Advertisement

அத்தியாயம் – 10

ஒரு மனுஷனுக்கு என்ன வேணா வரலாம் ஆனா, ஆணவம் மட்டும் வரவே கூடாது. அவாளோட ஆணவத்தை அடக்க பகவான் நட்-ட்டுனு ஒரு தட்டு தட்டுவார். இங்க.. கங்கையை, அதாவது  அதோட ஜல பிரவாகத்தை மொத்தத்தையும் தன்னோட ஜடாமுடில முடிஞ்சு வச்சுண்டார், கங்கை சுத்தறது சுத்தறது அவரோட தலை ஜடா முடில சுத்திண்டே தறது, என்னடா இது ? ஒரே இடத்துல மாட்டிண்டு இருக்கோம்னு கங்கை அங்கேயுமிங்கேயும் அல்லாடறா. ஓடிண்டே இருந்தவளோல்லியோ? ஒரே இடத்துல அதும் இருட்டா இருக்கவும் செத்த கிலி வந்தது, ஆஹா, நம்மள தலைல தாங்கிண்டு இருக்கற ஆள் லேசுப்பட்டவரில்லை-னு கங்கை புரிஞ்சிண்டா.

இதுக்கு நடுவுல, மலையடிவாரத்துல நின்னுன்டிருந்த பகீரதன், இப்போ வரும்.. இதோ வரும்ன்னு கங்கைக்காக காத்துண்டு இருக்க… கங்கைத்தண்ணீ கீழ வரவேயில்லை.. இதென்னடா சோதனை-ன்னு, போய் பாத்தா.. அங்க ஆகாசத்துலேர்ந்து சிவபெருமான் தலை வரைக்கும் வர்ற கங்கை, அவர் ஜடாமுடிலேர்ந்து கீழே விழவேயில்ல…  என்னப்பா  இப்…படி பண்றீங்களேப்பா ?-ன்னு ஈஸ்வரனைப் பாத்து பகீரதன் கேக்கறச்சே.. கங்கை என்னப்பத்தி கிண்டலா நினைச்சா.. அதான் என் ஷக்தி என்னன்னு கங்கம்மாக்கு காமிக்கிறேன்-ன்னு பதில் சொன்னாராம், ஈஸ்வரன்.

***************************

காலை எழுந்ததும், தனாவும் எஸ்ஸாரும் வேகமாக வீரையா வீட்டுக்கு கிளம்பினர். போகும் வழியில், தனஞ்செயன் எஸ்ஸாரிடம், “அந்த வீட்ல பக்ஸ் இருக்கா-ன்னு செக் பண்ணினாங்ககளா?”, எண்று கேட்டான்.

“யா நல்லா தரோவா பாத்துட்டாங்க. வீரய்யாவோட ரூம்-ல இருந்த ஊஞ்சல்-ல ஒரு பக் இருந்தது, அது வீரய்யா வீட்ல இருந்த வைஃபை யூஸ் பண்ணி-தான் தகவலை அனுப்பியிருக்கு. யாரோ நல்லா நோட்டம் விட்டிருக்காங்க.”

“ஆமா, ஒரு ஸ்பை காமெரா/இல்ல இங்க கிடைச்ச வாய்ஸ் ரெக்கார்டர், எல்லா நேரமுமா ரெக்கார்ட் பண்ணும்?, அப்போ பாட்டரி டிஸ்சார்ஜ் ஆய்டாது.?”

“சிஸ்டம் ஸ்டான்ட் பை -ல இருந்தா 150 லேர்ந்து 180 நாள் வரைக்கும் பாட்டரி லைப், மொத்தமா கிட்டத்தட்ட நானூறு மணி நேரம் ரெக்கார்ட் பண்ற ரெகார்டர்லாம் இருக்கு,   அமேசான்-ல கூவி கூவி விக்கறான்.”

“ஓஹ்…, இது நல்லா வசதியா போச்சு. எந்த நாட்ல வேணா உக்காந்துகிட்டு யார் வர்றா, யாரு போறான்னு தெரிஞ்சிக்கலாம், ஆடியோ வேணும்னா அதையும் கேக்கலாம்.”, தனஞ்செயன் பகிர..

