Advertisement

23 – முத்தக் கவிதை நீ
ப்ரதீப் தன் தங்கையைப் பார்க்கும் வரைக்கும் கூட ஏதேதோ காரணம் சொல்லி தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டு தங்கைக்கு மணமுடிப்பதைப் பற்றி யோசித்திருந்தான் கீர்த்தி. ஆனால் பெண் பார்க்க என்று வந்து விட்டு அதுவரை போட்டிருந்த அப்பாவி வேஷம் கலைந்து அவளை தன் முன்னேயே விழுங்கி விடுவது போல பார்த்து வைத்த ப்ரதீப்பை கீர்த்தியால மன்னிக்கவே முடியவில்லை. 
மேலும் எங்கோ ஒரு மூலையில் காலையில்  இருந்தே அவன்‌ மனதுக்குள் ஏதோ சரியில்லை என்று முணுமுணுத்துக் கொண்டே இருக்கின்றது. எப்போதுமே நேத்ரா வீட்டில் அவ்வளவு பேசுவதில்லை தான். ஆனால் அவளது முகத்தில் வழக்கமாக இருக்கும் தெளுச்சி(தெளிவு) இப்போது சுத்தமாக இல்லை. எதையோ பறிகொடுத்தாற் போல் எங்கோ விட்டத்தை வெறித்தபடி இருந்தாள்.
இதற்கு இரண்டே காரணங்கள் தான் இருக்க இயலும். ஒன்று அவளுக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம். இரண்டாவது இந்த மாப்பிள்ளை வேண்டாம். இதில் எதுவாக இருக்க இயலும்?? நேத்ராவிற்கு ப்ரதீப்பைப் பிடிக்காமல் போக இப்போதைக்கு சாத்தியமில்லை. காரணம் அவள் அவனை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. அப்படியென்றால்????
கீர்த்தி இரண்டும் இரண்டும் நான்கு என்று கணக்கைச் சரியாக போட்டுவிட்டான். தன் தங்கையின் முகவாட்டத்தை வைத்தே புரிந்து கொண்டான் அவளுக்கு இந்த திருமணம் வேண்டாம். அவள் மனதில் ஏதோ, யாரோ இருப்பது புரிந்தது. மேலும் இந்த இதுவரை மிகவும் டீசண்டாக தெரிந்த ப்ரதீப் கொஞ்சம் கூட கூச்சமின்றி தாயும் நண்பனும் இருக்கையிலேயே தன் தங்கையைப் பார்த்த பார்வை கீர்த்தியை ‘என்ன ஆனாலும் இவனுக்கு என் தங்கையைக் கொடுப்பதில்லை’ என்ற முடிவை எடுக்க வைத்தது. ஆனால் இதுவரை தனக்கு உதவி செய்த நண்பனிடம் அதை எப்படி அவனிடம் சொல்வது என்று யோசித்திருந்தான்.
அந்த கவலை கூட உனக்கு வேண்டாம் என்பது போல் ப்ரதீப் நேத்ராவிடம் பேசுகிறேன் என்ற பெயரில் அடித்த கூத்தில் எப்படிச் சொல்ல வேண்டும் என்ற முடிவும் எடுத்து விட்டான். ரேணுகா புரிந்து கொண்டார். வீட்டிற்குள் நுழையும் போது கீர்த்தியின முகத்தில் இருந்த குழப்பம் தன் மகன் பேசத் தொடங்கியதும் இல்லாது போனது புரிந்தது. அவரும் பெண் தானே. அவருக்கும் ஒரு மகள் இருக்கிறாளே. தங்கள் வீட்டுப் பெண்ணிடம் இப்படி பெண் பார்க்க வந்தவன் பேசினால் தான் எப்படி எடுத்துக் கொள்வோம் என்று உரைக்கத்தான் செய்தது.
ஒருபுறம் இவ்வளவு அழகான பெண்ணை தன் மகனுக்கு பெண்ணெடுக்க இயலவில்லையே என்ற வருத்தம் உள்ளூர இருக்கத்தான் செய்தது. இருந்த போதிலும் நேத்ராவின் தலையில் கைவைத்து “ஷேமமா இரு” என்று ஆசீர்வதித்து விட்டே கிளம்பினார். அதுவரை பிடித்து வைத்திருந்த மூச்சை பெருமூச்சாக வெளியிட்ட நேத்ரா தனது அண்ணனின் முன் கைகூப்பி நின்றாள் அழுதபடி. அவளை தன்னோடு அணைத்து அவள் தலைகோதினான்.
