Advertisement

குசலோபரிகள், அறிமுகப்படலங்கள், உண்டி உபசரிப்புகள் முடிந்ததும்…, ஜெகதா பாட்டி.. “என்டீம்மா.. எனக்காக ஒரு பாட்டு பாட மாட்டியோ?”, எனவும்… இவரைக் காணவென… இருக்கும் அனைத்து வேலைகளையும் மறு நாள் தள்ளிப் போட்டுவிட்டு வந்த தேஜு,  மாட்டேன் என்றா கூறுவாள்?, “உங்களுக்கில்லாததா பாட்டி. என்ன பாட்டு வேணா கேளுங்கோ. தாராளமா பாடறேன். கூடவே மாமிய வீணை வாசிக்க சொல்லுங்கோ”, சிரித்தவாறு பகல…

“இவபேர்லயே ஒரு பாட்டு இருக்கே? ஜெகதானந்த காரகா.. , சின்னப்போ எங்க பள்ளிக்கூடத்துல இவளை இப்படி பாடிப் பாடி கூப்ட்டுத்தான் கிண்டல் பண்ணுவோம்… “, என்று தியாகய்யர் பாட்டில் ஒன்றைக் குறிப்பிட்டு, சௌடாம்பிகை கேட்க…,

அருகில் இருந்த ஜெகதா பாட்டி, “அடியேய்.. இன்னுமா இதை நீ ஞாபகம் வச்சிருக்க?”, என்று கலகலத்து சிரிக்க ஆரம்பித்தார்.

தேஜு விச்சுமாமியிடம் கண் காமிக்க… அவர் ஸ்ருதிப் பெட்டியை உயிர்ப்பித்து, தன வாத்தியமான வீணையுடன் அமர்ந்தார். எப்போதிருக்கும் வழமையாக, கணபதி ஸ்துதியில் “வேத முதல்வனே விக்ந விநாயகா… “, பாடலுடன் ஆரம்பித்து… பின் நேயர் விருப்பத்திற்கிணங்க… தியாகராஜ கீர்த்தனையை தேஜு பாடினாள்.

முடித்ததும் அனைவரும் கைதட்டி பாராட்ட.. லீலாவதி மட்டும், “எனக்கு இந்த கர்னாடக சங்கீதமெல்லாம் தெரியாதுமா. கீர்த்தனைன்னு சொன்னியே அதுவும் புரியல. ஆனா, நீ நல்லா பாட்ற. குரல் சூப்பரா இருக்கு.”, என்றார், சற்று விட்டேத்தியாக..

தேஜுவிற்கு ஜெயனின் தாள ஞானம் நினைவுக்கு வந்தது. “அப்போ எப்படி உங்க புள்ளைக்கு மட்டும் சங்கீதத்துல ஆர்வம் வந்தது ?”, கேட்கத்தான்  நினைத்தாள், ஆனால் கேட்கவில்லை. அன்று அவன் வாசித்ததற்குப் பின், எப்போதும் வாசிக்கும் ஜெயப்ரகாஷே வந்து வாசிக்கட்டும். அவர் குணமாகி வரும்வரை எந்த கச்சேரியும் ஒப்புக்கொள்ளவில்லை.

அவளுக்கு ஜெயனின் உடல்நலம் குறித்து தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது. ஆனால் இவர்களிடம் எப்படிக் கேட்பது? அவனை மொத்தமாக தவிர்க்க நினைத்த அறிவு இத்தனை நாட்கள் இடைவெளியில் தனாவின் நினைவுகளை புறம் தள்ளி விட்டோம் என்றுதான் நினைத்தது. ஆனால்,  இன்று, விச்சு மாமி வீட்டில்,  அவன் பாட்டியைக் காணும் வரை,  அனிச்சையாய் அவனைத்தேடிய கண்கள், அறிவுக்கு வேறு கதை சொன்னது.

எண்ணங்களுக்கு  லகானிட்டவள்…, “சரி ஆண்ட்டி, உங்களுக்கு பிடிச்சாமாதிரி பாட்டு  சொல்லுங்க, பாடிடலாம்”, எல்லாவகை பார்வையாளர்களையும் திருப்திப் படுத்த நினைபவன், தேர்ந்த கலைஞன்.. தேஜஸ்வினி, அந்த சிறிய கூட்டத்தில் ஒருத்தி.

