Advertisement

அத்தியாயம் – 7

கொஞ்ச நெஞ்ச நாளில்லை, கிட்டத்தட்ட அறுபதாயிரம் வருஷம் பகீரதன் கடுமையா தவம் பண்ணினான். அப்போ அவன் முன்ன வந்த ப்ரஹ்மதேவர், “நோக்கு என்னடாப்பா வேணும்? என்னத்துக்கு இத்தனை கடுமையா தபஸ் பண்ற?”, ன்னு கேட்டாராம். கடவுளுக்கு தெரியாதா அவனுக்கு என்ன வேணும்னு? பகீரதன் என்ன சொல்றான் பாப்போம்-னு அவர் கேட்டார். ஒருவேளை எது கேட்டாலும் கிடைக்குங்கிறதால, தங்க வைர வைடூர்யம் கேட்கலாம், தனக்கு நீண்ட ஆயுசு வேணும்னு கேக்கலாம், என்னோட ராஜ்ஜியம் மட்டும் இருக்கனும் மத்ததெல்லாம் அழிஞ்சு போட்டும்-னு கேக்கலாம், 

அவன் தவம் பண்ணின நோக்கமான கங்கை பூமிக்கு வர்றத விட்டுட்டு மனசு மாறி, வேற ஏதாவது கேக்கறானா? ன்னு பகீரதன டெஸ்ட் பண்ணினார் ப்ரஹ்மா. ஆனா பகீரதனுக்கு, ‘கொக்குக்கு ஒண்ணே மதி’ங்கிறா மாதிரி ஸ்திரமா ஒரே புத்தி, “என் முன்னோர்களெல்லாம் நற்கதிக்கு போகணும், அதுக்கு கங்கை கீழ வரணும், என் சந்ததி வளரனும்”, ன்னு கேட்டான்.  உடனே, “அப்பா பகீரதா, நீ கேட்டதெல்லாம் நடக்கும், நான் கங்கைட்ட சொல்லி கீழ விழ வைக்கிறேன், ஆனா அதோட வேகம் ரொம்ப ரொம்ம அதிகம். இங்க பூமில அதைத் தாங்கறதுக்கு யாரையாவது ஏற்பாடு பண்ணினா உடனே கங்கை வருவா”ன்னு ப்ரஹ்மதேவர் சொன்னார். பகீரதனுக்கா… சந்தோஷமோ சந்தோஷம். அப்படியே ஸாஷ்டாங்கமா சுவாமி கால்ல விழுந்து, “ஸ்வாமி, நான் பாக்கியசாலி, அப்படியே அந்த கங்கா தேவியை தாங்கற சக்தி இருக்கிறவர் யாருன்னும் சொல்லிடுங்கோ, ரொம்ப களைப்பா இருக்கேன், அதனால அவரைத் தேடி அலையல்லாம் முடியாது “, ன்னு அவர் காலை கட்டிண்டுட்டார். 

“அடேயப்பா. ஏந்திரு.. நீ ஒண்ணு பண்ணு, பரம்பொருளான ஈஸ்வரனை கேளு, எனக்குத் தெரிஞ்சு அவர்தான் இதுக்கு சரியான ஆளு.”-ன்னு சொல்லி மறைஞ்சுட்டார், ப்ரஹ்மதேவர்.

****************************

அது ஒரு தரமான கண்ணாடிக் குடுவை, தோராயமாக இருநூறு மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்டது. அந்த உருவம் அக்குடுவை முழுவதும் தண்ணீரை நிரப்பியது. பின் அதை காற்றுப்புகா வண்ணம் மூடியது. பின்னர் கையிலிருந்த ஒரு சிறிய ஸ்விட்ச் போன்றதொன்றை அமுக்கியது. அப்படி அமுக்கும்போதே இன்னொரு கையிலிருந்த ஸ்டாப்வாட்ச்-சினையும் சேர்த்து அமுக்கியது. ஆம். நேரக்கணக்கெடுத்தது. அந்த உருவத்திற்கு ஒவ்வொரு வினாடிகளும்  முக்கியம். இன்னமும் சொல்லப்போனால் ஒவ்வொரு மில்லிவினாடிகளும், விலை மதிப்பில்லாதவை.

அந்தக் குடுவையில் இருந்த தண்ணீர் முழுதும் வெளியே பீய்ச்சி அடிக்க சுமார் 70 மில்லி வினாடிகள் ஆனது. “ச்சு. நோ.. இத 40 ms ஆ மாத்தணும்.”, வாய்விட்டு சொல்லிக்கொண்டே, குடுவையின் கீழிருந்த பிஸ்டன் போன்ற அமைப்பை, வேகத்தை துரிதப்படுத்துமாறு மாற்றி அமைத்தது.

