Advertisement

முத்தக் கவிதை நீ – 8

அந்த அதிகாலை நேரத்து குளிர் காற்று பெங்களூரை நனைத்துக் கொண்டிருக்க தங்கையுடன் வந்து சேர்ந்தான் கீர்த்தி. நேத்ராவை அவளது ஹாஸ்டலில் விட்டவன் அவளிடம் “இனி உன்னோட படிப்புக்கு எந்த தடங்கலும் வராது. அப்பாவே சொல்லிட்டா. நன்னா படி. வேற எதையும் போட்டுக் குழப்பிக்காதே. எதுனாலும் எனக்கு ஃபோன் பண்ணு. சரியா?” என்று அவளிடம் உறுதி வாங்கியவன் விடை பெற்றுச் சென்றான். நேத்ராவிற்கு எல்லாம் மலைப்பாக இருந்தது. நடந்தவற்றை ஜீரணிக்கவே நேரமில்லாமல் ஓட்டம் எடுத்தது வாழ்க்கை. இது எப்படி சாத்தியம்?!!!!! 

வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. இனிமையான ஊஞ்சலாட்டமாக இருப்பது திடீரென ரோலர் கோஸ்டர் போன்று சுழட்டி அடிக்கவும் செய்யும். இனி படிப்பு இல்லை, மேக்னெட் மேன் இல்லை, அத்தை மகனுடன் திருமணம் என்று நினைத்து வெறுத்து இருந்த வேளையில் திடீரென ஒரு திருப்பம்.  எல்லாம் தானாக எந்த தடங்கலுமின்றி நடந்து மீனாவும் கிருஷ்ணாவும் விசாலத்தை சமாளித்து திருமணமும் முடித்து தங்கள் வீட்டிற்குச் சென்றாயிற்று. அதுநாள் வரை குரலே உயரத்தாத சீனிவாசன் தன் தங்கையை திட்டியது அனைவருக்கும் ஆச்சரியமே. 

ஆனால் கொஞ்சமாக பிறந்த நிம்மதியும் பாட்டியின் இறப்பு துடைத்தெறிந்தது.  அன்றைய தினத்தின் பரபரப்பு அடங்கி எல்லோரும் அவரவர் உலகில் மூழ்கியிருந்த வேளை, கீர்த்தி அலறிய அலறல் அத்தனை பேரையும் உலுக்கி எடுத்தது. சன்னல் வழியே வெளியே வெறித்திருந்த நேத்ரா பதறி ஓடி வந்தாள். தொலைபேசியின் ரிசிவரைப் பற்றியிருந்தவன் கால்கள் பலமிழந்தாற் போல இரண்டாக மடிந்து அமர்ந்தான். கண்கள் தானாக கண்ணீரை அருவியாய்க் கொட்டியது. இதுவரை உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத தன் அண்ணன் இன்று அழுவதைக் காணச் பதியாமல் அவனிடம் ஓடிய நேத்ரா மெல்ல அவனைத் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டாள்.

முதலில் மெல்லிய விசும்பலுடன் தொடங்கியவன் பின் அடைமழையாய் அடித்துப் செய்வது போல் அழுது தீர்த்தான். அவனுக்கு சிறு வயதிலிருந்தே பாட்டி என்றால் ஸ்பெஷல் தான். எதற்கும் பாட்டி வேண்டும். இப்போது சில வருடங்கள் பெங்களூர் வாசம் மட்டுமே அவன் பாட்டியை பிரிந்திருக்கும் காலம்.  ஏனோ பாட்டியின் பிரிவு கீர்த்திக்கு பலத்த அடி தான்.

வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் சீனிவாசனும் உள்ளுக்குள் நொறுங்கிப் போனார். அவருக்கு எல்லா முடிவுக்கும் அம்மா வேண்டும். அப்பாவை சிறு வயதிலேயே இழந்த காரணத்தால் அம்மா தான் எதற்கும். கற்பகமும் சீனிவாசனுக்கு தாய்க்கும் மேல் ஆசானாய் இருந்து அவரை வழிநடத்தினார். அதனாலேயே நேத்ராவின் திருமண விஷயத்தில் அவர் எடுத்த முடிவுக்கு எந்த மறுப்பும் கூறவில்லை சீனிவாசன்.

