Advertisement

27 – முத்தக் கவிதை நீ
வாழ்க்கை ஒரே சீராய் சென்றால் அவ்வளவு சுவாரஸ்யமாக இராதோ என்னவோ. அதனாலேயே பல சமயங்களில் ரோலர் கோஸ்டர் பயணமாகவே அமைகிறது. ஒருபுறம் கீர்த்தி அறையின் நீள அகலத்தை நடந்தே அளந்து கொண்டிருக்க மற்றொரு புறம் தங்களது அறையில் தன்னை அடைத்துக் கொண்ட நேத்ராவோ விட்டத்தை வெறித்தபடி தனக்குள் மூழ்கிப் போனாள். அறைக்குள் அடைந்தவள் வெகுநேரமாக வெளியே வராததால் என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்த்த மியாவின் பின் வந்த ஹரிணி விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்த நேத்ராவைக் கண்டதும் ‘இவ வேற ஆனா ஊனா இப்படி ஆயிடறா’ என்று மனதுக்குள் அவளைத் திட்டியபடியே உள்ளே சென்றாள்.
அருகில் வந்து அமர்ந்தவளை ஒருமுறை உணர்ச்சியை வெளிக்காட்டாத பார்வை பார்த்த நேத்ரா பழையபடி மேலே வெறிக்கத் தொடங்கினாள். “அதான் அண்ணாகிட்ட எல்லாம் சொல்லியாச்சே ஸ்பிரிங். அப்புறமும் ஏன் இப்படி எதையோ பறிகுடுத்த மாதிரி இருக்க?” இழுத்துப்பிடித்த பொறுமையுடன் கேட்டாள்.
டெட்டியின் கேள்வியில் மீண்டும் ஒருமுறை புருவமுயர்த்தி பார்த்தவள் பின் தனது பழைய நிலைக்கே சென்று விட மியா தான் ஹரிணியை சமாதானப்படுத்தும் விதமாய் அவளது கைகளைப் பற்றி அழுத்தினாள். “டெட்டி!! கிவ் ஹர் சம் ஸ்பேஸ். கொஞ்ச நேரம் தனியா இருந்து யோசிச்சா அவளுக்குத் தெளிவு கிடைக்கும். வா நம்ம ஹால்ல வெய்ட் பண்ணுவோம்” என்று டெட்டி மேலும் எதுவும் சொல்லும் முன் அவளைத் தள்ளியபடி ஹாலுக்கு வந்தாள்.
“இவ இப்படி இருக்கிறதால என்ன நடக்கப் போகுது மியா? முன்னயாவது வீட்டுல எப்படி சொல்லனு டென்ஷன். இப்போ என்ன? அதான் வீட்டுல சொல்றதுக்கு தான் கீர்த்திண்ணா இருக்காங்களே!! அப்புறமா என்னவாம்?” என்றாள் ஆதங்கமாய். அவளுக்கு நேத்ராவின் நிலை ரொம்பவே வருத்தத்தைக் கொடுத்தது.
சிறுகுழந்தையாய் சலித்துக் கொள்ளும் டெட்டியைப் பார்த்து சிரித்துக் கொண்டே மியா “அவ்வளவு ஈசியான விஷயம்னா ஸ்பிரிங் இப்படி இருப்பாளா டெட்டி? எனக்குமே அப்பா அவ்ளோ ஈசியா ஒத்துப்பாங்கனு தோணல. கஷ்டம் தான். ப்ச்” என்று அலுத்துக் கொள்ளும் மியாவை இவளுக்கு என்ன லூசா என்பதாய் பார்த்து வைத்தாள் டெட்டி.
“மைக் மாதிரி மாப்பிள்ளை கிடைக்க கசக்குமா? ஏத்துக்கிட்டா என்னவாம். எவ்வளவு சூப்பரான மனுஷன். நம்ம ஸ்பிரிங்குக்காக நாட்டையே விட்டுட்டு இங்க வந்திருக்காரு. அதுவே தெரிய வேண்டாமா அவள எப்படி பாத்துப்பாருனு. கீர்த்திண்ணா நல்லா ஸ்ட்ராங்கா பேசினா அப்பாக்கு ஏத்துக்கிறத தவிர வேற வழியே இல்லை தெரியுமா! சும்மா கஷ்டம் நஷ்டம்னு காமெடி பண்ணாத மியா” என்றாள் டெட்டி.