மெல்லத் தொடங்கிய விசும்பல் அழுகையாக மாறியது நேத்ராவிற்கு‌. அண்ணனின் தோள் அவளது மனக்கஷ்டத்திற்கு அபயகரம் அளித்தது. அழுது ஓயட்டும் என்று காத்திருந்தான் கீர்த்தி. மியாவிற்கு டெட்டிக்கும் தலைசுற்றி விழாத குறை தான். இந்த திருமணத்தை நிறுத்த கீர்த்தியிடம் என்னவெல்லாம் பேச வேண்டும் எப்படியெல்லாம் பேச வேண்டும் என்று ஒத்திகை எல்லாம் பார்த்து வைத்திருந்தாள். இப்போது அதற்கு வேலையற்றுப் போனதில் போன உயிர் திரும்பியது ஹரிணிக்கு.
நேத்ராவின் அழுகை குறைந்து மெல்லிய விசும்பலாகி பின் அவளே கண்களை துடைத்துக் கொண்டு நிமிர கீர்த்தி அவளை அமர்த்தி அவளுக்கு குடிக்க குளிர்ந்த நீர் எடுத்து வந்து கொடுத்தான். அவள் தண்ணீர் பருகி முடிக்கும் வரைக்கும் காத்திருந்தவன் அவளிடம் “நேத்தும்மா!!!! நான் அதிகம் பேசாததால எனக்கு பாசமில்லைன்னு நினைச்சிட்டியா?  இன்னிக்கு வரைக்கும் உனக்கு நல்லது எது உன்னோட சந்தோஷம் இப்படித்தான் பார்த்து நான் செஞ்சிருக்கேன். இப்பவும் இந்த லைக் யூ நோ ப்ரதீப்போட கட்டாயம் உனக்கு கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன். என்ன ப்ரச்சனைனு நீ என்கிட்ட சொன்னாதானே நான் உனக்கு உதவி செய்ய முடியும்?” சிறுபிள்ளைக்கு சொல்வது போல் அவளிடம் சொன்னான்.
அவன் சொல்வதில் எந்த தப்பும் இல்லை என்பது நேத்ராவுக்கு புரிந்தது. மேலும் கடந்த சில வருடங்களாக தனக்குள்ளேயே அடைத்து வைத்திருப்பதை வெளியில் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம் இருப்பது புரிந்தது அவளுக்கு. மைக்கேல் தான் தனக்கான வாழ்க்கை என்பது தெளிவானது. இன்னும் வீட்டில் சொல்லாமல் விட்டால் முன்பு செய்தது போல் தந்தையோ அல்லது இம்முறை அன்னையோ மீண்டும் யாருக்கேனும் வாக்கு கொடுத்தேன் நாக்கு கொடுத்தேன் என்று தன் வாழ்வில் கபடி விளையாடினால் அவ்வளவு தான் என்பதால் கீர்த்தியிடம் சொல்லி விடுவது என்றும் அவன் முடிவைப் பொறுத்து பின் யோசிக்கலாம் என்றும் முடிவு செய்தாள்.
நேத்ரா வாய்திறவாமல் இருந்த ஓரொரு நிமிடமும் ஹரிணிக்கு பிபி எகிறும் நிலை தான். எங்கே விட்டால் இவள் போய் கீர்த்திண்ணாவிடம் ஒப்பிப்பாளோ என்ற பயத்தில் மியா டெட்டியின் கரங்களை அழுத்திக் பிடித்துக் கொண்டாள். இனி தாங்காது என்று டெட்டி பேசிவிடலாமென்று நினைக்கையில் அதுவரை பிடித்து வைத்திருந்த அமைதியைக் கைவிட்டவளாய் நேத்ரா “அண்ணா!! நா … வந்து ரொம்ப நாளா உங்கிட்ட பேசனும்னு…. அது.. வந்து.. இந்த விஷயத்துல.. அண்ணா…. எம்மேலக் கோபப்பட மாட்டியே” திக்கித் திணறி வார்த்தைகளைப் பாதி விழுங்கி ஆரம்பித்து விட்டாள்.
அவளது படபடப்பை உணர்ந்தவனாய் அவளது தோள் மீது கைவைத்து “நேத்தும்மா!! அண்ணாவப் பத்தி நீ புரிஞ்சுண்டது இவ்வளவு தானா? நோக்குத் தெரியாதா நோக்குப் பிடிக்காத விஷயத்த நா எப்பவும் பண்ண மாட்டேன். இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, விஷயம் என்னவானாலும் ஐம் தேர் வித் யூ. பயப்படாதே. நம்ம கையை மீறிப் போற விஷயம்னு எதுவுமே இல்லை. என்னனு சொல்லு. என்ன செய்யலாம்னு நாம சேர்ந்து யோசிக்கலாம். சரியா?” என்றான்.
