Advertisement

அத்தியாயம் – 2
“குழந்தைகளா… பகீரதன் கதை தெரியணும்னா… முதல்ல அவன் யாருன்னு தெரியணும், அவன் முற்காலத்துல ஒரு ராஜாவா இருந்தான். நம்ம ராமர் இருக்காரோல்லியோ, அவரோட எள்ளு கொள்ளு தாத்தான்னு வச்சுக்கோங்களேன். அவங்க குலமான இஷ்வாகு-ல வம்சத்துல சகரர்-ன்னு ஒரு சக்ரவர்த்தி இருந்தார். அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. அவாளுக்கு சுமதி, கேசினி-ன்னு பேரு. சகரருக்கு குழந்தைங்க இல்லாததால, பிரம்மாவை வேண்டிண்டு ரொம்ப நாள் அவர் தவம் செய்ததால, சுமதிக்கு அறுபதாயிரம் குழந்தைகளும், கேசினிக்கு ஒரே மகனும் பிறந்தாங்க. கேசினியோட பையன் பேரு அசமஞ்சன். அவன் என்ன பண்ணினான் தெரியுமோ? அவன் கண்ணு முன்னால விளையாடுற சின்ன குழந்தைங்களை எல்லாம் தண்ணி-ல தள்ளி விட்டு அவங்கள கஷ்டப்படுத்தினான். இதை, அவனோட அப்பாவான சகர மஹாராஜா கேள்விப்பட்டு, மக்களை கஷ்டப்படுத்தற உனக்கு ராஜா ஆகிற தகுதி இல்ல, நீ என் நாட்டை விட்டே போ-ன்னுட்டார்”, இதுலேர்ந்து என்ன தெரியறது? நாட்டை ஆளறவா.. மக்களை எப்போதும் தொல்லப் படுத்தப்படாது. நீங்களும் பெரிய்ய ஆளா ஆனா என்ன பண்ணனும்?, உங்கள நம்பி இருக்கறவாள காப்பாத்தணும். தொல்ல பண்ணப்படாது சரியா?” 
***************
“ஏன்டா ஏன்? நீயும் என் உசுர வாங்கற? உங்க பாட்டி காலைலேர்ந்து புலம்பிட்டே இருக்காங்க. முதல்ல அவங்க சொல்றா மாதிரி செய். இல்லன்னா.. என் மண்டைதான் உருளும். வீணா உங்கப்பாவ பேச வைக்காத”, கடிந்து கொண்டு இருப்பவர்…, லீலாவதி.. இவர் வாயில் அரைபடுபவன், தனஞ்செயன், பேசுபொருளாக இருப்பவர்… லீலாவதியின் மாமியார் சௌடாம்பிகை. [வீட்டில் இவரது பட்டப்பெயர்… சொர்ணாக்கா!!]
“ம்மா. சும்மா நொய் நொய்ங்காதீங்க, சொர்ணாக்காக்கு என்ன வேணுமாம்?”, சொன்ன தனா.. காவல் துறையின் குற்றப்பிரிவில் பணியில் இருப்பவன். தந்தை காவல் துறையில் இருக்க, தனா-விற்கு முன்னவன் கணினித் துறையில் விரும்பி ஈடுபட… வீட்டிற்கு ஒருவன்.. நாட்டிற்கு ஒருவன் என்ற தந்தையின் கொள்கையினால் நாட்டைக் காக்கவென வந்தவன். மாநில அரசாங்க சேவை ஆணைக்குழு  [ஸ்டேட் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்]  நடத்திய தேர்வெழுதி நேரடியாக டி.எஸ்.பி. பதவியில் சேர்ந்து இருப்பவன். பதவியில் இருந்தபோதும், வீட்டில் அவன்தான் கடைக்குட்டி…, எனவே சலுகைகளும் அதிகம், வேலைகளும் உண்டு.  சிறுவயதில் இருந்தே கடை கன்னிகளுக்கு, அம்மாவின் எடுபிடி வேலைகளுக்கு என்று எப்போதும் அம்மா முந்தானையை பற்றித் திரிந்தவன்.
