Advertisement

அத்தியாயம் – 9

வானத்துலேர்ந்து கங்கம்மா எட்டி பாத்தா… ஈஸ்வரனை ஒரு தடவை ஏற இறங்க பாத்துட்டு.. இவரா நம்ம வேகத்தை தங்கப்போறார்ன்னு இளக்காரமா ஒரு செகண்டு யோசிச்சா, சிவபெருமானை முன்ன பின்ன தெரியாதோல்லியோ? சொந்த தங்கை பார்வதியோட புருஷன்தான், ஆனா பார்வதிதேவிக்கு கல்யாணம் ஆறத்துக்கு முந்தியே கங்கையைத்தான் தேவர்கள் அவா லோகத்துக்கு வேணும்னு நதியாக்கி கூட்டிண்டு போயிட்டாளே?

மேலெர்ந்து பாத்தவோ, சரி அவர் விதி, நம்மளால பாதாள லோகத்துக்கு அடிச்சிண்டு போகணும்னு இருந்தா நாம என்ன பண்றது?- ன்னு நினைச்சிண்டே ஆகாசத்திலேர்ந்து ப்ரவாகமா பூமிக்கிட்ட வந்துட்டா.. நேரா இமயமலை மேல நின்ன சிவபெருமான் தலைல விழுந்தா… அவர் என்ன பண்ணினார் தெரியுமோ ?

************************

நான்கு நீண்ட கொடிய வேதனை தந்த மாதங்கள்.. எப்படிக் கடந்தான் என்றால் தனஞ்செயனுக்கே தெரியாது. முழு நேரமும் வேலையில் தான் கழித்தான். குளித்து ஆடை மாற்ற மட்டுமே வீட்டுக்குச் சென்றான். உண்பது உறங்குவது அனைத்தும் ஸ்டேஷனில்தான் என்றானது அவனுக்கு.

வீட்டு மனிதர்கள் யாரைப் பார்த்தாலும் கோபம் கோபம் கண்மண் தெரியாத கோபம். பாட்டியைப் பார்த்தால் இவர்களால் தானே.. அவள் என் வாழ்க்கையில் வந்தாள் என்று, அம்மாவைப் பார்த்தால் இவர்கள் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதால் தானே…  அவளிடம் பேச வேண்டி வந்தது (அப்படியா? இவருக்கு பிடிச்சதால பேசலியாமா ? ) என்று யார் கிடைப்பார்கள்.. கடித்து குதறுவோமென்ற மனநிலையில் இருந்தான். அப்பாவை முடிந்த வரை தவிர்த்தான்.. அண்ணன் சுதர்மன் ஆன்சைட் வேலைக்காக  குடும்பத்தோடு வெளிநாடு சென்றுவிட.. அவனுக்கு வீட்டிற்கு செல்ல பிடிக்கவேயில்லை. மனம் விட்டு பேச ஆளில்லாத போது, வீடென்ன? வீதியென்ன? எல்லாம் ஒன்றுதான். அம்மா பாட்டியிடம் பேசலாம்தான். தன் தேஜுவைப் பற்றி தானே எவ்வாறு அவர்களிடம் இறக்கி கூறுவது?

சில பிடித்தங்கள் சொல்லி வருவதில்லை.

பிடித்தவைகள் போனாலும், பிடித்தங்கள் போவதில்லை.

ஆனால் வேலையில் இருக்கும்போது… அதில் மட்டுமே தனஞ்செயனின் கவனம். தேவையற்றதை நினைக்கக் கூடாதென்பதர்காகவே, கண்டுபிடிக்கப்படாத, நிலுவையில் இருந்த குற்றப்பதிவுகளில் தீவிர கவனம் செலுத்தினான். பலவற்றின் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் செய்தான். ஆனால், மகேஷ் கொலை மட்டும் இன்றுவரை கேள்விக்குறியே?

மகேஷினைக் குறித்து அக்கு வேறு ஆணி வேறாக அலசித் தீர்த்தான். கடைசியாக அவனது அலைபேசியில் தொடர்பு கொண்டவன்.. இவனுடன் நெருக்கமாக இருந்தவன். மொத்தமாக இவனிடம் இருந்து போதை வஸ்துக்களை வாங்கி சில்லறை விலையில்,  பள்ளி கல்லூரிகளுக்கு விற்பனை செய்தவன். ஆனால், அவனுடனான மகேஷின் தொடர்பு கிட்டத்தட்ட ஆறு மாதமாக தடை பட்டிருந்தது. பின் திடீரென மகேஷ் இறந்த அன்று வந்த…. அந்த இறுதி அழைப்பு.

