Advertisement

முத்தக் கவிதை நீ 3
அழைப்பின் மறுபுறம் இருந்தவர் ஹலோ ஹலோ என்று அலற இங்குச் சிலையாகிப் போனவளோ என்ன செய்கிறோம் என்றே தெரியாத நிலையில் இருந்தாள். இதற்குள் டெட்டி என்றழைக்கப்படும் ஹரிணியும் வந்து சேர்ந்தாள். சிலையாக நின்ற நேத்ராவை ஓரிரு முறை உலுக்கிப் பார்த்தவள் அவளிடம் அசைவின்றிப் போகவே கீழே தொங்கிய தொலைபேசி ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள். இவளது ஹலோவைக் கேட்டதும் மறுமுனையில் “எங்கே போன நேத்ராம்மா. என்ன விளையாட்டு எல்லா நேரமும். இங்கே பாட்டிக்கு ரொம்ப முடியல. சட்டுனு கிளம்பி வந்து சேரு. நாளன்னிக்கு கல்யாணம். லேட்டாக்காதே. அண்ணா வருவான் உன்னைக் கூட்டிண்டு வர. சரியா” என்று பதில் எதிர்பாராமல் வைத்துவிட்டார்கள்.
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் முழித்தபடி நேத்ராவைப் பார்த்த ஹரிணி அவள் இன்னும் அப்படியே உறைந்து நிற்பதைக் கண்டு அவளை வெளியே தன்னுடைய கையணைப்பில் இழுத்து வந்தாள். கிளாசுக்குச் செல்லாமல் நேரே ரெஸ்ட் ரூமிற்கு அழைத்து வந்தவள் அவளை கையணைப்பிலே வைத்தவாறே மியாவிற்கு அழைத்தாள். அவளும் அடுத்த இரண்டே நிமிடங்களில் வந்து சேர்ந்தாள்.
இதற்குள் ஓரளவு தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்த நேத்ரா “நான் ஊருக்குப் போகனும். அநேகமா நான் திரும்பி வரமாட்டேன் பா” உயிரற்ற குரலில் வந்த அவளது பேச்சு தெளிவாக மற்ற இருவரையும் குழப்பியது. “பேபி என்னாச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசற?” என்றாள் மியா. இதற்குள் ஓரளவு நிலையைப் புரிந்து கொண்ட ஹரிணி “பேபி அப்போ ஃபோன் பண்ணது அம்மாவா? கல்யாணம் உனக்கா?” வலுவாக இவளது தோள்களைப் பற்றி உலுக்கினாள்.
நேத்ராவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. மியா அதிர்ச்சியில் ஒருநிமிடம் உறைந்து போனாள். “ஆன்ஸர் மீ பேபி. உனக்கு தான் கல்யாணமா?” வெறிகொண்டவளைப் போல் ஹரிணி கத்தினாள். “விடு அவளை. காம் டௌன் ஃபர்ஸ்ட். அவளைப்பாரு அவ பதில் சொல்ற நிலைமையிலா இருக்கா? ரிலாக்ஸ் பேபி.” என்றவள் அவளை அழைத்துக் கொண்டு “வா நாம ரூமுக்குப் போய் பேசிக்கலாம்”. என்றாள்.
வழக்கம் போல மியாவின் ஃபேஸீனோ வண்டியில் ட்ரிபிள்ஸ் அடித்தபடி பெங்களூரு டிராஃபிக் போலீஸுக்கு பயந்து சந்து பொந்துகளை அளந்து ஒருவழியாக வந்து சேர்ந்தனர். மூவரில் மியா மட்டுமே அப்போது தன்னுணர்வில் இருந்தாள் என்று சொல்லலாம். நேத்ரா ஏதோ தான் பூமிக்கான பிறவியே இல்லை என்பது போல் எங்கோ வெறித்த பார்வையுடன் இருந்தாள். ஹரிணியோ விட்டால் கண்ணில்படுபவர்களை எல்லாம் அடித்து வெளுக்கும் அளவுக்கு வெறியுடன் கண்கள் சிவக்க மூச்சுவாங்கியபடி வந்தாள்.
அறைக்குள் நுழைந்ததும் அதுவரை காத்து வந்த பொறுமை காற்றில் பறக்க “இப்போ என்ன தான் நேத்ரா ப்ரச்சனை? ஏன் இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறாங்க. அப்படி சீக்கிரமா செஞ்சு வைக்கிற அளவுக்கு இப்போ என்ன அவசரம்?” படபடவென பட்டாசாய் பொறித்து கொட்டினாள் ஹரிணி. “டெட்டி வெய்ட். அவ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கட்டும். அப்புறமா சொல்லுவா. அவளே பெரிய ஷாக்குல இருக்கிற மாதிரி இருக்கு.” என்றாள் மியா.