“அதெப்படி டெட்டி ஈஸினு சொல்ற? பேசிக்கலி ரெண்டு பேருக்கும் இடையில எவ்வளவு வித்தியாசம்!! நம்ம ஸ்பிரிங் அப்பா வேற ஆச்சாரம் அனுஷ்டானம்னு எவ்வளவு பார்ப்பாங்க. அவங்க எப்படி ஏத்துப்பாங்க? அதுக்காக இது நடக்காதுனு சொல்ல வரலை. ஆனா டைம் எடுக்கும் டெட்டி. நீயே யோசிச்சுப் பாரு. நம்ம ஸ்பிரிங் வீட்டுல சுத்த சைவம். மைக் சுத்த அசைவம். அப்பா எப்பவும் சாமி, சுலோகம்னு இருக்கிறவங்க. மைக் அண்ணாவ ஏத்துக்கனும்னா உடனே நடக்கிற விஷயம் இல்லை தானே.” என்றாள் மியா.
“ஏன், இதெல்லாம் ஸ்பிரிங்க லவ் பண்ணும் தெரியாமையா இருந்திருக்கும்! எனக்கென்னவோ மைக் ரொம்பவே ப்ரிபேர்டா தான் இருப்பார்னு தோணுது. ஸ்பிரிங்குக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவர் சாப்பாடு விஷயமெல்லாம் அட்ஜெஸ்ட் பண்ணிக்காமலா இருப்பாங்க? இதுக்கும் மேல என்ன செய்யனும்னு எதிர்பார்க்கறோம்? அவர் மதம் மாறனும்னா? ப்ச்!!! அவர்கிட்ட பேசினதும் நமக்கே தோணுச்சே மைக் தான் ஸ்பிரிங்குக்கு பெஸ்ட் சாய்ஸ்னு. அதே மாதிரி அப்பாக்கும் தோணும் பாரேன் மியா. நம்ம ஸ்பிரிங் லக்கி தான். மைக் மாதிரி பார்ட்னர் கிடைக்கிறதுக்கு. ஹ்ம்ம் நமக்கு வர்றது எப்படி இருக்கப் போகுதோ? இப்போ எங்க இருக்குதோ?” பெரிய பெருமூச்சினை விட்டவளைப் பார்த்த மியாவுக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.
அவளுமே நிறைய முறை யோசித்தது தான். எப்படி இவ்வளவு காதல் என்று. தன் நாடு, மக்கள், இனம், மொழி எல்லாம் விட்டு விட்டு தன் காதலுக்காக என்று வேறு மொழி, கலாச்சாரம் என்று எல்லாம் கற்றுக்கொண்டு அதில் அட்ஜெஸ்ட் செய்து வாழ்வது என்றால்!!!! ‘மைக் அண்ணா யூ ஆர் க்ரேட். யெஸ் ஸ்பிரிங் யூ ஆர் லக்கி’ என்று தான் சொல்லத் தோன்றியது.
———————————————————————————————————————————————
சீனிவாச சாஸ்திரிக்கு ஏனோ இருப்புக் கொள்ளவில்லை. இது இன்று நேற்று இல்லை. கடந்த ஒரு மாத காலமாகவே இப்படித்தான். ஏதோ தீவிர சிந்தனையில் எதையோ பறிகொடுத்து விடுவோமோ என்ற பதட்டத்திலேயே இருந்தார். பொதுவாகவே அவ்வளவு பேசாதவர் தான். ஆனால் கடந்த ஒரு மாத காலமாகவே நத்தையாய் தமக்குள்ளேயே சுருட்டிக் கொண்டார்.
எல்லாம் ஒரு மாதம் முன்பு ஒருநாள் எதிர்த்த வீட்டு மாமி இவரிடம் சொன்ன செய்தியின் தாக்கம் தான். வழக்கம் போல் அன்றைய காலை பூஜைகளை முடித்துக் கொண்டு வெளியில் கிளம்பிய சீனிவாச சாஸ்திரியிடம் கமலா அவசரமாக ஏதோ வாங்கி வரச் சொல்ல அவரும் கடைக்குக் கிளம்பினார்.
