Advertisement

அத்தியாயம் 12 (1)

கங்கை ப்ரவாகமா பகீரதன் பின்னாலயே போயி.. பாதாள லோகத்துல இருந்த அந்த அறுபதினாயிரம் அஸ்தி மேல விழுந்த உடனே, சகர புத்திரர்களான அவா எல்லாரும் நல்ல கதிக்கு அதான் சொர்க்க லோகத்துக்கு போயிட்டா. இதுலேர்ந்து என்ன தெரியறது? சொல்லுங்கோ .. என்று ராமய்யர் கேட்க.. “நிறைய பேருக்கு நல்லது நடக்கும்ன்னா… நாம திரும்ப திரும்ப எவ்வளவு கஷ்டப்பட்டாவது ஒரு வேலைய செய்து முடிக்கணும். அப்படித்தான தாத்தா?, என தனது குண்டு கண்களை விரித்து சுந்தராமய்யரைப் பார்த்து அவரது பேத்தி தேஜஸ்வினி கேட்டாள். 

“ஆமாடா செல்லம், ஒரு காரியம் ஆரம்பிக்கறதுக்கு முன்ன கங்கைய பகீரதன் கொண்டுவந்த இந்த கதைய  நினைச்சு ஆரம்பிச்சா, அது எத்தனை கஷ்டமா இருந்தாலும் முடிச்சுடுவோம், ஏன்னா கடைசிவரை பகீரதன்ட்ட இருந்தது விடாமுயற்சி. அது நமக்கும் வந்துடும். என்ன பிள்ளைகளா .புரியறதா?”, என்று கேட்டார் அவர். 

“ஓ…. “, என்று அனைவரும் கோரஸாய் கூற.. “போங்க போங்க, உள்ள பிரசாதம் ரெடியா இருக்கும், போயி சாப்பிட்டு விளையாடுங்கோ”, என்று சொல்லி அன்றைய நிகழ்ச்சியை முடித்தார்.  

*****************************

கண்கள்…  தான் என்ன காணவேண்டும் என்று யூகித்துள்ளதோ அதையே காணும். காட்சியின் மாறான கோணங்கள்  அறிவுக்கு புலப்படா வண்ணம் காணாமல் போகும்… ஆங்கிலத்தில் இதை இமேஜ் பர்செப்ஷன் என்பார்கள்.

இது ஒன்றும் நமக்குத் தெரியாத புதிதான விஷயமோ கம்ப சித்திரமோ அல்ல, அழகு தமிழில் பழமொழியாக சுருக்கி நம் முன்னோர்கள் ஏற்கனவே கூறியதுதான்.

“கல்லைக் கண்டால் நாயைக் காணோம்…

நாயைக் கண்டால் கல்லைக் காணோம் … “, அதாவது கல் என்று நினைத்து சிலையைக் கண்டால், அங்கே நாய் உருவச் சிலை தெரியாது, நாய் உருவச் சிலை தெரிந்தால்.. அங்கே கல் தெரியாது. [நாம மாத்தி புரிஞ்சிக்கிட்டோம்]

[எ.கா.]

இங்க இருக்கிற படத்துல ஒரு பொண்ணு திரும்பி இருக்கிறா மாதிரி தெரியுதா? இதே படத்துல ஒரு வயசான பாட்டி தலைல முக்காடு போட்டுட்டு இருக்கிறா மாதிரி நினைச்சிட்டு பாத்தா.. பாட்டி தெரிவாங்க. பாக்கறது நம்ம கண்ணுதான், பார்வைகள் வேற.

இதெல்லாம் யோசித்த தனஞ்செயன், ‘TJ நானா? ஒருவேளை அந்நியன் படத்துல வர்றமாதிரி மல்டிபிள் பர்சனாலிட்டி?… சேச்சே.. இங்க ஒரு பர்சனாலிட்டியே ஒழுங்கா பர்ஃபார்ம் பண்ண மாட்டேங்குது. இதுல மல்டிபிள் வேறயா?’ என்று தன்னைத்தானே கலாய்த்துக் கொண்டவன், இதுவேறே ஏதோ ஒரு T J , இல்ல ர-ன்னு கூட இருக்கலாம். மோதிரத்தோட அழகுக்காக இப்படி நகாசு வேலை செய்திருக்கலாம், என்ற பலவாறான யோசனையுடன் படுக்கையை விட்டு எழுந்திருந்தான் தனஞ்செயன்.

