Advertisement

முத்தக் கவிதை நீ – 9
‘நினைப்பதெல்லாமா நம் வாழ்க்கையில் நடக்கிறது? ஏதேதோ நினைக்கிறோம். ஏதேதோ ஆசைப்படுகிறோம். அப்படியே வாழ்க்கை நகர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!! ஆயிரம் ஆயிரம் கனவுகளைச் சுமந்து கொண்டு தன் நாட்டிலிருந்து கிளம்பி வந்தான் மைக்கேல். அவனைப் பொறுத்தவரை தான் ஒன்றும் தப்பான வேலை செய்யவில்லை. தனக்குப் பழக்கமான தனது வாழ்க்கையாகப் போகும் அவளின் அட்ரெஸ் தானே கேட்டான்.
பள்ளியின் ப்ரின்ஸிபல் உதவ மறுத்ததும் இனி அடுத்து என்ன என்பது புரிபடாத நிலையில் அவரது அறையை விட்டு தலையை தொங்கப் போட்டுக் கொண்டு வந்தவன் சுற்றம் மறந்து நடக்கலானான். மெல்ல தன் சிந்தனையில் நடந்து வந்தவன் கேண்டீன் அருகில் வந்திருந்தான். அந்த பள்ளி அவனுக்கு இனிமையான பல நினைவுகளை கொடுத்திருந்தது. இதோ இந்த இடத்தில் தானே அவள் முதல் முறையாக அவன் மனதில் ஆழப்பதிந்தாள்.
ஸ்கூலில் அசெம்பிளி நடக்குமிடம் மிகப்பெரிய திறந்த வெளியில் இருந்தது. நடுவில் பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையைச் சுற்றி அரைவட்ட வடிவில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அனுதினமும் காலை நடுவில் இருந்த மேடையில் தான் பள்ளியின் அப்போதைய ப்ரின்ஸிபல் நின்றிருப்பார். அவர் நிற்கும் இடத்தின் அருகில் மைக் வைக்கப்பட்டிருக்கும். தினமும் அதில் தான் காலை இறைவணக்கம் பாட இரு பெண்கள் வருவர். 
தினம் ஒரு வகுப்பிலிருந்து இருவர் என முறை வைத்து வருவதுண்டு. மேலும் அன்றைய முக்கியச் செய்தி வாசிக்க ஒருவர், அன்றைய சிந்தனை பகிர ஒருவர் என தினமும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தவர்கள் வருவர். இதெல்லாம் முடிந்ததும் ப்ரின்ஸிபல் ஏதாவது பள்ளி சம்பந்தபட்ட செய்தி இருந்தால் சொல்வார். எப்படியும் எல்லாம் முடிய அரைமணி நேரமாவது ஆகும்.
அப்படித்தான் ஒரு நாள் காலை ப்ரேயர் நடக்கும் போது மைக்கேல் அந்த பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டான். க்ராஸ் கன்ட்ரி கல்ச்சர் அதாவது பிற நாடுகளின் கலாசாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள படிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த சில மாணவர்களில் மைக்கேலும் ஒருவன். இந்தியா வருவதற்கு அவனுக்கு முதலில் இஷ்டமில்லை தான். ஆனால் அங்கே அவனுடைய சொந்த வாழ்க்கையின் கசப்பு வேறு வழியின்றி வரச்செய்தது.
புது மனிதர்கள் புது இடம் தனக்கு நல்லதொரு மாற்றமாக இருக்கும் என்ற எண்ணத்தில் வந்திருந்தான். அவனுடன் வந்தவர்கள் வேறு வேறு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியா வந்தடைந்ததும் அதுவும் முக்கியமாக சென்னை வந்தடைந்ததும் முதலில் அவனுக்கு சென்னையின் சீதோஷனம் ஒத்துக் கொள்ளவே இல்லை.  சிங்காரச் சென்னையின் சுட்டெரிக்கும் வெயில் அவனுக்கு பெருத்த பயத்தை உருவாக்கியது. இங்கு தான் தாக்கு பிடிப்போமா என்ற பயமும் கூடவே தலைகாட்ட குழம்பித் தவித்தான்.
