Advertisement

  25 – முத்தக் கவிதை நீ
சில மனிதர்களைப் பார்த்தால் “ப்பா!!! இப்படியும் இருப்பார்களா?” என்று தோன்றும். தன் முன் இருந்து தனது முகத்தையே பார்த்திருக்கும் மைக்கேலைக் காணும் போது கீர்த்திக்கு அப்படி ஒரு எண்ணமே தோன்றியது. ‘என்னடா மனிதன் இவன். இவ்வளவு காதலா? காதலுக்காக வாழ்க்கையில் இப்படியா எல்லாவற்றையும் விட்டு விட்டு வருவான்? நாடு, குடும்பம், மக்கள், வேலை என்று எல்லாவற்றையும் தனது காதலுக்காக உதறிவிட்டு வரவேண்டுமென்றால் இவனது காதல் எப்படிப்பட்டது?’
நாடு, இனம், மதம், மொழி இவையெல்லாம் வாழ்வோடு பிணைந்த விஷயங்கள் அல்லவா. ஒரு மனிதன் இது எதுவுமே வேண்டாம் என்றால் அதையும் தாண்டிய முக்கியத்துவம் அல்லவா அந்தக் காதலுக்கு அவன் வாழ்வில். நேத்ரா ரொம்பவுமே கொடுத்து வைத்தவள். இவனை மணமுடித்தால் இவன் கட்டாயம் தனது தங்கையை பொக்கிஷமென பார்த்துக் கொள்வான். தங்கையின் வாழ்வு கட்டாயம் நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது கீர்த்திக்கு.
தனது சிந்தனையில் ஆழ்ந்து போன கீர்த்திக்கு தன்னையே பதிலுக்காக எதிர்பார்த்து கார்த்திருக்கும் மைக்கேலைப் பார்த்ததும் கொஞ்சம் சீண்டிப் பார்க்கத் தோன்றியது. “ஆர் யூ சீரியஸ்? ஆஃப்டர் ஆல் லவ்வுக்காக நீங்க எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு வர முடியுமா? அப்போ நீங்க உங்க அடையாளங்கள் அத்தனையையும் மாத்திக்க தயாரா? மைக்கேல் இனி மாதவனாகிருவேளா?” என்றான் சிரிப்பை அடக்கிய குரலில்.
கீர்த்தி தனது கேள்வி மைக்கேலைச் சற்றே அசைத்துப் பார்க்கும் என்று எதிர்பார்த்து அவனது பதிலுக்காக காத்திருக்க மைக்கேலோ எந்த அதிர்வுமின்றி புன்சிரிப்புடன் “நா உங்கள்ள ஒருத்தராகறதுக்கு உங்களோட கலாச்சாரம் பழக்க வழக்கமெல்லாம் கத்துக்கிறேன்னு தான் சொன்னேனே தவிர என்னோடத இழக்கப் போறேன்னு எப்போ சொன்னேன்? மைக்கேலை மைக்கேலாத்தான் உங்களுக்குப் பிடிக்கனும். பிடிக்கும். நேக்கு நம்பிக்கை இருக்கு.”
“நா என்னோட மொழி, மதம், பழக்கவழக்கம் எதையும் நேத்ரா ஃபாலோ பண்ணனும்னு எதிர்பார்க்கல. அதே மாதிரி அவளும் என்னை மாத்திக்க எதிர்பார்க்கல. ஆனா உங்கப்பா எங்கிட்ட கேட்டார் வேதம் தெரியாத உனக்கு எப்படி நான் என்னோடப் பொண்ணைக் கல்யாணம் பண்ணித்தர முடியும்னு. ஆச்சார அனுஷ்டானங்கள் பாரம்பரியமா ஃபாலோ பண்ற குடும்பத்துக்குள்ள எப்படி விட முடியும்னு. என்னால என்னோட பிறப்பையோ என்னோட பின்புலத்தையோ மாத்திக்க முடியாது. ஆனா என்னோட நேத்ராவுக்காக நான் சிலதெல்லாம் கத்துக்க முடியும். மாத்திக்க முடியும். மைக்கேல் மைக்கேலாகவே இருந்து உங்க தங்கைகூட வாழ முடியும். அந்த நம்பிக்கை எங்க ரெண்டு பேருக்கும் நிறையவே இருக்கு.” என்றான் திடமான குரலில்.
