியான எபிடெர்மிஸ், தோலின் கீழ்பகுதியான டெர்மிஸ் இவற்றின் சேதாரம் வெகு நிச்சயம். அதிலும் திராவக வீச்சு கண்/காது/மூக்கின் துவாரங்களில் என்றால் கேட்கவே வேண்டாம். இதில் விசித்திரம் என்னவென்றால்…  அந்த அறையின் தரை தவிர வேறு எங்கும் சேதாரமின்றி இருந்தது. தரையும், மேஜை அருகேயும் மட்டுமே இந்நிகழ்வால் சற்று சிதைந்திருந்தது. 
வேறு எந்த கைரேகைத் தடயங்களும் கிடைக்கவில்லை. மகேஷின் அலைபேசியில் தேடியதில்…  கடைசியாக வந்த அழைப்பு யாரென்று விசாரித்ததில்.. அது நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்து போன ஒருவனின் எண்ணிலிருந்து வந்திருந்தது. தவிர, அந்த எண்ணில் இருந்து அடுத்த அழைப்புகளும் செய்யப்படவில்லை. சரி, சிம் கார்டை மாற்றி அந்த அலைபேசியை யாராவது அடுத்து உபயோகித்தார்களா என்றால் அதுவுமில்லை. எனவே அலைபேசியின் IMEI எண் கொண்டும் அதனைக் கன்டுபிடிக்க இயலவில்லை. 
கொலையான மகேஷுடன் இந்த எக்ஸ் பேசியபோது எந்த டவரில் இருந்து சிக்னல் வந்தது என்பதைக் கண்டுபிடித்தாயிற்று, ஆனால் ஏதேனும் சந்தேகம் வந்தாலல்லவா இன்னார் என்று யூகித்து, அந்த மனிதனை சந்தேகிக்க முடியும்? அந்த அலைபேசி இணைப்பகத்தை [ டவர் ] உபயோகிக்கும் அனைவரையுமா சந்தேகிக்க இயலும்? இத்தனைக்கும் தனஞ்செயன், அந்த ஏரியாவின் சிக்னலில் இருந்த அத்தனை CCTV -க்களையும் ஆராய்ந்துவிட்டான். பிரதான சாலையில் கண்காணிப்புக்கு கருவி பொருத்தப்பட்டு இருக்கும். அனைத்து சாலைகளிலுமா? தவிர, காரில் செல்வோர் ப்ளூ டூத் உபயோகித்தால்.. அவர்கள் பேசுவதே தெரியதே?
பெட்ரோலிய மூலக்கூறுகளும், திராவாகத்தின் மூலக்கூறுகளும் அங்கிருந்த மேஜை மற்றும் அலங்கார பொம்மைகளின் உடைந்த பாகத்தில் இருந்து கிடைத்தது. அமில வீச்சின்போது சிதறி இருக்கலாம், என்று ஆய்வக அறிக்கை சொன்னது. காவலாளி [வாச்மேன்], நிச்சயமாக ஒருவரும் வரவில்லை என்று சத்தியம் செய்யாத குறையாக கூறினான். கிடைத்த CCTV பதிவும் அது உண்மைதான் என்கிறது.
கொலைக்கான காரணமும் ஓரளவு தெரியும், கொலை எவ்வாறு நிகழ்ந்தது என்பதும் தெரியும்.. ஆனால் புரியாத ஒரு விஷயம்… எப்படி இத்தனை விரைவாக அமிலவீச்சும், பெட்ரோல் வீச்சும் நடந்தது என்பதுதான். யார் இதைச் செய்தது என்பதும் கேள்விக்குறியே. பொதுவாக எப்படி திட்டமிட்டு செய்த கொலையாக இருந்தாலும், ஏதேனும் ஒரு தடயமாவது கொலை செய்பவன் தன் அறிவுக்கு எட்டாமல் விட்டுச் செல்வான். ஆனால் இந்த கொலையில் அப்படி ஒரு loose end கிடைக்கவேயில்லை.  
அதைவிட இக்கொலையில் இருந்த சிறப்பு, அது செயல்படுத்தப்பட்ட விதம், மிகத் துல்லிய நேரக்கணக்கு. பொதுவாக ஒரு மனிதனின் தொடு உணர்வு, மூளையை எட்டுவதற்கு ஐம்பது மில்லிவினாடிகளே ஆகும். [ஒரு வினாடி என்பது ஆயிரம் மில்லி வினாடிகள்]. அதற்கான எதிர்வினையும் இத்தனை விரைவாக நடக்கும், எனும்போது எவ்வாறு கொலைகாரன் இரண்டையும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் செய்தான் என்பதே. யார் என்பது மட்டும் கேள்வியாக நின்றது. அப்போது கொலையாளி ஒருவரா? அதற்கும் மேற்பட்டோரா?