அதற்குப் பிறகு அழைத்தவன் மாயமாய் மறைந்தான். அவன் சிம் கார்ட் வாங்குவதற்கென கொடுத்த முகவரியைக் கொண்டு, அக்கம் பக்கம் கேட்க.. அவன் இறந்து மாதக் கணக்கில் ஆனதாக தகவல் வந்தது.

அடுத்து தனஞ்செயன் தெரிந்து கொண்டது.. மகேஷ்-ன் விற்பனை யுக்தி குறித்து… பிரபல பள்ளி கல்லூரிகளில் பயிலும், பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு..  முதலில் இலவசமாக இப்பொடியினைத் தந்து பின் அவர்களை வாடிக்கையாளராக்குவது. பின், அவர்கள் வீட்டில் இருந்து பணம் கிடைக்கும்வரை, அதை வாங்கி உபயோகித்த அம் மாணவர்கள், போதைக்கு அடிமையாக.. வீட்டில் பணம் குடுப்பது குறைந்ததும், அவர்களைக் கொண்டே போதை பொருட்களை மற்ற மாணவர்களுக்கு விற்க வைத்து, என சங்கிலித் தொடர் போல, இவன் விற்பனையைப் பெருக்குவது அவனது [மகேஷின்] வாடிக்கை.. அதாவது அடிமைகள்.. அடிமைகளை உருவாக்கி… அடிமைகளாகவே தொடர்வது.

இன்னொன்றையும் அறிந்தான்,  அது அவனது கொள்முதல் யுக்தி. மகேஷின் விற்பனை மூலப்பொருளான ஓப்பியம், கஞ்சா-வை  விவசாய பயிர்களின் இடையே பயிரிட வைத்து, வேளாண்மை செய்து உலகத்தின் உயிர் காக்கும் சமூகமான விவசாயிகளை.. பணம் என்னும் மந்திரக்கோல் கொண்டு,  விஷம் விளையவைக்கும் மாபாதகச் செயலைச் செய்ய வைத்தவன் அவன்.

தான் விளைவித்த பயிருக்கு விலை சொல்ல முடியா நிலையிலும், விற்ற விளைச்சலுக்கு பணத்தை வாங்க வருடக்கணக்கில் காத்திருக்கும் அவலத்திலும் உள்ள நம் நாட்டு விவசாயியிடம், நான்கு பங்கு பணம் தருகிறேன்… இதை பயிரிடு என்று ஆசை வார்த்தை காட்டினால்… அடிவயிறு ஒட்டி கஞ்சிக்கு இல்லாதவன் என் செய்வான்? விஷம்தான் விளைய வைப்பான்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல், சக மனிதர்களான நாம்  செய்யத் தவறியதை, தவறானவன் தவறான விஷயத்திற்காக சரியாக செய்தான்.  விளைவு… என்றுமே அவனுக்கு மூலப்பொருள் தட்டுப்பாடு இல்லாத வியாபாரம். செழிக்காமல் என்ன செய்யும்? தமிழகத்தில் சமீபத்தீய வருடங்களில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். டிஜிபி சொல்கிறார்.

ஆனால்.. இதெல்லாம் மகேஷ்  தவறானவன் என்பதை சித்தரிக்கின்றனவே தவிர.. அவனை யார் கொன்றிருப்பார்கள் என்ற ஒரு சிறிய துப்பு கூட கிடைக்கவில்லை. என தனஞ்செயன் இதைப்பற்றிய ஆலோசனையில் இருக்கும் போது தொலைபேசி ஒலித்தது.

துணை ஆய்வாளர் எடுத்து பேசி விட்டு, தனஞ்செயனிடம் வந்தார். “சார்.. ஹைதராபாத்-லேர்ந்து உங்களுக்கு போன்”, என்றதும் ஆச்சர்யமானான். வேறு மாநிலத்தில் இருந்து துறைரீதியான அழைப்பா?, புருவம் முடிச்சிட,  “ஓ…., என்ன விஷயம்?”,

“சார் அவங்க லைன்-ல இருக்காங்க”, என்றதும்… சட்டென இருக்கையிலிருந்து எழுந்து தொலைபேசியை எடுத்தான். மறுமுனை கூறிய விவரம்.. இங்கு மகேஷ் கொலையுண்டது போலவே அங்கும்  ஒரு கொலை நிகழ்ந்துள்ளது என்பதுதான்.