இருவருக்குமே வந்த ஃபோன் கால் பொய்யாக இருக்க கூடாதா, தாங்கள் நினைத்தது தப்பு என்று நேத்ரா சொல்ல மாட்டாளா என்ற நப்பாசை இருந்தது. இந்த ஒரு மாதத்துக்குள் அவர்கள் ஒரு சின்ன உலகத்தையே அவர்களுக்கென உருவாக்கிக் கொண்டிருந்தனர். அந்த உலகத்தில் அவர்கள் மூவர் மட்டுமே. அது சந்தோஷமும் செல்லச் சண்டைகளும் இனிய கால்வாரல்களும் மட்டுமே நிரம்பிய பாசக்கூடு. இப்போது நேத்ரா பேசுவதைக் கேட்டால் இனி அவள் இங்கு திரும்ப மாட்டாளென்றால்.,…. நினைத்துப் பார்க்கவே மியாவுக்கும் ஹரிணிக்கும் கசந்தது.
“ஃபோன் பண்ணது எங்கம்மா தான் மியா. டெட்டி நீ ஃபோன்ல கேட்டது தான் உண்மை. அது நடக்கனும்னு தான் வீட்டில என்னை உடனே கிளம்பி வரச்சொல்றாங்க. எங்கப்பாவோட அம்மாவுக்கு ரொம்ப முடியலையாம். இனி நோ ஹோப்ஸ்னு டாக்டர் சொல்லிட்டாராம். அதனால எங்க பாட்டி எனக்கும் என்னோட அத்தை பையனுக்கும் கல்யாணம் நடத்தி அதை கண்குளிரப் பார்த்திட்டு தான் கண்ணைமூடுவேன்னு சொல்லியாச்சாம். இப்போ எங்கண்ணா வந்து என்னை சென்னைக்கு இழுத்திட்டு போய் பலி கொடுக்கிறது மட்டும் தான் பாக்கி.” என்ன தான் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கெத்தான குரலில் பேசினாலும் அவளையுமறியாமல் அவளது கண்கள் கண்ணீரைச் சொறிந்தன.
மூவரும் செய்வதறியாமல் கட்டிக்கொண்டு அழுதனர். சற்று நேரத்திற்கெல்லாம் மியாவின் ஃபோன் அலறத் தொடங்கியது. திரையைப் பார்க்காமலே அழைப்பது யார் என்று மூவருக்குமே தெரிந்தது. இருமுறை அடித்து ஓய்ந்தது எடுப்பாரற்று. மூன்றாவது முறை அலைபேசி அலறவும் வேறு வழியின்றி ஃபோனை எடுத்த மியா “சாரி அண்ணா. நேத்ராவோட சாமானெல்லாம் பேக் பண்ணறோம். அதான் உங்க கால் நோட்டிஸ் பண்ணல.” என்றாள் மன்னிப்பை வேண்டி.
“பரவாயில்லைமா. அவ கிளம்பிட்டாளா? நான் இன்னும் அரைமணி நேரத்துல அங்கே இருப்பேன். ரெடியா இருக்கச் சொல்லுமா” என்றவன் வைத்துவிட்டான். அவ்வளவு தான். என்ன காரணத்துக்காக அழைத்தானோ அதை மட்டுமே பேசுவான். வேறு மேல்பூச்சு வார்த்தைகளோ அல்லது தேவையில்லாத வழிசலோ எப்போதுமே அவனிடம் இருந்ததில்லை. 
அவ்வளவு நேரம் கூட இது உண்மை இல்லை என்றாகாதா என்று ஓரத்தில் ஒரு நப்பாசை இருந்தது மூவருக்கும். கீர்த்தி வாசனின் அழைப்பு இவர்களுக்கு உறுதியாக நடக்கப் போவதைச் சொல்லிவிட வேறு வழியின்றி தனது பெட்டியை பேக் செய்யத் தொடங்கினாள் நேத்ரா. மற்ற இருவரும் மௌனமாக அவர்களால் இயன்ற உதவியைச் செய்தனர். சொன்னது போல் சரியாக அரைமணி நேரத்தில் வந்த கீர்த்தி வாசன் நேத்ராவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
கண்ணீருடன் இவர்களிடம் இருந்து விடை பெற்றாள் நேத்ரா. எதுவும் செய்ய இயலாது கையாலாகாததனத்துடன் கையசைத்து இவளுக்கு வழியனுப்பி வைத்தனர் இருவரும். இவர்களையே திரும்பித் திரும்பி பார்த்தபடி அண்ணனின் பின் ஆட்டுக்குட்டியைப் போல் நடந்தாள் நேத்ரா. சென்னைக்கான பயணம் முழுவதும் மௌனத்திலேயே கழிந்தது. கீர்த்தி இறுகிப் போயிருந்தான். அவனுக்கு சிறுவயதிலேயே அவனது பாட்டி என்றால் உயிர். அதனால் தான் அண்ணன் சோகத்தில் இருக்கிறான் என எண்ணிக் கொண்டாள் நேத்ரா.
