Advertisement

அத்தியாயம் 12 2

தனஞ்செயன், தேஜஸ்வினி இருவரும் தேஜுவின் வீட்டின் அருகாமையிலிருந்த கடற்கரைக்கு சென்றனர். காரை தேஜு ஓட்ட, செல்லும்  வழியில் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் அவரவர் சிந்தனையில்..

தனஞ்செயனுக்கு தேஜஸ்வினி TJ-யா என்று கண்டுபிடிக்க செய்தவைகளை நினைவு கூர்ந்தான். கொரியர் ஆபிசுக்கு சென்று விட்டு மதுரையில் இருந்து வந்ததும், தனஞ்செயன் தேஜஸ்வினி மற்றுமவளது தங்கை யஷஸ்வினி பற்றி, அவள் படித்த பள்ளி பற்றிய தகவல்களை சேகரித்தான்.

தந்தையும் தாத்தாவும் இறந்து போன சில மாதங்களில் யஸஷ்வினி சென்னையிலுள்ள அந்த பிரபல பள்ளியில் சேர்ந்த விஷயமும், துரதிர்ஷ்டவசமாக அங்கு, ‘அப்பர்ஸ் ‘,[uppers] அல்லது ஸ்டிமுலன்ட்ஸ் எனப்படும் போதை பொருள்கள் வர்த்தகம் நடந்துள்ளது என்பதையும் அறிந்துகொண்டான்.

தேஜூ அவளது அம்மா ராஜலக்ஷ்மியுடன், தங்கள் திரண்ட சொத்துக்களை மேற்பார்வையிடச் செல்ல.. பதின் பருவத்தில் இருந்த தங்கை யஷஸ்வினி, தனிமை உணர்ந்தாள். சிறுவயதில் இருந்தே தந்தையிடம்தான் அவளுக்கு ஒட்டுதல் அதிகம், அதன் பின் அக்கா தேஜு. இப்போது ஒருவர் போட்டோவாகிவிட, மற்றொரு துணையான அக்காவோ வீடு, சொத்து, அலுவலக நிர்வாகத்தை கையிலெடுத்தத்தால், தங்கையை மட்டுமல்ல, தன்னையும் கவனிக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தாள். தேஜஸ்வினிக்கு அதி வேகமாக அனைத்தையும் கற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயம். கல்லூரி படிக்கும் பெண்ணிற்கு, அங்கு செல்லக்கூட நேரமின்றி, தேர்வு எழுத மட்டும் கல்லூரி சென்றாள்.

கல்லூரி படிப்போடு கூடவே சி. ஏ. வும் சேர்ந்து கொள்ள, தங்கையை கவனிக்க என்ன பேசக்கூட நேரமின்றி இருந்ததால், பள்ளியில் கூடா நட்பின் துணையுடன் போதைக்கு அடிமையானாள், யஷஸ்வினி. அதன் பின், ஒரு கட்டத்தில்  போதை பொருளுக்காக அதீத பணத்தேவை வர…, போதை பொருள் விற்றவன் காட்டிய வழி… சதை வியாபாரம்.

யஷஸ்வினி சிறு பெண் தான், போதைக்கு அடிமையானவள்தான் என்றாலும், நல்ல மூத்தோர் மற்றும் அன்னை, தந்தையின் வளர்ப்பல்லவா?  அவனது தீய ஆலோசனையை மறுத்து வீடு சென்றுவிட்டாள். இரவு உறங்க முடியாமல் , தனது சக்தியனைத்தும் வடிந்ததுபோல இருக்க…[side effect of uppers ] நாளை பள்ளி சென்றால், கட்டாயம் அவனது ஆலோசனையை ஏற்றுவிடுவோமோ என்ற பயத்துடன்… நட்ட நடு இரவில் … எரிவாயு சிலிண்டரை திறந்து, தனக்கு தானே கொள்ளி வைத்து தற்கொலை செய்து கொண்டாள்.

ஆனால், நடந்தவைகள் அனைத்தும், குரல் பதிவாக பதிவிட்டு, அப்போது நில புலன் கணக்கு வழக்குகளை பார்க்கவென சொந்த ஊரில் இருந்த தேஜுவிற்கு மெயிலில் அனுப்பி வைத்து இறந்து போனாள், யஷஸ்வினி . இன்றும் அவளது குரல் பதிவு தேஜுவின் மெயில்-ல்  இருக்கிறது. அது இருந்ததால் தான் , தனஞ்செயனுக்கு இத்தனை விபரமும் தெரிந்தது.