தனது முழு கவனத்தையும் குவியமாக்கியவன்…, “கிரைம் சீன் போட்டோஸ் வாட்சப்-ல அனுப்புங்க. என் நம்பர் குறிச்சுக்கோங்க. போரென்சிக்-லேர்ந்து  வந்துட்டாங்களா? எப்படி ஆச்சு? – ன்னு ஏதாவது ஐடியா இருக்கா?, கூட யாரெல்லாம் இருக்காங்க? எல்லா டீடைலும் அனுப்புங்க. நான் டிபார்ட்மென்ட்-ல பேசிட்டு நைட் அங்க வர்றேன். இறந்தவரோட மொபைலை வாங்கிடுங்க.”,

அந்த காவல் துறை அனுப்பிய போட்டோக்களை பார்வையிட்டதில் இருவரும் ஒரே முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர். நெருப்பு பட்டு கருகிய முகத்தில் அமில வீச்சு,அதன் மூலம் ஏற்படும் அதீத புகை, சுவாசித்தாலே உள்ளுறுப்புகள் கருகும் அளவு அதன் வீர்யம்.. முகம் முழுவதும் சிதைத்திருந்தது. கண்கள் மூக்கு வழியாக மூளை வரை சென்றிருந்தது, அமிலத் தாக்குதல்.  மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணம்.

ஆனால் சம்பவம் நடந்தது அவனது வீட்டில், மகேஷின் மரணம் போலவே, அவனைச்சுற்றி ஆட்கள் இல்லாதபோது நிகழ்த்த கொலை. எனவே, இருவருமே நன்கு கண்காணிக்கப்பட்டு, நேரம் வரும்வரை காத்திருந்து, மிகச் சரியாக அரங்கேற்றப்பட்ட திட்டமிடப்பட்ட கொலைகள். அம் மனிதனின் தொழில் குறித்த விபரங்கள் தனஞ்செயன் கேட்டிருந்தான்.. பதிலாக இறந்தவன் ஒரு மருந்தாளுனன், ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் முழுவதும் அவனது மருந்தகங்கள் பரவி வியாபித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐதராபாத் செல்லவென  விமான நிலையத்திற்கு வந்திருந்தான். இன்னமும் முக்கால் மணி நேரம் இருந்தது. கண்களை மூடி அங்கிருந்த இருக்கையில் முதுகை சாய்த்து அமர்ந்திருந்தான். சற்று கூட்டம் குறைவாகவே இருந்தது. சமீப காலங்களில் வைரல் தாக்குதல் போன்றவற்றால் பயணிப்போர்கள் குறைந்திருந்தனர்.

இயற்கை உபாதை உந்த.. அதற்கான இடம் சென்றவன்.., கைகளை சுத்தப்படுத்தும்போது, அவனுக்கு சற்று தள்ளி, பின்புறமாக  ஒருவன் லைட்டர் கொண்டு, அவனது ஆயுளின் தலைகொள்ளியை உயிப்பித்து, அதை வாயில் வைத்து புகைக்க ஆரம்பித்தான். அதைக் கண்ணாடியில் பார்த்த தனஞ்செயன்.. தொடர்ந்து  அந்த லைட்டரை வெறித்தவாறு இருந்தான். பின் கைகளின் ஈரத்தை கைக்குட்டையால் துடைத்தபடி…, திரும்பி அவனிடம் சென்று அங்கிருந்த “DO NOT SMOKE” அறிவிப்பைக் காண்பித்தான். அம்மனிதன் சங்கடமாக முறுவலித்து ,”யா, ஐ நோ.. ஜஸ்ட் எ டோக், ப்ளீஸ். ஆம் எ செயின் ஸ்மோக்கர்”, என்று விட்டு புகையை ஒருமுறை ஆழமாக இழுத்துவிட்டு அந்த சிகரெட்டை அணைத்தான்.  அவன் பேச்சில்,  ஒரு கையாலாகாதத்தனம் இருந்தது. தனஞ்செயனும் பதிலுக்கு முறுவலித்துவிட்டு வெளியே வந்தான்.

புகைப்பது தவறு ஆயுளை குறைக்கும். எனவே அதன் அட்டையில் புற்றுநோய் வந்தால் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை சுட்டிக் காண்பித்து.. பயமுறுத்தும் புகைப்படங்களை அச்சடித்து விற்க வேண்டும். இது அரசின்  கொள்கை. வினோதமான விந்தையான கொள்கை. புகைப்பதை நிறுத்த வேண்டுமானால் தயாரிப்பதை நிறுத்தி விட்டால்.. வேலை முடிந்தது.

