Advertisement

முத்தக் கவிதை நீ – 6
‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.’ உண்மை தானே. விசாலம் நினைத்தது போல் அவளது மகனுக்கும் நேத்ராவிற்கும் திருமணம் முடித்து விட்டால் எப்படியும் சென்னையின் மெயின் ஏரியாவான மயிலாப்பூரில் இவ்வளவு பெரிய வீட்டைக் கைப்பற்றலாம். மன்னியின் பிறந்த வீட்டுச் சீர் நகைகள் அத்துனையையும் ஆட்டையைப் போடலாம். நேத்ராவிற்கு உடன்பிறப்பென்று இருப்பது கீர்த்தி மட்டுமே. அவனும் வாயில்லாப்பூச்சி. அதனால் இனி இங்கு தான் வைத்தது தான் சட்டம் என்று ஏகப்பட்ட கனவுகளோடு தான் இந்த திருமணத்தை விசாலம் ப்ளான் பண்ணியிருந்தாள்.
சாதாரணமாகக் கேட்டிருந்தால் தன் அண்ணன் எப்படியும் பெண் கொடுக்க யோசித்திருப்பான். இந்தப் பெண் நேத்ராவும் கண்டிப்பாக தன் மகனை மணமுடிக்கச் சம்மதித்திருக்க மாட்டாள். அவளிருக்கும் அழகிற்கு மன்னி கட்டாயம் இந்த திருமணத்திற்கு சம்மதித்திருக்க மாட்டாள் தான். நல்ல வேளையாக அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்து இப்படி ஒரு இக்கட்டான நேரத்தில் கேட்டுச் சம்மதிக்க வைத்திருக்கிறாள். அம்மாவை சம்மதிக்க வைக்கப்பட்ட கஷ்டம் விசாலத்திற்கே வெளிச்சம்.
எங்கே தன் அம்மா கடைசி நேரத்தில் பேத்தி மீது பாசம் பொங்கி இந்த திருமணத்தை நிறுத்தி விடுவாளோ என்ற பயத்தினாலும் மேலும் ஏதேனும் ஆதாயம் கிடைக்காதா என்று பார்ப்பதற்காகவுமே விசாலம் மருத்துவமனைக்குச் சென்றது. ஆனால் இப்போது வீட்டில் நிலவும் அசாத்திய அமைதியும் குசுகுசுவென பேசிக் கொள்ளும் அண்ணனும் தங்கையும் நின்ற விதம் விசாலத்திற்கு சந்தேகத்தைக் கொடுத்தது. கொஞ்சம் கூர்ந்து கேடட்தில் இந்த கீர்த்தி பையன் வேறு யாரையோ சமாளிப்பது முடியாது என்கிறானே!!
“யாரைடா சமாளிக்க முடியாது?” கணீரென்ற குரலில் விசாலம் கேட்கவும் கீர்த்திக்கும் நேத்ராவிற்கும் பதற்றம் ஏற்பட்டது. கீர்த்தி பசை போட்டு ஒட்டியது போல உதடு ஒட்ட நின்றிருக்க நேத்ரா தான் கொஞ்சம் நிமிர்வுடன் நின்றிருந்தாள். ‘என்ன திமிர்!! என்னையே எப்படி முறைக்கிறாள். இருக்கட்டும் இந்த கல்யாணம் முடியட்டும். சேர்த்து வைத்துப் பார்த்துக் கொள்கிறேன்’ மனசுக்குள் கருவிக்கொண்டாள் விசாலம்.
கீர்த்தி திருதிருவென முழித்தபடி நிற்க நேத்ரா தான் “இல்லை அத்தை. நான் தலைவலின்னு தூங்கிட்டேன்.  அண்ணா இப்போ தான் வந்தான். அதான் ஆத்துல யாரையும் காணுமே, எங்கே மீனாவையும் காணும் உங்க பிள்ளையையும் காணும்னு கேட்டுண்டிருந்தான்.” என்று போட்டுடைத்தாள். அவ்வளவு நேரம் நிமிர்ந்து நின்ற தன்னை யாரோ சரேலென கீழே தள்ளிய உணர்வு விசாலத்திற்கு.
