Advertisement

அத்தியாயம் – 3
அதுக்கப்பறம் சகரர், அதான் அந்த ராஜா தன்னோட தேசத்த விரிவுபடுத்த… அஸ்வமேதயாகம்ன்னு ஒண்ணு பண்ணினார். அதாவது ஒரு குதிரைல, “இந்த மாதிரி நான் சகர சக்ரவர்த்தியோட குதிரை. என்னை யார் பிடிச்சி கட்டிப்போட்டாலும்.. அதன் அர்த்தம்.. என்னை பிடிக்கறவா சகர ராஜாவோட மோத  தயாரா இருக்கான்னு அர்த்தமாகும்”-ன்னு ஒரு பட்டயம், நம்ம பாஷைல நோட்டிஸ்-ன்னு வச்சுக்கோங்களேன். அதை ஒட்டி அனுப்பிடுவா, குதிரை ராஜாவோட நாட்டைத் தாண்டி எந்த பக்கம் வேணா போகும், யார் தடுத்தாலும் சண்டை உண்டு. இந்த ராஜாவோட பராக்ரமம் தெரிஞ்ச மத்த தேசத்து ராஜால்லாம், அதை ஒண்ணும் பண்ணாம விட்டுடுவா. அந்த குதிரையும் காடு மேடெல்லாம் திரிஞ்சு, கபில முனிவரோட ஆஸ்ரமத்துக்கு வந்தது. அங்கிருந்த தானியத்தெல்லாம் சாப்பிட ஆரம்பிச்சுது. காட்ல அவாளுக்கு தானியம் கிடைக்கிறதே கஷ்டம், இந்த குதிரை வேஸ்ட் பண்றதென்னு சிஷ்யால்லாம் கோச்சிண்டு, அந்த குதிரையக் கட்டிப் போட்டுட்டா. என்னாடா போன குதிரைய இன்னும் காணுமே-ன்னு தேடினவா, இந்த ஆஸ்ரமத்துல அதைக் கட்டிப்போட்டிருக்கறதப் பாத்து.. ராஜாக்கு சொல்லி அனுப்பினா. ராஜா என்ன பண்ணினார்?
**************************
தேஜஸ்வினி சபா-விற்கு சென்று சேரும் முன்.. அவளது பக்கவாத்தியக் குழுவினர் அனைவரும் வந்திருந்தனர், மிருதங்க வித்வானைத் தவிர. இவள் வந்ததும், ஜெயப்ரகாஷ் வராததை சொல்ல… தேஜுவிற்கு மெல்ல மெல்ல பதற்றம் எட்டிப்பார்த்தது. 
“அன்னய்யாக்கு போன் பண்ணி பாத்தீங்களா?”
“பாத்தோம் பாப்பா.., ரிங் போகுது யாரும் எடுக்க மாட்டேங்கிறாங்க. “, என்றதும்….
“ப்ரோக்ராமுக்கு வரும்போது, சைலன்ட் மோட்-ல தான போட்டு வைப்பார். அதனால கேக்காம இருக்கலாம்.”, என்று சொல்லிவிட்டு, யோசிக்க ஆரம்பித்தாள்.
சட்டென ஒரு விஷயம் நினைவுக்கு வர, அலைபேசியை எடுத்தவள்.., ஜெய்பிரகாஷின் மற்றோரு எண்ணுக்கு அழைத்தாள். அது, இரண்டாவது ரிங்கிலேயே எடுக்கப்பட.., மறுமுனை கூறிய தகவல் அத்தனை உவப்பானதாக இல்லை.
ஆனால் அதை கூறி இங்கிருப்போரை கலவரப்படுத்த நினைக்காமல், “சிவகுமார் சாருக்கு போன் பண்ணி இன்னும் இருபது நிமிஷத்துல இங்க வர முடியுமான்னு கேளுங்க. அப்படி அவரால முடியாதுன்னா, சபா மேனேஜரைக் கூப்பிடுங்க, அவர்கிட்ட சொல்லிடுவோம்.”, என்று சொல்லி விட்டு அவர்களை விட்டு தூரமாக நகர்ந்து… அலைபேசியில், விஜிம்மா-வை அழைத்தாள்.
“சித்தி, ஒரு முக்கியமான விஷயம்…  ஜெய் அன்னய்யாக்கு ஆக்சிடென்ட்,”.., என்று தேஜு முடிக்கக்கூட இல்லை..
