Advertisement

10 – முத்தக் கவிதை நீ
பெங்களூரில் ஜெயா நகரில் மிகவும் பரபரப்பான காலை நேரமது. தனது வழக்கமான சோம்பேறித்த்தை மூட்டை கட்டி வைத்தவளாய் நேத்ரா கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.  ஏனோ காலை எழுந்தது முதலே அவளுக்கு மனதுக்குள் ஏதோ சரியாகப்படவில்லை. தான் என்ன மாதிரியாக உணர்கிறோம் என்றும் புரியவில்லை. ஏதோ இனிம் புரியா உணர்வால் கட்டுண்டவளாய் இயந்தரமாய் கிளம்பினாள்.
அப்போது தான் வாஷ்ரூமில் இருந்து வெளியே வந்த ஹரிணி இவளைத் கண்டதும் வெடித்துச் சிரித்து வைத்தாள்.  “ஏய் மியா இங்கே வாயேன். இந்த மேடம் சென்னையிலேயே எதையோ பரிகொடுத்திட்டு வந்திருக்காங்க. இங்கே வந்து பாரேன்.” சிரிப்பை அடக்க மாட்டாமல் கத்திய ஹரிணியின் குரலில் தான் அப்படி என்ன செய்து விட்டோம் என்று தன்னையே ஒரு முறை மேலிருந்து கீழாக கண்ணாடியில் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
ஏதோ ஒரு சல்வாரின் டாப்பும் மற்றொன்றின் பாட்டமுமாக நின்றிருந்தாள். இரண்டுக்கும் மருந்துக்கு கூட ஒன்றுக்கொன்று ஒத்துப் போகவேயில்லை. இதைக் கூட பாராமலா தான் கிளம்பினோம் என்று முழித்துக் கொண்டு நின்ற நேத்ராவின் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென அருவியாய் கொட்டத் தொடங்கியது. அதுவரை கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருந்த ஹரிணிக்கு ஏதோ ப்ரச்சனை என்று புரிபட ஓடி வந்தாள் இவளிடம்.
“பேபி!!!” என்று ஓடி வந்து அணைத்துக் கொண்டவளின் தோளில் சாய்ந்து அழத் தொடங்கினாள் நேத்ரா. இவள் சாதாரணமாக அழும்  காரெக்டரே இல்லையே என்று தோன்ற ‘அழுது ஓய்ந்தால் அவளே சொல்வாள்’ என்ற முடிவுடன் அவளது முதுகினை மெல்ல தடவியபடி “ஹேய் பேபி!!! இட்ஸ் ஓகே!!!! இட்ஸ் கோயிங் டு பீ ஆல்ரைட்.” என்று தேற்ற முயன்றாள்.
அழுகுரல் கேட்டு பாதிக் குளியலில் துண்டைக் கட்டியபடி ஓடி வந்த மியா அழும் நேத்ராவைக் கண்டதும் அதிர்ந்து நிற்க ஹரிணி தான் வாயில் விரலை வைத்து ‘எதுவும் கேட்காதே’ என்பதாய் சைகை செய்து நீ போய் கிளம்பு என்பதாய் அனுப்பினாள். இவர்கள் இதுவரை பார்த்த நேத்ரா மிகவும் தைரியமான பெண். கல்லூரியில் ப்ரச்சனைகள் வரும் தான். ஆனால் எவ்வளவு மோசமான நிலை என்றாலும் நேத்ரா அலட்டிக் கொண்டதே இல்லை. ‘சில் பேபீஸ்’ என்று தோளைத் குலுக்கிய படி கடந்து சென்று விடுவாள். அவளே அழுகிறாள் என்றால்??????