‘ஒருவேளை கிருஷ்ணா அந்தப் பெண் மீனாவுடன்…… அப்படியாகியிருக்குமோ?? ச்சே ச்சே தன்‌மகன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான். எவ்வளவு தூரம் சொல்லியிருக்கேன். அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை’ மனசுக்குள் தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டவரின் தலையில் இடி இறங்கியது அங்கே கண்ட காட்சி. மீனாவின் கரங்களைப் பற்றியபடி வந்து நின்றான் கிருஷ்ணன்.
“அம்மா…. அது வந்து…. மன்னிச்சிரும்மா. எனக்கு இந்தப் பொண்ணைத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு. என்னால நேத்ராவைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதும்மா.” மென்று முழுங்கி சொல்லி முடித்தான். “ஏன்டா??? ஏன் என் தலையில் இப்படிக் கல்லைத் தூக்கிப் போட்டுட்ட? இதை இப்போ சொல்றவன் இந்தக் கல்யாணப் பேச்சு எடுத்ததுமே சொல்லியிருக்க வேண்டியது தானே? அம்மா உனக்கு நல்லது தானேடா செய்வேன். வேண்டாம் கிருஷ்ணா. இந்தப் பொண்ணு வேணாம். எங்கண்ணாவுக்கு நான் குடுத்த வாக்கு என்னாகும்? இந்தப் பொண்ணு நேத்ராவோட வாழ்க்கையை நினைச்சுப் பார்த்தியா? நாளைக்கு கல்யாணம்னு நினைச்சுண்டிருந்திருப்பா. இப்படி ஏமாத்தலாமா?” நியாயவாதி போல் பேசி மகனின் முடிவை மாற்ற முயன்றாள்.
“அம்மா!!!!! என்னிக்காவது உன் பேச்சை நான் மீறியிருக்கேனா? நீ சொன்னதால தான் நான் நேத்ராவைக் கல்யாணம் செஞ்சக்க சம்மதிச்சேன். ஆனா பாரு எனக்கிந்த ரெண்டு நாளா மனசே கேட்கலை. மாமாகிட்ட நான் பேசறேன் மா. மாமா புரிஞ்சுப்பார்.” மறந்தும் நேத்ராவின் பக்கம் திரும்பியும் பாராமல் பேசினான் கிருஷ்ணன்.
‘பார்றா இவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்காததால என்னோட‌ வாழ்க்கை வம்பா போயிருமாமே!!!’ உருண்டு உருண்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது நேத்ராவிற்கு. கீர்த்தி நேத்ராவின் முகமாற்றத்தைக் கொண்டு அவளது மனதின் எண்ணவோட்டத்தைக் கண்டு கொண்டவனாய் அவளது கைகளைப் பற்றி அழுத்தினான். அந்த அழுத்தத்தில் “தயவு செஞ்சு சிரிச்சு வச்சிடாதே ப்ளீஸ்” என்ற எச்சரிக்கை மன்றாடலாக இருந்தது.
“அம்மா! மீனாகிட்ட பேசின கொஞ்ச நேரத்திலேயே எனக்கானவள் இவள் தான்னு புரிஞ்சுது. அதனால் தான் சரி உங்கிட்டயும் பாட்டிகிட்டயும் நேரவே சொல்லி மன்னிப்பு கேட்டுண்டு அப்படியே உங்க சம்மதம் வாங்கலாம்னு தான் நாங்க ஹாஸ்பிடலுக்கு வந்தோம். ஆனா அங்கே அப்போ தான் நீ கிளம்பி போனதா சொன்னா. அதான் பாட்டிகிட்ட சொல்லி பாட்டி பர்மிஷனோட வந்திருக்கேன்மா. நீயும் எங்களை ஏத்துண்டு ஆசீர்வாதம் பண்ணும்மா. ப்ளீஸ்” கிருஷ்ணனும் மீனாவுமாய் விசாலத்தின் கால்களில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்கள்.
அந்நேரம் கமலாவும் யசோதாவும் வீட்டிற்குள் நுழைய நடக்கும் விஷயங்களை ஓரளவு கிரகித்த யசோதா ஓடிச்சென்று தன் மகளைப் பிடித்து இழுத்து அவளை அடிக்கத் தொடங்கினார். பதறிய கமலா யசோதாவை வேறுபுறம் தள்ளிவிட்டு மீனாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். மீனாவை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்துவிட்டு வெளியே வந்தவள் யசோதாவிடம் “இனி அவளை அடிக்க கையை ஓங்காதே. உனக்கு பிடிக்காத விஷயத்தை செஞ்சா உட்கார வச்சுப் பேசு. அதை விட்டுட்டு அடிக்காதே.” உதட்டைக் கடித்து அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டபடி தங்கையை அடக்க முயன்றாள் கமலா.