எத்தனை மக்களால் கடத்தல் செய்து புகைக்க முடியும்?  இது என்ன தலையை சுற்றி மூக்கை தொடும் வேலை? அதன் மூலம் கோடிக்கணக்கில் வரும் வரி வருவாயும், வணிகமும்தான் முக்கியம் என்றால் பிறகென்ன… மக்களுக்காக… மக்களால்… மக்களுடைய?, சிந்தனை அதன் போக்கில் அரசியல் நோக்கிச் செல்ல… கழிவறையை விட்டு வெளியே வந்த தனஞ்செயன்  இருக்கையை நோக்கி நடந்தான்.

எதோ ஒரு விமானம் இப்போதுதான் தரை இறங்கியது போலும்.. நிரம்ப பயணிகள் வெளியே சென்றுகொண்டிருந்தனர். அதில் தேஜஸ்வினி மற்றும் அவளது குழுவினரும் அடக்கம். தூரத்திலேயே  அவளை பார்த்துவிட்ட  தனஞ்செயன், சட்டென அருகிருந்த ஒரு காஃபி ஷாப்பில், ஒரு கோல்டு காஃபி தருமாறு பணித்துவிட்டு , முகம் தெரியாதவாறு திரும்பி நி்ன்றான். இப்போது இவன் நடந்து சென்றால் அவளைக் கடந்தாக வேண்டும். தேஜுவுடன் வந்திருந்த ஆண்கள் பயணப்பொதிகளை எடுத்துவர சென்றனர். அவளும் மாமியும் மட்டுமாக வந்து கொண்டிருந்தனர்.

தனஞ்செயனுக்கு தெரியும், அவளைப் பார்த்தால்.. அது நிச்சயம் நல்ல சந்திப்பாக இருக்கப்போவதில்லை. எதற்கு வீண் மனக்கசப்பு?. அன்று அவள் பேசிய பேச்சுக்கள் வடுவாய் தங்கி விட்டன. முதலில்தான் அவள் மேல் கோபம் இருந்தது. பின் வருத்தமாக மாறி.., வலியாய் நின்றுவிட்டது. இது நினைத்தது கிடைக்காத வலி.

கையில் இருந்த அலைபேசியின் கேமரா வழியாக  தேஜு வருவதை நோட்டமிட்டான். அடர் நீல வண்ண சுடிதாரில் இருந்தாள். அவளது உடமைகள் ஒரு back bag மற்றும் ஒரு சிறிய கைப்பை மட்டுமே. மாமியோடு தலையசைத்து பேசியபடி நிதானமாக வந்து கொண்டிருந்தாள்.பார்த்துக் கொண்டே இருந்தான். அசரடிக்கும் அழகல்ல அவள்.. அமைதியான அழகு. இப்போதுகூட அவனால், அவள் பேசியவைகளை நம்ப முடியவில்லை. தானாக ஒரு பெருமூச்சு கிளம்பியது.

தனஞ்செயனை அவர்கள் சமீபித்ந்திருந்தனர். அவர்களுக்கு எதிர் திசையில் திடீரென ஒரு சிறுவன் தபதபவென ஓடிவர, பின்னாலேயே அவனது அம்மா “பேட்டா .. ருக்கோனா…”, கீச்சுக்குரலுடன், அப்பிள்ளையை வேகவேகமாக தொடர்ந்தார் . அவனுக்கு சுமார் ஆறேழு வயதிருக்கும், துறுதுறு-வென இருந்தான், ஓடியயவாறே பின்னால் வரும் அம்மாவைக் காண திரும்ப…., பொத்தென மாமியின் மீது மோத, மாமியோடு சேர்ந்து அச்சிறுவனும் கீழே விழுந்தான்.

ஒரு கையால் சிறுவனை தூக்கி நிறுத்திய தேஜு… , மாமி சற்று கனத்த சரீரமாகையால், தூக்க சிரமப்பட… அச் சிறுவனின் அம்மாவோ.. பிள்ளையை கடிந்து கொண்டிருந்தார். உடனே பெருங்குரலுடன் அப்பிள்ளை அழ ஆரம்பிக்க… அவனை சமாதானப்படுத்தவென அந்த அன்னை போராட.. மாமியை தூக்கி உதவிட யாருமில்லை.

அச்சிறுவன் மாமியை மோதியபோதே, தனஞ்செயன் பார்த்துவிட்டான். அவர்களே சமாளித்துவிடுவார்கள் என்றுதான் தள்ளி இருந்தான். இப்போது.. இனியும் தள்ளி நின்றாள், மனிதத்தன்மையாய் இராது என்பதால்… இரண்டெட்டு எடுத்து வைத்து விச்சு மாமிக்கு கை கொடுத்து தூக்கினான். அதற்குள் இன்னும் இருவர் உதவிக்கு வர… தேஜு குனிந்து மாமியை ஒரு கையால் தாங்கி இருந்தபடியால் இவனை உடனே கவனிக்கவில்லை. மாமி மெல்ல தன்னிலைக்கு வந்து எழ.. அவரைத் தூக்கி நிறுத்தும்போது பார்த்துவிட்டாள். பார்த்த அவள் கண்களில் இருந்தது என்ன?