அன்னையின் ஆசையை நிறைவேற்ற வேண்டி மகளின் வாழ்க்கையைக் கூட பணயம் வைக்க முடிவு செய்தார். ஆனால் கடவுளின் திட்டம் வேறாகிப் போனதே. கமலம் மட்டுமே கதறி அழுதார். அவருக்கு மாமியாரின் மீது பலத்த மரியாதை கலந்த பாசம். விசாலத்தின் செய்கைகளுக்கு பெரும்பாலும் கற்பகம் எதுவும் மறுத்து சொன்னதில்லை என்றாலும் கமலத்திற்கு எந்த குறையுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.  

விசாலம் மிகவும் போராடியே கிருஷ்ணனுக்கு நேத்ராவை திருமணம் செய்து தரும்படி சம்மதம் வாங்க முடிந்தது. கற்பகத்துக்கு மகளின் குணம் தெரிந்தே இருந்த போதும் எல்லோருக்கும் கடைசி நேரத்தில் வரும் ஆசை தான் அவருக்கும் பெரிதாகப் பட்டது. ஒரு பேத்தியின் கல்யாணமாவது பார்த்து விட்டால் தனது வாழ்க்கை முழுமை பெரும் என்றே எண்ணியிருந்தார். ஆனால் கிருஷ்ணா மீனாவுடன் வந்து சம்மதம் வேண்டி நிற்கவும் தெய்வ சங்கல்பம் அதுவே என்று தன்னை தேற்றிக் கொண்டு ஏற்றுக் கொண்டார். கண்குளிர பேரனின் திருமணத்தை கண்டவர் அன்று மாலையே இறைவனடியும் சேர்ந்து விட்டார்.

அதன்பின் எல்லாம் ஜெட் வேகத்தில் நடந்தது. காரியம் முடியும் வரை வாயைத் திறக்காமல் இருந்தாள் விசாலம். அன்னையின் காரியங்களில் எந்தக் குறையுமின்றி திருப்திகரமாக செய்து முடித்தார் சீனிவாசன். பின்னர் அன்னை சொல்லியிருந்தபடி விசாலத்திற்கு அவள் வாயடைத்துப் போகும் வண்ணம் எல்லாம் கொடுத்து அனுப்பி வைத்தார். ஆனால் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அதுநாள் வரை ரொம்பவும் உருகி வழியும் பாசம் காட்டாத போதும் அண்ணன் தன்னிடம் பேசாமல் இருந்ததே இல்லை. இப்போதோ தனது ஆசைக்கும் அதிகமாகவே கொடுத்த போதும் அண்ணன் தன் புறம் திரும்பிக்கூட பார்க்காதது விசாலத்தை அடியோடு அசைத்துப் பார்த்தது. கமலத்திடம் எந்த வித்தியாசமும் இல்லை. இன்னமும் விசாலத்தை மிகவும் மரியாதையோடு தான் நடத்தினார் கமலம்.  இவ்வளவு நல்ல மனிதர்களை தான் எப்படி மோசமாக நடத்தியிருக்கிறோமென உள்ளம் குதறியெடுத்தது.

கிருஷ்ணாவும் மீனாவும் கிளம்பத் தயாராக விசாலம் தன் மன்னியின் கால்களில் சரண்டர் ஆனாள். “மன்னி!!! என்னை மன்னிச்சிடுங்கோ. இத்தனை நாளா பணமே ப்ராதானம்னு நினைச்சு உங்களை ரொம்பவே காயப்படுத்திட்டேன். இன்னிக்கு எங்கண்ணாவுக்கே என்னைப் பிடிக்கல. ஆனா இப்பவும் நீங்க நீங்களாத் தான் இருக்கேள். மன்னிச்சிடுங்கோ மன்னி. முடிஞ்சா அண்ணா கிட்ட என்னை மன்னிக்க சொல்லுங்கோ. எனக்கு எதுவுமே வேண்டாம். உங்க ரெண்டு பேரோட ஆசீர்வாதம் மட்டும் போதும்.” என்றபடி சீனிவாசன் கொடுத்த நகைப் பெட்டிகளை அப்படியே அங்கேயே வைத்துவிட்டு சென்றாள்.