“ஹ்ம்ம்.. முதல்லெல்லாம் , பகல்ல பக்கம் பாத்து பேசு, ராத்திரில அதுவும் பேசாதே-ன்னு சொல்லுவாங்க, இப்போ என்னடான்னா… பகலோ ராத்திரியே… சுத்தி பக் இருக்கா செக் பண்ணி பாத்துட்டு பேசு-ன்னு, சொல்ற காலமா போச்சு”, இது எஸ்ஸார்.

“சரி, அந்த ஊஞ்சல் எங்கேயிருந்து வாங்கினதுன்னு பாத்தியா?”

“அத பாக்கமலா?, ரொம்ப பெரிய பர்னிச்சர் கடை, VVIP மட்டும்தான் உள்ள போக முடியும், அங்க எதாவது வாங்கறதுன்னா கண்டிப்பா லட்சாதிபதியா இருக்கனும்”, எஸ்ஸார்.

“ஓ. அப்போ கண்டிப்ப்பா CCTV இருந்திருக்குமே?”

“யா யா, அங்க போனபோது இதோ காப்பி பண்ணி எடுத்திட்டே வந்திட்டேன். இவங்க வாங்கும்போது கூட யார் இருந்தாங்கன்னு பாத்ததுல, ஒரு ஜுவல் ஷாப் ஓனர் அவங்க பேமிலி, பொண்ணு கல்யாணம் பண்ணி போற இடத்துல என்னென்ன பர்னிச்சர் வைக்கலாம்-னு யோசிச்சு இங்க பாத்துட்டு போக வந்திருந்தாங்க. இவங்களைத் தவிர, ஒரு முஸ்லீம் லேடி ரெண்டு வெளிநாட்டுக்காரங்க, இருந்திருக்காங்க, இந்தா அந்த ஃபுட்டேஜை நீயே பாரு”, என்று தனது செல்போனை தனஞ்செயனிடம் கொடுத்தான்.

கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் ஓடிய பதிவு அது. அந்த அறைகலன்கள் விற்கும் அங்காடியில், வீரய்யா மனைவியுடன் உல் நுழைவதில் இருந்து, வெளியேறும்வரை அனைத்தும் இருந்தது. இன்னமும் சொல்லப்போனால், ஒரு மணி நேரப்பதிவில் வீரய்யா இருந்தது கால் மணி நேரம் கூட இருக்காது. ஊஞ்சலை வீரய்யா வாங்க சம்மதம் சொன்ன பிறகு, அந்த வெளிநாட்டவர்கள் அதை இரண்டு மூண்டு முறை தடவிப் பார்த்து அதன் கலைநயத்தைக் கண்டு வியந்தது தெரிந்தது. பின், அதேபோல, அந்த முஸ்லீம் பெண்மணியும் அவர்களை மாதிரியே வியந்த பார்வையுடன் ஊஞ்சலைத் தடவிப் பார்த்தார். முகபாவம் தெரியவில்லை ஆனால், தடவுவது தரம் பார்ப்பது போலத்தான் இருந்தது.

மீண்டும் வீரய்யா இருந்த பதிவுகளை மட்டும் திரும்பத்திரும்ப பார்த்த தனஞ்செயன், ஒரு முடிவுக்கும் வர இயலாதவனாக இருந்தான். ஏனென்றால், அந்த ஊஞ்சல் அந்த கடையை விட்டு நேராக வீரய்யாவின் வீட்டிற்குத் தான் வந்தது,  அதை அவன் வீட்டில் பொருத்தியது, furniture mart -ல் வேலை பார்க்கும் நம்பகமான ஆள் மேற்பார்வையில் நடந்தது. அவர், ஒருவகையில் முதலாளிகளுக்கு சொந்தக்காரரும் கூட. வீட்டிலோ வீரய்யா,அவன் மனைவி,

மச்சான் குடும்பம், அவனது மகன், என ஆட்கள் சந்தடி நிறைந்திருந்தது. வேலையாட்களும் நீண்ட காலமாக பணிபுரிபவர்கள் அதனால், சதேகத்திற்கு இடமளிக்க இயலாதவர்கள், என்று தனா, சிந்தனையில் இருக்க..