மறுபக்கம் “அய்யய்யோ “, என்று அவர் அலற..,
“பயப்படாதீங்க  பெரிய அடியேதும் இல்லையாம், கால்லதான் ஃப்ராக்சர் ஆயிடுச்சின்னு சொல்றாங்க.  நான் இப்போ ஒரு நம்பரைத் தர்றேன், நீக்க உடனே கிளம்பி அவங்க சொல்ற ஹாஸ்பிடல் போங்க. அன்னய்யா கூட இருங்க.”, என்று படபடவென அவருக்கு தகவலளித்தவள்… கூடவே… “என்ன செலவானாலும் சரி. நாம பாத்துப்போம்னு சொல்லுங்க..”, என்று கூறினாள்.
“சரி கண்ணா… நா உடனே கிளம்பறேன், ஆனா கச்சேரிக்கு வேற வாத்தியக்காரரை ஏற்பாடு பண்ணிட்டியாடா ?”, என்றார் அவர்.
“ம்ம். அதை நான் பாத்துக்கறேன் சின்னம்மா… நீங்க அங்க போங்க. கச்சேரி எப்படியும் நடக்கும்… நம்ம பிரச்சனைக்காக.. கச்சேரிக்குன்னு  வந்தவங்களை ஏமாத்தக்கூடாதில்லையா?”, சிறிய பெருமூச்சோடு கூறி அலைபேசியை நிறுத்தினாள்.
நேரே அவளது குழுவுடன் இணைந்துகொண்டவள், “சிவா சார் வருவாரா?”, வீணை வாசிக்கும் விச்சுமாமியிடம்  கேட்க…
“இல்ல பாப்பா, அவர் ஊர்லயே இல்லயாம்.”, என பத்திலுரைக்க…
“ஓஹ் .. இப்போ என்ன பண்றது?”,என்று ஒருவித சங்கடத்தில் நிற்க… அப்போது அங்கே வந்து சேர்ந்தனர் சௌடாம்பிகையும் தனஞ்செயனும்.
“விச்சுக்குட்டி… என்ன தெரியுதா?”, என்று விசாலாட்சி மாமியைப் பார்த்து சௌடாம்பிகை கேட்க…
“தெரிலையே…மாமி.”, அவர்.. திருதிருத்தார்..
“நான்தான் சௌதா,  உங்கம்மா க்ளாஸ் மேட் . நீ மூணு வயசுல இருக்கும்போது பாத்தது. FB-ல உன் போட்டோ இருந்தது, அதான் டக்குனு கண்டுபிடிச்சிட்டேன். ஜெகதா வந்திருக்காதானே? கேலரில தேடினேன். காணோம், நீதான் வீணை வாசிக்கறதா சொன்னா…, அதான் மேனஜரைக் கேட்டு நேரே உங்க ரூம்க்கு வந்துட்டேன். நல்லா இருக்கியா? அம்மாவை கூப்பிடறியா? அவளுக்கு போன் போட்டா… எடுக்கல… “, மூச்சுவிடாது பேசிய சௌடாம்பிகையை, தேஜு & குழு அவர்களது பிரச்சனையை மறந்து சில நிமிடம்  பார்த்திருந்தனர்.
“அம்மா.. ரெஸ்ட் ரூம் போயிருக்கா மாமி, ஜூஸ் குடிக்கும்போது பட்டுப்புடவைல கொட்டிடுத்து, அதான் சுத்தம் பண்ண போயிருக்கா.. இப்போ வந்துடுவா.”, என்றார் விச்சுமாமி  என்கிற விசாலாட்சி.
“அப்போ சரி.. நீங்க ஏன் இன்னும் மேடைக்கு போகாம இங்க நின்னுட்டு இருக்கீங்க?”,  ஆராய ஆரம்பித்தார். அருகில் தேமே என்று நின்ற தனஞ்செயனுக்குத்தான் தலையில் அடித்துக்கொள்ள தோன்றியது. “ஏன்.. ஏதாவது பிரச்சனைன்னா நீ தீத்து வைக்கப் போறியா?”, என்று பாட்டியின் பின்னாலிருந்து கிசுகிசுத்தான்.
