Advertisement

2 முத்தக் கவிதை நீ
மெல்பெர்ன் நகரம் தனது காலை நேரக் குளிர் காற்றில் ஊரையே பனிக்குள் போர்த்தியிருந்தது. இந்தக் குளிரிலும் தனது வழக்கமான உடற்பயிற்சிகளை செவ்வனே செய்து முடித்து வியர்த்துப் போய் நின்றான் மைக்கேல். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றம். ஆஸ்திரேலிய மண்ணுக்கே உரித்தான நிறம். அந்நாட்டில் வெகு சிலருக்கே அமைந்த கருமையான கேசம். கண்கள் மட்டும் கேட் ஐஸ் என்று சொல்லப்படும் சாம்பல் நிறம். எதற்கும் அலட்டிக் கொள்ளாத சுபாவம். 
மைக்கேலின் தாயும் தந்தையும் அவனது பனிரெண்டாவது வயதில் விவாகரத்து செய்து கொண்டனர். அவன் தந்தை ஒரு இத்தாலியப் பெண்ணை மணந்து கொண்டு அந்த நாட்டுக்குப் பறந்து விட்டார். தாயோ தனது பள்ளித் தோழனையே மறுமணம் செய்து கொண்டார். இப்போது பதினொரு வயதில் அவனுக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள். மைக்கேல் தன் தாய் தந்தையின் பிரிவுக்குப் பின் ஃபாஸ்டர் ஹோம் என்று அங்கு அழைக்கப்படும் அனாதை இல்லத்தில் வளர்ந்தான். தனக்கென்று யாருமில்லை என்ற எண்ணம் எப்போதுமே அவன் மனதில் பதிந்து போனது.
படித்தது கணினி துறையில் மேற்படிப்பு. ஆனால் தற்போது பார்ப்பதோ மாடலிங் துறையில் வேலை. இவனது சிக்ஸ் பேக்ஸும் சாம்பல் நிறக் கண்களும் போதுமானதாக இருந்தது பலரை ஈர்க்க. பல முன்னணி மாடலிங் நிறுவனங்கள் போட்டி போட்டன இவனை தங்கள் கான்ட்ராக்டில் வைத்துக் கொள்ள. மாடலிங் துறையின் சொர்க்க பூமியாம் பாரிஸில் இருந்து வந்த வாய்ப்புகளைக் கூட உதறிவிட்டு தனது இந்தியப் பயணத்திற்கான விசாவிற்காக காத்திருந்தான். எல்லாம் அவளால். அவளை அவளது எண்ணங்களை மீறி அவனால் வெளி வர இயலவில்லை. ‘நாட் நௌ மைக். இட்ஸ் எ லாங் டே’ (இப்போ வேண்டாம் மைக். இன்று நிறைய வேலைகள் காத்திருக்கின்றது) என்று தலையை உதறி நினைவுகளைப் புறம் தள்ளினான்.
தனது வழக்கமான ஜிம்மிங் முடிந்ததும் கிளம்பியவன் “மைக். கம் ஹியர்” என்ற அழைப்பில் திரும்பினான். அவனது ஜிம் இன்ஸ்ட்ரக்டர் ஸ்டீவ் தான் அழைத்திருந்தார். அதிகம் யாரிடமும் பேசாத மனிதர். ஏனோ மைக்கேலின் மீது ஒரு தந்தைக்கான அன்பு அவருக்கு. அவனது வாழ்க்கையில் இருக்கும் இடியாப்பச் சிக்கலை அறிந்த ஒரே மனிதரும் கூட. எவ்வளவோ முறை சொல்லிப் பார்த்தார் ‘கடந்து வா மகனே!’ என்று. மைக்கின் பிடிவாதமும் அவனது உறுதியும் உணர்ந்தவராய் இப்போது அவர் தான் விட்டுவிட்டார். எதற்குமே ஆசைப்படாத மைக்கேலின் முதல் மற்றும் ஒரே ஆசை, கனவு எல்லாமும் ஆயிற்றே.
