Advertisement

அத்தியாயம் – 4
“சகர சக்ரவர்த்தி, அவரோட அறுபதினாயிரம் பிள்ளைகளை கூப்பிட்டு, காணாம போன குதிரையை மீட்டுண்டு வரணும்னு கட்டளையோட அவாள அனுப்பி வச்சார். ஏற்கனவே குதிரையை பூமில எல்லா இடத்திலேயும் தேடித்தேடி அவா சலிச்சு போயிருந்தா, கபிலாஸ்ரமத்துல இருக்குன்னு தெரிஞ்சதும் நேரா குதிரையை தேடிண்டு வந்தா. அங்க அந்த குதிரையும் ஆஸ்ரமம் பக்கத்துல புல்லை மேஞ்சிண்டு இருந்தது. அவாளுக்கு வந்ததே கோபம். கபிலவசுதேவர்தான் குதிரையை கூட்டிண்டு வந்துருக்கார்னு தப்பா நினைச்சுட்டா. அதனால அவரோட ஆஸ்ரமத்தை துவம்சம் பண்ணினா… கபில முனிவர் கிட்ட சாதாரணமா கேட்டிருந்தாலே,  இந்த குதிரை எப்படி இங்க வந்ததுன்னு தெரியாது, உங்களதுன்னா தாராளமா அழைச்சிண்டு போங்கோன்னு சொல்லி இருப்பார். எதிராளியோட மோத முடிவெடுக்கறதுக்கு முன்ன.. சாம தான பேதம்-ன்னு அத்தனையும் முயற்சி பண்ணிட்டுத்தான் தண்டத்தை எடுக்கணும்னு.. பெரியவா தெரியாமலா சொல்லி வச்சா?” 
அவா தலையெழுத்து.. அவர்ட்ட கேக்கலை. பத்தும் பத்தாத்துக்கு, ‘வந்து பாருடா வட்டப்பாறைக்கு’ – ன்னு அவரயே வம்பிழுக்க போக., அவரோ பூமி பாரத்தையே தாங்கிண்டு இருக்கிறவர், ஏகப்பட்ட வித்தைகள் தெரிஞ்சவர், பல அஸ்திரங்களை ஸ்டாக்-ல வச்சிருக்கிறவர். எதுக்க அடிக்க வர்றவாள… ஒண்ணும் பண்ணலை, ஜஸ்ட்.. நிமிந்து ஒரு பார்வைதான் பார்த்தார். முடிஞ்சது.. அந்த அறுபதினாயிரம் பேரும் அப்படியே சாம்பலாயிட்டா.
***********************
இசை நிகழ்ச்சி முடிந்ததும், தேஜஸ்வினி  தன் குழுவினருக்கு, ஜெயப்ரகாஷின் விபத்து குறித்து தகவல் அளித்துவிட்டு, நாளை சென்று மருத்துவமனையில் பார்க்கலாம், இப்போது அவளுடைய சித்தி அங்கிருந்து பார்த்துக் கொள்கிறார், அதனால் இந்த இரவு வேளையில் மருத்துவமனை செல்ல வேண்டாமென்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினாள்.
நேற்றே தேஜஸ்வினிக்கு, சபா நிர்வாகத்தினர், நாளை இரவு ட்ரஸ்ட்டி வருவதற்கு சிறிது நேரம் பிடிக்குமென்றும், அவர்களது வீட்டில் விழாவினால் இந்த தாமதம் தவிர்க்க இயலாதென்பதையும் தெரிவித்து.. அவர் வரும்வரை சிறிது நேரம் காத்திருக்கும்படியும் மிகவும் நயந்து கூறியிருந்ததால்.., சரி என்றிருந்தாள். தவிர, அந்த சபாவின் ட்ரஸ்ட்டி இவளது தீவிர விசிறி என்பதையும் இவள் அறிவாள்.
ஆனால், இவளது குழுவில் இருந்த விச்சுமாமியோ,  அம்மாவுடன் வந்திருப்பதாலும், இரவு வெகு நேரமாகிவிட்டதாலும் புறப்படுவதாக கூறியவர்… வாடகைக் காரில் செல்ல சற்றே தயங்கியதால், அவரை தனது காரில் அவரது தாயுடன் வீட்டில் விட்டு வர அவளது ட்ரைவரைப் பணித்தாள், தேஜு. விசாலாட்சி மாமியின் வீடும் அருகிலேயே இருப்பதினால், ஓட்டுநர் சீக்கிரம் வந்து விடுவார் என்பதும் அறிந்தவளாக, அவர்களை அனுப்பிவைத்தாள்.