இரவு சாப்பாட்டினை முடித்து விட்டு.. உணவு உண்டவுடன் படுப்பது கூடாது என்பதால்,  காலாற நடக்க ஆரம்பித்தான். அந்த கொரியர் அலுவலகத்தின் அருகே தான் அறை எடுத்து தங்கி இருந்தான். இரவு வெகு நேரமானதால் சந்தடிகள் குறைந்திருந்த அந்த தெருவில்.. காலையில் பார்த்த அலுவலகத்தை கடந்து தான் சென்றான்.  பூட்டி இருந்தது.

கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டருக்கு மேல் சென்றதும், திரும்ப நினைக்க… அங்கே “யஷஸ் “, என்ற பெயர் வீணை படத்துடன் வ்வாசல் முகப்பில் பொறிக்கப் பட்டிருந்தது. அளவில் சற்றே பெரிய வீடு இருந்தது. இந்த பெயரை எங்கோ பார்த்திருக்கிறோம் .. எங்கே என்று நினைவடுக்ககத்தில் தேடியவன், இவன் தேஜுவை சந்தித்த இசைவிழா அறிக்கையில் ‘யஷஸ்’ தேஜஸ்வினி , என்று தேஜுவின் பெயரைக் குறிப்பிட்டு இருந்தது ஞாபகம் வந்தது. அன்று விச்சுமாமி வீட்டு வாசலிலும் ‘யஷஸ்’ என்று பொறிக்கப்பட்டிருந்ததும், எஸ்ஸாரின் மனைவி சொன்னதுபோல அவள் வாங்கும் வீடுகள் அனைத்தும் ‘யஷஸ்’ என்று பெயரை தாங்கி இருக்கும் என்றதும் நினைவுக்கு வந்தது.

அப்படியென்றால், இந்த வீடு அவளுடையதாக இருக்க வேண்டும். ம்ம்.. நல்ல ரசனைக்காரிதான். ஆனால், வீட்டில் காவலாளி கூட யாரும் இல்லை, ஒருவேளை யாரேனும் தினம் வந்து பராமரித்து செல்வார்கள் போலும். ‘ஹ்ம்ம். மறுபடியும் தேஜு’,  என்று மனதோடு சொல்லி அவள் வீட்டைக் கடந்து வந்தான். வெல் .. அவளும் டீஜே தான், என்று மனது நினைக்க… ‘ஹ ஹ, ஆமாமில்ல அவளும் டீஜேதான்…’, என்று  இரண்டடி எடுத்து வைக்கும்போது, விமான நிலையத்தில் அவளது மருண்ட, பயந்த பார்வை…. கூடவே விமான பயணத்தின் போது பார்த்த ‘எனைத் தெரிந்தும் நீ’ [மல்லி மேம் புக் :> ], புத்தக தலைப்பு நிழலாட…  மூச்சு விட மறந்து, அப்படியே சிலையானான் தனஞ்செயன்.

எபிநெப்ரின் அட்ரினலின் சுரப்பு அதிகமாக, இதயத்துடிப்பு எகிறி… ரத்த நாளங்கள் சுருங்கி..  வேக மூச்சு வாங்கினான். ஒருவேளை அப்படித்தானோ? அதனால்தான் உள்ளுணர்வு தேஜுவை சுற்றியே வந்ததோ? வேக எட்டுக்கள்  போட்டு அறைக்கு வந்தவன் முதலில் தேடியது தேஜஸ்வினியைப் பற்றி. அவள்  யார், அவளது குடும்பம் பின்னணி முதலியவைகளை தேடினான். இவள் சாதாரணமாவளாக இருந்தால் தனித்த தகவல்கள் கிடைக்காது, ஆனால் தேஜுதான் பிரபலமாயிற்றே? நிச்சயம் ஏதாவது இணையத்தில் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் தேட ஆரம்பித்தான்.

அதில் கிடைத்தவைகள், விஸ்வநாதன் , ராஜலக்ஷ்மி யின்  முத்த பெண் தேஜு, இரண்டாவதாக ஒரு மகள், அவள் யஷஸ்வினி . பதின் வயதில் , சமையல் எரிவாயு விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து போனாள்.

ஏனோ தனாவிற்கு இறந்துபோன மகேஷ், வீரய்யாவின் கொடூர மரணம் சட்டென கண்முன் வந்தது. ஒருவேளை தேஜஸ்வினிதான் TJ – யா?, என்று தனது ஆருயிர் காதலியான தேஜஸ்வினியை முதன்முறையாக போலீஸாக சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்த்தான்.

