Advertisement

முத்தக் கவிதை நீ – 5
மெல்போர்னில் ஒரு இளங்காலை நேரம். தனது விசா இன்டர்வ்யூவை முடித்துக் கொண்டு அருகிலிருந்த சப்வேயில் நுழைந்தவன் தனக்கான ஆர்டரைக் கொடுத்து விட்டுக் காத்திருக்கையில் விசா இன்டர்வ்யூவில் கேட்கப்பட்ட கேள்விகளை அசைபோட்டான்.  இன்டர்வ்யூ எடுத்த பெண்மணிக்கு நடுத்தர வயதிருக்கும். தனது கண்ணாடியை நாசியில் கீழிறக்கி அவனை ஏதோ கொலைக்குற்றவாளியைப் பார்ப்பது போல முறைத்தபடியே கேள்விகளை அம்பாகத் தொடுக்கத் தொடங்கினார்.
“மிஸ்டர் மைக்கேல், தாங்கள் இந்தியாவிற்கு உங்கள் படிப்பு சம்பந்தமாகச் செல்வதாக குறிப்பிட்டிருந்தீங்க. ஏன் இந்தியாவை தேர்ந்தெடுத்தீங்க? இந்த கணிணி படிப்புக்கு நீங்க ஏன் வேறு நாடுகளைத் தேர்ந்தெடுக்கவில்லை?” என்றார். ‘ஏன்னா என்னோட ஏஞ்சல் அங்கே தானே இருக்கா’ மனதுக்குள் தானாக பதில் ஓடியது. “தென்னிந்திய நகரமான பெங்களூருவில் என்னோட படிப்பு சம்பந்தமான வேலைகள் அதிகம் மேம். அங்கிருக்கும் யுனிவர்சிட்டியில் தான் எனக்கு அட்மிஷன் கிடைச்சிருக்கு. எனக்கான அனுபவ படிப்புக்கு அது மிகவும் உதவும். தவிர இந்தியாவின் கலாச்சாரம் என்னை மிகவும் கவர்ந்த விஷயம். அதனால் தான்.” மனதுக்குள் ‘எப்படியாவது விசா கிளியரன்ஸ் குடுத்திருங்க ப்ளீஸ்’ கெஞ்சியபடியே பதிலளித்தான்.
அந்தப் பெண்மணியின் முகத்திலிருந்து எந்த உணர்வையும் படிக்க முடியாமல் போகவே முள்மேல் அமர்ந்த நிலையில் இருந்தான். அடுத்த அரைமணி நேரமும் அதே கேள்வியை வேறுவேறு விதமாக வேறு வேறு மாடுலேஷனில் கேட்டு இவனின் பதிலைப் பெற்றவர் இறுதியில் “ஓகே. ஆல் தி பெஸ்ட்.  வீ வில் நோட்டிஃபை யூ ஸூன்” என்று விறைப்பாக பதிலளித்தார். ஏனோ அவரது முகபாவத்திலிருந்து எந்த பதிலையும் கண்டுபிடிக்க இயலாமல் “தாங்க்ஸ் டியர்” என்று கைகுலுக்கி விட்டு வெளியேறினான்.
விசா உறுதியாக வேண்டுமே என்ற பதட்டத்தில் எதுவும் உண்ணாமல் காலையில் வந்தது இப்போது பசிஎடுத்தது. அருகிலிருந்த சப்வேயில் நுழைந்து தனக்கான உணவை ஆர்டர் செய்து பெற்றுக்கொண்டு ஒரு ஓரமாய் அமர்ந்து அவனும் அவளது நினைவுகளுமாய் ஒன்றிப் போனான்.