அவள் பார்வையைப் பார்த்த தனஞ்செயனுக்கு குழப்பம் வந்தது. காரணம் அதில்.. அப்பட்டமான பயம்..! , அதிர்ச்சி..!! குழப்பரேகையுடன் அவன் இன்னுமும் ஆராய்ச்சியாக தேஜஸ்வினியை நோக்க… கடினமாக முகத்தை மாற்றியவள் அவனுடனான நேர்பார்வையை தவிர்த்து, வேகமாக “தேங்க்ஸ்”, மொழிந்து… மாமியை கைத்தாங்கலாக கூட்டிச் சென்றாள்.

அன்று அத்தனை திமிராக பேசியவள்,இப்போது எதை பார்த்து பயம் கொள்கிறாள்? புரியவில்லை. இவள் எப்போதும் புதிர்தான் ‘ஹ்ம்ம்..’, என்ற நெடுமூச்சுடன் போர்டிங் பகுதிக்கு சென்றான்.

விமானத்தில் ஏறியவன், தேஜஸ்வினியின் நினைவை தவிர்க்கவென.. ஹைதராபாத் போலிஸாரால் அனுப்பப்பட்ட வாட்சாப் பதிவுகளை மீண்டும் பார்வையிட்டான். கொலைக்கான காரணம் என்ன?, முன்னவன் வட தமிழகத்தின் போதைபொருள் மொத்த விற்பனையாளன். இப்போது இறந்தவன் மருந்தாளுநன் [pharmacist].

தனஞ்செயனுக்கு இது எதுவும் தொழில் போட்டியினால் ஏற்பட்ட மரணம் போல் தெரியவில்லை. அவனது மரணத்தை போதையோடு சம்பந்தப்படுத்தி யோசித்தான். இப்போது அனைத்து மாத்திரைகளும் ஆன்லைனில் கிடைக்கின்றன. ஒரு சில போதை மாத்திரைகள் வலி நிவாரணி என்ற பெயரில் விற்கப்படுவதையும் அவன் அறிவான்.

சரி அவன் என்ன செய்கிறான் என்பதை அங்குபோய் தெரிந்துகொள்வோம் இப்பொழுது எவ்வாறு மரணம் ஏற்பட்டது? இறந்தவனை தவிர யாரும் இல்லாத வீட்டில் எரிபொருளை ஊற்றி எரித்து உடனே அமிலத்தையும் ஊற்றி எவ்வாறு கொலை செய்தனர்? மண்டை குடைந்தது அவனுக்கு. கண்களை மூடி அமர்ந்திருந்தான். ‘க்ளிக்’, என்றசப்தம் காதுக்குள் ஒலித்தது. விமான நிலையத்தின், கழிவறையில் ஒருவன் லைட்டரைக் கொண்டு சிகரெட்டை பற்ற வைத்த ஒலி.

சட்டென விழித்தவனுக்கு… கொலை சம்பவங்கள் அணைத்தும் ஒரு நேர்கோட்டில் வருவதாகத் தோன்றியது.  சட்டென பேனா எடுத்தவன்… நோட்-பேடில் குறிப்பெடுக்க ஆரம்பித்தான்.

இரண்டு கொலைகளிலும்…

ஒரு அலைபேசி அழைப்பு ..அதன் பின் மரணம்..

மேஜைமேல் இருந்த பொருட்கள் சிதறி இருந்தன. பாதி உடைந்து, எரிந்து அல்லது உருகி கரைந்து இருந்தன.

ஒருவேளை அந்த உடைந்த பொம்மைகள் கொலை சாதனமாக இருந்தால்?

ஒருவேளை அதில் பெட்ரோலியம் நிரப்பப்பட்டிருந்தால்?

ஒருவேளை இன்னொரு பொம்மையில் திராவகம் நிரப்பப்பட்டிருந்தால்?

மகேஷோ/ வீரய்யாவோ [இப்போது இறந்தவன்] பொம்மைகளின் அருகே வந்ததும் வெடிக்குமாறு செய்திருந்தால்?

என்று பலவாறாக யோசித்தவன்..

சரி..  பெட்ரோலியத்தை பீய்ச்சி அடிக்க முடியும்.. ஆனால் பற்ற வைப்பது? என்று அவனுக்கு அவனே கேள்வி கேட்டுக் கொண்டவன்…

அது ஒருவேளை ஆட்டோ இக்னீஷன் ஆக இருந்தால்?