சாமான் வாங்கி வரும் வழியில் எதிர் வீட்டு மாமியைப் பார்த்ததும் மாமி சிநேகமாய்ப் புன்னகைக்க இவரும் ஒரு புன்னகையுடன் தலையசைத்து நடையைத் தொடர்ந்தார். சாஸ்திரி வீட்டிலேயே அவ்வளவாகப் பேசாதவர். அக்கம்பக்கம் பேச்சுவார்த்தை எல்லாம் கமலாம்மாவின் டிபார்ட்மெண்ட் தான்.
ஒரு ஃபார்மாலிட்டிக்காக தலையை அசைத்தவர் பின்பு வேறு புறம் பார்வை செலுத்திய படி நடக்க, மாமி இவரை நோக்கி வந்தது சாஸ்திரிக்கு ஆச்சரியமாக இருந்தது. மாமியின் முகமே சொன்னது அவர் தன்னிடம் எதுவோ சொல்ல நினைக்கிறார் என. கேள்வியாய் அவரைப் பார்த்தவரிடம் மாமி “ரொம்ப நாளாச் சொல்லனும்னு நினைச்சு மறந்து போன விஷயம். இன்னிக்கு உங்களைப் பாத்ததும் சொல்லிடனும்னு தோணித்து. அதான்.” என்று நிறுத்தினார்.
என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி மாமியிடம் ‘மேலே சொல்லுங்கோ’ என்பதாய் தலையசைத்தவரிடம் “அன்னிக்கு உங்களத் தேடி ஒரு புள்ளையாண்டான் வந்தானே. பாக்க வெளிநாட்டுக்காரனாட்டம் தான் இருந்தான். ஆனா நம்மவாளப் போலப் பேசினான். உங்களைத்தான் கேட்டான்.  நானும் கமலாவாண்ட சொல்லனும்னு நினைப்பேன். மறந்தே போயிடும். இப்பவும் உங்ககிட்ட சொல்லலேன்னாக்க நா மறந்தே போயிடுவேன். அதான் வழில நிறுத்தி சொல்லிட்டேன். நா வரேன் மாமா” என்று தான் வந்த வேலை முடிந்த திருப்தியுடன் மாமி நடையைக் கட்டினார்.
வெளிநாட்டுக்காரன் என்ற ஒரு வார்த்தை சாஸ்திரியிடம் பல நினைவுகளைக் கிளறியது. ‘சில வருடங்களுக்கு முன் அமைதியாகச் சென்ற தனது வாழ்வில் அடித்த ஒரு பெரும்புயலாயிற்றே. அவன் தானா? மீண்டுமா? இத்தனை வருடங்களுக்குப் பின்னுமா வந்துவிட்டான்? அப்படியென்றால் இன்னமும் ப்ரச்சனை தொடருகிறதா? மகள் இன்னும் அவனுடன் பேச்சு வார்த்தையில் தான் இருக்கிறாளா? தன் வளர்ப்பு பொய்த்துப் போனதா?’
எண்ணங்கள் அலையென எழும்பி அவரை மூழ்கடிக்க ஒருகணம் மூச்சுமுட்டியது அவருக்கு. தன்முன் ப்ரச்சனை பூதாகரமாக நிற்பதாய்த் தோன்ற நடை தளர்ந்து தலைகுனிந்த படி வீட்டை நோக்கி நடந்தார். இது போல் எதுவும் நடக்கக் கூடாதென்று தான் அம்மா சொன்னதை சாக்கு வைத்து அந்த கிருஷ்ணாவிற்கு நேத்ராவை மணமுடிக்கக் கூட ஒப்புக் கொண்டார்.
கிருஷ்ணாவை அவ்வளவு பிடிக்காது தான். அவனது நடவடிக்கைகளில் திருப்தி இல்லை தான். ஆனால் தமக்கை மகன். அம்மாவிற்குக் கட்டுப்பட்ட பிள்ளை. எதுவென்றாலும் என்னவென்று பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தெய்வம் வேறு நினைத்தது போல. அந்தத் திருமணம் நின்று போன போது கூட அப்போதைய மனநிலையில் சரியென்றே தோன்றியது. நிம்மதியாகக் கூட இருந்தது.