ஸ்டீவ் என்ன பேசப் போகிறார் என்று தெரிந்தும் வேறு வழியின்றி அவர் முகம் பார்த்துக் காத்திருந்தான். இவனை நெருங்கியவர் ஒரு முறை கூர்ந்து பார்த்துவிட்டு “விசா இன்டர்வ்யூ எப்போ?” என்றார். “இன்னும் உறுதியாக தெரியல. நெக்ஸ்ட் வீக் இருக்கும்.” என்றான். “மை சன். நான் என்ன சொன்னாலும் நீ இப்போ ஏத்துக்க மாட்ட. உன்னோட முடிவுல நீ உறுதியா இருக்க. நீ தேர்ந்தெடுத்திருக்கும் பாதை எவ்வளவு கஷ்டம்னு உனக்கேத் தெரியும். கடுமையா போராடனும். ஆனா எப்போ உனக்கு என்ன தேவைன்னாலும் இந்த அப்பா காத்துகிட்டிருக்கேன். ஞாபகம் வச்சுக்கோ” என்றார். அவர் கடைசி வரிகள் சொல்லும் போதே குரல் உடைந்து வந்தது.
தனக்கென்று யாருமில்லை என்று எப்போதுமே மைக்கேலுக்குத் தோன்றியதில்லை. எப்போதும் ஸ்டீவ் அவனுக்கு தானிருக்கிருக்கிறேன் என்று காட்டிக் கொண்டேயிருப்பார் தனது செயல்களால்.”ஐ நோ ஸ்டீவ். ஐ வில்” (எனக்குத் தெரியும் ஸ்டீவ். கட்டாயம் செய்வேன்) கட்டைவிரலைத் தூக்கிக் காட்டியவனை இழுத்து ஆரத் தழுவிக் கொண்டார். அந்த முரட்டு முதியவரின் இளகிய அணைப்பில் கட்டுண்டு கிடந்தான் மைக்கேல். சற்று நேரத்தில் சுதாரித்தவராய் ஸ்டீவ் தன் அணைப்பிலிருந்து அவனை விடுவித்து “எதுக்கும் இன்னொரு முறை யோசிச்சுப் பார்த்துக்கோ.” என்று சொன்னதுடன் திரும்பி நடந்தார்.
மைக்கேலுக்கு ஒருநிமிடம் ஓடிச் சென்று அவரிடம் தான் எங்கும் போகவில்லை அவருடனே இருந்து விடுகிறேன் என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் இப்போது தான் எடுக்கும் முடிவு தான் தன் வாழ்க்கையை மாற்றும் என்று உணர்ந்தவன் திரும்பி நடக்கலானான். கடந்த ஆறு வருடங்களாக அவன் மனதை ஆக்கிரமித்த அந்த சுகமான சூராவளியை எப்படியாவது தனதாக்கிக் கொள்ள வேண்டும். அதற்காகவேனும் அவன் இந்தியா போயே ஆக வேண்டும். இப்போது எப்படி இருக்கிறாளோ.
அவளைப் பற்றிய நினைப்பு எழுந்ததுமே தானாக ஒரு புன்னகை அவனிதழில் வந்து ஒட்டிக் கொண்டது. துறுதுறுவென எப்போதும் சிரிப்பும் யாரையும் வருத்தாத சின்னச் சின்ன வால்தனங்களும் தான் அவளது அடையாளங்கள். அவளது சுருட்டை முடியும் கன்னக் குழியும் பேசும் போது பளிச் பளிச்சென்று குறும்பில் மின்னும் கண்களும் அவளை எப்போதுமே எந்தக் கூட்ட்த்திலும் தனித்துக் காட்டும். பொய் புரட்டு தெரியாது. நட்புக்காக எதையும் செய்வாள். நினைவுகளில் கூட ஒருவரால் இவ்வளவு இனிமையைத் தர முடியுமா? முடியும் அது அவளாக இருக்கும் பட்சத்தில்.
“இரு பேபி!! சீக்கிரமா வரேன். இந்தியா வரேன் உனக்காக. இங்கே எல்லாத்தையும் விட்டுட்டு உனக்காக வரேன். நமக்கான உலகம் அமைக்க. மீட் யு ஸூன்” தனக்குத் தானே பேசிக்கொண்டே அவனது காரைக் கிளம்பினான் மைக்.