“உன் இஷ்டம்மா.. எனக்கு இப்பத்தி சினிமா பாட்டுதான் தெரியும், நீ ராகத்துல பாடறவ.. ?”, என்றவர் இழுக்க…

“என்ன ஆண்ட்டி இப்படி கேட்டுடீங்க?, எத்தனை சினிமா பாட்டு சுத்தமான கர்னாடிக் ராகத்துல இருக்கு தெரியுமா?, ‘கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் ‘ பாட்டு தெரியுமா, அது..’சின்னக் கண்ணான் அழைகிறான்‘,  ‘அழகான ராட்சசியே ” எல்லாமே  ரீதிகௌளை ராகத்துல வருது…” என்றவள்  கூடவே அனைத்திலும் இரண்டு வரிகளை பாடியும் காண்பித்தாள்.

“அப்பறம் நேற்று இல்லாத மாற்றம்அழகியே-ன்னு ஓகே கண்மணி படத்துல வர்ற பாட்டு, பூக்களே சற்று ஓய்வெடுங்கள்-ன்னு வருமே ஒரு பாட்டு… அதெல்லாம் பிலஹரி.. எனக்கு பிடிச்ச ராகம் …”, என்று விச்சு மாமியும், தேஜுவுடன் சேர்ந்து ராகங்கள் குறித்து பேச ஆரம்பிக்க…

“அட?”, மாமியாரும் மருமகளும் [சௌடாம்பிகை & லீலாவதி ] ஆச்சர்யமாக கேட்டனர். இப்போது லீலாவதியின் முழு கவனமும் தேஜுவின் மீதே.  வீட்டில் பெண்ணோ / பையனோ, திருமண வயதில் இருந்தால், வெளியே பார்க்கும் இளம் வயதுடைய திருமணமாகாத அத்தனை பேரையும்.. இவர்கள் தன் பிள்ளைக்கு பொருத்தமா என்றுதான்  ஒவ்வொரு பெற்றோரும் யோசிப்பார்கள். அதற்கு லீலாவதியும் விதிவிலக்கல்ல.

“நீ எதுவேனா பாடுமா, மனசுக்கு இதமா, கேக்கும் போதே உள்ளுக்குள்ள அமைதியாகற  மாதிரி..”, என்று மகனை பற்றிய சஞ்சலத்துடன் இருந்த லீலாவதி கேட்க…, சிறிது  யோசித்த தேஜு…,  “ம்ம்… இது எனக்கு பிடிச்ச பாட்டு, உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறன்.. “, சொன்னவள் தனது அலைபேசியை எடுத்து ஒரு பின்னணி இசையை (BGM)  தேடி.. போட்டு விட்டாள்.

[BGM – பாடலின் பின்னணி இசை மட்டும் ஒலிக்கும், பாடல் வராது(உங்களுக்கெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிருக்கும்.. ஆனாலும் தெரியாதவங்களுக்கு சொல்லிட்டேன் ) ]

அதை கேட்ட நொடியில் என்ன பாடல் என்பதை உணர்ந்து… ஸ்ருதி பெட்டியை பாடலுக்கு ஏற்றவாறு வைத்து விட்டு .. விச்சு மாமி வீணையின் தந்திகளை சரிபார்க்க.., அப்போது சரியாக அவரது வீட்டின் அழைப்புமணி ஒலித்தது. விச்சுமாமி வீணையில் கை வைத்திருந்ததால், லீலாவதி எழுந்து யாரெனப் பார்க்க போக, தடுத்த சௌடாம்பிகை, லீலாவுக்காகத்தான் அப்பெண் பாடுகிறாள், இருந்து கேட்கட்டுமே என்ற எண்ணத்துடன், ‘நான் போறேன்’, சைகையில் காண்பித்து விட்டு, அவரே போய் கதவை திறந்தார். அங்கே நின்றது, அவர் பேரன் தனஞ்செயன். வாசலை எட்டிப்பார்த்தார். ஜீப் நின்றது.

காக்கி பேண்ட், வெள்ளை டீ-ஷர்ட்டில் இருந்தான். நேரே ஸ்டேஷனில் இருந்து வருகிறான் என்று புரிந்து.. கேள்வியாக நோக்க..[பாட்டிக்கும் பேரனுக்கும்தான் டூ வாச்சே]

“போற வழில உங்களை பிக்கப் பண்ணிக்க சொல்லி அப்பா போன் பண்ணினார், அதான் வந்தேன், அம்மா எங்க?”, என்றவனை ஒன்றும் பேசாமல், “உள்ள வா”, வெனக் கூறி.. நடை சாத்தினார்.

“பாட்டி.. உள்ளல்லாம் வரமாட்டேன், யாரு வீடு, என்னன்னு கூட தெரியாது.. சும்மா உங்களோட இம்சை….”, என்று அவன் கடுப்பாக கூற…, அவனைப்பார்த்த பாட்டி ஏதும் சொல்லாமல் திரும்பி, கூடத்தைக் கடந்து அறைக்குள் சென்று விட்டார். சரி அம்மாவைத்தான் கூப்பிட்டு வர போயிருக்கிறார் என்று தனாவும் அமைதியாக அப்படியே வாசலருகிலேயே நின்றான்.

