Advertisement

அத்தியாயம் – 5
 அப்பறம் என்னாச்சு தெரியுமோ? தன பிள்ளைகள் இறந்த விஷயம் கேள்விப்பட்டு, தன பேரன் அம்சுமானை கூப்பிட்டு… ம்ம்ம்… இது யார்ரா இவன் ? -ன்னு யோசிக்கறேளா? இவன்தான் அசமஞ்சன்னு ஒருத்தன் இருந்தானே?, குழந்தேள தண்ணீல தள்ளிவிட்டானே அவனோட புள்ள.  அவன் நேரா கபிலரோட ஆஸ்ரமத்துக்கு போனான். அவர்ட்ட கேட்டு குதிரையை கூட்டிட்டு வந்துட்டான். ஆனா, செத்துப் போனவாள?… திருப்பி வர வைக்க முடியல. கபிலர் கிட்டயே கேட்டான், நீங்க அவங்களுக்கு குணம்..மா சொல்லி இருக்கலாமேன்னு? அவா எங்கப்பா கேக்கற நிலைமைல இருந்தா? ராஜா புள்ளைகள்ன்னு ஆணவம், அதான் அஸ்தியாயிட்டா-ன்னு சொல்லிட்டு தவம் பண்ண போயிட்டார். சரி செத்தவங்களுக்கு திவசமாவது பண்ணுவோம்னு.. அம்சுமான்,  ஜலம் எடுக்கப் போன போது, அங்க வந்த கருட பகவான், கபிலர் மாதிரியான பெரியவா கோபத்துல பொசுங்கினவாள இந்த தண்ணீல்லாம் குளிர்விக்காது, போயி ஆகாசத்துல இருக்கிற கங்கையை எடுத்துண்டு வா ன்னு சொல்லித்து.
**************************
இரவு வெகுநேரமாகியும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான் தனா. கண்களை மூடினால், தேஜுவின் முகமே வந்து நின்றது. கூடவே, அவளது சமயோஜிதமான புத்தி, தன் தவறுணர்ந்து சொன்ன சப்தமில்லா சாரி, பாடும் போது அவளது பாவனைகள் [ மேனரிசம்]…, அவளது பின்னலில் அடங்க மறுத்து நெற்றியில் விழுந்து கன்னத்தை தீண்டும்  சிறு கற்றை முடி.., நடந்த இரண்டு மணி நேர கச்சேரியின் போது அவளது அருகாமையை தெரிவித்த மெலிதான அவளது வாசம், அனைத்துக்கும் மேலாக அவளது தேன்குரல், தன்னைப் பார்த்ததும் வந்த முக பாவங்கள், செம்மை படர்ந்த கன்னங்கள், கடைசியான அவளது திகைத்த மற்றும் அலட்சியப் பார்வை உட்பட அனைத்தும் காணொளி பதிவினைபோல வந்து சென்றன.
கூடவே, “ச்சே .. இந்த பாட்டி கூப்பிட்டாங்க-ன்னு போனது தப்பா போச்சு. தூரமா இருந்திருந்தாலாவது பரவால்ல, கைக்கு எட்டற தூரத்துல உக்காந்து கவுத்துட்டா.. ராங்கி… பாத்து விட்டா பாரு ஒரு லுக்கு. ஜென்மத்துக்கு மறக்காது. அய்யோ… நேத்து வரைக்கும் நல்லா இருந்தேன், இப்போ என்ன தனியா புலம்ப வச்சிட்டாளே ?”, தன்னைத்தானே நொந்துகொண்டு தலையில் அடித்தவாறே எழுத்தவன்… இப்போது அறையின் குறுக்கும் நெடுக்கும் நடை பழகினான். 
அவனது சிந்தனை அவன் வசமில்லை,  நில்லென்று சொன்னால் நிற்குமா என்ன மனம்? நேரம் பதினொன்றை தொட்டிருந்தது. சற்று நேரம் உலாத்தியவன், படுக்கையில் அமர்ந்து, குனிந்தபடி இரண்டு கைககளையும் தலைக்கு முட்டுக் கொடுத்து இலக்கின்றி வெறித்திருந்தான். அப்போது, அலைபேசி அழைத்து, தனஞ்செயனின் புலன்களை  நடப்பிற்கு கொண்டு வர, அருகிருந்த மேஜையின் மேலிருந்த பேசியை எடுத்துப் பார்த்தான். அது அவனது துறையில் இருந்து வந்த அழைப்பு. தொடர்பு கொண்டு என்னவென்று வினவ, மறுமுனையில் அவனது சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு மனிதன் மிகக் கொடூரமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் வந்திருந்தது.    
