Advertisement

24 – முத்தக் கவிதை நீ
சிலரைப் பற்றிய நினைவு வந்தாலே எரிமலை வெடிக்கத் துடிக்கும் உள்ளுக்குள். சிலரது நினைவுகள் நமக்கு சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்கும். அப்படியான உணர்வுகள் தான் மைக்கேலுக்கு அவனது ஸ்பிரிங்கின் நினைவலைகள் ஏற்படுத்தும். பாலைவனமாக இருந்த வாழ்க்கையில் ஒரு மாறுபட்ட கோணத்தைக் காட்டியவள் அவள். எவரிடமும் குறை சொல்ல மாட்டாள். மைக்கேல் தனது தாய்தந்தையரைப் பற்றி புலம்பிய காலங்களில் கூட அவனிடம் அவர்களுக்காக வாதிட்டவள் அவள்.
“ஸ்பிரிங்!!! உங்க ஊர்ல எல்லாம் அம்மா அப்பா குடும்பம்னா எவ்வளவு ஹேப்பியான விஷயமா இருக்கு. ஆனா பாரு ஐம் அ கர்ஸ்ட் ஸோல். நா பொறக்க காரணமானவங்க ரெண்டு பேருக்கும் என்னைப் பத்தின அக்கறை இல்லை. அவங்களுக்கு அவங்க வாழ்க்கை அவங்க சந்தோஷம் தான் முக்கியம்.” என்று சொன்ன போது “கமான் மேன்!! க்ரோ அப். எல்லாருக்கும் அவங்கவங்க செய்கைக்கு அவங்கவங்க பக்கம் நியாயங்கள் இருக்கும். அவங்களோட எல்லா செய்கைக்கும் உனக்கு அவங்க ஜஸ்டிஃபிகேஷன் தரனும்னு எதிர்பாக்காத. வர்றத அப்படியே எடுத்துக்கோ.” என்று அவனிடம் சொன்னவள்.
வாழ்க்கையை அதனின் இயல்போடு அப்படியே ஏற்றுக்கொள்ளக் கற்றுக் கொடுத்தாள் நேத்ரா. ஒவ்வொரு நிமிடத்தையும் அதன் போக்கில் ரசிக்கக் கற்றுக் கொடுத்தாள். மைக்கேலைப் பொறுத்தவரை அவனது வாழ்க்கையில் வந்த தேவதை அவள். அவளுடனான வாழ்க்கை அவனுக்கு வரம். அதனாலேயே தனது தாய்நாட்டை விட்டு விட்டு இங்கேயே வந்து நிரந்தரமாகத் தங்கி விடவும் முடிவு செய்து விட்டான்.
பள்ளிக்காலத்து அவளது நினைவுகளை அசை போட்டபடி வந்தவனை அந்த ஆட்டோ டிரைவரின் குரல் கலைத்தது. “ஜெயநகராதல்லி எல்லி சார்? ( ஜெயநகராவில் எங்கே சார்) என்றவரின் கேள்வியில் தன்னைச் சுற்றிப் பார்வையை ஓட்டியவன் தனது மொபைலில் வந்திருந்த முகவரியை அவரிடம் வாசித்துக் காட்ட அவரும் வண்டியைக் கிளப்பினார் மீண்டும்.
இம்முறை இருவரும் பேசிக்கொண்டனர். பெங்களூரின் சீதோஷ்ணம், போக்குவரத்து நெரிசல் என்று வழக்கமான பேச்சு வார்த்தைகளில் கழிய அந்த ஃப்ளாட்டின் முன் வந்து வண்டியை நிறுத்தினார். வண்டியை விட்டு இறங்கி கட்டணத்தை கொடுத்தவனிடம் “சார் இது என்னோட நம்பர். எப்போனாலும் கூப்பிடுங்க சார்” என்றவரை கேள்வியாகப் பார்த்தவனிடம் “இங்க ஆட்டோ டிரைவரை சார்னு கூப்பிடறவங்க இல்லை. நீங்க தான் மரியாதை குடுத்தீங்க. அதனால் இந்த பசவப்பா உங்களுக்கு தோஸ்த் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டான்” என்றார் சிரித்தபடி. 