அவ்வளவு நேரம் இறுகிப் போயிருந்த சீனிவாசன் விசாலம் சென்றதும் சற்றே தளர்ந்து போனார். தனது மகனை அருகே அழைத்தவர் அவனிடம் “ராஜப்பா!! நேத்ரா எங்கே?” என்றார். அதுவரை தனது அறையை விட்டு வெளியே வராமல் இருந்த நேத்ராவை அழைத்து வந்த கீர்த்தி தன் தந்தையின் அருகில் அமர்த்தினான். தன்னையே மருண்ட பார்வை பார்த்திருந்த நேத்ராவின் தலையை மெல்லக் கோதியவர் “கோந்தே!! உன்னை நான் கஷ்டப்படுத்திட்டேன். உங்கிட்ட கேட்காம உன்னோட வாழ்க்கையைத் தீர்மானம் பண்ண நினைச்சேன். நான் ஆயிரம் சொல்லி நியாயப் படுத்தலாம். ஆனா மேலே இருக்கிறவன் நினைக்கிறது தான் நடக்கும். இந்த அப்பாவை மன்னிச்சிடுவியா?” கேட்கும் போதே முதல்முறையாக உடைந்து அழுதார்.

அதுவரை அழாமல் இருந்த மனிதன் அழவும் குடும்பமே பதறியது. “ஏண்ணா இப்படி எல்லாம் பேசறேள். அவ என்ன வேத்தாளா? நம்ம குழந்தை தானே? மனசை போட்டு  குழப்பிக்காதேங்கோ.” கமலம் அழுகையினூடே கெஞ்சினாள். கீர்த்திக்கு எல்லாம் புதிதாக இருந்தது. இதுநாள் வரை வீட்டில் அவ்வளவு ஒட்டுதலின்றி இருந்த தந்தை முதன்முறையாக நேத்ராவிடம் மன்னிப்பு வேண்டுகிறார். வாயடைத்து கண்களில் தாரை தாரையாக கொட்டும் கண்ணீருடன் தந்தையையே பார்த்து அமர்ந்திருந்த நேத்ராவிடம் மீண்டும் பேசலானார் சீனிவாசன்.

“நான் உங்க எல்லாரையுமே சரியா நடத்தலையோன்னு இப்போ தோணறது. எங்கம்மா உங்களையெல்லாம் நன்னா பார்த்துப்பானு தெரியும். விசாலத்துக்கு என் மேல் ரொம்ப பாசம்னு நினைச்சேன். ஆனா அவ பைசா தான் பெரிசுனு நினைச்சுண்டு இருந்திருக்கா. ஆனா அவ பேச்சைக் கேட்டுண்டு நானும் உங்ககிட்ட எல்லாம் அவ்வளவு நெருங்கிப் பேசினதில்லை. தப்புன்னு இப்போ புரியறது. அம்மாடி நேத்ரா. இந்த கிருஷ்ணன் போனா போறான்டா. உனக்கு எவ்வளவு தோணறதோ படிடா. நன்னா படி. ஆனா உனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை இந்த அப்பாகிட்ட குடு. உனக்கு நான் நல்ல பையனா பார்த்து தேர்ந்தெடுப்பேன். என்‌மேல் நம்பிக்கை இருக்கோல்லியோ. உனக்குப் பிடிச்சிருந்தா தான் அப்பா மேற்கொண்டு எதுவும் செய்வேன். இப்போ பண்ண தப்பை அப்பா திரும்பவும் செய்ய மாட்டேன் சரியா?” முடிக்கும் போது அவரையும் அறியாமல் குரல் தளர்ந்தது.

அவ்வளவு நேரம் அப்பா தனது தங்கையின் நடத்தையால் தான் வருந்துகின்றார் என்று எண்ணியிருந்த நேத்ராவிற்கு அப்போது தான் புரிந்தது. என்னவோ இந்த கிருஷ்ணா தன்னை மணக்காததால் தான் வருத்தப்படுவேன் என்று எண்ணியிருக்கிறார் என்று புரிந்ததும் ‘ஐயோ அப்பா ஆனாலும் நீங்க இவ்வளவு அப்பாவியா இருக்கேளே’ என்று மனசுக்குள் சிரித்துக் கொண்டாள்.

தனது படிப்பு தடைபடாது என்று சந்தோஷப் பட்டுக் கொண்டாலும் அப்பாவின் அடுத்த வாக்கியம் காதுகளில் ஒலித்த படியே இருந்தது. ‘எவ்வளவு வேணும்னாலும் படி, மாப்பிள்ளை நான் பார்த்து உனக்கும் பிடிச்சிருந்தா கல்யாணம்’ என்று சொன்னது தான் ஊசிகுத்திய பலூனாகிப் போன நிலை. ‘அடேய் மேக்னெட்!!!!! எங்கடா இருக்க???? உனக்கு என்னை நியாபகம் இருக்குமா? இல்லை என்னை மறந்துட்டு யாராவது வெள்ளக்காரியை கல்யாணம் பண்ணிகிட்டியா?? அப்படி மட்டும் செஞ்ச, உன்னை தேடி வந்து கொல்வேன்டா’ மனதுக்குள் மிரட்டிக் கொண்டாள்.