துரிதமாக கிளம்பி, அம்மாவிடம் சொல்லிவிட்டு, அவ்விடத்திற்கு சென்றவன்.. கண்டது, முகம் மொத்தமாக எரிந்த நிலையில், மிகப் பயங்கரமாக..  தோல் என்ற போர்வை கிட்டத்தட்ட  இல்லாத தலைப்பகுதியுடன் கூடிய உடல். அந்த உடம்பில் வேறெங்கும் காயங்கள்  இல்லை. கோணல்மாணலாக அந்த உடல் கிடந்தது, மிகவும் வலியை அனுபவித்து துடித்தபடி இறப்பு நிகழ்ந்துள்ளது. அந்த இடம் ஒரு அலுவலக அறை. அறை சற்றே கலைந்திருந்தது. இந்த விபத்தின் போது நடந்த கைகலப்பாக இருக்கலாம், அல்லது, இந்த மனிதனே விபத்தின் போது நிலைதடுமாறியதால் ஏற்பட்டதால் இருக்கலாம். ஒரு பென் ஸ்டாண்ட் கீழே விழுந்திருந்தது,  தவிர ஒரு சில கோப்புகளும்.. ஒன்றிரண்டு அலங்கார பொம்மைகள் கீழே விழுந்ததில்  நொறுங்கி இருந்தன. 
இறந்த இம் மனிதனின் அலறல் சத்தம் கேட்டு அடுத்த வீட்டுக்காரர் வந்துள்ளார். அறை சாதாரணமாக மூடி இருந்ததாகவும், உள்ளே வந்து பார்க்கும்போது தரையில் அவர் துடித்துக் கொண்டு இருந்ததாகவும், தன் கண் முன்னே அவர் இறப்பு நிகழ்ந்ததெனவும்  அவர் தெரிவித்தார். வாயிற்காவலரும், உள்ளேயிருந்து சத்தம் கேட்ட பின்னர்… முதலில் வீட்டிற்கு சென்றதாகவும், அதன் பின்னரே வீட்டை  ஒட்டியிருந்த அலுவலகத்துக்கு சென்றதாகவும், அப்போதே பக்கத்து வீட்டுக்காரரும் வந்ததாகவும் கூறினார். 
வீட்டில் அந்த உடலுக்குச் சொந்தமானவன் மட்டுமே தனித்திருந்ததாக தெரிகிறது. அவனது குடும்பம் வெளியூர் சென்றிருப்பார்கள் போலும். அந்த இடத்தை ஆராய்ந்தவரை தனஞ்செயனின் அறிவுக்கு எட்டியது, இது ஒரு திட்டமிட்ட கொலை என்பதே. வாயிற்காப்போனை மீறி, கொலைகாரன் எவ்வாறு உள்ளே வந்தான்?, எவ்வாறு வெளியே சென்றான்?  என பல கேள்விகள். கூடவே, பிணத்தின் முகத்தை பார்த்ததில், வெறும் தீயினால் ஏற்பட்ட பாதிப்பு மட்டுமில்லை என்பது.. முகத்தின் விகாரத்தில் தெரிந்தது. 
முதலில் இறந்தவன் யார் என்று தெரிந்துகொள்ள தேவையானவைகளை செய்யுமாறு காவலர்களைப் பணித்தான். தடயவியல் நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்து தகவல்களை அளித்துவிட்டு…,  அடுத்திருந்த வீடுகளை நோட்டமிட ஆரம்பித்தான் தனஞ்செயன்.
அநேகமாக அனைத்து வீடுகளும்… மேல்தட்டு மக்கள் வசிப்பிடங்கள், அல்லது அவர்களின் கடற்கரை வீடுகள். சற்று தொலைவில் ஒரு பாழடைந்த பழைய வீடு தவிர… மற்ற குடியிருப்புக்கள் அனைத்தும் ஓரளவு புதுப்பொலிவுடன் இருந்தது. அதிக மனித சந்தடிகளின்றி, பாதிக்கும் மேற்ப்பட்ட வீடுகள் பூட்டிக் கிடந்தன. பழைய மஹாபலிபுரம் சாலையிலிருந்து, கிளையாகப் பிரிந்து சென்ற சற்று உள்ளடங்கிய தெரு அது. கூப்பிடு தொலைவில் கடற்கரை இருந்தது.