அழுகை விசும்பலாகி பின் ஓரளவு கட்டுக்குள் வந்து கண்களைத் துடைத்துக் கொண்டவள் தன்னை அணைத்து நிற்கும் ஹரிணியிடம்  “நீ உண்மையிலேயே டெட்டி பியர் மாதிரி தான் இருக்க.” என்று அவளை வம்பிற்கு இழுத்தாள். நேத்ரா தெளிந்து விட்டாள் என்று புரிந்தாலும் அவளது மனதை அழுத்தும் விஷயம் என்ன என்று தெரிய வேண்டுமே, தெரிந்து கொண்டால் தானே தங்களால் ஆன உதவியைச் செய்ய முடியும். இல்லையென்றால் ‘நண்பேன்டா’ சொல்வதில் என்ன அர்த்தம்.
மெல்ல தன் அணைப்பில் இருந்து விடுபட்டு தன் முகம் பாராமல் தலைகுனிந்துபடி அறைக்குள் செல்ல முயலும் நேத்ராவின் கைபிடித்து நிறுத்திய ஹரிணி “நாங்க டெட்டி பியர்னு ஊருக்கே தெரியும். ஆனா நீங்க க்ரை பேபினு இன்னிக்குத் தான் தெரிஞ்சுது. என்னாச்சு பேபி??? எங்ககிட்ட கூட சொல்ல முடியாத அளவு உனக்கு ரகசியங்கள் இருக்கா?” குரலில் கோபம் லேசாகத் தலைகாட்டியது. இதற்குள் காக்கா குளியல் போட்டுவிட்டு ஓடி வந்த மியா நேத்ராவின் கரம் பிடித்து இழுத்து அவளை ஹால் ஸோபாவில் அமர வைத்து “ம்ம்ம் இப்போ சொல்வியாம் பேபி. கமான் ஸ்பிட் இட் ஔட்” என்றாள்.
“என்ன கேட்கறீங்க ரெண்டு பேரும். ஒன்னும் இல்லையே… ஏதோ யோசனையில் ட்ரெஸ் மாத்தி போட்டுட்டேன்னு அசிங்கமா போச்சேன்னு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன். அதுக்காக இப்படியா என்னை ஏதோ டெரரிஸ்ட் ரேஞ்சுக்கு இன்டராகேஷன் பண்ணுவீங்க? கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும். கிளாசுக்கு லேட்டாச்சு” என்றாள் நேத்ரா.
“ஐயோ டெட்டி பத்தியா நமக்கெல்லாம் தெரியாத பெரிய விஷயமெல்லாம் இவளுக்கு தெரிச்சிருக்கு. கிளாசுக்கு போனுமாமே. ஏய் ஸ்பிரிங்!!! இப்போ நீ என்னனு சொல்றியா இல்லை அண்ணாக்கு ஃபோன் பண்ணவா?” கேலி போல் ஆரம்பித்து பின் சீரியஸாக மாறி கையில் தனது மொபைல் ஃபோனை ரெடியாக வைத்துக் கொண்டு மிரட்டினாள் மியா. அண்ணா என்ற ஒரு அஸ்திரம் தனது வேலையை சரியாக செய்தது நேத்ராவிடம்.
அதுவரை இவர்களிடமிருந்து விடுபட துள்ளித் கொண்டிருந்தவள் சட்டென்று அடங்கி ஸோஃபாவின் மூலையில் ஒண்டிக் கொண்டாள். ஏதோ சிந்தித்தார் போல் இருந்தவள் “அது ஒன்னுமில்லை மியா!! ஊருக்கு போனது, அங்கே நடந்த கூத்து, பாட்டி செத்து போனது  எல்லாம் சேர்ந்து ஒரு சின்ன சோர்வு. அதான் ஏதோ நினைப்புல கொஞ்சம் ஸ்லிப்பாகிட்டேன். வேற ஒன்னுமில்லை டா. டோண்ட் மேக் இட் எ சீன் யார்” என்று சொல்லியபடி எழுந்து கொள்ள மியாவும் டெட்டியும் இருந்த இடத்தில் இருந்து சற்றும் நகராமல் இவளையே ஊன்றிப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
இவர்களைப் பற்றி நேத்ராவிற்கு நன்கு தெரியும். பழகியது சில காலமே என்றாலும் ஏனோ அப்படியொரு பிணைப்பு. இவர்களது முகபாவத்தை வைத்தே என்ன யோசிக்கிறார்கள் என்று தான் கண்டுகொள்வது போலத்தானே இவர்களும் தன்னை கண்டு கொள்வார்கள் என்பது உறைக்க மீண்டும் அமர்ந்து கொண்டு “சாரி பேபீஸ்!! யெஸ் ஐம் ஹேவிங் அ ப்ராப்ளம். ஆனா அது தீர்க்கப்படக் கூடியதுன்னா நான் சொல்லலாம். இதுக்கு தீர்வு இருந்தா அது உலக அதிசயம் தான். அதான் சொல்லல.” என்றாள்.