மதிய லஞ்ச் சாப்பிட அமர்ந்தவளுக்கு தாறுமாறாக புரையேற பக்கத்தில் அமர்ந்திருந்த சௌமியா நேத்ராவின் தலையைத் தட்டி தண்ணீர் இருந்த தம்ளரை நீட்டினாள். தம்ளரை வாங்கிப் பருகிய நேத்ராவிடம் “யாரோ உன்னைத் தாறுமாறா நினைக்கிறாங்கடா. யாரா இருக்கும்?” என்று சொல்லி நேத்ராவின் முறைப்பை வாங்கிக் கட்டிக் கொண்டாள். “இரு பேபி ஜூஸ் ரெடி. வாங்கிட்டு வரேன்” என்று மெல்ல நழுவினாள் மியா.
சௌமியா சொன்ன யாரோ நினைக்கிறாங்க நேத்ராவின் மனதுக்குள் புதைக்கப்பட்ட ஆயிரம் நினைவுகளை மேலெழுப்பியது. ‘அவனுக்கு தன்னை நினைவு இருக்குமா? தான் எண்ணிப் பார்ப்பது போல் அவனும் என்னை எண்ணிப் பார்ப்பானா? எங்கள் இருவருக்குமான நினைவுகளை அசை போடுவானா? எங்கே இருப்பான் இப்போது? எப்படி இருப்பான்? ஒரு வேளை இப்போது அவனுக்கு வேறு காதல் இருக்குமோ? நம் நினைவு கூட இருக்காதோ?’ நினைக்கும் போதே வலித்தது.
இதயம் கனத்துப் போனது. ஏதோ கிலோக்கணக்கில் பாரம் ஏறிய உணர்வு. எதிலோ மோசமாகத் தோற்றுப் போன உணர்வு. காலம் கடந்த யோசனை என்று தன்னைத்தானே கடிந்து கொண்டாள். ‘அன்னிக்கு நிலைமைக்கு என்ன முடிவெடுத்தா சரியோ அதைத்தான் எடுத்திருக்க நேத்ரா. சும்மா குழப்பிக்காத. டோண்ட் ப்ரேக் டௌன் கேர்ள். இன்னும் வாழ்க்கையில் நிறைய இருக்கு. சியர் அப்’ பொங்கி வழியும் கண்ணீரை கேண்டினில் யாரும் பார்க்கும் முன் அவசரமாகத் துடைத்தபடி தொண்டைக்குள் இறங்க மறுக்கும் உணவையே உறுத்துப் பார்த்தாள்.
தன்னை மறந்து தன் சிந்தனையில் கரைய முயன்ற நேத்ராவின் முதுகில் பட்டென்று ஒரு அடி விழுந்தது. “அடி எருமை! காலைல நான் எழுந்துக்க கொஞ்சம் லேட்டாச்சுனு என்னை அப்படியே ஹாஸ்டல் ரூம்லயே விட்டுட்டு என்னோட ஃபோனை மட்டும் தூக்கிட்டு வந்துட்டியே.பாவமாச்சே நம்ம ஹரிணி, முழிச்சாளா சாப்பிட்டாளானு ஏதாவது கவலை இருக்கா உனக்கு?” மூச்சு விடாமல் புலம்பியபடி தன்னருகில் வந்தமர்ந்த தனது ரூம்மேட்டும் கிளாஸ்மேட்டுமான ஹரிணியை மேலும் கீழுமாக பார்த்தவள் காதை ஒரு நிமிடம் பொத்திக் கொண்டாள்.
“ஏன் இந்த கத்து கத்தற டெட்டி. கும்பகர்ணி மாதிரி நீ தூங்கிட்டிருந்தா நான் எப்படி எழுப்பறதாம். என்னால முடியலப்பா. அதான் ஒரு நோட் எழுதி உன்னோட கப்போர்ட் கதவுல ஓட்டிட்டு கிளம்பிட்டேன். நான் பண்ண ஒரே தப்பு, உன்னோட ஃபோன் எடுத்திட்டு வந்தது தான். எவ்வளவு ஃபோன் கால்? எவ்வளவு மெஸேஜஸ்? ஐயையோ நம்மால முடியாதுப்பா. இந்தா நீயே வச்சுக்கோ.” அலுத்தபடி அவளிடம் அவளது ஃபோனை நீட்டியவள் மியா கொண்டு வந்து கொடுத்த ஜூஸைப் பருகினாள். அதற்குள் இவளது தட்டில் மீதமிருந்த ஆலு பராத்தாவை முழுங்கி விட்டு அடுத்த பராத்தாவுக்கு ஆர்டர் கொடுக்கப் பறந்திருந்தாள் ஹரிணி.