அந்த வீட்டினை சுற்றி வந்தான். மையிருட்டு.. ஆனாலும், நிகழ்ந்த அசம்பாவித்தால்.. அனைத்து விளக்குகளையும்  வீட்டின் செக்யூரிட்டி உயிர்ப்பித்திருந்தார். காம்பவுண்ட் சுற்றுச்சுவர் கோட்டைச் சுவர் போல சுமார் பதினைந்து அடி உயரமாக இருந்தது. வீட்டின் பின்புறம் அடர்வாக தேக்கு மரங்கள், விதவிதமான பழ மரங்கள், அளவான இடைவெளியில் இருந்தது. ஒரு புறம்… குரோட்டன்ஸ் வகை…. அவை சீராக வெட்டி நன்கு பராமரிக்கப்பட்டு இருந்தது. 
தனஞ்செயனின் அறிவுக்கு எட்டிய வரை, யாரும் சுற்றுச் சுவர் தாண்டி வந்திருக்க வாய்ப்பில்லை. காலடித் தடங்களோ, புல்தரையில் யாரும் நடந்ததற்கான அடையாளங்களோ இல்லை. வெளியிலிருந்து யாரும் வந்து செல்லவில்லையெனில்… ஒருவேளை கொலையாளி வீட்டினிலேயே பதுங்கி இருக்கிறானோ? அரவம் அடங்கியதும் வெளியேறுவானோ என்று சந்தேகித்தவன்…  வாட்ச்மேனைக் கூட்டிக்கொண்டு,எல்லா அறைகளையும் திறக்குமாறு கூறினான். அவற்றை முழுமையாக அலசியதில், யாரும் உள்ளே இல்லையென்பது புரிந்தது. மேலும் இவன் அறிந்தது என்னவெனில் அறைகள் அனைத்தும் கலைந்திருந்தது. எதையோ தேடியிருக்கிறார்கள். ஆனால் தேடியது கொலையுண்டவனா? அல்லது வெளியாட்களா? என்பது தெரியவில்லை.
CCTV பதிவினைக் கொண்டு எவ்விதமான முடிவுக்கும் தனஞ்செயனால் வர முடியவில்லை. காரணம்.. காலையில் இருந்து இரவு கடைசியாக வந்தவர்கள் வரை, அலுவலக நிமித்தமாகவே வந்திருந்தனர். அவர்களும் பத்து இருபது நிமிட இடைவேளையில், கொலையுண்டவனிடம் விடை பெற்று சென்றிருந்தனர்.
அதற்குள் நேரம் அதிகாலை மூன்றைக் கடக்க…, தடயவியாளர்கள் வந்தனர். குற்றக் காட்சிகளை புகைப்படமெடுத்து, பின் கொலை எந்தவிதமான ஆயுதத்தால் / காரணிகளால் நிகழ்ந்தது என்பதை தெளிவாக்க.. கீழிருந்த துகள்கள், உடைந்த பொருட்களை ஆய்வுக்குட்படுத்த சேகரித்தனர்.  கைரேகை நிபுணர்கள், கிடைத்த  ரேகைப் பதிவுகளை, மாதிரிகளை நகலெடுத்தனர்.
தனஞ்செயனிக்கு CCTV யின் பதிவுகள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.  இன்று கொலையுண்டவனைக் காண வந்த ஒருவனை எங்கோ பார்த்தது போலிருந்தது. அதை குறித்து யோசித்தவாறு இருந்தான். இவன் அங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை.. ஆனாலும்.. எதோ ஒன்று அவனை நிறுத்தி வைத்தது.
ஆம், எதையோ கவனிக்காது விடுகிறோம்.. என்ன அது? என்று
அவனது உள்ளுணர்வு உணர்த்த… சட்டென எழுந்தவன்… மகேஷைக் [கொலையுண்டவன்] காண அவனது அலுவலகத்திற்கு வந்து சென்றவர்களை ஆராய நினைத்து… CCTV பதிவுகளை மீண்டும் பார்வையிட்டான். வந்தவர்கள் ஏழெட்டு பேருக்கு மேல் இல்லை.. ஆனால், ஆச்சர்யப்படும் விதமாக… மூன்று பேரைத் தவிர, ஏனைய அனைவரும் பள்ளி/கல்லூரியில் பயிலும் மாணவர்கள் போல் இருந்தனர். அதிலும் ஒருவன், பள்ளிச் சீருடையிலேயே வந்திருந்தான்.