“ஓ மை காட் ஸ்பிரிங். உனக்கு கேன்ஸரா? எயிட்ஸா? ஃபைனல் ஸ்டேஜா? டாக்டர் ஹோப்லெஸ்னு சொல்லிட்டாங்களா? போவியா? உலகமாம் அதிசயமாம். ஸ்பிரிங் உனக்கா ஷேர் பண்ணிக்கனும்னு தோணிச்சுன்னா சொல்லு. அதர்வைஸ் இட்ஸ் ஓகே. ஆனா எங்க ஸ்பிரிங் இப்படி டிப்ரெஸ்டா இருக்கிறது எங்களால் ஏத்துக்க முடியல. அவ்வளவு தான்.” சொல்லிய ஹரிணி இனி உன்னிஷ்டம் என்பதாய் விட்டுவிட அதுவரைக்கும் கூட யாரிடமும் பகிர வேண்டாம் என்று நினைத்திருந்த நேத்ரா தனது எல்லைக் கோட்டை தாண்ட முடிவு செய்தாள்.
மியாவையும் டெட்டியையும் இழுத்து தன் அருகில் அமர வைத்த நேத்ரா சற்று நேரம் அமைதியாக இருந்தாள். பின்பு நீண்ட பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள் தன் ‌மனதை அழுத்தும் தனது கடந்த காலத்தை இருவரிடமும் இறக்கி வைக்கத் தொடங்கினாள்.
மைலாப்பூரின் மேலமாசி வீதி!….. கடகட சத்தத்துடன் வந்து அந்த வீட்டின் முன் நின்றது அந்த ஆட்டோ. “நீ கேட்ட அட்ரெஸ் இதான் சார். எடு நூறு ரூவா.” அரட்டலாகவே கேட்டார் ஆட்டோ டிரைவர். ஆட்டோவுக்குப் பைசா செட்டில் செய்துவிட்டு ஆட்டோவுக்குள் மூன்றாக மடிந்து உட்கார்ந்திருந்தவன் வண்டியில் இருந்து இறங்கி  தனது ஆறடி உயரத்திற்கு நிமிர்ந்து நிற்கவும் ஆட்டோ டிரைவர் ஒருநிமிடம் அசந்து நோக்கினார். ‘இந்த வெள்ளக்காரங்க எல்லாம் என்ன தான் சாப்பிடுவானுங்களோ???? இன்னா உசரம்?? இன்னா கலரு?’ வாய்விட்டே புலம்பிவிட்டார்.
தமிழ் தெரியாது என்று நினைத்து அவர் பேச அவர் புலம்பலைக் கேட்டவன் சிரித்தபடி “சாப்பாடு தாண்ணா சாப்பிடுவோம்” என்று விட்டு அந்த வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். ‘பார்றா இன்னாமா தமில் பேசறாரு. சோக்கா தான் இருக்காரு சினிமா ஹுரோ மாதிரி.’ எண்ணியபடியே வண்டியைக் கிளப்பிச் சென்றார்.