வீரய்யா வீடு வந்திருந்தது. தனஞ்செயன், வீட்டினை  ஒருமுறை நன்றாக சுற்றி பார்த்துவிட்டு, வீட்டிலிருந்தோரை.. அங்கு வேலையில் இருப்போரை அனைவரையும் நோட்டமிட்டான். இறந்த வீரய்யா-வுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான். அப்பிள்ளை பிழிய பிழிய அழுவதை கண்டு இவனுக்கே மனம் பாரமானது. இறந்தவன் கெட்ட வழியில் சென்றவன்தான், ஆனாலும் அவனும் பிள்ளைக்கு தகப்பனன்றோ? வருத்தத்தில் இருக்கும் குடும்பத்தாரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து, வேலையாட்கள் பக்கம் கவனம் செலுத்தினான்.

அவர்கள் அனைவர் கண்களிலும், எஜமான விசுவாசம் மற்றும், நிஜமான சோகம் இருந்தது.மொத்தம் நான்கு பேர் இருந்தனர். இரு பெண்கள், இருவர் ஆண்கள். தோட்ட வேலை, மேல் வேலை செய்யவென ஒருவன், மனைவி வெளியே செல்லும்போது, பிள்ளையை தான் இல்லாதபோது பள்ளியில்  விட்டு கூட்டி வர காரொட்டி ஒருவன், அவனே வங்கி செல்வது, வீடு மராமத்து பணிகள் ஏதாவது இருந்தால் அதை, தகுந்த ஆட்களை கூட்டி வந்து சரிசெய்ய மேற்பார்வையிடுவது என்றிருந்தான். பெண்களில் ஒருவர் சமையல் வேலை கவனிக்க.. இன்னொருவர் வீட்டை சுத்தம் செய்பவர். இவர்கள் தவிர காவலாளிகள் இருவர், பகல் இரவு என, மாறி மாறி வருவர். இவர்கள் இருவரும் வீட்டுக்குள் வருவதில்லை.

அங்கு குழுமி இருந்தவர்களுள் ஒருவரான, சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியை கூப்பிட்டு ‘இந்த வீட்டில் அவரது பனி என்ன ? ‘,  என்று கேட்டான். அதற்கு அவர், வீடு கூட்டி துடைத்து சுத்தம் செய்வதாக கூறினார். கொலை நடந்த அறைக்கு கூட்டிச் சென்று, இந்த மேஜையில் என்னெல்லாம் இருந்துச்சு தெரியுமா உங்களுக்கு?, என்று கேட்க.. ‘நல்லா  தெரியுமே,  பென் ஸ்டண்ட், சின்ன கத்திரிகோல், ரெண்டு பேப்பர் வெயிட் , குட்டியா ஒட்டிக்கிறா மாதிரி பசை இருக்கிற ஒரு நோட், அப்பறம் , பெரிய மாடர்ன் ஆர்ட் மாதிரி ஒரு பொம்மை.. எந்த பக்கம் திருப்பினாலும், வேற வேற உருவம் வர்ற மாதிரி, அது எங்கம்மாவோட (வீரய்யா மனைவி) பிரெண்டு அனுப்பினது. முழங்கை உயரம் இருக்கும். பாக்க அத்தனை அழகா இருக்கும், இப்போ உடைஞ்சு போச்சே?’, நீளமாக பேசி விசனப்பட்டார்.

“அந்த ஒரு பொம்மை மட்டும்தான் இருந்ததா? “

“குட்டியா ஒரு சாயிபாபா படம் இருக்கும்ங்க “

“அவ்ளோதானா?”

“ஆமாங்க ஸாரு”,

“சரி போயி வேலைய பாருங்க… தேங்க்ஸ்”

அதற்குள் சமையல் செய்பவர்.., அனைவருக்கும் காபி எடுத்து வந்தார். சற்று வித்தியாசமாக பழைய கால வழக்கம் போல, டபரா தம்பளரில், காஃபி வந்தது, இக்கால வழக்கம் கப் அண்ட் சாசர் தானே?

