Advertisement

நாளை…. நீ.. இறந்தகாலம்.
அத்தியாயம் -1
கொடுமுடி அக்ரஹார திண்ணையில்… சிவப்பழமாய், நெற்றி நிறைந்த நீருடன், கழுத்தில் ருத்ராக்ஷத்துடன், சற்றே நீண்டிருந்த தாடியுடன், அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் பலகை போட்டு அமர்ந்திருக்க… கீழே தரையில் ஐந்தில் இருந்து பன்னிரெண்டு வயது வரை உள்ள சிறு பிள்ளைகள், வரிசையாய் அமர்ந்திருந்தனர். அனைவரும் அந்த அக்ரஹாரத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் இருக்கும் மழலை செல்வங்கள். தினமும் மாலை நித்யகர்மாக்களை முடித்ததும், [தோராயமாக  மாலை ஐந்தரை மணி]… தெய்வ திரு நாமங்களை, அவர்களை பற்றிய கதைகளை தினமும் ஓரங்க நாடகம் போல நடத்தி காட்டுவது, ராமய்யருக்கு பொழுது போக்கு. கூடவே வரும் குழந்தைகளுக்கு போனஸாக அவர் வீட்டு பிரசாதம், அது சுண்டலோ, அக்கார அடிசலோ, வெண்ணையாய் கலந்த தயிர்சாதமோ கிடைக்கும். “இன்னிக்கு என்ன கதை தெரிஞ்சுக்க போறோம்?”, கனத்த சாரீரத்தில் சிறு பிசிறு கூட இல்லை… “பகீரதன் கதை”, என்றனர் கோரஸாய்.  நேற்றே சொல்லி இருந்தார். இன்று பகீரதனின் கதையை கூறுவதாக…
******************************
தேஜஸ்வினி அவள் கட்டியிருந்த பட்டுப் புடவையை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து  நிதானமாக  கிளம்பிக் கொண்டிருந்தாள். இன்று அவளது கச்சேரி சென்னையில், அவளது வசிப்பிடமும் சென்னையாதலால் நிதானமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். இன்று பாடுவது மிகவும் புகழ் பெற்ற அரங்கத்தில் என்பதால், அதற்கேற்றாற்போல் ஒப்பனையும், ஆபரணங்களும்.. ஏற்கனவே, எடுத்து வைத்திருந்ததால் அவற்றை அணிந்து கொண்டு இருந்தாள். அந்த அரங்கத்தின் உறுப்பினர்கள் சங்கீத ஞானமுள்ளவர்கள் பல பேர். தேஜஸ்வினியின் கச்சேரிக்கென்று ஒரு பெரிய ரசிக வட்டமே உண்டு. எனவே கூட்டம் அலைமோதும். கூடவே, அங்கு சிற்றுண்டியும் நன்றாக இருக்கும், என்பது கொசுறு. செவிக்குணவு முடிந்தபின்.. சற்று வயிற்றுக்கும் உணவு.
அரங்கத்தில் பாடப்போகும்  பாடல்களை… இரண்டு முறைக்கு மேல், பக்கவாத்தியங்களோடு ஒத்திகை பார்த்தாயிற்று. எத்தனையோ முறை கச்சேரி செய்திருந்தாலும்… ஒத்திகை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். பக்கவாத்தியங்கள் ஏதுமில்லாமல், தனியாகவும் பயிற்சியெடுப்பாள். புதிது புதிதாய் ஆலாபனைகள், நிரவல்கள் யோசிக்க, யாரும் எடுத்து பாடியிராத தமிழ் பாடல்களை அதற்கேற்ற ராகத்துடன் பாட பயிற்சி எடுக்க என, அதற்காக மட்டுமே கடற்கரையை ஒட்டி ஒரு வீட்டை வாங்கி வைத்துள்ளாள்.
இது தவிர.. ரசிகர்கள் நேயர் விருப்பத்தையும், அவர்கள் நிகழ்ச்சியின் போது எத்தனை தாமதமாக கேட்டாலும், முகச்சுழிப்பின்றி பாடுவதும் இவளது சிறப்பு.