“தோ ..  போயிட்டே இருக்கோம்.. எங்க மிருதங்க வித்வான் வரல, அவரில்லாம சமாளிக்கணுமே-ன்னு ஒரு குழப்பம்..”, என்றார் விச்சுமாமி. இப்போதும் தேஜஸ்வினி & கோ பார்வையாளர்களே.
பாட்டி… “ஆஹா…”, என்று…. பளிச்சென முகம் மலர்ந்து… , “தோ .. நிக்கறானே இவன் என் பேரன்.. ரொம்ப நல்லா மிருதங்கம்  வாசிப்பான், கவலைய விடுங்க..”, என்று தனாவை அவர்களது பிரச்சனைக்கு தீர்வாகக்  கோர்த்து விட்டார்.
இந்த திடீர் திருப்பத்தை எதிர்பாராத தனா , “பாட்டீ…”, அடிக்குரலில் உறும…
அப்போதுதான், பாட்டியின் அருகில்  நின்றவனை தேஜு உட்பட அனைவரும் கவனித்துப் பார்த்தனர். முதலில் பார்வையில் விழுந்த அவனது உருவத்தைப் பார்த்ததும் ஐயோ என்றானது தேஜுவிற்கு. பொதுவாக கலைகளில் விருப்பமுடையவர்கள், பயில்பவர்கள் மென்மையாக இருப்பர். இவனோ நின்ற சீர் நெடுமாறனாய், அதற்கேற்ற  ஆகிருதியுடன் விறைப்பாக இருந்தான்.
தவிர… நட்புக்களுடன் தனியாக கலை பயில்வது, வாசிப்பது என்பது வேறு தொழில்முறையாக கச்சேரியில் பங்கேற்ப்பது வேறு, நன்கு பழகியவர்களே இதற்கு தோதுப்படுவர். புதியவர்கள் கற்பூர புத்தி இருந்தாலொழிய சர்வ நிச்சயமாக தடுமாறுவர்.
அவனை ஒருமுறை ஆராய்ச்சிப்பார்வை பார்த்து பின் பாட்டியிடம் திரும்பி, “இல்ல. பரவால்ல பாட்டி, நாங்க பாத்துக்கறோம்.”, என்றாள் தேஜஸ்வினி.
“ம்மா.. சந்தேகமே படாத, ஸ்கூல் போறதுக்கு முன்னாடியே இவன் மிருதங்க க்ளாஸுக்குத்தான் போனான். காலேஜ் முடிக்கிற வரைக்கும் படிச்சான். இவன் ஃபிரெண்ட்ஸ் கச்சேரிலெல்லாம் வாசிச்ருக்கான், நிறைய சிடி எல்லாம் அவங்க போட்டிருக்காங்க. …சொல்லேன்டா.”, என்று பாட்டி தொடர…
தனஞ்செயன் தேஜுவின் கண்களில் தெரிந்த நம்பிக்கையின்மையைப் பார்த்து, சற்றே கோபம் துளிர்க்க, “ப்ச்சு..  பாட்டி.. விடுங்க.. அவங்க ப்ரோக்ராம் அவங்க பாத்துப்பாங்க..”, கடித்தவாறே சன்னமாகக்  கூறினான்.
பாட்டியிடம் இருந்து பார்வையை தனாவிடம் திருப்பியவள்…, அவனிடத்து வெளிப்பட்ட கோபத்தில்,  ‘நான் எப்படி வாசிப்பேன்னு  இவங்களுக்கு நிரூபிக்கணுமோ? “, என்ற வித்யாகர்வம்  தெறித்தது. அது அவனையே பார்த்துக் கொண்டிருந்த தேஜுவிற்கு மிகத் தெளிவாக புரிந்தது.
இந்த நேரத்தில் வாத்தியம் வேண்டும் என்ற காரணமும் இருந்ததால்…, சரி முயற்சித்துத்தான் பார்ப்போமே… என்ற எண்ணத்துடன்.. சற்று இறங்கிய த்வனியில் “இல்ல.. சாரி சாரி, தப்பா எடுத்துக்காதீங்க.. ப்ளீஸ். கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.. ஒரு ரிகர்சல் கூட பண்ணல, அதான் பயமா இருக்கு. பட் எங்களுக்கும் வேற வழியில்ல பாருங்க.. இங்க சபா-ல மிருதங்கம் ஏற்பாடு பண்ணுங்கன்னு நினைக்கிறேன்.. “, என்றுவிட்டு, சபா அலுவலகத்திற்கு சென்று வாத்தியத்திற்கு  வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டு, அரங்கத்தில் இருந்த மேடை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.