வீட்டின் நுழைவாயில் தலைதட்டும் போல் இருந்தது. தெருவில் பெரும்பகுதி வீடுகள் அபார்ட்மெண்ட்டாக மாறியிருக்க இந்த வீடு இன்னும் பழமை மாறாமல் கம்பீரமாக நின்றது ரசனைக்குரியதாக இருந்தது. காலிங் பெல்லை அடித்துவிட்டு காத்திருந்தான் மைக்கேல். பெல்லடித்து வெகுநேரமாகியும் யாரும் வராது போகவும் மீண்டும் பெல்லடிக்க கையை உயர்த்தவும் “யாரு நீங்க? யாரைப் பார்க்கனும்?” என்று குரல் எதிர்புறமிருந்து வந்து அவனது கவனத்தை ஈர்த்தது.
சுமார் ஐம்பதுகளில் இருக்கும் மடிசார் கட்டிய பெண்மணி இவனையே பார்த்தபடி நின்றிருந்தார். ‘நேத்ராவும் இப்படி காஸ்ட்யூம் தான் போட்டுப்பாளோ? ஐயோ இதைத் தூக்கவே பேபிக்கு தனி தெம்பு வேணுமே!!!’ யோசனை மனதில் ஓட பதில் சொல்ல மறந்து நின்றான். “சார்!!!” என்ற அழைப்பு மீண்டும் வரவே தான் தனது பதிலுக்காக தன்னையே பார்த்தபடி ஒருவர் நிற்பது கருத்தில் உறுத்த “சாரி!! இவங்க……” என்று வீட்டை நோக்கி கையைக் காட்டினான்.
“ஓ நீங்க கீர்த்தி ஃப்ரெண்டா? தங்கை கல்யாணம் முடிஞ்சு அவன் நேத்து தானே பெங்களூர் கிளம்பி போனான். உங்களாண்ட சொல்லலியா? என்ன புள்ளயாண்டான் இப்படி இருக்கான். வெளியூர்ல இருந்து வர்றவாளுக்கு ப்ராப்பரா இன்ஃபர்மேஷன் கொடுக்க வேண்டாமோ. இந்தக் காலத்து கொழந்தேளே இப்படித்தான். “ அடுக்கிக் கொண்டே போனார் மாமி.
மைக்கேலுக்கு ‘கீர்த்தியின் தங்கைக்கு திருமணம் என்பதற்கு மேல் எதுவுமே காதில் விழவில்லை. போச்சு!!!! எல்லாம் போச்சு!!! அவன் பேபி அவனுக்கில்லை. நிஜமாகவே தான் தன்னை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாள். தான் தான் பைத்தியம் மாதிரி அவளையே நினைத்துக் கொண்டு இத்தனை நாள் இருந்திருக்கிறோம். அடுத்து என்ன என்பது யோசிக்கத் தோன்றாமல் அங்கிருந்த திண்ணையில் தொப்பென்று அமர்ந்து விட்டான் மைக்கேல். 
தான் பேசுவது எதுவுமே எதிரில் இருப்பவனுக்கு பதியவில்லை என்று உரைக்கும் போது அவன் தளர்ந்து திண்ணையில் அமரவும் பதறிப் போனார் மாமி. “ஏன்டாப்பா அம்பி!!! என்ன பண்றது? உடம்பு சரியில்லையா? இரு தூத்தம் கொண்டு வரேன்” என்று விட்டு வீட்டுக்குள் ஓடியவர் ஜெட் வேகத்தில் தண்ணீர் பாட்டிலுடன் ஓடி வந்தார். “இந்தாடாப்பா இதைக் குடி.” என்று தண்ணீர் பாட்டிலை நீட்டியதும் அதை வாங்கி ஒரு சொட்டு பாக்கியில்லாமல் குடித்து தீர்த்தான் மைக்கேல்.