இரு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் முன்மதிய வேளையில், தனஞ்செயனின் வேலைக்கான  உத்தரவு தபாலில் வர, அதை மகனிடம் மகிழ்ச்சியாக  கூறிய லீலாவதி…., “டேய் கறிக்கடைக்கு போயி நல்ல நாட்டுக்கோழியா பார்த்து வாங்கிட்டுவா.. ஓடு ஓடு. அப்பாக்கும் தருமனுக்கும் பிடிக்கும், வர்றதுக்குள்ள சமைச்சிருவேன். அப்படியே அவங்களுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டு, உடனே வீட்டுக்கு வரச்சொல்லு.”, என்க …., அம்மாக்கள்  மகிழ்ச்சியானால்… அருமையான விருந்து கிடைக்கும் வீட்டிலுள்ளோர்க்கு… பொது விதி.
“ம்மா…. கஷ்டப்பட்டு பாஸ் பண்ணினது நானு, அவங்களுக்கு கறிசோறா ?அந்த கறியும் நானே வாங்கிவரணுமா?”, என்று ஒரு காலை உதைத்தவாறு ஆற்றாமையுடன் கூறியவன்… , தொடர்ந்து திடீர் தீர்மானமாக …”இனிமே நான் கடைக்கெல்லாம் போமாட்டேன்… நானு போலீஸு…”,என்று கர்வமாக காலரை உயர்த்தி அன்னையிடம்  கூற…
புருவம் உயர்த்தி, தலை நிமிர்ந்து மகனைப் பார்த்த லீலாவதி,  “டேய் … நீ இப்போத்தான் போலீஸு, எம்புருஷன் முப்பத்திரண்டு வருஷமா போலீஸு … யாருகிட்ட ?”,  என்றவர் .., “போடா போ…  நீ ஐஜி-யே ஆனாலும்… எம்புள்ளதான், அப்பயும் வீட்டு வேல இருந்தா சொல்லத்தாஞ்  செய்வேன்”, பேசியபடியே சென்றவர்… சத்தமாக… “டேய்… கிளம்பிட்டியா?…”, என்று அவரது தர்பாரில் இருந்து குரல் எழுப்ப …. [அதாங்க… சமையலறை],
அவனது அறையில்..   ஹேங்கரில் தொங்கிய சட்டையின்,  இல்லாத தூசியை தட்டுவதைப்போல், இரண்டு முறை ஓசையுடன் உதறியவன்…”ம்மோய் … நீ லீலாவதி இல்ல… சதி லீலாவதி…,இரு..  இரு.. போஸ்டிங் வந்ததோன்ன முத்த வேல.. ஏதாவது கேஸ்-ல உன்ன புடிச்சு உள்ள போடறேன்.. “, சத்தமாக கறுவ….
அவன் பேசுவது கேட்டாலும், வாய்க்குள் சிரித்தவாறே, “என்னடா அங்க சத்தம்?”, லீலாவதி  உச்சக்குரலில் கேட்க….
“ஒண்ணுமில்ல… ச்சும்ம்மா.. பேசிகிட்டு இருக்கேன்மா …”, வடிவேலு பாணியில் உரைத்து….’மனுசன மதிக்கவே மாட்டேங்கிறாய்ங்கப்பா’, புலம்பிக்கொண்டே, தனது செல்ல[லா]க் கோபத்தை இருசக்கர வாகனத்தின் கிக்கரில் காண்பித்து கடைக்குக் கிளம்பியது தனிக்கதை.