ஆம்.. அதுவேதான் .. தேஜுவின் இணைய தளத்தை, அவளது மெயில், ட்ரைவ் உட்பட அனைத்து கணக்குகளையும் தனது போலீஸ் புத்தியை பயன்படுத்தி ஹேக் [hack], செய்து அவனுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் பெற்றான் தனஞ்செயன். ஆனால், அவள் எவ்வாறு போதை பொருட்கள் கடத்தும் முக்கியமான ஆட்களை கண்டு பிடிக்கிறாள்? என்பது மட்டும் புரியாத புதிராகவே இருந்தது தனஞ்செயனுக்கு.

யஷஸ் இறந்த அந்நிகழ்வை ..  விபத்து என்று போலீஸ் பதிவு செய்து முடித்து விட்டது. தேஜுஅவளது அன்னைக்கு கூட உண்மையான விபரத்தை கூறவில்லை. ஆனால், அவளுக்குள் இறுகிப்போனாள்.

தேஜு மனமுடைந்து இருப்பதைக் காண சகியாமல், அவளது மன மாற்றத்துக்காக கிட்டத்தட்ட ஒரு வருடம் சான்ஃபிரான்ஸிஸ்கோ -விற்கு ராஜம்மா அனுப்பினார். அங்கே எல்லா நேரமும் தேஜு பிசியாக இருந்தாள். ஏதேனும் ஒன்றை புதிதாக கற்றுக் கொண்டாள் .

அவற்றுள் முக்கியமானவை பாட்டேரி pottery மேக்கிங் எனப்படும் விதவிதமான பொம்மைகள் செய்வது, இணையத்தை ஹேக்கிங் செய்வது, மினியேச்சர் டிசைனிங் எனப்படும் சிறிய வடிவில் பொருட்களை தயாரிப்பது, என அனைத்தையும் கற்றாள். அவளது மினியச்சர் கலெக்ஷனில் சிறிய ரக ஏவுகணை உட்பட அனைத்தும் அடக்கம்.

சுருங்கக்கூறின் என்ன செய்யப் போகிறோம் என்பதை தெளிவாக திட்டமிட்டு , அதற்குத் தேவையான அறிவை சம்பாதித்தாள்.  

தேஜு கொன்றது, யஷஸ்வினியின் பள்ளியில் போதை மருந்து விற்பவனை அல்ல.. அவன் வெறும் அம்பு என்று தெரிந்தவள், அவனின் வேரினை ஆராய முடிவெடுத்தாள்.

தமிழகத்தில் இறக்குமதியில் மூலம், போதை மருந்துகளை தருவித்து விற்பனை செய்தவன், கோவா-வில் இறந்த அந்த மனிதன். அவன் ஆளரவமில்லா சாலையில் செல்லும்போது , லிப்ட் கேட்டு அவனது காரில் ஏறி, அதிக வீரியமுள்ள போதை ஊசியை செலுத்திவிட்டு, அவள் இறங்க… அக்கயவன் காரைக் கிளப்பும்வரை நின்று பார்த்து சென்று விட்டாள். இதில் விந்தை என்னவென்றால், ஒரு நாள் முன்பு , அந்த மருந்தை அவனிடம் இருந்துதான் வாங்கினாள், பர்தாவின் போர்வையோடு.

காரில் இருந்த அவன் அடுத்த ஐந்தே நிமிடங்களில் போதை உச்சத்தைத் தொட… எதிரில் வந்த வளைவில் வண்டியைத் திருப்பாமல்..  அதிவேகமாக சென்று மரத்தில் மோதி உடனடி மரணம்.

அடுத்த இலக்கு. மகேஷ்.. அவன்… இளங்குருத்துக்களை மூளை மங்கச் செய்வதோடு.. உண்டி கொடுப்போரையும், தாய்க்கும் மேலான விளை நிலத்தையும் விஷம் உமிழ வைத்தவன். அவன் துடித்துத் தான் சாகவேண்டும் என முடிவெடுத்தவள், நான்கு மாதங்களுக்கு மேல் அவனை தொடர் கண்கானிப்பில் வைத்தாள். அவனது வீட்டின் CCTV-யின் இணைப்பை ஊடாட, தினமும் இரவில் ஒரு மணி நேரத்தை அவனது உரையாடலை கேட்க ஒதுக்கினாள். கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாக கண்ணாடியில் பொம்மை செய்து, நண்பர் அனுப்புவதுபோல கொரியர் அனுப்பினாள்.

