Advertisement

அத்தியாயம் – 11

“அடக்கடவுளே!! உங்க ரெண்டு பேர் ஈகோ-வுக்கு நடுல நான்-ன்னா மாட்டின்டு முழிக்கிறேன். ஈஸ்வரா.. செத்த கருணை காட்டுப்பா”, ன்னு பகீரதன் புலம்பி தள்ளிட்டான்.  சிவன் தலைல இருந்த கங்கையும், “என்ன மன்னிச்சுடுங்கோ, உங்கள தப்பா கணிச்சுட்டேன்”ன்னு மனசார மன்னிப்பு கேட்டா…  சரி சரி மன்னிப்பெல்லாம் வேண்டாம், இத இப்படியே மறந்துடுவோம்-ன்னு சொல்லிட்டு, தலைலேர்ந்து ரெண்டு பிரி முடிய விலக்கி.. கங்கை பூமில விழறாமாதிரி பண்ணினாராம், லோக நாயகன்.

கங்கையும் ஜல் ஜல் -ன்னு மலைல விழுந்து பகீரதன் தேர் போற பாதைலேயே பின்னாடி போனா. நடுல ஒரு முனிவரோட ஆஸ்ரமம் வந்தது, அது தெரியாம கங்கை அந்த ஆஸ்ரமத்தை அடிச்சிண்டு போயிட்டா. அந்த ஆஸ்ரமத்தில இருந்த முனிவருக்கு சுரீர்-னு கோபம் வந்துடுத்து. ஆஹா ஆஸ்ரமத்தை தாண்டி போறது கூட தெரிலையா-ன்னு, உன்னை அப்படியே பிடிச்சு குடிச்சிடறேன் பாரு-ன்னு ஒரு மாத்திரம் சொல்லி, கங்கையை அள்ளி முழுங்கிட்டார். 

‘என்ன கங்கம்மா சத்தத்தையே காணோம்?’ -ன்னு முன்னால போன பகீரதன் அவனோட தேர்லேர்ந்து திரும்பி பாக்கறான். ஐயோ கிணத்தைக் கானோங்கிறா மாதிரி கங்கையை காணோம். அவ்.. கிட்டத்தட்ட சோர்ந்து போய் உக்காந்துட்டான். அவனைப் பார்த்த ஜஹ்நு முனிவர், ஞானதிருஷ்டில பாத்து அவன் கங்கையை கூட்டிண்டு வர்றத்துக்கு பட்ட  கஷ்டமெல்லாம் தெரிஞ்சிண்டார். 

அவனுக்கு இரக்கப்பட்டு, ஜஹ்நு ரிஷி தன் காதுலேர்ந்து கங்கையை வெளியே விட்டார்.  மறுபடியும் கங்கை பிரவாகமா வெளிப்பட்டது. ஜஹ்நு முனிவரோட காது வழியா வெளிப்பட்டதால, ‘ஜஹ்நவீ’ னும் கங்கைக்கு  இன்னொரு பேரும் வச்சுட்டா.” 

+++++++++++++++++++++

மதுரையில் அந்த பிரபலமான கொரியர் அலுவலகத்தில் காலை ஒன்பது மணிக்கு தனஞ்செயன் ஆஜர் ஆகியிருந்தான். அந்த தேதியில் குறிப்பிட்ட பொம்மை பார்சலை அனுப்பியவர் யார் என்ற விபரங்கள் தெரியுமா?, என்று அங்கு குழுமி இருந்த பணியாளர்களிடம் கேட்க.. அவர்கள் திருதிருவென முழித்தனர்.

“ஸார், ஒரு நாளைக்கு ஏகப்பட்ட புக்கிங் வரும், இது மெயின் ஆபிஸ், அதுவும் நீங்க சொன்ன தேதின்னு பாத்தா, திருவிழா நேரமா இருக்கும். அப்போ மட்டும் வெளியூர்லேர்ந்து கிட்டத்தட்ட ஐஞ்சு லட்சம் பேருக்கு மேல வருவாங்க. கொரியர் புக் பண்ணின ஆளு  இந்த ஊருன்னாலே கண்டு பிடிக்கிறது கஷ்டம், இதுல வேற யாராவதா இருந்தா ரொம்ப கஷ்டம் சார்.”, அந்த அலுவலக நிர்வாகி விளக்கமாக கூறினார்.