மீண்டும் நீர் நிரப்பி, நேரக்கணக்கெடுப்பு. கிட்டத்தட்ட எட்டு ஒன்பது முறை இந்த ஆய்வு நடக்க.. ஒரு வழியாக திருப்தி அடைந்தது.

பின்னர், அந்த கண்ணாடிக் குடுவையை உள்வாங்கி கொள்ளும் அளவுக்கு சற்று பெரிய…  ஒரு பொம்மையை ஒத்த ஒரு பிளாஸ்டிக் வடிவமைப்பு. அதில், இந்த குடுவையை பொருத்தி, பின் அதை சுற்றி இருந்த வெற்றிடத்தில் தொண்ணூறு சதவிகிதம் அளவிற்கு  நீரை நிரப்பியது. பின்னர் இன்னுமொரு பொத்தானை அமுக்கி, இதன் வெளியேற்றும் நேரமும் குறித்து வைத்தது.

இந்த வேலைகள் ஓரளவு முடிய, தனது கணினியை திறந்து… இவ்வுருவம்  ஊஞ்சலில் ஒட்ட வைத்த கருவியின் பதிவுகளை கேட்க ஆரம்பித்தது. அந்த மனிதனின் வீட்டில் இருந்த அருகலை[வைஃபை] எப்போதோ ஊடுருவியிருந்தது. இப்போது அதன் மூலமே இந்த தகவல் பரிமாற்றங்கள். ஏதும் உபயோகமான தகவல்களா என்று கேட்டால்.. இல்லை. சாதாரணமான அன்றாட உரையாடல்கள். அந்த மனிதனின் வீட்டில் சந்தடிகள் அதிகம். “ம்ம். சரி வெயிட் பண்ணுவோம்..”, என்றவாறு..  “எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதைப் பண்ண மாட்டமா?”,  அதுவாகவே சொல்லி தனக்குத்தானே சிரித்து, எப்போதும் போல தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்க புர்கா அணிந்து அங்கிருந்து கிளம்பியது.

+++++++++++++++++++++++++

அது வீணை விச்சு மாமியின் வீடு, அங்கே நடு நாயகமாக நம் சொர்ணாக்கா [அட தனா பாட்டிங்கோ], அருகே லீலாவதி. கட்டிலில் பாட்டியின் தோழி ஜெகதா, சற்றே சோர்ந்தவாறு படுத்து இருந்தார். அவருக்கு ஒரு வாரம் முன்பு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

“லீலா போயி கொஞ்சம் விச்சுக்கு ஹெல்ப் பண்ணேன், அப்படியே,  அந்த மாடுலர் கிட்சன் எப்படி இருக்குன்னு பாரு. பிடிச்சிருந்தா செஞ்சவன் நம்பரை கேட்டு வாங்கிட்டு வரயா? “, என்று லீலாவதியை விச்சு.. சே.. சே.. விசாலாட்சிக்கு துணையாக சமையலறைக்கு அனுப்பிவைத்தார்.

“ஜெக்கூ.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம கூட படிச்சானே கருணாகரன், அவன் இங்கதான் சென்னைல இருக்கான்”, கூறிய பாட்டியின் குரலில்.. அத்தனை உற்சாகம், கேட்பவருக்கு மின்சாரம் போல பாயும் அந்த குதூகலம்.

மெதுவாக ஜெகதா மாமியையும் பள்ளி கால நினைவுகள் தொற்ற…, “ஒல்லியா வெடவெடன்னு ஒடக்கானாட்டம் இருப்பானில்லை?”, அவருக்கு சின்ன சிரிப்பு இழையோடியது.

“இப்போ பாக்கணுமே நீ?, தொந்தியும் தொப்பையுமா, செமக் கிழமாயிட்டாண்டி”, என்று கிளுக்கிச் சிரித்தனர்.. பாட்டிகள் இருவரும்.

“அவன் அடிச்ச லூட்டி கொஞ்சமா நஞ்சமா? என்னமோ தான்தான் ரவிச்சந்திரன்னு நினைப்பு”, என்று அவர் தொடர… ரவிச்சந்திரன் -நடிகர். [அந்தக்கால கனவுக் கண்ணன்].

“எங்கடி பாத்த?”