என்ன இருந்தாலும் மீனாவும் தனக்கு மகள் தானே. அப்படியிருக்க நேத்ராவிற்கு வேண்டாம் என்றால் அது மீனாவிற்கு மட்டும் எப்படி ஆகும்!!!! மனம் ஆறவில்லை கமலாவிற்கு. மீனாவைத் தனியே அறையில் அமரவைத்தவள் அவளிடம் “கண்ணா!! ஏன்டா இப்படி இந்த முடிவுக்கு வந்த? உனக்கு அம்மா நல்ல இடமா பார்த்து பண்ணிவைப்பாளேடா. அவசரப்படாதேடா” இதமாய் கேட்டுப் பார்த்தாள். எப்படியாவது மீனாவின் இந்த முடிவை மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது கமலாவிற்கு. 
அதற்காக அவருக்கு கிருஷ்ணனைப் பிடிக்காதென்றில்லை. விசாலத்தின் குணம் அப்படி. தன் மகள்கள் விசாலத்திடம் கஷ்டப்படக் கூடாதென்று கவலை தான். யசோதா தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள். அவளது உலகம் நின்றே போன உணர்வு. மீனா இப்படி முடிவெடுப்பாளென நினைத்தும் பாரவில்லையே!!
“பெரியம்மா!! என்னை மன்னிச்சுக்கோங்கோ. தப்பு தான். ஆனா நேக்கு அவரைப் பிடிச்சுது. இப்போ இல்லை. முன்னாடியே அவரை நேக்குப் பிடிக்கும். நான் நேத்ராக்காகிட்ட கேட்டேன் அவளுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமானு. அவளுக்கு மேலே படிக்கனும்னும் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னும் சொன்னா. அதனால தான் பெரியம்மா உங்ககிட்ட எல்லாம் சொல்லலாம்னு முடிவெடுத்தோம். நாங்க ஓடிப்போகலை. ஹாஸ்பிடல்ல போய் அத்தைகிட்டயும் பாட்டிகிட்டயும் பேசத்தான் போனோம். எப்படியும் உங்க பர்மிஷன் இல்லாம எதுவும் செய்ய மாட்டோம் பெரியம்மா.” கண்களில் கண்ணீர் பெருக தன் ஆசைப் பெரியம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறினாள் மீனா.
தன் மகளின் பேச்சைக் கேட்ட யசோதாவும் அழுதபடியே வந்து மீனாவைக் கட்டிக் கொண்டாள். இவர்களை எப்படி சமாதானப் படுத்துவது என்று குழம்பி நின்றது கமலா தான். விசாலத்தை சமாளிக்க வேண்டுமே….. அது தான் பெருங்கவலை. கீர்த்திக்கும் அதே கவலை தான். ஆனால் இவர்களது கலவையைக் தீர்த்து வைத்தான் கிருஷ்ணன்.
தன் அம்மாவின் தோளைப் பற்றி அவளை மெல்ல அழைத்துச் சென்று அமர வைத்தவன் அமைதியாக ஆனால் அதே சமயம் உறுதியான குரலில் பேசினான். “அம்மா எனக்கு சகலமும் நீ தான். இந்த ஜென்மா நீ குடுத்த பிட்சை. நீ சொல்றதை செய்ய நான் கடமைப்பட்டவன் தான். ஆனா பாரும்மா நேக்கு மீனாவை ரொம்பப் பிடிச்சுதும்மா. நான் நேத்ராவைக் கல்யாணம் பண்ணின்டா என்னவோ கடமைக்காக தான் வாழ்வேன். ஆனா மீனாவைக் கல்யாணம் பண்ணின்டா சந்தோஷமா வாழ்வேன். என்னை நீ புரிஞ்சுப்பேனு நினைக்கிறேன்மா” தாயின் கண்களையை ஊன்றிப் பார்த்தபடி பேசினான் கிருஷ்ணன்.