ஏனோ இவனது பேபி இப்போது இந்த இன்டர்வ்யூ எடுத்த  பெண்மணியைப் பார்த்திருந்தால் எப்படி ரியாக்ட் செய்திருப்பாளென யோசித்தான். கட்டாயம் ஏதாவது ஏடாகூடமாக செய்திருப்பாள். அவளிருக்கும் இடமே எப்போதும் கலகலப்பாகத் தான் இருக்கும். எதையும் அவள் சீரியஸாக எடுத்து பார்த்ததேயில்லை. எல்லாவற்றையும் ஒரு சிரிப்புடன் கடந்து விடுவாள்.  
ஒருமுறை பள்ளி கெமிஸ்ட்ரி லேபில் ப்ராக்டிகல் பீரியடின் போது அவளது டீச்சர் இவர்களை எக்ஸ்பெரிமெண்ட் செய்யச் சொல்லி விட்டு தூங்கிப் போக, இவளோ சாவகாசமாக லேபில் இருக்கும் பீக்கர், பர்னர், இன்னபிற சாதனங்களை வைத்து நூடுல்ஸ் தயார் செய்து தான் மட்டும் உண்டதுமில்லாமல் மற்றவர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்ந்தவளாயிற்றே. டீச்சர் முழித்துக் கொண்டு பிரின்ஸிபல் ஆஃபீஸுக்கு அழைக்க “சரி வாங்க போகலாம், நீங்க தூங்கினதால தான் நான் செஞ்சேன்னு சொல்றேன்” என்று கெத்தாய் சொன்னவளாயிற்றே.  லாஸ்ட் பெஞ்ச் அறுந்த வாலாயிற்றே அவள்.
அவளுக்கு எப்போதுமே எதற்குமே ஒரு சிரிப்பு தான். அவள் சீரியஸாக இருந்து தான் பார்த்ததேயில்லை. முடிந்தவரை தன்னைச் சுற்றியுள்ளோரையும் தங்கள் கவலை மறந்து சிரிக்க வைப்பதில் கில்லாடி. அந்தக் கடைசி நிமிஷப் பிரிவின் போது கூட அவளது சிரிப்பு மட்டும் அகலவே இல்லையே. பாவி பாவி!!!!! எப்படிப்பட்ட பாதிப்பை எதிரிலிருப்பவனுக்கு ஏற்படுத்தும் என்பதை உணராதவளாய் சிரித்தபடியே எப்படி அப்படி பேச முடிந்தது அவளால்!!!
பழைய நினைவுகள் மேலெழும்ப உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது.  உணவை அப்படியே அங்கிருந்த மீந்து போன உணவைச் சேகரிக்கும் பெட்டிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து அகன்றான். விசாவின் ரிசலட் தெரிய எப்படியும் நேரமெடுக்கும் என்றெண்ணி இருக்க அவனது அலைபேசிக்கு அழைப்பு வந்து அவனது விசா அங்கீகரிக்கப்பட்ட சுபசெய்தியை சொன்னார்கள்.
மைக்கேலுக்கு துள்ளிக்குதிக்க வேண்டும் போல் இருந்தது. “பேபி டார்லிங்!!!!! பீ ரெடி. ஐம் கம்மிங் சூன்” வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டான். முகமெல்லாம் புன்னகையாக நடந்தவனை சுற்றியிருந்தோர் வித்தியாசமாகப் பார்த்தது கூட அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. மனமெல்லாம் இப்போதே இந்தியாவிற்கு விமானம் ஏறி விடத் துடித்தது.  மனதுக்குள் இப்போதே சென்னையில் அவனது பேபியைச் சுற்றி டூயட் ஆடத் தொடங்கினான்.
விசாலம் தன்னால் முடிந்த அளவுக்கு அனுமாரின் வால் நீளத்துக்கு பட்டியலைக் கொடுத்து விட்டு தன் தாயைப் பார்க்க ஹாஸ்பிடலுக்குக் கிளம்பினாள். தான் தாயிடம் கறக்க மறந்த வைரத் தோட்டை ஞாபகமாக வாங்க வேண்டுமே.  மேலும் கிழவி உயில் எதுவும் எழுதி வைத்திருக்கிறாளா என்று வேறு தெரிய வேண்டுமே. வராத கண்ணீரைத் துடைத்தபடி மருத்துவமனைக்குக் கிளம்பினாள் விசாலம்.