பின், அவள் இருந்த அலுவலக அறையிலிருந்து  திரும்பி அரங்கத்தினைப் பார்த்தவள்.. வீட்டிற்கு கிளப்புவதற்கென ஆயத்ததில் இருந்த பாட்டி மற்றும் தனா இருவரும் கண்ணில் பட, அவர்களை அலுவலகத்திற்கு அழைத்துவரச் சொன்னாள். அவளாக வெளியே சென்றால்… ரசிகர் கூட்டத்தில் மாட்டிக் கொள்ள நேருமே, என்பதால் ஒருவரை விட்டு அவர்களை கூட்டி வருமாறு பணித்தாள்.
“உங்களை சின்னம்மா கூப்பிடறாங்க”, என்று ஒருவர் வந்து கூப்பிட, அதிலேயே தனஞ்செயன் சற்று துணுக்குற்றான். “அதென்ன? இவ பெரிய மஹாராணியா? நம்மள வரச்சொல்ல? கூப்பிட்டா போகணுமா?”, என்ற எண்ணம் வர, இருந்தாலும் பாட்டி தேஜு வரச் சொன்ன அறைக்கு சென்றதால் இவனும் அவரைப் பின் தொடருமாறு ஆனது.
அங்கோ தேஜஸ்வினி, “பாட்டி.. ரொம்ப தேங்க்ஸ். நீங்க மட்டும் இல்லன்னா நிஜமா, கஷ்டப்பட்டுருப்போம். சும்மா சொல்லக்கூடாது உங்க பேரன் ரொம்ப அருமையா வாசிக்கிறார்.”, என்று பாட்டியின் கைகளைப் பிடித்தவாறு உளமாறக் கூறியவளின் கண்கள் பாட்டியின் பின்னால் நான்கடி தூரத்தில் நின்ற தனஞ்செயனிடம் சென்றதும் கவனமாக உணர்ச்சி துடைத்தது.
அதே பார்வையுடன்…, “நன்றி மிஸ்டர் ஜெயன்”, கைகூப்பி, செயற்கைச் சிரிப்பொன்றைச் சிந்தினாள். பின், கைப்பையில் இருந்து எடுத்த,  ஒரு காகித கவரையும் அவள் நீட்ட… கவரின் உள்ளிருந்த  கரன்சியில் காந்திஜி சிரித்தது அந்த சன்னமான காகித கவரின் வழியே எதிரில் நின்றவனுக்கு தெரிந்தது.
தேஜுவின் அழைப்பிலும், அவளது முகமொட்டாத நன்றியிலும் கோபம் எட்டிப்பார்க்க நின்றவனுக்கு, அவள் நீட்டிய கரன்சி கவரைப் பார்த்தவனுக்கு… ரௌத்திரமே கிளம்ப…,பல்லைக்கடித்தவாறு அடிக்குரலில்… ,  “ஹல்..லல்…லோ….. என்ன பணக்காரின்னு காட்றீங்களா ?  உங்க வீணாப்போன தேங்க்ஸ்க்காகவும், இந்த பணத்துக்காகவும்தான் நாங்க வேல மெனெக்கெட்டு வாசிச்சோம்? சர்தான் போம்மா, பெரிசா காசை நீட்டிட்டு தேங்க்ஸ் சொல்ல வந்துட்டாங்க…”, கைகளை அசைத்து தனஞ்செயன் பேசிய த்வனியில், தேஜஸ்வினி ‘என்னடா இது?’, என்று தேஜஸ்வினி மருண்டு விழித்தாள். சட்டென அவள் அருகே செல்லத் துடித்த கால்களை தடுக்க, பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு, முகம் கடினமாக, தடை இறுக நின்றான்.
இவன் பேசியது நிச்சயமாக இவர்களைத் தவிர அடுத்தவருக்கு கேட்காது. அத்தனை சன்னமாகத்தான் பேசினான்,  ஆனால் பேசிய அவனது முகபாவத்தில்.. அவனது கோபம் புரிய.. கேட்ட தேஜுவிற்கு அடிவயிற்றில் குளிர் பிறந்தது. நிச்சயமாக இவன் இத்தனை கோபம் கொள்வான் என்று தேஜு எதிர்பார்க்கவில்லை. ஆனால்.. கலையை மதித்து சன்மானம் தருவது என்பது இவளைப் பொறுத்தவரை சரியே.  வழமையாய் செய்வதும் கூட, என்பதால் அச்ச உனைர்வு நீங்கி அவனைப் பார்த்தவள், அதை தனஞ்செயனுக்கு விளக்க நினைத்து, “இல்லை, இது தப்பில்ல.. மிஸ்டர் ஜெயன், உங்களை கௌரவப் படுத்தணும்னுதான் … “, தளைந்து தான் பேசினாள்.