அவனது பதவி நியமன ஆணையில் இருந்த  சிறப்பு என்னவென்றால், இவனது சரகத்தின் கீழே இவனது தந்தை, ஆய்வாளராக பணிபுரிகிறார். பொதுவாக இப்படி நடக்க வாய்ப்பு குறைவு. ஆனால், இவனுக்கு நடந்தது. காரணம், தனாவின் அப்பா மீதிருந்த சில பல காழ்ப்புணர்ச்சிகள், இந்தத் துறையில் இருந்த உள்நாட்டு அரசியல்கள். நேர்மைக்கு பரிசு, மகனுக்கு சல்யூட் அடிக்கட்டுமே என்ற மிக நல்ல எண்ணம். தனா பணியில் சேர்ந்த முதல்நாள், தானாவின் தந்தை தேவராஜ்  இவனைக் கண்டதும், காவல்துறை பாணியில் முகமன் உரைத்து.. சல்யுட் அடிக்க… சற்று தடுமாறித்தான் போனான், மகனாக.
ஏனெனில் அவரது ஆளுமையை முழுமையாக அறிந்தவன், சிறுவயதில் இருந்து தந்தை தேவராஜன்தான் இவனது ஹீரோ. அவர் இவனுக்கு ஸல்யூட் செய்வதா? என்று மனம் சஞ்சலப்பட திகைத்து நின்றவனைப் பார்த்து., “வேலைன்னு வந்துட்டா, அப்பா மகன் உறவெல்லாம் உள்ள வரக்கூடாது, உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு, நான் மாத்தல் வாங்கிக்கறேன்.  அது வரைக்கும் இந்த ஸ்டேஷன்-ல இருப்பேன். புரியுதா?”, என்றார்.
வீட்டிற்கு வந்ததும்…., ஈஸிசேரில் அமர்ந்து மீசையை நீவியபடி இருந்தவர்..தனாவைப் பார்த்ததும், “ஆளுதாண்டா வளந்திருக்க…, பதவிக்கேத்த கெத்து வேணாம்? யூனிஃபார்ம் போட்டா அப்பா, ஆட்டுக்குட்டி எல்லாம் மறந்துடனும். எல்லாம் உங்கம்மாவச் சொல்லனும், அவ பின்னாலயே உன்ன சுத்தவிட்டு இப்படி ஆக்கி வச்சிருக்கா…. , என்ன சரியா?”, என்று அவரிடம் பாட்டு வாங்கினான்.
எதுக்கு சரி என்று தலையசைக்கிறோம் என்பது புரியாமலேயே , “சரிப்பா.,”, முணுமுணுத்தபடியே, தலையை தொங்க போட்டுக்கொண்டு தனந்ஜெயன் அவனது அறைக்கு சென்றான்.
அப்பாவிடம்,  சற்று  வளர்ந்தபின்  மகன்கள் பேசுவதென்பது மிகக்குறைவே. அதுவும் இவர்கள் வீட்டில் தேவராஜன் சொன்னால் அது வேத வாக்கு. மறுத்து பேச தைரியம் உள்ள ஒரே நபர் தேவராஜின் அன்னை சொர்ணாக்காதான். அவரையும் பேசிப் பேசியே,  தேவராஜன் வழிக்கு கொண்டு வந்து விடுவார். அப்படி மடக்கி மடக்கி பேசுவார்.
தேவராஜன் தனஞ்செயனிடம் சொன்னபடியே, வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டார். என்று வார விடுமுறை உள்ளதோ, அன்று மட்டுமே வீட்டிற்கு விஜயம். ‘அப்படி, மாற்றல் ஆகாமல் இருந்திருந்தால் மட்டும் வீட்டிற்கு நேரத்தோடு வந்து விடுவாரா என்ன?’, என்று  லீலாவதி புலம்புவது அவர்கள் வீட்டு மிக்சி கிரைண்டர் க்கு கூட மனனம்.