ஒருவழியாக புதுநட்புடன் பேசிவிட்டு அந்த அபார்ட்மெண்ட்டின் இரண்டாம் தளத்திற்கு படியேறி வர அங்கே காரிடாரில் அவனை வரவேற்பது போல் எதிரே ஹரிணியும் மியாவும் நின்றிருந்தனர். மியாவின் முகத்தில் தோன்றிய ஆச்சரியமே அவள் மைக்கேலின் வரவை எதிர்பார்க்கவில்லை என்று காட்டியது. 
கேள்வியாக டெட்டியைப் பார்க்க அவ்ளோ லிட்டர் கணக்கில் முகத்தில் அசடு வழிய சிரித்தபடி “மியா!!! அது… ஸ்பிரிங் எப்படியும் எதுவும் பேசுவான்னு எனக்குத் தோணல. அதான் மைக்கேல் வந்து கீர்த்திண்ணாகிட்ட பேசினா சரிவருமோன்னு நினைச்சேன். அதான் அட்ரெஸ் அனுப்பினேன்” என்றாள். வெளிப்படையாகத் தெரியாத வகையில் அவளது கையில் கிள்ளிய மியா அடிக்குரலில் “ஸ்பிரிங் உன்னைக் கொல்லப் போறா பாரு. ஏன் அவகிட்ட சொல்லாம இப்படி பண்ற டெட்டி?” என்று உறுமிக் கொண்டிருக்க இவர்களை நோக்கிச் சிரித்தபடி வந்து நின்றான் மைக்கேல்.
டெட்டியின் சிரிப்பு வரவேற்பதாக இருந்தாலும் மியாவின் முகத்தில் இருந்த குழப்பம் தெளிவாகச் சொல்லியது ஏதோ சரியில்லை என. மியா அடுத்து எதுவும் பேசும் முன் அவளின் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஹரிணி “வாங்க மைக்!! உங்களுக்குத் தான் வெய்ட் பண்றோம்.” என்றபடி மைக்கேலை அழைத்துக் கொண்டு கீர்த்தியின் வீட்டை நோக்கி நகர்ந்தாள். 
ஒருநிமிடம் திகைத்து நின்ற மியா இவள் அடுத்து என்ன ப்ரச்சனையை கிளப்பப் போகிறாளோ என்ற குழப்பத்துடன் அவர்கள் பின்னே ஓடினாள். கீர்த்தியின் அப்பார்ட்மெண்ட் கதவினை அடைந்த டெட்டி ஒருநிமிட தயக்கத்தின்பின் கதவைத் தட்ட முயல அதே நேரம் கதவைத் திறந்த கீர்த்தி அதிர்ந்து ஒருநிமிடம் அப்படியே திகைத்து நின்றான்.
அவ்வளவு நேரம் நேத்ராவிடம் மைக்கேலைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த கீர்த்திக்கு தன் முன்னே வந்து நின்ற மைக்கேல் ஒரு நிமிடம் அதிர்வைக் கொடுத்தான் தான். இருந்தும் டக்கென்று சுதாரித்த கீர்த்தி புன்சிரிப்புடன் “வெல்கம் வெல்கம். நீங்க மைக்கேல் தானே?. ஐம் கீர்த்திவாசன். நேத்ராஸ் ப்ரதர். ப்ளீஸ் கமின்” என்று வரவேற்க மைக்கேலோ “தாங்க்ஸ் கீர்த்தி. எப்படி இருக்கீங்க?” என்று தனது ட்ரேட்மார்க் தமிழில் பதிலுக்கு அசத்தினான். கீர்த்தி மைக்கேலின் தமிழில் அசந்தே போனான். இவர்களை டெட்டி ஆவென வாய்பிளந்து பார்த்தபடி உள்ளே நேத்ராவிடம் ஓடினாள்.
உள்ளே ஸ்டடிரூமில் இருந்த நேத்ராவின் பார்வையே சொல்லியது அவள் கீர்த்தியிடம் எல்லாம் சொல்லி விட்டாளென. இவளிடம் இப்போது மைக்கேல் வந்த விபரத்தை எப்படிச் சொல்வது என்று விழித்தபடி நின்ற டெட்டியையும் மியாவையும் மாறி மாறி பார்த்த நேத்ராவிற்கு ஏதோ சரியில்லை என்பது புரிந்து போனது. என்னவென்று அதிகம் யோசிக்க வேண்டி நேராமல் கீர்த்தியின் அழைப்பு வந்து சேர்ந்தது.