இவர்களது சம்மதம் வேண்டுமே என்பதற்காக என்ன சொன்னாலும் செய்கிறேன், மதம் வேண்டுமென்றாலும் மாறிக் கொள்கிறேன் என்று சொல்லாமல் நான் இப்படித்தான், என் காதல் இது தான். என் காதலுக்காக நான் கற்றுக் கொள்கிறேன் ஆனால் அப்படியே எனது சுயத்தை எல்லாம் இழக்க மாட்டேன் என்று சொன்ன மைக்கேலை கீர்த்திக்கு ரொம்பவுமே பிடித்து போனது. 
அவனது நிமிர்வு சொல்லியது அவனிடம் பொய் இல்லை. அவன் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையையுமே உணர்ந்து பேசுகிறான் என. தனது தங்கையை இப்படி ஒரு மனிதனுக்கு மணமுடிப்பதில் தனக்கு எந்தவித மறுப்பும் இல்லை என்பதைக் காட்டுவது போல் மைக்கேலை ஒரு முறை அணைத்துக் கொண்டான் கீர்த்தி. 
“ஐம் ஸோ இம்ப்ரெஸ்ட் மைக். என் தங்கை லக்கி. என் தங்கை உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டே வந்தவன் திடீரென ஏதோ நினைவு வந்தவனாய் அதிர்ந்து நின்றான். அதுவரை உற்சாகமாகப் பேசியவன் சட்டென அதிர்ந்து நிற்கவும் காரணம் புரியாமல் விழித்த மைக்கேல் “என்னாச்சு கீர்த்தி? ஏதாவது ப்ரச்சனையா?” என்று கீர்த்தியின் கரங்களைக் பற்றினான்.
“மைக்!!! அப்பாவுக்குத் தெரியும்னா சொன்னேள்? எப்படி??? நீங்க அப்பாவ எப்போ பாத்தேள்? பகவானே!! எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்றேளா ப்ளீஸ்!” என்று தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டான். கீர்த்தியின் அருகில் அமர்ந்து கொண்ட மைக்கேல் சற்று நேரம் அமைதியாக இருந்தவன் பின் எங்கோ வெறித்தவனாய் பேசத் தொடங்கினான்.
“உங்க தங்கை உங்ககிட்ட எவ்வளவு தூரம் சொல்லிருக்கானு தெரியாது. நாங்க சந்திச்சது அவளோட ஸ்கூல் டேஸ்ல. எனக்கு மனுஷங்க மேல் நம்பிக்கை இல்லாம இருந்த காலமது. யாருகிட்டயும் பழகவே விரும்பாத நேரம். முடிவே இல்லாத இருட்டான டணலுக்குள்ளான பயணம் மாதிரி இருந்துச்சு வாழ்க்கை. அப்போ தான் எங்கேயோ எனக்கு தூரத்துல ஒரு வெளிச்சம் ஒரு விடிவு தெரிஞ்சுது. அது தான் நேத்ரா.”
“டீனேஜ்ல வந்ததுனால இது வெறும் ஹார்மோனல் ரஷ்னோ இல்ல வெறும் இன்ஃபேக்சுவஷன்னோ இதை முடிவு பண்ணக்கூடாது. ஏன்னா நாங்களுமே அப்படித்தான் நினைச்சோம். இன்ஃபேக்ட் அப்படித்தான்னு முடிவு பண்ணி கடந்து போக முயற்சி செஞ்சு பாத்தோம். ஆனா ட்ரஸ்ட் மீ கீர்த்தி, ஷீ இஸ் மை லைஃப். இது எனக்கு அந்த ஆக்ஸிடென்ட் புரிய வச்சுது.” பேசிக் கொண்டே போனவன் எங்கோ கடந்த காலத்தில் ஆழ்ந்து போனான்.
இருவருக்கும் தங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த பிணைப்பை இன்னதென்று வகைப்பிரிக்கத் தெரியவில்லை. மைக்கேலுக்கு நன்கு புரிந்தது இனி தனக்கான வாழ்க்கை இவளுடன் தான் என்று. ஆனால் நேத்ராவிற்கு தனது குடும்ப சூழ்நிலை புரிய ஏனோ மைக்கேலின் மீதான தனது காதலை ஒத்துக் கொள்ள இயலவில்லை. அவளுக்கு அவளது தந்தையைப் பற்றி நன்கு தெரியும். மேலும் காதல் கொள்ளவோ அல்லது தனது எதிர்காலத்தை தீர்மானிக்கவோ இப்போது சரியான வயதில்லை என்றும் தோன்றியது. ஆகவே மைக்கேலிடம் தெளிவாகவே பேசி புரிய வைத்தாள். அவளது வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாத போதும் அவளது நிலைமை புரிந்து ஒதுங்க முடிவு செய்தான். ஆக இருவருமாக தங்களுக்குள் இனி ஒன்றுமில்லை என்றும் இனி சந்தித்துக் கொள்வதில்லை என்றும் முடிவு செய்தனர். ஆனால் நாம் நினைப்பது போலெல்லாம் நடந்து விட்டால் அது என்ன வாழ்க்கை? காலம் இவர்களுக்கு வேறு முடிவு செய்திருந்தது போலும். பாவம் முடிவு செய்ததை இருதினங்கள் கூட கடைபிடிக்க முடியாதபடி அது நடந்தது.