காஃபி குடித்து முடித்ததும்.. தம்பளர்களை எடுக்க அவர் வர, க்ளக் க்ளக் சப்தத்துடன்.. ஒன்றுக்குள் ஒன்றாக,டம்பளர்களை அடுக்கியபடி அந்த பணியாளர் எடுத்துச் செல்ல…. தனாவின் மூளையில் மின்னல் அடித்தது. முழங்கை அளவு பெரிய பொம்மை… அதில் தேவையான அளவு திராவகம்.. பின் அதற்குள் ஒரு குடுவை –  அதில் பெட்ரோலியம் என்று வைத்திருந்தால் ?…  ஒரு கொள்கலனுக்குள் மற்றோன்று.

அவனது யூகத்தை எஸ்ஸாரிடம் பகிர்ந்தவன்…. “எஸ்ஸார்,  அந்த பொம்மையோட உடைஞ்ச பார்ட்ஸ் என்ன மெடீரியல்னு பாக்கச் சொல்லு. என்னோட கெஸ் படி க்ளாஸ்-ல ஆசிட் , பிளாஸ்டிக்-ல பெட்ரோலையும் நிரப்பி இருக்கணும். பிளாஸ்டிக் குவாலிட்டி கேளு. அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை கூப்பிடு, அவன்கிட்ட லூஸ்-ல கான்சன்ட்ரேட்டட் ஆசிட் விக்கறவங்க.. யாருன்னு பாக்கச்…….”, பேசிக் கொண்டே இருந்த தனஞ்செயன்… திடீரென நிறுத்தி விட்டான்.

“என்னடா? என்ன ஆச்சு? “, எஸ்ஸார்.

“அந்த க்ளீன் பண்ற லேடிய வரச் சொல்லு.”

எஸ்ஸார் அவ்வாறே செய்ய.. இரண்டு நிமிடத்தில், அந்த பெண்மணி ஆஜர்.

“நீங்க பேசும்போது அந்த டேபிள்-ல இருந்த பொம்மைய யார் அனுப்பினதா சொன்னீங்க?”

“அது எங்க எஜமானியம்மாவோட பேஸ்புக் பிரெண்டு.., வெளிநாட்ல இருக்காங்க. அவங்க சொந்த ஊரு மதுரைங்க அவ்ளோதாங்க தெரியும்…. “,

“எப்படி அவ்ளோ கரெக்ட்டா மதுரைன்னு சொல்லறீங்க?”

“அட அந்த பொம்மை வந்த பொட்டில, மதுரை ன்னு போட்டிருந்துதுங்க. அதுவுமில்லாம அம்மா அடிக்கடி போன்-ல அவங்களோட பேசிப்பாங்க.  நமக்கு இங்கிலீஷ் கொஞ்சம் கூட்டி கூட்டி படிக்க வரும்ங்க…”, கொஞ்சம் வெட்கத்தோடு பதில் வந்தது.

“ஓஹ் .. ஓகே. தேங்க்ஸ் நீங்க போலாம்”, அப்பெண்மணியை அனுப்பிவிட்டு.. வீரய்யாவின் மனைவியை அழைத்தான். [வேறு வழியில்லையாதலால் ]

“ஸாரி மேம், ஒரே கேள்விதான், இங்க ஒரு பொம்மை இருந்ததில்லையா ? அதை யாரு வாங்கி அனுப்பினாங்க.?,”

“என் பேஸ்புக் ஃபிரன்ட் காருண்யா அனுப்பினாங்க.”

“அவங்கள ரொம்ப நாளா தெரியுமா?”

“ம்ம். ஒரு ஆறு மாசம்தான் அவங்களோட பழக்கம், ஆனா, ரொம்ப ஃபிரண்ட்லி, கொஞ்ச நாள்லயே ரொம்ப க்ளோஸ் ஆயிட்டோம்”,

“அவங்க அட்ரஸ் கிடைக்குமா?”