மற்றொருவனை எங்கோ பார்த்தது போல இருக்க,  திரையில் அவனைப் பார்த்து, பதிவினை நிறுத்து யோசித்தவன்… மீண்டும் பதிவினை ஓடவிட, அந்த மனிதன் திரும்பிச் செல்கையில் அவனது வலது கன்னத்தில் காது முடியும் இடத்தில் இருந்த பெரிய மச்சம் தென்பட…, ‘பளிச்’, மூலையில் பல்ப் எரிந்தது. ஒருமுறை, சாலையில் தாறுமாறாக இருசக்கர வாகனம் ஓட்டியதற்க்காக, அவனது வண்டியை போக்குவரத்து காவலர்களிடம் இவனே ஒப்படைத்தது நினைவுக்கு வந்தது. அப்போது இவன் பிரபல கல்லூரியில் படிப்பதாகவும், பெற்றோர் செல்வாக்கு மிக்கவர்கள் என்றும் அவன் கூறினான். அவனுக்கு இங்கே என்ன வேலை?
அலுவலகத்தில் நடப்பது தொழில் ரீதியான சந்திப்புகள் என்றால்,  அங்கு மாணாக்கர்கள் வருவானேன்? முதலில் மகேஷின் தொழில் என்ன? ம்ம். தெரிந்து கொள்ள வேண்டும், நினைத்தவன்.. தொடர்ந்து…, வந்தவர்களை பார்த்தான்
வந்த நடுத்தர வயதுடைய மூவரின் முகமும், ஒன்றும் வியாபார காந்தங்கள் போல் இல்லை. அறிவுத் தெளிவாகத்தான் இருந்தார்களா? என்ற சந்தேகம் எழும் அளவுக்கு அரை மயக்கநிலையிலிருந்த அவர்களின் கண்கள்… புகைத்து அடர் கருமையை சுமந்த உதடுகள், என்று போதையில் உள்ளவர்களைப்போல்…, என்று சென்ற தனஞ்செயனின் சிந்தனை ஓட்டம் நின்றது.
தன்னையறியாது.. “ஓஹ் . மை… காட்.”, என்று வாய்விட்டுக் கூறியவன்… இறந்தவன் ஒருவேளை போதை பொருள் விற்பவனாக இருந்தால்…? அரசாங்கம் விற்கும் மது பானங்களில் ஊறி.. அதைவிட அதிக மயக்கத்தை தேடும் நடுத்தர வயதுடையோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இறந்தவன் வாடிக்கையாளராக இருந்தால்…. ?, என்ற அனுமானத்திற்கு  வந்தான்.
“வெல் … பிசினெஸ் டீல் பேசுற ஆளுங்க மாதிரி இல்ல .. அப்போ ட்ரக்ன்னு முடிவுக்கு வரலாம்.. ஆனா ஆதாரம்?, இவன் ட்ரக் டீலர்-ங்கிறத்துக்கு ஆதாரம் என்ன?, நார்கட்டிக்ஸ் விங்-ல பேசணும். “, இதுவும் அவனுக்கவனே பேசிக்கொண்டான்.
“வந்த யாரும் இருபது நிமிஷதுக்கு மேல ஆபிஸ்ல இல்ல, மகேஷும் வீட்டுக்கு போகல. அப்போ ட்ரக்.அல்லது இவன் விக்கற வேற எதோ ஒன்னு, அவன் ஆபிஸ்-ல தான் இருக்கணும். ஒரு முறை போய் தேடலாம்”, மனதில் நினைத்து மகேஷின் அலுவலகம் சென்றான்.
அந்த அறையின் குற்றக் காட்சி தனாவின் மனதில் பதிந்து விட்டதால், இப்போது அவன் பார்வை தேடுதல் கோணத்தில்… இதே அறையை ஏற்கனவே சோதனை செய்தாகிவிட்டது, அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் எந்த பொருளும் கிடைக்கவில்லை. ம்ம். வந்தவர்களுக்கும் கொலையானவனுக்கும் எதோ பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது, அதுவும் இந்த அலுவலக அறையில்தான், என்னவாயிருக்கும்?
‘மிக சுலபமாக கைக்கு எட்டும் வகையில் இருக்க வேண்டும், ஆனால் அது மற்றவர்களுக்கு தெரியக் கூடாது’, நிச்சயமாக இந்த எண்ணத்தோடுதான் அப்பொருளை மறைத்து வைத்திருக்க வேண்டும். எங்கு வைத்திருப்பான்? சுற்றி தேடியவன் கண்களில் அந்த இடத்துக்கு சம்பந்தமில்லாத ஒன்று கிடைத்தது. அது தபேலாக்கள் … மெதுவே அதன் கிட்டே சென்று பார்க்க… அதிலிருந்த ரேகை மாதிரிகளும் ஒப்பீடு செய்யவென, தடயவியலாளர்களால் மாதிரி எடுக்கப்பட்டிருந்ததை அறிந்தான்.