அண்ணனின் கைகளைப் பற்றியவள் தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டு “அண்ணா… வந்து … நேக்கு ஒருத்தரப் பிடிச்சிருக்கு. உங்களுக்கெல்லாம் ஓகேன்னா நா அவரையே கல்யாணம் பண்ணிக்கலாமா? முன்னமே சொல்லாதது தப்பு தான். நானும் வேணாம்னு தான் நினைச்சேன்.  நா எவ்வளவோ மறக்க முயற்சி பண்ணிட்டேன்ணா. முடியல. சாரிண்ணா” பேசிக் கொண்டே போனவள் உடைந்து அழத்துவங்கினாள்.
ஓரளவு இதைப் போன்ற காரணத்தை எதிர்பார்த்திருந்த கீர்த்தி தங்கை அழத்துவங்கியதும் மற்றதனைத்தும் மறந்தவனாய் அவளைத் தன் தோளோடு சாய்த்துக் கொண்டு “இவ்வளவு தானா? இதுக்குப் போய் பயந்தியாக்கும்? அட அசடே!!! எதுனாலும் அண்ணாகிட்ட தைரியமா சொல்லலாமே நேத்தும்மா. அண்ணா பாத்துப்பேனே. சொல்லு யாரந்த லக்கி பாய்? உன்னோட கூடப்படிக்கிறானா?” என்றான்.
மெல்ல மறுப்பாய் தலையசைத்தபடி நிமிர்ந்து அண்ணனை கண்ணீரினூடே பார்த்தவளுக்கு கீர்த்தியின் கையணைப்பு தைரியத்தைத் தந்தாலும் உள்ளுக்குள் என்னவோ பயம் உருட்டத்தான் செய்தது. எவ்வளவு முயன்றும் நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டு பேச்சு வராமல் சண்டித்தனம் செய்யவே மேலும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. நேத்ரா எதுவும் சொல்லாமல் சிலையாய் நின்றதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹரிணிக்குப் பொறுமை பறக்க தான் போய் கீர்த்திண்ணாவிடம் எல்லாம் விளக்கி விடலாம் என்று எண்ணி எழ அவளைப் பிடித்து இழுத்த மியா “திஸ் இஸ் ஹர் டைம் நௌ. அவ பேசட்டும். வா நாம வெளில போலாம். லெட்ஸ் கிவ் தெம் சம் ஸ்பேஸ்” என்று தணிந்த குரலில் கிசுகிசுக்க டெட்டிக்கும் அதுவே சரியெனப் பட இருவரும் எழுந்தனர்.
தங்கையிடம் இருந்து பார்வையை உயர்த்திய கீர்த்தியிடம் சைகையால் தாங்கள் வெளியே போய் வருகிறோம் என்று சொல்லி விட்டு இருவரும் அங்கிருந்து அகன்றனர். கீர்த்தி நேத்ராவை ஸோஃபாவில் அமர வைத்தவன் அவளுக்குப் பருக தண்ணீர் கொடுத்து அவள் பருகும் வரை அமைதியாகக் காத்திருந்தான். புலி வருகிறது என்று தெரிந்தாயிற்று. ஆனால் வரும் புலியைச் சாமாளிக்கும் வழி தான் இனி யோசிக்க வேண்டுமே தவிர பயந்து காரியம் ஆகாது என்று புரிய நேத்ராவின் பதிலுக்காக அவளைப் பார்த்திருந்தான்.
தண்ணீரைப் பருகி முடித்தவள் தாங்கள் இருவரும் தனித்து விடப்பட்டதை உணரந்து தனது நட்புக்களை நினைத்து சிரித்துக் கொண்டாள். ‘நேத்ரா லெட்ஸ் கெட் திஸ் டன் . கமான்.’ மனதுக்குள் தனக்குத் தானே சொல்லி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அண்ணன் அருகில் அமர்ந்து சில வருடங்களாக தனக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டிருந்த அத்தனையையும் கொட்டித் தீர்க்கத் தொடங்கினாள்.