ஆனால் அவனுக்கு வேறு வழியும் இல்லாது போகவே சமாளிக்க தடுமாறினான். அன்று தான் அவனுக்குப் பள்ளியில் முதல் நாள். அந்த காலை நேரத்து ப்ரேயர் அவனுக்கு வித்தியாசமான அனுபவம். தனது வாழ்க்கையை புரட்டிப் போடப் போகும் புயலை அன்று தான் பார்க்கப் போகிறோம் என்று அறியாமல் கிளம்பி வந்தான்.
காலையில் பள்ளியை அடைந்ததும் ப்ரேயருக்கு செல்லும் முன்பு வாஷ்ரூமை நோக்கிச் சென்றவனுக்கு யாரோ கத்தும் சத்தம் கேட்டது. பெண்களுக்கான பகுதிக்கும் ஆண்கள் பகுதிக்கும் இடையில் இருந்த பொது வழியில் இருந்து  தான் அந்த சத்தம் வந்தது. நெருங்க நெருங்க சத்தம் அதிகமாகியது. யாரோ பேசும் குரல் கேட்க மைக்கேல் சற்றே நிதானித்து உன்னித்து கவனிக்கலானான்.
“ஹேய் யூ!! பீ கேர் ஃபுல். டேர் நாட் டச் மீ. இந்த ராகிங் எல்லாம் வேற யாருகிட்டயாவது வச்சுக்கோ. இன்னொரு முறை என்கிட்ட வந்த, அவ்வளவு தான்” சத்தமாக கேட்டது ஒரு பெண்ணின் குரல். இவன் அடுத்து என்ன என்று கணிக்கும் முன் இவனின் மீது ஏதோ பூக்குவியல் போல் மோத ஒருகணம் தடுமாறியவன் சுதாரித்து நின்றான். தன் மீது மோதியவளை பிடித்து நிறுத்த முயல இவனை ஒருகணம் ஊன்றிப் பார்த்தவள் தலையை சிலுப்பிக் கொண்டு சிட்டாய்ப் பறந்து விட்டாள்.
அவளது முகத்தைக் கூடச் சரியாகப் பார்க்க முடியவில்லை அவனால்.  சுருட்டை தலை ஏதோ கின்னம் நிறைய நூடுல்ஸை தலையில் கவிழ்த்தியது போலொரு தோற்றம் கொடுத்தது. யாரிவள் என்ற சிந்தனையோடு சில அடிகள் எடுத்து வைத்தவனின் பார்வையில் பட்டது சுவற்றின் ஓரமாக வயிற்றைப் பிடித்தபடி நின்றவனைத்தான். மைக்கேல் ஓடிச் சென்று அவனுக்கு முதலுதவி செய்ய உதவினான்.  அடுத்த சில நிமிடங்களில் ப்ரேயருக்கான மணி அடிக்க மைக்கேலுக்கு ப்ரின்ஸிபலிடமிருந்து ப்ரேயரில் கலந்து கொள்ளும்படியான செய்தி வர ப்ரேயர் ஹாலுக்கு ஓடினான்.
இறைவணக்கம் என்று அறிவிப்பு வந்து இரு பெண்கள் பாடத்துவங்க அங்கே ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. மைக்கேலை பாட்டுப் பாடிய அந்தக் குரல் கட்டிப் போட்டது. மொழி புரியவில்லை தான். கர்நாடக சங்கீதம் சுத்தமாக தெரியாத ஒன்று தான். ஆனால் ஏனோ அவனால் அசைய முடியா வண்ணம் அந்தக் குரல் அவனை என்னவோ செய்தது. பாடல் முடிந்ததும் மற்ற தினப்படி வழக்கங்கள் தொடர பின் ப்ரின்ஸிபலின் முறை வந்தது.