மெல்ல அதை தட்டிப் பார்க்க… அதன் ஒலி ஒன்றும் அத்தனை பிரமாதமாய் இல்லை. அளவில் சற்று பெரியதாக இருந்த அந்த தபேலாவைக் கையில் எடுத்துப் பார்த்தான். கஜரா எனப்படும் பத்தி [baddhi ] வார்ப்பட்டிகளை இழுத்துப் பிடிக்கும் பகுதி தொய்வாக இருந்தது. கெட்டியான தோலினால் செய்யப்பட்டு மேலே பூச்சுகள் பூசப்பட்ட, தபேலாவின்   மேல் பகுதியை தடவிப் பார்த்ததில், அதன் ஓரத்தில் நெருடியது. அதை நெம்பி எடுக்க முடியுமா? என நினைத்து, அவ்வாறு செய்ய கூரான பொருளை தேடினான்.
தனஞ்செயன் பாக்கெட்டில் இருந்த கீ செயினை எடுத்து, அதிலிருந்த சிறு கத்தியை திறந்தான். பின் அந்த தபேலாவின் மேற்பகுதியை நெம்பித் திறக்க… உள்ளே இருந்தது கொலையானவன் வியாபாரம் செய்த பொருள். ஏன்? அதுவே கொலைக்கான காரணமாய்க் கூட இருக்கலாம். அந்த தபேலாவில் இருந்தது வெள்ளை நிறப் பொடி அடைக்கப்பட்ட சிறு சிறு பாக்கெட்டுகள், தோராயமாக இரண்டு கிலோ வரை இருக்கலாம். என்ன பொடி என்று உணர, அதிலும் காவல் துறையில் இருப்பவனுக்கு பிரமாதமான அறிவு ஏதும் தேவையில்லை, அது கொக்கைன் எனும் ஒரு வித போதைப் பொருள்.
ஒருவேளை கொலைகாரன் இந்த போதைப் பொருளுக்காக வந்திருந்தால்…?மகேஷிடம் [இறந்து கிடப்பவன்] கேட்டு அவன் இந்த பாக்கெட்டுகள் குறித்து சொல்லாததால், வந்தவனுக்கு கோபம் வந்து இவன் கொல்லப்பட்டானா? என்று யோசித்த தனா, வீடு முழுவதும் கலைந்து கிடப்பது, ஓரளவு இந்த கோணத்துடன் ஒத்துப் போனது. ஆனால்….. கொலைகாரன் எப்படி வந்தான்? கொலை செய்து விட்டு எங்கே சென்றான் ? இப்படி கோரமாக தீக்காயம் ஏற்படுத்தும் படி என்ன கொண்டு வந்தான்? யார் அவன்?, என்று புருவம் சுருக்கி யோசனையாக நடந்து அந்த வீட்டை விட்டு வெளியே வந்தான்.
அவனது மூளையில் நிறைய கேள்விகள்.. வரிசையாக அணிவகுத்தன.
++++++++++++++++++++++++++
அவ்வுருவம் அதன் கையிலிருந்த அந்த பழைய மாடல் அலைபேசியை பார்த்தது. பேசி முடித்தபின், ஏற்கனவே அதன் உயிர்ப்பை நிறுத்தி இருந்தது. இப்போது அதிலிருந்த சிம் கார்டை தனியாக எடுத்து,. இரண்டாக வெட்டியது. பின் அலைபேசியை அக்கக்காக கழற்றி… பாட்டரியை தனியே வைத்து…. இயன்றவரை  அலைபேசியின் பாகங்களை உடைத்து ஒரு நெகிழிப் பையில் போட்டது. பின்னர் நேராக மிக்ஸர் இருக்குமிடம் சென்று குப்பைகளை  அரைப்பானில் இட்டு தூள் தூளாக்கியது..
ஏனெனில், இந்த பேசியின் உபயோகம் இன்றோடு முடிந்தது. இதன் உதிரி பாகங்கள் யாருக்காவது கிடைத்தால் தான் மாட்டிக் கொள்ளும் அபாயம் உள்ளது. கிஞ்சித்தளவு தடயமும் இல்லாமல் இரண்டாவது கொலையும் முடித்தாயிற்று, என்று எண்ணியதும் அதன் முகத்தில் மென்மையான புன்னகை ஒன்று வந்தமர்ந்து.

Advertisement