விசாலம் கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் கமலாவும் அவளது தங்கை யசோதாவும் கடைக்குச் செல்லக் கிளம்பினர்.  “நேத்ரா!! நானும் சித்தியும் கடைக்குப் போறோம். நீயும் வர்றியா?” வீட்டில் கிருஷ்ணன் இருக்கையில் மகளை அங்கே விட்டுப் போக மனசின்றி கேட்டாள் கமலா. “இல்லைம்மா எனக்கு தலைவலிக்குது. நான் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியாகும்” என்றாள் நேத்ரா. 
‘இவ ஒருத்தி நேரங்காலம் தெரியாம தலைவலி திருகுவலினு வரமாட்டேங்கிறாளே. அடியேய் நேத்ரா எதுக்கு சொல்றேன்னு புரியாம இப்படி மங்குனியா இருக்கியேடி’ மனதுக்குள் மகளை வைதுகொண்டாள். “நீ வந்தேன்னா அம்மாக்கு கொஞ்சம் ஹெல்ப்பா இருக்குமே கண்ணா?” கண்களால் சைகை காட்டியபடியே கேட்டாள் கமலா. நேத்ராவோ மனதுக்குள் ‘ஐயோ அம்மா!! நிலைமை தெரியாம கூப்பிடறியே. இங்கே நான் இருந்தால்தானே சில விஷயங்களை சரியா செய்ய முடியும். இல்லைன்னா இந்த குண்டனுக்கு நான் கழுத்தை நீட்டும் படியா ஆகுமே.’ கமலாவைக் கெஞ்சல் பார்வை பார்த்தாள்.
“அக்கா நீ ஏன் குழந்தையை தொந்தரவு பண்றே? நீ தூங்கு கண்ணா. நானும் அம்மாவுமே பார்த்துக்கிறோம்.” நல்ல வேளையாக யசோதா இவளின் உதவிக்கு வர யசோதாவை முறைத்துப் பார்த்தாள் மீனா. ‘கொஞ்ச நாழி இந்த கிருஷ்ணாகிட்ட பேசலாம்னு பார்த்தா இந்த அம்மாவுக்குப் பொறுக்காதே. பெரியம்மா தான் அவ்வளவு கெஞ்சறாளே! இந்த அக்காவுக்கு போனா என்ன குறையாம்.’ மனதுக்குள் நேத்ராவை துவைத்துப் புரட்டினாள். பாவம் அவரவருக்கு அவரவர் கவலை.
ஒருவழியாக யசோதாவும் கமலாவும் கிளம்பிச் செல்ல, மீனா மெல்ல நேத்ராவிடம் “அக்கா நீ போய் ரூமில் ரெஸ்ட் எடு. நான் உன்னைத் தொந்தரவு செய்யாம இங்க இருக்கேன். சரியா?” நல்லபிள்ளையாய் அப்புராணி போல் முகத்தை வைத்தபடி கேட்டாள். தங்கை கிருஷ்ணாவிடம் பேச தனிமை கேட்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டாள் நேத்ரா. அவளுக்குத் தேவையும் அதானே.
“சரிடா! நான் மாத்திரை போட்டுண்டு தூங்கப் போறேன். மாத்திரை போட்டுண்டா எனக்கு ரொம்ப டீப் ஸ்லீப் தான். பார்த்துக்கோ சரியா” என்றாள் தானும் அப்பாவி தான் என்பதாய். “நீ கவலையேபடாதேக்கா. நான் இங்கேயே தான் உட்கார்ந்திருப்பேன். நீ நன்றாக ரெஸ்ட் எடுத்துக்கோ.” என்று நல்லபிள்ளையாய் நேத்ராவுடன் அறைக்கு வந்து அவளை படுக்க வைத்தாள். சற்று நேரம் அமைதியாக இருந்தவள் பின் மெல்ல “ஏன்கா உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் தானா?” என்றாள். 