இதுவரை தனஞ்செயனுக்கு கிடைத்த ஒரே உருப்படியான தகவல்… கொலையானவன், தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் விற்கும் பெரும்புள்ளி. வட தமிழகத்தின் தலைமையகம் இவன் என்பதை Narcotics Control Bureau
எனப்படும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு மையம் உறுதி செய்தது.
இவனைக் காண வரும் ஒவ்வொருவரும் ஒரு பகுதியின் சில்லறை விற்பனையாளர். புதிய மனிதர்கள் எவரும் இவனை சுலபத்தில் பார்த்துவிட முடியாது. கண்காணிப்பு கருவியால் வந்தவர் தெரிந்தவரா இல்லையா என்று ஊர்ஜிதப்படுத்திய பிறகுதான் அனுமதி வழங்கப்படும்.  மறைமுகமாக பலமான  அரசியல் மற்றும் அடியாள் பலம் உள்ளவன். அதாவது இவனது தொழில் லாபத்தில் அவர்களுக்கும் பங்கு உண்டு. இவனிடமிருந்து கப்பம் சரியாக செல்வதால், கட்சிகள் பாகுபாடின்றி இவனது தொழிலைக் கண்டுகொள்வதில்லை. அவர்கள் தயவில் காவல் துறை அவனுக்கு ஏவல் துறையாய் நின்றது. 
ஆனால், இந்த தகவலைக் கூறும்போது, அந்த அதிகாரியின் முகம் அவமானத்தில் அத்தனை கசங்கியது. குற்றவாளி யாரென தெரியும் ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய கைககள் கட்டப்பட்டிருக்கும். ஏதோ ஒரு திரைப்படத்தில்… , “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்” .. என்று ஒரு வசனம் வரும்,  என்றோ எப்போதோ கேட்ட பழைய திரைப்படத்தில் வரும் அந்த வசனம், தனாவின் நினைவுக்கு வந்தது. நாட்டையே போதை மயக்கத்தில் தள்ளும் இப்படிப்பட்ட இவன் இறந்ததில் வருத்தப்பட ஏதுமில்லை, நம்மால் செய்ய இயலாததை எவனோ ஒருவன் செய்திருக்கிறான், என்று முத்தாய்ப்பாய் கூறி மகிழ்ந்தார் தகவளித்த அவர்.    
இதற்கிடையே ஒருநாள் மாலை நேரத்தில் பெருங்குடியைத் தாண்டி இருந்த ஒரு பகுதியில் மகேஷிடம் தொடர்பில் இருந்த ஒருவனை [அந்தப் பகுதி கல்லூரிகளுக்கு அவன்தான் supplier] பார்த்து விசாரணை செய்துவிட்டு பிரதான சாலையில் வீடு திரும்பும்போது, ரமேஷ் கொலை நடந்த இடத்திற்கு வந்த, CCTV யில் பதிவாகி இருந்த, அவனிடம் வாடிக்கையாக கொள்முதல் செய்யும் மாணவன் எதிர் பக்க சிக்னலில் காத்திருப்பதைப் பார்த்த தனஞ்செயன், அவனிடம் பேசி கொலையானவனைப் பற்றி விபரம் சேகரிக்க எண்ணி, உடனடியாக தனது இரு சக்கர வாகனத்தை U டர்ன் செய்து அந்த மாணவனை தொடர்ந்தான். 
காரணம், கொலை நடந்த சில தினங்களில், தனா அம்மாணவனை விசாரிக்க கல்லூரிக்கே சென்று அனுமதி கேட்டான். அப்போது, கல்லூரியின் விடுதியில் தங்கி படிக்கும் அவனிடம் பேச ஹாஸ்டல் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. கூடுதலாக, போலீஸ் அதிகமாக கெடுபிடி செய்வதாக, கல்லூரி நிர்வாகம் வேறு அரசியல்வாதிகளுடன் பேசி அவனை, தனாவின் விசாரணையில் இருந்து காப்பாற்றி இருந்தனர். 
தனஞ்செயன் சீருடையில் இல்லாமல் இருந்தாலும், அவனது உடல்மொழியில்  இவன் போலீஸாயிருக்குமோ என்று சந்தேகித்த அந்த மாணவன், தனா அவனைப் பின் தொடர்வதை சற்று நேரம் கவனித்து, தன் வேகத்தை அதிகரித்தான்.
அவன் கவனிக்கிறான் என்பதை எப்போதோ புரிந்து கொண்ட தனஞ்செயன், எதிராளி வேகமெடுப்பான் என்பதைக் கணித்து, இவனும் வேகமெடுக்க, கிட்டத்தட்ட ஒரு பைக் ரேஸ் நடந்தது. ஆன் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்தவன், ஒரு no free left என்று அறிவிப்பிருந்த திருப்பத்தில் அவன் திடீரென திரும்ப, அவனை பின் தொடர்ந்த தனஞ்செயன் வண்டியைத் திருப்பினாலும் எதிரே வந்த காரைக் கண்டு, வேகத்தை குறைக்க வேறு வழியின்றி sudden break போட வேண்டியதாயிற்று.  அதில் அவனது பைக் ஸ்கிட் ஆகி வழுக்க, தனா இடது புறமாக கீழே விழுந்தான். ஆனால் அவனது கால் கியரில் ஏடாகூடமாக மாட்டி இருந்ததால், பைக் அவனையும் சேர்த்து சரட்டியபடி சாலையில் இழுத்துச் சென்றது.