‘ஏன் நேத்ரா!! உனக்கே இது நியாயமா? அவனை போயிடுனு விரட்டிட்டு இப்போ எங்கேனு தேடறியே. அவனா ஒதுங்கினான்? எவ்வளவு கெஞ்சியிருப்பான் உன்கிட்ட? அவனை நமக்குள்ள ஒன்னுமே கிடையாது போனு விரட்டிவிட்டுட்டு இன்னிக்கு என்னவோ அவனா போன மாதிரி பேசறியே? நியாயமா?’ மனசாட்சி ரொம்பவே டீசண்டாக திட்டித் தீர்க்க மனசாட்சியின் பேச்சால் மௌனித்தாள்.

ஒருவழியாக பதினாறாம் நாள் காரியம் முடிந்து கீர்த்தியுடன் பெங்களூரு வந்தாயிற்று. தங்களது அறை வாசலில் நின்று கதவை தட்டித் தீர்த்தாள் நேத்ரா. இவள் வரவை எதிர்பார்த்திராத மியாவோ கதவு உடைபடும் அளவு தட்டப்பட்டதும் மெல்ல வந்து கதவைத் திறக்க அவளைத் தள்ளிக் கொண்டு நுழைந்த நேத்ரா அறைக்குள் வந்து காளி அவதாரம் எடுப்பதை கனவா நனவா என்று வெறித்துப் பார்த்தாள்.

“இப்படியா தூங்குவ மியா? எவ்வளவு நேரம் கதவைத் தட்டறது?”  உச்சஸ்தாயியில் கத்தியவளை கிள்ளிவிட்டாள் மியா. “ஏன் எரும என்னைக் கிள்ளற?” என்றவளுக்கு “கனவான்னு பார்த்தேன் பேபி. நீ தான் வரமாட்டேன்னு சொன்னியே. உன்னை எப்படி மிஸ்டர் சீனு அனுப்பினார்னு யோசிச்சேன்.” என்றாள் மியா. அடுத்த நிமிடம் அவளது காது திருகபட்டது. மியாவ் மியாவ் என்று கத்தியவளின் கூச்சலில் லேசாக துயில் கலைந்து முழித்த ஹரிணி நேத்ராவைக் கண்டதும் துள்ளி எழுந்தாள்.

“ஏண்டா அவ காதைப் பிக்கற?” என்று பெட்டை விட்டு இறங்கியவளை முறைத்து நின்ற நேத்ராவிடம் “ஏன் இந்த ஸ்பிரிங் பேபி முறைச்சிகிட்டு நிக்கிறா மியா?” என்றாள். “அவ ரொம்ப நேரமா கதவை தட்டினாளாம். நாம தூங்கிட்டதால திறக்க லேட்டாயிடுச்சாம்.” மியா காதைத் தடவியபடியே காரணம் சொல்ல ஹரிணியோ கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி நேத்ராவையே கூர்ந்து பார்த்து விட்டு “ஸ்பிரிங் நீ இன்னும் மிஸ் ஸ்பிரிங்ஙா இல்லை மிஸஸ் ஸ்பிரிங்ஙா?” என்று வம்பிற்கிழுத்தாள்.

கழுத்தைச் சுற்றியிருந்த ஸ்கார்ஃபை எடுத்துவிட்டு நின்றவளைக் கண்டதும் திருமணம் நடக்கவில்லை என்று புரிபட சௌமியாவும் ஹரிணியும் பாய்ந்து சென்று நேத்ராவை கட்டிக் கொண்டனர். அத்தனை நாள் தேக்கி வைத்திருந்த அழுகை அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள் நேத்ரா. அவள் அழுது ஓயும் வரை பொறுத்திருந்த இருவரும் அழுகை நின்றதும் “நல்ல வேளை தப்பிச்சிட்ட ஸ்பிரிங். இல்லைன்னா யோசிச்சு பாரு நீ எப்படி அதுக்குள்ள கல்யாணம் பண்ணி செட்டிலாவ? ஐயோ நினைக்கவே பயமாயிருக்கு. பாவம் அந்த பையன் கிருஷ்ணா. அவன் வாழ்க்கை தப்பிச்சுது” என்ற ஹரிணியை அடிக்க கையை ஓங்கினாள் நேத்ரா. 