“அம்மாடி, இன்னும் கிளம்பலயா?”, சித்தி  விஜயலக்ஷ்மி, தேஜுவின் அறைக்குள் நுழைந்தவாறே கேட்க, நகைகளை அணிந்து கொண்டிருந்தவள்.. “தோ ஆச்சும்மா..”, எனவும்…
இவளை பார்த்தவர்.. கைகளால் அவள் முகத்தை வருடி…  “உன்னை ஒருத்தன் கைல பிடிச்சு கொடுத்துட்டா, ஈஸ்வரான்னு நான் பாட்டுக்கு காசிக்கு போயிடுவேன். ஹூம்.. எப்போத்தான் பகவான் கண்ண திறக்கப்போறானோ?”, என்றார் ஒருவித ஆதங்கத்துடன்.  தேஜூவுக்கு திருமணம் தள்ளிப்போவது, அவருக்கு ஒரு பக்கம் குறை. தவிர.. அவரது கடைசிகாலத்தை, காசியில் கழிக்க வேண்டும் என்பது அவரது நெடுநாளைய அவா.
அநேக இந்துக்களின் நம்பிக்கையான “காசியில் இறந்தால் மோட்சம், மறுபிறவி இல்லை”,  என்பதில் இவருக்கு அசைக்கமுடியா நம்பிக்கை. காசியில் இதற்காகவே ஆசிரமங்கள், குடியிருப்புக்கள் உண்டு., அதில் இறப்புக்காக காத்திருக்கும் மக்களும் ஏராளம். அங்கே சென்றால் எந்த ஆஸ்ரமத்தில் தங்க வேண்டும் என்பது உட்பட அனைத்து விபரங்களையும் சேகரித்து வைத்துள்ளார். ஆனால் அதற்கான காலம்தான் கூடி வரவில்லை. நெடுமூச்சுடன் தமக்கையின் மகளை வாஞ்சையாக பார்த்தார்.
தேஜஸ்வினிக்கெனவே வடிவமைக்கப்பட்ட பிரத்யேகமான வேலைப்பாடுகள் கொண்ட நகைகள். அதிகமான எடையிருக்காது, ஆயினும் பார்ப்போரை மீண்டும் ஒரு முறை பார்க்க வைக்கும். தேஜுவின் கச்சேரிகளுக்கு, பெண்கள் அதிகம் வர இதுவும் ஒரு காரணம். ஸ்பான்சர்கள் என, எந்த நகைக்கடை அணிகளையும் அணிவதில்லை அவள். அதை ஒரு கொள்கையாகவே ஆக்கியிருந்தார், அன்னை ராஜம்மா.
காரணம் , முன்பு , [தேஜு பள்ளி பருவத்தில் இருந்தே கர்னாடக இசை பாடகி ] ஒருமுறை கச்சேரி முடிந்ததும், தேஜஸ்வினி அணிந்திருந்த ஒரு தோடு ஒன்று தொலைந்து போனது. நகையை ஒரு பிரபல நகைக்கடை விளம்பரத்திற்காக ஸ்பான்சர் செய்திருக்க, அவர்கள் இவர்களது சங்கீத குழுவை சந்தேகித்து, பக்க வாத்தியக்காரர்களை, அவர்களது பொருட்களை ஆராய சொல்லி போகவிடாமல் தடுத்து நிறுத்தி விட்டனர். இதை தூரத்தில் இருந்து பார்த்த தேஜஸ்வினி,  ஒரு நொடி தாமதியாமல், நேரே அவர்களிடம்  வந்து விபரம் கேட்டதும், விருட்டென. தேஜு அவளது கழுத்திலிருந்த வைர அட்டிகையை கழட்டி விளம்பரத்திற்காக நகையை தந்தவர்களிடம் நீட்டிவிட்டாள். கூடவே, “அந்த தோடு இந்த அட்டிகை விலை இருக்குமா?, வச்சிக்கோங்க…”, என்று கேட்டு முகம் சிவந்துக் கடிந்தாள், பெண்.