தேஜஸ்வினி சற்று வேகநடை போட்டு அனைவருக்கும் முன்பாக மேடை ஏறியவள், மானசீகமாக குரு நமஸ்காரம் செய்து… அவளது இடத்தில் அமர்ந்தாள். அருகே இடப்பக்கம் இருந்த மிருதங்க வாத்தியத்தின் மைக்கினை அணைத்து வைத்தாள். ஆம் அணைத்தேதான் வைத்தாள். முதலில், அவன் வாசிப்பதைக் கேட்டு… அதில் தான் திருப்தியானால், விஷய ஞானமுள்ளவன் என்று தெரிந்தால்…  அரங்கம் கேட்குமாறு செய்வோம், மாறாக சொதப்பினால்… மைக்கில் பிரச்சனை என்று கூறி இரு பக்கமும் சமாளித்து விடலாம் என்பது அவள் எண்ணம்.
அனைவரும் குழுமிய உடன்… கச்சேரி ஆரம்பிக்க… எப்போதும் கணபதி ஸ்துதியில் துவக்கும்  வழமையாதலால் … “மஹா கணபதிம் “, என்ற பாடலை .. நாட்டை ராகத்தில் பாட ஆரம்பித்தாள்.
வாசிக்க ஆரம்பித்த மறுவினாடியே  தனஞ்செயனுக்கு தெரிந்து விட்டது, இவனது வாத்தியத்தின் மைக் அணைத்து வைக்கப்பட்டிருப்பது. சுறுசுறுவென ஏறிய கோபத்துடன், பாடுபவளைப் பார்க்க.. அவளோ தெளிவாக இவன் பக்கம் திரும்பாமல், பாடுவதில் லயித்திருந்தாள். இப்போது மேடையை விட்டு இறங்குவதும் நாகரீகமாக இருக்காதென்பதால், அதைச் செய்யாது, பாடலில் கவனம் செலுத்தியவன், அவளது குரல் வளத்தில் கவரப்பட்டு… இவன் கோபம் கூட சற்று பின் சென்றது.
மற்றவர்க்காகவோ, மேடையில் அருகில் அமர்ந்திருப்பவர்களுக்காகவோ அல்லாமல், பாடலை உள்வாங்கி, அதன் தாளத்தில், தேஜுவின் குரலினிமையில், ஆழ்ந்து போய்…  தனஞ்செயன், தனக்காக, தன் மன நிறைவுக்காக… வாசித்தான். அதில் அப்படியொரு நேர்த்தி. பிடித்து ரசித்து கற்றுக் கொண்ட கலை. ஆண்டுகள் பலவானாலும் மறக்குமா என்ன?
அடுத்த பாடல் ஆரம்பிக்கும் முன், தேஜுவின் கைகள் நீண்டு.. தனாவின் மைக்-கினை உயிர்ப்பித்தது. அவனது கலைத்திறமையைதான்  நேரிலேயே பார்த்தாயிற்றே?. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா? தயக்கமின்றி அவனை நேர்ப்பார்வை பார்த்து, ஓசையின்றி உதட்டசைவில் ‘சாரி’ யும் கேட்டாள் பெண்.
அவளது நயன மொழியில், புருவச்சுருக்கத்தில், சப்தமில்லா இதழசைவில், நிஜமான மன்னிப்பை வேண்டும் பாவம் இருக்க.., பெண்ணாக அவளது அழகு தனஞ்செயனின் மனதை தடுமாறச் செய்ய, சற்றே பேச்சிழந்தவன், தன்னை சமாளித்து சின்ன முறுவலுடன், தலையசைத்து அவள் மன்னிப்பை அங்கீகரித்தான்.. அடுத்தடுத்த பாடல்களில், தேஜுவின் குரல் இழைந்தது என்றால்… இவனது விரல்கள் தன் முழுத்திறமையை வாத்தியத்தில் காண்பித்தது. மொத்தத்தில்.. அரங்கம் களை கட்டியது.