எப்படியும் இப்படி ஒரு பேச்சு வரும் இவளிடமிருந்து என்று காத்திருந்தவளாய் நேத்ரா “ஏன் மீனா இப்படி ஒரு கேள்வி?” என்றாள். “அது…. வந்து …. இல்லைக்கா … உனக்கும் அந்த கிருஷ்ணாவுக்கும் ஒத்துப் போகுமா? பெரியவா எல்லாம் ஏன் இப்படி அவசரப்படறா?” என்றாள். “அது மீனா…. இப்போ பாட்டிக்கு ரொம்ப முடியலையாமே. அதான் பாட்டியோட ஆசையாம் அந்த கிருஷ்ணாவுக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கிறது. அதுக்காக அவசரப்படறா” பட்டும் படாமலும் சொன்னாள் நேத்ரா.
“இல்லை….. உன்னோட படிப்பென்ன? நீ என்ன என்னை மாதிரி ஸ்கூலோட நிறுத்திட்டியா?  இப்போ என்னை மாதிரி பொண்ணுக்குனா கிருஷ்ணா மாதிரி பையனே பெரிசு. உனக்கு கிருஷ்ணாவைப் பிடிச்சிருக்காக்கா?” அறிந்து கொள்ளும் ஆர்வம் அவளுக்கு நிறையவே இருந்தது அவளது குரலிலேயே புரிந்தது. “உங்கிட்ட சொல்றதுக்கென்ன மீனா. எனக்கு இப்போ கல்யாணமே வேணாம். நான் படிக்கனும்.” என்றாள் நேத்ரா.
அவ்வளவு நேரம் கண்களில் தெரிந்த பதட்டம் மறைந்து மீனாவின் முகத்தில் நிம்மதி பரவியது. மெல்ல புன்னகைத்தவள் “நீ நிம்மதியா தூங்குக்கா. ஏதாவது மிராக்கல் நடக்கும்” என்றாள். ஒருபக்கம் என்னைக் காப்பாற்று தாயே என்று மனசுக்குள் மீனாவுக்கு ஆயிரம் முறை பெட்டிஷன் போட்டாலும் மறுபுறம் ‘ஐயோ இவள் போய் அவனிடம் மாட்டிக் கொள்வாளே. நாம் ரொம்ப சுயநலமா யோசிக்கறோமோ’ என்று மனசாட்சி குத்தியது.
மனதுக்குள் சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருந்த மேக்னெட் ‘அவளுக்கு இஷ்டமில்லாமலா இதைப்பத்தி தோண்டித் துருவிக் கேட்கிறா? ஒரு சொல்யுஷன் கிடைக்குதேன்னு சந்தோஷப்படு பேபி’ என்று இடித்தான். உண்மையில் தனக்குத் தலைவலி வந்துவிடுமோ என்ற பயம் வந்தது நேத்ராவிற்கு. மெல்ல கண்களை மூடிக்கொண்டாள். சற்று நேரத்தில் அவளையுமறியாமல் உறங்கியும் போனாள்.
மாலை நான்கு மணி இருக்கும். “நேத்ரா!!! எழுந்திரு!! நேத்ரா!!!” அவளை யாரோ உலுக்குவது புரிய மெல்ல கண்திறந்தாள். கீர்த்தி தான் அவளை எழுப்பிக் கொண்டிருந்தான். “அம்மா எங்கே?” என்றான். “அம்மாவும் சித்தியும் கடைக்குப் போயிருக்காண்ணா. மீனா சொல்லலையா?” என்றாள். அறைக்கு வெளியே செல்ல எத்தனித்தவன் மீனா என்றதும் நின்று திரும்பி “அவ எங்கே இருக்கா? ஹாலில் யாரும் இல்லையே” என்றான்.