வண்டி விழுந்த வேகத்திற்கு தலைக் கவசம் மட்டும் இல்லையென்றால், தனஞ்செயன் நேரடியாக சிவலோகப் பிராப்தி அடைந்திருப்பான். ஒருபக்கமாக விழுந்ததில் தோள்பட்டை மிக பலமாக அடிவாங்கி இருக்க, வண்டி அவனை இழுத்துச்சென்றதில் இடது பக்க உடல் சிராய்த்திருந்தது. பல இடங்களில் தோல் வழண்டு ரத்தச்சிகப்பாய் மாறி தகதகவென எரிய ஆரம்பித்தது.
சற்றே பெரிய கல் ஒன்று தனஞ்செயன் நெற்றியில் நச்சென மோதிச் சிதற, மெல்ல மெல்ல தனஞ்செயனுக்கு மயக்கம் வர ஆரம்பித்தது. அது பிரதான சாலையில்லை, போக்குவரத்து நெரிசல் இல்லாதபோதும், விபத்து நடந்ததும் இரண்டு மூன்று வண்டிகள் நின்றுவிட, அதிலிருந்தவர்கள் இவனை நோக்கி வர ஆரம்பித்திருந்தனர். தனா இழுபடும்போதே இரு இளைஞர்கள் தனா-வின் அருகே ஓடி வந்தது அவனுக்கு தெரிந்தது. பைக் அதன் வேகம் குறைந்து நிற்கவும், தனாவின் கண்கள் மூடவும் சரியாக இருந்தது.
“ஏய், யாராவது தண்ணீ எடுத்திட்டு வாங்கப்பா”,
“இன்னும் உயிரோடுதான் இருக்கார், மூச்சு வருது”
“வழி விடு, வழி விடு, காத்து வரட்டும்”
யார் யாரோ பேசுவது கேட்டாலும், அதீத வலியினால் தனஞ்செயனால் கண்களை திறக்க முடியவில்லை, சுய நினைவும் மெல்ல போவது போல தெரிந்தது. கடைசியாக அவன் உணர்ந்தது தேஜுவின் வாசம். பின் நினைவிழந்தான்.
தனஞ்செயன்  உணர்ந்தது சரிதான், தேஜு அடுத்த கச்சேரிக்கு ஒத்திகை பார்க்கவென அவளது கடற்கரை வீட்டிற்கு வந்திருக்க, பாடி முடித்து தான் சித்தியுடன் வசிக்கும் வீட்டிற்கு செல்லும் போதுதான் அந்த விபத்து நடந்தது.
ஹெல்மெட் போட்டிருந்ததால் ஆள் யாரென தெரியாவிட்டாலும், அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்ற எண்ணத்துடன்தான் தேஜஸ்வினி தான் வந்த இரு சக்கரவாகனத்தை நிறுத்தி, தனது தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு கீழே விழுந்து கிடப்பவனிடம் சென்றாள்.
தண்ணீரை வாங்கிய இளைஞன் ஹெல்மெட்டைக் கழட்டி நீர் தெளிக்க, அங்கே அப்படி தனஞ்செயனைப் பார்த்ததும் விதிர்விதிர்த்துப் போனாள் தேஜு. ‘ஜெயன்’ காற்றாய் வாயிலிருந்து வார்த்தை வர, உடலெங்கும் ரத்தக்கறையோடு, நெற்றியின் கீறலில் ரத்தம் சொட்ட, அந்த காட்சி இவள் உயிரை யாரோ உருவுவதுபோல் இருந்தது.
“அம்புலன்ஸ் கு போன் போட்டீங்களாப்பா?”, யாரோ குரல் கொடுக்க.. சுயத்திற்கு வந்த தேஜு, “ல்ல. இது அவுட்டர் ஏரியா, அம்புலன்ஸ் வர நேரமாகலாம், இங்க பக்கத்தில ஒரு டிஸ்பென்சரி இருக்கு, அங்க கூட்டிட்டு போயிடலாம்”, என்று கலங்கிய குரலில் சொல்லியபடி, தனஞ்செயனின் தலைக்காயத்திற்க்கு தன் ஸ்டோல் கொண்டு கட்டு போட்டுவிட,
“உங்களுக்கு தெரிஞ்சவங்களா சிஸ்?”, என்று கூட்டத்தில் ஒருவன் கேட்க..
தொண்டையடக்க, “ம்ம்”, என்றாள் பெண்.

Advertisement