பாட்டி அறைக்கு வந்து அமர்ந்தபோது, தேஜு தெரிவு செய்திருந்த , “அழகே சுகமா?,” பாடலைப் பாட ஆரம்பித்திருந்தாள். கூடத்தில் நின்ற தனஞ்செயனுக்கு அவள் குரல் கேட்டதுதான் தாமதம்… “தேஜு’ , வாய் தானாக முனக, தன்னையறியாது நான்கே எட்டில் அந்த அறைவாசலில் நின்றான். அறை வாயிலில் நிழலாட… நிமிர்ந்தவள் கண்களுக்கு ஜெயன் தெரிய… நொடியில் அதிர்வு… கண்கள் விரிந்து மகிழ்ச்சியைப் பிரதிபலித்து, பின் அவனது இடதுபக்க தோள் மற்றும் கை, கால் சென்ற தேஜுவின் ஆராய்ச்சிப் பார்வை, இறுதியில் அவன் நெற்றியில் கீறலாய் இருந்த தழும்பில் ஒரு நொடி நிலைத்தது.

பின்னணியில் இசை ஒலிக்க…தன்னியல்பாய்   ‘உன் தாபங்கள் சுகமா’ என்று பாடவேண்டியவள், ‘உன் காயங்கள் சுகமா?’, என்று மாற்றி தேஜு பாட.. அவளது முகபாவங்களைக் கண்டவன் உள்ளத்தில் சந்தோஷ நீரூற்று.

கூடவே, தனக்கு விபத்து ஏற்பட்டபோது தேஜுவின் அருகாமை இருந்தாற்போல் தோன்றியது யூகமில்லை, பாடலின் வரிகளை மாற்றிப்பாடி தேஜு அவளாகவே அவளை காட்டிக்கொடுக்க, தேஜுதான் அந்த ஸ்டோலுக்கு சொந்தக்காரி என்பதும் புரிய, பளிச் சென பல்வரிசை தெரிய சிரித்தான், ஜெயன்.

அறுவர் மேடையில், விழிகள் பேசிய.. இருவர் நாடகம். ஆங்கே.. அஃதோர் காட்சிக்கவிதை.

தேஜஸ்வினி நொடியில் தன் தவறுணர்ந்து, ‘முட்டாள், எத்தனை தடவை படிச்சு படிச்சு சொன்னாலும் கேக்கறியா? ஐஞ்சு செகண்ட்ல இத்தனை நாள் வைராக்கியத்தை காத்துல பறக்கவிட்டியே?’, என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டாள். முகம் சுண்டிப் போக, தலை குனிந்து, அடுத்த வரிகளை பார்ப்பதுபோல அலைபேசியைப் பார்த்தாள்.

இவர்கள் பார்வைப் பரிமாற்றத்தையும், மகனின் மின்னல் சிரிப்பையும் பார்த்த லீலாவதி… அப்படியா சேதி ? என்பதைப்போல மாமியாரைப் பார்க்க.. அவரோ தலையசைத்து ஆம் என்றார். ஆஹா என்ன பொருத்தம்? என்று பாட்டு பாடாத குறைதான், லீலாவதிக்கு. பின்னே அலட்டலில்லாத அழகான தேஜஸ்வினி, மகனுக்கு தகுதியான பெண்ணாகத் தெரிந்தாள். லீலாவதிக்கு இன்னமும் அவளின் வசதி குறித்தோ அந்தஸ்து குறித்தோ தெரியாதல்லவா?

ஜாதி பேதமெல்லாம் இவர்கள் வீட்டில் கிடையாது.  தனாவின் அண்ணன் சுதர்மன், வடஇந்திய பெண்ணை விரும்பியதாக கூற, தேவராஜன் மறுப்பேதும் சொல்லாமல் அவர்கள் வீட்டிற்கு பெண் கேட்டு சென்று மணமுடித்தார். அவர் அவனிடம் சொன்னது  ஒன்றே ஒன்றுதான் “கடைசிவரைக்கும் அவதான் உன் பொண்டாட்டி-ன்னு நினைச்சிட்டேன்னா சொல்லு , அவங்க வீட்ல பேசறேன்” என்றார். எனவே, சீக்கிரம் தனஞ்செயனுக்கும் தேஜுவிற்கும் திருமணம் முடித்துவிட வேண்டும் என்று யோசித்தார். இவர்கள் இன்னமும் காதலே சொல்லவில்லை. லீலாவதியோ திருமண திட்டத்திற்கே வந்து விட்டார்.