அவள்… ஒன்பதாம் வகுப்பு  பயிலும் மாணவிதான், ஆனாலும் அவள் மனிதர்களை யாரோ ஒருவர் குறை கூறுவதா?  என்று ரோஷமாய், அம்மாவிடம் வந்து,  “ம்மா. இனி எந்த கச்சேரிக்கும்  நம்ம ஜுவல்ஸ் மட்டும்தான் போடுவேன்”, என்று மூக்கு விடைக்க பேசிய மகளை, முதுகை தட்டி ஆசுவாசப்படுத்தி, அருகிருந்த இருக்கையில் அமரவைத்தார் அம்மா ராஜலக்ஷ்மி.
திரும்பி.. நகைக்கடை சிப்பந்தியிடம் நிமிர்வாய்.. “இங்க இருக்கிறவங்க, எங்க கூட கிட்டத்தட்ட பன்னெண்டு வருஷமா இருக்காங்க. இவ பொறந்ததுலேர்ந்து, என்கூட இருந்ததைவிட அவங்ககூட இருந்தது தான் அதிகம்.. , ஒன்னும் பிரச்சனையில்ல, நாங்க இங்க தான் உக்கார்ந்திருப்போம்.. போய் மறுபடியும் மேடைல தேடுங்க.., கிடைக்கலைன்னா நாங்க பொறுப்பேத்துக்கறோம். எதையும் பதட்டமில்லாம செய்யுங்க”, என்று இன்முகத்துடன் கூற.. அந்த வேலையாள் தெளிந்த மனநிலையில் தேடுதலை துவங்கினான்..
“என்ன பாப்பா நீங்க?, நான் சொன்ன ஆடிக்கொண்டார்-ல.. ஆலாபனை பண்ணலை.. நேரா ‘போ ஷம்போ ‘க்கு போய்ட்டிங்க.”, மிருதங்க சக்ரவர்த்தி ஜெய் பிரகாஷ், கோபமாய் இருந்த தேஜஸ்வினியின் கவனத்தை திசை திருப்பினார்.
“ஏன் ? நான் இன்னிக்கு பண்ணின ஆலாபனை நல்லா இல்லையா என்ன?, ஒரே மாதிரி பாடினா, எனக்கும் போர் அடிக்கும், கேக்கறவங்களுக்கும் போர் அடிக்குமில்லையா? அதான் கொஞ்சம்  மாத்தி யோசிச்சேன், ஏன் நல்லா இல்லையா?” , என்று சுணங்கிய தேஜுவை..
“சே சே.. நீ என்ன பாடினாலும் அழகுதான் பாப்பா. ஆனாலும் ஒத்திகை பாத்திருந்தா நாங்களும் தனி ஆவர்த்தனத்துக்கு தயாரா இருப்போமில்ல.”, தேற்றினார் மிருதங்க வித்வான்.
“ஹ ஹ… சரி சரி, இனி ஒத்திகை இல்லாம பாடல, ஓகே?”
இவர்கள் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே, அந்த நகைக்கடை சிப்பந்தி வேகமாய் மேடையை விட்டு இறங்கிவந்து,  ராஜம்மாவிடம் .. “தப்பாயிடுத்து மன்னிச்சுக்கோங்க.. தோடு , மேடைல கார்பெட்டுக்கு நடுல இருந்தது., மறுபடியும் சொல்றேன், நான் ஓனருக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவன், மாச சம்பளக்காரன்”, மூச்சு வாங்க சங்கடமாய் சொல்ல…
“நாங்க தப்பு சொல்லவே இல்லையே?, நீங்க உங்க வேலைய செஞ்சீங்க.. என்ன ஒண்ணு .. எங்க கிட்ட கேட்டுட்டு அவங்ககிட்ட போயிருக்கணும்.. , நாங்க கிளம்பறோம்..”, என்ற ராஜம்மாள்… இவர்கள் குழு கிளம்பிச் சென்றதும் … இவர் மட்டும் சற்று மெதுவாய் நடந்து .. திரும்பி, “இனி என் பொண்ணு இரவல் நகை போடமாட்டா, கொண்டு வராதீங்க”, என்றிருந்தார்..