மைக்கைப் பிடித்தவர் தனது குரலைச் செருமிக்கொண்டு “மை டியர் சில்ட்ரன். உங்க எல்லாருக்கும் தெரியும் நம்ம ஸ்கூலுக்கு இந்த வருஷத்துல இருந்து கிராஸ் கல்ச்சர் ஸ்டடீஸுக்காக வெளிநாட்டுல இருந்து சிலர் வருவாங்கனு. ஸோ இந்த வருஷம் ஆஸ்திரேலியாவில் இருந்து அதுக்காக வந்திருக்கிற மிஸ்டர் மைக்கேலை நம்ம வெல்கம் பண்ணலாம். வெல்கம் மைக்கேல். ஹேப்பி டு ஹேவ் யூ ஹியர். ஐ ஹோப் யுவர் ஸ்டே இஸ் ப்ளஸெண்ட் ஹியர்” என்றார். எப்போதடா பேசி முடிப்பார் என்று காத்திருந்த மாணவர் கூட்டம் அவர் மூச்சு விட நிறுத்திய அந்த சின்ன இடைவெளியில் கைத்தட்டி ஆராவாரம் செய்து அவரை மேலும் பேச விடாமல் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மைக்கேலுக்கு இதெல்லாம் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவனிருந்த ஃபாஸ்டர் ஹோம் அதாவது அனாதை இல்லத்திலும் சரி படித்த பள்ளிகளிலும் சரி டிசிப்ளின் என்பது மிகக் கடுமையாக கடைபிடிக்கப் பட்ட ஒன்று.  தன்னைச் சுற்றி ஆராவாரம் எழுப்பும் மாணவர்களை பார்த்தவனின் பார்வை வட்டம் சட்டென்று ஓரிடத்தில் திக்கி நின்றது. அதே நூடுல்ஸ் தலை. ஸ்பிரிங் போன்று இருந்த முடியை இழுத்துப் பிடித்து ஒரு க்ளிப்பிற்குள் அடக்க முயன்றிருந்தாள் அப்பெண். எப்போது வேண்டுமானாலும் தெறித்து ஒடிந்து போகும் போல் இருந்தது அந்தக் க்ளிப்.
குள்ளமாகத் தான் இருந்தாள். அங்கிருந்த மற்றவர்களைக் காட்டிலும் உயரம் ரொம்பவே கம்மி தான். ஆளைப்பார்த்தாலே தெரிந்தது சரியான நாட்டி கேர்ள் என்று. ஸ்பிரிங் பொம்மை போன்று குதித்துக் கொண்டிருந்தாள். அருகில் இருந்த பெண்ணிடம் ஏதோ குசுகுசவென ரகசியம் பேசியவள் என்ன சொன்னாளோ அவளின் அருகில் நின்ற பெண் அடக்க முடியாமல் வெடித்துச் சிரித்தாள். இதற்குள் அங்கு நின்ற ஆசிரியைகளில் ஒருவர் “ஷ்ஷ்ஷ் ஸ்டூடண்ட்ஸ் சைலண்ட்” என்று சத்தம் போட கூட்டம் மொத்தமும் சட்டென அடங்கிப் போனது. அந்த சுருட்டைத் தலைப் பெண்ணையே பார்த்திருந்தான் மைக்கேல்.
சற்று முன்பு இறைவணக்கம் பாடிய இருவருள் இந்த சுருட்டை முடியும் ஒருவள் என்றும் இதற்கு முன் வாஷ்ரூம் அருகே தன் மீது மோதிச் சென்ற மின்னல் பெண்ணும் இவள் தான் என்றும் புரிந்தது. அவளையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் மைக்கேல். எங்கேயோ வேடிக்கைப் பார்த்த படி நின்றிருந்தவள் எதேச்சையாக திரும்ப இவர்களின் பார்வைகள் சந்திக்க மைக்கேலுக்கு உலகமே சுற்றுவது நின்றார் போன்ற பிரமை ஒரு நிமிடம். 
எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கின்றான் தான். அவனுடைய நாட்டில் பதின்வயது ஆரம்பித்ததுமே டேட்டிங் எல்லாம் சர்வ சாதாரணம் தான். ஆனால் இப்படி அசையக் கூட முடியாத நிலையில் தன்னை யாருமே கட்டிப் போட்டதில்லை பார்வையாலேயே. கண்சிமிட்ட மறந்தவனாய் விழித்து நிற்க இவனை நோக்கியவளோ இவனின் விலகாத பார்வையால் ஒருநிமிடம் திணறி பின் சுதாரித்து அவனை ஒற்றைப் புருவம் உயர்த்தி உறுத்து விழித்தாள்.
இவன் அதற்கும் அசையாமல் நிற்க அவள் கருவிழிகள் இரண்டையும் சுற்றோ சுற்றென்று சுற்றி பின் நாக்கைத் துறுத்திக் காட்டினாள். மைக்கேலுக்கு இந்த விளையாட்டு ரொம்பவே பிடித்துப் போனது. இதற்குள் ஒரு சின்ன அறிமுகம் கொடுக்க அவனை பேச அழைக்க இவள் புறம் திரும்பியவன் டக்கென்று இவளைப் பார்த்து கண்ணடித்து விட்டு மைக்கை நோக்கி நகர்ந்தான். அதிர்ந்து நின்றாள் அவள். 