“ஏன்? என்ன விஷயம்?அவளை சந்தேகப்படறீங்களா என்ன?”, ‘இல்லைன்னு சொல்லிடுங்க’, என்பதைப் போல  ஒரு வித மன்றாடல் இருந்தது அவரின் குரலில். முகமறியா அத்தோழிக்காகவா அல்லது, தனது தோழமையால் கணவன் மரணம் நிகழ்ந்தது என்று இருக்கக் கூடாது என்ற எண்ணத்தினாலோ இருக்கலாம்.

“சும்மா ஏதாவது க்ளூ கிடைக்கலாம் இல்லையா? யாரையும் நாங்க சந்தேகப்படல, எல்லா பக்கமும் தேடறோம் அவ்வளவுதான்”

“அவ ஃபுல் அட்ரஸ் எனக்கு தெரில, ஆனா, கீழ் சித்திரை வீதி, மதுரை, வரைக்கும் தெரியும், ஒரு நிமிஷம்  இருங்க, தீரா, கிட்சன் பரண்-ல, பொம்மை வந்த டப்பா இருக்கு. தெரிலன்னா சுகுமாரிய கேளு காமிப்பா. கொண்டு வந்து இவர்ட்ட எடுத்துக் காட்டு.”

ஆஹா.. அட்ரஸ் கேட்டால், கொரியர் புக் பண்ணின இடமே கிடைக்குதே?, தீரா எடுத்து வந்த அட்டைப்பெட்டி சற்று தூசும் தும்பையுமாக இருந்தது, அங்கேயே தட்டி இருப்பான் போலும்.. கொண்டு வரும்போதே புகை பறந்தது. தனது அலைபேசியின் கேமரா உதவியுடன், பெட்டியில் இருந்த அவனுக்கு தேவையானவற்றை படம் பிடித்தான்.

பின்னர், அவர்களிடம் விடை  பெற்று, இருவரும் கிளம்பினர். போகும் வழியில், காரில் இருந்த எஸ்ஸார்.. “அடுத்தென்னடா? “,

“நேரா மதுரதான், இந்த கொரியர் புக் பண்ணின ஆபிசுக்கு போயி ஏதாவது விவரம் கிடைக்குதா-ன்னு தேடணும்.. நீ வர முடியுமா?”

“ப்ச். இல்லடா, இந்த வீரய்யா-வோட பார்மஸி-க்கெல்லாம் போகணும், கம்ப்ளீட்டா செக் பண்ணனும். அவன் போயிட்டான்-ன்னு விட்ற முடியாதில்ல?, பின்னாடியே காளான் மாதிரி ஒரொருத்தனா ஆரம்பிப்பாங்க. அதுக்குள்ளே அவங்களை வேரோட கிள்ளி தூக்கிப் போடணும்.”

“வேலைக்கு சின்சியரா இருக்கபோறேன்ன்னு சொல்லு.”

“யே அங்க மட்டும் என்ன வாழுதாம்? வேலை இருந்ததாலதான  இந்த பக்கம் வந்த?,”

“ஹ ஹ விட்றா விட்றா. .”, என்று தனா நழுவ..

“எப்படா உன் வொய்ப்-க்கு, என்னை இன்ட்ரோ கொடுக்கப்போற?”, அடுத்த கேள்விக்கு தாவினான் எஸ்ஸார்.

புன்னைகையுடனே, “ஹ ஹ டேய்,.. அதுக்கு எனக்கு முதல்ல கல்யாணம் ஆகனும்டா”,

“அததாண்டா இப்படி கேட்டேன். சொல்லு எப்போ?”,  எஸ்ஸார் கேட்க…

ஒரு மைக்ரோ நொடி தேஜு கண்முன் வந்தாள்.. “பாக்கலாம்டா”, என்றான் விட்டேத்தியாக.

அவன் மூடு மாறியதை கவனித்த எஸ்ஸார்.. “என்னடா விஷயம்? மூஞ்சி மாறுது? ஏதாவது affair-ஆ?”

மெல்லச் சிரித்தவன், “ஹூம். எஸ்ன்னும் சொல்லலாம் நோ-ன்னும் சொல்லலாம்”, என்றான் தனஞ்செயன்.