அந்த அலங்கார பொம்மையின் வெளிப்பகுதி தரமான கண்ணாடியினால் ஆனது, அதன் உட்புறம் கண்ணாடியிலேயே தடுப்பமைத்து, பிளாஸ்டிக் கண்டைனர் [குடுவை போன்ற அமைப்பு] ஒன்றை வைத்தாள். அதில் சற்று இடைவெளி விட்டு [வெப்பத்தினால் பெட்ரோல் ஒருவேளை ஆவியானாலும் பாதகமில்லை எனும் அளவு] பெட்ரோல் நிரப்பி, காற்றுப் புகா வண்ணம் அடைத்தாள் மேல் பகுதியான கண்ணாடியில் திராவகத்தை நிரப்பி, அதன் மூடியில், மனித நடமாட்டம் காட்டும் கருவியான ஹியூமன் சென்சிங் டிவைஸ் பொருத்தினாள். கூடவே உபரியாக ஒரு கேமரா.

அவள் எதிர்பார்த்திருந்தபடி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அலைபேசியில் அழைத்து, போலீசார் வீட்டைக் கண்காணிப்பதாக கூறினாள். இத்தனை செய்தவளுக்கு குரல் மாற்றி பேசும் ஆப். தெரியாதென்றா நினைக்கிறீர்கள்.?

அவனோ வேறு யாராவது மனிதர்களோ பொம்மையின் அருகே வந்தால், HSD [ஹியூமன் சென்சிங் டிவைஸ் ] தகவல்களை, அவளது தொடையில் கட்டி இருக்கும் ரிஸீவரில் மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்தும். உடனே இவள் அங்குள்ள பொம்மையின் கேமராவை உயிர்ப்பிக்க.., அவனது முகம் அருகே வரும்போது முதலில் எரிபொருள் வீசுமாறும், அடுத்த நூறாவது மில்லி செகண்டில் அமிலத் தாக்குதலும் இருக்குமாறு மூடிகளை வடிவமைத்திருந்தாள்.

அடுத்தவனும் [வீரய்யா ] மருந்தென்ற பெயரில் இளைஞர்களை போதைக்கு பழகியவன். அதிலும் போதை ஊசிகள், இவனது சிறப்பு. அவனும் மகேஷைப் போலவே  இவ்வாறே இறந்தான்.

டீஜே, இது யஷஸ்வினி தேஜுவை அழைக்கும் பெயர். மற்ற எல்லோரும் பாப்பா, சின்னம்மா என்றழைக்க… தங்கை மட்டும் அவளை டீஜே என்பாள். தேஜுவிற்கு அவள் யஷஸ், அதனாலேயே இவளது இசைக்குழுவிலிருந்து வாங்கும் வீடுவரை அனைத்துமே ‘யஷஸ்’.

இறப்பதற்கு முன் வந்த, தேஜஸ்வினியின் பிறந்தநாளுக்கு யஷஸ்வினி பரிசாக அளித்தது தான் அந்த TJ மோதிரம். தேஜஸ்வினிக்கு அது வெறும் பெயரல்ல, அது அவளது தூண்டுகோல். பகீரதனுக்கு எவ்வாறு தனது மூதாதையரின் முக்தி முக்கியமாகப் பட்டதோ, அப்படி தேஜுவிற்கு யஷஸ் இழப்பிற்கு பழிவாங்க வேண்டும் என்பது மட்டுமல்லாது அவளைப்போல இளங்குருத்துக்கள் சீரழியக்கூடாது என்ற அழுத்தமான எண்ணம் விழக் காரணமானது, அம்மோதிரம்.

அப்படி துவங்கியதுதான் போதை மறுவாழ்வு நிலையம் எனும் ட்ரஸ்ட். இதில் விசித்திரமாக தங்கையின் பள்ளிக்கு மாத்திரை விநியோகம் செய்தவனே அங்கு வந்து சேர்ந்தான். ஆனால், மிக தாமதமான வருகை. அவன் எடுத்துக் கொண்ட மருந்தின் தாக்கம் ரத்தம் முழுவதும் கலந்து, போதை இல்லாவிட்டால் பைத்தியமாகிவிடுவான் என்ற நிலையில் வந்து சேர்ந்தான்.

மிகவும் பிரயத்தனப்பட்டு குணமாகையில், ஒருநாள் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டான். அவனது அலைபேசி எண்ணைத்தான் இரண்டாவதாக கொலை செய்த மகேசுக்கு போனில் பேச பயன்படுத்தினாள்.