“இங்க CCTV ஏதாவது…. “,

“ஸார், அதெல்லாம் இன்னும் வைக்கல சார்.”, அவர் குரலில் கொஞ்சம் காட்டம் இருந்ததோ?.

“சரி அன்னிக்கு வித்யாசமா ஏதாவது.. யாரயாவது பாத்தீங்களா?, ஓரு பர்தா போட்ட லேடி? கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க. இது ரொம்ப முக்கியமான தடயம், “, என்று தனஞ்செயன் மீண்டும் துருவி கேட்க…

டெலிவரி செய்யும் ஆள், அருகே வந்து, “ஸார், ஸார்..  நீங்க சொல்ற தேதி, என் என்னோட முத கல்யாணநாளு.  அன்னிக்கு நான், பார்சலை  லேட்டா பிக்அப் பண்ணிட்டு வந்தேன். அப்போ ஒரு பர்தா போட்ட லேடி.. நிறை மாசமா இருந்துச்சு, அவங்க மேல இடிச்சிக்க வந்து டக்குனு நின்னுட்டேன். அப்போ, ஒரு பாக்கிங் கீழ விழுந்துச்சா, குனிஞ்சு எடுக்கும்போது பாத்தேன் ஸார்.. அவங்க கைல ஒரு பிளாஸ்டிக் கவர் ஆங்.., அப்பறம்..  அந்த கைல ர போட்ட மோதிரம் போட்டிருந்தாங்க சார்.” என்று விபரமாக கூற..

கொலைகாரனின் நூல் முனை பிடிபட ஆரம்பிக்க பரபரப்பான தனஞ்செயன், “அவங்க ரொம்ப ஹையிட்டா இருந்தாங்களா?” என்று கேட்க…

“இல்ல சார் நார்மல் உயரம்தான் இருந்ததாங்க”

“ஓ…”, யோசனையாக, “மா..சமா இருந்தாங்களா?”, என்றான்.

“ஆமா சார், நான் எதுக்க வந்ததுல கொஞ்சம் பயந்துட்டாங்க போல, வயித்தை அணைச்சா மாதிரி புடிச்சிகிட்டாங்க அந்தம்மா”, என்றான் டெலிவரி ஆள்.

“ஆமா சார், இப்போ ஞாபகம் வருது, அவங்க கொண்டுவந்தது கொஞ்சம் பெரிய பார்சல், ஹைதிராபாத்க்கு புக் பண்ணினாங்க, அந்தம்மா மாசமா தான் இருந்தாங்க. ஆனா, மோதிரமெலாம் நா பாக்கல சார்”, சொன்னது கவுண்டரில் பார்சலைப் புக்கிங் செய்பவர்.

பொம்மை பார்சல் அனுப்பியவன் ஆணா ? பெண்ணா?  பர்தா-வில் இருந்தது யார்? உயரமானவனா? சாதாரண உயரத்தில் இருப்பவனா? கர்பவதியா? இல்லையா? போட்டிருந்தது ஆம்பளை ஷூ வா ? ர ன்னு போட்ட மோதரமா? யோசித்தவனுக்கு கண்களைக் கட்டியது.

“அதென்ன ர போட்ட மோதிரம்?”, தெரிவதற்காக மேலும் குடைந்தான் .

“அது சார், ரொம்ப ஸ்டைலா நல்லா சாய்ஞ்சா மாதிரி ர ன்னு போட்டிருந்தது. அதுல எனாமல் பெயின்டிங் வேற பண்ணி இருந்துச்சா? , என் பேரு ரஞ்சித்து பாருங்க. அதான், சட்டுனு மனசுல நின்னுடுச்சு. இந்த வருஷம் போனஸ் வந்தா அப்படித்தான் வாங்கணும்னு நினைச்சிட்டிருக்கேன் சார்”

“ம். ம்ஹும்.. சரி இந்த பேப்பர்ல அதே மாதிரி எழுதி காமிக்க முடியுமா?”

