Advertisement

அத்தியாயம் – 8

ஈஸ்வரன் என்ன பக்கத்து வீட்டுக்காரரா? நாலடி எடுத்து வச்சு போயி கூட்டிண்டு வர? பாத்தான் பகீரதன். ஆஹா, இது ஆகறதில்ல, பேசாம ஈஸ்வரனை நினச்சு தவம் பண்ணிடுவோம்-ன்னு  ஆரம்பிச்சிட்டான். வேற ஒண்ணுமில்ல, அவனுக்கு தவம் பழகிடுத்து. எதையும் மொத தடவ பண்றதுதான் கஷ்டம்,அதுக்கப்பறம் போகப் போக நன்னா பழகிடுமில்லயா? அது மாதிரி, வடக்கப் பாத்து கோரமா தவம் பண்ணினான். பகவானுக்கு ஒரு விஷேஷம் உண்டு தெரியுமோ?

நாம அவருக்காக ஒரு அடி முன்ன வச்சா.. அவர் நமக்காக நூறு அடி கீழ இறங்கி வருவார், ஈஸ்வரனுக்கு அதனாலதான் ஆஷுதோஷி-ன்னு பேரு. நினைச்சதை நினைச்ச நேரத்துல நினைச்ச இடத்துல குடுத்துடுவார் அவர். ஆனா என்ன ஒன்னு, நாம அவரை அதி தீவிரமா நினைக்கணும். அதுபோல பகீரதன்  தவம் பண்ணினானா? ஈஸ்வரன் பாத்துட்டு நேர்ல வந்தே.. வந்துட்டார். “அப்பா பகீரதா, முழுச்சுக்கோ. போதும் உன் தவம். நான் கங்கையை தலைல தாங்கறதுக்கு ரெடி, நீ தேவ கங்கையை கூப்பிடு” ன்னு சொல்றார். பகீரதனும் சந்தோஷமா கங்கையை கூப்டு, “அம்மா நீ பூமிக்கு வாம்மா, உன்னைத் தாங்க ஆளு ரெடி”, ன்னு சொன்னான்.

**************************

தேஜஸ்வினி பாடல் முடிந்ததும் அனைவரும் கைத்தட்ட, முறுவலுடன் அவர்களின் பாராட்டை ஆமோதித்து, “சரி மாமி, நான் கிளம்பறேன், ரொம்ப நேரமாச்சு”, என்று எழ…

சட்டெனக் கூடவே எழுந்தவன், “மா.. ஒரு அஞ்சு நிமிஷம், வந்துடறேன்.”, கூறி வெளியே சென்றான் தனஞ்செயன்.

அய்யயோ இவன் என்னடா கூடவே வர்றான் ?, என்று நினைத்தவள், மாமி வெற்றிலை பாக்கு தருவதற்காக சில நிமிட தாமதமாக, கொடுத்ததும் அதை வாங்கிக்கொண்டு  கிளம்பி விட்டாள். சாலையில் தனா ஜீப்பில் சாய்ந்து, ‘யஷஸ்’ என்று பெயரிடப்பட்டிருந்த வீணை மாமியின் வீட்டு  இவளுக்காக காத்திருந்தான். தேஜு அவனைப் பார்த்தும் பார்க்காதவாறு கடக்க நினைக்க.., அவள் முன் கைநீட்டி தடுத்தான்.

“பேசணும்”,

அவன் முகம் பாராமல்… “நான் போணும்”, என்ற குரலில் அந்நியத்தனம்.

“ஜஸ்ட் டூ மினிட்ஸ்”, அவசரமாக வந்தது, தனாவிடமிருந்து.

“சொல்லுங்க”, கத்தரியாய் வார்த்தை..

“இங்க நடு ரோட்லல்லாம் சொல்ல முடியாது, ஜீப்ல வா, இல்ல உன் கார் எங்க, அதுல போயிட்டே பேசலாம்.”

“எதிர்ல மர நிழல்ல நிறுத்தி இருக்கேன் “, என்று அவள் சொல்ல…

தனஞ்செயன் கை நீட்டினான், தேஜு கார் சாவியை அவனிடம் கொடுக்க .., ‘உனக்கும் எனக்குமிடையே பேச்சுக்கள் வீணடி பெண்ணே’, நினைத்து முறுவலித்தான்.

அதற்கான பிரதிபலிப்புதான் அவளிடமில்லை. மாறாக தீவிர முகபாவம் வந்திருந்தது.

காரில் இருவரும் ஏறியதும், வண்டியை உயிர்பித்தவன்.. மனித நடமாட்டமில்லாத பெரும் பணக்காரர்கள் வசிக்கும் சாலையில்

சென்று நிறுத்தினான்.