தீபாவளி அந்த வருடம் திங்கட்கிழமை வந்ததால் வியாழக்கிழமை முதலே பள்ளியில் பாதி பேர் விடுப்பில் செல்லத் துவங்கினர். மாணவர்கள் குறைவாக இருக்கவே அன்றைய வகுப்புகள் ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. மைக்கேலை நேத்ரா வகுப்பில் படித்த வினயன் தங்கள் ஊருக்கு தீபாவளி கொண்டாட அழைத்திருந்தான். மைக்கேலுக்கும் ஒரு மாற்றம் தேவைப்படவே வினயனுடன் காஞ்சிபுரம் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்தான். 
ஆனால் ஏனோ மனதில் இனம் புரியா பயம் ஒன்று முணுமுணுப்பாய் அரித்துக் கொண்டே இருந்தது. ஒரு வேளை இது நேத்ராவினை மிஸ் செய்யப் போகிறோம் என்பதால் தோன்றும் உணர்வோ என்று புறந்தள்ள முயன்றான். என்ன முயன்றும் அவனால் இந்தக் கலக்கத்தை விலக்க இயலவில்லை. அன்று மதியம் சுமார் இரண்டரை மணி இருக்கும், இனி பொறுக்க இயலாது என்ற நிலையில் ஊருக்குக் கிளம்பும் முன் நேத்ராவிடம் ஒரு முறை பேசிவிட்டுக் கிளம்பலாம் என்று அவளைத் தேடி அவளது வகுப்பிற்குச் சென்றவனுக்கு அவளை அங்கே காணாது போகவும் தலைக்குள் அலாரம் வெகுவாக ஒலித்தது.
வகுப்பறை காலியாக இருக்கவும் உள்ளுக்குள் உறுதியாக எதுவோ சரியில்லை என்று உறுதியாகச் சொல்லியது. ஸ்பிரிங் வழக்கமாக இருக்கும் லைப்ரரி, கால்பந்து மைதானத்தின் மறுகோடி, கேண்டினின் கடைசி பெஞ்ச் என்று எல்லாபக்கமும் ஓடியோடி தேடியவனுக்கு அவள் எங்கும் இல்லை என்றுதும் படபடப்பு அதிகமாகியது. வழக்கத்துக்கு விரோதமாக ஏனோ அவனது ஸ்பிரிங்கிற்கு ஏதோ ஆபத்து என்று அவனுக்கு பலமாக எண்ணம் தோன்றவும் எங்கே போகிறோம் என்ற இலக்கில்லாமல் ஓடினான். 
இறுதி முயற்சியாக பள்ளியின் இரண்டாவது மாடியில் இருக்கும் வாட்டர் டாங்க் அருகில் இருப்பாளோ என்ற சந்தேகத்தில் அங்கு போக அவன் கண்ட காட்சியோ அவனது உயிரை உறைய வைத்தது. எங்கோ வெறித்தபடி வாட்டர் டேங்கின் அருகில் நின்றவளின் பின்னிருந்து திடீரென வந்த உருவம் அவள் எதிர்பாராத தருணத்தில் அவளைக் கீழே விழத்தள்ளியது.
நேத்ரா முன்புறம் விழும்போது முன்னெச்சரிக்கையாக தனது கையை ஊன்ற படக்கென்று சத்தம் கேட்டதைக் தொடர்ந்து வலியில் மடிந்து அமர்ந்தாள். இடது கரத்தை அவள் பற்றியிருந்த விதமே சொன்னது கையில் எலும்பு முறிவு கட்டாயம் ஏற்பட்டிருக்குமென. இந்த தாக்குதலை எதிர்பாராததாலோ என்னவோ முகத்தில் அதிர்ச்சியும் வலியும் போட்டி போட்டன. 