பாடிக்கொண்டிருந்த தேஜுவிற்கு ஜெயன் பார்வை தன் மீதிருப்பத்தை உணர்ந்தே இருந்தாள்.  இங்கே அருகில் அமர்ந்திருப்பவர்களின்  கண் ஜாடை பரிமாற்றம், கிசுகிசுக்கள் இவர்கள் இருவரைப் பற்றித்தான் என்பதும் புரிந்து, கண்டனமாக தனஞ்செயனைப் பார்த்தாள்.[முறைத்தாள்?]

என்ன என்று புருவம் உயர்த்தியவனுக்கு, பெரியவர்கள் அமர்ந்திருந்த புறம் கண் காட்டி, “பெரியவங்க இருக்காங்க, கொஞ்சம் ஜொள்ளு விடறத நிறுத்து”, என்று பார்வையால் கடிய.., அவனோ ‘பரவாயில்லை’ என்பது போல கண்மூடித் தலையசைத்தான். அவனுக்கு ‘போடாங்’.. என்று பதிலுரைத்தாள் தேஜஸ்வினி தன் அலட்சியமாக பார்வையால்.

அவள் பாடுவதோ சஹானா.. கேட்டாலே மனம் சமனாகும், தென்றலாய் வருடிச் செல்லும் ராகமது. போதாதற்கு தேஜூவும் உரிமையாய்…[ ? ] கடிந்ததும் .. உள்ளே ஜில்லென்ற உணர்வு பூக்க…. சுயம் மறந்து, சுற்றம் மறந்து.. இவள் என்னவள் என்றுணர்ந்தான், ஜெயன்.

அன்பே சுகமா?,

உன் தாபங்கள் சுகமா?

தலைவா சுகமா? சுகமா?,

உன் தனிமை சுகமா? சுகமா?

பாடும் தேஜுவின்  குரலிலும், பாடலிலும்  இருந்த பாவம் கொஞ்சமும் அவளிடத்தில்லை, இறுக்கமாக இருந்தாள். மாறாக, தனாதான் இவளில் லயித்திருந்தான்.

பாடலைக்கேட்டபடி,  இயல்புக்கு வந்த தனஞ்செயன், விச்சு மாமியின் புன்னகையுடன் கூடிய வரவேற்பை ஏற்று முறுவல் புரிந்து .. அவன் அமர இடம் தேடினான். தேஜு அங்கிருந்த பெரிய சோஃபாவில் அமர்ந்திருக்க… அவனது பாட்டி, ஜகதா பாட்டியுடன் கட்டிலில் அமர்ந்திருக்க,  அம்மாவும்,  விச்சு மாமியும் .. கீழே வெல்வெட் கார்பெட்-டில், அவர் வீணை வாசிப்பதற்கு ஏதுவாக.

நேராக தேஜு அருகில் வந்து, அந்த மூவர் அமரும் சோபாவின் காலியான பக்கம் தனஞ்செயன் அமர.. தேஜுவின் உள்ளுக்குள் கடுகடுவென வந்தது. அவனோ சற்று பின்னோக்கி அமர்ந்து, சாய்ந்து வசதியாக அவளை பார்த்தவாறு அமர்ந்தான். [அடேய் இங்கென்ன பொண்ணு பாக்கற function -ஆ நடக்குது? நம்ம மைண்ட் வாய்ஸ் ]

அவனது அம்மாவும் பாட்டியும் ‘என்னடா நடக்குது இங்க?’ என்பது போல பார்த்திருக்க…, கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்த ஜெகதா பாட்டி, ‘இதென்ன, இந்தப் பையன் செய்வது சரியில்லையே?’, என்று ஆட்சேப பார்வை வீச… விச்சு மாமிக்குத்தான் தர்ம சங்கடமான நிலை. தேஜுவின் முகம் தன் இயல்பைத் தொலைத்திருக்க… ‘தன் வீட்டிற்கு வந்ததால் அல்லவா இந்த நிலை?’, என்று வருத்தம் கொண்டார்.

ஆனால், தேஜுவின் மனம் சூறாவளியாய்ச் சுழன்றாலும், பாடலை மட்டும் நிறுத்தாமல் பாடிக்கொண்டிருந்தாள். வீணை மாமியும் அவ்வாறே.. [ அது ஒரு கோட்பாடு, ஒரு பாடலை ஆரம்பித்தால் அதை முடிக்கவேண்டும் ] அவன் குடும்பத்தினர் முன் இப்படி வைத்த கண் வாங்காமல் பார்க்கிறானே, என்ன பிரச்சனையை இழுத்து வைக்கப் போகிறானோ?  அவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? எப்படி இவனை சமாளிப்பது? என்று இத்தனையும் சிந்தனையில் இருக்க மறந்தும் அவன்புறம் திரும்பினாள் இல்லை.

Advertisement