உள்ளே எரியும் தணலை தணிக்க ஒரு பாட்டில் தண்ணீராலும் இயலவில்லை. இனி என்ன செய்யப் போகிறோம் என்று கூட யோசிக்க இயலவில்லை அவனால். கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. காதடைக்க தலையை கையில் ஏந்தியபடி அமர்ந்திருந்தான். அவனையே பார்த்திருந்த மாமிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மெல்ல அவனருகில் வந்து திண்ணையில் அமர்ந்து கொண்டார்.
“நீ இன்னிக்கு வர்றனு கீர்த்தி கிட்ட சொல்லியிருந்தியோல்லியோ??? ஒருவேளை அவனுக்குத் தெரியாதோ என்னவோ? அவனும் பாவம் என்ன செய்வான்? திடீர்னாப்ல எல்லாம் நடந்திடுத்து. பாட்டியை சீரியஸ்னு ஹாஸ்பிடல்ல சேர்த்தா, தங்கைக்கு கல்யாணம் கூட்டிண்டு வரச்சொன்னா. இங்க வந்தா அந்த மாப்பிள்ளை புள்ளையாண்டான் இந்தப் பொண்ணு வேண்டாம் அவ தங்கையைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டான். ஒருவழியா அவளைக் கல்யாணம் பண்ணி முடிச்சா பாட்டி போயிட்டா. எல்லாம் முடிஞ்சு நேத்திக்கு தான் கிளம்பி போனான். உன்கிட்ட அவன் நம்பர் இருக்கோல்லியோ? நீ அவனுக்கு கூப்பிட்டு பாரு” கேளாமலே எல்லாக் கதையையும் மாமி கொட்டித் தீர்த்தாள்.
மாமி பேசியதை புரிந்து கொள்ளவே சற்று நேரம் பிடித்தது மைக்கேலுக்கு. தங்கைக்கு கல்யாணம்…… மாப்பிள்ளை புள்ளையாண்டான்… தங்கையை வேண்டாம்னு சொல்லிட்டான். அவளோட தங்கையை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டான்…. அப்படின்னா????? பேபிக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா? இல்லை தான் தான் மொழிப் ப்ரச்சனையால் சரியா புரிஞ்சுக்கலையா? எதற்கும் மாமியிடமே கேட்டு விடலாம் என்று நினைத்தவன் “யூ மீன் கீர்த்தியோட சிஸ்டர்…… அவங்க நேம் மறந்து போச்சே…. அவங்க…” என்று வேண்டுமென்றே இழுக்க மாமி “நேத்ராக்கு தான்‌ மாப்பிள்ளை பார்த்தா. ஆனா கல்யாணம் மீனா தான் பா பண்ணின்டா” என்று இவன் வயிற்றில் லிட்டர் லிட்டராக பாலை வார்த்து வைத்தார்.
‘ஹுர்ரேஏஏஏஏஏ’ மனம் குதியாட்டம் போட்டு வைக்க மைக்கேலுக்கு அப்படி ஒரு பெருத்த நிம்மதி.  ‘என் பேபி எனக்கு தான். பேபி!!!! ஸீ ஃபேட் ஹேஸ் கெப்ட் யூ ஃபார் மீ பேபி” மனசுக்குள் சொல்லிக் கொண்டான். மாமியிடம் திரும்பி “இவங்க எல்லாம் எங்கே?” என்று கேட்க மாமி “அவால்லாம் எங்கேயோ ஊருக்குப் போயிருக்காப்பா. சாஸ்திரியும் அவாத்து மாமியும் மட்டும்தானே. பொண்ணும் இங்கே இல்லை. பெங்களூர்ல இருக்கா. அதான் ஒரு சேன்ஜா இருக்கட்டுமேன்னு ஊருக்குப் போயிருக்கா” என்று அவனுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் சொல்லி முடித்தார்.
இப்படி பண்ணிட்டேளே மாமி!!!!!! இனி அவன் நேரே பெங்களூர்ல தானே வந்து நிப்பான். நான் என்ன செய்ய??¿??? 
கவிதையாவாள்!!!!!!!!!

Advertisement