“தோ ஸார், வரைஞ்சே காமிக்கறேன், நான் நல்லா வரைவேன் சார்”, என்று குதூகலமாக சொல்லி மட மடவென ஒரு பேப்பரில் வரைந்து காண்பித்தான்.

பேப்பரை மடித்து பாக்கெட்டில் வைத்து, “சரி வேற ஏதாவது தகவல் தெரிஞ்சா எனக்கு போன் பண்ணுங்க “, என்ற தனஞ்செயன், அவனது எண்ணை அனைவர்க்கும் பகிர்ந்தான்..

பதிவு செய்திருந்த ஹோட்டல் அறைக்கு சென்றான். மதிய சாப்பாட்டை முடித்து விட்டு, தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க.. சென்ற வருட டிசம்பர் மாத சங்கீத திருவிழா நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. தேஜஸ்வினி பாடிக் கொண்டிருந்தாள். நேயர் விருப்பம் போலும்.., உமையம்மை பார்வதியை நினைத்து,

என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே

என் அன்னையே உமையே– என்னை நீ (என்ன)

சின்ன வயது முதல் உன்னையே நம்பினேன்

சினந்து என்னை அடித்தாலும் பரிந்து என்னை அணைத்தாலும்….(என்ன)

முன்வினையால் இன்ப துன்பங்கள் விளைந்திட

மூடமதி கொண்டுன்னை நோவது என் பேதமை

என் விதியால் இடராயிரம் சூழினும்

எல்லாம் உன் திருவிளையாடல் என்று எண்ணி இனி…(என்ன)

எத்தனை உணர்ந்து பாடினாளோ?, குரல் இழைந்தது. நேரே அன்னை உமையிடம் சென்று விட்டாள் போலும்? பாடுபவளின் கண்களில் நீர் மெல்லிய நீர் படலம் திரையிட்டது. அத்தனை மக்கள் கூட்டம் இருந்தும் ஊசி போட்டாலும் கேட்கும் நிசப்தம் அங்கே. வேகமாக மூச்சு விட்டால் பாடலில் சுவை கெட்டுவிடுமோ மக்கள் அனைவரும் அமைதி காத்தனரோ? இவளது தெய்வீகக் குரல் மற்றும் அதன் பாவம் அவர்கள் அனைவரையும் கட்டி வைத்திருந்தது.

தனஞ்செயனுக்கு தோன்றியதெல்லாம் ஒன்றுதான். நேரே அவளிடம் சென்று “என்னடி உன் பிரச்சனை? இத்தனை உருக்கமா விதியை நொந்து கடவுளை துணைன்னு கூப்பிடற அளவுக்கு?, நான் ஒருத்தன் குத்துக் கல்லு மாதிரி இருக்கேன்ல்ல? சொல்லு”, என்று உலுக்கி எடுக்கத் தோன்றியது.

தேஜஸ்வினி பாடி முடித்ததும் அங்கே அரங்கம் அதிர, அவளது முகம் எந்தவொரு ஆர்ப்பரிப்பு இல்லாமல் நிர்மலமாக இருந்தது. அவள் முகம் அப்போது அவளது பெயருக்கேற்றாற்போல் ஒளிர்ந்தது. தனஞ்செயனுக்கு உடனே அவளைக் காணவேண்டும், அவளது குரலை கேட்க வேண்டும்போல மனம் உந்த, அலைபேசியை எடுத்து அவளது எண்ணுக்கு அழைத்தான். [அவளது அலைபேசி எண்ணை சபா நிர்வாகி என்று கூறி அவளது அலுவலகத்தில் வாங்கி இருந்தான்]

“ஹலோ”, என்று தேஜு விளிக்க..