அவளைக் கீழே தள்ளிவிட்டவன் “ப்ரசாத் வேணும்னா உன்னை மன்னிச்சிருக்கலாம். ஆனா அதுக்காக என்னால அப்படி உன்னை விட்ற முடியாது. உனக்கென்ன பெரிய ஜான்சி ராணினு நினைப்பா? நாங்க யாரை எப்படி நடத்தினா உனக்கென்ன? அன்னிக்கே உன்னை எல்லார் முன்னாடியும் அடிக்கலாம்னு சொன்னா அந்த ப்ரசாத் கேக்க மாட்டேன்னுட்டான். இப்படி நீங்க எல்லாரும் திருந்திட்டா, அப்போ நாங்கல்லாம் என்ன பைத்தியக்காரங்களா? இது உனக்கான பாடம். இனி எங்க வழில வராத. வந்தா இன்னும் பலமா விழும்” என்றபடி உறுமலுடன் திரும்பியவன் அன்றொரு நாள் கெமிஸ்ட்ரி லேபில் ஸ்பிரிங்கிடம் வம்பு செய்து பின்பு நட்பான ப்ரசாத்தின் நண்பன் சுபாஷ்.
நேத்ராவின் வலியும் சுபாஷின் நடத்தையும் மைக்கேலுக்கு கண்மறைக்கும் கோபத்தைக் கிளப்ப அடுத்த நொடி அந்த சுபாஷின் சட்டைக் காலரைக் கொத்தாகப் பிடித்திருந்தான். இயற்கையிலேயே கொஞ்சம் ஃபிட்டான மைக்கேலின் கையில் சிக்கிய சுபாஷ் கதவிடுக்கினில் சிக்கிய எலியின் நிலைக்கு ஆளானான். ஆத்திரம் தீரும்வரை அடித்து நொறுக்கத் தொடங்கியவனின் கவனத்தை நேத்ராவின் வலியினால் ஏற்பட்டக் கதறல் கலைத்தது.
தனது ஸ்பிரிங்கிற்கு வேதனை என்றதும் மற்றது எதுவும் முக்கியமாகத் தோன்றாததால் சுபாஷை தள்ளியவன் நேத்ராவிடம் விரைந்தான். இருவரும் பேசிவைத்திருந்தது மறந்தே போனது. இனி தங்களுக்குள் எதுவும் இல்லை என்று சொல்லிக் கொண்டதெல்லாம் நடக்கவே இல்லாதது போல் அவன் அவளைத் தன் கையில் ஏந்திக் கொண்டு பள்ளியின் எமெர்ஜென்சி அறைக்கு விரைந்தான். அந்த நொடி மைக்கேலுக்கு நன்கு புரிந்தது அவனால் அவனது பேபியை எந்தக் காரணம் கொண்டும் விட்டு விலக இயலாதென்று. தன்னால் மட்டுமே அவளைப் பொக்கிஷமெனப் பாதுகாக்க இயலுமென. அவனிடம் பாதுகாப்பிற்கு ஒன்றிய நேத்ராவிற்கும் ஏனோ இவன் தான் தனது அடைக்கலம் என்பது புரிந்து போனது. நேத்ராவின் முழங்கை எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டிருந்தது. 
கீர்த்திக்கு நன்கு நினைவிருந்தது. அவன் கல்லூரியில் தீபாவளி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்த சமயமது. ஒருநாள் திடீரென நேத்ராவின் பள்ளியில் இருந்து அவளுக்கு சிறு விபத்து ஏற்பட்டதெனவும் வந்து அழைத்துப் போகுமாறும் அழைப்பு வரவே கீர்த்தி தான் அழைத்து வரச்சென்றான். இப்போது பின்னோக்கி யோசித்துப் பார்த்தால் நேத்ராவைச் சுற்றி நின்றவர்களில் ஒரு வெள்ளைக்காரனும் நின்ற நிழலுருவம் நினைவுக்கு வந்தது.
எவ்வளவு நடந்திருக்கிறது? கீர்த்திக்கு மைக்கேல் தான் தனது தங்கைக்கு சரியான தேர்வு என்பது நன்கு புரிந்தது. ஆனால் இதை தான் மட்டும் முடிவெடுக்க இயலாதே? அப்பா என்ன சொல்லுவாரோ! ஆனால் மைக்கேல் சொன்னதைக் பார்த்தால் இவர்கள் ஏற்கனவே அப்பாவைப் பார்த்து இதைப்பற்றி பேசியிருக்கிறார்கள் என்று தானே தோன்றுகிறது. “மைக்!!!! நீங்க அப்பாகிட்ட எப்போ பேசினேள்? அப்பா என்ன சொன்னார்?” என்றான் கீர்த்தி. 
“உங்கப்பா தெளிவா சொன்னார், எனக்கு நேத்ரா இல்லைன்னு” என்று வலிமிகுந்த குரலில் சொன்னான் மைக்கேல்.
கவிதையாவாள்!!!

Advertisement