என்னவாக இருக்கும் என்று யோசித்தபடியே ஹாலுக்கு வந்த நேத்ராவிற்கு மைக்கேலைக் கண்டதும் உலகமே நின்றது. இவன் எப்படி இங்கே என்று யோசித்தபடியே திரும்ப அங்கே காதைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடுவதற்குத் தயாராக நின்றிருந்தாள் ஹரிணி. மியாவுமே “சாரி” என்று வாயசைக்க அடுத்து என்ன என்று யோசித்தபடி கீர்த்தியின் அருகில் சென்றாள் நேத்ரா.
தன்னருகில் வந்தமர்ந்த நேத்ராவின் கைகளைத் தன் கைகளுக்குள் பாதுகாப்பது போல் பிடித்து வைத்துக் கொண்டவன் மைக்கேலுடனான உரையாடலை தொடர்ந்தான். இருவருமே சற்று நேரம் பொதுவாகப் பேசியபடி இருந்தனர். ஓரிரு நிமிடப் பேச்சுக்குப் பின் அங்கே ஒரு கணத்த மௌனம் நிலவியது.
கீர்த்தியையும் நேத்ராவையும் மாறி மாறிப் பார்த்த மைக்கேல் ” நம்ம வெளியே போயிட்டு வருவோமா? கொஞ்சம் ஃப்ரீயா பேசலாம்” என்றான். ஒருநிமிடம் யோசித்த கீர்த்தியும் நேத்ராவிடம் “நாங்க வெளில போயிட்டு வரோம்டா. நீங்க ரூமுக்கு போங்க. நான் அப்புறமா உனக்கு கால் பண்றேன்” என்றான்.
‘அப்பாடியோ! இவ்வளவாவது நம்மை போகச் சொல்கிறானே’ என்று சந்தோஷத்தை அனுபவிக்கக் கூட முடியாதபடி அப்படி என்ன தான் மைக்கேலும் கீர்த்தியும் பேசப்போகிறார்களோ?’ என்ற தவிப்பும் சேர்ந்து கொண்டது. டெட்டிக்கு ‘ஐயோ இவங்க பேசிறதைக் கேட்க முடியாதா’ என்ற ஆதங்கம் இருந்தாலும் எதாவது சொன்னால் இப்போது ஸ்பிரிங் கொன்றே விடுவாள் என்பது புரிந்ததால் கிளம்பினாள். பெண்கள் மூவரும் தங்கள் ரூமிற்கு கிளம்ப கீர்த்தியும் மைக்கேலும் வெளியே கிளம்பினர்.
———————————————————————————————————————————————
அறைக்குள் குட்டிப்போட்ட பூனையாய் சுற்றிச்சுற்றி வந்த ஸாஷாவால் கோபத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. எத்தனை மெனக்கெட்டுத் திட்டமிட்டிருந்தாள். ஆரம்ப காலத்தில் இருந்தே மைக்கேல் என்றால் ஒரு மயக்கம் தான் அவளுக்கு. எவ்வளவோ முறை தன்னைப் புரிய வைக்க முயன்று பார்த்தாள். ஏனோ அவனது ஒதுக்கம் அவளுக்கு ஒரு சவால் போன்றே அமைந்தது.
அவன் மற்றவர்களைப் போல் இல்லாததே அவனை இன்னும் பிடித்தது. மறைமுகமாகவும் நேரடியாகவும் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தும் அவன் கண்டுகொள்ளாதது அவளுக்கு வேறு வழியில்லாமல் செய்தது. அவனைப் பின்தொடர்ந்து இந்தியாவும் வந்து சேர்ந்தாள். இவர்களது புகைப்படத்தை வெளியிட்டால் அவன் புரிந்து கொள்வான் என்று நினைத்தாளே ஒழிய அவனுக்கு வேறு பெண்ணைப் பிடித்திருக்கும் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை.