கண்களை மூடியபடி, அவள் அருகிலிருப்பதுபோல நினைத்து, “தேஜு … “, என்றான் கிசுகிசுப்பாக உள்ளத்திலிருந்து.

“ஹலோ யார் நீங்க? ஒழுங்கா முழு பேரை சொல்லி கூப்பிடுங்க, என்ன வேணும் உங்களுக்கு?”, என்று சொல்ல, கோபத்தையும் நிதானமாக கையாளுகிறாளே என்றுதான் தோன்றியது தனஞ்செயனுக்கு. ஆனால் மறுமுனையிலிருந்த தேஜு முகம் வியர்த்திருந்தது இவனுக்கு தெரியாதல்லவா?. தனஞ்செயனின் குரல் அவளுக்குத் தெரியாதா என்ன? முயன்று தனது குரலை படபடப்பு தெரியாதவாறு கடினமாக்கி அவனிடம்  பேசினாள்.

“நீ வேணும்?”, ஆழ்ந்த குரலில் தனஞ்செயன் பேச…

“ஹேய்.. யார்ர் ..”, என்று தேஜு கேட்க ஆரம்பிக்க, தனஞ்செயன் குறுக்கிட்டு, “ஷ். யாரு பேசறதுன்னு உனக்கு தெரியும். சும்மா நடிக்காம பேசு”, என்றான் தனஞ்செயன் உரிமையாக.

“நீங்க யாருன்னு தெரில, எனக்கு இதுக்கெல்லாம் நேரமுமில்ல, அடுத்த முறை கால் வந்தா போலீசுக்கு ரிப்போர்ட் பண்ணுவேன்”

மெதுவாக சிரித்து, “ஓ…ஹ். போலீஸ்? போயேன், நான் வேணா உங்க வீட்டுக்கிட்ட இருக்கற ஸ்டேஷன் நம்பர் தரட்டுமா?”, என்றான் இன்னும் இலகுவாக.

“ம்ச். ரிடிக்குலஸ்”

“சரி அத விடு, என்ன செய்தாலும் ன்னு ஒரு பாட்டு பாடினியே?, அதோட ஃபர்ஸ்ட் லைன் மட்டும் இப்போ எனக்காக பாடேன்”

“வ்..வாட்?”

“ப்ளீஸ் தேஜு எனக்கே எனக்காக ஒரே ஒரு லைன்”,  என்று தனா கேட்க..

மறுமுனையில் தேஜு  ‘டொக்’ என்று லைனைக் கட் செய்ததில், இவன் காது அதிர்ந்தது. 

அன்று தேஜுவுடன் பேசிய பின், அவளை நேரில் பார்க்கவேண்டும் என்று அவன் நினைக்கக் கூட இல்லை. ஆனால், எந்த நேரத்திலும் அவள் நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை. இவனே முனைந்து வேறு ஏதும் செய்தாலும்..  அதிலும் அவள் நினைவு வரும்படி ஏதேனும் ஒன்று வருகிறது. தற்சயலாகத்தான் அனைத்தும் நிகழ்கிறது, ஆனால்… ஏன் என்றுதான் தெரியவில்லை.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சென்ற வருடத்தில் நடை பெற்ற இசை நிகழ்ச்சி முடியும்வரை பார்த்திருந்தான். பின் அவனது மடிக்கணினியுடன் அமர்ந்தான்.  ‘ ர ‘, குறித்து ஆராய்ச்சி. அந்த பெயரில் ஆரம்பிக்கும் குற்றவாளிகள், தீவிர வாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், என பலவாக… அப்படியே நேரம் போக.. இரவானது.. வெகு நேரமாக கணினித் திரையை பார்த்ததாலோ என்னமோ. கண்கள் எரிய ஆரம்பிக்க… தலையனைக்கு சற்று மேலே கணினியை வைத்து, கண்களை மூடி படுத்துக் கொண்டான்.