எப்படி ஒருசில காஸ் அடுப்பை  ஆன் செய்தவுடன் தானாக பற்றிக்கொள்கிறதோ.. அதுபோல பெட்ரோல் தெளிக்கும் போதே தானாக பற்றிக்கொள்ளும் அமைப்பும் இருந்தால்?…

என்று தனஞ்செயன் யோசிக்கும் போதே ஆனால், ஒரு பொம்மைதானே கொலை நடந்த இடத்தில் பார்த்தோம்? என்ற எண்ணமும் ஊடே ஓடியது.

சரி பின்னர் அமிலம் எதற்கு?

யோசிக்க யோசிக்க…. சீட்டுக்கட்டின் கலைந்த அட்டைகள் போல இருந்தவை அனைத்தும் அதனதன் இடத்தில் வந்தமர்ந்தன. பெயில் ப்ஃரூப்… ஒன்றில்லாவிட்டால் மற்றொன்று எதிராளியை நிலைகுலைய வைக்கும்… வாவ்..என்ன ஒரு நேர்த்தியான திட்டம்? என்றுதான் தனஞ்செயனுக்கு தோன்றியது.

மகேஷ் இறப்பின்போது வந்த ஆய்வக அறிக்கையை ஒருமுறை நினைவு கூர்ந்தான்.. அந்த அமிலம் “ஹைலி கான்சன்ட்ரேட்டட் ஆசிட்’, என்று வரையறை செய்திருந்தனர். அதன் திறன் குறித்து சொல்லும்போது அந்த அமிலத்தை மூன்று நொடிகள், மூன்றே நொடிகள் உள்ளங்கையில் வைத்திருந்தால் போதும்.. நான்காவது நொடியில் தரை தெரியும், ஆனால் உள்ளங்கை காணாமல் போயிருக்கும்.. அத்தனை வீரியமான அமிலம் அது, என்று குறிப்பிட்டு இருந்தனர். .

வெல்.. கொலைகாரன்.. செய்வனத் திருந்தச் செய்வானாக இருப்பான் போலும்? ஒருவேளை பெட்ரோலிய தாக்குதலில் இருந்து தப்பினால் /ஒருவேளை ஆட்டோ இக்னீஷன் ஆகாமல் அதாவது தானாக பற்றிக்கொள்ளாவிட்டால்/அதன் பாதிப்பு குறைவாக இருந்தால்?..  திராவகம் தன் வேலையைச் செவ்வனே செய்யும் அல்லவா?

ஆனால் எவ்வாறு சரியாக முகத்தில் / முகத்தை நோக்கி .. ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் .. பெட்ரோலிய / திராவக வீச்சு?, யோசிக்க ஆரம்பித்தான்..  வெகு நேரம் ஒரே மாதிரி அமர்ந்திருந்தால், முதுகு தண்டுவடம் சற்று வலியெடுக்க… சரி… கொஞ்சம் இடைவெளி விட்டு பின்னர் தொடரலாம் என நினைத்து… சுற்று முற்று பார்த்தான்.

இவனுடையது விண்டோ சீட். அருகில் அமர்ந்திருந்த பெண்மணி எதோ ஒரு நாவலில் மூழ்கி இருந்தார். ‘எனைத் தெரிந்தும் நீ‘  என்று தலைப்பிட்டிருந்தது. நாவலின் தலைப்பைப் பார்த்தவனுக்கு, ‘எனைத் தெரிந்தவள் ஒருத்தி இருக்கிறாள், ஹ்ம்ம்.. ஆனால் அவளைத்தான் எனக்கு தெரியவில்லை’, என்று நினைத்தான்.

விமானப் பணிப் பெண்ணைக் கூப்பிட்டு குடிக்கத் தண்ணீர் கேட்டான். அவர் அதை ஒரு பெட் பாட்டிலில் கொண்டு வந்து தர… முழுவதும் காலி செய்தான். பின் பத்து நிமிடங்களில் அவர்களுக்கு உண்டான ஸ்னாக்ஸ் வகைகள் வந்தன. பின்னர் சுமார் அரை மணி நேர பிரயாணம். மனதை எதிலேயும் செலுத்தாமல், வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தான்.

இன்னும் சிறிது நேரத்தில் ஹைதராபாத் விமான நிலையத்தில், விமானம் தரை இறங்கப் போவதால்… இருக்கைப்பட்டிகளை அணியுமாறு பயணிகள் அனைவரையும் அன்பாக ஒரு விமான பணிப்பெண் ஒலிபெருக்கியில் அறிவுறுத்தினார்.