ஸாஷா அறியாத இன்னொரு விஷயம் மைக்கேல் நேத்ராவின் காதல் வருடங்கள் கடந்தது என்று. ஏனோ தான் பல காலமாக முயன்றும் தன்னைப் புரிந்து கொள்ளாத மைக்கேல் இந்தியா வந்த சிலநாட்களுக்குள்ளாகவே தனது வாழ்க்கை என்று ஒரு பரட்டைத்தலைப் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டது வெறியை ஏற்படுத்தியது. தனக்கு கிடைக்காவிட்டாலும் மைக்கேலின் காதல் அந்தப் பரட்டைத் தலைக்கும் கிடைக்கக் கூடாது என்ற வெறியிலேயே இவர்களை எல்லாம் பின் தொடரத் தொடங்கினாள்.
நேத்ராவிடம் ஒதுங்கிக் கொள்ளும்படி மிரட்டிப் பார்த்தாள். நேத்ராவோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் “டூ வாட் யு கேன்” என்று சொல்லி விட ஸாஷாவின் கோபம் எல்லை மீறியது. ஏதாகிலும் செய்து இந்த பரட்டைத் தலைப் பெண்ணை மைக்கேலிடம் இருந்து அகற்றி விட்டால் பிறகு அவனை மணமுடிப்பது எளிது என்று கணக்குப் போட்டாள் ஸாஷா. காதல் ஒன்றும் ஒன்றில்லாவிட்டால் மற்றொன்று என்று சாய்ஸ் வைத்துக் கொள்வதல்ல என்று அவளுக்குப் புரியவில்லை. தலைக்கேறிய கோபத்தில் அவசர அவசரமாக தனது மொபைலில் யாருக்கோ அழைத்து கத்தத் தொடங்கினாள்.
———————————————————————————————————————————————
வெளியில் சென்று பேசலாம் என்று கிளம்பிய மைக்கேலும் கீர்த்தியும் வீட்டின் அருகில் இருக்கும் பார்க்கிற்குச் சென்றனர். பகல் நேரமென்பதால் அவ்வளவு கூட்டமில்லை. ஆங்காங்கே சில மூத்த குடிமகன்கள் தங்களது நீரழிவு நோய்க்கு தீர்வாக வேகநடை பயின்று கொண்டிருந்தனர். இருவரும் ஒரு மரநிழலில் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டனர். சற்று நேரம் ஒரு அசௌகர்யமான மௌனம் நிலவியது.
கீர்த்தி மைக்கேலை ஓரப்பார்வையில் எடைபோட முயன்று பார்த்திருக்க சற்று நேரம் அமைதியாக இருந்த மைக்கேல் கீர்த்தியை நேர்பார்வை பார்த்தான். “என்ன சார் உங்காத்து பொண்ணுக்கு நான் எப்படி பொருத்தமா இருப்பேன்னு பாக்கறேளா?” என்று உணர்ச்சிகளை வெளிக்காட்டாத குரலில் கேட்டான். ‘டேய் இருடா! நீ தமிழ் பேசறதே எனக்கு ஆச்சரியம். இதுல இப்படி எங்களவா பாஷைல இப்படி பொளந்து கட்டினா எப்படி டா. கொஞ்சமாவது கேப்விட்டு அடிடாப்பா அம்பி’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவனாய் மறுத்து தலையாட்டினான் கீர்த்தி.
“மனசுக்குப் பிடிச்சிட்டா வேற எதுவுமே பெரிசில்லைன்னு நினைக்கிறவன் நான். எனக்கு உங்க நேஷனாலிட்டியோ ரிலீஜியனோ ப்ரச்சனை இல்லை. என் தங்கையோட சந்தோஷம் தான் பெரிசு. அவ தனக்குனு எதுவுமே ஆசைப்படாதவ. அப்படிபட்டவளுக்கு எப்படி உங்களைப் பிடிச்சுது? ஹௌ டிட் ஷீ லவ் யூ?” என்றான் கீர்த்தி.