ஆனால், குத்தீட்டியாய் அவனது பார்வை ‘இது என்னை கௌரவப்படுத்துவதா? என் தேவை என்னவென்று உனக்கு  தெரியாதா?’, என்பது போல அவளைத் துளைத்து எடுக்க வார்த்தை வராமல் தடுமாறினாள். கருப்பு கண்ணாடி போட்டுக் கொண்டு ஊரே இருட்டாய் தெரிகிறது என்று கூறுபவனைப் போல.. தேஜு வசதியானவள், தான் அவளுக்கு ஈடில்லை, என்ற மனோ பாவத்தில் இருப்பவனுக்கு.. அவள் சாதாரணமாக, சன்மானமாக கொடுக்கும் தொகை.., பணத்திமிராகத் தெரிந்தால், அவளும்தான் என் செய்வாள் ? கூடவே அவனது விழிகள் கடத்திய மற்றொரு செய்திக்கு என்ன சொல்வது என்று தெரியாமல்.. சற்று சங்கடத்துடன்… அவனையே பார்த்தவாறு, கையில் காகித உறையுடன் நின்றிருந்தாள்.
அதே வேளையில்   தேஜுவின் பேசி அழைக்க…, ‘அப்பா தப்பிச்சேன்’, சிறிய ஆசுவாசம் வர….கவனம் அதில் செல்ல, பேசியை கைப்பையிலிருந்து எடுத்துப் பார்த்தவாறு ,… அவனை விட்டு நகர்ந்து சென்றாள்.
தேஜுவின் தள்ளி நிறுத்தும் பார்வையும், அவளது நன்றியும், அவனது கலையை பணத்தில் நேர் செய்த பாவனையும், நினைக்க நினைக்க தனஞ்செயனுக்கு மூளை கொதித்தது. அவனது கோபம் மொத்தமும் பாட்டியின் மேல் பாய்ந்தது. இவர்களால் தானே இதெல்லாம் நடந்தது என்று…
பாட்டியை நோக்கி வந்தவன்…,”இப்போவாச்சும் கிளம்பலாமா? இல்ல அந்த மஹாராணி கார் கதவை திறந்துவிட்டு பை பை சொல்லி சல்யூட் அடிச்சாத்தான் நகருவீங்களா?”, என்று கொஞ்சம் சத்தமாகக் கூறினான். அது சற்று தள்ளிநின்ற தேஜூவுக்கு துல்லியமாக காதில் விழுந்தது.
தேஜுவின்  கார் ட்ரைவர்  பேசியில் இருந்து தவறிய அழைப்பு [மிஸ்ட் கால்] விடுத்திருந்ததால், அவரை தொடர்பு கொள்ள, எண்களை அமுக்கியவாறிருந்த தேஜஸ்வினிக்கு தனாவின் குரல் நன்றாக கேட்டது. சட்டென நிமிர்ந்தவள் கண்ணுக்கு தனா அகப்பட., வலியை பிரதிபலித்து குற்றச்சாட்டாக புருவம் சுருக்கி கேள்வியாய் நோக்கிய தேஜுவின் கண்கள், அடுத்தடுத்த  இமை சிமிட்டலில் திமிர் பார்வை பார்த்தது. “நீயெல்லாம் எனக்கு ஈடா?” என்ற ஒரு அலட்சிய பாவனை அந்த பார்வையில்..
தனஞ்செயனுக்கு.. தேஜுவின் அதிர்ந்த முகம் பார்த்து ஒரு நொடி மனம் சுணங்கினாலும்….  பின்னர் அவள் காட்டிய திமிர்த்தனம் .. வலியை மீறி கோபத்தை ஏற்படுத்தியது. “பாத்தியா? உன் குணத்தைக் காட்டற ?” என்று வன்மமாக நினைத்தான்.  ஆனால், அவன் இதற்கொன்றும் செய்ய இயலாதவனாக…, பெருமூச்சோடு, கடுகடு முகத்துடன் இருந்த பாட்டியை, கார் நிறுத்துமிடத்தை நோக்கி கை பிடித்து [இழுத்து] நடத்திப்போனான்.