தேஜு கேள்வியாய் தனஞ்செயனை பார்க்க, “நான் என்ன சொல்லப் போறேன்னு உனக்கு தெரியும். இருந்தாலும் சொல்றேன். நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்”, அதிக சுற்றலில்லாது, காதல் கத்திரிக்காய் என்ற பிதற்றல் இன்றி, அவள் கண் பார்த்து  நேரடியாக கூறினான்.

“ஏன்?”, புருவம் தூக்கி வார்த்தையில் கத்தி வீசினாள், பார்வையும் அவ்வாறே.

குறுநகையுடன், ” ஏன்னா… எனக்கு உன்ன பிடிச்சிருக்கு, உனக்கும் என்ன பிடிச்சிருக்குன்னு நினைக்கறேன்…. இதுக்குமேல என்ன வேணும்?”, அவள் பார்வை புரியாமல் கேட்டான்.

“வேணும்… வேணும் டி.எஸ்.பி. சார்..  பணம் வேணும், பிரபல பாடகியோட புருஷன்னு பேர் வேணும் , காலம் பூரா உங்க காக்கிய கட்டிட்டு அழுதாலும் நினைச்சு பாக்கவே முடியாத  சொத்து வேணும் , எல்லாம் எங்கிட்ட இருக்கே? அதான? அதுக்குத்தான உங்க வொய்ஃப்-பா எனக்கு பட்டம் தர நினைக்கறீங்க?”, விஷம் உமிழ்ந்தாள் பெண்.

“ப்ச். தேஜூ…. “, பல்லைக் கடித்து வந்தது வார்த்தை தனஞ்செயனிடமிருந்து. சொன்னவன் ஸ்டியரிங்-கை இறுக்கப் பிடித்திருந்தான். திராவகம் போல் அவளது பேச்சு மெல்ல அவன் இதயத்தை சிதைத்தது.

“வேறன்ன? ஆக .. நான் ஆபிஸ் போகும்போதும்,  கச்சேரிக்கு போகும்போதும், ட்ரைவர் வேல பாத்து கூஜா தூக்க ரெடின்னு சொல்ல வரீங்க? அப்படித்தான?”, குதர்க்கத்தையும் கிண்டலையும் மொத்த குத்தகைக்கு எடுத்திருந்தாள்.

கேட்ட தனஞ்செயனுக்கு ‘இவள் இப்படியும் பேசுவாளா? என்று அதிர்ச்சியாக இருந்தது, அதனால்.., வெகுவாக கோபத்தை அடக்கி.. , “தேஜஸ்வினி… நீ ஓவரா பேசற..”, சொன்னவன், சிறிது  நிறுத்தி, பெருமூச்சு விட்டு ஒருவித இயலாமையுடன், “உன் பார்வை என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லுது தேஜூ, அடிபட்டு கிடந்தப்போ எனக்காக என் கூடவே நின்ன உன்னை கல்யாணம் பண்ணிக்கன்னு கேக்க கூடாதா? ச்சே”, எங்கே தவறினேன் நான்? கண்களை மூடியபடி கூறியவனின் வார்த்தைகளில் அத்தனை வலி.

“ஹும் .. சும்மா கத விடாதீங்க சார்.. ஈஸியா பணக்காரனாக ஒரே வழி.. என்ன மாதிரி பணக்காரிய கட்டிக்கறதுதான்”, இகழ்ச்சியாக சிரித்தவள்… “பிடித்தமாமே? ஆமா.. கொஞ்சம் சுமாரா இருக்கீங்க பாத்தேன். எனக்கு ப்ரபாஸ், தனுஷைக் கூடத்தான் பிடிக்கும், அவ்ளோ ஏன் எங்க பக்கத்துவீடு பையன் ஒருத்தன்..  சிக்ஸ் பாக் வச்சி, செம மேன்லி யா இருக்கான். தினமும் மாடில அவன் எக்ஸர்சைஸ் பண்றத பாக்கறேன்தான். அதுக்காக அவன் நேர எங்கிட்ட வந்து ப்ரபோஸ் பண்ணிடுவானா?”

“ரோட்ல அடிபட்டு ஒரு நாய் கிடந்தாலும் அதை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போவேன், அது என் பழக்கம். அடிபட்டது உங்களுக்கு-ன்னு ஹாஸ்பிடல்ல தெரிஞ்சதுக்கப்பறம் ஒட்டிப்பீங்களோன்னு நினைச்சுதான் உங்க நினைவு திரும்பறதுக்குள்ள, ஓடியே போயிட்டேன். யார் எதுக்கு ஆசைப்படறதுன்னு ஒரு தகுதி வேணா?  உங்க பாட்டி சொன்னாங்களா? செம பசையுள்ள பார்ட்டிடா, மடக்கிப் போடு… காலம் பூரா காலாட்டிட்டே ஜாலியா இருக்கலாம்னு… ?” என்று முடிக்கவில்லை அவள்….