“ஐயோ என்னை யாராவது காப்பாத்துங்க. கல்யாணமாகாத கவலைல இங்க ஒருத்தி என்னை கொலை பண்ண போறா” என்று கத்தியபடி ஓடினாள் ஹரிணி. அவளுடன் “என்னையும் காப்பாத்துங்க” என்று மியாவும் ஓட, இவர்களை துரத்தி ஓடினாள் நேத்ரா. ரூமைச் சுற்றிச் சுற்றி சிரித்தபடியே ஓடிய மூவரும் களைத்துப் போய் பெட்டில் சரிய “விடு பேபி!! உனக்கான அடிமை இன்னும் சிக்கல. வசமா மாட்டாமயா போகும். இங்கே தானே எங்கேயாவது இருப்பான். பார்த்துக்கலாம்” கண்ணடித்தபடி சொன்ன மியாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு சிரித்தாள் நேத்ரா.

சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த புகழ்பெற்ற அந்த பள்ளியின் தலைமையாசிரியர் அறையின் முன்பு காத்திருந்தான் மைக்கேல். ஏதோ அசட்டுத் துணிச்சலில் வந்தாயிற்று. எப்படியும் அவளை கண்டுபிடித்து விடலாமென்று நாட்டை விட்டு வந்தாயிற்று. இனி அவள் எங்கிருக்கிறாள் என்று கண்டுபிடித்து அவளை தேடிச் செல்ல வேண்டும். அவள் தன்னை கண்டதும் ஏற்றுக் கொள்வாளா? ஏற்கனவே நமக்குள் ஒன்றுமில்லை என்று தன்னை இரக்கமின்றி மறுத்தாள் தானே.

ப்ரின்ஸிபல் அறையின் வாசலில் தேவுடு காத்தவனை விநோதமாகப் பார்த்துச் சென்ற ப்யூன் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்து “சார் யூ ஹூ மீட்?” என்று அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டு வைத்தார். அவருக்கு மெல்லிய புன்னகையை பரிசளித்தவன் “உங்க ப்ரின்ஸிபலை பார்க்கனும்.” என்றான். அவளுக்காக கற்றுக் கொண்ட தமிழ். அவளை நேசிக்கும் அளவு அவளது மொழியுமே அவனுக்குப் பிடித்துப் போனது.

மைக்கேலிடம் தமிழை எதிர்பாராத ப்யூன் ஒருநிமிடம் ஜெர்க்காகிப் போய் நின்றவர் பின்பு சுதாரித்து சிரித்தபடி “இதோ வரேன் சார். உள்ளே சார்கிட்ட கேட்டுட்டு வரேன்” என்று உள்ளே சென்றார். அடுத்த ஐந்து நிமிடங்களில் மைக்கேல் அந்த ப்ரின்ஸிபல் திருவாளர் தேவசகாயத்தின் முன் அமர்ந்திருந்தான். அவன் கேட்ட விஷயத்தில் அதிர்ந்து அவனையே கூர்ந்து பார்த்திருந்தார் ப்ரின்ஸிபல்.

“மிஸ்டர் மைக்கேல். வாட் யூ ஆர் ஆஸ்கிங் ஃபார் இஸ் அன்எதிக்கல்.” என்று ஆரம்பித்தார். “சார். நான் அட்ரெஸ் தானே கேட்டேன். ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட். இது எனக்கு ரொம்ப முக்கியமான தேவை. இது எனக்கு வாழ்க்கை சம்பந்தபட்ட விஷயம்.” அவருக்கு எப்படியாவது புரிய வைக்க வேண்டும் என்ற வெறி இருந்தது அவனது குரலில்.

“ஐம் சாரி மிஸ்டர் மைக்கேல். ஐ காண்ட் ஹெல்ப் யூ இன் திஸ் மேட்டர்” என்று நிர்தாட்சணியமாக மறுத்துவிட ஏமாற்றத்தை சுமந்தபடி தலையை தொங்கவிட்டுக் கொண்டு அடுத்து என்ன என்பதாய் யோசித்தபடி வெளியேறினான் மைக்கேல்.

கவிதையாவாள்!!!!!!!!!!!!

Advertisement