“அடேய். டீஜே, கேஸ்தான் குழப்புதுன்னு பாத்தா, நீ அதுக்கு மேல குழப்பறியே?”, என்றான் நண்பன்.

தனஞ்செயன் கையிலிருந்த அலைபேசியை எடுத்து, யூ ட்யூப் சென்று, தேஜஸ்வினியின் கச்சேரி ஒன்றை எஸ்ஸாருக்கு காண்பித்தான். “எனக்கு வொய்ப்-ன்னு ஒருத்தி வந்தா அது இவளாத்தான் இருக்கும்”, என்றான்.

“டே.. கான சரஸ்வதி தேஜஸ்வினி, ஓ மை….! , என் வொய்ப் இவங்க die hard fan டா, நிஜமாத்தான் சொல்றியா? இவங்களையா டாவடிக்கற?”

“அடச்சீ.. என்னடா பேச்சு டாவு கீவுன்னுட்டு? புடிச்சிருக்கு, அவளுக்குக்கும்தான். ரொம்ப பணம் போல.. அதான் பிரச்சனைன்னு தோணுது”.

“ஓ….”,என்று நிறுத்திய எஸ்ஸார், யோசனையாக “ஆமாடா, ரொம்ப பெரிய இடம், எனக்கு தெரிஞ்சு பஞ்சாராஹில்ஸ்ல ரெண்டு பங்களா இருக்குன்னா பாத்துக்கயேன்”, என்றான்.

“உனக்கெப்படிடா தெரியும்?”

“ஏன் தெரியாது?,அவங்க எல்லா வீட்டுக்கும் ஒரே பேர் தான ‘யஷஸ்’ ன்னு? அதுவுமில்லாம என் பொண்டாட்டி ஆல் இந்தியோ ரேடியோ மாதிரி அவங்க எங்க வீடு வாங்கறாங்க, அவங்க NGO பத்தி, அதை விடு அவங்க எப்போ என்ன ப்ரோக்ராம் பண்றாங்கங்கிறது வரைக்கும் கரெக்ட்டா சொல்லுவா-ன்னா பாத்துக்கயேன், இப்போ கூட ரீசன்ட்டா இங்க ஒரு கச்சேரி பண்ணினாங்க”

“ம்ம்”

“ஆனா ஒன்னுடா, அவங்க ரொம்ப சாப்ட் டைப், ஆட்டோகிராஃப் கூட போடமாட்டாங்க, கேட்டா பாட்டு யாரோ எழுதி வைச்சது, ம்யூஸிக் யாரோ கம்போஸ் பண்ணினது, குரல் எங்கப்பாம்மா குடுத்தது, ப்ராக்டிஸ் பண்றது மட்டும்தான் என் வேலை, அதுக்கு கச்சேரிக்கு இவ்வளவுன்னு காசு வாங்கிடறேன். இதுல நான் என்ன பெரிய ஆளுன்னு கையெழுத்து போட?-ன்னு சொல்லிடுவாங்களாம், அவங்க மட்டும் கிடைச்சா நிஜமா நீ லக்கி டா”, என்றான் எஸ்ஸார்.

“கிடைச்சா… ம்ப்ச். விட்றா”, என்றான் பெருமூச்சுடன் தனஞ்செயன் விரக்தியாக.

பேச்சை மாற்றும் விதமாக, ” ஏண்டா. இப்போ வீரய்யா வீட்ல பேசினத்துல ஏதாவது க்ளூ கிடைச்சுதா?”, என்று எஸ்ஸார் வேலையை நோக்கி தனாவின் கவனத்தை திருப்ப…

“ப்ச். பொம்மை காருண்யா அனுப்பினது ஒரு லீட், ஆனா வேற ஊர்-ல இருந்து மதுரை வந்து புக் பண்ணியிருக்க நிறைய வாய்ப்பிருக்கு. அந்த ஆபிஸ்-ல  ஏதாவது லீட் கிடைக்குதா பாக்கணும்”, என்றபடியே மீண்டும் அந்த அறைகலன் அங்காடியின் CCTV வீடியோ பதிவினை போட்டான். இருபதாவது நிமிட முடிவில், “ஓஹ்.. “, என்றான் அவனையறியாமல்.