அன்றிலிருந்து, அவளுடைய ஆடைகள்/ புடவைகள் வாங்கும்போதே, அதன் சரிகை வேலைப்பாடு… ரவிக்கை .. அதற்கு தோதாக ப்ரத்யேகமாய் வடிவமைக்கப்பட்ட தங்க, வைர அணிகலன்களையும் வாங்கிக் குவித்தார், ராஜம்மா.
தேஜு வின் தந்தை, தாத்தா இருவரும்  பட்டயக்கணக்காளர்கள் [வேணாம்… அடிக்க வராதீங்க.  CA படிச்சவங்க ]. தாத்தா காலத்திலேயே ..  சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள காஞ்சீபுரம் .. ஒரகடம் என ஏகமாய் நிலபுலன்கள் வாங்கி வைக்க, அப்பா விஸ்வநாதன், சொந்த ஊரில் அவருக்கு இருந்த நிலபுலன்களை விஸ்தீரணப்படுத்த.. என. ஏகப்பட்ட சொத்துக்களுக்கு சொந்தக்காரி.
பத்து வருடங்களுக்கு முன்பு.. ஒருமுறை திருச்சிக்கு, வாடிக்கையாளரான வங்கி ஒன்றின் தணிக்கை [ஆடிட்டிங்] செய்ய தந்தையும் மகனுமான சென்ற தேஜுவின் அப்பாவும், தாத்தாவும் , வேலை முடித்து ஊர் திரும்பும் வழியில், கார் விபத்தில் சிக்கியதால், உயிரற்ற உடலாக வீடு வந்தனர். காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்ததால்  இருவரும் நொடியில் மரணத்தை தழுவி இருந்தனர்.
அதுவரை, சுந்தரராமன், மற்றும் அவரது மகன் விசுவநாதன் இருவருமாக, கொடுமுடியில் இருந்து அடிக்கடி சென்னை வந்து பராமரித்துக் கொண்டிருந்த சென்னை புறநகர் சொத்துக்களை நிர்வகிக்கவென தேஜுவின் குடும்பம், சென்னைக்கே  குடிபெயர்ந்தது. சொந்த ஊரில், நிலபுலன்களை பார்க்க இருமாதங்களுக்கு ஒருமுறை சென்று வருவார்கள் தேஜஸ்வினியும், ராஜம்மாவும்.
தொடர்ந்த ஒரு வருடத்தில், வீட்டில் இன்னுமொரு எதிர்பாரா துர்நிகழ்வும் நடக்க, துவண்டுதான் போனார்கள் தாயும் மகளும். பின்…, சொந்தங்களின் வற்புறுத்தலால்… வெளிநாடு சென்று தங்கி… ஒருவழியாக துக்கத்திலிருந்து மீண்டு சங்கீதத்திலேயே மூழ்கினர். மீண்டும் இசை நிகழ்ச்சிகளில் தேஜு பிஸியாகிவிட… ஓரளவிற்கு இயல்பாகினர்.
சென்னை புறநகரில் இருந்த மூன்று ஏக்கர் நிலத்தை ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனத்திற்கு ஜாயிண்ட் வென்ச்சர்  கொடுத்ததில் … அடுக்குமாடி வளர வளர, இவர்களது லாக்கரில் வளர்ந்து வந்த பணத்தின் மூலதன ஆதாய வரியைக் [ tax on capital gains ] குறைப்பதற்காக, கச்சேரிக்கென அடிக்கடி போகும் ஊர்களில் வீடுகள், நிலங்கள் என்று வாங்கினாள். அது போக, மீதமிருந்த பணத்தைக்  கரையான் அரிக்காமல் வங்கியில் போட்டுவிட்டு, முப்பது சதவீதம் வரி செலுத்தும் குடும்பம். மொத்தத்தில்.. செல்வதுக்கு அதிதேவதை லக்ஷ்மி அவர்கள் வீட்டில் நித்யவாசம் செய்தாள்.