தனாவின் இடது கை, தேஜுவின் கன்னத்தில் பதிந்திருந்தது. கண்கள் செந்தணலாய் ஜொலிக்க… “இன்னும் ஒரு வார்த்த பேசின… உயிரோட போமாட்ட.. “,  அனலாய் மொழிந்து… காரை விருட்டென கிளப்பினான்.. அவன் கிளப்பிய வேகத்தில், தேஜுவின் தலை,  காரின் டாஷ்போர்டில் மோதி திரும்பியது.

ஏற்கனவே தனா அடித்த வேகத்தில், கன்னம் எரிந்து அவள் கண்கள் கலங்கி இருக்க…, முன் மண்டை இடித்த வலியும் சேர.. கண்ணீர் தானாக வந்தது. வைத்த கண் வாங்காமல் தேஜு, காரோட்டும் அவனைத்தான் பார்த்திருந்தாள். புயல் வேகத்தில் சென்று நேரே மாமியின் வீட்டின் முன் சடன் பிரேக்குடன் நிறுத்தியவன்…., விறுவிறுவென இறங்கினான். பின் என்ன நினைத்தானோ? பேண்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸினை உருவி.. அதைத் திறந்து, தனது வங்கி அட்டைக்கடியில் வைத்திருந்த தேஜுவின் போட்டோவை அகற்ற நினைக்க, அது வருவேனா என்றது. பொறுமையிழந்தவன்.. அவனது வங்கி அட்டை, தேவையான அடையாள அட்டைகளை மட்டும் உருவிக் கொண்டு. பர்ஸை தேஜுவை நோக்கி எறிந்தான். “உன் பாட்டுக்கு கூலி.. “, வெறுப்பு வெறுப்பு டன் டன்னாக அத்தனை வெறுப்பு அவன் முகத்தில்.

அவளை நிமிர்ந்து பார்க்கவுமில்லை. அவள் புறம் திரும்பக்கூட இல்லை. ஜீப்பில் அமர்ந்தவன்.. பேசியை எடுத்து, அன்னையை அழைத்து, “ம்மா.. போலாம், வெளிய ஜீப்ல இருக்கேன்.”, என்று கடினமாக கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

பேசும் தனஞ்செயனின் குரல் காரமாக இருக்க, அவர்களும் தயாராக இருந்ததால்.. உடனே வர, ஜீப் கிரீச்சிட்டு கிளம்பியது. அவனது முகம் பார்த்த பெரியவர்களுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. காரணம் அதில் அத்தனை ரௌத்திரம் தெறித்தது.

தேஜு இவன் செல்வதை, அவளது காரில் இருந்து பார்த்துத்தான் இருந்தாள். இன்னமும் அவள் ட்ரைவர் இருக்கைக்கு அருகேதான் அமர்ந்திருந்தாள். தூசியோடு அவன் வாகனமும் காணாமல் போக… காரில் இருந்த முன் பக்க கண்ணாடியில் முகம் பார்த்தாள் . அவளது வலது கன்னத்தில், தனாவின் நான்கு விரல்கள் அழுந்தப் பதிந்திருந்தன. அந்த சிகப்பு தடத்தை வருடியவள், “ப்பா.. செம்ம ஸ்ட்ராங்”, என்று புன்னகைத்தவள், கண்களில் நகைமுரணாக கண்ணீர்.

++++++++++++++++++++++++++++++

அது ஒரு கொரியர் அலுவலகம், கறுப்பு பர்தா உடை அணிந்த ஒருவர், அவரது பார்சலை புக் செய்ய வந்திருந்தார். பெயர்,  முகவரி என அனைத்தும் தெளிவாக இருக்க, அதற்குண்டான தொகையை கொடுத்து விட்டு வெளியே செல்ல சென்றார். எதிரே, கொரியர் டெலிவரி செய்யும் ஆள் கைகளில் புக் செய்யப்பட்ட  பார்ஸல்களோடு வர.., அது அற்றே குறுகிய நடைபாதை என்பதால்…  படுதாவாசி தன நிறை மாத கர்ப்ப வயிறை பாதுகாப்பாக அணைத்தவாறு தடுமாறி நின்றார். எதிரே இவரைக் கண்ட  டெலிவரி ஆளும் சுதாரித்து நின்றிருந்தான். ஆனால்,  அதற்குள் கையில் இருந்த அட்டைப் பெட்டி ஒன்று தரையில் விழுந்திருந்தது. அவன் கீழே குனிந்து எடுக்கையில்.., அந்த படுதாவாசியின் கைகளில், அவர் போட்டிருந்த மோதிரம் அழகாக மின்னியது. வித்தியாசமாக இருக்கிறதே என்ற யோசனையுடன், கொரியரை டெலிவரி செய்யும் அந்த ஆள் நிமிர்ந்து பார்ப்பதற்குள்.. படுதா வாசி காணாமல் போயிருந்தார்.

Advertisement