தனாவுடனே பதிவினைப் பார்த்த எஸ்ஸார், “என்னடா?”, என்று கேட்க.

“இங்கபாரு, அந்த பர்தா லேடிய?”, என்றான் தனா.

“ம்ம். அவங்க அந்த ஷாப் விட்டு வெளியே போறதுக்கு மாடி இறங்கி போறாங்க”

“எஸ், எக்ஸாட்லி, அவங்க கால பாரு”

“ஓஹ். இதென்னாடா ஆம்பளைங்க போடற ஷூ போட்டுருக்காங்க”

“அது மட்டுமில்ல இன்னும் நல்லா கவனி” 

“ஹே.. அது பேண்ட் போட்டுருகுடா” 

“எஸ், அதுமட்டுமில்ல, அதோட ஹைட் பாரு, நம்ம நாட்ல ஆறடிக்கு மேல லேடீஸ் குறைவு, அனுக்ஷாவை தவிர. இது குறைஞ்சது சிக்ஸ் டூ வாவது இருக்கும்”

“ஒருவேளை அனுக்ஷாவா இருக்குமோ?”, என்று எஸ்ஸார் தாடையைத் தடவ..

சட்டென சிரித்து, “டேய் அவங்க சவுத் இந்தியன் பிலிம் பேர் அவார்ட்-காக சிங்கப்பூர் போயிருக்காங்க, நேத்து நியூஸ் பாக்கலையா? ஒரு பேச்சுக்கு சொன்னா, அவங்கள இங்க இழுப்பியா?”, என்றான் தனஞ்செயன்.

“அடேய் நீதானடா அவங்கள இழுத்த?”, எஸ்ஸார்.

“டே, இந்த எக்ஸ் யாருன்னு பாக்கலாம்டா”, என்றதும் இருவரும் செல்போனில் கவனம் செலுத்தினர். “ஜிம் பாடி மாதிரி உருவம், ஆறடிக்கு மேல ஹைட், ஆம்பளைங்க போடற ஷூ.., ஒருவேளை இது இவன் தன்னோட அடையாளத்தை மறைக்கறதுக்காக பர்தா-ல வந்திருந்தா?”

“யா இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், இந்த ஊருல பர்தா போட்ட லேடிய தேடறது திருப்பத்தில் மொட்டையா தேடறா மாதிரிதான். வேற ஏதாவது ஸ்டராங் எவிடென்ஸ் வேணும். அங்க மதுரைல ஏதாவது தடயம் கிடைக்குதான்னு தேடணும்”

கூடவே “மதுரை தான போகப் போற?”, என்று எஸ்ஸார் கேட்க…

தேஜுவின் தாக்கம் குறைந்து நிகழ் காலத்திற்கு வந்து, “ம்ம். அதுக்குத்தான்டா டிக்கெட் பாக்கனும், சென்னை போயி மதுரை போறதா? இல்ல.. “, தனா தனது பிரயாணத்தை முன் பதிவு செய்ய அலைபேசியில் தகுந்த உரலி-யை உள்ளிட்டபடி, யோசனையுடன் இருந்தான்.

“என்னடா, பறந்து பறந்து வேல பாக்கற.. டிபார்ட்மென்ட்-டா  அலவன்ஸ் கொடுக்குது?”

“எங்க டிபார்ட்மென்ட் ?, air fare?, போடாங்.. “, என்று நண்பனுடன் பேசியபடியே  தனது முன்பதிவினை முடித்தான்.

“மூணு மணி ஃபிளைட்-ல டிக்கட் புக் பண்ணி இருக்கேன். சென்னை போயி, ரிப்போர்ட் பண்ணிட்டு,  வீடு. அப்பறம் காலை-ல ஆறு மணிக்கு மதுரை. ஏழரைக்குள்ள கொண்டுபோய் விட்டுடுவான். வேல முடிஞ்சா, நைட் பாக் டு சென்னை.”, தனது பயண விவரத்தை நண்பனிடம் பகிர்ந்தான்.