நினைவலைகள்  படபடவென எழும்ப அதில் சிக்குண்டவனாய் மீள வழியறியாமல் கண்கள் குளமாக மேலே நோக்கி வெறித்தபடி நின்றிருந்தான் மைக்கேல். இனி அடுத்து என்ன என்று யோசிக்கக் கூட விடாமல் மூளை மக்கர் செய்தது. “பேபி வேர் ஆர் யூ. ஹௌ வில் ஐ ஃபைண்ட் யூ?”  அண்ணாந்து பார்த்து புலம்பினான். “சார். சார். வாட் வாண்ட் யூ? ஐ கிவ்.” தமிழை அப்படியே ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பேசி இவனது கவனத்தை கலைத்த புண்ணியம் அந்த ப்யூனையே சேரும்.
அவர்புறம் திரும்பியவன் அவரது இங்கிலீஷ் புலமையில் சிலிர்த்தவனாய் “அண்ணா!! சொல்லுங்க அண்ணா. எனக்கு நீங்க ஹெல்ப் பண்ண முடியுமா?” என்றான் வேண்டுமென்றே ராகமாய் இழுத்து. அவனது கிண்டலில் சிரித்தவராய் அவர் “உங்களுக்கு என்ன தம்பி உதவி வேணும். என்கிட்ட கேளுங்க. மூலவரைவிட உற்சவருக்கு பவர் அதிகம் இங்கே. சொல்லுங்க தம்பி” என்றார்.
அவர் பேசியது புரியாத போதும் இவரால் தனக்கு உதவ முடியுமா என்ற கேள்வியுடனே தயங்கி தயங்கி தனது தேவையை சொன்னவன் எதிர்பார்ப்புடன் அவரையே பார்த்திருந்தான். “ஃபூ இவ்வளவு தானா?? இதுக்கு எதுக்கு நீங்க ப்ரின்ஸிபலைப் பார்க்கனும்? நாங்கூட ஏதோ பெரிய விஷயம்னு நினைச்சேன். சரி சார். நான் கொண்டு வரேன். ஒரு ஆயிரம் ரூபாய இங்கெ தள்ளுங்க.” என்றான்.
எவ்வளவு சாதாரணமாய் தன்னிடம் பணம் கேட்கிறான் என்றிருந்தது மைக்கேலுக்கு. தனது தேவை பெரிது தான், ஆனால் அதற்காக இப்படி குறுக்கு வழியில் செல்வதா? குழப்பமாய் இருந்தது. “என்ன சார் யோசிக்கறீங்க?? நான் இந்த பைசால நிறைய பேருக்கு பங்கு கொடுக்கனும். ஆஃபீஸ் ஸ்டாஃபுங்களுக்கும் பங்கு உண்டே. என்ன யோசிக்கறீங்க?” என்றார். தனக்கு வேறு வழியுமில்லாத காரணத்தால் மைக்கேல் சரியென்று தலையாட்டி அவரது கையில் பணத்தை திணித்தான்.
அடுத்த பத்தாவது நிமிடம் கத்தை காகிதம் அவனது கைகளில். அதில் அவனது அவளின் விலாசம். “பேபி!! ஐ ஹேவ் காட் யூ” மனசுக்குள் சொல்லிக் கொண்டான். “ஏன் சார், அந்தப் பொண்ணு இன்னும் அதே அட்ரெஸில தான் இருக்குமா? இருந்தா உனக்கு நல்லது. இல்லீன்னா?” தான் பெரிய குண்டை மைக்கேலின் தலையில் இறக்குகிறோம் என்று தெரியாமல் போகிற போக்கில் கேட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார் மனிதர்.
அப்படியும் ஆகுமோ என்று குழம்பியவன் தயங்கியது ஒரு நொடியே. பின் தன்னையே கடிந்து கொண்டான். “இப்படி தளர்ந்து போறதுக்கா அங்கேயிருந்து இவ்வளவு தூரம் தாண்டி வந்த மைக்? கமான் மேன். ஜஸ்ட் கோ” தனக்கு தானே ஊக்கப்படுத்திக் கொண்டு கிளம்பினான் மைலாப்பூரை நோக்கி.
கவிதையாவாள்!!!!!!!!

Advertisement