‘இது வெறும் யூகம்தான் ஆனால்…. வாய்ப்பு இருக்கத்தானே செய்கிறது’, என்ற எண்ணத்துடன் அடுத்தடுத்து தான் செய்ய வேண்டியவைகளை திட்டமிட ஆரம்பித்தான். மறுநாள் மதுரையில் வேறு வேறு இடங்களில் விசாரணை நடத்தியும், எவ்வித துப்பும் கிடைக்காததால், இரவோடு இரவாக… சென்னை செல்லும் ரயிலில் ஏறினான்.

—————————-

சரியாக நாற்பது நாட்களுக்கு பின்:

தமிழகத்தின் பிரபல முன்னணி செய்தித் தாள்களின் இரண்டாம் பக்கத்தில்,”கொலைகாரன் தப்பிக்க முயற்சிக்கும்போது போலீசாரால் சுட்டுக்கொலை..” என்று அச்சிடப்பட்டிருந்தது. உள்ளேசெய்தியாக, “தமிழகத்தைச் சேர்ந்த மகேஷ், மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த வீரய்யா என்ற இருவரைக் கொன்ற கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த கொலைகாரன், நேற்று போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டான். அப்போது இரண்டு போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்தால் தற்காப்புக்காக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்”, என்று அச்சிடப்பட்டு இருந்தது.

நாளிதழைப் பார்த்து ஒருமுறை புருவம் துருக்கிய அவ்வுருவம், யார் என்கவுண்டர் செய்தது என்பதை மீண்டும் சரிசெய்தபின், மெல்ல நகைத்தது. காரணம், என்கவுண்டர் செய்தது தனஞ்செயன். நாம் செய்த கொலைகளுக்கு இன்னொரு ஆளை பகடையாய் ஆக்கி விட்டானே? என்று யோசித்து, பேப்பரை மடித்து வைத்தது. பின் தனது அறைக்கு சென்று, ஸ்பீக்கரை ஆன் செய்தது. அந்த ஸ்பீக்கர் தனா வீட்டில் பொருத்தப்பட்ட ஒட்டு கேட்கும் கருவிக்கானது.

******************************

சில பல நாட்களுக்கு பின், காலை வேளையில் தனஞ்செயன் வீட்டில் லீலாவதி மகனிடம், “டே. இப்போ என்னதான்டா சொல்ற?, இந்த பொண்ணுக்கு என்ன குறை? நல்லா படிச்சுருக்கு, கைல வேலையுமிருக்கு. ஜாதகம் பொருந்தியிருக்கு”, என்ற இந்த பாட்டை கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக பிள்ளையிடம் பாடிக்கொண்டுதான் உள்ளார். ஆனால், தனஞ்செயன் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. இன்று அன்னையிடம் வசமாக மாட்டிக் கொண்டான்.

“ம்மா. எனக்கு பிடிக்கல”

“பாத்தாதானடா பிடிச்சுருக்கா இல்லயான்னு தெரியும் ? பாக்காம வேணா வேணா-ன்னு சொன்னா என்ன அர்த்தம்?”

சீருடை அணிந்து கொண்டிருந்தவன், லீலாவதியைப் பார்த்து, “ம்மா, எனக்கு தேஜுவை பிடிச்சிருக்கு, அவளைத்தான் கட்டிக்க போறேன்”, என்றான்.

உடனே, “அடேய் நீ நினைச்சா போதுமா? அந்த பொண்ணுக்கு பிடிக்க வேணாமா?”, என்றார் லீலாவதி சற்று கடுப்பாக. இவன் அன்று விச்சு மாமி வீட்டில் நடத்திய நாடகமும், தேஜுவிடம் பேசியபின், அவனது கோபமும் நேரில் பார்த்தவராயிற்றே?

“அவளுக்கு பிடிக்காமலா நான் சொல்லுவேன்னு நினைக்கறீங்க?”

லீலாவதி யோசனையுடன், “ஆனா, விச்சு சொன்னது வேறயாயில்ல இருக்கு? நான் நேத்திக்கு கூட கேட்டேன்டா”, என்றார்.

முகத்தை சீரியஸாக வைத்து, “மா, அவளை பத்தி என்கிட்டே கேளுங்க,அத விட்டுட்டு ஊர்-ல கேக்காதீங்க”

“சரிடா, உன்கிட்டயே கேக்கறேன். இன்னும் ஒரு வாரத்துல அந்த பொண்ணு உன்னைக் கட்டிக்க சம்மதம்னு நேர்ல வந்து சொல்லட்டும், அப்போ ஒத்துக்கறேன், இல்லன்னா இந்த பொண்ணை பேசி முடிச்சிடுவேன். சரியா?”, தனஞ்செயனுக்கு சரியாக செக் வைத்தார்.