“சரி நேரா நம்ம வீட்டுக்கு போலாம், லன்ச் முடிச்சிட்டு ஏர்போர்ட் கிளம்பினா சரியா இருக்கும்.”

“டீல். ஃபேமிலியோட ஒருவாட்டி சென்னைக்கு வாடா, அம்மா பாட்டில்லாம் சந்தோஷப்படுவாங்க. “

“எஸ். கண்…. டிப்பா வர்றே……ன்”,இழுத்தவன் … ” நீ உன் வொய்ப்-பை இன்ட்ரோ பண்ணும்போது”,  என்று சிரிக்க…

“டேய்…, அடங்க மாட்டியா நீ”, தனஞ்செயனும் சிரிப்பில் இணைந்தான்.

திட்டமிட்டபடி சென்னை சென்ற தனா, கடமை முடித்து வீட்டுக்கு செல்ல… அம்மா லீலாவதி கையில் அலைபேசியில் யாருடனோ மும்மரமாக பேசிக்கொண்டிருந்தார். “கள்ளழகர் ஆத்துல இறங்கறது அத்தனை விஷேஷம், உங்கண்ணன் மதுரைல வேலைல இருந்தபோது பாத்தது. திருவிழான்னா அது சித்திரைத் திருவிழாதான்”

இவன் வருவதைப் பார்த்து, “விச்சு அப்பறம் பேசறேன், சின்னவன் வந்துட்டான்”, என்று அலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.

அம்மாவை கேள்வியாக பார்த்தவன் “யாரு விச்சு?”, கேட்க..

“என் ப்ரெண்ட் விச்சு மாமி, அதான் வீணை வாசிப்பாங்களே அவங்க. “, அவர் இன்னும் மதுரை நினைவுகளில் இருந்து மீளவில்லை, போலும். இல்லாவிட்டால், மாமி குறித்து மகனிடம் பேசுவாரா?

“என்னவாம்?”, ஷூ -வை கழட்டி அதன் இடத்தில் வைத்தபடி கேட்டான்.

“அது போன தடவ திருவிழாக்கு, இவங்க கச்சேரி பண்ணினாங்களாம். க்ரூப்-பா போயி அழகர் ஆத்துல இறங்கறத நேர்ல பாத்தாங்கலாம்.”

“ஓஹோ.. சரி, நீங்க எப்போ இப்படி திக் பிரெண்டானீங்க?,

“அத ஏன் கேக்கற? அவங்க மாடுலர் கிட்சனை டிசைன் பண்ணினவன்தான், நமக்கும் பன்றான், ஒண்ணு ஒண்ணா சந்தேகம் கேப்பான் . அவ கிட்ட கேட்டு கேட்டு எது பெஸ்ட்-டா இருக்கும்-னு முடிவு பண்ணினோம். அப்போலேர்ந்து நல்ல தோஸ்த் ஆகிட்டோம். “, என்றார் லீலாவதி.

தான் இந்த நேரத்தில் வீடு திரும்புவதாக ஏற்கனவே அலைபேசியில் தெரிவித்திருந்ததால், இரவு உணவு தயாராக இருக்க.., சாப்பாடு போட்டுவிட்டு அம்மாவும் பேசியோடு படுக்கைக்கு போய் விட்டார். பாட்டி மாத்திரை சாப்பிடுவதால் எட்டு மணிக்கெல்லாம் உறங்கி விடுவார்.

தனஞ்செயனுமே,  இடைவிடாத அலைச்சலால் சோர்வாக இருந்தான். நாளை மதுரை பயணம் வேறு இருக்க… தூங்க முடிவெடுத்தான்.

*****************

அந்த உருவம் தனது கணினியை,  அதன் தரவுகளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது. தனது அடுத்த இலக்கு எதுவென்று பொறுமையாக கட்டம் கட்டிக்க கொண்டிருந்தது. திரையில் தனஞ்செயன் தனது காவல் சீருடையில் மிடுக்காக கண்களில் கூர்மையுடன் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.  

Advertisement