மேலும் அவளுக்குமே இப்போது தனிமை தேவைப்பட்டது. நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது அவளுக்கு. இது அவளுக்கு எதிர்பாராத அடி. இதிலிருந்து மீள முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை. தனது வாழ்க்கையில் தன் குடும்பத்தை எண்ணி முன்பு சில முடிவுகளை அவள் எடுத்தாள் தான். ஆனால் இப்போது அதற்காக மிகவும் வருத்தம் கொண்டாள். ‘என்னவோ பெரிய தியாகம் பண்றதா நினைச்சியே. இப்போ உன்னோட வாழ்க்கையையே பலி கொடுக்க போறாங்க. என்ன பண்ண போற? இப்பவும் குடும்பம் தான் முக்கியம்னு இதையும் ஏத்துக்கப் போறியா? இல்லை இது எனக்கான வாழ்க்கை இல்லைனு சண்டை போடப் போறியா நேத்ரா?’ மனசாட்சி அவளைப் பார்த்து கேலி செய்வது போல் தோன்றியது.
‘உனக்கான வாழ்க்கையா? அது என்ன வாழ்க்கை? இன்னுமா அவன் வருவான்னு நினைக்கிற? அவனுக்கு உன்னை இப்போ நியாபகம் இருக்கோ இல்லையோ. இருந்தாலும் அப்படியே உலக அதிசயமா அவன் உனக்காக வந்தாலும் நீ உன் குடும்பத்தை விட்டுட்டு அவனுக்காகப் போவியா? இல்லை அவனைக் கொண்டு வந்து உன் குடும்பத்துல சேர்க்க முடியுமா? அப்பா ஏத்துப்பாரா?’ பதிலில்லா கேள்விகள் அவளைத் துளைத்தெடுக்க செய்வதறியாது சன்னல் வழியே வெளியே வெறித்தபடி வந்தாள்.
அப்பா என்றதும் அவளுக்கு மற்றதெல்லாம் மறந்து போனது. அவரை மீறி வாழ்வில் அவளால் எதுவுமே செய்ய முடியப் போவதில்லை. இனி நடப்பதை எல்லாம் தான் ஒரு பார்வையாளராய் மட்டுமே வேடிக்கைப் பார்க்க முடியும். எங்கேயும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. தன்னை நினைத்தால் அவளுக்கே வெறுப்பாக வந்தது.
எங்கோ தூரத்து வானத்தை வெறித்தபடி வரும் தன் தங்கையை இருமுறை திரும்பிப் பார்த்த கீர்த்திவாசனுக்கு அவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. அவனுக்குமே பிடிக்கவில்லை தான் இந்த திருமண ஏற்பாடு. அவர்களது அத்தை மகன் கிருஷ்ணனுக்கு தனது தங்கையை கொடுக்க. கிருஷ்ணன் அவர்களது பாரம்பரியமான வைதீகம் தான் செய்து வந்தான். அதற்காக அவனையோ அவனது பொருளாதார நிலைமையோ குறை சொல்ல முடியாது தான்.
ஊருக்குள் நல்ல மதிப்பு தான். ஆனால் தங்கையின் துறுதுறு குணத்திற்கும் அவனின் குணத்திற்கும் ஒத்துப் போகாதே. மேலும் இவர்களுக்கு திருமணம் என்ற நினைப்பே அவ்வளவு உவப்பாக இல்லை கீர்த்திக்கு. ஆனால் இப்போது இதை செய்தே ஆகவேண்டும் என்று சொல்வது அவனது பாட்டியாயிற்றே. இருந்தாலும் தங்கையின் வாழ்வின் முக்கிய முடிவை இப்படி அவசர கதியில் எடுக்க விடக் கூடாதென எண்ணிக் கொண்டான் கீர்த்தி. ஒரு அண்ணனாக ஏதாவது செய்து தான் எப்படியாவது இதை நிறுத்தியே ஆக வேண்டும் என எண்ணிக் கொண்டான்.