புருவ முடிச்சுடன் யோசனையாக, “ம்ம். அவளா சொல்லுவா?”, என மனதுக்குள் முனகி, அம்மா லீலாவதியிடம், “சரி சொல்ல வைக்கறேன், ஆனா ம்மா.. இல்லனாலும்  நீ சொல்றதெல்லாம் நடக்காது, வேற பொண்ணையெல்லாம் கட்டுவேன்னு கனவுல கூட நினைக்காத. வொய்ப்-ன்னா எனக்கு தேஜுதான்”, தீர்மானமாக சொல்ல,

“உன்னை எப்படி ஒத்துக்க வைக்கறதுன்னு எனக்கு தெரியும், உங்கப்பாகிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும், உன் வாயை மூடறதுக்கு. உனக்கு டைம் ஒரு வாரம்…”, என்று அம்மாவாக லீலாவதி மிரட்ட,  அவரை முறைப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் காவல் நிலையத்துக்கு கிளம்பினான்.

அடுத்த வந்த இரு தினங்களை அவனது வேலை இழுத்துக் கொள்ள, மூன்றாம் நாள் மதியத்தில் அவனுக்கு தேஜுவைப் பற்றி வந்த தகவல் அவனை கண் மண் தெரியாத கோபம் அடைய வைத்தது. தீவிர சிந்தனையிலிருந்தவன், மாலை வேலை முடியும்வரை காத்திருந்து, நேரே அவனது வீட்டுக்கு சென்று சில வேலைகளை முடித்த பின், சுமார் ஏழரை மணிக்கு கிளம்பியவன் நேராக சென்றது தேஜஸ்வினியின் வீட்டுக்கு.

அவளது வீட்டில் வேலையாட்கள் சென்றிருக்க, சமையல் செய்யும் மாமி கூடத்தில் அமர்ந்து பக்தி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். வாட்ச் மேன், இவனதுப் பார்த்ததும் காவல் துறையைச் சேர்ந்தவன் என்பது தெரிந்து, மரியாதையாக விசாரித்தான். “அவங்க அடுத்த ப்ரோக்ராம்-ல CM தான் சீப் கெஸ்ட், பாதுகாப்பு விஷயமா பேச வந்திருக்கேன், போலாமா?”, என்று தனஞ்செயன் கூற.. “ஓகே சார்”, என்று செக்யூரிட்டி உள்ளே அனுப்பினான்.

lawn கடந்து, லாபியையும் தாண்டி வீட்டின் தலை வாசலுக்கு வந்த தனா, அதன் கதவை  ‘டொக் டொக் டொக்’ என வேகமாக சப்தம் செய்ய.. பித்தளைப் பூண் போட்ட ஆன்ட்டிக் பீஸ் கதவு அதிர்ந்தது.  சித்தி BP மாத்திரை போட்டு எட்டு மணிக்கே அவரது அறையில் AC போட்டு தூங்கி இருக்க,  கூடத்தில் இருந்து வந்த மாமி அவனைப் பார்த்து, “யார் நீங்க? என்ன வேணும்?”, என்றார்.

“தேஜுவைக் கூப்பிடுங்கம்மா”, என்றான் இறுக்கமாக இருந்த தனஞ்செயன்.

வழக்கமாக தேஜஸ்வினியை அனைவரும் மேம், சின்னம்மா என்றோ பாப்பா என்றோதான் அழைப்பர். இப்படி  சுருக்கி கூப்பிடுகிறானே? என்ற எண்ணம் எழ, “ம்ம். நீங்க..?”, என்று மாமி கேட்கும் போதே அங்கே தனாவின் பேச்சுக் குரலில் அவளது அறையிலிருந்து வெளியே வந்திருந்தாள் தேஜஸ்வினி.

தேஜஸ்வினி, “என்ன வேணும்?”, என்று சற்றே அதட்டலாக கேட்க…

“எங்க ஓட பாக்கற?, தப்பிச்சு போலாம்னு பாக்கறியா?”, என்று தனஞ்செயன் நேரிடையாக தேஜுவிடமே பேசத்துவங்க, மாமி  இவர்களிருவரையும் மாறி மாறி பார்த்தார்.