இருவரின் யோசனையும் கடற்கரை வந்திருந்ததால், தேஜஸ்வினி அனிச்சையாக காரை நிறுத்தியதில் கலைந்தது. “இப்படியே  பேசலாமா? இல்ல நடந்துட்டே பேசலாமா?”, என்ற தனஞ்செயனின் குரலில் நிகழ்வுக்கு வந்தாள்.

ஏசி காரிலும் பழைய நினைவுகளை ஆசை போட்டதில் வியர்த்திருந்தது தேஜுவிற்கு. கார் திறந்து வெளியே வந்து உப்புக்காற்றை ஆழமாக சுவாசித்தாள்.  “கொஞ்ச தூரம் அப்படியே நடக்கலாம்”, என்று அமைதியாக தனஞ்செயனிடம் கூற, அவனும் மெளனமாக ஆமோதித்தான்.

இருவரும் மெல்ல நடக்க ஆரம்பிக்க, “எப்படி கண்டுபிடிச்சீங்க?”, என்றாள் தேஜு தனாவிடம். .

“ம்ம். உள்ளுணர்வு, ஜெனெரலா எல்லாருக்கும் இருக்கும் ஆனா எனக்கு கொஞ்சம் அதிகம்னு நினைக்கிறன், ஒருவேளை போலீசா இருக்கறதால இருக்கலாம்”, என்றான் தனஞ்செயன்.

தேஜஸ்வினி நேவி ப்ளூ கலரில் கேப்ரி த்ரீ போர்த், மேலே லூசாக சட்டை அணிந்திருந்தாள்.  தன்னைக் கண்டுபிடித்து விட்டானே என்று முகத்தில் எவ்வித சலனமுமின்றி கால் மணலில் புதைய புதைய நடந்தவளை பக்கவாட்டில் பார்த்தபடி தனஞ்செயனும் கூட நடந்தான்.

“ம்ம். வாய்ப்பில்லை, ஏதோ ஒரு தடயம் கிடைச்சிருக்கணும், இல்லன்னா சரியா என்கிட்டே வந்திருக்க மாட்டீங்க, சொல்லுங்க என்ன தடயம் விட்டேன்?”

“உன்னோட ரிங், TJ ன்னு போட்ட உன்னோட ரிங். அது மட்டுமில்லன்னா, நிச்சயமா கண்டுபிடிச்சிருக்க முடியாது. கொஞ்சமாவா குழப்பின? பொம்பளையா? ஆம்பளையா?, உயரமா?, குள்ளமா?, முஸ்லிமா? ப்ரக்நன்ட் லேடியா? ன்னு ஒரேடியா தலை சுத்தி போச்சு”, என்றான் மெதுவாக நகைத்தபடி.

மெல்ல புன்னகைத்தவள், “சரி மைக் எப்போ தெரியும்?”, என்றாள்.

“ஹ ஹ, இன்னிக்கு மதியம்.  நீ.. ஒத்துக்கிட்ட எல்லா ப்ராகிராமும் கேன்சல் பண்ணிட்டு இருக்க-ன்னு தெரிஞ்சது, என்னடா திடீர்னு னு யோசிச்சு, நீ சமீபத்துல யாருக்கெல்லாம் போன் பண்ணி இருக்க-ன்னு போன் கால் லிஸ்ட் பாத்தேன். ட்ராவல் ஏஜென்ட் நம்பர் கிடைச்சது, என்ன விஷயம்னு ஏஜென்ட் கிட்ட கேட்டதுல, நீ சான் பிரான்சிஸ்கோ போறதா இருக்க-ன்னு தெரிஞ்சது. அத்தனை அவசரம் என்ன-ன்னு யோசிச்சா… எங்கம்மாகிட்ட நான்  ஒருவாரத்துல உன்னை சம்மதிக்க வைக்கறேன்னு பேசினது ஞாபகம் வந்தது. அப்போதான் ஒருவேளை நம்மளையே நோட்டம் போடறாளா-ன்னு சந்தேகம் வந்தது”, புன்முறுவலோடு தொடர்ந்தான்.

“அப்போ அம்மாட்ட யாராவது புதுசா தெரியாதவங்க வீட்டுக்கு வந்தாங்களா? இல்ல பார்சல் ஏதாவது வந்துதான்னு கேட்டப்போ, விபரம் தெரிஞ்சது. வீட்ல ரெண்டு போலீஸ் இருக்கோம். எங்க வீட்டுக்கே பக் வச்சிருக்கா?, அதுகூட தெரியாம இருந்திருக்கேன், ஹூம். இந்தா.. “, என்று தன பாக்கெட்டில் இருந்து இவள் வைத்த மைக்குகளை எடுத்துக் கொடுத்து, “இனிமே இது தேவைப்படாது”, என்றான் தனஞ்செயன்.