தனியார் பராமரிப்பில் விமான நிலையம் பளிச்-சிட்டது. சென்னை விமான நிலையம் போல், உயிர் காக்க தலைக்கவசம் அணியும் தேவை ஏற்படாத நிலையம் போலும் , தனக்குள் சிரித்தவன், அலைபேசியை உயிர்ப்பிக்க… அதில் தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு. யார் அது என்று இவன் கேட்க.. “டிஜே…..”, என்று ஹை டெசிபலில் உற்சாகத்தோடு கூவியது மறுமுனை. அகே குரலுக்கு சொந்தமானவன் யாரெனப் புரிந்து “எஸ்ஸாரு…..”, இவனும் அதே உற்சாகக் குரலில் கூவ.. இவன் அருகே இருந்த நான்கைந்து பிரயாணிகள் திரும்பிப் பார்த்தனர்.

குரலைத் தழைத்து.., “எங்கடா இருக்க?, நான் இங்க வர்றேன்னு எப்படி தெரியும்?”..

“ஆங்… வெத்தலைல மை  போட்டு பாத்தேன்டா பரதேசி, எங்க ஊருக்கு வர்ற..  ஒரு போன் பண்ணமாட்ட நீ ?”, நட்புக்கு பதவியும் தெரியாது, மரியாதையும் ஊடே வராது, நண்பேன்டா…

“டேய்.. அஃபிஸியல் விசிட்-டா..”,

“ஆங். வெங்காய விசிட்.. வெளியதான்  நிக்கறேன் வாடா”, தனஞ்செயனின் பேச்சை இடைவெட்டியவனின் பெயர் சுதர்ஷன ரெட்டி. சுருக்கமாக எஸ்ஸார். பள்ளிப் பருவத்திலிருந்து, கல்லூரி வரை.. டீஜே-யும் எஸ்ஸாரும் ஒன்றாக படித்தவர்கள். கல்லூரியில் தனாவின் சுருக்கம் DJ, அது நாளடைவில் TJ என்று மருவி, காலேஜ் முழுவதும் தனஞ்செயன் டீஜே என்றே பிரபலமானான். இவன் மாணவர் தலைவர் போட்டிக்கு விண்ணப்பித்தபோது TJ என்கிற தனஞ்செயன் என்று குறிப்பிடும் அளவுக்கு அந்தப் பெயர் நிலைத்து விட்டது. எஸ்ஸாரும் தனாவும் ஆதர்ஷ நண்பர்கள்.

டிஜே எனப்படும் தனஞ்செயன் ஸ்டேட்.யூ.பி.எஸ்.சி  தேர்வுக்கு தயாராக.. எஸ்ஸாரோ, இந்திய அளவில் நடத்தப்படும் குடிமையியல் தேர்வுக்கு தயாரானவன். இருவரும் தேர்வாக… ட்ரைனிங், ப்ரொபேஷன் என்று நண்பர்களுக்குள் வேலை நிமித்தம் இரண்டு வருட பிரிவு. எப்போதாவது அலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள்.., நாளாவட்டத்தில்… தங்களது புதிய அலைபேசி தொடர்பு எண்களைக் கூட பகிர முடியா வேலைப்பளு/சூழ்நிலை.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த தனஞ்ஜெயன் ஐ ஆரத்தழுவி வரவேற்றான், எஸ்ஸார். குடும்ப நலம் விசாரித்து, நட்புகள் குறித்து சற்று நேரம் பேசினர்.

எஸ்ஸார் தற்போது NCB எனப்படும் நார்கட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோ ஆப் இந்தியாவில், தென்னிந்திய போதை தடுப்பு மற்றும் ஒழிப்பு துறையில் பணியில் இருப்பதாக தெரிவித்தான்.

இப்போது இறந்த இந்த வீரய்யா, போதை மாத்திரைகள்,  ஊசிகள், பொடிகள் போன்றவற்றை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், மருந்தகங்கள் என்ற போர்வையில் மொத்த விற்பனை செய்பவன்.

வீரய்யா இப்படி இறந்தது.. எதிர்பாரா ஒன்று என்றும்.. இக் கொலைச் சம்பவத்தை மேலும் துருவினால், அவனது நெட்வொர்க் குறித்தும், அவனுக்கு கீழே இருக்கும் ஆட்களை குறித்தும் அறிந்துகொள்ளலாம் என்பதாலும்.., எஸ்ஸார், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ள.. அவர்கள்தான் தனஞ்ஜெயனின் அலைபேசி எண்ணை தந்ததாகவும் கூறினான் எஸ்ஸார்.