அவர் பார்ப்பதை உணர்ந்த தேஜு, “மாமி, ரெண்டு பில்டர் காபி போட்டு எடுத்திட்டு வாங்க, ப்ளீஸ்.”, என்றாள். அவர் குழப்பரேகையோடு சமையலுள் செல்ல..

“யார் ஓடறா? எங்க ஓடறோம்? வேலையிருக்கு… போறேன், பை தி வே, என்னோட whereabouts பத்தி ஊர்ல இருக்கிறவங்களுக்கெல்லாம் சொல்லனும்னு ஒன்னும் அவசியமில்லையே?”, என்று விட்டு, “அது சரி நீங்க எங்க இங்க? ட்ரைவர் வேல பாக்க ரெடின்னு சொல்ல வந்திருக்கீங்க போல ?”, மிக அலட்சியமான கோணல் சிரிப்புடன் தனாவைக் கோபப்படுத்தவேண்டும் என்று கேட்டாள்.

இதற்கெல்லாம் நான் அசருவேனா என்பதுபோல், ஒற்றைப் புருவம் தூக்கி, “ஆமா.. ரெடின்னு தான் சொல்ல வந்தேன். கூடவே, கூஜா தூக்கவும் ரெடின்னு சொல்றேன். “, என்றான் தனஞ்செயன் அவளைவிட மிதப்பாக..

தனாவின் பதிலில் தேஜஸ்வினி, “ஆங்.. “, என்று சில நொடி திகைத்து விழித்து.., சட்டென சுதாரித்து.. “ஏன் வேறெந்த பணக்காரியும் கிடைக்கலையா?” என்றாள் சினமாக..

“அதெல்லாம் கிடைப்பாங்க.. நான்தான் தேஜு தவிர வேற யாரும் வேனாம்-னு சொல்லிட்டேன் “,

“ஏனோ?”

“அதான் உனக்கே தெரியுமே, எவ்ளோ சொத்து? சும்ம்மா வருதுன்னா ட்ரைவர் வேல என்ன கால் பிடிக்கிற வேல கூட செய்யலாம்னு வந்துட்டேன்”

இப்போது என்ன செய்வது? அவமானப்படுத்தும்படி பேசியும் கோபப்படக்காணோமே? தன்மான சிங்கம் கால் பிடிக்கவும்  ரெடியாமே? இவளை மேலே யோசிக்க விடாமல் தனஞ்செயன் தேஜுவை சுவாரசியமாக உரிமைpபார்வை பார்த்திருந்தான்.

எனவே வாய்க்கு வந்தபடி, “எனக்கு பிடிக்கனுமில்ல?”, எடக்காக தேஜு கேட்க..

குறுநகையுடன், “என் மூஞ்சியைப் பாத்து சொல்லு, பிடிக்கலைன்னு”, என்று தனா சவால் விடுக்க. வெடுக்கென தலையைத் திருப்பி, நேர்ப்பார்வை பார்த்து, “பிடிக்கல”, என்றாள் தேஜஸ்வினி.

கோபம் மெல்ல எட்டிப்பார்க்க, தனது பிஸ்டலை வெளியே எடுத்து, தேஜுவின் அருகே வந்து அவள் கையில் கொடுத்து, “பாயிண்ட் பிளாங்க்-ல நிக்கறேன், கண்ணை மூடிட்டு சுடலாம், உனக்கு ஒன்ஸ் பார் ஆல் என் தொல்லை இருக்காது”, என்று அவள் கையிலிருந்த துப்பாக்கியை தனது நெற்றிப் பொட்டில் வைத்துக் கூற… “ஜெய், என்ன பண்றீங்க நீங்க? துப்பாக்கில விளையாடறீங்க அறிவில்ல உங்களுக்கு?”, என்று தேஜு பதற்றமாக தனது கையை கீழே இறக்கினாள்.

ஒருவர் விடும் மூச்சு அடுத்தவர் மேல் எனும் வண்ணம் நெருக்கமாக நின்றனர். இருவரின் கையிலிருந்த துப்பாக்கியை அருகிலிருந்த மேஜையில் வைத்துவிட்டு, அவளது கையைப் பிடித்து, “உன்னால முடியாது-னு எனக்கு தெரியும். முடிஞ்சிருந்தா என் ரூம்ல மைக் வச்சதுக்கு பதிலா நீ தயாரிக்கிற பொம்மைய வச்சிருப்ப”, என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

முகமே கண்ணானதுபோல அதிர்ச்சியில் உறைந்த தேஜுவின் கண்கள் மைக்ரோ நொடி பய பாவம் காண்பித்து, அது அப்படியே ஆச்சர்யம் ஆகி, பின் கேள்வி பாவனையைக் காண்பித்தது. “எல்லாம் தெரிஞ்சுதான் கல்யாணத்துக்கு கேக்கறீங்களா?”, என்றாள் தேஜு.