“கரெக்ட், தேவைப்படாது, நான் வெளிநாடு போறேன், இனிமே தேவையில்லை”, என்றாள் தேஜு.

“நீ எங்கயும் போகல, போகவும் கூடாது, நாளைக்கு வீட்டுக்கு வந்து அம்மாவை பார், காட் இட்?”, என்றான் அதிகாரமாக.

“உங்ககிட்ட மாட்டினா மாதிரி நான் என்னிக்கு வேணா அரெஸ்ட் ஆக வாய்ப்பிருக்குனு உங்களுக்கு தெரியுமில்ல, அப்பறம் ஏன்?”,

“நோ வே, நான் ஏற்கனவே அந்த கேஸெல்லாம் முடிச்சிட்டேன், உனக்கு தெரியாதுன்னு சொல்லாத, நீ பிரவுஸ் பண்ணி பாத்தது எனக்குத் தெரியும், சோ இதுவரை நடந்த கொலைக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, அதனால பிரச்சனை வராது”, அது ஒரு விஷயமே இல்லை என்பது போல சொன்னான் தனஞ்செயன்.

“சப்போஸ் வந்ததுன்னா?”

“எஸ். அந்த சப்போஸ்-காகத்தான் சொல்றேன். வந்துரு. ப்ளீஸ்… எங்கிட்ட வந்துரு”, ஒரு முழ தூரத்தில் தான் இருவரும் நின்றிருந்தனர்.

“என்ன காப்பாத்திக்க எனக்கு தெரியாதுன்னா நினைக்கிறீங்க?, எனக்கும் ஒரு பொம்மை வீட்ல தயாராத்தான் வைச்சிருக்கேன்”, என்றாள் நிமிர்வாக.

தனஞ்செயனுக்கு கோபம் வர, “வாட் .. சூசைட்? முட்டாள்”, என்று பல் கடித்தவன், “உனக்கு உன்ன காப்பாத்திக்க தெரியாதுன்னா எங்கிட்ட வர சொல்றேன்?”, குரல் ஏறியிருந்தது. தன்னை நோக்கி கை  காண்பித்து,  “எனக்கு .. எனக்.. கு பைத்தியம் பிடிக்குதுடி, நீ எப்போ என்ன செய்வ?  எவன் கண்ல மாட்டுவன்னு யோசிச்சு யோசிச்சு எனக்கு மண்டை காயுதுடி.. , என்னைக் காப்பாத்தவாவது என்னை கட்டிக்கோ, சாகறதா இருந்தாலும் என்னையும் கூட்டிட்டு செத்துப்போ”, ஆற்றாமை வழிந்தது அவன் பேச்சில்.

“ஏன்? நா அப்டி என்ன ஸ்பெஷல்?”

“பிடிக்கறதுக்கெல்லாம் காரணம் சொல்ல முடியா…து”, என்று இழுத்தவன், “ஆனா இப்போ.. ஸ்பெஷலா உன்னோட பிளானிங், பொறுமை, வைராக்கியம்.. யாரோ என்னவோ ஆனா நமக்கென்ன ன்னு இல்லாம ரிஸ்க் எடுக்கறதுன்னு சொல்லிட்டே போலாம்”

“அது எங்க தாத்தா-வால. சின்னப்போ, எங்களுக்கு  நிறைய கதை சொல்லுவார். அப்போ ஒருமுறை பகீரதன் கதை சொன்னார். அது மனசுல பசுமரத்தாணியா பதிஞ்சிடுச்சு, ஒரு சமுதாயத்தை அட்லீஸ்ட் ஒரு பகுதியை காப்பாத்த என்ன வேணா பண்ணலாம்னு தோணிச்சு. கூடவே மாட்டிக்க மாட்டேன்-னு ஒரு தைரியம், அப்படி மாட்டினாலும் மிஞ்சி மிஞ்சிப் போனா செத்துப் போவேன் அவ்ளோதானே-ன்னு முடிவுக்கு வந்தது அந்த கதைனாலதான்”, இதுவரை யாருடனும் இது குறித்து பேச வாய்ப்பில்லாதவள், தனஞ்செயனிடம் மனம் திறந்தாள். அவனும் புரிந்ததுபோல மெதுவாக அவள் புறம் சென்று, அவளது கையைப் பிடித்து அழுத்தினான்.

Advertisement