மேலும் அவன் கூறியது..”ஒருவேளை இது தொழில் போட்டினால  நடந்த கொலையா இருக்கலாம்”, என்றவன்.., உபரித் தகவலாக.. “அஞ்சு மாசத்துக்கு முன்னால சென்னை-ல மகேஷ்,  ஒன்பது மாசத்துக்கு முன்னால கோவா-ல ஒரு ட்ரக் டீலர் அவனோட ஒரு கார் ஆக்சிடென்ட்-ல இறந்து போனான். அதை ஆக்சிடென்ட்-ன்னு க்ளோஸ் பண்ணிட்டாங்க, ஆனா இப்போ யோசிச்சா அதுவும் திட்டமிட்ட கொலையா இருக்குமோ-ன்னு தோணுது”, என்ற எஸ்ஸார் தொடர்ந்து, “இதுல என்ன பியூட்டி-ன்னா…, எல்லாமே போதை பொருள் சப்ளை பண்றதுல கீ ரோல் ப்ளே பண்றவங்க. இவங்க சொன்னா எதையும் செய்ய எல்லா மட்டத்திலேயும் ரவுடிஸ் ரெடியா இருப்பாங்க, இவங்க மூணு பேருமே கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரைக்கும் செல்வாக்கு இருக்கிறவங்க. நாங்களே தொட பயப்படுவோம். ஆனா அசால்டா தூக்கிருக்காங்க.”, என்று கூறி முடித்தான்.

தனஞ்ஜெயன் அவன் விமானத்தில் வரும்போது யோசித்தவைகளை, எஸ்ஸாரிடம்  கூற, ” யா, யூ மே பி ரைட், நீ சொல்ற மாதிரி ரிமோட் ஆக்சஸ் இருக்கிற சென்சார் யூஸ் பண்ணினா வாய்ப்புகள் இருக்கு.”

“ஆனா எப்படி சரியா முகத்தை பார்த்து அந்த லிக்விட் ஸ்ப்ரே ஆகுது?, அது புரியல”.. என்று சொல்லிவிட்டு இருவரும் யோசனையில் மூழ்கினர். அதற்குள் எஸ்ஸாரின் வீடும் வந்திருந்தது. உள்ளே அழைத்து மனைவியிடம் அறிமுகப்படுத்தியவன், தன் ஒரு வயது குழந்தை.. விழித்திருப்பதை பார்த்து.. அவளை தூக்கி கொண்டு வந்தான்.

அக்குழந்தையிடம் சற்றுநேரம் விளையாடி விட்டு.. அனைவரும் உறங்கச் சென்றனர். தனா கெஸ்ட் ரூம் உபயோக படுத்துகிறேன் என்று சொல்லிவிட்டான்.

படுத்தவனுக்கு உறக்கம் வரவில்லை, அலைபேசியில் கூகுளை திறந்து, முகத்தைப் பார்த்து ஆளை உணரும் கருவி ஏதேனும் சிறிய அளவில் உண்டா என்று கேட்டான். அது FRS எனும் கருவியின் மொத்த ஜாதகத்தையே பதிலாய் கொடுத்தது.

F R S கேமரா எனப்படும் face recognition system , முகத்தை வைத்து யார் என்பதை உணரும் கருவி. எப்படி கண்காணிப்பு கேமரா செயல்படுகிறதோ.. அதே மாதிரி முகத்தை பதிவுசெய்து அதனுடைய நினைவடுக்குகளில் இருக்கும் முகத்தோடு ஒப்பிடும். இரண்டும் பொருந்தி வந்தால்.., அதற்கிட்ட அடுத்த வேலையை செய்ய ஆரம்பிக்கும். முகங்கள் பொருந்த வில்லையானால், ஏதும் செய்யாது வாளாவிருக்கும்.

இதை, இந்த தொழில்நுட்பத்தை,  வீட்டின் உரிமையாளர்கள் வந்தால், தானாக கதவுகளை திறக்க.. பயன்படுத்துகிறார்கள், என்ற தகவல்களை சேகரித்தவன், சரி சிறிது நேரம் தூங்குவோம் காலையில் கொலை நிகழ்ந்த இடத்திற்கு சென்று ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று முடிவெடுத்து கண்களை மூடினான்.

“டார்க் ப்ளூ கலர் அவளுக்கு செமயா சூட்டாகுது”, மனது.., இவனைக் கேளாமலேயே தேஜூவின்  நினைவுகளை அசை போட ஆரம்பித்தது. வழக்கம்போல அவள் நினைவுகளுடன் தூங்கிப் போனான்.

Advertisement