சென்னையை அடையும் போது இரவு பத்து மணியாகியிருந்தது. தெருமுனையில் வரும்போதே தெரிந்த வீட்டு வாசலில் இருந்த கூட்டம் அடிவயிற்றில் பயப்பந்தை உருட்டியது. எல்லோரும் என்னவோ கழுத்தறுபட்ட கோழி போல் தலையை தொங்கப்போட்ட படி நின்றனர். பாட்டிக்கு ஒன்றும் ஆகியிருக்க கூடாதென வேண்டியபடியே உள்ளே நுழைந்தனர் இருவரும்.
ஹாலில் போடப்பட்டிருந்த ஸோஃபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தான் கிருஷ்ணன் சாஸ்திரி. தன் தந்தையின் முன்னே தாங்கள் எல்லாம் அமர்ந்தே இல்லை. இவன் என்னவென்றால் அவர் முன்னே இப்படி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறானே என்ற கோபம் கீர்த்திவாசனுக்கு. கிருஷ்ணனோ எல்லோரும் இருக்கும் போதே கொஞ்சமும் கூச்சமின்றி நேத்ராவை விழுங்கி விடுவது போல பார்த்து வைத்தான். நேத்ராவிற்கு அவன் முகத்தில் ரெண்டு குத்துவிடலாமா என்று கைகள் பரபரத்தாலும் வேறு வழியின்றி தலைகுனிந்து நின்றாள்.
ஏதோ தீவிர யோசனையில் மூழ்கியிருந்த சீனிவாசன் இவர்களைப் பார்த்ததும் எதுவும் பேசாது தலையை அசைத்து உள்ளே செல்லுமாறு சைகை செய்தார். இதற்குள் ஹாலுக்கு வந்துவிட்ட கமலா மகனையும் மகளையும் எதுவும் பேசாதே என்பதாய் கண்களால் சைகை செய்து உள்ளே அழைத்துச் சென்றார். தங்களது அறையை அடைந்ததும் கீர்த்தி “என்னம்மா இது. இவனுக்கு எப்படிம்மா நம்ம நேத்ராவை கல்யாணம் செஞ்சு குடுக்க முடியும். நீங்க அப்பாவாண்டை சொல்லுங்கோ. அப்பா சொன்னா பாட்டி புரிஞ்சுப்பா. நம்மளே நம்மாத்துப் பொண்ணை கிணத்துல தள்ளறா மாதிரிம்மா இது. மனுஷனா அவன். சம்பாதனை இருந்தா போதுமா. பாரு எப்படி பார்க்கறான்னு. நீங்க சொல்லுங்கோ, இல்லைன்னா நான் பேசறேன் .” காட்டுக்கத்தல் கத்திக் தீர்த்தான் கீர்த்தி.
“ராஜப்பா. எனக்கு மட்டும் என்ன பிடிச்சா இருக்கு? இல்லை இதுவரைக்கும் நான் பேசாம இருந்திருப்பேனா? நான் பேசிப் பார்த்திட்டேன்பா. இங்கே நம்ம பேச்சுக்கு மதிப்பில்லை. நான் வேண்டாம்னு சொன்னதும் உங்கத்தை வந்து இங்கே ஒரே சத்தம். நாங்க எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டோம்னு எங்களுக்கு பொண்ணு குடுக்க மாட்டேங்கறேள்னு ஒரே சண்டை. நம்ம அப்பாக்குத்தான் இந்த சண்டை சத்தம் எல்லாம் ஆகாதே. தவிர அவருக்கு அவர் அம்மா சொல்றது தானே வேதம். இதான் முடிவுனு அவரும் சொல்லிட்டார்.உனக்கு. இதுதான் விதிச்சிருக்கு கோந்தே. வேற வழியில்லை.” வாயில் புடவை முந்தானையை வைத்துப் பொத்தியபடி அழுது தீர்த்தாள் கமலா.
இது எப்போதும் நடக்கும் வழக்கமான நிகழ்வு தான். அத்தை விசாலம் தனக்கு வேண்டியதை எப்போதும் கத்திக் கூப்பாடு போட்டு நடத்திக் கொள்வாள். சீனிவாசனுக்கு சத்தமே ஆகாது. பரம சாது. அதுவே விசாலத்துக்கு பெரும் வசதியாய் போனது. இப்போது தங்கள் முன்னிருக்கும் ப்ரச்சனையை எப்படி கையாள்வது என்று மூவரும் செய்வதறியாது முழித்தனர். எங்கோ சூன்யத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் நேத்ரா. பாவம் அவளுக்குத் தெரியவில்லை ரோலர் கோஸ்டர் பயணம் இப்போது தான் ஆரம்பிக்கிறது இனி தான் ஆட்டமே ஆரம்பமென.
கவிதையாவாள்!!!!!

Advertisement