நெருக்கமாக நின்ற அவளது முகத்தின் பாவத்தில் தனது கட்டுப்பாடுகள் தளர்வதை அறிந்த தனஞ்செயன், உடல் விரைத்தான். அவன் கையில் இருந்த அவளது கையை ஒரு முறை இறுக்கிப் பிடித்து விட்டவன், “ஐஞ்சு நிமிஷம் வெயிட் பண்றேன், பேசணும், சித்திக்கிட்ட சொல்லிட்டு வா”, என்றான்.

தனஞ்செயனை நிமிர்ந்து பார்க்க, எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட்டு அவன் மேல் சாய்ந்து கொள்ளத் துடித்த உடலின் ஒவ்வொரு அணுவையும் கட்டுப்படுத்தி நின்றாள். அவன் இதயத்தின் லப் டப் அவளுக்கு கேட்டது. அவனது அருகாமையிலேயே தேஜஸ்வினிக்கு அவளது மனதில் அலைப்புறுதல்கள் நின்று ஒருவித அமைதி வந்ததென்னவோ நிஜம். ஆனால், தனஞ்செயன் கேட்பது ??? சாத்தியமே இல்லாத ஒன்றல்லவா?

என்னை விட்டுவிடேன்.. என்ற மன்றாடுதலோடு, “சித்தி  தூங்கியிருப்பாங்க.. “, என்று தயங்க..

அதற்குள் செறுமியவாறே காஃபியோடு மாமி  வந்துவிட, “சரி, நானே போய் உன்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு அத்தைகிட்ட சொல்லிட்டு வர்றேன் , அவங்க ரூம் எங்க?”, என்று நிதாநாமாக ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு காஃபியை பருகினான்.

தேஜஸ்வினியும் ஒரு கோப்பையை எடுத்டுக கொண்டு, ‘என்னது இவனது வீட்டுக்கு போவதா? முகம் வியர்க்க ஆரம்பித்தது. “நோ நோ, நான்.. நானே போயி அத்தைகிட்ட சொல்றேன்”, என்று உளறினாள்.

“ஹ ஹ அவங்க உனக்கு சித்தி, நோ நாந்தான் சொல்லப்போறேன், ஆனா அதுக்கு முன்னாடி என் கண் முன்னாடி நாளைக்கு புக் பண்ணியிருக்கார் டிக்கெட்ட எல்லாம் கான்சல் பண்ணு”, என்றான் அதிகாரமாக.

“ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க, இன்னும் ஒரு ஷாக் லேர்ந்தே நான் வெளில வரல, நாம நிதானமா பேசி… “

பானத்தை பருகியபடி, “ம்ம். ம்ம். இப்போ பேசத்தான் போறோம், மெதுவா நாளைக்கு எங்கம்மாகிட்ட சொல்லிக்கலாம் ஓகே”, என்று கப்-பை கீழே வைத்தான். வேறு வழியின்றி தேஜூ அவளது சித்தியிடம் தகவல் தெரிவித்துவிட்டு வர, அவரும் தூக்க கலக்கத்துடன் வெளியே வந்தார்.

“சித்தி, இவங்க சௌடாம்பிகை பாட்டியோட பேரன்”, என்று அறிமுகம் செய்து வைத்தாள். அப்போதுதான் ‘அட, சொர்ணாக்கா ரொம்ப பேமஸ் போல?’ என்று தனா நினைத்தான்.

சித்தி, இருவறையும் மாறி மாறி பார்த்தவர், “இருட்டு நேரத்துல..”, என்று ஆரம்பித்து,”தப்பான எண்ணத்துடன் வந்திருந்தால் என்னை கண்டதும் ஓடியல்லவா இருப்பான்?”, என்று யோசனை வர, “சீக்கிரமா போயிட்டு சீக்கிரமா வாங்க”, என்றார்.

முகமெல்லாம் பல்லாக, “இங்க பக்கத்துல பீச்-ல சின்ன வாக் தான் போறேன் அத்த”, என்றான் தனஞ்செயன். அவனது அத்தைஎனும் விளிம்பில் சித்தி விஜயலக்ஷ்மியின் முகம் பளிச்சென பிரகாசமாக, தேஜு காட்டத்துடன் வெளியே சென்றாள்.

Advertisement