இதயத்துக்குள் பயம் பந்தாய் உருண்டது. அவசரமாக ஹாலை நோக்கி ஓடினாள் நேத்ரா. அவளுக்கு உள்ளுணர்வு சொன்னது தான் சரியென்பதாய் இருவரையுமே காணவில்லை. “இரு நான் மாடில போய் பார்த்துட்டு வரேன்” என்றுவிட்டு கீர்த்தி மடமட வென்று படியேறினான். ஹாலில் பார்வையை ஒருமுறை சுழற்றிப் பார்த்தாள் நேத்ரா.
அறையின் மூலையில் போடப்பட்டிருந்த டேபிளில் ஒரு பெரிய வெள்ளைத் தாள் காற்றில் படபடத்தது. பறந்து விடாமல் இருக்க அதன்மீது பேப்பர் வெய்ட் வைக்கப்பட்டிருக்க நேத்ராவிற்கு இதயம் வாய் வழியே வந்து விடுமோ என்ற அளவுக்கு பயம் வந்தது. தான் எதிர்பார்த்தது தான் என்ற போதிலும் மீனா வீட்டில் சொல்லி தான் முடிவெடுப்பாள் என்றே எண்ணியிருந்தாள்.  
நெஞ்சுக்குள் ரயிலோட வியர்த்துக் கொட்டியது. வேண்டாம் என்று அலறிய மனதைக் கட்டுப்படுத்த முயன்று முடியாமல் மெல்ல டேபிளின் அருகே சென்றாள் நேத்ரா. நடுங்கும் கரங்களில் அந்த தாளை எடுத்தவளுக்கு அதில் கோழி கிறுக்கியது போலிருந்த கையெழுத்தே சொன்னது அது கிருஷ்ணனின் கையெழுத்தென.
“எனக்கு மீனாவைப் பிடிச்சிருக்கு. நாங்க கல்யாணம் செஞ்சுக்க போறோம். சாரி நேத்ரா என்னால் உனக்கு வாழ்க்கை தர முடியாது” என்று கிறுக்கியிருந்தான். ஒரு பக்கம் அதைப் பார்த்ததும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது நேத்ராவிற்கு. ‘எனக்கு வாழ்க்கை தர முடியாதாமே!!! ஐயோ கடவுளே!!!’ பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். இன்னொரு புறம் ‘மீனா உன் வாழ்க்கையை பலி கொடுத்து விட்டேனோ??? தெரிந்தே நீ கிணற்றில் விழப் போறியே. நான் ஒன்றுமே செய்யவில்லையே’ மனது அடித்துக் கொண்டது.
தங்கையின் கையிலிருந்த காகிதத்தை வாங்கிப் படித்த கீர்த்தி “ஊஃப்” என்று பெருமூச்சு விட்டபடி அமர்ந்தான். “அண்ணா!! மீனா பாவமில்லையா” மனதிலிருப்பதை ஒளியாமல் கேட்டாள் நேத்ரா. “ஹாஹாஹா உனக்கு சரியா புரியல நேத்து. கிருஷ்ணா தான் இனி பாவம். ரெண்டும் ஜாடிக்கேத்த மூடி தான்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னவன் கொஞ்சம் சிந்தனை வயப்பட்டவனாய் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தான்..
பின் தெளிந்தவனாய் “நேத்துமா!! நான் சொல்ற வரைக்கும் எந்த கேள்வியும் கேட்காம நீ ரொம்ப வருத்தப்படற மாதிரி இருக்கனும். சரியா. இல்லைன்னா அத்தையையும் சித்தியையும் சமாளிக்க முடியாது” என்றான். இதற்குள் “யாரைடா சமாளிக்க முடியாது?” என்று கணீர் குரலில் கேட்டபடி நுழைந்தாள் விசாலம்.
கவிதையாவாள்!!!!!!!

Advertisement