பதினான்கு – பதினாறு மணி நேரங்கள்.. இரண்டு சுழற்சிகள் தொடர்ந்து வேலை பார்ப்பது என்பது காவல் துறையில் சர்வ சாதாரணம். விழா நாட்களிலோ, தேர்தல் நேரத்திலோ, முக்கிய தலைவர்கள் வருகை இருந்தாலோ, இது இருபத்தி நான்கு மணி நேரம் என்றாகும். கிடைக்கும் இடத்தில் தூங்கி, இருக்கும் ஆகாரத்தை உண்டு, என அவர்கள் உலகம் தனி.  இத்துறையில் பலர் கடு கடு வென இருப்பதன் ரகசியம் அதீத வேளைப்  பளு. காரணம், ஆட்கள் பற்றாக்குறை. இத்துறையில் அமர்த்தப்பட்ட கீழ்நிலை ஊழியர்கள் பலபேர், அதிகார வர்க்கத்திற்கு பாதுகாப்புக்கு செல்வதே அவர்களது வேலை என்றாகிவிட்டது.
இன்று தற்போதைய சொர்ணாக்காவின் பிரச்சனை… அவரது பால்யகால சிநேகிதி ஒருவர், இவரது முகப்புத்தகத்தில் [ இது டிஜிட்டல் இந்தியா.. ங்கோவ்…], நட்புக்கரம் நீட்ட… வெட்டியாக இருந்த இவரும் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு.. நொடிக்கொரு போஸ்ட்-ம், வேளைக்கொரு மெசேஜும் அனுப்பி நட்புப் பயிர் வளர்த்தனர். அது நாளடைவில் ஆலமரமாகி.. இருவரும் நேரில் பார்க்க சந்தர்ப்பம் தேடியதில்.. இருவர் கண்ணிலும் அகப்பட்டது, இந்த இசை நிகழ்ச்சி. கரணம் நிகழ்ச்சி நடக்குமிடம், இருவர் வசிப்பிடத்திற்கும் மத்தியில் இருந்தது. போய்வர எதுவாகவும் இருக்க, பாட்டிகள் இருவரும் மீட்டிங் முடிவை எடுத்தனர்.
அன்று … வார விடுமுறை நாளில் வீட்டிற்கு வந்த மகன் தேவராஜனிடம், அம்மா சௌடாம்பிகை அந்நிகழ்ச்சிக்குச் செல்ல அனுமதி கேட்கையில்… “சாயந்தரம் நான் கிளம்பிடுவேன். பசங்க யாரையாவது துணைக்கு கூட்டிட்டி போங்கம்மா, ரொம்ப லேட் பண்ணாம சீக்கிரம் வந்துடனும்”, என்றார் கறாராக.
அவ்வளவுதான். வந்ததே கோபம் சௌடாம்பிகைக்கு… பொங்கியே விட்டார், “இருந்திருந்து இப்போதான் மொத தடவையா ஃபிரெண்டை-ன்னு  பாக்க வெளில போறேன்.   கைச்செலவுக்கு வச்சுக்கமா-ன்னு கத்தையா நோட்டள்ளித்தராம, லேட் பண்ணாத-ன்னு சின்ன பிள்ளைக்கு சொல்றாமாதிரி சொல்ற?. அதான் நீ பெத்து வச்சிருக்கிற தடித் தாண்டவராயன்-ல  ஒருத்தன் கூடவே வருவானே?, லேட்டானாத்தான் என்னவாம் ?”, என்று நொடித்தார்.