இசைவிழா சின்ன விபத்துக் குழப்பத்துடன் ஆரம்பித்தாலும், எத்தனை நிறைவாக நடந்த நிகழ்ச்சி, இப்படியா வேதனையுடன் முடிய வேண்டும்? அவனை மேடைக்கு அழைத்ததே தவறோ? என்று உள்ளூர மனம் கசங்கியபடி, வீட்டிற்கு செல்ல காரில் ஏறினாள் நம் நாயகி, தேஜு.  கூடவே, இதுவும் நல்லதாகிப்போனது, இனி அவன் முகத்தில் கூட விழிக்காமல் தள்ளியே இருக்கலாம், என்று தீர்மானித்தாள்.
அங்கே பாட்டியோ, தனஞ்ஜெயன் காரில் ஏறியதுதான் தாமதம்…. அவனைப் பிடி பிடியென்று பிடித்து விட்டார். “ஏன்டா, வாசிக்க முடியாதுன்னா முன்னாடியே சொல்லி இருக்கலாமில்ல… இப்படியா அவமானப்படுத்துவ அந்த பொண்ண?, தங்க விக்ரகம் மாதிரி இருக்காடா.. பாவம். பொண்ணு முகமே கூம்பி போச்சு.. இனி எப்படிடா அவளை பாத்து பேசுவேன்.?. போதும்பா சாமி.. இனி நீ என்ன எங்கயும் கூட்டிட்டு வர வேணாம், நானே தனியா போறேன், இல்ல எம்புள்ளைய , தருமனை கூட்டிட்டு போகச் சொல்றேன்.”
“சே ச்சே,  எம்பேரன் இப்படி ஒரு  குணங்கெட்டவனா இருப்பான்னு நான் கனவுல கூட நினைக்கல்லைப்பா, இனி ஒரு வார்த்த எங்கிட்ட பேசாத…”, வீடு செல்லும்வரை அவரது லட்சார்ச்சனை தொடர்ந்தது. அவ்வசவுகள் யாவும் அவனுக்கு காதில் விழவேயில்லை, பாட்டியிடம் பேசவுமில்லை. தேஜஸ்வினியின் அந்த அலட்சிய முக பாவம் மட்டுமே மனதில் நின்றது, விசித்திரமாக அதிலும் அவள் இவனை சொந்தம் கொண்டாடுவது போன்ற உணர்வு தெரிந்தது, ஒருவேளை பிரமையோ? என்று அவனுக்கவனே யோசித்ததில் சின்ன முறுவல் தனாவிற்கு எட்டிப்பார்த்தது.
++++++++++++++++++++++++
அந்த உருவத்தின் தொடையில், சரியாக முழங்காலுக்கு சற்று மேலே வெல்க்ரோ கொண்டு  காலுடன் கட்டப்பட்டு இருந்த அந்தக் கருவி அதிர்வினை தெரிவிக்க … அவ்வுருவத்தின்…  ஒட்டு மொத்த கவனமும், அந்த கருவியில் திரும்பியது.  மெதுவாக சுற்றும் முற்றும் பார்த்து, யாருக்கும் சந்தேகம் வராமல், வெளியே தெரியா வண்ணம், ஆடை நீக்கிப் பார்க்க… அங்கே எதைக் காண வேண்டுமென்று இத்தனை நாட்களாக காத்திருந்ததோ.. அந்தக் காட்சிகள் அக்கருவியின் சின்னத் திரையில் தெரிய…, இத்தருணத்தை  ஆவலாக எதிர்பார்த்த அவ்வுருவம் ஒரு பொத்தானை அமுக்கியது… சிறிது நேரத்தில் .. திரையில் தெரிந்த ஒரு முகம் கருகி எரிய… அதை மனம் குளிர, ஆசை தீர பார்த்தது. பின் திரையில் அனைத்தும் இருளாகிவிட…., “சக்ஸஸ், ரெண்டாவது விக்கெட்டும் அவுட். “, மனதில் நினைத்தது. அவ்வுருவத்தின் முகம் நினைத்ததை சாதித்தற்கான மகிழ்ச்சி, ஒரு மனிதனை கொலை செய்துவிட்டோமே என்ற துக்கம், என்று எந்த ஒரு உணர்வுமின்றி கர்ம யோகியின் முகம் போல நிச்சலனமாக இருந்தது.

Advertisement