“வேறெங்கே.? பேஸ்புக்குல-தான், என் பேரன் பெரியவனோட ஆபிஸ்-லதான் இவன் புள்ளையும் வேலை பாக்கறான். அவன் ஆபிஸ் போட்டோல்லாம் காமிக்கும் போதே நெருடுச்சி. என்னடா.. இந்த மூஞ்சி நமக்கு தெரிஞ்ச மூஞ்சியா இருக்கேன்னு. அந்த பையனுக்கு ஃபிரென்ட் ரெக்வஸ்ட் கொடுத்து அவனோட ப்ரொபைல் கொஞ்சமா தேடினேன். குடும்ப போட்டோவே கிடைச்சது.”, இது சொர்ணாக்கா இல்ல.. கேடி/ டெக்கி பாட்டி…      .

“ஆமா.. அவன் மஞ்சுவத்தான கட்டிண்டான்?”,

“அவளேதான் ..போட்டோல  நல்லா அழகா இருக்கா, வயசுதான் ஆகிப்போச்சு. பேசணும்னு நினச்சேன்.. உன்னையும் கூட்டிட்டு போகலாம்னு நினச்சேன். சீக்கிரம் உடம்பை ரெடி பண்ணிக்கோடி. ஒரு கெட் டு கெதர் போடலாம்”, என்றார் சொர்ணாக்கா..

பின்னே.. இருதய அறுவை சிகிச்சை முடித்து வந்தவரிடம், ‘அங்க வலிக்குதா? இங்க வலி இருக்கா? எனக்கும் இப்படித்தான் ஆச்சு எங்க மாமா சர்ஜெரி பண்ணி ரெண்டு மாசத்துல போயிட்டாரு’, என்று இப்படிப்பட்ட பேச்சுக்கள் எதற்கு?

எல்லாருக்குமே அவர்கள் பால்யகால நினைவுகள் என்பது பிடித்தமல்லவா?  அவர்களை, அவர்களது சிந்தனைகளை அங்கே கூட்டிச்சென்றால், புத்துணர்வுடன் மனமாற்றமும்  நிச்சயம். பார்வையாளர்களால் வேறென்ன செய்ய இயலும்?, அவர்கள் பயத்தை இரட்டிப்பாக்காமல், இவ்வாறு அவர்களை திசை திருப்பினாலே போதுமே, அவர்களது ஆயுள் இன்னமும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்படுமல்லவா?.

இங்கே அரட்டை களை கட்டியிருக்க…, லீலாவதியும் விசாலாட்சியும் காஃபி, சிற்றுண்டியுடன் வந்தனர். பெண்கள், அதற்குள் ஸ்நேகமாகி இருந்தனர். லீலாவதி மாமியாரைப் பார்த்து..”அத்த, கிட்சன் டிசைன் நல்லாருக்கு, நம்மளோடதும் இப்படியே மாத்திடலாம்,  நம்பர் வாங்கிட்டேன்”

“ம்ம். சரி, இவதான் சொன்னா, நல்லா வசதியாவுமிருக்கு, இடமும் விசாலமா தெரியும்னு, அதான் பாக்க சொன்னேன் “, சொர்ணாக்கா..

அதே நேரத்தில் வாசலில் அழைப்பு மணி அடித்தது… “வேலைக்காரம்மா வர்ற நேரம், இதோ இருங்க வர்றேன்”, என்றுவிட்டு  விசாலாட்சி சென்று பார்த்தார்.

“வாவ்.. தேஜு….”, என்று மாமி கூவும் குரல் அடுத்த வீட்டுக்கும் கேட்டிருக்கும். ஆனந்தமான அதிர்ச்சியில்,  விசாலாட்சிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.. பின்னே..அவர் வீட்டிற்கு,  ‘கான சரஸ்வதி’ தேஜூ வந்திருக்கிறாளே? ஏனெனில் அவள் சாமான்யமாக யார் வீட்டிற்கும் போக மாட்டாள். வீட்டிற்கு என்ன? எந்த சிறப்பு நிகழ்ச்சிகளிலும் அவளைக் காண முடியாது. அதிக மக்கள் கூட்டமென்றால், அப்படி ஒரு அலர்ஜி பெண்ணிற்கு.  அதற்காகவே திரைத் துறைக்கு செல்ல மறுத்தவள். இப்படிப்பட்ட  குணாதிசயம் கொண்டவள் பிரபல கர்னாடக இசைப்பாடகி… முரணாக ஒரு நிஜம். சிறுவயதிலிருந்தே.. மேடையில் பாடுவது பழகியதால், அதை அவள் ஏற்றுக் கொண்டால் போலும்.

ஆனாலும், ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போடுவதெல்லாம் பழக்கமில்லை. அவளை பொறுத்தவரை, அவள் பாடுவதைக் கேட்க வருபவர்கள் சங்கீதம் பிடித்ததால் வருகின்றனரே தவிர தனக்காக அல்ல, என்ற எண்ணமுண்டு.  இவளல்லாது வேறு யார் பாடினாலும், அவர்கள் வருவார்கள், என்று ஸ்திரமாக நம்பினாள். அதனாலேயே, தலையில் கணம் சேராமல், இயல்பாய் இருந்தாள்.