இது இவர்கள் வீட்டின் இயல்பு. உறவைத்தாண்டி தோழமை என்னும் இழை ஊடாடும் குடும்ப அமைப்பு. என்ன அப்பா மட்டும், அவரது சீருடைக்கு போடும் கஞ்சியை உள்ளுக்கும் தள்ளியதைப் போல கொஞ்சம் மொடமொடப்பாகவே இருப்பார். அதுவும் கொஞ்சமே கொஞ்சம்தான், மற்றபடி… சாதாரணமான ஒரு இந்திய அப்பா தான் அவர். [அது என்ன இந்திய அப்பா? ங்கிறீங்களா? தோழமையா பேசறா மாதிரி முயற்சி பண்ணுவாங்க.. அது பசங்களுக்கு சில சமயம் காமெடியா, பல சமயம் கடுப்பா முடியும் ] 
தேவராஜன் அவரது அம்மாவின் இந்த பேச்சில் திகைத்து, பின் இளநகையுடன், “ஹ ஹ, ம்மா…, நான் சம்பாதிக்கறதுக்கு கத்தையால்லாம் தரமுடியாது.  இதை வச்சிக்க..”, என்று  சிரித்தவாறு, தனது பர்ஸிலிருந்து  இரண்டாயிரம் எடுத்துக் கொடுத்தார். பின்னர் அவர் காலைக்கடன்களை முடித்து ஓய்வெடுக்கச் சென்றுவிட, பெரியவன் சுதர்மன், மாலையில் அலுவலகத்தில் முக்கிய வேலையிருப்பதாக  கூறி, பாட்டி சௌடாம்பிகையின் பிரச்சனையில் இருந்து கழன்று விட…. மாட்டியவன் தனா.
காலையில் அவசரமாக ஒரு குற்ற விசாரணைக்காக வெளியே சென்றிருந்த தனஞ்செயன்…. மாலை  நான்கானது வருவதற்கு. அவனுக்கு காஃபி, பலகாரங்களை கொடுத்துவிட்டு,  பாட்டியை வெளியே அழைத்துச் செல்லுமாறு லீலாவதி தனாவைப் பணிக்க.. அவன் மறுக்க….அதன் பின் நிகழ்ந்த உரையாடல்கள்தான் மேற்சொன்னவை.
சரியென்பதைத்தவிர வேறு வழியில்லை என்றுணர்த்தவன்…, நேரே பாட்டியிடம் சென்று…,”கிளப்புங்க போலாம். ஆனா ஒன்னு… அங்க ரொம்ப போர் அடிச்சுட்டு இருந்தீங்க.., அங்கேயே விட்டுட்டு வந்துருவேன்.”, என்று கறாராக கூற….,
“ஆங்.. விட்டுட்டு வந்து..? அப்பறம் எம்புள்ளைகிட்ட என்ன சொல்லுவ?”, கிண்டலாக கேட்டவர், அவன் உஷ்ணமாக முறைத்துவிட்டு சென்றவுடன்… மருமகளிடம்.. “லீலா சின்னவனுக்கு  சாப்பிட ஏதாச்சும் குடுத்தியா?”, என்று கரிசனமாக கேட்டார்.
“கொடுத்துட்டேன் அத்த. கூடவே ஒரு டப்பர்வேர்-ல ஜெகதா அத்தைக்கும் எடுத்து வச்சிருக்கேன்.”, என்றார் பொறுப்பான மருமகளாக. தனஞ்செயன் தயாராகி வந்ததும் இருவரும் அந்த இசை நிகழ்ச்சிக்கு கிளம்பினார்கள்.
+++++++++++++++++++
எத்தனை மாதக் காத்திருப்பு இது? சிற்சில காத்திருப்புக்கள் அர்த்தமுள்ளவை. அதிலும் இவனை கட்டம் கட்டி வருடங்களாகிவிட்டது. இவன் உயிரோடு நடமாடும் ஒவ்வொரு நாளும், இன்னமும் இவன் தன் குறிக்கு இலக்காகவில்லையே? என்ற பெருங்கோபம் மூள்வதைத் தடுக்கவியலாமல் தவித்த நாட்கள். இன்று தான் எல்லாம் கூடி வந்திருந்தது. அவன் குடும்பம் ஊரில்  இல்லை , வீட்டு வேலையாட்களும் இரவானதும் சென்று விடுவர். வாயிற்காப்போன் ஒருவன் மட்டுமே. இவனாக அழைத்தாலொழிய, உள்ளே வர மாட்டான். இன்னமும் இரண்டு மணி நேரம்…. !

Advertisement