எந்தத் தாய்க்கும் மகனின் சந்தோஷமான வாழ்வு தானே பிரதானம். அதனால் விசாலத்திற்கும் வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளும் படியாயிற்று. ஆனால் இத்தனை வருடங்களாக தான் கண்டு வந்த கனவெல்லாம் பாழாய் போகுமே என்ற ஆதங்கமும் இருந்தது. “சரிதான் கிருஷ்ணா!! ஆனா ஒன்னுமில்லாதவா எல்லாம் எம்புட்டு நகை நட்டுன்னு கொண்டு வர்ற பொண்ணா கல்யாணம் பண்ணிக்கறா. உனக்கென்ன குறைச்சல். இந்த சீர்வரிசைப் பத்தி மட்டும் நான் பேசிக்கிறேனே” கொஞ்சம் மகனையும் சமாதானப்படுத்த முயன்றபடி கேட்டாள்.
கிருஷ்ணன் தனது அம்மா சம்மதித்ததே போதும் என்று தோன்ற சரியென்று சம்மதித்தான். விசாலம் தன் மகன் இன்னமும் தன் பிடியில் தான் என்ற பெருமிதத்துடன் பேச்சு வார்த்தை நடத்த யசோதாவை பார்க்கச் சென்றார். மழை பெய்து ஓய்ந்தாற் போல் இருந்தது நேத்ராவிற்கு. ‘அடேயப்பா இந்த கிருஷ்ணா சாமர்த்தியசாலி தான். அத்தையை நைசாப் பேசி தாஜா பண்ணி சம்மதிக்க வச்சிட்டானே… எல்லாம் சரிதான்டா. ஆனா எனக்கு வாழ்க்கை குடுக்க முடியாதுன்னு ஒரு டயலாக் எழுதி வச்சியே அதுக்காகவே உன்னை தலையில் நன்னா குட்டனும்டா’ மனசுக்குள்ளே குட்டிக் கொண்டாள் கிருஷ்ணாவை.
அரைமணி நேர பேரத்தின் முடிவில் விசாலம் திருப்திகரமாக ஒத்துக் கொண்டாள் திருமணத்திற்கு. அவள் கேட்டதுக்கும் ஒருபடி மேலேயே கிடைக்கும் என்று தெரியும் போது அவள் ஏன் மறுக்கப் போகிறாள். கமலாவிற்கு கீர்த்திக்கும் ஒருபுறம் நேத்ரா தப்பித்துக் கொண்டாள் என்று மனம் நிம்மதியுற்றாலும் ஏனோ மீனாவை விசாலம் நன்றாக நடத்த வேண்டுமே என்ற ப்ரார்த்தனை கடவுளிடம் வைக்காமல் இருக்கவில்லை.
மெல்பெர்ன் விமான நிலையம். அந்த கேத்தே பசிஃபிக் விமானம் புறப்பட தயாராக இருந்தது. மனமெல்லாம் சில்லென்ற உணர்வு வியாபித்திருக்க மைக்கேலுக்கு இறக்கையின்றி பறக்கும் உணர்வு. இதோ கிளம்பியாயிற்று.இன்னும் பதினான்கு மணி நேரத்தில் தானும் இந்திய மண்ணில் இருக்கப் போகிறோம். கூடிய விரைவில் தன் பேபியுடன் தனது வாழ்க்கை அமையப் போகிறது. அவளை நினைத்தவுடன் மனசுக்குள் பரவும் இந்த சுகமான உணர்விற்காக வாழ்வில் எந்தளவுக்கு வேண்டும் என்றாலும் ரிஸ்க் எடுக்கலாம் என்றே தோன்றியது மைக்கேலுக்கு.
‘மை ஸ்பிரிங் பேபி. ஐம் கம்மிங். நீ வேண்டாம்னு என்னை ஒதுக்கினாலும் உன்னைக் கட்டாயம் வந்தடைவேன். நீ எனக்காவள் பேபி. யூ காண்ட் கெட் அவே ஃப்ரம் மீ’ மனதுக்குள் சொல்லிக் கொண்ட மைக்கேலின் கவனத்தை “எக்ஸ்க்யூஸ் மீ. கொஞ்சம் நகர்ந்துக்க முடியுமா. அந்த விண்டோ ஐல் சீட் எனக்கானது” குயிலின் குரல் கலைத்தது.  தனது ப்ரியமான கனவில் இருந்து தன்னைக் கலைப்பது யாரென்று திரும்பிப் பார்த்த மைக்கேலின் பார்வையில் விழுந்தாள் அவள்……!!!
கவிதையாவாள்!!!!!!!!!

Advertisement