நிகழ்ச்சியின் நடுவே, ரசிகர் ஒருவர், தனக்குப் பிடித்த பாடலை சீட்டெழுதி தேஜுவிற்கு அனுப்ப…, தனா, இதற்கு வாசிப்பானா என்பது தெரியவேண்டி இருந்ததால்,  தேஜு அவனைப்பார்க்க.. தனாவோ டொக் டொக்-கென ஆள்காட்டிவிரலால் மிருதங்கத்தை  தட்டிபார்த்து வார் பிடித்துக் கொண்டிருந்தான்.
“ஜெயன்..”, என்ற குரல் வர…, படக்கென நிமிர்ந்தவனுக்கு ‘தனக்கு இவ்வித அழைப்பு புதிது’ என்பது மனதுக்கு புலப்பட, பார்வையால் என்ன என்று அழைத்தவளைப் பார்த்து ஒற்றைப் புருவம் உயர்த்த, அந்த மிடுக்கு மிகச் சிலருக்கே இயல்பாய் வரும், அதில் மூச்சடைத்தாள் தேஜு.
ஆண்கள் அவளுக்கு  பழக்கமில்லாதவர்கள் அல்ல.  அவளது குழுவில் வீணை விச்சுமாமி தவிர அனைத்து பக்க வாத்தியக்காரர்களும் ஆண்களே.இவளது ஆடிட்டர்கள் ஆகட்டும், அனைவரும் இளவயது ஆண்களே. தேஜூவுக்கு வந்த வரன்கள் கூட பார்ப்பதற்கு இவனை விட அழகானவர்களே. எவரும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவு இவளை ஈர்த்தவர்  இல்லை.
ஆனால், முன் பின் அறிந்திராத முற்றிலும் புதிய ஆண்.. இத்தனை அருகில், ஆளுமையாய்.. ஒரு வித உரிமையுடன் ஜாடையில் பேசுவது இதுவே முதன் முறை.   ஓட்ட வெட்டிய முடி, நேர்த்தியாக ட்ரிம் செய்யப்பட்ட மீசை, ஆளைத் துளைக்கும் பார்வை, கூர் நாசி, அழுத்தமான இதழ்கள் என கம்பீரமாக இருந்த தனஞ்செயனின் முகம் தேஜுவின் மனதில் பதிய, அறிவோ , “தேஜு.. என்ன இது வயதுப்பிள்ளைகள் போல?”, என்று கடிந்தது, உடன் அவளது முக பாவமும் மாறியது.
ஆனால், தேஜுவிடம் நொடியில் நிகழ்ந்த  இந்த முக மாறுதல்களை.. அவளது கண்கள் விரிந்து.. சிறிய ஆர்வத்துடன் தன்னில் அவதானித்ததை… அதன் விளைவாக அவள் கன்னங்கள் சிவந்ததை கண்டவன், முதன் முறையாக.. ஆணாக பேருவகை கொண்டான். கள்ளச்சிரிப்பு முகத்தில் இலங்க… “என்ன?”என்றான்.
அவனது அடங்கிய சிரிப்பில், தன்னை கண்டுகொண்டான் என்பதை  புரிந்த தேஜு, ஏதும் நடவாதது போல முகத்தை இயல்பாக மாற்றி..  நேயர் விருப்பப் பாடல் எழுதியிருந்த சீட்டினை அவன் புறம் நகர்த்தி.. அவளது மைக்கிடம் தஞ்சமடைந்தாள். சில நொடி இடைவெளிவிட்டு, “நேயர் விருப்பத்திற்கிணங்க… “, என்றபடி தனாவைப் பார்த்து .. “சொல்லிவிடவா? ரெடியா?” என்பது போல தலையத்துக் கேட்க…,
தனஞ்செயன் மனமோ, அவளது ரசிக்கும் பார்வையிலேயே அவள் வசம் சென்றிருந்தது, இப்போது தேஜூவின்  தலையசைவில் மொத்தமாய் வசமிழந்து….
“கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டால்,
காளையற்கு மாமலையும் ஓர் கடுகாமடி.. பெண்ணே..
                                                        பாரதிதாசன் வார்த்தைகளடி.
இந்த ஒரு பாடலென்ன, இதுபோல  இன்னமும் இருநூறு                 பாடல்களுக்கும்  இடைவிடாது வாசிப்பேனடி.. கண்ணே..
                                                 நீ  என் அருகிருந்து பாடினால்”
என்று கவிதையாய் நினைத்தது.