ஆனால் அன்று பள்ளியில் தான் நேத்ராவிடம் சத்தியம் வாங்கிய பின் மகள் அவனுடனான பேச்சு வார்த்தையைக் கூட கட்டோடு அறவே நிறுத்தி விட்டாள் என்றே எண்ணியிருந்தார். மகளின் நடவடிக்கையில் அவருக்கு உறுத்தும்படியாக எதுவுமே தோன்றவில்லை இன்று வரை. வருடங்கள் கடந்த நிலையில் எல்லாவற்றையும் மறந்து இருக்கையில் இப்போது ஏன் வந்தான்? 
‘உங்க மக இவன் கூட பழகறா’னு சொன்னதையே தாங்கிக் கொள்ள முடியாது போனதால் தானே அன்றே அந்தப் பையனிடம் கடிந்து பேசி தள்ளி நிறுத்தியது. அன்றைய அளவில் வெறும் பழக்கம் என்றளவில் இருந்ததாக அந்த குமரன் சார் சொன்னதைக் கூட மேலும் வளரவிட மனமின்றி தானே அப்படி அதைப்பற்றி எந்தப் பேச்சையும் தான் கேட்க விருப்பமின்றி தான் நடந்து கொண்டது. 
ஒருவேளை ப்ராப்தம் இது தானோ? நேத்ராவிற்கு இவன் தான்னே விதிச்சிருக்கோ? ஆனா அப்படி மட்டும் நடந்துட்டா? இனி தன்னை யாரு மதிப்பா? எவ்வளவு மதிப்பா இருக்கோம் இப்போ. இது மட்டும் நடந்துட்டா அதுக்கப்புறமா நம்மள யாரு மதிப்பா? ச்சே கோத்திரம் மாத்தி பொண்ணு குடுத்தா அதுக்கப்புறமா தான் இத்தனை வருஷமா தொடர்ந்து வர்ற ஆச்சார அனுஷ்டானங்களுக்கு என்ன மதிப்பு?? தலைநிமிர்ந்து நடக்க முடியுமா இனி? இப்போது இத்தனை வருஷங்கள் கழித்து மீண்டும் ஏன்?????
———————————————————————————————————————————————
கீர்த்தியின் மனதில் ஆயிரம் ரயில்கள் ஒரே நேரத்தில் தடதடத்தன. என்ன செய்யப் போகிறோம், எப்படி அப்பாவிடம் பேசி சம்மதிக்க வைக்கப் போகிறோம் என்பதே அவன் முன் பெரிதாக நின்று அச்சுறுத்தியது. பாதை இது தான் என்று தெளிவாக நிச்சயப் படுத்திக் கொண்டாயிற்று. ஆனால் கடக்கப் போகும் வழியும் அதில் எதிர்கொள்ளப் போகும் சவால்களும் தான் மலைப்பாக இருந்தது.
நேத்ரா எப்போதுமே அவனுக்கு ஸ்பெஷல் தான். அவள் பிறந்த பொழுது பாட்டி கீர்த்தியிடம் சொன்னது இன்றும் பசுமையாக நினைவில் நின்றது. பாட்டியுடன் அம்மாவைப் பார்க்கச் சென்றவனிடம் அவனது மடியில் குழந்தையை எடுத்து வைத்த பாட்டி “கண்ணப்பா!! இவ உன்னோட பொறுப்பு. இவள நீதான் பத்திரமா பாத்துக்கணும். இவ தான் நம்மாத்து ராஜகுமாரி. இப்போனு இல்ல. ஆயுசுக்கும் இவளோட சந்தோஷத்துக்கு நீ தான் பொறுப்பு. அண்ணான்னா இன்னொரு அப்பா மாதிரி. உன்னோட அங்கச்சி பாப்பவ யாரும் கஷ்டப்படுத்தாம பாத்துப்பியா?” என்று கேட்டதும் ஏதோ தன்னை நம்பி பெரிய பொக்கிஷத்தையே தன்னிடம் ஒப்படைத்த உணர்வு ஏற்பட்டது அன்று.