தாத்தா தந்தை வழியில், தேஜூவும்  CA படிக்க….. [ அவள் கணக்கு வழக்கினை பார்க்க இரண்டு  CA -க்கள் அவளிடம் வேலை பார்ப்பது வேறு விஷயம்], அன்னை வழியில்..  சிறு வயதில் இருந்தே கற்ற வாய்ப்பாட்டு, மேடை தோறும் இவள் புகழ் பாட, ‘கொடுத்து வைத்தவள்’என்ற பதத்திற்கு அர்த்தம் கொடுப்பவள், ஊரார் பார்வைக்கு.
கச்சேரிக்கு தயாராகி நிற்கும், தேஜு இருபத்தியேழு வயது யுவதி, அன்னை ராஜம்மா போட்டோவாய் மாறி இரண்டு வருடங்கள் ஆகி இருந்தது.  கணவரின்  நினைவாக,  இரு அரசு சாரா தொண்டு நிறுவனங்களை ராஜம் ஆரம்பித்து இருந்தார், தேஜுவும் அதில் இணை-நிறுவனராக இருக்கிறாள், தவிர வேதம் பயிலும் ,மாணவர்களுக்காக தற்காலப் பாடத்திட்டத்துடன் கூடிய ஒரு பள்ளியும் இவர்கள் அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது. மொத்தத்தில் ஓய்வின்றி உழைக்கும் ரகம்.
தேஜுவிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லாதபோதும், சித்தி வெகு மும்மரமாக வரன் தேடிக் கொண்டுள்ளார். இவர்களுடைய வசதிக்கு ஏற்றாற்போல் பார்த்தால், ஒன்று பையன் மேலைநாட்டில் இருக்கிறான் அல்லது இசையில் ஆர்வம் இல்லாதவனாக / தொண்டு நிறுவனங்களை மூடிவிட சொல்பவனாக இருக்கிறான். இவை எதுவுமே தேஜூவுக்கு ஒத்து வராது. எதையாவது கூறி தட்டிக் கழித்து விடுவாள்.
இசைவிழாவிற்கு கிளம்பியவள்… வீட்டை விட்டு வெளியே வந்து, அவளது வீட்டின் காம்பௌண்டுக்குள்ளே வடக்கில் அமையப்பெற்ற விஜய கணபதியை வணங்கி காரில் ஏறினாள்… தேஜஸ்வினி. பின்னிருக்கையில் சாய்ந்து அமர்ந்து… “வராஹி” பீஜ மந்திரத்தை மனதுள் உருப்போட்டாள்.
இது அவளது அம்மா பழக்கியது. முற்காலத்தில் அரசர்கள் போர் தொடுக்கச் செல்லும்போது வெற்றி தேவதையான வாராஹி தேவியை வழிபட்டு செல்வது வழக்கமாக வைத்திருந்தனர்.கலைஞர்களுக்கு, ஒவ்வொரு மேடையும் ஒரு பரீட்சையே. முன்னதில் ஆக்ரோஷத்தோடு போராட வேண்டும், பின்னதில்… ஐம்புலன்களையும் உள் அடக்கி.. கலை ஒன்றை மட்டுமே தியானித்து அதை ஆராதிக்க வேண்டும்.
கைத்தட்டல்களுக்கு மயங்கி கர்வித்தாலோ.. சின்ன ஸ்ருதி பிசகலும், விமர்சனம் செய்யப்படும். எனவே ஒவ்வொரு முறை மேடை ஏறும்போதும், வாராஹி மூல மந்திரத்தை மனதுக்குள் ஜபித்தே ஆரம்பிப்பாள், நம் தேஜு.
+++++++++++++++++++++++
அந்த உருவம் மறைவாக வைத்திருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தது. ஒரே ஒரு முறை அதன் பேட்டரி-யை சரி பார்க்கவென, அதை உயிர்பித்தது. தேவையான அளவு பேட்டரியின் உயிர் இருந்ததால், பின் அதை அணைத்து வைத்து, அதனுள் ஸிம் கார்டினை பொருத்தி கையில் எடுத்துக்கொண்டது. உணர்ச்சிகளை துடைத்த முகத்தில் அதன் கண்கள் மட்டும் எதிரிலிருக்கும் தனது இரையை வேட்டையாட காத்திருக்கும் புலியின் கண்களை போல்  பிரகாசமாய் மின்னியது. 

Advertisement