அப்படியே உறக்கம் தழுவ.., எஸ்ஸார் திடீரென ‘டீஜே ‘, என்று மேலிருந்து அழைப்பது போல் இருக்க, நிமிர்த்தவன் கண்களில்,  ர என்று கொரியர் அலுவலகத்தின் ரஞ்சித்  எழுதிக் கொடுத்த பேப்பர் தெரிய… தூக்க கலக்கத்தில் அது மங்கலாகத் தெரிந்தது.  அது வேறு ஏதோ ஒரு வடிவமோ எழுத்தினைப் போலோ தெரிய…, கண்களை கசக்கியவாறு… தமிழ் ர என்ற உருவகத்தை மனதில் இருந்து தள்ளி வைத்து, அவ்வெழுத்தை புதிதாக பார்ப்பது போல பார்த்தான்.

இன்னமும் புரியாததால்… வடிவத்தை உள்ளீடாக கொடுத்து தேடும் செயலியான இமேஜஸ்.கூகுள.காம் சென்று, ரஞ்சித் எழுதிக்கொடுத்த வடிவத்தை போட்டோ எடுத்து தேடு பொத்தானை அமுக்க… வந்த பதிலில் தடுமாறித்தான் போனான் தனஞ்செயன்.

அதன் தேடல் பதில்களின் முதல் பதிவு… சில்லர் எனப்படும் ஆங்கில  ஃபாண்ட்-ல் எழுதப்பட்ட டீஜே  அது என்றது.

பார்த்தவனுக்கு சகலமும் அதிர்ந்தது. நானா டீஜே ?

**************************

“அம்மா, நாங்க மாநகராட்சிலேர்ந்து வர்றோம், உங்க வீட்ல இருக்கறவங்க பேரு வயசு, அவங்க ஆதார் நம்பரெல்லாம் சொல்லறீங்களா?”, என்று கரகர கட்டைக் குரலில் ஒரு இஸ்லாமிய உடை அணிந்த பெண் கேட்க, 

“சொல்றேன்மா எழுதிக்கோங்க”, என்றார் லீலாவதி. 

விபரங்களை சேகரித்ததும், தயங்கி தயங்கி மிக மெதுவாக,  “அம்மாதப்பா எடுக்கலைன்னா, நாஃப்க்கின் மாத்தணும், கொஞ்சம் ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிக்கலாமா?”, என்று சன்னமான குரலில் கேட்க, 

லீலாவதி வேலை பார்க்கும் பெண்களுக்கு இது ஒரு அஸௌவுகரியம் என்று நினைத்து, “அதுக்கென்னமா தாராளமா போகலாம், உள்ள வா”, என வாயிற்கதவை விரியத் திறந்தார். 

“ரொம்ப தேங்க்ஸ்மா, வெய்யில் அதிகமா?, அதான் ரொம்ப களைப்பா இருக்கு, கொஞ்சம் தண்ணீ தரீங்களா?”, என்று கேட்டு வீட்டின் உள்ளே நுழைந்தது.

“ம்ம். அதான் பாத்ரூம், போ”, என்று கழிவறையைக் காட்டிவிட்டு விட்டு லீலாவதி சமையலறைக்குப் போக, மின்னலென நுழைந்த அவ்வுருவம் இரண்டு படுக்கையறைகளிலும் காந்தத்துடன் இருந்த கேக்கும் கருவியை [மைக்] பொருத்தியது.  ஒரு படுக்கையறையில் இரும்பு கட்டில் இருக்க அடியில் ஒட்டி வைத்தது, மற்றொன்றில் மேஜையின் கீழ் இருந்த இரும்பு போல்டில் பொருத்தியது. சட்டென, பாத்ரூம் சென்று விட்டது. வெளியே வந்து ஹாலில் மாட்டியிருந்த தனஞ்செயனின் புகைப்படத்திற்கு பின் மைக் ஒட்ட வைத்து, கைகளை துடைக்கவும், லீலாவதி கையில் மோருடன் வரவும் சரியாக இருந்தது. 

“சூடுன்னு சொன்னியே? மோர் குடி. குளுமையா இருக்கும்”, என்று அவர் சொன்னதும் சின்னதாக ஒரு குற்ற உணர்வு வந்து போனது.  

Advertisement