கருகருவென சுருட்டை முடியும் கொழுக் மொழுக் கன்னங்களுமாக பொக்கை வாயைக் காட்டிச் சிரித்த அந்த சின்னக் குழந்தை நேத்ரா அன்றே அவனது பொக்கிஷமாகிப் போனாள் அவனுக்கு. அதிகம் பேசாதவன் தான் கீர்த்தி. சீனிவாச சாஸ்திரி போல் உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாதவன் தான். ஆனால் நேத்ராவின் மீது அவனுக்கு எப்போதுமே அளவுகடந்த பாசம் உண்டு. பின்னொரு நாளில் தனக்குத் திருமணமாகி குழந்தை பிறந்தாலும் என்றுமே நேத்ரா தான் தனது முதல் குழந்தை என்றே எண்ணியிருந்தான்.
அதனாலேயே கிருஷ்ணாவுடன் அவளுக்குத் திருமணம் என்றதும் பதறினான் முதலில். ஆனால் பாட்டியின் ஆசை என்றதும், நேத்ராவும் மறுக்காததும் ஏனோ அவனைக் கட்டிப் போட்டன. ஒருவழியாக அந்த திருமணம் நின்றதும் எப்படியாவது அப்பாவிடம் இனி நேத்ரா தன் பொறுப்பு என்றும் அவளது வாழ்க்கை பற்றி அவர் எந்தவித கவலையும் படவேண்டாம் என்றும் அவள் வாழ்க்கையில் எந்த ஒரு முடிவையும் தன்னைக் கேட்காமல் எடுக்க வேண்டாம் என்றும் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான்.
ஆனால் அவன் மனதைப் படித்தது போன்றோ என்னவோ சீனிவாச சாஸ்திரி நேத்ராவிடம் ‘எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு படி, உனக்கான வாழ்க்கையில் நான் எதுவும் கட்டாயப்படுத்த மாட்டேன்’ என்று சொல்லவும் பெருத்த நிம்மதி வந்தது. அதை நினைத்தே முதலில் அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கலாம் என்று எண்ணியிருந்தான்.
ஆனால் அப்பாவுக்கு முன்பே இந்த விஷயம் தெரியும் என்றும் அப்பவைப் பொறுத்தவரை இது முடிந்து போன விஷயம் என்றும் கேள்விப்பட்டதும் தான் இருந்த நம்பிக்கை அத்தனையும் தவிடுபொடியானது கீர்த்திவாசனுக்கு.  இப்போது எப்படி பேசி அப்பாவை சம்மதிக்க வைக்க என்று யோசித்திருந்தவனிடம் தான் சென்னைக்கு கிளம்புவதாக இடியை இறக்கினான் மைக்கேல்.
“மைக்!!! இப்போ நீங்க ஏன் அங்க போறேள்? நீங்க போக வேண்டாம். நா அப்பாகிட்ட பேசறேன் முதல்ல. அவசரப்படாதீங்கோ” என்றான் பதட்டத்துடன். அவனுக்கு அப்பா மைக்கேலை எதுவும் பேசிக் காயப்படுத்தி விடுவாரோ என்ற பயம் வந்தது.
தனக்காகவே யோசிக்கிறான் என்று புரிய மைக்கேலுக்கு கீர்த்தியை நினைத்துப் பெருமையாக இருந்தது. மெல்ல அவனது தோளில் கைபோட்டவன் “இல்ல கீர்த்தி!! நாந்தான் பேசனும். நீங்க வேணும்னா உங்க தங்கைக்காக பேசலாம். ஆனா என்னோட வாழ்க்கைக்கு நாந்தான் முதல்ல பேசனும். பெண்ணைப் பெத்தவாகிட்ட அவா சம்மதத்தை முறையா நாந்தான் கேட்கனும்.” என்றான். “அதுக்கில்ல மைக். அப்பாகிட்ட நா முதல்ல பேசி புரிய வச்சிடலாம்னு பாத்தேன்..” என்றவனைக் கூர்ந்து பார்த்த மைக்கேல் சற்று நேரம் யோசித்துவிட்டு “சரி வாங்கோ. நாம சேர்ந்தே போகலாம் சென்னைக்கு. அப்பாகிட்ட நீங்க பேசுங்கோ. நானும் பேசறேன். பாக்கலாம்.” என்றான் உறுதியான குரலில்.
சென்னையில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் தெரியாமல் சென்னையை நோக்கிய பயணம் தொடங்கியது இவர்களுக்கு. நாமும் போலாமா சென்னைக்கு??
கவிதையாவாள்!!!!!

Advertisement