“இவ என்ன பேபி அடுத்த ரௌண்டுக்கு ரெடியாகிட்டா? சும்மாவே காலையில் ஆர்டர் பண்ணா தான் லஞ்சுக்கே தருவான் இங்கே. இவ இப்போ சொல்லி அவன் எப்போ தர? ஆக மொத்தம் இன்னிக்கு மத்தியானம் கிளாஸூம் மட்டமா?” தலையில் இருகைகளையும் வைத்துக் கொண்டாள் மியா. ‘எனிதிங் ஃபார் ஃப்ரெண்ட்ஸ்.” என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தபடியே சொன்ன நேத்ராவைக் கொலைவெறி பார்வை பார்த்து வைத்தாள் மியா.
“டோண்ட நீ ஓவர் டிராமாடிக் மியா. போகலாம் கிளாசுக்கு. இப்போ கிளாஸ் எங்கேயும் ஓடிப்போகாது. உனக்கு அந்த அழுக்குச் சொக்கா ப்ரொஃபஸரை சைட் அடிக்கனும். அதானே. டெட்டி வா போகலாம். இல்லைன்னா இந்த க்ரைபேபி அழ ஆரம்பிச்சுருவா” என்று ஹரிணியிடம் சொல்ல அவளும் வேறு வழியின்றி கிளம்பினாள். வகுப்பை நெருங்கும் போது மியா நேத்ராவிடம் “பேபி ஆனாலும் நீ அவரை அழுக்குச் சொக்கானு சொல்லியிருக்க வேண்டாம். என்னோட இதயம் நொறுங்கிப் போச்சுப்பா” என்றபடி வராத கண்ணீரைத் துடைத்தபடி சொல்ல “அடிங்க!!!! அடங்கவே மாட்டியா? நீயும் உன் டேஸ்டும். கஷ்டம் டா. கடவுளே இந்த நேத்ராவை இந்தச் ரௌடிகளிடமிருந்து காப்பாத்து” என்று மேல் நோக்கி கடவுளிடம் முறையிட்டவாரே வகுப்பிற்குள் நுழைந்தாள்.
வகுப்பிற்கான மணியடித்து சற்று நேரத்திற்கெல்லாம் வந்து தனது வழக்கப்படி அனைவரையும் தாலாட்டி தூங்க வைத்த ப்ரொஃபஸர் சேகரையே மியா மட்டும் கண்களால் ஜொள்ளிக் கொண்டிருக்க நேத்ராவின் மறுபுறம் அமர்ந்திருந்த ஹரிணியோ தீவிரமாக தன் மொபைலில் யாரிடமோ காது கருக கடலை வறுத்தபடி இருந்தாள். தனக்கு வரும் தூக்கத்தைத் துரத்த போராடியபடி வகுப்பை கவனிக்க முயன்று கொண்டிருந்த நேத்ராவின் கவனத்தைக் கலைத்தது அட்டெண்டரின் வருகை.
அட்டெண்டர் சிவா நேரே ப்ரொஃபஸரிடம் போய் அவரது காதில் ஏதோ கிசுகிசுக்க புருவங்களை நெரித்தபடி நிமிரந்தவர் “நேத்ரா உனக்கு ஃபோன் கால் வந்திருக்காம். கோ டூ ஆஃபீஸ் ரூம். அர்ஜெண்ட்டாம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் போர்டில் ஏதோ எழுதத் தொடங்கினார். தனக்கு ஃபோன் கால் என்றதும் சர்வமும் பதற படபடப்புடன் எழுந்து அலுவலகத்தை நோக்கி ஓடினாள்.
அலுவலக அறையில் தனியே எடுத்து வைக்கப்பட்டிருந்த ரிஸீவரை நோக்கி கைகாட்டி விட்டு தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார் அங்கிருந்தவர். கைகள் நடுங்க ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தவள் எதிர்முனையில் கேள்விப்பட்ட செய்தியில் உறைந்து போய் நின்றாள். கைகளில் பிடித்திருந்த ரிஸீவர் நழுவியது. கால்களுக்கு கீழிருந்த பூமியை யாரோ உறுவியது போலானது…..
என்னவா இருக்கும்??????

Advertisement