பெங்களூர் நகரத்து பிஸியான மதிய நேரம். ஓலா, உபர், கெட் ரைட் என அத்தனை அப்களிலும் ஆட்டோ, கேப் என புக் செய்ய முயற்சி செய்து தோற்றுப் போய் கடுப்பாகிப் போன மைக்கேல் தனது ரூமைவிட்டு வெளியே வந்தான். யுனிவர்சிட்டிக்கு அருகே என்ற ஒரே காரணத்தால் சிட்டியை விட்டு சற்றே தள்ளி இருந்த இந்த இடத்தில் தங்குமிடம் பார்த்த தவறுக்கு இன்று தன்னைத் தானே நொந்தபடி போகும் ஆட்டோக்களை எல்லாம் நிறுத்த முயன்றான்.
அரைமணி நேரப் ப்ரயத்தனத்திற்குப் பின் ஒரு வழியாக வந்து நின்ற ஆட்டோவில் இருந்து எட்டிப் பார்த்த டிரைவர் “ஓ! யாக்கடே ஹோக் பேக்கு?” என்றார் புருவத்தை உயரத்தியபடி. மைக்கேலைப் பார்த்தாலே தெரியும் அவன் இந்தியனல்ல என்று. இருந்தும் அவர் அவனுக்கு கன்னடம் புரியாது என்று தெரிந்தும் கேட்டு வைக்க “ஜெயநகரா ஹோக் பேக்கு. பர்த்தீரா?” (ஜெயநகர் போகனும். வர்றீங்களா?) என்றான். மைக்கேலின் சரளமான கன்னடத்தில் அதிர்ந்தனர் பின் நட்பாய் புன்னகைத்தபடி “சாரி சார். நா வேற வழி போகனும். ஆனா உங்க கன்னடத்துக்காக வரேன்.” என்றார் சிரித்தபடி. அவ்வளவு நேரக் காத்திருப்பு தந்த எரிச்சல் நொடியில் பறந்து போக “தாங்க்ஸ் ப்ரோ. ஐம் மைக்கேல்” என்று அவரிடம் கைகுலுக்குவதற்காக நீட்ட அவனையும் தன்முன் நீட்டப்பட்ட அவனது கரத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்தவர் சிரித்துக் கொண்டே “வெல்கம் ப்ரோ. நா பசவப்பா.” என்றார் சிநேகமாக.
“ஆட்டோக்காரங்ககிட்ட இன்ட்ரோ குடுக்கறீங்களே! எவ்வளவு நாளாச்சு ப்ரோ பெங்களூர் வந்து?” என்றார் வண்டியைக் கிளப்பியபடி. பொதுவாக மைக்கேல் சட்டென்று யாரிடமும் பழகிவிடும் குணம் இல்லை. ஆனால் ஸ்பிரிங் இந்த இடத்தில் இருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்பாள் என்று யோசித்தே அவன் பல இடங்களில் நடந்து கொள்வான். நேத்ராவிற்கு மனிதர்களை ஆழ்ந்து கவனிப்பது ரொம்பப் பிடிக்கும்.
நேத்ராவிற்கு தன்னைச் சுற்றி எப்போதும் கலகலப்பான மனிதர்கள் வேண்டும். யாரேனும் சற்று நேரம் அமைதியாகவோ வருத்தத்தோடோ இருந்தால் அவளால் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. எதாவது அவர்களிடம் பேசி அவர்களைச் சீண்டி என அந்த இடத்தையே கலகலப்பாக்கி விடுவாள். அவளைப் பார்த்து தான் மைக்கேல் வாழ்க்கையை வேறு ஒரு கோணத்தில் பார்க்கவே கற்றுக் கொண்டான். 
அவளுடன் இருந்தது ஒருவருடம் தான். ஆனால் அந்த ஒரு வருடம் அவனுக்கு வாழ்க்கையையே திசை மாற்றி இருந்தது. மனிதர்கள் மீது நம்பிக்கையற்றுப் போய் இந்தியா வந்த மைக்கேலுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டதே அவனது ஸ்பிரிங்கினால் தான். அன்பு, காதல், குடும்பம் இவற்றின் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருந்தவனை தனது ஒற்றைப் பார்வையால் வீழ்த்தினாள் நேத்ரா. அவளை சந்தித்த சில தினங்களிலேயே அவனுக்குத் தெரிந்து போனது இவள் தான் தனது வாழ்க்கை, இங்கு தான் தனது எதிர்காலம் என.
முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்தில் வளர்ந்திருந்த மைக்கேலுக்கு இங்கே குடும்பத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் புதிதாக இருந்தது. முக்கியமாக காதல் என்பது ஏனோ பெரிய கொலைக்குற்றமாக பெரியவர்களால் பார்க்கப்பட்டது விநோதமாகவே இருந்தது. அவர்களது நாட்டில் டேட்டிங், லவ் என்பதெல்லாம் சர்வ சாதாரணம். ஆனால் இங்கே அப்படி இல்லை என்பதே நேத்ராவின் அப்பாவை அவன் சந்திக்கும் வரை அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. அவன் நினைப்பது போல் அவளது ஸ்பிரிங்கின் வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொள்வதென்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல என்பதை மனிதர் தலையிலறைந்து உணர வைத்தார்.
அறையில் கணத்த மௌனம் நிலவியது. நேத்ரா சொன்ன விஷயங்களை ஜீரணிக்கவே அவனுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. காதல் ஒன்றும் செய்யக்கூடாத விஷயமில்லை தான். தன் தங்கை காதலிக்கிறாள் என்பதே அவனுக்கு முதலில் பெரிய ஆச்சரியம்‌. அதிலும் அவள் காதலிக்கும் நபர்?? கீர்த்தியைப் பொறுத்தவரை அவனுக்கு நேத்ராவின் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் எந்த மறுப்பும் இருக்கவில்லை. ஆனால் வீட்டில் இருப்பவரை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தான் விளங்கவில்லை.
வைதீகம் மட்டுமே முக்கியம் என்று வாழ்ந்து வரும் தந்தை, கணவனின் பேச்சிற்கு மறுபேச்சு என்றுமே கிடையாது என்று வாழும் அன்னை, இவர்களை எப்படி சமாளிப்பது. கட்டாயம் குடும்பத்தில் இருப்பவர் அத்தனை பேரும் சம்மதித்தால் மட்டுமே தன் திருமணம் நடக்கும் என்பதில் நேத்ரா உறுதியாகச் சொல்லி இருந்தாள்.
அதை நினைத்து பெருமைப்படுவதா? இல்லை இவர்களை தான் எப்படி சமாளிக்கப் போகிறோமென்று என்று கவலைப்படுவதா? என்ன தான் மைக்கேலுடன் காதல், அதுவும் பள்ளி படிக்கும் காலத்திலேயே துளிர்த்த காதல், அவனுடன் தான் கல்யாணம், என்றெல்லாம் சொன்னாலும் நேத்ராவிற்கு காதலா குடும்பமா என்று வந்தால் முதலில் முக்கியத்துவம் குடும்பத்துக்கே என்பது அவனுக்கு நன்கு தெரியும். ஒருவேளை விதிவசத்தால் கிருஷ்ணாவுடனான திருமணம் நடந்திருந்தால் கூட நேத்ரா மறுத்திருக்க மாட்டாள்.
குடும்பத்திற்காக தனது காதலை இழக்கத் துணிந்திருப்பாள் தான். அப்படிப்பட்ட தங்கையின் இதயத்தை திருடியவனை நேரில் பார்க்கும் ஆர்வம் அதிகமாகியது கீர்த்திக்கு. ‘நம்ம கூட அதே ஸ்கூல்ல தானே படிச்சோம். நமக்குத் தெரியாம எப்படி? பச்சப்புள்ளயாவே இருந்திருக்கோமே’ என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டவன், “நேத்தும்மா!! மைக்கேலை நான் பாக்கனுமே. எப்போ மீட் பண்ணலாம்?” என்றான். அண்ணனிடம் எல்லாம் சொன்னாலும் கூட அண்ணன் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற பயம் டண்கணக்கில் மனதை அரித்திருக்க கீர்த்தி மைக்கேலை பார்க்க வேண்டும் என்று சொன்னதும் பயமும் ஆச்சரியமும் சேர்ந்து பயமுறுத்தியது.
“அண்ணா!!! கொஞ்சம் டைம் குடுண்ணா. நா அவனை உன்கிட்ட பேசச் சொல்றேன்.” என்று சொல்லும் போதே அறைக்குள் அவசர அவசரமாக வந்த டெட்டி “அண்ணா!!!! வந்து… உங்களப் பார்க்க…… வந்திருக்காங்க…” என்று சொல்ல அவளது பார்வை நேத்ராவை நோக்கி கெஞ்சியது. யாராக இருக்கும் என்று யோசித்தபடி பார்த்திருந்த நேத்ராவின் பார்வை டெட்டியின் பின்னோடு வந்தவரின் மீது படிய ஹை வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போல் உறைந்து நின்றாள் நேத்ரா…..
கவிதையாவாள்!!!!!!!!!

Advertisement