“நா அவ சோல்மேட் சார். ஷீ இஸ் மை ஏஞ்சல். லைஃப்ல எதுமேலயும் பிடித்தமில்லாம நா இருந்தப்போ எனக்கு வாழ்க்கைல ஈடுபாடு ஏற்படுத்தினவ அவ தான். எல்லாரோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்குனு எனக்குப் புரிய வச்சவ. எல்லாருக்கும் அவங்கவங்க செய்கைக்கு அவங்கவங்களுக்குனு நியாயம் இருக்கும்னு சொல்லிக் குடுத்தவ. எனக்கு யாருமே இல்லைனு துவண்டு போய் உட்காராம என்னால யாரையாவது சந்தோஷப்படுத்த முடியுமானு பாக்க வைச்சவ. யூ ஆர் வெரி லக்கி கீர்த்தி. உங்க வீட்டுப் பொண்ணு ஒரு தேவதை. அந்த தேவதை எனக்கு வாழ்நாள் முழுக்க கூட இருக்கனும்னு ஆசைப்படறேன்.”
“அவ கூட இருந்தா நா சந்தோஷமா இருப்பேன்றது எவ்வளவு உண்மையோ அதே மாதிரி என்கூட இருந்தா அவளும் சந்தோஷமா இருப்பா. அவளோட தான் என்னோட ப்யூச்சர்னு தெரிஞ்சதும் எனக்கு மத்த எதுவுமே பெரிசா தெரியல. நான் பொறந்த ஊர், நாடு, மக்கள், வாழ்ந்த கலாச்சாரம் எதுவுமே எனக்கு அவளவிட பெரிசில்ல.அதனால தான் எல்லாத்தையும் விட அவதான் முக்கியம்னு அவகூட வாழற வாழ்க்கை தான் முக்கியம்னு வந்துட்டேன்.”
“உங்க எல்லாருக்கும் என்னை பிடிக்கும்னு எல்லாம் நான் ஓவரா பேராசைப்படல. ஆனா என்னால என்னை, என்னோட காதலைப் புரியவைக்க முடியும்னு நம்பிக்கை இருக்கு. எனக்கு உங்க நிலைமை புரியுது. எங்கிருந்தோ திடீர்னு வந்து உங்க தங்கையைக் கல்யாணம் பண்ணித்தாங்கனு கேட்டா அது எவ்வளவு பெரிய ஷாக்குனு புரியுது. டேக் யுவர் டைம். எல்லாரும் நல்ல யோசிச்சு சொல்லுங்க.”
“டீனேஜ்ல வந்த காதல் தான். வெறும் இன்ஃபாக்சுவேஷன்னு ஒதுக்க தான் முயற்சி செஞ்சோம் ரெண்டு பேரும். ஆனா இங்க இந்தியாவுல இருந்து போகும் போதே எனக்கு தெளிவாத் தெரிஞ்சு போச்சு எனக்கு இனி இங்க தான். அவ தான்னு. அதான் கொஞ்சம் டைம் எடுத்துகிட்டேன். நிறைய கத்துண்டேன். என்னை நானே தயார் பண்ணிண்டேன். நேத்ராவோட மனசும் காதலும் உங்களுக்கு இப்போ புரிஞ்சிருக்கும். இனி இட் இஸ் அப் டு யூ. நீங்களா சம்மதிக்கிற வரைக்கும் நாங்க வெய்ட் பண்றோம்.”
“இது என்னோட ஆஸ்திரேலியா அட்ரெஸ். நான் இதுக்கு முன்ன அங்க வேலை செஞ்ச ஃபர்மோட ஃபோன் நம்பர். என்னைப் பத்தி நீங்க விசாரிச்சுக்கலாம். இது எனக்கு வேதம் கத்துக்குடுத்தவரோட கான்டாக்ட் நம்பர். என்னோட பாஸ்போர்ட் காப்பி இதோ. உங்கள்ள ஒருத்தரா என்னை ஏத்துப்பீங்களா கீர்த்தி? இதுவரை குடும்பங்கிற ஒரு கான்செப்ட் எனக்கு எப்படினு தெரியாமலேயே போச்சு. என்னை உங்க குடும்பத்துல ஒராளா ஏத்துப்பீங்களா? எனக்கு நேத்ரா மட்டும் வேணும்னு நான் கேட்கல. எனக்கு உங்க குடும்பத்துல ஒராளா என்னை ஏத்துக்கனும். முடியுமா?” கண்களில் ஆயிரம் எதிர்பார்ப்புகளோட கீர்த்தியின் பதிலுக்காக பார்த்திருந்தான் மைக்கேல்.
கவிதையாவாள்!!!!!!

Advertisement