கேள்வி கேட்டவளுக்கு.. சின்னதாக தலை சாய்த்து கண்மூடி,  சம்மதம் கொடுத்தான். சிற்சில நொடி இடைவெளியில் இவையனைத்தும் நடக்க… “அடுத்து வருவது… மாடு மேய்க்கும் கண்ணே  . என்ற ஊத்துக்குடி வேங்கட கவி யின் பாடல். ராகம் : செஞ்சுருட்டி, தாளம் திஸ்ர ஆதி.” என்றுரைத்து.. பின்னர் பாடலை பாடத் துவங்கினாள்.
தேஜஸ்வினி, கண்ணனில் லயிக்க.. தனஞ்செயனோ, தாளகதியுடன் அனிச்சை செயலாக பாடலுக்கு வாசித்தவன், சற்று நேரம் அவளது குரலில்… பின் அவளில்…  லயித்துக் கொண்டிருந்தான். இந்தப் பெண் என்னை வெகுவாக கவர்கிறாள், என்பதை  உணர்ந்தவனாக, தன் உடமையாக நினைத்து, அவளை பார்வையிட்டவனுக்கு, அவள் செல்வநிலை அவளது உடையில், அணிந்திருந்த நகைகளில்.. அனைத்திலும் தெரிந்தது. இவனோ மத்தியதர குடும்பத்தை சேர்ந்தவன், செய்யும் வேலை பெருமைக்குரியதுதான், ஆனால் வருமானம்…? என்ற அவனது மனம் தெளிவாக சிந்தித்தது.
தேஜுவுடனான அந்தஸ்து பேதம் முகத்தில் அறைய…, அவளால் தன்னுடன் குடும்பமாக  ஒன்ற முடியாது என்ற நிதர்சனம் நொடியில் புரிய, தன்னுடைய மனத்தைத் திருப்பி முகத்தை உணர்வற்றதாக்கினான்.
கண்ணனைப் பாடிக்கொண்டிருந்த தேஜூவின் சிந்தனையும் இதுவே. திருமணம் என்பது ஒருபோதும் அவளுக்கு ஒத்துவராது, எனவே சாத்தயமில்லாததற்கு ஆசைப்படாதே மனமே.. என்று உருப்போட்டு மனதிற்கு உரமேற்றினாள். அவளது முகம், அதில் சதா இழையோடும்  மென்னகையைத் தொலைத்திருந்தது, பதிலாக செயற்கையான புன்னகை வந்தமர்ந்திருந்தது. அந்தப் புன்னகை நிகழ்ச்சி முடியும்வரை தொடர்ந்தது.
இருவருமே மனதால் வளர்ந்தவர்கள், எதிர்பாலினகவர்ச்சி வரும் வயதை தாண்டியவர்கள். நிதர்சனம் புரிந்தவர்கள், எனவே இந்த சலனத்தை தாண்ட முடிவெடுத்தனர். முடிவெடுத்தனர் சரி? செயலாக்கினரா?
++++++++++++++++++++++++++++++
அந்த உருவம் கையிலிருந்த அலைபேசியை உயிர்பித்தது, பின் ஒரு எண்ணுக்கு அழைத்து…, “சார்.. உங்க வீட்லயோ இல்ல ஆபிஸ்லயோ.. உங்களைக் கண்காணிக்கறதுக்கு, எங்க டிபார்ட்மென்ட் பக் [bug ] வச்சிருக்கறதா தகவல் வந்திருக்கு. யாரும் இல்லாத நேரத்துல நைட்டோட நைட்டா தேடி கண்டுபிடிச்சு எடுத்துடுங்க, இந்த விஷயத்த யாருகிட்டயும் சொல்லாதீங்க. யாருக்கும் கால் பண்ணாதீங்க, ஏன்னா, உங்காளு ஒருத்தன்தான் இதை செட் பண்ணிருக்கான். போன்-ல பக் இருக்கான்னு தெரியாது, இனி இந்த நம்பர்-ல நான் கிடைக்க மாட்டேன். இப்போதான் விஷயம் எனக்கு தெரிஞ்சது, அதான் சொல்லிட்டேன். வச்சிடறேன் சார்”.. என்று விட்டு பேசியை மொத்தமாகவே அணைத்து விட்டது.

Advertisement