தேஜஸ்வினியிடம்… பத்து நாட்களுக்கு முன்பு, ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, வீடு திரும்பும்போது, “அம்மாக்கு பை பாஸ் ஆபரேஷன். கொஞ்ச நாள் ரிகர்சலுக்கு வர முடியாது”, என்று கூறியதை நினைவில் வைத்திருந்து, அவளது அம்மாவைக் காணவென வீடு தேடி வந்ததில், விச்சுமாமி ஹாப்பியோ ஹாப்பி.

“உள்ள வாம்மா”, மகிழ்வோடு கூறி… “ம்மா… யாரு வந்திருக்கா பாரு?”, விசாலாட்சி கிட்டத்தட்ட கத்தினார்.

அவர் குரல், அறை வரை எட்ட.. , “யாரு?”, என்று விட்டு தோழியைப் பார்த்தார். பின் இரண்டு பாட்டிகள் + லீலாவதி மூவரும் அறைவாசலில் கண் பதித்தனர். தேஜு உள்ளே வர…. “டீ கோந்தே [குழந்தைதான்.. இப்படி மருவி விட்டது] “, மகிழ்ச்சியாக, வாஞ்சையாக அழைத்தார் ஜெகதா பாட்டி. தேஜுவைக் குழந்தயாய் இருந்ததிலிருந்தே அவருக்கு தெரியுமல்லவா? ராஜம்மா ஜெகதா பாட்டிக்கு நல்ல பழக்கமும் கூட. விச்சுமாமிதானே அவளுக்கு சிறுவயது கச்சேரியிலிருந்து வீணை வாசித்து வருகிறார்? அதனால்தானே, தேஜு இவர்களுக்கு இந்த வீட்டைக் கட்டிக் கொடுத்து மலிவான வாடகையில் குடியமர்த்தியிருக்கிறாள்? பின்னே வாஞ்சை இருக்காதா என்ன? 

“அட நம்ம தேஜு.. “, இது சௌடாம்பிகை. அவருக்கும் இனிய அதிர்ச்சிதான். இதில் தேஜுவைத் தெரியாது முழித்த ஒரே ஆள்.. லீலாவதிதான். அவர் முழிக்க.., “அன்னிக்கு உன் புள்ள என்னை கூட்டிபோனானில்லை.. அது இவங்க கச்சேரிதான்” என்று மருமகளிடம் சௌடாம்பிகை கூற… “ஓஹோ”, ஒரு வார்த்தையில் முடித்தார்.

காரணம் அன்றிலிருந்துதான், மகனும், மாமியாரும், எலியும் பூனையுமாக இருக்கின்றனர், இருவருக்குள்ளும் அந்த இசை நிகழ்ச்சியின் போதுதான் முட்டல் வந்தது என்பது வரை தெரியும். தனாவிற்கு விபத்து ஏற்படும் வரை பாட்டியும் பேரனும் முகம் கொடுத்துக் கூடப் பார்க்க, பேசவில்லை, அதன் பின்னரும் எதோ ஒன்றிரண்டு வார்த்தைகள் அவ்வளவே.

தனஞ்செயனின் விபத்திற்கு பிறகு, அவனது திருமணத்திற்காக யோசித்த போது, தனாவின் முறைப்பெண்ணான ராதிகாவைப் பார்க்கலாமா என்ற யோசனையை மாமியாரிடம் சொன்னதும்..அதற்கு அவர் “அவனுக்கு பிடிச்சா சரி, மொதல்ல அவன்ட்ட கேளு”, என்றதும் கூடவே ஞாபகம் வந்து தொலைத்தது. லீலாவதி கடு கடு-வதியானார்….

அறைக்கு வந்த தேஜூவுக்கு முதலில் கண்ணில் பட்டது, சௌடாம்பிகை பாட்டி தான். அட இவரெங்கே இங்கே? என்று அதிர்த்தவளின் இதயம் சூடு வைத்த ஆட்டோ மீட்டர் கணக்காய் எகிற…   கண்கள் தானாய் சுற்றிலும் அலைபாய்ந்து, ஜெயன் இருக்கிறானா என்று நோட்டம் விட்டது. அவன் இல்லை என்றதும், மனம் அமைதியானது ஆனால் அது ஏமாற்றத்தினாலா? ஆசுவாசத்தினாலா? அவளே அறியாள்.

Advertisement